Thursday 11 June 2020

பேருந்துப்_பயணங்களில்

பேருந்துப்_பயணங்களில்!


பொன்மகள் வந்தாள்:

'பொன்மகள் வந்தாள்' பற்றிய ஏகப்பட்ட பதிவுகள் என் timeline முழுவதும் காணக்கிடைத்ததால் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள் பார்க்கலாம் என்று முடிவெடுத்து, இப்போதுதான் பார்த்து முடித்தேன்.

இது தமிழ் சினிமாவில் புதியதொரு முயற்சி என்றே சொல்லவேண்டும். இதுவரை இப்படியொரு களத்தையும், கருத்தையும் நான் கண்டதில்லை என்றே நினைக்கிறேன். சொல்ல வந்த கருத்து இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. கருத்து சொன்ன விதம் கொஞ்சம் புதிதுபோல் இருந்தாலும், இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஒரு பெண்ணைப் பிரதான பாத்திரமாகக் கருதி எடுக்கப்பட்ட முயற்சிகள் குறைவுதான் என்றாலும், அவற்றில் வெற்றிபெற்றவை மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன். அவற்றில் ஒன்றாக இது இருக்கும் என்பது உறுதி.

இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளைச் செவ்வனே செய்துகொடுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்! அவற்றில் "icing in the cake" என்று சொல்லும்படி நடித்துள்ளவர்கள் இருவர் (அவர்களின் பெயர்களைச் சொன்னால் சஸ்பென்ஸ் உடைந்துவிடும் என்பதால் பெயர்களைச் சொல்லமாட்டேன் :))

எந்தவொரு வெற்றிகரமான முயற்சியிலும் நடிப்பு ஒரு பகுதியாகத்தான் இருக்கும். நடிப்பைத் தவிர மற்ற சில பகுதிகளும் சிறப்பாக இருக்கும். 'பொன்மகள் வந்தாள்'-ல் இசை, கலை, cinematography, உடையலங்காரம் மிகவும் அருமை. அதுவும் இடைவேளைக்குச் சில நிமிடங்கள் முன்பு வரும் ஒரு காட்சியில் மரம் ஒன்று சில நொடிகளுக்குக் காட்சியின் பிரதானமாக இருந்து, அப்படியே படிப்படியாக சில கதாபாத்திரங்கள் தோன்றும். அக்காட்சி எடுக்கப்பட்ட விதத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. Hats-off to the crew!

இறுதிக்காட்சியைப் பற்றிச் சொல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அதை அவரவர் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், அக்காட்சி என்னை உறையவைத்தது என்பதை மட்டும் சொல்லமுடியும்.

ஆக மொத்தம், பொன்மகள் வந்தாள் - சிவாஜி அவர்களின் career-ல் மறக்கமுடியாத ஒரு பாடலாகவும், தமிழ்த் திரையுலகத்துக்கே ஒரு முகவரியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை!

#பேருந்துப்_பயணங்களில்  #கனடா_குறிப்புகள்!

 

 

 

 

08-May-2020:

 

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த அந்த டிடெக்டிவ் த்ரில்லர் திரைப்படத்தைப் பற்றி எழுதவேண்டும் என ரொம்ப நாட்களாகவே யோசித்துவந்து, இன்றுதான் அதைப் பற்றி எழுத நேரம் கிடைத்திருக்கிறது. பொதுவாகவே திரைப்படங்கள் குறித்து நான் அதிகம் எழுதுவதில்லை என்றாலும், வேற்றுமொழிப் படங்களைப் பற்றி கடந்த சில வாரங்களாக ஏகப்பட்ட பேர் பேஸ்புக்கில் எழுதியதைப் பார்த்ததால், நான் பார்த்து ரசித்த இப்படத்தைப் பற்றி எழுதாவிட்டால் தெய்வக்குத்தம் ஆகிவிடப்போகிறது என்ற எண்ணத்தில்தான் இப்பதிவு.

ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, திகில், மர்மம் நிறைந்த வழக்குகளைத் துப்பறிவதிலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களைக் காவலர்களிடம் ஒப்படைப்பதிலும் மிகப் பிரபலம். இதனாலேயே, தங்களால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கமுடியாத ஏகப்பட்ட வழக்குகளை அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் காவல்துறையினர்.

படத்தின் ஆரம்பக்காட்சியிலும் அப்படியொரு வழக்கு தொடர்பாக விசாரிக்கிறார்கள் அந்தக் குழுவினர். திகில், மர்மம் நிறைந்த அந்த வழக்கில் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, அக்குழுவில் ஒருவருக்கு பயம் கட்டுக்கடங்காமல் எகிறிவிட அவரை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் செல்கின்றனர். அம்மருத்துவரோ, அந்த நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இனி அந்த நபரை எந்தவொரு துப்பறியும் வழக்கிலும் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றும், அப்படிச் செய்தால்மட்டுமே அவரைக் குணப்படுத்த முடியும் என்று சொல்லிவிடுகிறார்.

அந்தக் குழுவினர், இவரை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டும் என்றெண்ணி, ஒரு vacation போவதற்குத் திட்டமிடுகின்றனர். குழுவிலுள்ள இன்னொருவரின் உறவினர் ஒருவர் ஏதோ ஒரு ஊரில் மனோதத்துவ நிபுணராக இருக்கிறார். அவரிடம் அழைத்துச் சென்றால் அந்த நபருக்கு வைத்தியம் பார்த்தமாதிரியும் இருக்கும், அந்த ஊரையும் சுற்றிப்பார்த்தமாதிரி இருக்கும் என்று முடிவெடுத்து அந்த ஊருக்கு வருகின்றனர் அந்தக் குழுவினர்.

அந்த மனோதத்துவ நிபுணர், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரைக் குணமாக்க hypnotism என்கிற முறையைக் கையாள்கிறார். ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் (keyword) சொல்லி, "அந்த வார்த்தையை யார் சொன்னாலும் சரி, அந்த சத்தம் உன் காதில் விழுந்ததும், எல்லாவித பயமும் மறைந்து, உலகத்திலேயே மிக மிக தைரியசாலியாக மாறிவிடுவாய்" என்று சொல்லி அந்த நபரை program செய்து, அவரைக் குணப்படுத்துகிறார். இதில் ஒரே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், hypnotism செய்துகொண்டிருந்தபோது அந்த மருத்துவரின் ஞாபக சக்தி மறைந்து, சில நிமிடங்களுக்குப் பிறகே திரும்பவருகிறது! அதனால் அந்த keyword அவருக்கும் நினைவில் இல்லை!

சில நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த சில ரவுடிகள் வர, பயந்து நடுங்க ஆரம்பிக்கிறார். அந்த ரவுடிகளில் ஒருவன் அந்த keyword-ஐ சொன்னதும், அந்த நபருக்கு தைரியம் வர, அந்த ரவுடிகளை வெளுத்து வாங்குகிறார்.

சண்டை முடிந்ததும் அவ்வுணவகத்தை விட்டு வெளியே செல்லும்போது அந்த ரவுடிக்கூட்டத்தின் தலைவன் வருகிறான். நடந்தவற்றைப் பார்த்து அவரை bike race-ல் பங்குபெற சவால் விட, அதை அந்த நபரும் ஒப்புக்கொள்கிறார். இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தீர்களேயானால், அங்குதான் ஒரு ட்விஸ்ட் உள்ளது. அந்த நபருக்கு bike ஓட்டத் தெரியாது!

மிகவும் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது அந்த race. "யார் ஜெயிக்கப்போகிறார்களோ?" என்று பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டுகிறது. சில இடங்களில் ரவுடித் தலைவன் முன்னிலையில் இருக்க, சில இடங்களில் அந்த நபர் முன்னிலையில் இருக்க, race முடியும் தருவாயில் அந்தத் தருணத்தில் அந்த இடத்திற்கு ஒரு மிகப்பெரிய மிருகம் வந்து அனைவரையும் துரத்த ஆரம்பிக்கிறது. அப்போது அந்த நபர் அந்த keyword-ஐ தன்னையறியாமல் நினைக்க, தைரியமெல்லாம் மறைந்து, பயம் பீறிட்டு எழ, அங்கிருந்து தலைதெறிக்க ஓடுகிறார். அப்போதுதான் அங்கிருக்கும் அனைவருக்கும் அவ்வூரில் இருக்கும் அச்சுறுத்தல் தெரியவருகிறது.

இந்த அச்சுறுத்தலை எப்படி நம் துப்பறியும் குழுவினர் தீர்த்துவைக்கின்றனர், அந்த மிகப்பெரிய மிருகத்திற்கு என்ன ஆனது, அந்த நபரின் பயம் மறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினாரா போன்றவற்றை மிகவும் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். Climax காட்சியில் யாருமே எதிர்பாராத ஒரு twist காத்திருக்கிறது, ஆனால் அதற்கும் ஒரு logical explanation கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் computer graphics காட்சிகளைப் பற்றி தனியாக ஒரு பதிவே எழுதலாம். அந்த அளவிற்குத் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த மிருகம் வரும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். அம்மிருகத்தை நேரிலே பார்ப்பதுபோல் இருக்கிறது, பார்ப்பவர்களுக்கே பயத்தை ஏற்படுத்தக்கூடியவை அக்காட்சிகள்.

தமிழில் சமீபகாலமாக துருவங்கள் பதினாறு, ராட்சசன் போன்ற துப்பறியும் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருந்தாலும், நாம் இன்னும் ஆங்கிலத் துப்பறியும் படங்களின் தரத்தை அடைய இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்பதை இப்படம் அப்பட்டமாக்குகிறது.

படத்தின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன். படத்தின் பெயர் - Scooby-Doo! Legend of the Phantosaur. அதுவொரு cartoon திரைப்படம் 🙂

பின்குறிப்பு: நீங்கள் அடிக்கடி மலையாளப்படங்களைப் பற்றியும், Netflix Series பற்றியும் எழுதித் தொலைத்து கடுப்பேற்றினால், இதே மாதிரி இன்னும் நிறைய பதிவுகள் வரும், ஜாக்கிரதை!

இவண்: எந்தவொரு படத்தையும் பார்க்கவிடாமல், கார்ட்டூன் மட்டுமே பார்க்கவிடும் மகளைப் பெற்ற தந்தை!

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

 

18-May-2020:

 

மறக்க முடியாத முகங்கள் – 7:

நாளை திங்கட்கிழமை. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கு திங்கட்கிழமை என்றால் திகில்கிழமைதான். சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வீட்டிலோ, வெளியிலோ நிம்மதியாக இருந்துவிட்டு திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்லவேண்டும் என நினைக்கும்போது, ஒரு சின்ன சோகம் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். இப்படி நினைப்பதுதான் இயல்பு என நினைக்கும் அளவுக்கு மாறிவிட்டது நிலைமை. இப்படி நினைக்காதவர்களை சங்கத்தைவிட்டே ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள்.

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலை. அலுவலகம் சென்று வர அலுவலகப் / அரசுப் பேருந்து, இல்லையென்றால் இரு / நான்கு சக்கர வாகனம், ஏ.சி அறைகள், நேரத்துக்கு சாப்பாடு, சிற்றுண்டி வசதி, நினைத்த நேரத்துக்கு காபி, டீ குடிக்க வசதி, இன்டர்னெட் வசதி.

இப்படி ஏராளமான வசதிகள் இருந்தாலும், எப்படியாவது அடுத்தவரைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும், சென்ற முறை கிடைத்த சம்பள உயர்வைவிட இந்த முறை அதிகம் வாங்கிவிட வேண்டும் போன்ற போட்டிகளால் மன அழுத்தம் அதிகமாகிறது.

கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை எப்படியாவது சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என நினைப்பது சரிதான். அது நம் கடமையும்கூட. ஆனால், அந்த வேலையை முடித்தவுடன் அடுத்து வேறு ஒரு முக்கியமான வேலையை இழுத்துப்போட்டு செய்யவேண்டும், அப்போதுதான் அப்ரைசல் நேரத்தில் இந்த எக்ஸ்ட்ரா வேலையைப்பற்றி சொல்லலாம் என நினைத்துக்கொண்டு, அந்த வேலையைப் பற்றி தெரியாமலே அதற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டோ, வேலையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டோ இருந்தால், நம் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் பற்றி யார்தான் கவலைப்படுவது?

சரி, எக்ஸ்ட்ரா வேலை செய்தால் என்ன தவறு? அவருக்கு அதற்கேற்றார்போல் சம்பளமும், பதவி உயர்வும் கிடைக்குமே என நினைப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல். தன் வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பவருக்கும், எக்ஸ்ட்ரா வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவருக்கும், இந்தக் காலகட்டத்தில், மாதச் சம்பளத்தில் 3500 (அதிகபட்சம்) ரூபாய்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்படி உடல் நலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வேலை செய்துகொண்டிருந்தால் மருத்துவச் செலவு கூடி, கடைசியில் இருவருடைய சேமிப்பிலும் பெரிய வித்தியாசம் இருக்காது. பணம், பணம் என்று ஓடிக்கொண்டே இருந்தால், நம்மைப் பாதுகாக்க, நம் குடும்பத்தைப் பாதுகாக்க வானத்திலிருந்து யாராவது வருவார்களா? சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?

ஆனாலும், எத்தனையோ பேர் குடும்பச் சூழல் காரணமாக இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை வருத்திக் கொண்டு, மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகள் படக்கூடாது என்று உறுதிபூண்டு, உழைத்து உழைத்து ஓடாய்ப் போகிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக தங்கள் நிகழ்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பதில் ஒரு திருப்தி இவர்களுக்கு. சமீபத்தில் நான் சென்னை சென்றிருந்தபோது இப்படிப்பட்ட ஒருவரைச் சந்தித்தேன்.

தாம்பரத்திலிருந்து மயிலாப்பூர் செல்லவேண்டியிருந்தது. மணி இரவு 9:30 ஆகியிருந்ததால் பேருந்துகளை நம்ப மனமில்லை எனக்கு. சரி, ஆட்டோ பிடித்து சென்றுவிடலாம் என முடிவெடுத்து காத்துக் கொண்டிருந்தேன்.

நிறைய ஆட்டோக்காரர்கள் இவ்வளவு தூரம் வர முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். இன்னும் சிலர் இதற்குக் கட்டணமாக ஐநூறு ரூபாய் கேட்டார்கள். இப்படியே தொடர்ந்தால் என்னதான் செய்வது என நினைத்து கடவுளை வேண்டத் தொடங்கியவுடன் வந்தார் இந்த ஆட்டோக்காரர். மீட்டர் கட்டணத்துக்கு மேல் இருபது ரூபாய் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்து வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வழியில் வழக்கம்போல் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அதிகம் படித்தவரில்லை. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை, கள்ளம் கபடம் இல்லாமல் தன் உள்ளிருந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டார். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள், தலைவர்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம். பல அரசியல் தலைவர்களைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லையென்பது அவர் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அடுத்து விலைவாசி பற்றி பேச ஆரம்பித்தோம். காய்கறி விலையில் தொடங்கி, கல்விக்கான விலை வரை பேசினோம். காய்கறி விலை உயர்வால் மக்கள் தினசரி பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், மிக அதிக கல்விக் கட்டணத்தால் அவர்களின் நிகழ்காலமும், எதிர்காலமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்தார். அப்போதுதான் தன் குடும்பத்தைப் பற்றியும் தன் உழைப்பைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்.

அவருக்கு இரண்டு மகன்களாம். என்ன படிக்கிறார்கள், எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது என் நினைவில் இல்லை. ஆனால் படிப்புச் செலவு மட்டும் மாதத்திற்கு கிட்டத்தட்ட பதினான்காயிரம் ஆகிறதாம். இதை எப்படி சமாளிக்கிறாராம் தெரியுமா?

காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு, ஏழு மணி வரை ஒருவரிடம் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறாராம். மாதச் சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய். அதற்குப் பிறகு, தினம் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாய் வருமானம் (டீசல் செலவு போக) வரும் வரை ஆட்டோ ஓட்டுகிறாராம். காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு வந்துவிடுகிறாராம். அதற்குப் பிறகு அன்று முழுவதும் அவர்களுடன் பேச நேரம் கிடைப்பதேயில்லையாம்.

இப்படி அலைந்துகொண்டே இருப்பதால், வாரத்தில் நான்கைந்து நாட்களில், ஐந்து மணி நேரம்தான் தூங்க நேரம் கிடைக்கிறதாம். எத்தனை மணி நேரம்? ஐந்து மணி நேரம்!

இதைக் கேட்டதும் வாயடைத்துப் போனேன். குறைந்தது ஏழு மணி நேர தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் முழுவதும் அழுது வடிந்து போகும் எனக்கு. அப்படியிருக்கையில் வெறும் ஐந்து மணி நேரம்தான் தூக்கம் என்றால்?

இவர் படும் கஷ்டத்தை இவர் மனைவி தங்கள் பிள்ளைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்ப்பதாகவும், அவர்களும் நிலைமையைப் புரிந்து நன்றாகப் படித்து வருவதாகவும் சொன்னார். படிப்புதான் நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் பெரிய சொத்து என்றார். வேதவாக்கு. தொடர்ந்து பேசினோம்.

வீடு வந்து சேர்ந்தோம். வண்டியை விட்டு இறங்கும்போது நான் அம்பது, அம்பத்தஞ்சு வயசு வரைக்கும்தான் வாழ்வேன்னு நினைக்கிறேன் சார். இவ்ளோ அலைச்சல், டென்ஷன், பிரஷர். எப்படி தாங்குவனோ தெரியல. இப்பவே உடம்புல ஏகப்பட்ட பிரச்சினை. ஆனா, அதுக்கு முன்னாடி என் பசங்களை நல்லா செட்டில் பண்ணிட்டா போதும் சார். எனக்கு வேற கவலையில்லை என்றார். கண்கள் ஈரமாகின. அவருக்கும், எனக்கும்.

பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். அடுத்த திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்லவேண்டுமே என்ற அலுப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.

என்னையும் இப்படி மாற்றிய இவரது முகம் மறக்க முடியாத முகமே!

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

22-Apr-2020:

 

"இந்த கொரோனா வந்தாலும் வந்துச்சு, யாருக்குள்ள இந்த வைரஸ் இருக்கு, யாருக்குள்ள  இல்லன்னே தெரியல. பயமாயிருக்கு. ஏதாவது ஒரு கொடூரமான வைரஸ் வரணும் இருந்தா, அது இந்த  கொரோனா வைரஸுக்கு பதிலா மனுஷங்களை zombie-க்களா மாத்துற வைரஸா இருந்திருந்தாகூட இதைவிட எவ்வளவோ தேவலைன்னு தோணுது"

"ஆமா, for example, நாம லஞ்ச் சாப்பிட வெளிய போகும்போது நம்மளையே லஞ்ச் மாதிரி சாப்பிட ஓடி வந்தா அதுங்க zombies. நாம தப்பிச்சிக்கலாம். ஆனா இப்போ வெளியே போய் சாப்பிடறதே பயமாயிருக்கு"

"Correct. என்ன பண்றது! உப்பு திண்ணா தண்ணி குடிச்சாகணும்"

"சரிதான். ஆனா எவனோ ஒருத்தன் உப்பு திண்ணதுக்காக நாம எதுக்கு தண்ணி குடிக்கணும்?"

"அவன் உப்பு திண்ணிருந்தாகூட பரவாயில்லை, சும்மா தொங்கிட்டிருந்த வவ்வாலை திண்ணுட்டு நம்மளை தொங்கல்ல விட்டுட்டான் பாரு இந்த சீனாக்காரன்"

"சரி விடு, நேரமாச்சு. நான் கிளம்பறேன். கூடிய சீக்கிரம் சந்திப்போம்"

"Sure, take care, bye"

"Bye"

5 வாரங்களுக்கு முன்பு அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது. அலுவலகத்துக்குக் கடைசியாகச் சென்றது அன்றுதான்.

இத்தனை நாட்களாய் வீட்டிலிருந்துதான் வேலை. பிடித்து வைத்த பிள்ளையார்போல (உவமைக்குச் சொல்கிறேன், உண்மையிலேயே பெருத்துவிட்டானோ என்ற சந்தேகம் எழுந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல ;)) ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

வீட்டைவிட்டு வெளியே போவது அரிதாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை காய்கறிகளையும், இன்ன பிற மளிகைப் பொருட்களையும் வாங்குவதற்குச் செல்வது என்று முடிவெடுத்து அதன்படியே கடந்த வாரங்களை ஒட்டியாகிவிட்டது.

வீதிகள் எல்லாம் வாழ்ந்துகெட்ட குடும்பங்கள் போல் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஸ்வீட் ஸ்டால்களில் மொய்க்கும் ஈக்களைப் போல எந்நேரமும் மக்கள் கூட்டம் பொங்கி வழியும் இடங்கள் எல்லாம், இப்போது கொசுவின் ரீங்காரம் கேட்கும் அளவுக்கு அமைதியாய் இருக்கின்றன.

சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றினாலோ, அல்லது சரியான காரணமில்லாமல் வெளியே சுற்றினாலோ, ஆயிரம் டாலர்கள் முதல் ஆறாயிரம் டாலர்கள்வரை அபராதம். இதுவரை நிறைய பேர் சிக்கியிருக்கின்றனர். அதிலும் ஒருவர், தன் வீட்டில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்து அமோகமாகக் கொண்டாடியதால் சில ஆயிரம் டாலர்கள் அபராதம் கட்டியிருக்கிறார். போதாக்குறைக்கு noise pollution என்று அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததால், அதற்கும் சேர்த்து சில நூறு டாலர்கள் கட்டியிருக்கிறார்!

இன்னொருவர், ஐஸ் கிரீம் வாங்கச் சென்றபோது சிக்கியிருக்கிறார்! எனக்குத் தெரிந்தவரை, இந்த உலகத்திலேயே ஆயிரத்து சொச்சம் டாலர் கொடுத்து ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஒருவர் இவராகத்தான் இருக்கமுடியும்.

இச்செய்திகளையெல்லாம் படித்து, அடக்க ஒடுக்கமாய் வீட்டிலேயே இருப்பதும், முடிந்தவரை நாக்கையும் அடக்கியிருப்பதும் மேல் என்று முடிவெடுத்தாகிவிட்டது. ஆனால் அவ்வளவு எளிதாக நாக்கை அடக்கிவிடமுடியுமா என்ன?

சில நாட்களுக்கு முன்பு, ஏதாவது ஒரு உணவகத்திலிருந்து உணவு order செய்து சாப்பிட்டால், சமையலுக்கு விடுமுறை கொடுத்தமாதிரியும் இருக்கும், சுவையாகச் சாப்பிட்டமாதிரியும் இருக்கும் என்ற எண்ணத்தில் பீட்சா order செய்து,  ரசித்து ருசித்துச் சாப்பிட்டபிறகு எதேச்சையாக அன்றைய செய்தியைப் பார்த்தபோது கொஞ்சம் அதிர்ந்துபோனேன்! நம்மூரில் பீட்சா டெலிவரி செய்த ஒருவரின் மூலம் நிறைய பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது!

சும்மா போகிற கொரோனாவைக் காசு கொடுத்து, அதைக் கொண்டுவந்தவருக்கு டிப்ஸ் கொடுத்து, வைரஸுக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுத்து,அதற்குக் கால் நோகாமல் இருப்பதற்காக லிப்ட்டில் ஏற்றி, வீட்டுக்கு வரவழைக்க வேண்டுமா என்ன! அன்றோடு முடிந்தது ஊபர் ஈட்ஸ் உபயோகிக்கும் பழக்கம். நாக்கையும், வாயையும், மனதையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது மிகவும் கஷ்டமான காரியம்தான்.

மனிதனின் நாக்கினாலும், வாயினாலும் எத்தனை எத்தனை பிரச்சினை!

சீனாக்காரன் தன் நாக்கை அடக்கி வவ்வால்களையும், எறும்புத்தின்னிகளையும் சாப்பிடாமல் இருந்திருந்தால் இந்த கொரோனாவைரஸ் எட்டிப்பார்த்திருக்காது. அப்படிச் செய்தானா? இல்லை. சரி, ஆனது ஆச்சு. சாப்பிட்டதால் ஏற்பட்ட விளைவை, அந்த வைரஸ் பரவியதை சீன அரசு திருவாய் மலர்ந்து சொல்லியிருந்தால் பாதிப்பு கொஞ்சம் குறைவாய் இருந்திருக்கும். அதுவும் செய்யவில்லை! வாயை மூடி வைத்திருக்க வேண்டிய நேரத்தில் திறந்து வைத்துவிட்டு, திறந்து வைத்திருக்க வேண்டிய நேரத்தில் மூடி வைத்துவிட்டு, உலகத்தையே வாயைமூடி இருக்க வைத்துவிட்டான்!

இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கும் செலுத்தப்பட்டுவிட்டால், நமக்கெல்லாம் விடிவுகாலம் பிறந்துவிடும் என்றாலும், எனக்கு ஒரே ஒரு பயம்தான். எங்களையா வாயைக் கட்டுப்படுத்தி இருக்கவைத்துவிட்டாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்!என்று கங்கணம் கட்டிக்கொண்டு அந்நாட்டில் இருக்கும் எல்லா வவ்வால்களையும்,  எறும்புத்தின்னிகளையும் காலிசெய்து விடுவார்களோ என்ற பயம்தான்!

வவ்வால்களையும், எறும்புத்தின்னிகளையும், மற்ற விலங்குகளையும், சமூக விலங்குகளான மனிதர்களையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்!

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

12-Mar-2020:

 

பார்த்தசாரதி விலாஸ்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில் போன்ற ஏகப்பட்ட கோவில்களைக் கொண்ட மாநகரம் திருச்சி மாநகரம். இக்கோவில்களில் தரப்படும் ப்ரசாதத்தின் சுவையை விவரிக்க வார்த்தைகள் கிடையாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல் திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவிலருகே உள்ள பார்த்தசாரதி விலாஸ் உணவகத்தில் கிடைக்கும் உணவும் அத்தனை சுவை.

1960-களில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வுணவகம் காலை 5 மணியிலிருந்து பகல் 1 மணி வரையிலும், பின் மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் இயங்குகிறது.

அந்த கால வீடுபோல் காட்சியளிக்கும் இவ்வுணவகத்தில் இந்த காலத்திலும் விறகு அடுப்புதான் உபயோகப்படுத்தப்படுகிறது. உணவகத்தின் சமையலறை, அந்த கால வீடொன்றில் இருக்கும் சமையலறைபோலவே காட்சியளிக்கிறது.

இவ்வுணவகத்துக்கு சாவகாசமாக 9 மணிக்கு மேல் சென்று, "டிபன் என்ன இருக்கு?" என்று சர்வரைக் கேட்டால் அவர், "தோசை, வடை, சாம்பார் வடை இருக்கு. மத்ததெல்லாம் காலி" என்பார்.

பூரி 8.30 மணிக்குள் பறந்துவிடுமாம். "அப்டின்னா பொங்கல் எல்லாம் எப்போ கிடைக்கும்?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நானும் அதையேதான் கேட்டேன். சர்வரின் பதிலைக் கேட்டு வாயடைத்துப்போனேன்.

"5.30 மணிக்கே காலியாகிடும்" என்றார் அவர்.

5 மணிக்குக் கடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்குள், அதாவது அரை மணி நேரத்தில் எல்லாம் காலியாகிவிடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நள்ளிரவு 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, அடித்து பிடித்து உணவகத்துக்குச் சென்று, வரிசையில் நின்று பொங்கல் வாங்குவதெல்லாம் 9 கிரகங்களும் லக்னத்தில் உச்சம் பெற்ற ஒருவரால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட ஒருவருக்கு மட்டுமே பொங்கல் உண்ணும் வாய்ப்பு கிட்டும்.

அடுத்த முறையாவது பொங்கல் சுவைத்துவிடவேண்டும் என்று சங்கல்பம் எடுத்து, நெய் ரோஸ்டும், சாம்பார் வடையும் ஆர்டர் செய்தோம். சில நிமிடங்களில் சாம்பார் வாளியொன்றை எடுத்துக்கொண்டு வந்தார் சர்வர். அதனுள் நீளமான கரண்டியை விட்டு, மீன் தொட்டியிலிருந்து மீன் பிடிப்பதுபோல் சாம்பார் வடையை எடுத்து இலையில் போட்டார்.

அநேக உணவகங்களில் வடையின்மேல் சாம்பார் ஊற்றி, இதுதான் சாம்பார் வடை என்று கொடுப்பார்கள். இவ்வுணவகத்தில் அப்படியில்லை.

சாம்பார்க்குளத்தில் போடப்பட்ட, அதில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நீச்சல் தெரியாத மெதுவடையை கரண்டி போட்டு காப்பாற்றியதால், சாபவிமோசனம் பெற்ற பேரானந்தத்தில் அமிர்தம்போல் சுவைத்தது அந்த சாம்பார் வடை.

அடுத்தது நெய் ரோஸ்ட்.

மொறுமொறுவென முறுகலான வெளிப்பாகம். பழைய டி.வி.எஸ் 50-யிலிருந்து சொட்டுசொட்டாய் ஒழுகும் இன்ஜின் ஆயில்போல் தோசையின் உள்பாகத்தில் நெய்.

கொஞ்சம் விண்டு வாயில் போட்டதும் அந்த ஜம்புகேஸ்வரரையே நேரே சந்தித்ததுபோன்றதொரு உணர்வு.

ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்துவிட்டு பில் கவுண்டருக்கு வந்தபோதுதான் கவனித்தோம், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த கால கடவுள் ஓவியங்கள். ரவி வர்மாவின் கைவண்ணத்தில் இன்றும் நிலைத்து நிற்கும் அந்த ஓவியங்களைப்போலவே, சுவையும் தரமும் இன்றுவரை நீடித்து நிற்கும் பார்த்தசாரதி விலாஸ், திருச்சியில் தவறவிடக்கூடாத ஒன்று.

#பேருந்துப்_பயணங்களில்! #Rewind!

 

 

 

21-Apr-2020:

 

மறக்க முடியாத முகங்கள் – 4:

சென்ற மாதம், அலுவல் நிமித்தமாக ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரம்தான் அங்கு இருக்க வேண்டும். காரணம் டீம் பட்ஜெட் நிலைமை.

ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கு இந்த மூன்று வார்த்தைகள் டீம் பட்ஜெட் நிலைமை பரிச்சயமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இதை எப்படி விளக்குவது? ஆங், யோசனை வந்துவிட்டது.

அதாவது, ‘டீம் பட்ஜெட் நிலைமை என்பது ஒரே ஒரு தோசையை மூன்று, நான்கு பேருக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான ஒரு சாக்கு.

யாருக்கும் வயிறு நிரம்பாது. அதே நேரத்தில், நம் மேனேஜர் நான் உனக்காவது கால் தோசை கொடுத்தேன். மற்றவர்களுக்கு அதுகூட இல்லை என்ற சாக்கு சொல்லிச் சொல்லியே தப்பிப்பதற்கு உதவும். இதுதான் டீம் பட்ஜெட் நிலைமை.

வெளிநாட்டுப் பயணம் என்பதால் விமானம் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. அதாவது அதிகாலை 4 மணி விமானத்திற்கு 1 மணிக்கே அங்கு இருக்க வேண்டும். அதற்கு வீட்டிலிருந்து 12 மணிக்கே கிளம்ப வேண்டும். அவ்வளவு தூரம்.

என்னை பிக்-அப் செய்ய டேக்ஸி டிரைவர் 11:30 மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார். இன்னும் அரை மணி நேரத்தில் நான் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு எல்லா பொருட்களையும் சரிபார்த்து கொண்டிருந்தேன்.

12 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். டாடா இண்டிகா நின்று கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் சற்று தூரத்தில் இருந்து வந்தார் ஓட்டுனர். நெற்றியில் விபூதிப் பட்டை. அவருக்கு அது மிகப் பொருத்தமாக இருந்தது.

லக்கேஜை வண்டியினுள் வைத்துவிட்டு, இருக்கையில் உள்ளே உட்கார்ந்தேன். வண்டி படுசுத்தமாக இருந்தது. சாமி பொம்மை, ஊதுவத்தி வாசனை, சில பழங்கள் என அந்த இடமே ஒரு சிறு பூஜையறைபோல் இருந்தது.

வண்டியை கிளப்பினார். சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அழகான தமிழில் பேசினார். என் சொந்த ஊர் மதுரை சார் என்றார். ஆச்சரியப்படவில்லை.

அப்படீங்களா? நான் வேலூர் ஆள் சார் என்றேன். அதற்கு அவர், “நெனச்சேன் சார். உங்க பேச்சு கொஞ்சம் முரட்டுத்தனமும், நக்கலும் கலந்ததா இருக்கும்போதே நீங்க வட ஆற்காடு மாவட்டத்துல இருந்து வர்றீங்கன்னு நெனச்சேன் என்றார். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம்.

அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தன. சொந்த ஊரிலிருந்து 7 வயதிலேயே தன் தங்கையுடன் இங்கு வந்துவிட்டாராம். சொத்துப் பிரச்சனை காரணமாக அவருடைய பெற்றோரை உறவினர்களே ஆளை வைத்து கொன்றுவிட்டார்களாம். அவர்களிடமிருந்து தப்பித்து இங்கு வந்துவிட்டதாகச் சொன்னார்.

பெங்களூருக்கு வந்து சில நாட்களிலேயே இவர்களை ஒருவர் தத்தெடுத்துவிட்டார். அவருக்கு ஏற்கனவே ஒரு மகள். இப்போது இவர்களையும் சேர்த்து மொத்தம் மூன்று குழந்தைகள்.

இவருக்கு நடந்தது காதல் திருமணம். இப்போது இவருக்கு 50 வயதாகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன். மகள்கள் இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். திருமணமாகி செட்டிலாகிவிட்டனர் மகன் பொறியியல் படிப்பு படித்து வருகிறான்.

நன்றாக செட்டில் ஆகிவிட்டீர்களே, பிறகேன் டேக்ஸி ஓட்டி உடம்பை வருத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

தினமும் காலைல 6 மணிக்கெல்லாம் எழுந்து முதல் வேலையா குளிச்சுடுவேன். அப்பறம் சாமி ரூம்ல உக்காந்து கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் பூஜை பண்ணுவேன்

அப்பறம் சாப்பிட்டுட்டு வேலைன்னு வெளியே கிளம்பிடுவேன். வேலை செய்யாம என்னால சாப்பிட முடியாது, தூங்க முடியாது. நிம்மதி போயிடும் சார். ஞாயித்துக்கிழமை மட்டும் ரெஸ்ட். மத்த நாள்ல வேலை செஞ்சே ஆகணும்

இதையெல்லாம் கேட்டபிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் டாபிக்கை மாற்றினேன். உங்க தங்கை எங்கே இருக்காங்க சார்? செட்டில் ஆகிட்டாங்களா?” என்று கேட்டேன்.

எனக்கு ரெண்டு தங்கைன்னு சொன்னேனே, ரெண்டு பேரும் செட்டில் ஆகிட்டாங்க. இங்க எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்காங்க

அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. வீட்டுக்கு வந்து, ஏதாவது பிடிச்சுப்போச்சுன்னா.. புடவைன்னு வெச்சுக்கங்களேன்.. அவங்க பாட்டுக்கு பீரோவை திறந்து எடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க. என் மனைவியும் ஒரு வார்த்தை பேசாம, அவங்க கேட்டதை எடுத்து கொடுத்துடுவாங்க. அவங்க உடுத்தியிருக்கற புடவையா இருந்தாலும் அதேதான் என்றார்.

ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனைவியா? என்று வியந்தேன் நான். அவர் தொடர்ந்தார்.

இப்படிப்பட்ட ஒரு மனைவியை நான்தானே சார் ஒழுங்கா பாத்துக்கணும். இன்னும் எத்தனை வருஷம் என் உடம்பு ஒத்துழைக்குதோ, அத்தனை வருஷம் என் மனைவிக்காக உழைப்பேன் சார் என்று அவர் சொல்லும்போது விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.

இறங்கி லக்கேஜ் எடுப்பதற்கு வெளியே வந்தபோதுதான் அவர் கண்களைப் பார்த்தேன். கலங்கியிருந்தன. அதைப் பார்த்தவுடன் என் கண்களும் கலங்க ஆரம்பித்தன.

அவரிடம் விடைபெற்று, நான் விமான நிலையத்தினுள் நுழைந்தேன். சிந்தனையெல்லாம் அவரைப் பற்றிதான்.

அவரை நான் எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வேன் என நினைக்கிறேன். அப்படியொரு மறக்க முடியாத முகம் அது.

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

28-Mar-2020:

 

Kollywood Heroes vs Corona virus:

கொரோனா வைரஸைச் சமாளிக்க, அதைத் தோற்கடிக்க மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் ஒரு புறம் ஓயாது உழைத்துக்கொண்டிருந்தாலும், இந்த இக்கட்டான சூழலில் தங்களின் பங்கு இருக்கவேண்டும் என்றெண்ணி தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் யோசனையில் ஆழ்ந்தனர். திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஏகப்பட்ட பேர் இருந்தும் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று வளர்ந்து வரும் ஸ்டார்கள் சிவகார்த்திகேயன், அருண்விஜய் போன்றோர் கவலையில் மூழ்கினர். அப்போது சீனியரான முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்துக்கு ஒரு யோசனை தோன்றியது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை, நடிகர் சங்கத்தில் இருக்கும் ஒரு விசேஷ கருவிமூலம் கொரோனா வைரஸ் அளவுக்குச் சுருக்கி, வைரஸ் உலகத்துக்கு அனுப்பி, வைரஸின் தலைவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியோ அல்லது சண்டை போட்டோ அதனைத் தோற்கடித்தால் ரீல் உலகத்தையும், ரியல் உலகத்தையும் காப்பாற்றலாம் என்ற யோசனைதான் அது.

முதலாக ரஜினியைத் தொடர்புகொண்டு பேசியபோது, "இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்றவர், சில மணி நேரம் கழித்து, "இதோ கிளம்பிட்டேன்" என்றவர், அடுத்த சில மணி நேரம் கழித்து, "வீட்டு வாசல்ல இருக்கேன்" என்றவர், அடுத்த சில மணி நேரம் கழித்து, "வெரி சாரி, சிஸ்டம் சரியில்லை, அதனால் வரவில்லை, ஆனால் இந்த விஷயத்துக்கு ஏத்தவங்களை நீங்க செலக்ட் பண்ணுங்க, அவங்கள ஒழுங்கா வேலையை செஞ்சுமுடிக்க வெக்கிறேன்" என்றதும், "நீங்க இதுவரைக்கும் புடுங்கின ஆணியே போதும், இனி நீங்க ஆணியே புடுங்க வேணாம்" என்று சொல்லிவிட்டார் விஜயகாந்த்.

வைரஸ் உலகமும் தேனீக்கள் வாழும் தேன்கூடும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இயங்கும். தொழிலாளி வைரஸ்கள் ஏராளம் இருக்கும். எல்லோருக்கும் தலைவியாக ஒரு ராணி வைரஸ் இருக்கும். இதுதான் வைரஸ்களின் சமூகக் கட்டமைப்பு.

தேர்வு செய்யப்பட்ட நடிகர்களை ஒவ்வொருவராக அந்த விசேஷ கருவியின்மூலம் சின்னதாக்கி வைரஸ் உலகத்துக்கு அனுப்புவதுதான் யுக்தி. இரண்டு மணி நேரத்துக்குள் வெளியே வரவில்லையென்றால் அடுத்த நடிகர் உள்ளே அனுப்பப்படுவார். இதுதான் திட்டம்.

என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கமல்:

"அகம் டிவி வழியே அகத்துக்குள்" என்று சொல்லியபடி, மனிதகுல வரலாற்றில் முதன்முதலாக வைரஸ் உலகத்துக்குச் செல்கிறார் நம் உலகநாயகன். இடது கால் வைத்து உள்ளே நுழைய காலைத் தூக்கி வைத்ததும், இதைப் பார்த்து மக்கள் ஏதாவது கேள்வி கேட்கப்போகிறார்கள் என நினைத்து, அந்த நொடிப்பொழுதில் வலது கையையும் நீட்டி, "நான் இடது வலது பேதமில்லாதவன், ஆனால் அது இந்த மாதிரி விஷயங்களுக்குத்தான்" என்று விளக்கம் சொல்லியபடி உள்ளே நுழைகிறார். ராணி வைரஸ் இவரைக் கண்டு, இவரது அழகில் மயங்கிட, இவரும் ராணி வைரஸின் அழகில் மயங்கி, வைரஸ் உலகத்தில் மய்யத்தில் வைரஸாகவே மாறி ஒன்றிவிடுகிறார்.

விஜய்:

கமல் வைரஸ் உலகத்துக்குச் சென்று இரண்டு மணி நேரமாகியும் வெளியே வராததால், அடுத்ததாக விஜய் அந்த உலகத்துக்கு அனுப்பப்படுகிறார். உள்ளே நுழைந்ததும், "என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பார்ந்த ரசிகர்களே" என்று பேச ஆரம்பித்தபோதுதான் புரிந்தது, தான் வேறொரு உலகத்துக்கு வந்திருப்பது. அங்கிருக்கும் வைரஸ்களிலேயே சிறிய / இளைய வைரஸ்களாகப் பார்த்து, அவற்றிடம் பேசுகிறார், அதாவது அவர் மட்டுமே ஏதோ பேசுகிறார், வைரஸ்களைப் பேசவே விடவில்லை. கடைசியில், ராணி வைரஸைப் பார்த்து, "சட்டம் போட்டு வைரஸ்களை அந்த சட்டப்படி நடக்கச் சொல்லக்கூடாது. வைரஸ்களுக்கு எது தேவையோ அதுக்கேத்த மாதிரி சட்டம் போடணும்" என்கிறார். இதைக்கேட்டதும் ராணி முகத்தில் கோபம் தோன்றியதைக் கண்டு விஜய்க்கு ஏதோ நினைவில் தோன்ற, "ராமருக்கு உதவிய அணில் மாதிரி நான் ஒரு தூதுவன்" என்று பம்முகிறார். "ராமருக்காக தூது போனது அணில் இல்லை, அனுமார்" என்று சொல்லி அவரைக் கூப்பிட்டு தன் அரியாசனத்துக்கு அருகே தரையில் உட்கார வைத்துவிடுகிறது ராணி வைரஸ். 

அஜித்:

இரண்டு மணி நேரமாகியும் விஜய் வெளியே வராததால், அடுத்ததாக அஜித், அதாவது நம்ம 'தல', வைரஸ் உலகத்தில் கால் எடுத்து வைக்கிறார். தலை முடிக்குச் சாயம் பூசுவது பிடிக்காததால், நரைத்த தலையுடன் காணப்படும் தலயைப் பார்த்து இரக்கம் கொள்கின்றன வைரஸ்கள். பாவம், முதியவருக்கு கால் வலிக்கப்போகிறது என நினைத்து ஒரு குஷன் நாற்காலி போட்டு, அதில் அஜித்தை உட்காரச் சொல்கிறது ராணி வைரஸ். ஆனால், அதைத் துச்சமாக மதித்து நடக்க ஆரம்பிக்கிறார் அஜித். புன்னகைத்தபடியே ஸ்லோ மோஷனில் நடக்கிறார், நடக்கிறார், நடந்துகொண்டே இருக்கிறார், இரண்டு மணி நேரம் கடந்ததுகூட தெரியாமல்.

சூர்யா:

அடுத்ததாக வைரஸ் உலகத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறார் சூர்யா, காதில் மாட்டப்பட்டுள்ள ear phone-ல் "சிங்கம் சிங்கம், he is துரைசிங்கம்" என்ற பாடலைக் கேட்டபடியே. "யார் நீங்க?" என்று அங்கிருந்த வைரஸ்கள் கேட்க, "எதிர்பார்க்கலைல்ல? நான் இங்க வருவேன்னு எதிர்பார்க்கலைல்ல?" என்று கத்துகிறார். அதற்கு ராணி வைரஸ், "நீங்கதான் அடுத்து வருவீங்கன்னு எதிர்பாத்தோம், ஆனா, இவ்ளோ சத்தமா கத்துவீங்கன்னு எதிர்பார்க்கலை" என்று சொல்லி, சிக்னல் காண்பித்து தொழிலாளி வைரஸ்களை வரவழைத்து, அவரது வாயில் துணிவைத்து சத்தம் வெளியே வராதமாதிரி செய்துவிடுகிறது ராணி வைரஸ். விஜய்க்குப் பக்கத்தில் உட்காரச் செய்துவிடுகிறது ராணி வைரஸ்.

விக்ரம்:

அடுத்ததாக விக்ரம் வைரஸ் உலகத்துக்கு அனுப்பப்படுகிறார். திரைப்படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்த அந்தப் பழக்கதோஷத்தில் வைரஸ் போலவே வேஷமிட்டுச் சென்றதால், எந்த வைரஸுக்கும் வந்திருப்பது விக்ரம் என்பது தெரியவில்லை. அவரும், தான் ஏற்று வந்துள்ள வைரஸ் என்ற கதாபாத்திரத்துடன் ஒன்றிவிடுகிறார். தொழிலாளி வைரஸ்களில் ஒருவராக எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்கிறார். மணிக்கணக்காக வேலை செய்கிறார்.

விஜய் சேதுபதி:

இரண்டு மணி நேரமாகியும் யாருமே வெளியே வராததால் அடுத்ததாக விஜய் சேதுபதி வைரஸ் உலகத்துக்குள் அனுப்பப்படுகிறார். உள்ளே நுழைந்ததும், ஒவ்வொரு வைரஸையும் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். இந்த ராஜதந்திரத்தை சற்றும் எதிர்பாராத தொழிலாளி வைரஸ்களும், ராணி வைரஸும் அவரை உடனடியாகக் கைது செய்து, அவரது வாயைச் சுற்றி துணிவைத்து கட்டிப்போட்டு, "வைரஸான எங்களுக்கே உங்க முத்தம் மூலம் viral infection குடுக்கப் பாக்கறீங்களா? விடமாட்டேன்" என்கிறது ராணி வைரஸ். அதன் முகத்தில் ஒரு சின்ன பயம் முதன்முதலாக எட்டிப்பார்க்கிறது.

விஷால்:

அனுப்பிய அத்தனை பேரும் மாட்டிக்கொண்டுவிட்டனரே என்று நடிகர் சங்க நிர்வாகிகள் கவலைப்பட ஆரம்பித்தபோது, "நான் போய் முடிச்சிட்டு வர்றேன். நீங்க எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணனும்" என்று கேட்டார் விஷால். விவரத்தைக் கேட்டவுடன் அதைச் செய்யச் சம்மதித்தனர் நிர்வாகிகள். வைரஸ் உலகத்தில் "ஆம்பள ஆம்பள" என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, அதைக் கேட்டதும் விஜய், சூர்யா முகங்களில் ஒரு சின்ன நம்பிக்கை பூக்க ஆரம்பிக்க, வைரஸ் உலகத்தில் Tata Sumo ஒன்று பறந்து வர, அதன் bonnet-ல் உட்கார்ந்தபடி கம்பீரமாய் வைரஸ் உலகத்தில் நுழைந்தார் விஷால். Sumo நேராக ராணி உட்கார்ந்திருந்த அரியாசனத்துக்கு எதிரே வந்திறங்க, ஒலித்துக்கொண்டிருந்த பாடல் முடிவடைய, "நானும் மதுரைக்காரந்தாண்டா" என்று வீராவேசமாகச் சொன்னார் விஷால். அதைக் கேட்டு சிரித்த ராணி, தன் கண்களால் ஏதோ ஒரு சிக்னல் கட்ட, தொழிலாளி வைரஸ்கள் அவரை கார் மேலேயே வைத்து கட்டிப்போட்டனர். இதை எதிர்பாராத விஷால் "ஏதாவது செய்யணும் சார்" என்று விஜய், சூர்யாவைப் பார்த்து தழுதழுத்த குரலில் சொல்ல, அந்த அதிரிச்சியில் narcolepsy நோயாளிபோல் தூங்கி விழுந்தனர் விஜய்யும், சூர்யாவும்.

இப்படி நம் நட்சத்திரங்களெல்லாம் ஒவ்வொருவராக மாட்டிக்கொண்டிருக்கிறார்களே என்று வருத்தத்தில் சிலருக்கு அழுகை பீறிட்டு வர ஆரம்பித்தது. அவர்களிடம் மீதம் இருந்த துருப்புச்சீட்டுக்கள் தனுஷும், சிம்புவும் மட்டுமே. தனுஷ் ஏதோ ஒரு பட ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்குச் சென்றவர், அவ்வூரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வெளியே வரமுடியாத நிலை.

"சிம்புகிட்ட பேசினீர்களா? வர்றேன்னு சொன்னாரா?" என்று ஒருவர் கேட்க, அதற்கு மற்றோருவர், "பேசினோம். அவர் இன்னிக்கு work from home பண்றதா சொல்லிட்டார். அதனால வீட்டிலிருந்தபடி ஏதாவது வேணும்னா சொல்லுங்க"ன்னு சொல்லிட்டு போனை off பண்ணிட்டார்" என்கிறார்.

இனி யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது என்று சோகம் ததும்பும் முகத்தோடு அங்கிருந்து கிளம்ப ஆரம்பிக்க, விஜயகாந்த் மட்டும் புன்னகைத்தார்.

"என்ன கேப்டன் சிரிக்கறீங்க? நாங்கல்லாம் இங்க அம்போ ஆகிடுச்சின்னு கதிகலங்கி இருக்கோம். நீங்க என்ன கவலையே இல்லாம இருக்கறீங்க?" என்று கேட்டார் மூத்த நிர்வாகி ஒருவர்.

"நான் மொதல்லேர்ந்தே ஒருத்தரைப் பத்தி யோசிச்சிட்டிருந்தேன். இந்த ஹீரோக்களால் வைரஸை அடக்க முடியலைன்னாமட்டும் அவரைக் கூப்பிடுவதா சொல்லிருந்தேன். ஏன்னா அவர் ரொம்ப பிசி. அவரும் சரின்னுட்டார். இந்த பிரச்சனையிலிருந்து எல்லாரையும் காப்பாத்த அவர் ஒருத்தராலதான் முடியும். நான் இப்பவே அவருக்குக் கால் பண்றேன்" என்ற விஜயகாந்த், உடனே தன் கைப்பேசியை எடுத்து அந்த நடிகரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்ல, அவரும் சில நிமிடங்களில் அங்கு வந்துசேர்ந்தார்.

வைரஸ் உலகத்தினுள் சென்றார். ஐந்தே நிமிடங்களில் எல்லா வைரஸ்களையும் அழித்து, நடிகர்களையும் மீட்டுக் கொண்டுவந்துவிட்டார். வைரஸ் உலகத்திலிருந்து மீண்டு வந்த விஜய், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் விஷால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

நடந்த விஷயமெல்லாம் எதுவும் நினைவில் இல்லை கமலுக்கும், விக்ரமுக்கும். நடந்தது மட்டும்தான் நினைவில் இருந்தது அஜித்துக்கு. இம்மூவரும் நிகழ்காலத்துக்கு வருவதற்கு சில நிமிடங்கள் ஆனது.

அதற்குப் பிறகு அனைவரும் சேர்ந்து அந்த நடிகரைப் புகழ ஆரம்பித்தனர், ஆனால் அவரது பெயரைமட்டும் சொல்லவேயில்லை!

அந்த இடமே திருவிழாக்கோலம் பூண்டது. சில நிமிடங்களில் அங்கு பத்திரிகையாளர்கள் கூடிவிட்டனர். நடிகர்களின் இந்த மாபெரும் வெற்றியை, மனிதகுல சேவையைப் பற்றி ஒவ்வொரு நடிகரிடமும் வரிசையாகக் கேட்க, ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை விவரித்தனர். இருப்பினும், யார் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை மட்டும் சொல்லவேயில்லை.

பத்திரிகையாளர்கள் வற்புறுத்திக் கேட்டபோதும் பதில் இல்லை. "அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. அவர்தான் எங்க எல்லாரையும், இந்த உலகத்தையும் காப்பாத்தினார், ஆனா அவரைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் கடமை, அதனால இதைப்பத்தியெல்லாம் சொல்லி என்னை சங்கடப்படுத்தாதீங்கன்னு எங்ககிட்ட பேசும்போது கேட்டுக்கிட்டார்" என்று சொன்னார்கள் நடிகர்கள்.

விஷால், இன்னமும் அந்த Tata Sumo bonnet-ல் உட்கார்ந்திருந்தார். ஆனால், அவரது வாயை மூடியிருந்த அந்த துணி இப்போது அவரது காதுகளை மூடியிருந்தது. "ஏன் காதை மூடியிருக்கீங்க? எப்படி ஜெயிச்சீங்க?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "நாங்கல்லாம் சண்டை போடுறோம், பன்ச் டயலாக் பேசுறோம். ஆனா நாங்கள்லாம் ரியல் ஹீரோ இல்லை. வன்முறையே இல்லாமல், வாயால் பேசியே தொழிலாளி வைரஸையெல்லாம் அழித்து, ராணி வைரஸைத் தற்கொலை செய்யவைத்து, எங்களையெல்லாம் காப்பாத்தினார் ஒருத்தர்" என்றார், காதுகளில் அடைக்கப்பட்டிருந்த துணியை எடுத்தபடியே. அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இப்படி நடிகர் சங்கத்தின் ஒரு புறத்தில் கூட்டம் அலைமோத, மற்றோரு புறத்தில், "ரொம்ப நேரம் பேசினதால தாகம் எடுக்குது. கொஞ்சம் சோடா கொடுங்கண்ணே" என்று அங்கிருந்த டீக்கடை ஒன்றில் சோடா வாங்கி குடிக்க ஆரம்பித்தார், சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த சமுத்திரகனி.

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

20-Mar-2020:

 

கனடாவில் கொரோனா வைரஸ் - பார்ட் 2

பார்ட்-1-ல் போதுமான அளவுக்கு கனடாவின் கள நிலவரத்தையும், யதார்த்தத்தையும் சொல்லி சோக கீதம் வாசித்தாகிவிட்டது. வழக்கமான பாணியில் கொஞ்சம் எழுதலாம் என்று தோன்றியதால்தான் இப்பதிவு. இதைப் படித்துவிட்டு, இதைவிட உன் சோக கீதமே பரவாயில்லை என நினைப்பவர்களுக்கு ஆண்டவன் நல்ல அறிவும், நீண்ட ஆயுளும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நான் பணிபுரியும் நிறுவனத்தில், அனைவரும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உபயம்: கொரோனாவைரஸ்.

வீட்டிலிருந்து வேலை செய்த மூன்றாவது நாள் இன்று. இம்மூன்று நாட்களில் நான் கண்டறிந்த விஷயங்கள் சில உள்ளன.

--------------------------

என் வீட்டில் தரையில் 468 டைல்கள் பதியப்பட்டிருக்கின்றன. வெள்ளை நிறத்தில் 420 டைல்கள், கரும்பச்சை நிறத்தில் 4 டைல்கள், மஞ்சள் நிறத்தில் 44 டைல்கள்.

சுவற்றில் சில இடங்களில் எண்ணெய் படிந்திருக்கிறது. கொஞ்சம் கொதிக்கவைத்தால் அப்பளம் பொரித்துவிடலாம்.

பாண்டா, நாய், பூனை, குரங்கு, யானை பொம்மைகள் வீட்டிலுள்ளன.

--------------------------

இத்தனை ஆண்டுகளாக இதே வீட்டில் வசித்து வந்தாலும், இந்த அற்புத விஷயங்கள் இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

நன்றி: Work from home அருளிய கொரோனாவைரஸ்

இன்று காலை, முக்கியமான மீட்டிங் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது என் மகள் அழ ஆரம்பிக்க, அவளைச் சமாதானப்படுத்த என் கைப்பேசியைக் கொடுத்தேன். அதில் காணொளிகள் பார்க்க ஆரம்பித்தாள். சில நொடிகளில் சமாதானமானாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, என்னைப் பார்த்து "யானை" என்றாள். என்னடா இது, மூன்று நாட்களாகத்தான் வீட்டிலேயே இருக்கிறேன், அதற்குள் யானைமாதிரி பெருத்துவிட்டேன் என்கிறாளோ என்று சந்தேகம் வந்தது.

Avengers Infinity War படத்தில் கம்பீரமாய் இருந்து, Avengers Endgame படத்தில் ஊதிப் பெருத்திருந்த Thor-போல் ஆகிவிட்டேனா என்று பயந்தேன். மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஷெனாய் வாத்தியங்கள் சோக கீதம் இசைக்க ஆரம்பித்ததுபோல் இருந்தது.

அப்போதுதான் கவனித்தேன், மகள் கையிலிருந்த கைப்பேசியில் ஏதோ யானை கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்ததை. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். கொரோனாசுரனைக் கொன்ற கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம் கண்டதுபோல் உணர்ந்தேன். ஷெனாய் இசை மறைந்து வீணை இசை ஒலிக்கத் தொடங்கியது. "இதான் ஹிந்தியில சித்தாரு" என்று 'காதலா காதலா' படத்தில் கமல்மூலம் கிரேசி மோகன் சொன்னதும், அப்படத்தில் "தாய் மாமன் இல்ல, நாய் மாமன்னே சொல்லலாம்" என்ற வசனமும் நினைவுக்கு வந்தது.

அப்போது என் சிந்தனை கலைந்து, சில வாரங்களுக்கு முன்பு நான் பார்த்த 2 காணொளிகள் நினைவுக்கு வந்தன.

திருமணமாகாதவர்கள், 15 வயத்துக்குட்பட்டவர்கள், இளகிய மனம் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் அடுத்த இரண்டு பத்திகளைத் தாண்டிச் செல்லவும்.

--------------------------

முதல் காணொளி: சீனாவில் ஏதோ ஒரு சந்தையில் எடுக்கப்பட்டது. நாய், பூனை, வவ்வால், எறும்புத்தின்னி, பாம்பு முதலிய பல விலங்குகளின் சடலங்கள் கிடத்தப்பட்டிருந்தன. மக்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிச் சென்றனர்.

இரண்டாவது காணொளி: ஒரு தட்டில் கிட்டத்தட்ட 1-அடி நீளமான பூரான்கள் 3, 4 இருந்தன. அருகிலிருந்த கண்ணாடிக் கோப்பை ஒன்றில் ஏதோ ஒரு திரவம் இருந்தது. எதிரே சீனப் பெண்ணொருத்தி (ஜப்பான் / கொரியா நாட்டைச் சேர்ந்தவளாகவும் இருக்கலாம்). இடுக்கியொன்றில் பூரான்களில் ஒன்றை எடுத்து, அக்கோப்பையினுள் போடுகிறாள். பூரான் துடிதுடித்து சில நொடிகளில் செத்துவிடுகிறது, அதன் உடல் அத்திரவத்தின்மேல் மிதக்கிறது. அதை எடுத்து கடித்துச் சாப்பிடுகிறாள் அப்பெண்.

--------------------------

இதெல்லாமா நினைவுக்கு வரவேண்டும் என்று தலையில் அடித்துக்கொண்டு, என் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, யாருமே இல்லாத கடையில் யாருக்காகவோ டீ ஆற்றுவதுபோல், புதிய மின்னஞ்சல் ஏதும் வராதபோதும் Outlook Inbox-ஐ நோண்டிக்கொண்டிருந்தேன்

அப்போது என் மனைவி, "நாளைக்கு உனக்குப் பிடிச்ச மோர்க்குழம்பும் உருளைக்கிழங்கும் பண்ணட்டுமா?" என்று கேட்டாள்.

அதற்கு நான், "வேண்டாம். மிளகு ரசமும், பொரிச்ச அப்பளமும் போறும்" என்றேன்.

இதை  எதிர்பாராத என் மனைவி, "Are you sure? சனி, ஞாயிறு மட்டும்தான் பிடிச்சதை செஞ்சித்தர முடியும்" என்று சொல்ல, அதற்கு நான், "Sure" என்றேன்.

அதற்கு அவள், "ஏன் ?" என்று கேட்க, "Desperate times call for desperate measures" என்று சீன் போட நினைத்தவன், "சரி விடு, கேட்டது கேட்டுட்டே. உன்னை எதுக்கு disappoint பண்ணனும். உன் ஆசைப்படியே மோர்க்குழம்பும் உருளைக்கிழங்கும் பண்ணிக்குடு என்றேன்

புன்னகைத்துத் திரும்பிய அவள் சட்டென, "இரு இரு. மூணு நாளா வீட்டு சாப்பாடுதானே மூணு வேளையும் சாப்பிட்டுட்டு இருக்கே. நாளைக்கு மட்டும் எதுக்கு ஸ்பெஷலா செய்யணும்? நீ கேட்ட மிளகு ரசம் பண்ணிடறேன். உன்னை எதுக்கு disappoint பண்ணனும்" என்றாள்..

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

18-Mar-2020:

 

கனடாவில் கொரோனா வைரஸ் - Part 1

1904 முதல் இன்றுவரை சீக்கியர்களின் மறுவீடாக விளங்கும் நாடு.

சீக்கியர் ஒருவரை மத்திய அமைச்சரவையில் கொண்ட நாடு. எதிர்க்கட்சி ஒன்றின் தலைவராய் சீக்கியர் ஒருவரைக் கொண்ட நாடு.

இலங்கையில் போர் தொடங்கிய காலம் முதல் இன்று வரை பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் இருந்து தப்பியோடி வந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு வாழ்வளித்த நாடுகளில் ஒன்று.

சிரியாவில் போர் நடைபெற்றபோது, அந்நாட்டில் இருந்து தப்பியோடி வந்தவர்களை தங்கள் நாட்டினுள் நுழைய அனுமதிக்காமல் திருப்பியனுப்பிய பல நாடுகளைப் போலில்லாமல் அவர்களை வரவேற்று அவர்களுக்கு வாழ்வளித்த நாடுகளில் ஒன்று.

மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 15% மற்ற நாடுகளிலிருந்து அகதியாய் வந்தவர்களைக் கொண்ட நாடு.

இவ்வாறு கனடாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

பரந்த மனதுடன் தன் வீட்டு வாசல்களைத் திறந்துவைத்து எல்லோரையும் வரவேற்று வாழ்வளித்த கனடா, சில நாட்களுக்கு முன்பு, தன் எல்லைகளை மூடுவதாக அறிவித்தது. கனடாவைவிட்டு வெளியேறிய கனடா குடிமகன்களும்,  நிரந்தர குடியுரிமை உள்ளவர்களும் மட்டுமே கனடாவுக்குள் நுழையமுடியும். மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதற்குக் காரணம் கொரோனாவைரஸ் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

பரப்பளவைப் பொருத்தவரை இந்தியாவைவிட மூன்று மடங்கு பெரிய நாடு கனடா. மக்கள்தொகையைப் பொருத்தவரை, கேரள மாநில மக்கள்தொகையைவிட கொஞ்சம் அதிகம், தமிழ் நாட்டு மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50% மட்டுமே.

ஆனால், கொரோனாவைரஸ் தாக்கப்பட்டிருப்பதாக உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவைப்போல மூன்று மடங்கு. கொரோனாவைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவைவிட இரண்டு மடங்கு.

மிகச்சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட கனடாவில், தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள கனடாவில், இந்த அளவுக்கு மோசமான நிலைமை இருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

1. வைரஸ் சீனாவில் அதிகளவில் பரவத் தொடங்கியபோது, நிலைமையை  உணர்ந்து, பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தன. ஆனால், கனடாவில் அப்படியில்லை. வைரஸின் வீரியத்தை உணர்வதற்குத் தாமதமாகிவிட்டது. அதற்குள் வைரஸ் உள்ளே நுழைந்து பரவ ஆரம்பித்தது. "மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்படாதவரை எதுவுமே பெரிய விஷயமாகக் கருதப்படுவதில்லை" என்று இந்நாட்டவர் ஒருவரே எங்களிடம் வருத்தத்துடன் சொன்னார்.

2. கனடாவில் உள்ளவர்களில், பூர்வக்குடிகளைவிட வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு 'செட்டில்' ஆனவர்களே அதிகம் என நினைக்கிறேன். இங்கு ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருபது வீடுகள் இருக்கிறதென்றால், அக்குடியிருப்பில் இருபது நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கக்கூடும். இதெல்லாம் இங்கு சர்வசாதாரணம். இவர்கள், பல முறை  தங்கள் சொந்த நாடுகளுக்கோ, மற்ற நாடுகளுக்கோ சென்று திரும்புவார்கள். ஜனவரி மாதத்தில் கனடாவிலிருந்து சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்திற்குச் சென்று திரும்பிய ஒருவர்தான் கனடாவின் முதல் கொரோனாவைரஸ் நோயாளி என்று கேள்வி.

இப்போது பெரும்பான்மையான நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவேண்டாம், வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று அறிவித்திருக்கின்றன. இருந்தாலும், பேருந்து ஓட்டுனர்கள், மெட்ரோ ஓட்டுனர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், மளிகைக்கடை, மருந்துக்கடை போன்றவற்றில் வேலை செய்பவர்கள் அச்சத்துடன் வெளியே சென்று வேலை செய்து வீடு திரும்பி வருகின்றனர்.

மளிகைக்கடைகளில் அரிசி, தானியம், முட்டை போன்றவற்றுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டு, ஓரிரு நாட்களில் நிலைமை சரியாகிறது. மளிகைக்கடைகளில், பல்பொருள் அங்காடிகளில், கூட்டத்தைக் குறைக்க, 20 - 25 நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் நீண்ட வரிசையில் வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்.

முன்பெல்லாம்  சாலையில் போகும்போது தும்மினால், நம்மைப் பார்த்து புன்னகைத்து, "God bless you" என்பார்கள். இப்போதெல்லாம் முறைக்கிறார்கள். அனைவரின் முகத்திலும் பயம்.

சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எப்போதாவது ஓரிரு கார்கள் செல்கின்றன. மாநகரப் பேருந்து காலியாய் சென்றுகொண்டிருக்கிறது. மெட்ரோவில் கூட்டம் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

உணவகங்கள் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும், யாராவது ஆர்டர் செய்தால் உணவை அவர்களது வீட்டுக்கு அனுப்பலாம், அல்லது உணவு தயாரானபிறகு உணவகத்திற்கு வந்து உணவை எடுத்துச் செல்லாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தியேட்டர்களும் பப்களும் பார்களும் மூடப்பட்டுவிட்டன. டாய்லெட் பேப்பர்கள், டையாபர்கள் வந்தவேகத்தில் பறந்துகொண்டிருக்கின்றன. ஷாப்பிங் மால்கள் மாலை 6 மணிவரை மட்டுமே இயங்குகின்றன.

விடுமுறைக்காக ஊருக்குச் சென்றவர்களால் திரும்பமுடியவில்லை. சென்ற இடத்திலேயே இன்னும் கொஞ்ச நாட்கள் தங்கி, இங்கிருக்கும் அவர்களது வீட்டு வாடகையை கொடுக்கின்றனர். அதேபோல, அவசரத் தேவைக்காக ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள், ஊருக்கும் செல்லமுடியாமல், இங்கும் நிம்மதியாக இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதெல்லாம் ஆரம்பம்தான். இன்னும் சில நாட்களில் இந்நோயிலிருந்து குணமடைய மருந்து  கண்டுபிடிக்கப்படவில்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகப்போகிறது.

பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும். நிறைய பேர் வேலையிழப்பர். வேலை வாய்ப்புகள் குறையும். உணவுப்பொருட்கள் பதுக்கப்படும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். சட்ட ஒழுங்கு சீர்கெடும். வன்முறை வெடிக்கும். வளர்ச்சி, முன்னேற்றம் என்பதெல்லாம் அப்படியே நின்றுபோய்விடும். பல நூற்றாண்டுகள் பின்தங்கிவிடுவோம். கொஞ்ச நஞ்சம் இருக்கும் மனிதமும் மரித்துவிடும்.

நினைத்துப்பார்க்கவே பயமாய் இருக்கிறது!

கூடிய சீக்கிரமே இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும், அது அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் அனைவரும் குணமடைந்து, நலமுடன் வளமுடன் வாழவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளும் அதே சமயத்தில்,  அக்கம்பக்கம் வசிப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நாமுண்டு, நம் வேலையுண்டு, நம் குடும்பமுண்டு என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்களையும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் ஆரோக்கியத்துடன், வளமுடன், நலமுடன் வாழவேண்டும் என நினைக்கவைத்த இந்த வைரஸ் கற்றுத்தந்த பாடத்தை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும், மனிதம் தழைத்தோங்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

#கனடா_குறிப்புகள்! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

29-Dec-2019:

 

டேய் வெங்கட், எப்படிடா இருக்கே? ஆளே காணோம்?” எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழும் கல்லூரி நண்பன் ஒருவன் வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று ஃபோன் செய்து கேட்டான்.

நல்லாருக்கேண்டா. நீ எப்படி இருக்கே?” என்றேன் நான்.

நல்லாருக்கேன். ஆமா, என்ன உன்னைக் கொஞ்ச நாளா ஆளே காணோம்? #கனடா_குறிப்புகள், #பேருந்துப்_பயணங்களில் எல்லாம் அப்படியே நிக்குது?”

வேலை ஜாஸ்திடா. அதான் டைம் கிடைக்கலை. சும்மா தெருவள்ளுவர் மாதிரி சின்ன சின்னதா கிறுக்கிட்டிருக்கேன்

டேய், திருவள்ளுவரா? இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியலை?”

நான் சொன்னதை ஒழுங்காக் கேட்டியா நீ? தெருவள்ளுவர்னு சொன்னேன். எல்லாரும் தெருக்குத் தெரு, வீட்டுக்கு வீடு உக்காந்து உலக நடப்பைப் பத்தி நோகாம கருத்து சொல்லிட்டிருக்கோமே, நாம எல்லாருமே தெருவள்ளுவர்தான்

ஹா ஹா, கரெக்ட்தான். சரி, கதையும் புதுசா எதுவும் வரலை? அந்த அளவுக்கா பிஸி?”

ஆமாடா, திங்கள் முதல் வெள்ளி, ஆபீஸ் வேலையே சரியா இருக்கும். சனி, ஞாயிறு வீட்டையும், குழுந்தையும் பாத்துக்கணும், அப்போதான் ஹோம் மினிஸ்டருக்கு ரெஸ்ட் கிடைக்கும். அதெல்லாம் உனக்கு எங்கே புரியப்போகுது.

, அப்படியா? சரி, சாயங்காலம் வீட்டுக்கு வர்றேன், மீட் பண்ணுவோம்

வாடா, சாயங்காலம் பாப்போம்

நண்பன் வீட்டுக்கு வந்தபோது கிட்டத்தட்ட 7 மணியிருக்கும். பேச ஆரம்பித்ததும் கேட்டான், “டேய் என்னடா குரல் ஒரு மாதிரி கட்டைக் குரலா இருக்கு? என்னாச்சு?”

ரெண்டு மாசமா தொண்டை வலி, இருமல். அதான்டா

விடிவி கணேஷ் குரல்மாதிரி இருக்குடா

டேய், ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் ஒரு நிமிஷம் தொடர்ந்து பேசினாலே அஞ்சு நிமிஷத்துக்குத் தொடர்ந்து இருமல் வர்ற அளவுக்கு மோசமா இருந்தது. இந்த நிலைமையில குரல் விடிவி கணேஷ் மாதிரி இருக்காம, பின்ன என்ன உன்னிகிருஷ்ணன் குரல் மாதிரியா இருக்கும்?”

கரெக்ட்தான். ஆனா இப்போ எனக்கு ஒரு சந்தேகம். உனக்கு தொண்டை வலி, ஜலதோஷத்துனால குரல் விடிவி கணேஷ் குரல் மாதிரி ஆகிடுச்சு. விடிவி கணேஷுக்கு தொண்டை வலி, ஜலதோஷம் வந்தா அவர் குரல் எப்படி மாறும். நினைச்சுப் பார்க்கவே பயங்கரமா இருக்கு"

ஹா ஹா, அருமையான கேள்வி. நீயே யோசிச்சிக்கோ

போன வருஷக்கடைசியிலதானே உனக்கு கை fracture ஆகியிருந்துச்சு?”

ஆமாடா, டிசம்பர் 2016.. மறக்கவே முடியாது

இப்போ இந்த டிசம்பர்ல இந்தப் பிரச்சினையா?”

ஆமா, டிசம்பர் மாசம் வந்தாலே திக் திக்குன்னு இருக்கு. சின்ன தம்பி படத்துல கவுண்டமணி அவர் மனைவியை TVS 50-ல உக்கார வெச்சு வீட்டுக்குப் போவாரே, மாலைக்கண்ணோட. அப்போ சொல்வாரே, “இன்னிக்கு முழுசா வீடுபோய் சேர்ந்தேன், ஜெயிச்சிட்டேன்னு.. கிட்டத்தட்ட அதேமாதிரிதான் நானும் டிசம்பர் மாசம் வந்தா சொல்றது.. இந்த டிசம்பர் மாசம் மட்டும் வேற எந்த பிரச்சினையும் இல்லாம கடந்துட்டேன்னா ஜெயிச்சிட்டேன்னு அர்த்தம்

ஹும், என்னவோ போ. சனிப்பெயர்ச்சின்னால இருக்குமா? கொஞ்ச நாள் முன்னாடி பேஸ்புக்குல எங்க பாத்தாலும் சனிப் பெயர்ச்சி பத்தி போஸ்ட் இருந்துச்சு

என்ன எழவோ. நடக்கணும்னு இருந்திருக்கு, நடந்திருக்கு. அவ்ளோதான்

போதாக்குறைக்கு இந்த வருஷம் குளிர் பயங்கரமா இருக்கு. அதுக்குள்ள peak winter வந்தமாதிரி இருக்கு. ஜனவரி, பிப்ரவரி எல்லாம் செத்தோம்னு நினைக்கிறேன்

ஆமாடா, படு மோசம். ஆமா, நீ இங்க வந்து பல வருஷமாச்சில்ல? உனக்குக்கூட இது ஜாஸ்தியா?”

ஆமா, இவ்ளோ மோசமான winter-அ நான் பாத்ததில்லை. வெளியில நடமாட முடியல. Eskimo மாதிரி டிரஸ் போட்டுக்கிட்டு, penguin மாதிரி நடக்கவேண்டியிருக்கு. வீட்டுக்குள்ளயும் ஹீட்டரைப் பெருசா வெச்சுக்க வேண்டியிருக்கு. இந்த மாச ஹீட்டிங் பில் வந்தாதான் தெரியும், எவ்ளோ கிழியப்போகுதுன்னு

நீ சொல்றதைப் பாத்தா எல்லாத்துக்கும் மோடிதான் காரணம்போல

ஆமாப்பா, ஆமா, அவரேதான்

வந்த விஷயத்தைச் சொல்லி, கொண்டு வந்திருந்ததைக் கொடுத்தான்.

டேய், சர்ப்ரைஸ்டா. இதுக்கும் மோடிதான் காரணமா?” வாழ்த்திவிட்டு கண்ணடித்தேன். புன்னகைத்தான்.

இன்னும் கொஞ்ச நேரம் உள்ளூர், வெளியூர்க் கதைகள் எல்லாம் பேசினோம். 8 மணி ஆனது.

சரிடா, நான் கிளம்பறேன்

சரிடா, கூடிய சீக்கிரம் பார்ப்போம்

நாற்காலியிலிருந்து எழுந்து சென்று கதவைத் திறந்து வெளியே சென்றபோது, “டேய், ஒரு நிமிஷம். நீ என்ன ராசி? என்ன நட்சத்திரம்?” என்று கேட்டேன். சொன்னான்.

அடப்பாவி, நானும் அதேதாண்டா

ஏண்டா, நல்ல ராசி, நட்சத்திரம்தானே?”

அதுக்கில்லடா. நம்ம ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன் சரியில்லை. போன டிசம்பரும், இந்த டிசம்பரும் எனக்கு சரியா அமையலை. மட்டமாதான் இருக்கு. நீ என்னடான்னா உன்னோட ராசியும், நட்சத்திரமும் அதேதான்னு சொல்றே. இப்போ இந்த விஷயத்தைவேற சொல்லியிருக்கே கண்ணடித்தேன், புன்னகைத்தான்.

சரி விடு, கடவுள் மேல பாரத்தைப் போட்டு போயிட்டே இரு

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.

அது வேறொன்றுமில்லை, அவனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. டிசம்பரில் நிகழ்ந்திருக்கும் இந்த மங்களகரமான அசம்பாவிதத்துக்கு (கல்யாணத்தை எப்படி அசம்பாவிதம்னு சொல்லலாம் என்று சீரியஸாக, கோபத்துடன் கொதித்தெழுந்து கேட்பவர்களுக்கு தொண்டை வலி, இருமல் வரும், சொல்லிப்புட்டேன்) அவனை வாழ்த்திவிட்டு, அவனுக்காவது இந்த டிசம்பர் மாதம் நல்லதொரு மாதமாக அமையவேண்டுமென்று கடவுளை வேண்டினேன்.

#டிசம்பர்_பரிதாபங்கள் - part 2!

#Rewind!

 

 

 

24-Dec-2019:

 

#Rewind! #டிசம்பர்_பரிதாபங்கள் - part 1

#கனடா_குறிப்புகள்!

#பேருந்துப்_பயணங்களில்!

"ரெண்டு வாரமா பேஸ்புக்ல எந்தப் பதிவும் போடாம கையே உடைஞ்ச மாதிரி இருக்கு" என்றேன் மனைவியிடம்.

அதற்கு அவர், "அதான் உண்மையாவே கை உடைஞ்சிருக்கில்ல, இந்த நேரத்துலகூட இந்த லொள்ளு தேவையா?" என்றார், நான் வழக்கம்போல் அடக்கமாய், அமைதியாய் இருந்தேன்.

ஆம், இரண்டு வாரங்களுக்கு முன்பு, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் கால் வழுக்கி கீழே விழுந்து என் முழங்கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் பதினைந்து நாள் முடிந்திருக்கிறது. "வெற்றி 'கரமான' 15-வது நாள்" என்று சுவரொட்டி ஒட்டாததுதான் மிச்சம் 🙂

இவ்வூரில் சாலைகளிலும், நடைபாதைகளில் சேர்ந்திருக்கும் பனிக்கட்டிகளை அகற்ற மணல் உபயோகப்படுத்தப்படுகிறது. மணலும், பனிக்கட்டியும் கலந்து, நெய்யில் மிதக்கும் சரவண பவன் பொங்கல்போல் காட்சியளிக்கும்.

சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாள் அதிக அளவு பனிப்பொழிவைச் சந்தித்தது இந்த மாண்ட்ரியல் மாநகரம். சாலைகளிலும் நடைபாதைகளில் யாரோ தயிரை வாரி இறைத்திருப்பது போலிருந்தது.

அந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து காலை 8.15 மணிக்குக் கிளம்பி நானுண்டு என் வேலையுண்டு என கவனமாக மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது திடீரென கால் வழுக்கி கீழே விழுந்தேன். என் மொத்த எடை என் இடது முழங்கையில் பதிந்தது. நல்ல வேளை, என் தலையில் அடிபடவில்லை.

யாராவது வந்து எழுப்பிவிட முயலப்போகிறார்கள் என்ற நினைப்பில் அவசர அவசரமாய், தானே எழுந்த தாணையத் தலைவர் போல் எழுந்து நின்று, 'உனக்காக எல்லாம் உனக்காக' படத்தில் கவுண்டமணி, தன் தலையில் விழுந்த அப்பளத் தூள்களை, "Nothing but wind" என்று சொல்லித் தட்டிவிடும் காட்சியை மனதுக்குள் நினைத்துக்கொண்டு என் ஸ்வெட்டரிலும், குளிர்கால ஜாக்கெட்டிலும் கால்சட்டையிலும் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். கை வலி விவரிக்க இயலாத அளவுக்கு இருந்தாலும் அதை மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ளக்கூடாது என்ற நினைப்பில் உறுதியாய் இருந்தேன்.

அது என்னவோ தெரியவில்லை, நம் வலி, அதுவும் பொது இடத்தில் விழுந்ததால் ஏற்பட்ட வலி  மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது, தெரிந்தால் ஒரு வேளை அவர்கள் பரிதாபப்பட்டுவிடுவார்களோ என்ற ஒரு எண்ணம் தானாகவே மேலெழுந்து விடுகிறது. இது மனித இயல்பா, தெரியவில்லை.

எலும்பு முறிவெல்லாம் ஏற்பட்டிருக்காது, வெறும் தசைப்பிடிப்புதான், கொஞ்ச நேரத்தில் தானாகவே சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் அலுவலகத்துக்குச் சென்று, தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு மணி நேரமானது, இரண்டு மணி நேரமானது. வலி எக்கச்சக்கமாய் எகிறியது, கையை அசைக்கக்கூட முடியவில்லை. வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்குக் கிளம்ப முடிவெடுத்தபோது மணி கிட்டத்தட்ட 12:30.

நண்பர்களின் உதவியோடு ஒரு வழியாக என் இருக்கையிலிருந்து எழுந்து தரைத்தளத்தில் இருக்கும் ரிசப்ஷனுக்கு வந்தேன். அங்கிருந்த முதலுதவிப் பெட்டியிலிருந்து ஐஸ் பேக்கை எடுத்து என் முழங்கை முட்டியில் வைத்துப் பிடித்துக்கொண்டனர் நண்பர்கள்.

ஆம்புலன்ஸ் வரவழைக்க முடிவுசெய்து அவசர உதவி எண் 911-ஐ தொடர்புகொண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பக் கோரினோம். என்ன உடல் உபாதை, எவ்வளவு தீவிரம் போன்ற விபரங்களைக் கேட்டுவிட்டு இன்னும் சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துவிடும் என்றார். நிமிடங்கள் கடக்க கடக்க, வலி அதிகரித்துக்கொண்டே போனது.

என் பையில் வலி நிவாரணி மாத்திரைகள் எப்போதும் வைத்திருப்பேன். எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாமல்லவா. அன்று அவ்வளவு வலியிலும் அம்மாத்திரைகளை போட்டுக்கொள்ளவில்லை, ஆம்புலன்ஸில் இன்னும் சிறந்த வலி நிவாரணிகள் இருக்கக்கூடும், அவற்றை விழுங்கலாம் என்ற எண்ணம்.

அரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அதன் ஓட்டுனரும், அவரின் உதவியாளரும் வந்து என்னிடம் குலம், கோத்ரம், நக்ஷத்திரம், ராசி, இத்யாதி, இத்யாதிகளைக் கேட்டறிந்தனர். "வலி பொறுக்க முடியவில்லை, சீக்கிரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கதற ஆரம்பிக்க, என்னை ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள். அப்படியே அலேக்காக தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். வண்டி அங்கிருந்து புறப்பட்டது.

வலி நிவாரணி கொடுக்கக்கேட்டேன். இந்த மாநிலத்திலுள்ள ஆம்புலன்ஸில் வலி நிவாரணிகள் வைக்கக்கூடாது என்று ஒரு வரைமுறையாம், விதியாம்! எல்லாம் என் தலைவிதி, நொந்துபோனேன்!

"1 - 10 அளவுகோலில் உங்கள் வலியை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக" என்பதுபோல் நேர்காணல் கேள்விகள் ஆம்புலன்ஸில் கேட்கப்பட்டன. பொறுக்க முடியாத வலியிலும் பொறுமையாய்ப் பதில் சொன்னேன். எல்லாவற்றையும் ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டார்.

சில நிமிடங்களில் ஏதோ ஒரு இடத்தில் நின்றது வண்டி. அப்பாடா, அதற்குள் மருத்துவனை வந்தாகிவிட்டது என்று நினைத்து நிம்மதியானேன். ஆனால் நிலைமை அதுவல்ல. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு நிறம் ஒளிர்ந்துகொண்டிருந்த காரணத்தினால் வண்டி நிறுத்தப்பட்டது!

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டிருப்பவர் உயிர் போகும் நிலையில் இருந்தால்தான் சைரன் போட்டுக்கொண்டு எந்த சிக்னலிலும் நிக்காமல் போவார்களாம். வலி உயிர் போகும் அளவுக்கு இருப்பதெல்லாம் பெரிய விஷயமில்லையாம்!

வழி நெடுக போக்குவரத்து நெரிசலில் சிக்கி, தடுமாறி, ஒரு மணி நேரத்தில் ஒரு வழியாய் மருத்துவமனை வந்து சேர்ந்தோம். பெங்களூரிலிருந்து என்னைத் தொடர்ந்து வந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்த போக்குவரத்து நெரிசல் என்பதை உணர்ந்து என் அதிர்ஷ்ட்டத்தை நானே மெச்சிக்கொண்டேன்!

மருத்துவமனையின் பெயர்ப்பலகையைப் பார்த்தேன். நல்ல வேளை, அதன் பெயர் "அப்பல்லோ" இல்லை 🙂

அவசர சிகிச்சைப் பிரிவில் எடுத்துச் சென்றார்கள் ஸ்ட்ரெச்சரை. அங்கு ஒரு நீண்ட வரிசை, அதில் ஏழாவதோ, எட்டாவதோ நான்.

என் முறை வந்தது. கடவுளுக்கருகே வந்ததுபோல் உணர்ந்தேன்.

அங்கு "1 - 10 அளவுகோலில் உங்கள் வலியை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக" ஆகிய அதே கேள்விகள் மீண்டும் கேட்க ஆரம்பித்தனர். 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் 50 பரோட்டாக்கள் தின்ற பின்பு மீண்டும் எல்லாக் கோடுகளையும் அழித்துவிட்டு முதலிலிருந்து பரோட்டா தின்ன ஆரம்பிப்பார் சூரி. கிட்டத்தட்ட அதே நிலைதான் எனக்கும்.

ஒரே ஒரு வித்தியாசம். அந்தப் படத்தில் அவர் விரும்பி பரோட்டாக்கள் தின்பார், நான் உயிர் போகும் வலியில் உதறலோடு பதில் சொன்னேன்.

2:30 மணிக்கு ஒரு வழியாக வலி நிவாரணி மாத்திரைகள் கொடுத்தார்கள். அடி பட்டு கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்குப் பிறகு! விழுங்கினேன். மாத்திரைகள் சில நிமிடங்களில் வேலை செய்ய ஆரம்பிக்க, வலி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது.

அவசர சிகிச்சைப் பிரிவாச்சே, சீக்கிரம் மருத்துவரைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கலாம் என்று கனவுக்கோட்டை கட்டினேன். ஷங்கர் சிமெண்ட்டால் கட்டப்பட்ட பாம்பன் பாலமா அந்தக் கனவுக்கோட்டை, திடமாய் நிற்க! சுக்குநூறானது!

மருத்துவரைச் சந்தித்தபோது மணி 5. அடுத்து X-Ray, மீண்டும் மருத்துவரைச் சந்திப்பது.. இப்படி படிப்படியாய் ஒவ்வொரு படியாய்க் கடந்து ஆட்டத்தை முடித்து வீடு வந்து சேரும்போது மணி 8.

அன்றைய Moral of the Story - உயிர் போகிற வலி இருந்தாலும், டேக்சி பிடித்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உயிர் போகும் நிலையில்தான் போகவேண்டும்.

இரண்டு வாரங்களாகிவிட்டது. நிலைமை இப்போது பரவாயில்லை.

பின்குறிப்பு: இவ்வளவு நடந்திருந்தாலும் என்னை உச்சக்கட்ட கடுப்பேற்றிய விஷயமென்ன தெரியுமா? ஆம்புலன்ஸ் உபயோகப்படுத்தியதற்கான கட்டணம் வீட்டுக்கு ஒரு போஸ்ட்டில் வருமாம்!

#Rewind

 

 

 

29-Aug-2019:

 

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் என் அலைபேசியில் இருக்கும் பாடல்களைக் கேட்டபடி வருவது வழக்கம். அலுவலகத்திலிருந்து ஒரு மெட்ரோ ஸ்டேஷன் வரை ஒரு குறிப்பிட்ட பேருந்தில் வரவேண்டும். அங்கிருந்து இரண்டு மெட்ரோ ரயில்கள் மாறி வீட்டருகே இருக்கும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு வரவேண்டும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம்.

குளிர்காலத்தில் என்னதான் பேருந்துக்குள்ளேயும், மெட்ரோ ரயிலுக்குள்ளேயும் ஹீட்டர் இருந்தாலும், லேசாகக் குளிரும். அதிலிருந்து தப்பிக்க ஆரம்பித்த பழக்கம்தான் இது. வெயில்காலத்திலும் தொடர்கிறது.

என் அலைபேசியில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துப் பாடல்கள் தொடங்கி, சிவகார்த்திகேயன் காலத்துப் பாடல்கள் வரை இருக்கின்றன. அதாவது எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் அனிருத், சந்தோஷ் நாராயணன் வரை. தத்துவப் பாடல்கள் முதல் தர லோக்கல் பாடல்கள் வரை.

சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல், காதில் இயர் போனுடன் பாடலுக்குத் தலையசைத்தபடி பேருந்துக்காகக் காத்திருந்தேன். பேருந்து வந்த சமயத்தில் என் அலைபேசியில் என் கண்மணி என் காதலி…” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, “அடடா, சிட்டுவேஷன் சாங் என்று நினைத்தபடி, பாடலை ரசித்தபடி உள்ளே நுழைந்தேன். இருக்கை காலியில்லை, நின்றுகொண்டே வந்தேன்.

அடுத்ததாக வந்தது புதிய முகம் படத்திலிருந்து கண்ணுக்கு மை அழகு பாடல். எப்பேர்ப்பட்ட பாடல்! வரிக்கு வரி மனதில் பாடிக்கொண்டு வந்தபோதுதான் ஒரு வரியை கவனித்தேன் – “விடியும் வரை பெண்ணழகு. என்னே ஒரு வரி, என்னே ஒரு பொருள்! பீப் சாங்குக்கு இணையான ஒரு பின் நவீனத்துவ வரி! காலையிலோ, பகலிலோ, மாலையிலோ எந்தப் பெண்ணிடம் வாங்கிக்கட்டிக்கொண்டாரோ டயமண்ட், எல்லாக் கோபத்தையும் சேர்ந்து நாசூக்காக பாட்டில் கொட்டிவிட்டார்!

இவ்வரியை அவர் எழுதியதாலோ என்னவோ எந்த மாதர் சங்கமும் போராடவில்லை. இதுவே சிம்பு படத்தில் இப்படியொரு பாடல் இடம் பெற்றிருந்தால் அவர் நிலைமை என்னாகியிருக்கும்!

மாதர் சங்கம் ஒரு மாதத்துக்கான வேலையைச் செய்யும் அளவுக்கு ஓவர்டைம் பார்க்க, அமேசான் காடுகளில் வளர்ந்த அரிய வகை மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்ட எண்ணெய்யை தடவியதால் வேகமாக வளருகிற முடியைப் போல ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள் முளைக்க, “காலை வணக்கம் தோழி வகையறாக்கள் திடீர் கலாச்சாரக் காவலர்களாக மாறி, சிம்புவையும் பாடலையும் கண்டிக்க... இன்னும் என்னென்னவோ நிகழ்ந்திருக்கும். ச்சே, வாய்ப்பை இழந்துவிட்டது நம் தமிழ்ச் சமூகம். இவற்றையெல்லாம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்ததில் பாடலை ரசிக்க மறந்துவிட்டேன். அதற்கு ப்ராயச்சித்தமாய் மீண்டும் அந்த பாடலை ஒலிக்கவைத்து கேட்டேன். மோர்க்குழம்பு சாதமும், உருளைக்கிழங்கு பொறியலும் சாப்பிட்ட திருப்தி!

அடுத்தது தேவி படத்தில் வரும் ங்கொக்கா மக்கா மாக்கா என்ற தத்துவப் பாடல். பாடல் ஆரம்பித்த முதல் இறுதி வரை தத்துவ முத்துக்கள்! எல்லாவற்றுக்கும் மகுடமாக அந்த முதல் வரிகள் – “ங்கொக்கா மக்கா மாக்கா. இந்தக் கவிஞர் இந்த உலகத்துக்கு என்னவோ சொல்ல வருகிறார், ஆனால் அதை பாதியிலேயே மறந்துவிட்டார் என நினைக்கிறேன். இப்பாடலின் இரண்டாவது வரி – “ஶ்ரீதேவிக்கே அக்கா என்றதும் என் மைண்ட் வாய்ஸ் வேலை செய்ய ஆரம்பித்தது.

ஶ்ரீதேவி இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அக்கா மாதிரிதான். அவருக்கே அக்காவா? “மேய்க்கிறது எருமை, இதுல என்ன பெருமை என்ற சந்தானத்தின் வசனம் நினைவில் தோன்றியது. இந்த நாயகியின் மேல் கவிஞருக்கு என்ன கோபமோ, தெரியவில்லை.

அடுத்தது அச்சம் என்பது மடமையடா படத்தில் வரும் ஷோக்காலி பாடல். பின்னணி இசையையும், பாடியவரின் குரலையும், ஆங்காங்கே வரும் தமிழ் rap வரிகளையும் ரசித்தபடி இருந்தபோது கவனித்ததுதான் இந்த வரி – “ஓரு bike இருந்தா பல பொண்ணு கிடைக்கும், ஒரு பொண்ணிருந்தா பல bike கிடைக்குமா…”..

அடடா, வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பெண்ணியத்தைத் தூக்கிப்பிடிக்கும் வரிகள்! போதாக்குறைக்கு சிம்பு வேறு! இவருக்கென்றே இந்த மாதிரியான பாடல் வரிகளை ரூம் போட்டு எழுதுகிறார்களா, அல்லது தன் reputation கெட்டுப்போய்விடக்கூடாது என்று இவரே கேட்டு வாங்குகிறாரா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

அடுத்து ஒலித்தது ரெமோ படத்தில் வரும் வாடி என் தமிழ்செல்வி என்ற பாடல். சமீபத்தில் நான் பார்த்து நொந்து நூடுல்ஸாகி, கடுப்பான ஒரு படம் இது, ஆனால் பாடல்கள் பிடிக்கும். தொடர்ந்து கேட்டுக்கொண்டே நின்றிருந்தேன்.

இப்பாடலில் ஒரு வரி வரும் – “சம்பளக் கவரை திறக்கவே மாட்டேனே, அதை முழுசா தருவேனே என்று சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷைப் பார்த்து பாடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அதாவது, நம் கதாநாயகருக்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை என்று சொல்வதுபோல், படத்தின் பெரும்பாலான பகுதியில் வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுற்றும் இளைஞனாக இருக்கும் ஹீரோ, தான் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே ஹீரோயினிடம் கொடுத்துவிடுவாராம், இதெல்லாம் ஒரு வரியா என்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் கணக்காய் லாஜிக் யோசித்துக்கொண்டிருந்தேன். நரம்பு புடைத்தது, ரத்தம் கொதித்தது, ஏமாந்தது போதும் தமிழா, விழித்தெழு, வெகுள்வாய், கால்வாய், அது இது என்று மூளை என்னிடம் சொன்னது.

அப்போது என் மனசாட்சி வேறு சில பாடல் வரிகளை, அவற்றுக்கான மைண்ட் வாய்ஸோடு எனக்கு, என் மூளைக்கு நினைவூட்டியது, அவை இவைதான்

படையப்பா படத்தில் வரும் வரிகள் - என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா

மைண்டு வாய்ஸ்: சொத்து எழுதிக்கொடுத்தே சொத்து சேர்த்தவர், உடல் பொருள் ஆவியை தமிழர்களுக்குக் கொடுத்த மாதிரிதான் எல்லாம்!

விஸ்வரூபம் படத்தில் வரும் வரிகள் – “யாரென்று தெரிகிறதா, இவன் தீயென்று புரிகிறதா

மைண்டு வாய்ஸ்: படத்தோட ரிலீஸுக்கே எத்தனையோ பேர்க்கிட்ட பம்ம வேண்டியிருந்தது, இதுல தீயாம்!

மெர்சல் படத்தில் வரும் வரிகள்: ஆளப்போறான் தமிழன்

மைண்டு வாய்ஸ்: தலைவா படப்போஸ்டரில் “Time to lead”னு சின்னதா ஒரே ஒரு வாசகம் வெச்சதுக்கு படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் மன்றாடி, வாசகத்தை நீக்கிட்டு போஸ்டர் ஒட்டினாங்க, இவங்க இப்போ ஆளப்போறாங்களாம்!

அல்டிமேட் நடித்த படங்களில் வந்த பாடல் வரிகள் எவையும் என் நினைவில் தோன்றவில்லை

மைண்டு வாய்ஸ்: பாடல் கேட்டுக்கொண்டிருந்தபோதும் சரி, இதோ இதை இப்போது டைப் செய்துகொண்டிருக்கிறேனே இப்போதும் சரி, நான் உடுத்தியிருப்பது ப்ளூ கலர் சட்டை, அதனால் நமக்கேன் வம்பு!

இப்படி பாடலுக்கும் கதாநாயகனின் நிஜ வாழ்க்கைக்கும், குணத்துக்கும் தொடர்பில்லாமல் சில நேரங்களில் சில வரிகள் வரலாம், அது பிழையில்லை என்று என் மனசாட்சி என் மூளைக்குச் சொல்ல, ‘ரெமோ படத்தில் வரும் வாடி என் தமிழ்செல்வி பாடலை எழுதிய கவிஞரை மன்னித்தேன்.

அடுத்ததாக மூன்று பாடல்கள், ஒன்றன் பின் ஒன்றாக. சொக்கிப்போனேன். அவை:

1. ‘கவிக்குயில் படத்தில் வரும் சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல்

2. ‘சிப்புக்குள் முத்து படத்தில் வரும் ராமன் கதை கேளுங்கள் என்ற பாடல்

3. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற பாடல்

இம்மூன்று பாடல்களைப் பற்றி விரிவானதொரு பதிவு எழுதவேண்டும் என யோசித்துக்கொண்டே வீட்டருகே வந்தேன். அப்போது கபாலி படத்தில் வரும் நெருப்புடா என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த கிடார் ஒலியை ரசித்தபடி கதவைத் திறந்தால், உள்ளே எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் நின்றுகொண்டிருந்தனர். நெருப்புடோவ் நெருப்புடோவ் என்று சூரியன் படத்தில் கவுண்டமணி சொல்வதுபோல் Fire Alarm ஒலித்துக்கொண்டிருந்தது.

நெருப்புடா பாடல் – “நெருப்புடோவ் Fire Alarm. குட் காம்பினேஷன்!

சில நிமிடங்களில் அங்கு தீயணைப்புத் துறையினர் வந்து, எல்லோரையும் கீழே இருக்கச் சொல்லிவிட்டு, மாடிக்குச் சென்று என்ன, ஏது என்று பார்க்க ஆரம்பித்தனர். இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும், அப்போது உள்ளேயிருந்து ஒரு பெண் Full மேக்கப்பில் வந்தார். “Fire alarm அடிக்கும்போதும் கவலைப்படாமல் Face-க்கு Full மேக்கப் போட்டுக்கிட்டு வர்றியேம்மா, உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவேயில்லையா என்று என் மைண்டு வாய்ஸ் என்னிடம் கேட்க, அது என் மனைவிக்குக் கேட்க, அதனால் அவர் முறைக்க, நான் “Technology has improved very much you know” என்றேன்.

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்! #Rewind

 

 

 

24-Aug-2019:

 

#வடக்குப்பட்டி_ராமசாமிகளும்_நரிகளும் சூழ் உலகு:

சில வாரங்களுக்கு முன்பு ஒரு புதன்கிழமை.. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, மங்கள்வாருக்கு அடுத்த மங்களகரமான நாள்.. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அன்று எங்கள் Client-க்கு முக்கியமான டாக்குமெண்ட் ஒன்றைத் தயார் செய்து அனுப்ப வேண்டியிருந்தது. அந்த டாக்குமெண்ட்டை ஓரளவுக்கு அப்டேட் செய்து, இன்னும் தேவையான சிலவற்றுக்கான மெட்டீரியல்களைக் கொடுத்து என் அணியில் இருக்கும் ஒருவனுக்கு அனுப்பியிருந்தேன். அதை, இன்று, இந்தப் பொன்னான புதன்கிழமையன்று அவனிடமிருந்து பெற்று, ரிவ்யூ செய்து, தேவையானால் கொஞ்சம் திருத்தம் செய்து அனுப்ப வேண்டும். கிட்டத்தட்ட வடக்குப்பட்டி ராமசாமியிடமிருந்து தான் கொடுத்த கடன் தொகையைத் திரும்பப் பெறவேண்டிய சூழ்நிலையில் இருந்த கவுண்டமணியைப் போல.

அன்று காலை 6 மணிக்கு என் அலைபேசியில் அழைத்தான் அவன். நான் கண் விழித்தபோது அலைபேசியின் திரையில் அவனது எண் தெரிந்தது. அப்படித்தான் அந்த நாள் துவங்கியது எனக்கு.

டேய் சொல்லுடா. டாக்குமெண்ட் அப்டேட் பண்ணிட்டியா?” என்று கேட்டேன் நான். அதற்கு அவன், “பண்ணிட்டேன் அண்ணா. இன்னும் ஒரு மணி நேரத்துல அனுப்பிடுவேன் உங்களுக்கு என்றான்.

டீம்ல யாரையாவது ரிவ்யூ பண்ணிட்டு, டாக்குமெண்ட்டை அப்டேட் பண்ணி எனக்கு அனுப்பு

சரிண்ணா

பனிரெண்டு மணிக்குள்ள அந்த Client மேனேஜருக்கு அனுப்பியாகணும். மத்தியானத்துலேர்ந்து ஒரு வாரத்துக்கு அவர் லீவ்

கண்டிப்பா

சரிடா, bye”

bye”

அப்பாடா, இன்னிக்கு அந்த டாக்குமெண்ட்டை அனுப்பிட்டா ஒரு பெரிய வேலை முடிஞ்சிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

இப்போது கவுண்டமணியின் அந்த நகைச்சுவைக் காட்சியை நினைவு கூருங்கள்.

--------------------------------

அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் செந்திலை எழுப்புவார் கவுண்டமணி. செந்தில் வேண்டாவெறுப்பாகக் கண் திறந்து உர்ரென்று கவுண்டமணியைப் பார்ப்பார்.

நரி, ஒரே தடவை ஊளையிடும்மா என்று கவுண்டமணி கேட்க, அதற்கு செந்தில், “ஊ ஊ ஊ என்பார்.

உடனே கவுண்டமணி, “பொத்திக்கம்மா. ராமசாமி பணத்தை எடுத்து வைடா என்று தன் பணம் தனக்குக் கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் இருப்பார்.

--------------------------------

எப்போதும் 7.45 மணிக்கெல்லாம் அலுவலகத்துக்குக் கிளம்பிவிடுவேன். அப்போதுதான் 9 மணிக்குள் அலுவலகம் வந்தடைய முடியும். அன்று நான் அலுவலகத்துக்குக் கிளம்ப 8 மணி ஆகிவிட்டது.

மெட்ரோ ஸ்டேஷன் வந்து எஸ்கலேட்டரில் இறங்கிக்கொண்டிருந்தபோது நான் செல்லவேண்டிய மெட்ரோ ரயில் வந்து சேர்ந்தது. 10 – 15 வினாடிகள் தான் நிற்கும். அதற்குள் எப்படியாவது ரயிலினுள் நுழைந்துவிடவேண்டும் என படிக்கட்டில் இறங்குவதுபோல் வேகமாக இறங்க ஆரம்பித்தேன்.

கடைசி படியில் இறங்கியபோது, என் பாக்கெட்டில் இருந்த அலைபேசி கீழே விழுந்து அக்கு அக்காகச் சிதறியது. என் மனமும்தான்.

கண்ணும் கருத்துமாய்க் கங்காருக் குட்டிபோல் பாதுகாத்து வந்த, இதுவரை ஒரு முறை கூட கீழே விழாமல் காத்து வந்த என் செல்லம் இன்று, இந்த நொடிப்பொழுது கீழே கிடந்தது. சொல்லொணாத் துயரம்!

மனதைத் திடப்படுத்திக்கொண்டு உதிரியாய்க் கிடந்த எல்லாப் பாகங்களையும் ஒன்று சேர்த்து அசெம்பிள் செய்து, அதன் உயிர் வருகிறதா என்று பார்த்தேன், ‘செல்வ விநாயகரையும், ‘செல்லியம்மனையும் வேண்டியபடியே.

Hurrah! உயிர்த்தெழுந்தது என் அலைபேசி. நானும்தான். ஆனந்தக்கண்ணீர் வர, அது ஒரு வேளை அலைபேசியில் விழுந்து பழுதாகிவிடப்போகிறது என்றெண்ணி, மனதுக்குள் மட்டும் ஆனந்தக்கண்ணீர் வடித்தேன். நான் இருக்கேன் குமாரு என்றுணர்த்திய கடவுளுக்கு நன்றி நல்கினேன்.

என்னடா இது, ஆரம்பமே இப்படியிருக்கே? முக்கியமான டாக்குமெண்ட் குடுக்கற அன்னிக்கா இப்படி ஆகணும்? ஹும், சரி விடு, நல்ல காரியங்கள் நடக்கும்போது சில தடங்கல்கள் வரத்தான் செய்யும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். அடுத்த மெட்ரோ ரயிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

இப்போது மீண்டும் அந்த நகைச்சுவைக் காட்சியை நினைவு கூருங்கள்.

--------------------------------

கடனைத் திரும்பப் பெற, தன் சைக்கிளில் சென்றுகொண்டிருப்பார் கவுண்டமணி. அப்போது அவரது சைக்கிள் டயர் பஞ்சர் ஆகிவிடும்.

என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே?” என்று சொல்ல, அப்போது செந்தில், “ஊ ஊ ஊ என்று ஊளையிட்ட காட்சி அவர் மனதில் தோன்ற, உடனே, “நல்ல காரியத்துக்குப் போகும்போது சில தடங்கல்கள் வரத்தான் செய்யும் என்று சொல்லிவிட்டு சைக்கிளைத் தள்ளிக்கொண்டே செல்வார்.

--------------------------------

பொதுவாக 5 அல்லது 6 நிமிடங்களுக்குள் அடுத்த மெட்ரோ ரயில் வந்துவிடும். ஒன்றை விட்டாலும் இன்னொன்றில் ஏறிவிடலாம்; ரொம்ப தாமதமாகாது.

இன்றும் அடுத்த மெட்ரோ அடுத்த 5 நிமிடங்களில் வர, அதில் ஏறினேன். வழி நெடுக அந்த டாக்குமெண்ட்டைப் பற்றிய சிந்தனை. சில நிமிடங்களுக்குப் பிறகு இரு மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு மத்தியில் திடீரென நிறுத்தப்பட்டது வண்டி. என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகே அங்கிருந்து கிளம்பியது வண்டி. என்னடா இது, ரெண்டாவது தடங்கலும் வந்துருச்சே என்று நினைத்தபடியே சென்றேன்.

இப்போது மீண்டும் அந்த நகைச்சுவைக் காட்சியை நினைவு கூருங்கள்.

--------------------------------

சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வரும்போது கவுண்டமணியின் செருப்பு அறுந்துவிடும். அப்போது, “ரெண்டாவது தடங்கலும் வந்துருச்சே என்று சொல்ல, அப்போது செந்தில், “ஊ ஊ ஊ என்று ஊளையிட்டது அவர் நினைவில் தோன்ற, “சக்சஸ் என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு, செருப்பை உதறித் தள்ளிவிட்டு தொடர்ந்து செல்வார்.

--------------------------------

அலுவலகம் வந்து சேர்ந்தபோது மணி 9.30 ஆகியிருந்தது. பையைத் திறந்து ID கார்டைத் தேட ஆரம்பித்தபோதுதான் நினைவுக்கு வந்தது, அதற்கு முந்தைய நாள் ID கார்டை வைத்து விளையாட்டு காட்டி, என் மகளுக்குச் சாப்பாடு ஊட்டியது. வீட்டிலேயே அதை வைத்துவிட்டு அலுவலகம் வந்திருந்ததை எண்ணி, என்மேல் எனக்குக் கோபம் வந்தது. இதுவரை ஒரு நாள்கூட ID கார்டை மறந்தது கிடையாது!

பரவாயில்லை, temporary ID கார்ட் வாங்கி, வந்த வேலையை முடிப்போம் என்று நினைத்து செக்யூரிட்டியிடமிருந்து temporary ID கார்ட் வாங்கி என் இருக்கைக்கு வந்தேன்.

இப்போது மீண்டும் அந்த நகைச்சுவைக் காட்சியை நினைவு கூருங்கள்.

--------------------------------

சைக்கிளைத் தள்ளியபடி காலில் செருப்பில்லாமல் நடந்துகொண்டிருக்கும்போது முள்ளோ/கல்லோ இடது காலில் குத்தி, கால் விரல்களிலிருந்து ரத்தம் வர ஆரம்பிக்க, “என்ன ரத்தக் காவெல்லாம் வாங்குது என்று கவுண்டமணி சொல்ல, அப்போது செந்தில், “ஊ ஊ ஊ என்று ஊளையிட்டது அவர் நினைவில் தோன்ற, “என் பணம் வந்துரும் என்று சிறு நம்பிக்கையுடன் செல்வார்.

--------------------------------

இருக்கையில் அமர்ந்து மடிக்கணிணியை ஆன் செய்து, நெட்வொர்க் கேபிளுடன் இணைத்து மெயில்பாக்ஸ் ஓப்பன் செய்து பார்த்தேன். அந்த டாக்குமெண்ட் இன்னும் வரவில்லை. அதிர்ந்து போனேன்.

அவனுக்கு போன் செய்தேன். எடுத்தான்.

சொல்லுங்கண்ணா

டேய், எங்கடா டாக்குமெண்ட்?”

ஆனுப்பிட்டேன்ணா

எப்போ அனுப்பினே? இன்னும் வரலை. என் மெயில்பாக்ஸ்ல இல்லை

அப்படியா? நான் அனுப்பி 2 மணி நேரத்துக்கு மேல ஆச்சுண்ணா

என்னடா ஒரே ஹாரன் சத்தமா இருக்கு, ரூமுக்குப் போயிட்டிருக்கியா?”

இல்லண்ணா, இப்போ ஊருக்குப் போயிட்டிருக்கேன், பஸ்ல இருக்கேன்

பக்கென்று இருந்தது எனக்கு.

சரி, நான் பாத்துக்கறேன் விடு என்று சொல்லி கட் செய்தேன். இன்னும் சில மணி நேரங்களில் முடிக்க வேண்டும், நிச்சயமாக முடியாது. நல்லா, வசமா மாட்டிக்கிட்டேன் என நினைத்துக்கொண்டேன்.

இப்போது அந்த நகைச்சுவைக் காட்சியை நினைவு கூருங்கள்.

--------------------------------

கவுண்டமணி ரத்தக்காலுடன் தத்தித் தத்தி சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வடக்குப்பட்டிக்கு வரும்போது, வழியில் ஏதோ ஒரு பிணத்தை ஊர் மக்கள் தூக்கிக்கொண்டு செல்வதைக் கவனித்து அது யாரெனக் கேட்பார். அதற்கு ஒருவர், “நம்ம ராமசாமிண்ணே என்பார்.

அதிர்ந்துபோன கவுண்டமணி, “எனக்குப் பணம் தரவேண்டிய நம்ம வடக்குப்பட்டி ராமசாமியா?” என்று கேட்க, அதற்கு அவர் சோகம் ததும்பும் முகத்துடன், “ஆமாண்ணே என்பார்.

போச்சா, மொத்த பணமும் போச்சா என்று அலறி அழுவார். அவரது கைப்பிடியில் இருந்து நழுவி சைக்கிள் கீழே விழும்.

--------------------------------

இப்போது என் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான். என்ன ஒரு வித்தியாசம், கவுண்டமணிக்கு அந்தப் பணம் திரும்பக் கிடைக்காது. என்னால் அந்த டாக்குமெண்ட்டை அப்டேட் செய்து அனுப்ப முடியும், கொஞ்சம் தாமதமாகும், அவ்வளவே!

ஒரு வழியாக அந்த டாக்குமெண்ட்டை நான் அப்டேட் செய்து அனுப்பியபோது மணி 3. என் அதிர்ஷ்டம், Client மேனேஜர் மாலை 5 மணிவரை அலுவலகத்தில் இருந்தார்.

இப்படி நம்மை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளுவதற்கென்றே சில வடக்குப்பட்டி ராமசாமிகளாலும், நரிகளாலும், வடக்குப்பட்டி ராமசாமியும்-நரியும் கலந்த மனிதகுல மாணிக்கங்களும் சூழப்பட்ட உலகுதான் இது!

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

#Rewind!

 

 

 

05-Aug-2019:

 

வரலக்ஷ்மி பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அருகிலிருக்கும் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். பொதுவாகவே என்ன வாங்க வேண்டும் என்று எழுதி வைத்துக்கொண்டு செல்லமாட்டேன்; எல்லாம் மனதிலிருக்கும். எதையும் மறக்காமல் வாங்கிவிடுவேன். ஆனால் இந்த முறை உள்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட பூஜை என்பதால் எந்த ஒரு பொருளையும் வாங்க மறந்திவிடக்கூடாது என்பதில் அதிக கவனமிருந்தது. ஒரு வேளை சில பொருட்களை வாங்க மறந்தால் விளைவுகளை யார் சந்திப்பது!

மறதி பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் எனக்குத் தோன்றியது.

நம் பள்ளிக்காலத்தில் வீட்டுப்பாடம் செய்ய மறந்துவிட்டோம் என்றாலோ, ரெக்கார்ட் நோட்டுப்புத்தகத்தை எடுத்துச் செல்ல மறந்துவிட்டோம் என்றாலோ, “மறந்துட்டேன் சார் என்று நாம் சொன்னதும், நம் ஆசிரியர், “என்ன சாப்பிட்டே?” என்று கேட்பார். அதற்கு நாம் நல்ல பிள்ளையாய்ப் பதில் சொல்ல, உடனே அவர், “சாப்பிட மறக்கலை, தூங்க மறக்கலை. வீட்டுப்பாடம் செய்யறதை/ரெக்கார்ட் நோட்டுப்புத்தகத்தை எடுத்து வர மட்டும் மறந்துட்டியா?” என்று கேட்பார். உடனே இந்த உலகமே நம்மைக் கேவலமாய்ப் பார்ப்பதுபோலக் கூனிக் குறுகி நிற்போம். அந்த நொடியே அந்த இடத்தை விட்டு மறைந்து வேறெங்காவது ஓடிவிட வேண்டும் என நினைப்போம்.

கல்லூரிக்காலத்திலும் நாம் எதையாவது மறந்துவிட்டால் அதை ஆசிரியர் சுட்டிக்காட்டி ஏளனமாய்ப் பேசினால் கோபம் வரும், ஆனால் ஏதும் செய்ய முடியாமல் நிற்போம். அப்படி எதையாவது மறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட அந்த பீரியடுக்கு மட்டம் போட்டுவிட்டு கல்லூரி கேண்டீனிலோ, அல்லது நூலகத்திலோ தஞ்சம் புகுந்துவிடுவேன் நான்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஏதாவதொரு மெயிலோ, டாஸ்க்கோ செய்யத் தவறிவிட்டால், “மறந்துட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில், “அடேய், தப்பித்தவறி மேனேஜர்கிட்ட மறந்துட்டேன்னு மட்டும் சொல்லிடாதே என்று அறிவுறுத்திய சீனியர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

வேறு எப்படிச் சொல்வது?” என்று கேட்டால், “செய்யத் தவறிவிட்டேன். “I missed to do it” என்று சொல்லிவிடு என்பார்கள். ஏன் அப்படிச் சொல்லவேண்டும்?” என்று கேட்டால், “மறந்துவிட்டேன் என்று சொன்னால், செய்ய வேண்டிய காரியத்தில் உனக்கு அக்கறை/பொறுப்புணர்ச்சி/கவனம் இல்லை என அர்த்தம் கொள்வார்கள். அதனால்தான் என்பார்கள் சீனியர்கள்.

செய்யத் தவறிவிட்டேன் என்று சொன்னால் மட்டும் அக்கறை/பொறுப்புணர்ச்சி/கவனம் இருப்பது நிலைநாட்டப்பட்டுவிடுமா?” என்று கேட்டால், “நாங்கள் சொல்றது சொல்லிட்டோம், இனி உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்கள்.

அதாவது, கிட்டத்தட்ட கொலைக்குற்றத்துக்கு நிகரான செயலாகக் கருதப்படுகிறது மறப்பது/மறதி. பள்ளிக்காலத்தில் தொடங்கி, பணியிலிருக்கும் காலம் வரை, கிட்டத்தட்ட புற்று நோய் போன்றதொரு கொடிய நோயாகக் கருதப்படுகிறது மறப்பது/மறதி.

சில வாரங்களுக்கு முன்பு, என் ப்ராஜெக்டில் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் ஒரு முக்கியமான வேலையொன்றைச் செய்ய, க்ளையண்ட் (Client) டீமில் இருந்த ஒரு டிரெய்னியிடம் (Trainee) சொல்லியிருந்தார், க்ளையண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ப்ராஜெக்ட் மேனேஜர். அந்த வேலையைச் செய்ய மறந்தால், Go-Live ஆவது கடினம். அப்பேர்ப்பட்ட ஒரு வேலை அது.

செய்து முடிக்க வேண்டிய அந்த நாளுக்கு அடுத்த நாள், அந்த டிரெய்னியிடம் வேலையைப் பற்றி ப்ராஜெக்ட் மேனேஜர் விசாரிக்க, அதற்கு அவன், “இன்னும் ஆரம்பிக்கவில்லை. வேறு சில வேலைகள் இருந்ததால் இதைச் செய்ய மறந்துவிட்டேன் என்றான். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிக்கப்போகிறார், அந்த டிரெய்னியைப் பயங்கரமாகத் திட்டப்போகிறார் அந்த ப்ராஜெக்ட் மேனேஜர் என நினைத்தேன். ஆனால், நடந்தது வேறொன்று.

அந்த டிரெய்னியின் பதிலைக் கேட்டு, “சரி, பரவாயில்லை, எப்போது முடிக்க முடியும்?” என்று கேட்க, அவன், “இன்னும் ஒரு வாரமாகும் என்று சொல்ல, மேனேஜரும் சரியென்றார். ப்ராஜெக்ட் Go-Live-ஐ தள்ளிவைத்துவிட்டார். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

இந்த மாதிரி ஒரு விஷயம் நம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் நடந்திருந்தால் செத்தான் சேகர். காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சிருப்பார் அந்த மேனேஜர். கழுவு கழுவு என்று கழுவி ஊற்றியிருப்பார். வேலையைச் செய்யத் தவறிய அவன்/அவள், நிறுவனத்துக்கு ஏகப்பட்ட கோடி நஷ்டம் ஏற்படக் காரணமாகிவிட்டேனே என்ற குற்றவுணர்ச்சியில் அந்த வேலையை இரவு பகல் பாராமல் உடலையும் மனதையும் வருத்திக்கொண்டு சில நாட்களில்/சில மணி நேரங்களில் செய்து முடிப்பான்/முடிப்பாள்.

இப்படி நேரம் காலம் பார்க்காமல் உழைப்பது ஒரு பழக்காமாகவே மாறிவிடும். உடல் நலம் குறையும், சிக்கல்கள் தோன்ற ஆரம்பிக்கும். இதனால் நிறுவனத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதுமில்லை. ஆனால், இதெல்லாம் நம்மவர்கள் புத்தியில் ஏறாது. நம்மைப் பொறுத்தவரை ஒரு செயலைச் செய்ய மறந்தால், அந்த நபருக்கு அச்செயலைச் செய்ய விருப்பமில்லை, அல்லது அந்த நபர் கவனமாய்/பொறுப்புணர்ச்சியுடன் இல்லை என்றே நினைத்துக்கொள்வோம். இந்த ஒரு சின்ன விஷயத்தால் நம் எதிர்காலமே கேள்விக்குள்ளாகிவிடும் என்று நினைத்து ஒருவித பயம் தொற்றிக்கொள்ள, அதற்கேற்றார்ப்போல செயல்படுவோம்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்வதில்லை.

பசி, தூக்கம் போல மறதி என்பதும் இயற்கையான ஒரு விஷயமே. மறதி ஏற்பட பல காரணங்கள் உண்டு.

வேலைப்பளுவாக இருக்கலாம். அல்லது உடல்/மனம் சார்ந்த பிரச்சினையாகவும் இருக்கலாம். இவ்வளவு ஏன், முடிக்கப்பட வேண்டிய அந்த செயலின் முக்கியத்துவத்தை, சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் விளக்காமல் போனதாகவும் இருக்கலாம். திட்டமிடல் சரியாக நிகழ்த்தப்படாமலும் இருக்கலாம்.

இப்படி ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும், செய்யத் தவறிய, செய்ய மறந்த நபரை மட்டும் குற்றவாளியாக எண்ணி, எல்லாப் பழியையும் அந்த நபர்மீது போடுவது தவறு.

மறதி ஒரு தேசிய வியாதி என்று சினிமாக்காரர்களைப் போல் சொல்லவேண்டிய அவசியமில்லை. மறதி/மறப்பது இயற்கையான ஒரு விஷயமே, அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தபோது, வாங்க வேண்டிய பொருட்களில் எந்த ஒரு பொருளையும் மறந்துவிடக்கூடாது/தவறவிடக்கூடாது என்ற எண்ணத்தில் உள்துறை அமைச்சரைத் தொடர்புகொண்டு, வாங்க வேண்டிய பொருட்களைச் சரிபார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

சொல்ல வந்த விஷயத்தில் எதையும் மறக்கவில்லை என்றே நினைக்கிறேன். எதையாவது மறந்திருந்தால், அடுத்த பதிவில் அதைப் பற்றிச் சொல்கிறேன்!

#கனடா_குறிப்புகள்! #Rewind  #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

14-Apr-2019:

 

டிராபிக் ஜாமில் சிக்கிச் சின்னாபின்னமாக இது என்ன பெங்களூரா? மான்ட்ரியல்டா என்று கபாலி பட ரஜினிபோல் பல முறை என்னுள் நினைத்து, அன்றைய தினத்தன்று டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டதுண்டு. நண்பர் ஒருவருடன் காரில் செல்லும்போதுதான் அடிக்கடி இப்படி மாட்டிக்கொள்வேன். அதாவது துணைக்கு இன்னும் யாரையாவது கூட்டுச் சேர்த்துக்கொண்டு, நான் பட்டது மட்டுமில்லாமல் அவரையும் மாட்டிக்கொள்ள வைப்பேன். இது நான் விரும்பி செய்யும் விஷயமல்ல. தானாய் அமைவது.

சில மாதங்களுக்கு முன்பு நண்பரின் காரில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது, சாலை காலியாக இருந்ததைப் பார்த்து, “இன்று தப்பித்தோமடா வெங்கட் என்று மனதுக்குள் சொன்னதுதான் மிச்சம். அன்று வீடு வந்து சேர மூன்று மணி நேரமானது. வழியில் ஏதோ ஓரிடத்தில் ஏற்பட்ட விபத்தினால் தாமதம்!

கார் பயணத்தோடு நின்றுவிடுவதில்லை இந்த ராசி. குளிர்காலத்தில் ஒரு நாள் பலமான காற்றோடு மழை பெய்து கொண்டிருந்தது. தன் அழகால் ஆடவர்களை மயக்கிய, அழகில் வழுக்கி விழ வைத்த அந்தக் காலத்து ஐஸ்வர்யா ராயைப்போல் தரையில் ஐஸ் உருவாகி, நடப்பவர்களை வழுக்கி விழ வைத்துக்கொண்டிருந்தது.

அன்று ஒரு வழியாக எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் பேருந்தில் ஏறிவிட்டேன். வண்டி கிளம்ப வேண்டிய நேரத்தில் கிளம்பியது.

ஐஸ் படர்ந்திருக்கும் சாலையில் வண்டி ஓட்டுவதென்பது கையிலும் காலிலும் வெண்ணை தடவி இரும்புக் கயிற்றின்மேல் நடப்பது போன்றது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வழுக்கி ஏதோவொரு திசையை நோக்கி இழுத்துக்கொண்டு போய்விடும்.

அன்று அந்த மாதிரி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என இறைவனை வேண்டியபடி வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிதானமாகச் சென்றுகொண்டிருந்த வண்டி ஓரிடத்தில் நிற்க, சரி சிக்னலில் நின்றுக்கொண்டிருக்கிறது என நினைத்தேன்.

சில நிமிடங்களாகியும் வண்டி அங்கிருந்து நகராதபோதுதான் தெரிந்தது எங்கள் பேருந்துக்கு முன்னே சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று சாலைக்குச் செங்குத்தாக நின்றுகொண்டிருப்பது. சரிதான், சைத்தான் சிட்டி பஸ்ல வருது என்றது என் மைண்ட்வாய்ஸ்.

அந்த இடத்திலிருந்து கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மணி நேரமானது. தேர்தல் வரும் பின்னே, துட்டு வரும் முன்னே என்ற பழமொழி மாதிரி, கண்டம் விட்டு கண்டம் தாண்டி இந்த டிராபிக் ஜாம் என்னைத் துரத்துகிறதே என்றெண்ணி நொந்துகொண்டேன்.

அலுவலகத்துக்குச் செல்வதற்கு இரண்டு மெட்ரோக்களிலும் மற்றும் ஒரு பேருந்திலும் செல்லவேண்டும். இதுவரை சாலையில்தான் டிராபிக் ஜாமைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. மெட்ரோவில் செல்லும்போதெல்லாம் சரியான நேரத்துக்குச் சென்றுவிடுவேன். சென்ற வாரம் வரை.

மெட்ரோ ரயில் செல்லும் பாதையில் டிராபிக் ஜாம் ஏற்பட வாய்ப்பில்லை என நினைத்து நகரம் படத்தில் வடிவேலு சுந்தர்.சியை வேறு ஏரியாவில் பார்த்து, பின் தில் இருந்தால் தன் ஏரியாவுக்கு வரச் சொல்லி வீராப்பு காட்டிவிட்டு அப்படியே படிப்படியாகச் சென்று, கடைசியில் தன் வீட்டுக்கே வந்து நிற்கும் சுந்தர்.சியைப் பார்த்த வடிவேலுவின் நிலைமைதான் எனக்கு நேரப்போகிறது என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

மெட்ரோ ஸ்டேஷனை வந்தடைந்து உள்ளே சென்றால், ஹரி படங்களில் வரும் நட்சத்திரப் பட்டாளங்கள்போல் ஏகப்பட்ட பேர் கிழக்கே போகும் (மெட்ரோ) ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

ரயில் வருவது தாமதமாகிக்கொண்டே போக, அங்கிருப்பவர்களின் பொறுமை மெல்ல மெல்ல கரைந்துகொண்டேயிருந்தது. கடுப்பில் தலையை இரண்டு பக்கமும் ஆட்ட ஆரம்பித்தனர் சிலர்.

வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்த எங்களுக்கு வரப்பிரசாதமாய் தோற்றமளித்தது எதிரில் வந்துகொண்டிருந்த மெட்ரோ ரயில்.

மெட்ரோ ரயில் அங்கு வந்து நின்ற அடுத்த நொடி, ஈசல்போல் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள் எல்லோரும். நான் பொறுமையாக இருந்து கடைசியாக ஏறினேன். சில நொடிகளில் அங்கிருந்து புறப்பட்டது வண்டி.

வண்டியினுள் நிற்கக்கூட இடமில்லை. ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு நிற்க, முன்னே நின்றவரின் ஹை ஹீல்ஸ் யாரோ ஒருவரின் காலில் பட, அதற்கு அவர் ஆவென்று அலற.. கிட்டத்தட்ட சென்னை மாநகரப் பேருந்தில் காலை 8.30 மணிக்குச் செல்வது போலிருந்தது நிலைமை.

என் முன்னே நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணின் தங்க நிற தலைமுடி என் மூக்கினுள் நுழைய, சரியாக அந்த நேரத்தில் குளம்பி வாசம் இவள் கூந்தலோ என்று படத்தில் வரும் லேடியோ பாடல் வரி என்னுள் தோன்ற, அடுத்த நொடி ஹச்சென்று தும்பினேன். என் சிந்தனை கலைந்துபோன அந்த நேரத்தில் அடுத்த ஸ்டேஷனில் வந்து நின்றது வண்டி.

அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது என் ராசி.

அரை மணி நேரமாகியும் வண்டி அங்கிருந்து நகர்வதாயில்லை. வழியில் ஏதோ ஒரு பகுதியில் என்னவோ ஒரு பிரச்சினையாம். அதற்காக இவ்வழியில் செல்லும் மெட்ரோக்கள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டன.

சோத்துலயும் அடி வாங்கியாச்சு, சேத்துலயும் அடி வாங்கியாச்சு என்று சந்திரமுகி பட வடிவேலுபோல் பேருந்தில் சென்றபோதும் டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்டேன், டிராபிக் ஜாம் ஏற்பட வாய்ப்பேயில்லை என்று நான் எண்ணியிருந்த மெட்ரோவிலும் சிக்கிக்கொண்டேன். கிட்டத்தட்ட தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செல்லும் அரசியல்வாதிகளைப்போல் உணர்ந்தேன்.

இனியும் அங்கு காத்திருப்பதால் எந்த பயனுமில்லை, வெளியே வந்து டாக்ஸியில் சென்றுவிடலாம் என எண்ணி ரயிலை விட்டு இறங்கி, வாசலை நோக்கி நடந்தேன்.

கதவைத் திறந்து வெளியே வந்ததும் சிலீரென்றிருந்தது. அன்று பலமான மழை, காற்று. வாயிலிருந்து புகை வர, கைகள் நடுங்க ஆரம்பிக்க.. பயங்கர குளிர்.

தான் பிரச்சாரம் சென்ற தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்த விஷயம் அறிந்ததும் கமுக்கமாக அடங்கி வீட்டுக்குத் திரும்பும் அரசியல்வாதிகளைப்போல் மீண்டும் ஸ்டேஷனுக்குள் சென்றேன். அங்கிருந்து ஒரு டாக்ஸி நிறுவனம் ஒன்றைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்ல, ஓரு டாக்ஸிகூட இன்னும் சில மணி நேரங்களுக்குக் கிடைக்காது, மெட்ரோ ரயில் பாதை பிரச்சினையால் எல்லா டாக்ஸிக்களும் சவாரி சென்றுவிட்டன என்றார் மறுமுனையில். இதே பதில்தான் கிடைத்தது நான் தொடர்புகொண்ட வேறு சில டாக்ஸி நிறுவனங்களிடமிருந்தும்.

சரி, நண்பனைத் தொடர்புகொண்டு, வீட்டில் அவன் இருந்தால் அவனது காரை ஓட்டிவரச் சொல்லி, என்னை வீட்டில் விட்டுவிடக் கேட்கலாம் என்ற எண்ணத்தில் நண்பனுக்குப் போன் செய்தால், அவன், வண்டியில் சென்றபோது ஒரு சின்ன விபத்துக்குள்ளாகி மெக்கானிக் ஷாப்பில் இருப்பதாகச் சொன்னான்.

இப்போது என்ன செய்ய? மெட்ரோ பாதை எப்போது சரியாகும்? ஒருவேளை சரியாகவில்லை என்றால் என்ன செய்வது? கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரம் போகவேண்டுமே, எப்படிப் போவது? என்று ஏகப்பட்ட கேள்விகள் என்னுள். அரை மணி நேரமானது, மழையும் குளிரும் ஓய்ந்த பாடில்லை, டாக்ஸியும் கிடைக்கவில்லை.

சொக்கநாதரே, உன் திருவிளையாடலை என்னிடம்தான் காட்ட வேண்டுமா? நான் ரொம்ப பாவம், காப்பாத்துப்பா என இறைவனிடம் வேண்ட ஆரம்பிக்க, கால் மணி நேரத்தில் மெட்ரோ சேவை மீண்டும் இயங்க ஆரம்பித்தது.

கடவுளுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பினேன்.

வழியில், “நல்ல வேளை இதுவரை விமானத்தில் டிராபிக் ஜாம் அனுபவித்ததில்லை என்று என் மனசாட்சி ஒரு ஓரமாக நாக்கைத் துறுத்திப் பார்க்க, அடுத்த நொடியே மனசாட்சியை மியூட் செய்தேன்.

வீடு வந்து சேர கிட்டத்தட்ட 2.30 மணி நேரம். கூட்ட நெரிசலிலும், குளிரிலும், கால் கடுக்க நின்றதனாலும் வாடி வதங்கி போயிருந்தேன். போதாக்குறைக்கு மளிகைக்கடைக்குச் சென்று சில பொருட்கள் வேறு வாங்கி வர வேண்டியிருந்தது. ஒரு குடும்பத்தலைவனின் கஷ்டத்தை இவ்வுலக மக்கள் உணர்கிறார்களா? என்ன வாழ்க்கைடா இது!

வீட்டின் கதவைத் திறந்து, பயங்கர சோர்வுடன், கிட்டத்தட்ட ஸ்லோ மோஷனில் நடக்கும் கிரிக்கெட் பவுலர் ஆஷிஷ் நேஹ்ரா போல் உள்ளே சென்றால், சிரித்துக்கொண்டே என் மகள் குடுகுடுவென என்னை நோக்கி ஓடி வந்தாள். அடுத்த நொடி ஒட்டுமொத்த சோம்பலும் கரைந்து, ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் தோனி போல் அவளை தூக்கியணைத்துக்கொண்டேன்.

வாழ்க்கை அழகானது 🙂

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

#கனடா_குறிப்புகள்! #பேருந்துப்_பயணங்களில்! #Rewind

 

 

 

31-Mar-2019:

 

#கனடா_குறிப்புகள்! #பேருந்துப்_பயணங்களில்! #Rewind!

மான்ட்ரியலில் குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கப்போகிறது. நிறைய பேர் அரைக்கால் டவுசரில் வலம் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

குளிர்காலம் என்றால் -30, -35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டும் ஊர் இது. குளிரோடு சேர்ந்து ஆளைத் தள்ளிவிடும் அளவுக்குக் காற்றும் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் சமாளிக்க மொத்தம் நான்கு துணி உடுத்தி, அதற்கு மேல் 1-2 கிலோ எடையுள்ள குளிர்கால ஜாக்கெட், தலையை, காதை மறைக்க தொப்பி மாதிரி ஒன்று, மற்றும் கைகளை மறைக்க கையுறைகள் என ஏகப்பட்ட உடைகளை உடுத்திக்கொண்டு, கிட்டத்தட்ட நிலாவுக்குச் சென்ற ஆர்ம்ஸ்ட்ராங் மாதிரி, வட, தென் துருவங்களில் வசிக்கும் எஸ்கிமோ மாதிரி நடக்க வேண்டியிருக்கும்.

மூச்சு விட்டாலே புகை வெளிப்படும். வந்த புதிதில் இது பிடித்திருந்தது. வெளிவரும் மூச்சுக்காற்றைப் பார்க்கும்போதெல்லாம் இனம் புரியாத ஏதோ ஒரு புத்துணர்ச்சி வரும். உடனே டிராகனாகப் பாவித்துக்கொண்டு ஆ என்று வாயைத் திறந்து காற்று வெளிவிடும்போது எதிரில் நிற்கும் இடமே தீப்பிழம்பில் மிதப்பதாக, சிறு வயதில் ஏலகிரி சென்றபோது நினைத்தது நினைவில் வர, அந்த நினைவுகளை அசைபோட்டபடியே செல்வேன்.

மூச்சுக்காற்றே புகைமாதிரி வெளியே தெரிகிறது என்றால் மற்றதெல்லாம்? குளிர்காலத்தில் மொச்சைப்பருப்பு, பட்டாணி, காராமணி போன்றவை அதிகம் கிடைப்பதில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 😊 

வீட்டிலுள்ள ப்ளக் பாயிண்ட் துளைகளிலிருந்தெல்லாம் சில்லென காற்று வரும். அவற்றையெல்லாம் எதையாவது வைத்து மறைத்து ஒளிந்துகொள்ள வேண்டியிருக்கும். சில நண்பர்கள் தங்கள் வீட்டிலுள்ள எலெக்ட்ரானிக் அடுப்பை சில மணி நேரம் ஆன் செய்துவிட்டு தூங்குவதாகச் சொன்னார்கள்.

சாலையில் எங்கு பார்த்தாலும் பனி கொட்டிக்கிடக்கும். பனி என்றதும் மணிரத்னம் படத்தில் வருவதுபோல் வெள்ளை நிறப் பனி என்று நினைக்காதீர்கள். அதெல்லாம் பனி பெய்த அன்று மட்டும்தான்.

அடுத்த நாளே சாலையில் செல்லும் கார்களின் டயர்களில் ஒட்டியிருக்கும் மணல், தூசி இவையெல்லாம் கலந்து, பார்க்கவே கன்றாவியாக இருக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும் அன்றைய வானிலை அறிக்கையைப் பார்த்துவிட்டுதான் வெளியே செல்லவேண்டும். எனக்குத் தெரிந்த டாக்ஸி டிரைவர் ஒருவர், தினமும் வானொலியிலோ, அல்லது தொலைக்காட்சியிலோ அன்றைய வானிலை அறிக்கையைப் பார்த்துதான் அன்று வேலைக்குச் செல்வதா வேண்டாமா என்று முடிவு செய்வதாகச் சொன்னார்.

ஆனால் ஒரு விஷயத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

தொலைக்காட்சியில் வானிலை அறிக்கையில் என்ன சொல்கிறார்களோ அதுதான் அன்று நிகழ்கிறது. பனி பொழியும் என்று அறிவித்தால் அன்று பனிப்பொழிவு இருக்கும். மழை வரும், வெளியே செல்லவேண்டாம் என்றால் அன்று கண்டிப்பாக மழை பொழியும்.

இதில் இன்னொரு நல்ல விஷயமும் உள்ளது. நான் பார்க்கும் தொலைக்காட்சி சேனல் எந்தக் கட்சியைச் சார்ந்ததும் அல்ல. இதுவே நம்மூரில் கனமழை பெய்தால், ஆளுங்கட்சி சேனலில் மழைவேண்டி வருண பகவானுக்குக் கடிதம் அனுப்பினார் முதல்வர் என்றும், “வறட்சி கண்ட பூமிக்கு, வருணனிடமிருந்து மழையை மீட்டு கொண்டு வந்த தெய்வமே என்று முதல்வரைப் போற்றியும், எதிர்க்கட்சி சேனலில், “மழை இல்லாமல் மக்கள் திணறல் என்றும், “மழை வெள்ளத்தால் மக்கள் கொந்தளிப்பு என்றும் மாறி மாறி விவரிப்பார்கள். பார்க்கிறவனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

பனிப்பொழிவு இருந்தால் அன்று குளிர் சற்று குறைவாக இருக்கும். பனிப்பொழிவு இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்.

குளிரோடு சேர்ந்து மழையும் சில நாட்கள் பாடாய்ப் படுத்தும். அந்த சமயத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாகச் செல்ல வேண்டும். எந்த இடத்திலும் வழுக்கி விழ வாய்ப்புண்டு.

மாலை 4.30, 5 மணிக்கெல்லாம் இருட்ட ஆரம்பித்துவிடும். வெயில் அதிகம் இல்லாததால் வைட்டமின் டி தட்டுப்பாடு ஏற்படும். உடல் எளிதில் சோர்வடைந்துவிடும்.

இப்படி பஞ்சபூதங்களில் சிலவற்றை மீறி, எதிர்த்துப் போராடி, சுனாமியில் ஸ்விம் செய்யும் தனுஷ் மாதிரி தினமும் அலுவலகத்துக்குச் சென்று வருவதெல்லாம் ஒன்பது கிரகங்களும் லக்னத்தில் உச்சம் பெற்ற சிலரால்தான் முடியும். அந்த சிலரில் ஒருவன் நான் என்று நினைக்கும்போது மலைப்பாய் இருக்கிறது.

அப்பேர்ப்பட்ட குளிர்காலம் முடிந்து, வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது என்பது பூங்காவில் பல மணி நேரம் காத்திருப்புக்குப் பின்பு பார்க்கும் காதலியின் முகத்தைப் போல, எலெக்ட்ரானிக்ஸ், ட்ரிக்னாமெட்ரி பாடங்கள் புரிவதுபோல, இடைத்தேர்தல் நடக்கப்போகும் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்துகொண்டிருக்கும் கட்சிக்காரர்களைப் பார்ப்பதுபோல, வைகோ அவர்கள் நமக்குப் பிடிக்காத கட்சியின் தலைவரை ஆதரித்துப் பேசுவதைப் போல, புத்துணர்ச்சி தரக்கூடிய விஷயம்.

வசந்தகாலம் வரப்போவதைப் பற்றி இவ்வளவு ஆனந்தமாகச் சொல்கிறானே, வெப்பநிலை எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.

நாளை -1 டிகிரி செல்சியஸாம். பனிப்பொழிவுக்கான வாய்ப்புகள் உள்ளனவாம்.

ம், கிளப்புங்கள், ஸ்டார்ட் தி மியூசிக்.. இந்த வசந்தகாலம் இருக்கிறதே அது மிகவும் இனிமையான ஒன்று.

 

 

 

26-Feb-2019:

 

அடையார் ஆனந்த பவன்..

மதுரையில் மட்டுமல்லாமல், ஏகப்பட்ட ஊர்களில் இருக்கும் மதுரை முனியாண்டி விலாஸ் போல், பெங்களூர் ஷாந்தி நகர் பேருந்து நிலையத்திலுள்ள A2B என்று அழைக்கப்படுகிற அடையார் ஆனந்த பவன் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன், சில வாரங்களுக்கு முன்பு. சென்னை அடையாரில் நான் தங்கியிருந்த சில மாதங்களில் இந்த ஹோட்டலுக்குச் சென்றதில்லை, அடையாரில் இந்த ஹோட்டல் இருக்கிறதா, அது எங்கே இருக்கிறது என்பதெல்லாம் கூட தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

பண்டிகை சமயம் அது என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருக்கை கிடைக்க கால் கடுக்க காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

ஜோடி ஜோடியாய் உட்கார்ந்து பொறுமையாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் அங்கிருந்த பலர். நானும் எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிப்பது!

வைத்த கண் வாங்காமல் அங்கிருக்கும் பலரின் தட்டுக்களைப் பார்த்தும், எழுவோமா என்ற வைராக்கியத்துடன் தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

ஒரு பஞ்சாபி சர்தார் குடும்பம் ரோட்டிகளையும் பன்னீர் பட்டர் மசாலாவையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு ஏனோ தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் ஹிந்தி சீரியல்கள் நினைவுக்கு வந்தது.

தென்னிந்தியாவில், அதுவும் இது போன்ற அக்மார்க் தமிழ் நாட்டு / தென்னிந்திய உணவைத் தரும் ஹோட்டல்களில் வட இந்திய உணவுகளைச் சுவைப்பதை நான் விரும்புவதில்லை. என்னைப் பொறுத்தவரையில், இந்த மாதிரி ஹோட்டல்களில் அந்தந்த ஊரின் தனித்துவமான, ஸ்பெஷலான உணவைச் சாப்பிடுவது சாலச்சிறந்தது.

தமிழ் நாட்டில் ஏதாவதொரு பவனில் இட்லி, வடை, தோசை, பூரி, பொங்கல்.. பெங்களூரில் ஏதாவதொரு சாகரில் ரவா இட்லி, மசாலா தோசை.. வட இந்தியாவில் ஏதாவதொரு விஹாரில் ரோட்டி, பாணி பூரி.. இப்படி சாப்பிட விரும்புகிறவன் நான். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதல் காரணம் - TCS டிரெய்னிங்கிற்காக புவனேஷ்வர் சென்றிருந்த சமயம் அது. அனுதினமும் ரோட்டி, சப்பாத்தி, பராட்டா போன்றவைகளை எங்களுக்குக் கொடுத்து போரடிக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் ஒரு நாள் இட்லி சாம்பார் செய்து தந்தார், நாங்கள் தங்கியிருந்த இடத்தில் சமையல் செய்பவர்.

நாங்களும் ஆவலுடன் அந்த இட்லியை சாப்பிட நினைத்து அதனை அழுத்திய போது அழுந்தவேயில்லை. கை ரேகை படியும் அளவுக்கு கடினமாக இருந்தது. எடுத்து யார் மீதாவது எறிந்தால் ஒன்றரை டன் வெய்ட் அடி விழும் அளவுக்கு இருந்தது அந்த இரும்பு இட்லி.

சமையல் செய்பவரின் கையில், காலில் விழுந்து, இனி எங்கள் வாயுடன், வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். அடுத்த வேளை முதல் மீண்டும் ரோட்டி, சப்பாத்தி, பராட்டா செய்து கொடுத்து, எங்கள் வயிற்றில் பாலையையும், சுவையான டாலையும் (Dhal) வார்த்தார் அந்த சமையல்காரர்.

மாரல் ஆப் தி ஸ்டோரி: சாப்பாட்டு விஷயத்தில் சோதனை முயற்சி மேற்கொள்வது சில நேரங்களில் ரிஸ்க் ஆகிவிடும்.

இரண்டாவது காரணம் - பணி நிமித்தமாக பொகாரோ ஸ்டீல் ப்ளாண்ட்டுக்குச் சென்றிருந்த சமயம். நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்த சமையல்காரர் தினமும் ஒவ்வொரு வகையான பராட்டா - டால் செய்து கொடுத்து விருந்தளித்தார். நான் இது போல் எங்குமே சாப்பிட்டது கிடையாது. தினமும் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, ஸ்டீல் ப்ளாண்ட்டுக்குச் செல்ல கஷ்டப்பட்டேன். அப்படியொரு சுவை. அவ்வூரிலிருந்து கிளம்புவதற்கு முன் அந்த சமையல்காரரைச் சந்தித்து நன்றி சொல்லி, அவரை, அவரது சமையலைப் பாராட்டிவிட்டு வந்தேன்.

மாரல் ஆப் தி ஸ்டோரி: தெரிந்த விஷயத்தை, பல தடவை செய்து வெற்றிகண்ட விஷயத்தைச் செய்தால் அதற்கான பலன் நிச்சயம் கிட்டும். ப்ரூஸ் லீ், "I fear not the man who has practiced 10000 kicks once, but I fear the man who has practiced one kick 10000 times." என்று சொல்லியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், பயிற்சி வீண் போகாது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்குப் பிறகு நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு டேபிள் காலியாக, உடனே அங்கு சென்று ஒரு இருக்கையில் என் பையை வைத்து முன் பதிவு செய்தேன். மற்ற மூன்று இருக்கைகளும் சில நொடிகளில் ஆக்கிரமிக்கப்பட்டன.

சூப்பர்வைஸர் வந்து ஆர்டர் எடுக்க ஆரம்பித்தார்.

"என்ன டிபன் இருக்கு சார்?" இது நான்.

"இட்லி, தோசை, பூரி, ரவா.." என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், "ஒரு மசாலா தோசை" என்றேன் நான்.

அதற்கு அவர், "இருங்க சார். இட்லி, தோசை, பூரி, ரவா தோசை எல்லாம் லேட் ஆகும்னு சொல்ல வந்தேன்" என்றார்.

"எதுதாங்க சீக்கிரம் கிடைக்கும்? பஸ் பிடிக்கணும்"

"சப்பாத்தி, பொங்கல், பரோட்டா.. இதெல்லாம் சீக்கிரம் கிடைக்கும் சார்"

"சரி, பொங்கல் குடுங்க" என்றேன்.

எனக்குப் பக்கத்தில் இருந்தவர் யாருக்கோ போன் செய்து, "சார், வள்ளலார் நகர்ல மூணாவது கிராஸுல நாலாவது வீடு சார். தெரு விளக்கை ஒட்டினமாதிரி இருக்கற பச்சை கலர் வீடு. அவர் உங்ககிட்ட சில முக்கியமான டாக்குமென்ட்ஸ் குடுப்பார். அதை நீங்க வாங்கி வெச்சிக்கிட்டு நாளைக்கு என்கிட்டே குடுக்க முடியுமா? இப்போ ஒரு அவசர விஷயமா வெளியூர் போயிட்டிருக்கேன், நாளைக்கு வந்திடுவேன். கொஞ்சம் உதவி செய்யுங்க சார்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

எனக்கு பசி அதிகமாக, நான் ஆர்டர் செய்த பொங்கலை எனக்கு சீக்கிரம் தந்துவிடுமாறு கடவுளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் வேண்டுதல் பலிக்க பத்து நிமிடங்கள் ஆனது.

சுடச்சுட பொங்கல், அதன் மேல் பகுதியில் ஒரு சின்ன நெய்க்குளம், குளத்தினுள் மீன் குஞ்சுகள் போல், ஆங்காங்கே மிளகுகள்.. பார்ப்பதற்கே அழகாய் இருந்தது. உடனடியாக சாப்பிட ஆரம்பித்தேன்.

பக்கத்தில் இருந்தவர் மீண்டும் யாரோ ஒருவருக்கு போன் செய்து, "சார், உங்க வீட்டுக்கு என் நண்பர் ஒருவரை வரச்சொல்லிருக்கேன். அவர்கிட்ட அந்த டாக்குமென்ட்ஸ் எல்லாத்தையும் குடுத்திடுங்க. நான் அவர்கிட்ட இருந்து நாளைக்கு வாங்கிக்கறேன்" என்றார்.

"....." இது மறுமுனையில்ருந்து பேசப்பட்டது..

"வெளிய கிளம்பிட்டிருக்கீங்களா? எத்தனை மணிக்கு சார்?"

"......"

", அப்படியா? சரி சார், அவர் பத்தரை மணிக்குள்ள உங்க வீட்டுக்கு வந்துடுவார். கொஞ்சம் அவர் கிட்ட அந்த டாக்குமென்ட்ஸ் குடுத்துடுங்க சார். ரொம்ப உதவியா இருக்கும்"

"......"

"கண்டிப்பா சார். வந்துட்டு இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வீட்டுக்கு வந்துடுவார்"

"......"

"கண்டிப்பா சார், தேங்க் யூ" அழைப்பைத் துண்டித்து மறுபடி யாரோ ஒருவருக்கு டயல் செய்தார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை போல.

மூன்று, நான்கு முறை முயற்சி செய்து பார்த்தார், ம்ஹும், நிலைமையில் முன்னேற்றமில்லை.

நானுண்டு, என் வேலையுண்டு என்று பொங்கல் சுவைத்துக்கொண்டிருந்தேன் நான்.

அடுத்து சப்பாத்தி ஆர்டர் செய்து காத்திருந்தேன். என் பக்கத்தில் இருந்தவர் இரண்டு, மூன்று முறை யாரையோ தொடர்பு கொள்ள முயற்சி செய்து, முயற்சி திருவினையாகாமல் அமைதியாய் இருந்தார். அவர் ஆர்டர் செய்திருந்த உணவும் இன்னும் வந்தபாடில்லை.

"சார், ரொம்ப நேரமா ஒருத்தருக்கு கால் பண்றேன். ஆனா, லைன் கெடைக்க மாட்டேங்குது, நான் சொல்ற நம்பரை கொஞ்சம் டயல் பண்ணி தர்றீங்களா?" என்று என்னைக் கேட்டார்.

"சொல்லுங்க" என்றேன்.

அவர் நம்பர் சொல்ல, நான் டயல் செய்ய, "நாட் ரீச்சபிள்" என்ற குரல் ஒலித்தது. அவரிடம் விஷயத்தைச் சொல்ல, அவர் முகம் இறுகியது.

டேபிளைப் பார்த்தேன், அவருக்கு முன்னே எந்த உணவும் இல்லை, எந்தத் தட்டும் இல்லை.

"என்ன சார், இன்னும் எதுவும் ஆர்டர் பண்ணலையா?" என்று ஆர்வமாக நான் கேட்க. "இட்லி ஆர்டர் பண்ணிருக்கேன் சார்" என்றார் அவர்.

"இட்லி லேட் ஆகுமாம் சார், சர்வர் சொன்னார்" என்றேன் நான்.

அதற்கு அவர், "பரவால்லை சார். வர்ற வரைக்கும் நான் காத்துட்டிருக்கேன்" என்று சொல்ல, சமீபத்தில் நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி நேர்காணல் என் கண் முன் நிழலாய்த் தோன்ற, அதனால் எழுந்த குபீர் சிரிப்பை அடக்க முடியாமல் தண்ணீர் குடித்து சாந்தப்படுத்திக்கொண்டேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவருடைய செல்போன் ஒலித்தது. இதற்காகவே காத்திருந்தவர் போல் அவர், "சொல்லுங்க சார், உங்க காலுக்குத்தான் காத்திட்டிருந்தேன்" என்றார்.

மறுமுனையில் "......"

"இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா?"

"......"

"சரி சார். நான் அவர்கிட்ட சொல்லிடறேன்" என்று அழைப்பைத் துண்டித்து வேறு யாரோ ஒருவருக்குப் போன் செய்து, "சார், அவர் வந்துட்டிருக்கார். இன்னும் பத்து நிமிஷத்துல உங்க வீட்டுக்கு வந்திடுவார் சார்" என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

நான் சாப்பிட்டு முடித்து, காசு கொடுத்துவிட்டு வெளியே வந்து இரண்டாவது ப்ளார்பார்மில் நின்றேன். மணி 10:15 ஆனது.

அப்போது என் பின்னால் எங்கேயோ கேட்ட குரல் ஒன்று "ஹலோ ஹலோ" என்றொலிக்க, திரும்பிப் பார்த்தேன். சாட்சாத் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அதே நபர்தான்.

"சொல்லுங்க சார். உங்க காலுக்குத்தான் காத்திட்டிருந்தேன்"

மறுமுனையில் "......"

"வந்துட்டீங்களா?"

"......"

"சரி சார், அங்க தெரு விளக்கு இருக்கும் பாருங்க"

"......"

"அங்கதான் சார் இருக்கும். நல்லாப் பாருங்க"

"......"

"பாத்துட்டீங்களா? சரி, அங்க அதை ஒட்டின மாதிரி ஒரு பச்சை கலர் வீடு இருக்கா?"

"......"

"இல்லை சார், அங்கதான் இருக்கு. நீங்க மூணாவது கிராஸ்ல தானே இருக்கீங்க?"

"......"

"மூணாவது கிராஸ் இல்லையா?" டென்ஷன் ஏறியது அவருக்கு.

"......"

"சார், அங்க மூணாவது கிராஸ் இருக்கும் பாருங்க. இங்க்லீஷ்ல தேர்ட் கிராஸ்னு போர்ட் இருக்கும் பாருங்க" என்று அவர் சொல்லும்போது நான் ஏற வேண்டிய பேருந்து வந்தது. கிளைமாக்ஸ் பார்க்காமல் கிளம்பப் போகிறேனே என்ற வருத்தம் எனக்கு.

"சார், நீங்க வள்ளலார் நகர்தானே வந்திருக்கீங்க?"

"......"

"ஐய்யோ சார்! என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்களே! நான் வள்ளலார் நகர்தானே போகச் சொன்னேன். நீங்க ஏன் வள்ளலார் தெருவுக்குப் போனீங்க?" என்று அவர் கோவத்தில், வருத்தத்தில் சொன்னபோது எங்கள் பேருந்து கிளம்பியது..

#பேருந்துப்_பயணங்களில்! #Rewind!

 

 

 

09-Sep-2018:

 

#காஷ்மீரி_பிரியாணி!

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் என நினைக்கிறேன். நண்பன் Gnanasekar Dasarathan ஞானசேகரின் பிறந்த நாள் ட்ரீட்டுக்காக டார்லிங் ரெஸிடென்சி சென்றிருந்தோம். அன்றுதான் காஷ்மீரி புலாவ் என்ற உணவு வகையை முதன்முதலாகக் கேள்விப்பட்டேன்.

என்ன இது காஷ்மீரி புலாவ்?” என்று ஆர்வத்துடன் நான சர்வரைக் கேட்க, அவர், “புலாவ்ல பழங்கள் போட்டிருக்கும் சார், கொஞ்சம் இனிப்பா இருக்கும் என்றார் அவர். இனிக்கும் திண்பண்டங்கள் என்றாலே எனக்கு அலாதி ப்ரியம் அந்தக் காலத்தில். விடுவேனா இந்த காஷ்மீரி புலாவை. ஆர்டர் செய்தேன். சில நிமிடங்களில் அதை எடுத்து வந்தார் சர்வர்.

முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்தேன்.

பளீர் வெள்ளை நிற பீங்கான் கிண்ணம்.

அதில், பல வருட குடும்பப் பகையோ என்னவோ தெரியவில்லை, ஒன்றோடு இன்னொன்று ஒட்டவே ஒட்டாமல், பளீர் வெள்ளை நிறத்தில், முல்லைப் பூக்களைப் போல் இருந்த பாஸ்மதி அரிசி மணிகள் ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து பல்லிளித்தபடி இருந்தன.

பாஸ்மதி அரிசி மணிகளின் குடும்பப் பகையை தீர்த்து வைக்கச் சென்றவர்களோ என்னவோ தெரியவில்லை, நடுவில் ஆங்காங்கே சீரக மணிகள் எட்டிப் பார்த்தபடி, அரிசி மணிகளுக்கு நடுவே நசுங்கிக் கிடந்தன.

இவர்களுக்கு மத்தியில், சண்டையை எப்போது ஆரம்பிக்கலாம், எப்போது நிறுத்தலாம் என்று சிக்னல் காட்டுவதுபோல் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் ப்ளம் துண்டுகள் சிதறிக் கிடந்தன.

இந்தக் குழுக்களையெல்லாம் தாங்கிப்பிடிக்கும் ஊரிப்பெரியவர்கள் போல் அன்னாசிப்பழத்துண்டுகள், ஆப்பிள் பழத்துண்டுகள், கொய்யாப்பழத்துண்டுகள், வாழைப்பழத்துண்டுகள் கூடியிருந்தன.

என் முன்னே வைக்கப்பட்டிருந்த தட்டில் பரிமாறினார் சர்வர். மணல் குவியல் போல் அழகாய் சரிந்து விழுந்தது.

ருசிக்கும் அவசரத்தில் கையில் இருந்த ஸ்பூனை கீழே போட்டுவிட, சற்றும் மனம் தளராமல், காரியமே கண்ணாய் இருந்து, “தமிழன் என்று சொல்லடா, கையில் எடுத்து சாப்பிடடா என்று எனக்குள் நினைத்துக்கொண்டு, காஷ்மீரி புலாவின் ஒரு பகுதியை உருண்டையாக்கி எடுத்து வாய்க்குள் போட்டேன். அந்த ஒரு நொடியில் தென்றல் காற்று என்னைத் தீண்டியது போலவும், குயிலின் சங்கீதம் கேட்பது போலவும், ட்ரிக்னாமெட்ரி, எலெக்ட்ரானிக்ஸ் பாடங்கள் புரிந்தது போலவும் இருந்தது. அந்த நொடியில் என்னையே மறந்துபோனேன்.

சில நிமிடங்களில் முழுவதையும் காலி செய்துவிட்டு தட்டை சுத்தப்படுத்தி வைத்தபோது எடுத்த முடிவுதான் காஷ்மீரி புலாவை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது.

அன்று முதல், உணவகத்துக்குப் போன பெரும்பாலான சமயங்களில் காஷ்மீரி புலாவையே ஆர்டர் செய்து விரும்பி உண்பேன். இது அந்த உணவகத்தில் கிடைக்காதென்றால், என் சாய்ஸ் வறுத்த அரிசிதான் (அதான்பா ஃப்ரைட் ரைஸ்).

சென்னையில் அடையாறில் தங்கியிருந்த சமயம். எங்கள் வீட்டருகே சங்கீதா உணவகம் இருந்தது. மிகப்பெரிய, சென்னை முழுதும் ஏராளமான கிளைகளைக் கொண்ட உணவகம் அது.

அலுவலகத்தில் இரண்டாம் ஷிஃப்ட் முடித்துவிட்டு, வீடு வந்து சேர்ந்து, இழந்த தூக்கத்துக்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாகத் தூங்கி, அடுத்த நாள் காலை சிற்றுண்டி உண்ணாமல் நேரே மதிய சாப்பாட்டிற்காக இந்த சங்கீதா உணவகம் செல்வதும், அங்கு காஷ்மீரி புலாவ் ஆர்டர் செய்து முழுங்குவதும் என் பழக்கம்.

இதில் இன்னொரு சிறப்புண்டு. இந்த உணவகத்தில் அப்போதெல்லாம் காஷ்மீரி புலாவ் ஆர்டர் செய்தால் கூடவே ஒரு குலாப் ஜாமூனும் தருவார்கள். காஷ்மீரி புலாவ் திங்க கூலியா?

இப்படி காஷ்மீரி புலாவ் மீதான என் காதல் அதிகரித்துக் கொண்டேயிருக்க, துயரமிகு சம்பவமொன்று சமீபத்தில் நடந்தது. அது நடந்தது சாம்பாரில் கூட சிறிது வெல்லம் சேர்க்கும் வழக்கமுள்ள பெங்களூரில் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

எங்கள் பகுதியிலுள்ள தரமான சைவ உணவகம் அது. உள்ளே நுழைந்து ஒரு ஓரமான இடத்தில் உட்கார, மெனு கார்டை எடுத்து வந்து கொடுத்தார் சர்வர் ஒருவர்.

அதில் இருந்தவற்றை வேகமாக நோட்டம்விட்டு ஸ்கேன் செய்துகொண்டிருந்த என் கண்கள் காஷ்மீரி என்ற வார்த்தையைப் பார்த்ததும் மூளைக்கு சிக்னல் அனுப்பி என்னுள் ஒலியெழுப்ப, “ஒரு காஷ்மீரி புலாவ் என்று ஆர்டர் செய்து, எதிர்பார்ப்பில் காத்திருந்தேன்.

இருபது நிமிடங்களாகியும் அந்த காஷ்மீரி புலாவ் என்னை வந்து சேரவில்லை. காதலிக்காக பூங்காவில் யுகங்களாய் காத்துக் கொண்டிருக்கும் ஒரு காதலனைப் போல் எதிர்பார்ப்பில் தவித்தேன்.

இருபத்தைந்து நிமிட தாமதத்திற்குப் பிறகு என்னை வந்தடைந்தது காஷ்மீரி புலாவ். சர்வர் கையிலிருந்து அதை உடனே வாங்கி மேஜையில் வைத்து, ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்காதவனாய் அவசர அவசரமாக தட்டில் போட்டு சுவைத்தேன். சுனாமியே தாக்கியதுபோல் இருந்தது.

சுதாரித்துக் கொண்டு அந்த காஷ்மீரி புலாவைப் பார்த்தேன். நிலைகுலைந்தேன்.

பச்சை நிறத்தில், பாதி வேகாமல், பசைக்கு பதிலாக உபயோகிக்கக்கூடிய அளவுக்கு குழைந்து இருந்தது அந்த காஷ்மீரி புலாவ். சரி, பழங்களையாவது சாப்பிடலாம் என்று அதைக் கிளர ஆரம்பிக்க, உருளைக்கிழங்கு துண்டுகள் மட்டுமே கிடைத்தன.

தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து பின் ஏமாந்த குடிமகன் போல், டிரைலர் பிடித்துப்போய், உற்சாகமாக படத்துக்குச் சென்று பின் ஏமாந்த சினிமா ரசிகன் போல், ஏமாந்து போனேன். உலகமே என்னைப் பார்த்து கை கொட்டி சிரிப்பதுபோல் இருந்தது.

என் முகம் காட்டிய அபினயங்களைப் பார்த்து சர்வர் அங்கிருந்து தலைமறைவானார்.

ஆர்டர் செய்து வாங்கியாகிவிட்டது, மீதம் வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, மாத்திரைகளை முழுங்குவது போல் காஷ்மீரி புலாவ் உருண்டைகளை வாயில் போட்டு பின் கொஞ்சம் தண்ணீர் குடித்து முழுங்கினேன். இப்படி ஒரு வழியாக காலியும் செய்து விட்டேன்.

சார், வேறு ஏதாவது வேணுமா?” என்று சர்வர் என்னைக் கேட்க, “நீங்க இதுவரைக்கும் செஞ்சதே போதும், தயவு செஞ்சு பில் கொடுங்க என்றேன். சில நொடிகளில் பில் கொண்டு வந்து கொடுத்தார்.

பில்லைப் பார்த்தபோது, நான் என் அலட்சியத்தால் தவறவிட்டிருந்த விஷயம் என் கண்ணில் பட்டது.

நான் ஆர்டர் செய்திருந்த அந்த உணவு வகையின் பெயர் காஷ்மீரி புலாவ் அல்ல; ‘காஷ்மீரி பிரியாணியாம்.

கால் மனதோடு பில்லுக்கான தொகையை வைத்துவிட்டு கிளம்பியபோது, “இந்தியாவுல இருக்கற காஷ்மீரி புலாவ் கொடுங்கன்னு கேட்டா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருல இருந்து வந்த மாதிரி ஒரு பிரியாணியை கொடுத்துட்டீங்களே. என்னய்யா நீங்க, இப்படி பண்றீங்களேய்யா என்று வேதனையுடன் அழ ஆரம்பித்தது என் மனம்.

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

13-Aug-2018:

 

#இன்ஜினியர், #சாப்ட்வேர்_இன்ஜினியர்:

தலைப்பைப் படித்ததும் "Bond, James Bond” மாதிரி அதிரடி விஷயத்தைப் பற்றி சொல்லப் போகிறேன் என நினைக்க வேண்டாம்; இப்பதிவு சாப்ட்வேர் இன்ஜினியர்களைப் பற்றிய ஒன்று, அவ்வளவே.

பல ஆண்டுகளாகவே பலரது கிண்டலுக்கும், கேலிக்கும், ஏளனத்துக்கும் ஆளாவதில் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் என நினைக்கிறேன்.

"பெங்களூரில் சாலையில் கல்லெறிந்தால், அது தெருவிலுள்ள நாய் ஒன்றின் மேல் விழும், இல்லையென்றால் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் மேல் விழும்", "இரண்டு பிச்சைக்காரர்கள் ஒருவரையொருவர் சந்தித்தாலும், இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஒருவரையொருவர் சந்தித்தாலும் கேட்டுக்கொள்வது ஒரே விஷயம்தான் - எந்த பிளாட்பாரத்தில் வேலை செய்கிறாய்?" போன்ற புதுமொழிகள் ஏராளம்.

மேலும், எல்லா சாப்ட்வேர் இன்ஜினியர்களும் கை நிறைய சம்பாதிப்பவர்கள் போலவும், அதுவும் வேலையேதும் செய்யாமல், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலேயே சதா சர்வகாலமும் சுழன்றுகொண்டு இருந்துவிட்டு, மாதந்தோறும் பெரிய தொகை கையில் வாங்குகிறார்கள் என்கிற எண்ணம் பலருக்கிருக்கிறது.

இப்படி, உழைக்காமல், எளிதாக ஏகப்பட்ட சம்பளத்தை வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள், அவர்களால்தான் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயருகிறது என்றும், சிகரெட், வீட்டு வாடகை முதல், வீட்டு விலை, கார் விலை வரை, எல்லா பொருட்களும் விலை உயருகிறது என்றும் தூற்றுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள். இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

இந்தக் குற்றச்சாட்டில் சிறிதளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இள வயதிலேயே கணிசமான தொகை கைக்கு வருவதால், செலவு செய்வதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பும் இது நமக்கு நிச்சயம் தேவைதானா என்றெல்லாம் யோசிப்பத்தில்லை. நிறைய பேர் இப்படியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன்.

ஆனால் அதனாலேயே விலைவாசி, வீட்டு வாடகை போன்றவைகள் உயர்த்துவிடுகின்றன, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் காரணம் என்பதெல்லாம் அபத்தங்கள்.

சிலர், இதைவிட ஒரு படி மேலே சென்று, "உழைக்காமலேயே சம்பளம் வாங்குகிறவர்கள் இந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள்" என்று சொல்கிறார்கள். ஏன், பெங்களூரில் நான் ஒரு முறை ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது அந்த ஆட்டோ டிரைவரும் இதையேதான் சொன்னார்!

நிற்க.

கணினித் துறையில், வெறும் 3, 4 மணி நேரம் வேலை செய்துவிட்டு, அலுவலகத்திலுள்ள மற்ற நேரத்தில் சமூக வலைத்தளங்கள், Online Shopping போன்றவற்றில் மூழ்கியிருக்கும் பலர் இருக்கிறார்கள். இது எல்லாத்துறைகளுக்கும் பொதுவான ஒரு விஷயம். எல்லாத் துறைகளிலும், வேலை செய்யாமல், பொழுது போக்கிக்கொண்டு, நேர விரயம் செய்துகொண்டிருப்பவர்கள் இருப்பார்கள். அதனால், இது என்னவோ சாப்ட்வேர் இன்ஜினியர்களின் ரத்தத்திலேயே ஊரிப் போன ஒன்று, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எல்லோருமே இப்படித்தான் என்பதெல்லாம் too much.

பெரும்பாலான துறைகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டிய சூழல் இருப்பதில்லை. ஆனால், கணினித் துறையில் அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நேரம், காலம், பசி, தூக்கம் பார்க்காமல் உழைப்பவர்கள் கணினித் துறையில் ஏராளம்.

உடலை வருத்தி உழைப்பவர்கள் ஒரு விதம் என்றால், மனதை வருத்தி, மன அழுத்தத்தால் பலவித உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் சந்தித்து, அவற்றையெல்லாம் மீறி உழைப்பவர்கள் சாப்டவேர் இன்ஜினியர்கள்.

மற்ற துறைகளிலெல்லாம் அனுபவத்துக்கு தனி மதிப்புண்டு. பத்து ஆண்டுகளாக மருத்துவராக இருக்கிறார், பனிரெண்டு ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறார் என்றால் அவர்களுக்கான மரியாதை வேறு, அவர்களது அனுபவத்துக்கான மதிப்பு வேறு. அவர்களை Replace செய்வது கடினம். ஆனால் கணினித் துறையில் அப்படியெல்லாம் சொல்ல முடியாது.

ஒருவன், பத்து ஆண்டுகளாக ஒரு தொழில்நுட்பத்தில் வேலை செய்து, அதில் வல்லுனராக இருக்கலாம். பத்து ஆண்டுகள் அனுபவத்தோடு வரும் அவன் செய்யும் வேலையை, அவனை விட குறைந்த சம்பளத்தில் கிட்டத்தட்ட அதே அளவு, அதே தரமான வேலையை செய்யக்கூடிய, சில ஆண்டுகளே அனுபவமுள்ள வேறொருவன் கிடைத்தால் அவனை Select செய்துவிடுவார்கள்.

மேலும், அடுத்த நாளே வேறொரு தொழில்நுட்பம் வருமாயின், அதுவரை அவன் கற்றவைகள் எல்லாம் தேவைப்படாமல் போகலாம். மறுபடியும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும். எந்நேரமும் தன்னை Relevant-ஆக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயம் வேறு சில துறைகளில் இருந்தாலும், கணினித் துறையில் இருக்குமளவிற்கு இருக்காது என்றே நினைக்கிறேன்.

இவற்றையெல்லாம் விட ஒரு மிகப்பெரிய விஷயம் உள்ளது. Recession.

உலகச் சந்தையோ, உள்ளூர் சந்தையோ மங்கினால்.. அதுகூட தேவையில்லை.. ஏதாவது நிறுவனம் ஒன்று நஷ்டத்தில் இயங்கத் தொடங்கினால், முதலில் பலி கொடுக்கப்படுவது அந்த நிறுவனத்திலுள்ள கணினித்துறையைச் சேர்ந்தவர்களே.

எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் நீக்கலாம், யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்பதற்கு யூனியனோ, கூட்ட்டமைப்புச் சங்கமோ கூட கிடையாது.

இந்த விஷயங்களையெல்லாம் மக்களுக்கு எப்படித் தெரியப்படுத்துவது என்று தெரியவில்லை.

இதே நிலை தொடர்ந்தால், கணினி முன் உட்கார்ந்திருக்கும் ஒருவரின் புகைப்படத்தைப் போட்டுவிட்டு, "பணி நேரத்தில், அலுவலகத்தில், மற்றவர்களைப் போல சமூக வலைத்தளங்களைப் பார்க்காமல் உண்மையாக, நேர்மையாக வேலை செய்துகொண்டிருக்கும் இந்த சாப்டவேர் இன்ஜினியருக்கு எத்தனை லைக் போடுவீர்கள்" என்று சமூக வலைத்தளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏதாவது ஒரு புண்ணியாத்மா பதிவேற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அந்த நாள் வருவதற்குள் இந்த நிலை மாற வேண்டும். இதை மாற்றுவதற்காக, சமூக வலைத்தளங்களில் பொங்குவதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்பதுதான் ஆகச்சிறந்த Irony!

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

13-Jul-2018:

 

"உருப்படியா எழுதி ரொம்ப நாள் ஆச்சு" என்று நண்பன் ஒருவனிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது யாரோ என்னை அழைப்பதுபோல் இருந்தது. யாரென்று சுற்றிமுற்றிப் பார்த்தேன், யாரும்தென்படவில்லை. பிரமை என நினைத்துக்கொண்டேன்.

வீடு வந்து சேர்ந்ததும், "இந்த வாரமாவது எதைப்பற்றியாவது எழுதலாம்" என்று நினைத்தபோது மீண்டும் என்னை யாரோ அழைத்ததுபோல் இருந்தது. அருகில் யாருமே இல்லை.

 "வெளியே தேடாதே, உன்னுள்ளே தேடு" என்றது அக்குரல். பேசியது சாட்ஷாத் என் மனசாட்சிதான். வெகுநாட்களுக்குப் பிறகு மனசாட்சியுடன் பேசுவது விசித்திரமாய் இருந்தது.

"அப்பறம் மச்சி, வேலையெல்லாம் எப்படிப்போகுது?" என்று கேட்டேன் நான். "அதான் உனக்கே தெரியுமே. கடந்த 6, 7 மாதங்களாக ரொம்ப வேலைபோல" என்றது மனசாட்சி. ஆம் என்பதுபோல்  தலையசைக்க, மனசாட்சிக்குக் கண் இருக்குமோ, இருக்காதோ என நினைத்து "ஆமாம்" என்றேன்.

"எழுதுவதைப் பத்தி என்னவோ பேசினேபோல?" என்று கேட்டது மனசாட்சி.

"உருப்படியா எழுதி ரொம்ப நாள் ஆச்சு" என்றேன் நான்.

"நீ எழுதறதைப் படிச்சு யாராவது திருந்தியிருக்காங்களா? இல்லை, யாராவது முன்னேறியிருக்காங்களா?"

"இல்லை. ஏன் கேக்கறே?"

"அப்பறம் எப்படி 'உருப்படியா எழுதி'ன்னு சொல்றே?"

"இதான் உன் பிரச்சினையா? சரி விடு, 'எழுதி ரொம்ப நாள் ஆச்சு'ன்னு சொல்லிக்கறேன்"

"நீ எழுதறியா? டைப்தானே பண்றே? அப்பறம்ஏன் 'எழுதி'ன்னு சொல்றே?"

"சரி, அதையும் எடுத்துடறேன். 'ரொம்ப நாள் ஆச்சு'ன்னு சொல்லிக்கறேன். போதுமா?"

"என்ன செஞ்சு ரொம்ப நாள் ஆச்சு? எதைப்பத்தியும் சொல்லாம ரொம்ப நாள் ஆச்சுன்னுசொன்னா என்ன அர்த்தம்?"

பார்த்திபன், வடிவேலு நடித்த "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்ற வசனம் வரும் நகைச்சுவைக் காட்சி என் மனதுள் தோன்றியது.

"ஒண்ணுமே எழுதலை. போதுமா? நிம்மதியா?" என்று விரக்தியில் கேட்டேன்.

"ஒண்ணுமே எழுதாம இருந்தா, உன்னையே நம்பி இருக்கும் இந்த பேஸ்புக் உலகத்துக்கு என்ன செய்யப்போறே?"

"இத்தனை நாள் இவர்களுக்கெல்லாம் என்னசெஞ்சேன்?"

"ஒரு மண்ணும் இல்லை"

"அதேதான் இப்பவும். நீ கிளம்பு. எனக்கு வேலையிருக்கு" என்று என் மனசாட்சியைக்கழுவி ஊற்றி, கடுப்பேற்றி, கிளம்பிவிட்டேன். 'சைலன்ட் மோடு'க்குச் சென்றது மனசாட்சி.

அப்போது நண்பன் ஒருவனிடமிருந்து அலைபேசி அழைப்பு வர, அவனுடன் பேசினேன். முக்கியமான விஷயமொன்றைச்சொன்னான் அவன்.

சமீபத்தில் பணியிடமாற்றம் கிடைக்கப்பெற்று ஓசூரில் குடிபெயர்ந்தான் அவன். முதலாம் வகுப்பு படிக்கும் தன் மகனை ஏதாவதொரு நல்ல பள்ளியில் சேர்த்துவிடவேண்டும் என்று உறுதிபூண்டு, 'தவமாய் தவமிருந்து' ராஜ்கிரண் மாதிரி அலையோ அலை என அலைந்து, பலரும் பரிந்துரைத்த தனியார் பள்ளியொன்றில் தன் மகனைச் சேர்த்துவிட்டான். யாரோ ஒரு தொழிலதிபர் கொடுத்த சிபாரிசு கடிதம்பெரிதும் உதவியதாகச் சொன்னான்.

கட்டணம் எவ்வளவு தெரியுமா? 1 லட்சம். 1 வருடத்திற்கான கட்டணம்தான் இது. அதிர்ந்துபோனேன்.

ஆனால் இதைவிட பெரிய அதிர்ச்சியொன்றுகாத்திருந்தது எனக்கு.

அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, அதாவது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு C, C++, Java போன்ற நிரலாக்க மொழிகள் (Programming Languages) கற்றுக் கொடுப்பார்களாம். இது அவர்களது எதிர்காலத்துக்கு நல்லதாம்.

யாருடைய எதிர்காலத்துக்கு நல்லது என்பதுதான் புரியவில்லை. பள்ளி நிறுவனரின் எதிர்காலம் நன்றாக இருக்கும், அவ்வளவுதான்.

எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்கவே பயமாய் இருக்கிறது!

தாம் பணம் சம்பாதிக்கக் குழந்தைகளுக்கு என்னவெல்லாம் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்கள் இவர்கள்!

இது ஒருபுறம் இருக்கட்டும்.

உண்மையிலேயே குழந்தைகளுக்கு மென்பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கற்றுக்கொடுப்பது நல்லது என்றே வைத்துக்கொள்வோம். மென்பொருள் துறையில் இருக்கும் பெற்றோர்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தாலே பகீரென்றிருக்கிறது.

Client calls, timelines, quality, deadlines என எல்லாப் பக்கங்களிலிருந்தும் வரும் அம்புகளைச் சமாளித்துவிட்டு, நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் அலுத்துப்போய், எப்போது வீடு வந்து சேருவோம் என்று களைப்பாக வரும் பெற்றோர்களிடம், வந்தவுடனேயே, "அப்பா, அம்மா, எனக்கு இந்த C++ language-ல ஒரு சின்ன சந்தேகம் இருக்கு. Inheritance-கும் polymorphism-கும் என்ன வித்தியாசம்?", "Private-கும் protected-கும் என்ன வித்தியாசம்?", "Friend class-னா நம்ம பக்கத்துவீட்டு ராஜேஷ் படிக்கற 2A தானேம்மா?" என்று நிரலாக்க மொழிகளைப் பற்றி தங்கள் மழலை மொழியில் குழந்தைகள் கேட்டதும், "மறுபடியும் மொதல்லேர்ந்தா?" என்று மயங்கி விழப்போகும் பெற்றோர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

ஆகவே, மென்பொருள் துறையில் பணிபுரியும் பெற்றோர்களே, Java Complete Reference, C for Dummies போன்ற புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒருமுறை படித்து, தெளிவாகி, உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், "இதுகூட தெரியல. நீயெல்லாம் எப்படி office-ல வேலை செய்யறே?" என்று உங்கள் குழந்தைகளே உங்களை ஏளனம் செய்யக்கூடும்!

#பேருந்துப்_பயணங்களில்  #கனடா_குறிப்புகள்

 

 

 

06-Jun-2018:

 

திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கே அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டேன். இப்படி, நேரத்துக்குக் கிளம்புவது அரிதானதொரு விஷயமாக இருந்தாலும் பிடித்திருந்ததால் இன்று அப்படிச் செய்தேன்; சீக்கிரம் கிளம்பியது மட்டுமல்ல, முதுகும் பிடித்திருந்தது, அதனால்தான்.

பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தேன்.

வழியில், கிட்டத்தட்ட மூன்று மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து மூன்று நபர்கள் கீழே வேடிக்கை பார்த்துக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும், கை ஆட்டிக்கொண்டும், palமுப்பதிரண்டு பற்களும் வெளியே தெரியும்படி சிரித்துக்கொண்டும் இருந்தனர். அந்த மூவர் சிறியவர்களல்லர்; 24, 25 வயது இருக்கும் அவர்களுக்கு. கட்டிட வேலையில் இருப்பவர்கள் என நினைக்கிறேன்.

எந்த ஒரு கவலையும் இல்லாதபோது ஒருவனின் சிரிப்பு அவனது முகத்தை பிரகாசமாக்கும், மிக அழகாக்கும். அது மட்டுமல்லாமல் அப்படிப்பட்ட சிரிப்பை பார்ப்பவர்களுக்கும் அந்த ஒரு நொடி தங்களை மறந்து, நினைவு கலைந்து, காற்றில் பறப்பது போல் தோன்றும். மனம் லேசாகிவிடும். உலகத்தில் எந்த ஒரு கவலையும் இல்லாத ஒரே இனம் நாம்தான் என்பது போல் அந்த ஒரு நொடி இருக்கும்.

குழந்தைகளின் சிரிப்பு இப்படித்தான் இருக்கும். அதனால்தான் அவர்களை பேருந்துகளிலோ, ஷாப்பிங் மால்களிலோ, எங்கு கண்டாலும் சிரிக்க வைக்க ஏகப்பட்ட முயற்சிகளை செய்வோம். அப்படிப்பட்ட சிரிப்பில் நம் உலகத்தை தொலைப்போம்.

அந்த மூன்று நபர்களைக் கண்ட அந்த சில நொடிகளில் நான் அப்படித்தான் உணர்ந்தேன்.

அவர்களைக் கடந்து சென்று, அந்த மேம்பாலத்தை விட்டு இறங்கும்போதுதான் நிகழ்காலத்துக்கு வந்தேன். வழக்கம்போல் அலுவலகப் பணிகளைப் பற்றிய சிந்தனைகள் மீண்டும் என் மனதில் தோன்றின. சில நொடிகளில் என்னவொரு மாற்றம்!

என்னால் இப்போதெல்லாம் ஏன் அப்படி இருக்க முடிவதில்லை? எனக்கு மட்டும்தான் இப்படியா, இல்லை IT துறையில் இருக்கும் பெரும்பாலானோருக்கும் இப்படித்தான் இருக்குமா?

வேலைக்குச் சேர்ந்தது முதல் இன்று வரை நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தேன்.

2005-ல் வேலைக்குச் சேர்ந்தபோது இந்தத் துறையைப் பற்றியும் இதில் நடக்கும் அரசியல், போட்டி, மொள்ளமாரித்தனம் போன்றனவற்றைப் பற்றியும் அதிகம் தெரிந்திருக்கவில்லை. போதாக்குறைக்கு, கல்லூரியிலிருந்து நண்பர்கள் ஏராளமானோர் ஒரே நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்ததால் எந்நேரமும் கிண்டலும், கேலியும்தான். உண்மையான நண்பர்களுக்கு மத்தியில் இருக்கும்போது கவலைகளுக்கு ஏது நேரம்?

ஒன்றரை ஆண்டு முடித்தபின்பே இந்தத் துறையில் நடக்கும் அரசியல் பற்றிய விஷயங்கள் ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்தது. ஆனால், அப்படிச் செய்து என்ன கிடைக்கப்போகிறது அவர்களுக்கு என்பது மட்டும் எனக்கு புரியவில்லை. இன்று வரை.

இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக அந்த நிறுவனத்தில் இருந்துவிட்டு வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

இந்த நிறுவனத்தில் முதல் சில மாதங்கள் புதியதாக இருந்தது. போதாக்குறைக்கு தமிழர்களை தெலுங்குப்பட வில்லன்களைப்போல் பார்க்கும் பெங்களூரில் வேலை. மொழி தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு.. அப்பப்பா.. சென்னைத் தமிழில் சொன்னால், பேஜாராகிட்டேன்.

ஆனால் இந்த கொடுமைகள் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. அலுவலகத்தில் ஒரு குழு, ஒரு வட்டம் அமையும் வரைதான்.

வேலைக்குச் சேர்ந்து இரண்டு, மூன்று ஆண்டுகளில் 15 பேர் கொண்ட குழுவொன்று தெய்வாதீனமாய் அமைந்தது. கிட்டத்தட்ட என் முதல் நிறுவனத்தில் இருந்த நண்பர்கள் குழுவைப்போன்றேதான் இந்தக் குழுவும், ஆனால், உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தக்குழுவில் குறைவு, அவ்வளவே. எங்களைவிட பெரியவர்களும், சீனியர்களும் இருந்தாலும், எங்களுக்குள் எந்தவித பேதமுமின்றி நாங்கள் அனைவரும் கல்லூரி நண்பர்களைப் போலவே பழகி வந்தோம்.

ஊர் சுற்றுவதாகட்டும், ஊர் ஊராய்ச் சுற்றுவதாகட்டும், பெரும்பாலும் ஒன்றாகவே சென்றோம். இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரு முறை யாராவது ஒருவர் அவர் வீட்டுக்கு அழைப்பார்கள். அங்கு சென்று சாப்பிட்டு எடை ஏற்றிக்கொண்டு, வயிறு வலிக்க, தொண்டை கரகரக்கச் சிரித்து சாப்பிட்டதையெல்லாம் ஜீரணம் செய்துவிட்டு, கவலைகளையெல்லாம் மறந்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவோம். அடுத்த வாரம் யார் வீட்டில் சந்திக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அடுத்த நாளே ஆரம்பித்துவிடும்.

கல்லூரிக்காலத்தில், நான் 37 முறை சிடியில் பார்த்த ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில், ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று சாப்பிட்டுவிட்டு, ஜாலியாகப் பொழுதைக் கழித்துவிட்டு வருவதைப் போன்றே இருந்தது அந்த சில ஆண்டுகள்.

இப்படியே மூன்று ஆண்டுகள் கழிந்தன. என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் அவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த குழுவில் இருந்த சிலர் பணி நிமித்தம் காரணமாக வேறு ஊர்களுக்குச் சென்றனர். இன்னொருவர் வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இப்படி அந்த குழு சிறுகத் தேய்ந்தது. போதாக்குறைக்கு நானும் வேறொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். தேய்பிறையானாலும், வளர்பிறையானாலும் நிலவு நிரந்தரமானது என்பதுபோல் எங்கள் குழுவின் பிணைப்பு இன்றும் உள்ளது. ஒரே ஒரு குறைதான், முன்புபோல் இப்போது அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடிவதில்லை.

அடுத்து இப்போதைய நிலைக்கு வருவோம்.

இந்த நிறுவனத்தில் மேனேஜர் பதவி, அதிகாரம் எல்லாம் உண்டு எனக்கு. திரைப்படத்துறையில் புதியதாக நுழைந்து சாதித்துள்ள ஒருவனுக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்ததுபோல் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. ஒரே ஒரு குறைதான், இன்னும் நண்பர் வட்டம் அமையவில்லை. அமைவதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவு என்றே தோன்றுகிறது.

இத்தனை வருடங்கள் இந்தத்துறையில் இருப்பதாலும் கார்ப்பரேட் ஏணியில் மேலே உயர்ந்துள்ளதாலும், மேலே நடக்கும் அரசியலும், சரிசம நிலையில் நடக்கும் அரசியலும் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

காலை வாரப்பார்க்கிறார்களை, அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக்கிடப்பவர்களைக் கண்டுகொண்டேன். அதனாலேயே முன்புபோல் சாதாரணமாகப் பழக முடிவதில்லை. இயல்பை ஒளித்து மறைத்துவைத்து செயற்கையாய் பழகவேண்டிய நிர்பந்தம். என்னைபோல் ஏராளமானோர் இருந்திருப்பார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

மேலே உயர உயர, தனிமையாக இருக்கும் என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு - “It’s lonely at the top”. இது இப்போதுதான் எனக்கு புரிந்தது.

உத்தியோக உயர்வு வர பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால் வேலை அதிகம், நேரம் குறைவு. நண்பர்களிடம் முன்புபோல் எல்லாவற்றையும் மறந்து அரட்டையடிக்க, விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அலுவலகத்தில் நம்முடன் பணிபுரியும் எல்லோருமே நம் நண்பர்களைப்போல் இருக்கமாட்டார்கள்.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அந்த இனிமையான தருணங்கள் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவது இயற்கையோ!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த விஷயம் அலுவலகத்தில் மட்டுமல்ல, எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் என்றே தோன்றுகிறது.

பிறக்கும்போது இருவர் மட்டுமே நம்முடன் இருப்பார்கள் அம்மா, அப்பா. அவர்கள் நம் உலகம், அவர்களுக்கு நாம்தான் உலகம். இந்த உலகத்தில் ஒரு சிறு துளிராய் முளைத்திருப்போம்.

வளர வளர, சொந்தபந்தங்கள் பற்றி தெரியவரும், சிலருடன் நெருக்கமாகப் பழகுவோம். செடிபோல் வளர்ந்திருப்போம்.

பள்ளியில் சேர்ந்தபின்பு நண்பர்கள் அறிமுகமாவார்கள். நட்பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.

உயர்கல்வி படிக்கும்போது நண்பர்கள் வட்டம் பெரியதாக இருக்கும். நட்பு மரமாகி காய்க்க ஆரம்பித்திருக்கும்.

கல்லூரியில் இன்னும் அதிகமாக இருக்கும். இந்தப் பருவத்தில் நட்பு என்பது செழித்து வளர்ந்துள்ள ஓர் மரம்போல் இருக்கும். பெற்றோர்களும் நண்பர்களாவார்கள். உலகத்திலேயே நண்பர்களைப் போல் யாருமில்லை என்பதுபோல் தோன்றும்.

இப்படி படிப்படியாக நம் நண்பர்கள் எண்ணிக்கை, நம்முடன் தங்கள் நேரத்தை, தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

வலை வீசித் தேடினாலும் கவலையென்பது கிடைக்கவே கிடைக்காது.

வேலைக்குச் சேர்ந்தவுடன் இந்த வட்டத்தில் உள்ளவர்களிடம் முன்புபோல் தொடர்பு வைத்துக்கொள்வது குறையத் தொடங்கும்.

பின், திருமணம், குழந்தைகள்... இப்படி படிப்படியாக நமக்கு முக்கியமான விஷயங்கள், உறவுகள் என்பது மாறிக்கொண்டே வரும். நட்பென்னும் மரத்தின் இலைகள் எல்லாம் படிப்படியாக உதிர்வது போல.

கடைசியில், நம் முதுமையின்போது நமக்குத் துணையாக ஒருவர்தான் இருப்பார். நாம் பிறக்கும்போதாவது இருவர் இருந்தார்கள், முதுமையில் அதுவும்கூட குறைந்துவிடும்.

கிட்டத்தட்ட ஒரு பட்ட மரம் போல.

இந்த விதிக்கு சில விதிவிலக்குகள் இருந்தாலும், பெரும்பாலானோர் வாழ்க்கையில் இதுதான் நிதர்சனம் என்றே நினைக்கிறேன்.

இந்த விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது என் மேனேஜரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர, மீண்டும் நிகழ்கால, நிதர்சன உலகத்துக்கு வந்தேன்.

இதிலிருந்து எத்தனை பேரால் தப்பித்துவிட முடியும்?

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

22-Mar-2018:

 

இன்று உலக தண்ணீர் தினமாம். பேஸ்புக் முழுவதும் தண்ணீர் சேமிப்போம், “மழை நீர் சேமிப்போம் போன்ற வாசகங்கள் காணக்கிடைத்தன. மகிழ்ச்சி.

இந்தியா வந்திருந்தபோது பல நகரங்களுக்குப் பயணம் செய்தேன்.

வேலூர் பாலாறு வறண்டுகிடக்கிறது. பல ஆண்டுகளாக இதே நிலைதான்.

கரூர் அமராவதி ஆறு கேட்பாறற்று கிடக்கிறது. மணல் லாரிகள் சாரை சாரையாக ஓடிக்கொண்டிருந்தன.

திருச்சி காவிரி காலியாக இருந்தது. வழக்கம்போல் கர்நாடகாவிடம் இந்த ஆண்டும் சண்டை போடப்போகிறோம், அவர்களும் தரமாட்டோம் என்றுதான் சொல்லப்போகிறார்கள்.

கோவில் தெப்பக்குளத்தில் ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள் சிறுவர்கள்.

பெங்களூர் எங்கள் வீட்டின் பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு சின்ன ஏரி தென்படும். அதில் துளி நீர்கூட இல்லை.

--------------

வேலூரில் பாலாறு என்பது வெறும் பெயரளவில்தான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த கனமழையால் ஆற்றில் கொஞ்சம் நீர் ஓட, அப்போது அதைக் காணக் குவிந்தனர் மக்கள்.

ஆற்றுப்பாலத்தில் ஏகப்பட்ட கூட்டம். பலூன், சுண்டல், மாங்காய் என்று மெரினா கடற்கரை அளவுக்கு ஜோ ஜோவென இருந்தது. கண்கொள்ளாக் காட்சி. அடுத்து எப்போது இந்த மாதிரி ஒரு காட்சி காணக்கிடைக்குமோ என்ற ஏக்கம் அங்கிருந்த அனைவரது மனதிலும் எழுந்திருக்கும்.

வேலூரில் பிறந்து வளர்ந்த நான், இதுவரை 7, 8 முறைதான் பாலாற்றில் நீர் பார்த்திருக்கிறேன். நண்பர்களைப் பார்க்கும்போதெல்லாம் பாலாற்றில் நீர் இருக்கிறதா?” என்று ஆர்வத்துடன் கேட்க, அவர்கள் வழக்கம்போல் இல்லை என்று சொல்ல, நான் ஏமாற்றமடைய.. இதுவே வழக்கமாய் இருந்தது சில ஆண்டுகள் முன்புவரை. இப்போதெல்லாம் இதில் ஒரே வித்தியாசம். ஏமாற்றம் என்பது மறைந்துவிட்டது.

பெயரளவில் மட்டும்தான் ஆறு என்றிருக்கும், மற்றபடி நீர் இருக்காது என்று மனதை சில ஆண்டுகளுக்கு முன்பு சமாதானப்படுத்திக்கொண்டேன். ஏமாற்றம் பழகிவிட்டது.

--------------

சில ஆண்டுகளுக்கு முன்பு கரூருக்குச் சென்றிருந்தபோது, அமராவதி ஆற்றுப்பாலத்திலிருந்து பார்த்தபோது, ஆற்றில் சில இடங்களில் சிறு குட்டை அளவு நீர் இருந்தது. ஆற்றில் வெறும் மணலையே பார்த்துப் பழகியிருந்த எனக்கு இந்தக் காட்சி புத்துணர்ச்சி தரக்கூடியதாய் இருந்தது.

இந்த முறையும் ஆற்றில் நீர் இருக்குமோ என்ற நப்பாசை எனக்குள் எட்டிப்பார்க்க, அமராவதி ஆற்றுப்பாலத்திலிருந்து நான் எட்டிப்பார்க்க, மறுபடியும் ஏமாற்றமே மிஞ்சியது.

பட்டப்பகலில் லாரிகள் மணலை வாரி விழுங்கிக்கொண்டிருந்தன. அவற்றுக்குத் தெரியுமோ தெரியாதோ, விழுங்கிக்கொண்டிருப்பது பல உயிர்களை என.

--------------

திருச்சி ஒரு கந்தக பூமி. காவிரி ஆற்றுப்படுகையில் நீர் இல்லாததால் உஷ்ணம் அதிகமாய் இருக்கும். பெரும்பாலும் காவிரி ஆற்றுப்படுகை காலியாய் இருக்கும். அதிகபட்ச மணல் கொள்ளை இங்குதான் நடப்பதாகக் கேள்வி.

இந்த முறை திருச்சி சென்றிருந்தபோது, காவிரியில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்க ஆவல் இல்லை எனக்கு. எப்படியும் இருக்கப்போவதில்லை என்று நான் என் மனதைத் தயார்படுத்தியிருந்தேன்.

சென்ற வாரம் ஒரு கால் டாக்சியில் சென்றுகொண்டிருந்தபோது, அதன் ஓட்டுனரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 60 வயது இருக்கும் அவருக்கு. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை சகிதம் இருந்தார்.

முகத்தில் வெள்ளை தாடி, நெற்றியில் திருநீற்றுப்பட்டை, அதற்கு மேல் 50 காசு நாணயம் அளவுக்கு குங்குமப்பொட்டு.

திருச்சியருகே உள்ள ஏதோவொரு கிராமம்தான் அவரது சொந்த ஊர். கிராமத்தின் பெயர் நினைவில் இல்லை. அங்கு விவசாயம் செய்துவந்து, அதில் நஷ்டம் ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்புதான் டாக்ஸி ஓட்டுனராக மாறியிருக்கிறார். கேட்டதும் ஏதோ ஒரு சின்ன உறுத்தல் எனக்கு,

700 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்றார் அவர். விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாத காரணத்தினால் இந்த முறை அறுப்பு வேலைகளும் நடக்கவில்லை. நட்டால்தானே அறுப்பதற்கு!

விவசாய நிலங்களை ப்ளாட் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்களாம் அவருக்குத் தெரிந்த பல விவசாயிகள்.

தண்ணி இல்லாம விவசாயம் பண்ணமுடியாது. விவசாயம் பண்ணாம எங்களுக்குக் காசு கிடைக்காது. காசில்லாம நாங்க எப்படி சார் சாப்பிடுறது?” என்று அவர் என்னைப் பார்த்து கேட்டபோது நொந்துபோனேன். என் ஒருவனால் என்ன செய்துவிட முடியும்?

எப்படியும் இந்த ஆண்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுடன் சண்டை போடப்போகிறோம். அவர்களும் ஒரு சொட்டு நீர்கூட தரமுடியாது என்பார்கள்.

எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை நீ கொடுத்தே ஆகவேண்டும் என்று முறுக்கிக்கொண்டு நீதிமன்றத்தை நாடுவோம்.

நாங்கள் விடுகின்ற உபரி நீரைச் சேமித்துவைக்க வக்கில்லை, நியாயத்தைப் பற்றி பேசுகிறாயா?” என்று அவர்கள் நம்மை ஏசுவார்கள். செய்வதறியாமல் கிடப்போம்.

இதுவும் பழகிப்போன ஒரு விஷயம்தான்.

--------------

பெங்களூர் செல்கின்ற வழியில் கிருஷ்ணகிரி ஓசூர் இடையே உள்ள ஏரி ஒன்றில் நீர் ஓரளவுக்கு இருந்தது. அதைப் பார்த்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது. அந்த இடத்தைக் கடந்தபோது மனமும் குளிர்ந்தது.

பரவாயில்லையே, பெங்களூரில் இந்த ஆண்டு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது போலிருக்கிறதே என்ற நினைப்பில், என் மனம் லேசாகப் பறக்க ஆரம்பித்தது. எங்கள் வீட்டு பால்கனிக்கு வந்ததும், தடாலென கீழே விழுந்தது என் மனம். நிகழ்காலத்துக்கு வந்தேன்.

எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு சின்ன ஏரி, அதற்குப் பக்கத்தில், இரு பக்கங்களும் மரங்கள் கொண்ட ஒரு சிறு பாதை, அதற்குப் பக்கத்தில் ஒரு சுடுகாடு.. இவையெல்லாம் தென்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி நிரம்பியிருந்தது. இரவு நேரத்தில், மொட்டை மாடிக்குச் சென்று அந்த ஏரியைப் பார்த்தபடி, குளிர் காற்றை அனுபவித்தபடி எத்தனையோ மணி நேரங்களைக் கடத்தியிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் ஏரியில் நீர் அளவு குறைந்துகொண்டே வந்தது. அந்த ஏரியில் இப்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை!

தண்ணீர் இல்லாத ஏரியையும், பக்கத்தில் இருந்த சுடுகாட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை.

--------------

ஓசூரிலிருந்து வரத்தூர் வழியாகத்தான் எங்கள் வீட்டுக்குச் சென்றோம். வரத்தூரில் ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த முறை வந்தபோது வரத்தூர் ஏரியில் நீர் நிரம்பியிருந்ததைக் கண்ட எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

கார் கண்ணாடியை இறக்கி, முகத்தை வெளியே நீட்டி, கண்களை மூடி, அந்தக் காற்றை உள்வாங்கி ஆனந்தத்தில் இருந்தபோது திடீரென பஞ்சு போன்ற ஏதோ ஒன்று என் முகத்தில் பட்டது. என்ன அது என்று பார்த்தபோது அதிர்ந்துபோனேன்.

ரசாயனக்கழிவுகள் அந்த ஏரி நீரில் கலந்து, நுரை பொங்கி வழிந்துகொண்டிருந்தது. காற்று கொஞ்சம் பலமாக வீசினால் பறந்து சாலைக்கு வந்துவிடுகிறது நுரை.

விஷத்தை உட்கொண்ட மனிதனின் வாயிலிருந்து நுரை வந்தால் அவனது உயிருக்கு ஆபத்து என்று பொருள். விஷப் பொருட்கள் கலக்கப்பட்ட ஆற்றின் வாயிலிருந்து நுரை வந்தால், அதனைச் சார்ந்திருப்பவர்களின், அதன் சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களின் உயிர்களுக்கு ஆபத்து என்று பொருள்.

ஆண்டுதோறும் நிலைமை மோசமாகிக்கொண்டேதான் இருக்கிறது. தீர்வுதான் என்ன? தெரியவில்லை.

அதனால் என்ன? நாம் வழக்கம்போல் பேஸ்புக்கில் தண்ணீர் சேமிப்போம், “மழை நீர் சேமிப்போம் போன்ற வாசகங்களைப் பகிர்வோம், வாருங்கள்!

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்! #Rewind

 

 

 

02-Mar-2018:

 

மான்ட்ரியல் நகரம் அமைந்திருக்கும் கியூபெக் மாகாணம் ப்ரெஞ்சு மொழியை ஆட்சிமொழியாய்க் கொண்ட ஒன்று. இங்கு அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், ப்ரெஞ்சு மொழிதான் பிரதானம்.

கனடா வந்த புதிதில் அலுவலகத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, "வெங்கட்" என்று என் பெயரைச் சுருக்கிச் சொன்னதும், இங்கிருக்கும் இந்த ஊர்க்காரர்கள், ப்ரெஞ்சுமொழி அறிந்தவர்கள் ஒரு சிறு புன்னகை உதிர்ப்பார்கள். அதற்கான பொருள் எனக்கு அப்போதெல்லாம் தெரியாது.

சில நாட்களுக்குப் பிறகு ஒருவரிடம் இதைப் பற்றி பேசும்போது அவர் விளக்கினார். வெங்கட் என்பதற்கு ப்ரெஞ்சு மொழியில் இருபத்தி நான்கு (24) என்று பொருளாம். ஒரு அன்னிய மொழியின் ஒரு வார்த்தையை எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் அறிந்துகொண்டேன்.

என் முழுப்பெயர் வெங்கடசுப்பிரமணியன் என்று சொன்னால் அது ஏதோ இருபத்து நான்கு கோடியே.. என்று ஆரம்பித்துவிடப்போகிறார்கள், பெயரைச் சொல்வதற்கே, அதன் ஸ்பெல்லிங்கைச் சொல்வதற்கே ஒரு மணி நேரமாகும் நிலையில் பெயருக்கான மொழிபெயர்ப்பு எல்லாம் இண்டர்வல் விட்டு தெரிந்துகொள்ள வேண்டியிருக்கப்போகிறது என்றெண்ணி விட்டுவிட்டேன்.

இன்று காலை லண்டனிலிருந்து இந்தியா வந்த விமானத்தை ஓட்டிக்கொண்டு வந்தவரின் பெயர் சமோவா. அதை அவர் அறிவித்ததும் மனதுக்குள், “ஏன்றா சம்முவம், வண்டிய அடிச்சு ஓட்டுறா. கண்ட இடத்துல நிக்காம, வெரசா வண்டிய ஓட்டுறா என்று 'நாட்டாமை விஜயகுமார்போல் மனதுக்குள் சொல்லி சிரித்துக்கொண்டேன்.

இந்தமாதிரி மொழி விளையாட்டுகள் சில நேரங்களில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மான்ட்ரியலில் கடந்த சில வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ப்ரெஞ்சு நாடகத்தின் பெயர் “Moodavie”. அதாவது, “மூதேவி.

அந்தத் தயாரிப்பாளருக்குத் தமிழ் தெரிந்திருந்தால் ஒருவேளை இந்தத் தலைப்பை ஏற்றிருக்கமாட்டாரோ என்னவோ 🙂

அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் “CITRYNBAUM”. இதையே தமிழில் சொல்லிப்பாருங்கள் – “சிற்றின்பம்.. அடடே, இதற்கெல்லாம்கூட இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கிறதா! 😉

எங்கள் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கின்போது மொழிகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்த மீட்டிங்கில் நான், உடன் பணியாற்றும், இந்தியை தேசியமொழியாகக் கருதும் வட இந்தியன் ஒருவன், ஒரு ப்ரெஞ்சுக்காரர், மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆகிய நால்வரும் இருந்தோம்.

அப்போது அந்த ப்ரெஞ்சுகாரர் என் பெயரின் பொருளைக் கேட்க, நான் ஒரு சின்ன கதாகாலட்சேபம் அரங்கேற்றினேன்.

வெங்கட் - காக்கும் கடவுளின் பெயர்.

சுப்பிரமணியன் அழிக்கும் கடவுளின் மகனின் பெயர்.

இதைச் சொன்னதும் அந்த ப்ரெஞ்சுக்காரருக்குச் சில ஐயங்கள் எழுந்தன.

கடவுளின் பெயரை மனிதர்களுக்குச் சூட்டுவார்களா?” என்று கேட்டார்.

இதெல்லாம் எங்கள் நாட்டில் சர்வ சாதாரணம் என்றேன் நான்.

கடவுளின் பெயரை மனிதர்களுக்குச் சூட்டும் பழக்கம் நான் அறிந்ததில்லை. அநேகமாக இது உங்கள் நாட்டில் மட்டும்தான் இருக்கும் பழக்கம் என நினைக்கிறேன்

அப்படியில்லை. இது ஐரோப்பாவிலும் உள்ள ஒரு பழக்கம். உதாரணத்திற்கு, ஸ்பெயின் நாட்டில், அந்த மொழியை ஆட்சிமொழியாகக் கொண்டுள்ள சில தென் அமெரிக்க நாடுகளில் ஜீஸஸ் என்று பெயரைக் கொண்ட ஏராளமானோர் இருக்கிறார்கள். எத்தனையோ கால்பந்து வீரர்களின் பெயர்கள் ஜீஸஸ் என்று தொடங்கும், என்றேன்.

அப்போது அங்கிருந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர், “ஆம், எங்கள் மொழியில் நாங்கள் அச்சொல்லை யேசுஸ் என்போம் என்றார்.

அடுத்த கேள்விக்குத் தாவினார் ப்ரெஞ்சுக்காரர்.

 அழிக்கும் கடவுளின் பெயரையும் மக்களுக்குச் சூட்டலாமா?”

தீயவற்றை அழிப்பவரின் மகனின் பெயர் அது. தீயவர்கள்தான் இந்தப் பெயரைக் கேட்டதும் அச்சப்பட வேண்டும். நீங்கள் எப்படி?” என்று நான் கேட்க, புன்னகைத்தார் அவர்.

இதேமாதிரி என்னுடனிருந்த அந்த வட இந்தியனின் பெயரின் பொருளைக் கேட்க, அவன் அதை விளக்கினான்.

கடைசியில் கேட்டாரே பார்க்கலாம், கேள்விகளுக்கெல்லாம் தலையாய கேள்வியை.

உங்கள் நாட்டில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? ஏதற்காக இத்தனை கடவுள்கள்?”

இந்தியைத் தேசியமொழியாக எண்ணும் அந்த வட இந்தியன் இதற்கு விடை அளிப்பான் என்று நான் அம்மா வரட்டும்னு காத்திருந்தோம் புகழ் நாஞ்சிலார் மாதிரி காத்துக்கொண்டிருக்க, அவனோ, “தெரியவில்லை. இப்படியேதான் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவருகிறது என்றான்.

இந்தியைத்தான் படித்திருக்கிறானே தவிர, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி, வழிபாட்டுமுறை பற்றி படித்திருக்கவில்லைபோலும் அவன்.

குறுக்கிட்டேன்.

உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு தகப்பன். உங்களைப் பெற்றோர்களுக்கு நீங்கள் ஒரு மகன். சகோதரருக்குச் சகோதரர். அலுவலகத்தில் உங்களுடன் பணியாற்றும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Colleague. உங்களிடம் ரிபோர்ட் செய்பவர்களுக்கு நீங்கள் லீடர், மேனேஜர். இப்படி ஏகப்பட்ட பதவிகளை, பெயர்களைக் கொண்டவர் நீங்கள் ஒருவர்

மேலும் தொடர்ந்தேன்.

இறைசக்தி ஒன்றுதான். ஆயினும் அது பல பரிமானங்களில் வெளிப்படுகிறது. அதை நாங்கள் வெவ்வேறு பெயர்கொண்டு விளிக்கிறோம். படைக்கும் கடவுளை பிரம்மா என்றும், காக்கும் கடவுளை விஷ்ணு என்றும், தீயவற்றை அழிக்கும் கடவுளை சிவன் என்றும் சொல்கிறோம். ஒரு மனிதருக்கே இத்தனை ரோல்கள், பதவிகள், அவற்றிற்கான பெயர்கள் இருக்கும்போது, கடவுளுக்கு இருக்கக்கூடாதா, இருக்கமுடியாதா என்ன?” என்று அறிவா, ஆன்மீகமா பட்டிமன்றத்தில் சொல்வதுபோல் சொல்லி முடிக்கும்போது, விஷயம் புரிந்ததுபோல் தன் சொட்டை மண்டையை ஆட்டினார் அவர்.

உங்களுக்கு விளக்கஞ்சொல்லியே என் நேரம் விரயமாகுதே, ஈஸ்வரா என்று மனதுக்குள் எண்ணிக்கொள்ள, “சரி, மீட்டிங் அஜண்டாவைப் பற்றிப் பேசுவோம் என்றார்.

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

#Rewind!

 

 

 

30-Jan-2018:

 

பெங்களூரில் வருமான வரி தாக்கல் செய்த சிறு தொழிலதிபர், அதுவும் சுய தொழில் செய்தவர், அதிரடியாய்க் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் யார் தெரியுமா?

இயற்கை முறையில் விவசாயம் செய்து விளைவித்த பொருட்களை விற்று வந்தவர் அவர்.

அதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது வாழ்விலும் மகிழ்ச்சி துளிர்க்கச் செய்தவர்.

பல லகரங்களில், கோடிகளில் சம்பாதித்தாலும் வாடகை வீட்டில் வாழ்ந்து எளிமையென்னும் சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர், வருமான வரிப் படிவங்களில் 40 லட்சம் வருமானம் காட்டி அதன்மூலம் வசமாக மாட்டிக்கொண்டார்.  இந்த உத்தமர் யார் தெரியுமா?

'சப்ஜெக்ட்' வேறு யாருமில்லை. பெங்களூரில் கஞ்சா விற்கும் தொழில் புரிந்து வந்த ஒருவர்!

பெங்களூர் சந்தாபூரா பகுதியைச் சேர்ந்தவர் ராச்சப்பா. கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு புலம்பெயர்ந்தவர். 2013-ம் ஆண்டு கஞ்சா விற்க ஆரம்பிக்க, அதன்மூலம் வந்த வருமானத்தைப் பார்த்து அதை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்றெண்ணி சில பல இளைஞர்களைக் கூட்டுசேர்த்து பிசினஸை வளர்த்து கோடிகளில் புரள ஆரம்பித்தார்.

என்ன தோன்றியதோ, தெரியவில்லை. இந்த ஆண்டு பதிவு செய்த வருமான வரிப் படிவங்களில் 40 லட்ச ரூபாயை வருமானமாகக் காட்டியதால் அதிகாரிகளுக்கு சந்தேகம் தோன்ற, அவர்களை காவல்துறையினரைத் தொடர்புகொண்டு, ராச்சாப்பாமேல் ஒரு கண் வைக்கச்

சொல்லியிருந்தனர்.

இந்நிலையில் ராச்சப்பாவும் அவரது கூட்டாளிகளும் ஏதோவொரு ஹோட்டலுக்கு வருவதுதொடர்பான தகவல் காவல்துறையினருக்குத் தெரியவர, அவர்களைச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். சாத்தப்பாவின் கூட்டாளிகளில் ஒருவரான கஞ்சா சப்பிளையர் அங்கிருந்து தப்பித்துஓடிவிட்டார்.

எய்தவன் தப்பித்துவிட, அம்பு பிடிபட்டுவிட்டது!

இத்தனை ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையுமின்றி இயங்கி வந்தவர்,

யாரிடமும் சிக்காமல் சீராக இருந்த வந்தவர்,

கோடிக்கணக்கானவர்கள் வருமான வரியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரி கட்டாமல் ரோடு சரியில்லை, விலைவாசி அதிகம் என்று போராட்டம் செய்து பிழைப்பை ஒட்டிக்கொண்டு ஜாலியாக இருக்கும்போது,

நேர்மையாக இருக்கலாம் என தவறாக நினைத்து வருமான வரி தாக்கல் செய்யப்போய் சிக்கிக்கொண்டுவிட்டார், பாவம்! பிழைக்கத் தெரியாதவர்! இந்த விபரீத யோசனையை யார் கொடுத்தாரோ!

அவரிடம் இருந்த பணத்தில் சொற்பத்தை எடுத்து விட்டெறிந்து கனடா நாட்டு நிரந்தர குடியுரிமை வாங்கி கனடா வந்திருந்தால் இங்கு அவரைக் கொண்டாடியிருப்பர். ஏனென்றால் இங்கு கஞ்சா வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை.

மேலும், அவர் நம்மூரில் செய்ததுபோல், கனடாவில் சில ஆட்களுக்கு கஞ்சா விற்கும் வேலை போட்டுக்கொடுத்திருந்தால் அவர் ஒரு தொழிலதிபராகியிருப்பார். அதாவது job creator, entrepreneur. கனடாவுக்குதான் நஷ்டம்! பாவம் அவர்!

உள்ளத்தில் நல்ல உள்ளம், உள்ளே போகவேண்டும் என்பது வல்லவன் வகுத்ததடா!

News:

https://timesofindia.indiatimes.com/city/bengaluru/drug-peddler-files-i-t-returns-for-rs-40-lakh-lands-in-police-net/articleshow/62702561.cms

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

26-Jan-2018:

 

கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கும் அந்த அழகான நகரில் அந்நாட்டின் 7 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான அந்நகரின் வருவாயின் பிரதான பகுதி, வணிகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலமாக வருகிறது.

தற்போது அந்நகரில் கடுமையான, மிகக்கொடுமையான தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது!

இந்த மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு விஞ்ஞானிகள் சொல்கின்ற காரணங்கள்:

1. 1994-ம் ஆண்டு மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இப்போதுள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகம். ஆனால், கட்டமைப்பு வசதிகளோ அந்த அளவுக்கு முன்னேறவில்லை.

2. மேலும், அந்நகர், தண்ணீர்ப் பற்றாக்குறையை ஏற்கனவே பலமுறை சந்தித்துள்ளது. இருந்தாலும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

3. உலக வெப்பமயமாக்கல்.

அந்நகரில் நிலவும் வறட்சியின் காரணமாக, அங்குள்ள பெரும்பாலான குழாய்கள் தண்ணீர் வராத காரணத்தால் மூடப்படவிருக்கிருக்கும் நாளை – Day Zero என்று அழைக்கப்படுகிற அந்த நாளை - எதிர்நோக்கியிருக்கிறது அந்நகரம்.

இக்காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். நமக்குத்தான் இது கற்பனையே தவிர, அந்நகரில் இருப்பவர்களுக்கு இது நிதர்சனம்.

நகரின் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிடிப்பதற்காக இரு வரிசைகளில் நிற்கிறார்கள் மக்கள், தங்கள் கைகளில் தண்ணீர்க் கேன்களையும், பாட்டில்களையும் சுமந்தபடி.

ஒன்று பொது வரிசை, இன்னொன்று விரைவு வரிசை.

பொது வரிசையில் 25 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். விரைவு வரிசையில் 15 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். அதற்கு மேலே பிடித்துக்கொள்ள முயற்சி செய்தால் தண்டிக்க, ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், குழாய்களுக்குப் பக்கத்திலேயே!

"இந்தமாதிரியான நாள் வரப்போவதில்லை என்று நினைத்திருந்தனர். இப்போது நடந்தேவிட்டது" என்கிறார் வரிசையில் நிற்கிற ஒருவர்!

"தண்ணீரை வீணாக்காதீர்கள், பொறுப்புடன் உபயோகியுங்கள் என்று மக்களிடம் சொல்லி எந்தப் பயனுமில்லை. தேவைக்கதிகமான நீரைப் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று அந்நகரின் மேயர் அறிவித்திருக்கிறார்.

----

ஒரு நபருக்கு 87 லிட்டர் தண்ணீர் என்பது இப்போதைக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற உச்ச வரம்பு. பிப்ரவரி 1-ம் தேதி முதல் இது 50 லிட்டராகக் குறைக்கப்படவிருக்கிறது.

மழை வந்தாலோ, அல்லது தண்ணீர் ரேஷன் சரியாக செயல்படுத்தப்பட்டாலோ நிலைமை முன்னேறலாம் என்று சிலர் நம்புகின்றனர். அப்படியேதும் நிகழாதபட்சத்தில், தற்போது நிலவுகிற தண்ணீர்ப் பஞ்சம் சரியாகாமல் இப்படியே தொடர்ந்தால் Day Zero ஏப்ரல் 12-ம் தேதியன்று வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வேளை அவர்கள் பயந்ததுபோலவே Day Zero வந்தால், மக்கள் அனைவரும் தினமும் தண்ணீர் சேகரிப்பு நிலையத்துக்குச் சென்று 25 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம்.

சுருக்கமாகச் சொன்னால் 'தண்ணீர் ரேஷன்'. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு வாங்குவதுபோல் தண்ணீர் வாங்கவேண்டி வரலாம்!

மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் இதனால் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்று நம்பப்படுகிறது (அவற்றின் முக்கியத்துவத்தைக் கருதி).

நகரின் முக்கியமான பகுதிகளில் நடைபெறுகிற வணிகத்தையும், சுற்றுலாத்துறையையும் கருத்தில்கொண்டு, அவற்றின்மூலம் வருகிற வருவாயைக் கருத்தில்கொண்டு, அப்பகுதிகளுக்குத் தண்ணீர் ரேஷன் தேவைப்படாதபடி பார்த்துக்கொள்வார்கள் என்றும் நம்பப்படுகிறது. பொதுமக்களுக்கே தண்ணீர் கிடைக்காதபோது சுற்றுலா வந்திருப்பவர்களுக்கு எதற்கு கரிசனம் காட்டவேண்டும் என்று நினைத்துப் போராட்டத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வரவேற்கப்பட்டாலும், டாய்லெட்டில் குறைவான அளவு நீரைப் பயன்படுத்தும்படியும், நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு பதில் கடலில் குளிக்கும்படியும், தேவையில்லை என்றால் குளிக்கவே வேண்டாம் என்றும் அவர்களை சுற்றுலாத்துறை அதிகாரிகள் வலியுறுத்திவருகிறார்கள்!

அந்நகரின் நீர்த்தேக்கங்கள் வெறும் 27 சதவீதமே நிரம்பியுள்ளன. மேலும், நீர்த்தேக்கங்களின் கடைசி 10 சதவீத நீரில் சேறு, சகதி, குப்பை, களை போன்றவை கலந்திருப்பதால் இந்த 10 சதவீத நீரை உபயோகப்படுத்தமுடியாது.

நீர்த்தேக்கங்களில் இருக்கின்ற நீரின் அளவு 13.5 சதவீதம் அளவுக்கு குறைந்தால், குழாய்களுக்கான தண்ணீர் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

குளிப்பதற்கு 90 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இப்போதைக்கு அந்நகரவாசிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவை சம்பந்தமாக அந்நகரவாசி ஒருவரிடம் கேட்டபோது, "இங்கே இருக்கவே விருப்பமில்லை" என்று அவர் கூறியிருக்கிறார்.

------------

இது எந்த நகரம் தெரியுமா? நம் தமிழ்நாட்டில் உள்ள எழில்மிகு நகரங்களில் ஒன்று...

என்று நினைத்துக்கொள்ளவேண்டாம்.

இது தென்னாப்பிரிக்காவில் உள்ள, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் - கேப் டவுன்.

செய்தி இங்கே:

http://nationalpost.com/news/world/day-zero-water-shut-off-looms-in-south-africas-cape-town

வெறும் 40 லட்சம் மக்கள் வசிக்கும் நகரில் நிகழ்ந்துகொண்டிருக்கிற கொடுமையைப் படிக்கும்போதே பாவமாகவும், வருத்தமாகவும், பயமாகவும் இருக்கிறதே! கோடிக்கணக்கான மக்கள் வாழும் நம் மாநிலம் இன்னும் சில ஆண்டுகளில் இதே போன்றதொரு நிலையைச் சந்திக்க நேராது என்று சொல்லமுடியுமா?

நம் மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் இந்த நிலை ஏற்கனவே இருந்தாலும், நகரங்களில் இந்த அளவுக்கு மோசமில்லை என்றே நினைக்கிறேன். நகரங்களிலும் இம்மாதிரி நிலை வராது என்று நம்மால் சொல்ல முடியுமா?

டிசம்பர் மாதத்தில் பொழிகின்ற மழையினால் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் மே-ஜூன் மாதங்களில் தண்ணீர்ப் பஞ்சம், தண்ணீர்ப் பற்றாக்குறை!

அந்த அளவுக்கு நம் ஆறுகளையும், ஏரிகளையும், குட்டைகளையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கிறார்கள் சில அரசியல்வாதிகளும், அவர்களுக்குத் துணைபோகிற சில அதிகாரிகளும்.

காவிரியில், வைகையில், தாமிரபரணியில், பாலாற்றில் நீர் ஓடுகிறதோ இல்லையோ; மணல் லாரிகளும், டிராக்டர்களும் ஓடுகின்றன!

அவற்றைத் தடுக்க முற்படுகிற நேர்மையான அதிகாரிகள் சிலர், "மணல் லாரியை/டிராக்டரைப் பிடிக்க முயன்ற அதிகாரி அதே வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு" என்று செய்தியாகிவிடுகிறார்கள். அதுவும் தலைப்புச் செய்தியாய் இல்லை, கண்ணுக்கே தெரியாதபடி ஏதோ ஒரு ஓரத்தில், ஒரு சின்ன செய்தியாய்!

எங்காவது எப்போதாவது ஒரு செய்தி வரும், "ஆற்றில் மணல் அள்ளிய லாரியை/டிராக்டரை மடக்கிப்பிடித்தனர் மக்கள்" என்று. பிடிக்கப்பட்டது ஒன்று, பிடிக்காமல் விடப்பட்டவை எத்தனை என்றெல்லாம் எண்ணாமல், ஒன்றையாவது பிடித்தார்களே, அதுவும் தாமாகவே பிடித்தார்களே என்று நினைத்து ஆறுதலடையவேண்டியதுதான்.

ஆறுகள், ஏரிகள், குட்டைகள் போன்றவற்றை சாதாரண மனிதனான நம்மால், தனி ஒருவனால் என்ன செய்து மீட்க முடியும் என்ற கேள்வி தோன்றுவது நியாயமான ஒன்று. முதலில் நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

நம் குடும்பத்துக்கான சராசரி தண்ணீர்த் தேவை என்ன, சமையலுக்கு எத்தனை லிட்டர் தேவை, குளியல் மற்றும் இன்ன பிற விஷயங்களுக்கு எத்தனை லிட்டர் தேவை, அவசரத் தேவைக்கான ஒரு சில லிட்டர் என்று எல்லாவற்றையும் கணக்கிடவேண்டும். அதே போல எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்பதையும் கணக்கிடவேண்டும்.

தேவையில்லாமல் கொட்டப்படும் தண்ணீர்மட்டும்தான் வீணாகிறது என்பது தவறான ஒன்று. சரியாக மூடாமல் விட்ட குழாய்களிலிருந்து கொட்டுகிற/சொட்டுகிற தண்ணீரும் வீண்தான்.  இது ஏனோ உதாசீனப்படுத்தப்படுகிறது.

குழாய்கள், தண்ணீர்த் தொட்டிகள் பழுதடைந்திருந்தால் அவற்றை உடனடியாக பழுதுபார்க்க/மாற்றிவிட வேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வீட்டிலுள்ள எல்லாக் குழாய்களையும் சரியாக மூடியிருக்கிறோமா என்று பார்த்துவிட்டுத்தான் வெளியே கிளம்பவேண்டும். வீட்டைப் பூட்டிவிட்டோமா, விளக்கு, மின்விசிறி, தொலைகாட்சி போன்றவற்றை OFF செய்திருக்கிறோமா என்று பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல, குழாய்கள் சரியாக மூடப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்ப்பதும் அந்த அளவுக்கு முக்கியம்.

ஊரையெல்லாம் தண்ணீரைச் சேமிக்கச் சொல்லிவிட்டு, வீணாகாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, நம் வீட்டிலேயே ஒரு சிறு குழாய் ஒழுகிக்கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிற தகுதியை இழக்கிறோம். தண்ணீர்ப் பஞ்சத்தை நோக்கி சிறு அடி எடுத்துவைக்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

மழை நீரைச் சேமிக்கவேண்டும். சேமித்த தண்ணீரை வீணாக்காமல் உபயோகப்படுத்தவேண்டும்.

மழை நீரைக் குடிநீராகப் பயன்படுத்தத் தயக்கமாக இருந்தால், அந்தத் தண்ணீரைக் காய்ச்சி குடிக்கலாம். அல்லது, பாத்திரம் கழுவ, வீடு மொழுக, வீட்டில் நீங்கள் வளர்க்கின்ற செடி, கொடிகளுக்குப் பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் குளியலறையாவது மழைநீரை உபயோகப்படுத்தி சுத்தம் செய்யலாம்.

நாம் சேமிக்கும், வீணாகாமல் தடுக்கும் ஒவ்வொரு துளியும் மிக முக்கியமான ஒன்று.

சிறு துளி, பெரு வெள்ளம்!

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

09-Oct-2017:

 

கடந்த வெள்ளிக்கிழமையன்று அலுவலகத்தைவிட்டு கிளம்பும்போது ஒருவித பூரிப்பு, புத்துணர்ச்சி என்னுள் பரவியது. திங்கட்கிழமையன்று பொது விடுமுறை என்ற காரணத்தினால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை, மூன்று நாட்கள் ஓய்வெடுக்கலாம், நிம்மதி என்ற எண்ணத்தில், “எகிறி குதித்தேன், வானம் இடித்தது என வானில் பறந்தேன். அப்போது அன்றும், மறு நாளும் நிகழப்போகும் சம்பவங்கள் எனக்குத் தெரியவில்லை, நான் அவற்றை சற்றும் எதிர்பார்க்கவுமில்லை.

அன்றிரவு எங்கள் குழந்தைக்கு ஜுரமும், ஜலதோஷமும், இருமலும் அதிகமாக, தூங்கவே முடியாமல் திணறினாள். மூச்சு விடவும் முடியாமல், சாப்பாட்டை விழுங்க முடியாமல் தடுமாறினாள். 911 அழைத்து எமர்ஜென்சி என்று சொல்லி ஆம்புலன்ஸை வரவழைக்கலாமா என்று யோசித்தபோது மகளின் நிலைமை கொஞ்சம் முன்னேற, சனிக்கிழமை காலையில் அவளை எப்போதும் செக்-அப்பிற்கு அழைத்துச் செல்லும் தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்தோம். அரசு மருத்துவமனையில் கூட்டம் அதிகம் இருக்கும், மேலும் அந்த தனியார் கிளினிக்கில் இருக்கும் மருத்துவருக்கு எங்கள் மகளின் முழு பேக்ரவுண்டும், சிகிச்சை வரலாறும் தெரியும் என்பதனால்தான் இந்த முடிவு.

ஒரு வழியாக இரவு 2 மணிக்குக் கொஞ்சம் தூங்க ஆரம்பித்தாள், வாய் வழியாக மூச்சு விட்டபடியே. நாங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

காலை ஆறரை மணிக்கு எழுந்து முதல் வேலையாக அந்தத் தனியார் மருத்துவமனை எத்தனை மணி முதல் இயங்க ஆரம்பிக்கும் என்று இணையத்தில் பார்த்தேன். அன்று மருத்துவமனைக்கும் விடுமுறை என்பதைக் கண்டு அதிர்ந்துபோனேன்.

அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு அரசு கிளினிக்கிற்குச் செல்லலாம் என முடிவுசெய்து கிளம்பத் தயாரானேன். அந்த கிளினிக், காலை 9 மணி முதல் இயங்க ஆரம்பிக்கும் என்பதை இணையத்தில் பார்த்து, 8 மணிக்கெல்லாம் அந்த கிளினிக்கிற்குச் சென்று குழந்தைகள் நல மருத்துவர் இருக்கிறாரா என்று விசாரித்தேன். அப்போதுதான் தெரிந்தது, அங்கு குழந்தைகள் நலப் பிரிவு இல்லை என்பது!

இனி மாண்ட்ரியல் பொது மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தோம் நானும் மனைவியும். மருத்துவமனைக்குப் போன் செய்து, இன்று குழந்தைகள் நல மருத்துவர் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, எமர்ஜென்சி (அவசரச் சிகிச்சைப்) பிரிவில் இருக்கிறார் என்று பதில் வர, நிம்மதியானோம்.

மகளை எழுப்பி, உணவளித்துவிட்டு, அவளைத் தயார் செய்து, நாங்களும் தயாராகி மருத்துவமனைக்குச் சென்றபோது மணி 11 ஆகியிருந்தது.

அவசரச் சிகிச்சைப் பிரிவில் கூட்டம் குறைவாக இருந்ததால் சீக்கிரம் மருத்துவரைச் சந்தித்து விடலாம் என்று நினைத்து, ரிசப்ஷனிஸ்டை அணுகி விஷயத்தைச் சொன்னேன். அவர், குழந்தைகள் நலப்பிரிவு அங்கில்லை என்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் சொன்னார். என்னடா இது, உடம்பு சரியில்லாத குழந்தையை எவ்வளவுதான் அலைக்கழிப்பது என்ற வருத்தம் எங்களுக்கு!

உடனடியாக அங்கிருந்து மாண்ட்ரியல் குழந்தைகள் நல மருத்துவனைக்குச் சென்று, அங்குள்ள அவசரப்பிரிவிற்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இல்லை. கிட்டத்தட்ட 20 பேராவது வரிசையில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன், 5 பேர்தான் இருந்தார்கள்.

வருகையைப் பதிவு செய்து, காத்திருப்போர் அறைக்குச் சென்று அமர்ந்தோம். மணி 12 ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 30, 35 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு காத்திருந்தார்கள்.

பல குழந்தைகளைப் பார்ப்பதற்கே சிரமமாயிருந்தது. கண்கள் வீங்கியபடி சில குழந்தைகள், கால், கை முறிந்தபடி சில குழந்தைகள், ஜுரத்தில் துவண்டு விழுந்தபடி சில குழந்தைகள் அங்கிருந்த ஒவ்வொரு குழந்தையும், அதன் நிலையும் ஓராயிரம் வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தது!

கடவுள் மறுப்பாளர்களாகத் தங்களை நினைத்துக்கொள்பவர்கள்கூட குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றால், இந்தக் குழந்தைகள் சீக்கிரமே பூரண குணமடைய வேண்டும் என்று கடவுளை ஒரு நொடியாவது மனமுருகி வேண்டிக் கொள்வார்கள் என்பது திண்ணம்!

அங்கிருந்த சீனர் ஒருவரின் குழந்தையுடன் எங்கள் மகள் விளையாட ஆரம்பிக்க, அந்தச் சீனரிடம் சென்று பேச ஆரம்பித்தேன்.

இதுவரை இந்த மாதிரி அரசு/பொது மருத்துவமனைக்கு வந்திராத அவர், மருத்துவமனையில் எவ்வளவு நேரம் காத்திருக்க நேரிடும் என்று என்னைக் கேட்க, நான் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று சொல்ல, அவ்வளவு நேரமாகுமா என்று வியக்க, இரண்டு மணி நேரத்தில் மருத்துவரைச் சந்திக்க முடிந்தால் கொடுத்து வைத்தவராக கருதிக்கொள்ள வேண்டும் என்றேன். கடந்த டிசம்பர் மாதத்தில் என் கை எலும்பு முறிந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்குச் சில பாடங்களைச் சொல்லித்தந்ததால் நான் தயாராக இருந்தேன்.

சீன அரசு மற்றும் இராணுவத்தைப் போல, நாங்கள் உங்கள் எல்லோருக்கும் முன்னரே வந்துவிட்டோம் என்றும் அதனால் அடுத்தபடியாக மருத்துவரைச் சந்திக்க எங்களுக்குத்தான் உரிமையுள்ளது என்று பல தரவுகளைக் காட்டி, பிரச்சினை செய்யப்போகிறார்களோ என்ற சின்ன பயம் எட்டிப்பார்க்காமலில்லை. டோக்லாம் விவகாரம் நடந்து இன்னும் நூறு நாட்கள்கூட ஆகவில்லை, அல்லவா!

இன்னொரு முக்கியமான விஷயம் கேட்டார் அந்த சீனர்.

மாண்ட்ரியலில் இந்திய மசாலாப்பொடி எங்கு கிடைக்கும்?” என்பதே அந்த மில்லியன் டாலர் கேள்வி!

சீனாவில், இந்தியப் பொருட்கள் விற்கப்படும் ஏதோ ஒரு கடையில் ஒரு குறிப்பிட்ட மசாலாப்பொடி வாங்கியதாகவும், அது மஞ்சளாக இருக்கிறதே தவிர அதில் கொஞ்சம்கூட மசாலாவோ, காரமோ இல்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார் அவர். மஞ்சள் பொடியை மசாலாப் பொடியென்று சொல்லியோ, அல்லது உலகத்துக்கே டூப்ளிகேட் சப்ளை செய்யும் சீனாவிலேயே ஒரு சீனருக்கே யாரோ அல்வா கொடுத்து டூப்ளிகேட் மசாலாப் பொடியையோ விற்றிருக்க வேண்டும் என நினைத்தேன்.

இந்திய மளிகைப் பொருட்கள் கிடைக்கக்கூடிய சில பல கடைகள் பற்றிச் சொன்னேன். அதற்கு அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் என்றெல்லாம் சொல்லமாட்டேன்; நன்றி கூறினார் அவ்வளவே. நம் ஒரிஜினல் மசாலாப் பொடியையும், மிளகாய்ப் பொடியையும் உபயோகித்தால், உணவில் காரம் அதிகமாக சேர்த்துக்கொள்ளாத சீனருக்குத் தானாகவே கண்ணீர் மல்கும் அல்லவா!

நேரம் போகப் போக, கூட்டம் அதிகமாக ஆரம்பித்தது. எங்கள் மகளின் கை கால்களில் விழுந்து அவளை உணவு உண்ணவைப்பதற்கான பிரம்ம பிரயத்தனத்தில் இறங்கினோம் நானும் மனைவியும். கெஞ்சி, கூத்தாடி, கையைப் பிடிச்சு காலைப் பிடிச்சு வாங்கிய கான்ட்ராக்ட்டுடா என்று ப்ரெண்ட்ஸ் படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு சொல்வார். அதுமாதிரியே எங்கள் மகளைச் சாப்பிட வைக்கப் போராடினோம். ம்ஹும், அவள் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. வயிற்றைக் காயப்போடக்கூடாது என்று நினைத்து கொஞ்சம் சிப்ஸும், சாக்லெட்டும் வாங்கிக் கொடுக்க, அதைக் கொரித்தாள் எங்கள் மகள்.

நேரம் மாலை ஐந்து மணி. மருத்துவமனைக்கு வந்து ஐந்து மணி நேரமாகியிருந்தது, ஆனால் இன்னமும் மருத்துவரைச் சந்திக்க முடியவில்லை.

அப்போது, “சராசரி வெயிட்டிங் டைம் 6 மணி நேரம் என்ற அறிவிப்பு வந்தது. போச்சுடா, இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகுமா என்று நொந்துகொண்டோம். இவ்வளவு அலைச்சலை எப்படி எங்களது மகளின் பிஞ்சு உடல் தாங்கும் என்ற வருத்தம் வேறு!

கிட்டத்தட்ட ஆறு மணிக்கு, எங்கள் பெயரை அறிவித்து, மருத்துவரைச் சந்திக்க ஒரு குறிப்பிட்ட அறைக்குச் செல்லுமாறு சொன்னார்கள். அப்பாடா, ஒரு வழியாக மருத்துவரைப் பார்க்கப் போகிறோம் என்று நிம்மதியடைந்தபோது, அது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிச்சர் இன்னும் இருக்கு என்ற விஷயம் எங்களுக்குத் தெரியவில்லை.

திருப்பதியில், பெருமாள் தரிசனத்திற்குச் செல்லும் முன்பு இருக்கும் கடைசி கம்பார்ட்மெண்ட்டில் இருக்கும் பக்தர்களைப் போல உணர்ந்தோம் நாங்கள். மருத்துவரும் கிட்டத்தட்ட கடவுள் மாதிரிதானே!

மருத்துவர் நாங்கள் இருந்த அறைக்கு வந்து எங்களைச் சந்தித்தபோது மணி கிட்டத்தட்ட 7.15 ஆகியிருந்தது. மருத்துவரின் முகம், பல மணி நேரமாக உழைத்த களைப்பில் மூழ்கியிருந்தாலும், அவரின் வார்த்தைகள் அதனைக் கொஞ்சம்கூட வெளிப்படுத்தவில்லை.

எங்கள் மகளைப் பரிசோதனை செய்துவிட்டு, X-Ray எடுக்கச் சொன்னார். இரண்டு வயதுகூட நிரம்பாத ஒரு பிஞ்சு குழந்தைக்கு X-Ray-வா என்று வருந்தினாலும், எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, அருகில் இருந்த Radiology பிரிவுக்குச் சென்று X-Ray எடுத்தோம். அந்த ரிப்போர்ட்டை நேரடியாக மருத்துவருக்கே அனுப்பிவிடுவதாகவும், எங்கள் கையில் கொடுப்பது வழக்கமில்லை என்றும் சொன்னார்கள் அந்தப் பிரிவில் இருந்தவர்கள்.

சரி, இன்னும் சில நிமிடங்களில் மருத்துவரைச் சந்தித்து விஷயத்தைக் கேட்க வேண்டும் என்று ஆவலுடன், பொறுமையின்றி காத்திருந்தோம். மருத்துவரைச் சந்தித்தபோது மணி 8.30!

X-Ray ரிப்போர்ட்டைப் பார்த்ததாகவும், அதில் குழந்தையின் நுரையீரலில் கபம் கட்டவில்லை என்றார் மருத்துவர். நிம்மதியடைந்தோம். நாங்கள்.

Day care-க்கு சென்றுகொண்டிருப்பதால் இந்த மாதிரி ஜுரம், ஜலதோஷம் எல்லாம் வருவது இயல்பு என்றும், Antibiotics எதுவும் தரப்போவதுமில்லை என்றும், தேவைப்படும்போது ஜுரத்தைக் குறைப்பதற்காக இதுவரை நாங்கள் கொடுத்துவந்த மருந்தையே கொடுக்குமாறும் சொன்னார் மருத்துவர்.

டெம்போ எல்லாம் வெச்சு வந்திருக்கோம், கொஞ்சம் பாத்துப் போட்டுக் கொடுங்க சார் என்று உள்ளத்தை அள்ளித்தா படத்தில், மணிவண்ணனைக் கடத்திய செந்தில், கவுண்டமணியிடம் சொல்வதுபோல், “8.30 மணி நேரமா காத்துக்கிட்டு இருக்கோம். வெறும் பாரசிட்டமால் என்றாவது ஒரு சீட்டில் எழுதிக்கொடுங்கள் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

எல்லாம் முடிந்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தபோது மணி 9!

அதாவது, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று 9 மணி நேரம் கழித்து வீடு வந்தோம். எங்கள் மகள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றாலும், கடவுள் இருக்கிறார், அவர் அருளால் எல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும் என்று வழக்கம்போல கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டோம்.

என்றாலும், இந்தச் சம்பவத்தின்மூலம் முக்கியமான சில விஷயங்கள் புரிந்தது எங்களுக்கு.

1. நாம் நம் நிலையைப் பற்றி எவ்வளவுதான் கவலை கொண்டாலும், நம்மைவிட மோசமான நிலையில் பலர் இருக்கிறார்கள்.

2. மருத்துவமனைக்குச் சென்றால், அதுவும் அரசு/பொது மருத்துவமனைக்குச் சென்றால், வாழ்க்கையின் perspective கிடைக்கும்.

3. மாண்ட்ரியல் போன்ற நகரங்களில் உள்ள அரசு/பொது மருத்துவமனைக்கு, அதுவும் அம்மருத்துவமனைகளில் உள்ள அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல முடிவெடுத்தால், கூடவே புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என அன்றைய தினத்துக்கான மதிய மற்றும் இரவு உணவையும் பார்சல் செய்து எடுத்துச் செல்லவேண்டும்.

#கனடா_குறிப்புகள்! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

09-May-2017:

 

#இட்லி_உப்புமா!

நம் தேசிய சிற்றுண்டிகளில் ஒன்றான இட்லிதான் எனது இன்றைய சிற்றுண்டி என கேள்விப்பட்டு எழுந்தபோது மணி பத்து. தொட்டுக்கொள்ள தக்காளி சட்டினியாம். சரி, பரவாயில்லை, இன்று சிற்றுண்டிக்காகப் போராட, சண்டை போட வேண்டியதில்லை என்று நிம்மதியானேன்.

வெள்ளை நிற இட்லி, அதனுள் ஒரு சின்ன ஓட்டை போட்டு தக்காளி சட்டினியை ஊற்றினால் பார்ப்பதற்கு ஜப்பான் நாட்டு கொடியைப் போலவே இருக்குமே என்ற கற்பனையில் பல் துலக்கிவிட்டு வந்து இட்லியைப் பார்த்தேன். அதிர்ந்து போனேன். ஏனென்றால், அது இளம்பழுப்பு நிறத்தில் இருந்தது.

என்ன இட்லி இன்னிக்கு குளிக்கலையா? ப்ரவுன் கலர்ல இருக்கு?” என்று கேட்டதற்கு என் மனைவியிடமிருந்து தனல் போன்றதொரு பார்வையே விடையாகக் கிடைத்ததால், “பரவாயில்லை. இந்த கலர்ல வித்தியாசமா இருக்கு என்று பதில் சொல்லி சமாளித்தேன்.

ப்ரவுன் ரைஸ்ல செஞ்சது. அதான் இந்த கலர்ல இருக்கு. உடம்புக்கு நல்லது என்று அடுத்த சில நொடிகளில் உண்மை வெளிவந்தது. வேறேதும் பேசாமல் சில பல இட்லிகளை தக்காளி சட்டினியுடன் சாப்பிட்டு முடித்தேன். வயிறு நிரம்பியது. அப்போதுதான் கவனித்தேன் இன்னும் சில இட்லிகள் எஞ்சியிருந்ததை.

மீதமிருக்கிற இட்லியை வெச்சு சாயங்காலம் இட்லி உப்புமா செஞ்சிடலாம் என்று என் மாமியார் யோசனை கூற, “இட்லி உப்புமாலாம் வேணாம், நான் வேணா இந்த இட்லியை சாயங்காலம் சாப்பிட்டுக்கறேன் என்று சொன்னேன். ஒரு வித பயம், பீதி என் முகத்தில் எட்டிப்பார்த்தது.

ஏன் வேணாம்? இட்லி உப்புமா நன்னா இருக்குமே, உங்களுக்குப் பிடிக்காதா?” என்று அவர் என்னைக் கேட்க, அதற்கு என் மனைவி, “அவருக்கு இட்லி உப்புமா பிடிக்காது என்று சொல்ல, அதற்கு என் மாமியார், “ஏன்?” என்று கேட்க, என் மனைவி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்.

பாட்ஷா படத்தில், ஆன்ந்தராஜ் மற்றும் அவனது சகாக்களை அடித்து துவைத்ததால் அவர்கள் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதைச் சொல்லி, அண்ணன் ரஜினிகாந்தை "சொல்லுங்க, நீங்க யாரு? பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க?" என்று அவரது போலீஸ் தம்பி கேள்வி மேல் கேள்வி கேட்கும்போது கேட்கக்கூடாததை கேட்டுவிட்டானே தம்பி என்ற அதிர்ச்சியில் ரஜினிகாந்த் ஓர் அறைக்கு உள்ளே சென்று, கதவை தடார் என்று சாத்துவாரே, கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இந்த இட்லி உப்புமா பற்றிய கேள்விக்கு நான் என் அறைக்குள்ளே சென்று கதவை மூடிக் கொண்டேன்.

படத்தில் வந்தது போலவே இங்கு என் மனத்தில் ஒரு ப்ளாஷ்பேக் ஆரம்பித்தது, கொசுவத்திச் சுருள் சுற்ற ஆரம்பித்தது.

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம் அது. வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு தெருவில்தான் எங்கள் பள்ளி இருந்தது.

ஒரு நாள், பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே கொண்டாடலாம் என திடீரென முடிவுசெய்து, அன்று மாலை எங்கள் வகுப்பிலுள்ள அனைவரையும் ஒரு மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர் எங்கள் வகுப்பாசிரியரும், இன்னும் சில ஆசிரியர்களும். 5 அல்லது 6 வகுப்பு மேஜைகளும், சில ப்ளாஸ்டிக் குடங்களும், டம்ளர்களும், ஸ்பூன்களும், கோணிப்பைகளும் எங்களுடன் மைதானத்துக்குப் பயணம் செய்தன.

தொலைபேசி வைத்துக்கொள்வதே ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்தக் காலத்தில், இந்த திடீர் ஸ்போர்ட்ஸ் டே திட்டத்தை என் பெற்றோருக்குத் தெரிவிக்க முடியவில்லை. அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியதா என்பதுகூட இப்போது நினைவில்லை. ஆனால், எல்லோரும் போகிறார்களே, நாமும் போவோம் என்று ஜாலியாக அவர்களுடன் சென்றேன்.

மைதானத்தில் சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதுவும் எப்பேர்ப்பட்ட போட்டிகள் தெரியுமா?

மேஜைகள் மேல் டம்ளரில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீர் சிந்தாமல் மேஜைகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்வது, வாயில் வைக்கப்பட்டிருந்த ஸ்பூனிலிருந்த சாக் பீஸ் கீழே விழாமல் ஓடுவது, கோணிப்பையினுள் நுழைந்து கொண்டு குதித்து குதித்து ஓடுவது போன்ற ஒலிம்பிக் தர போட்டிகள். அந்த வயதில், விளையாட்டு என்ற சொல்லைக் கேட்டாலே ஆனந்தம் வருமே, அது எந்த விளையாட்டாய் இருந்தால் என்ன?

குதூகலத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று மகிழ்ச்சியாயிருந்தேன். இங்கும் அங்கும் ஓடினேன். டென்னிஸ் பந்தை வைத்து ஹை கேட்ச் விளையாடினேன். மொத்தத்தில் மிகவும் சந்தோஷமாய் இருந்தது அந்த சில மணி நேரங்கள்.

போட்டியெல்லாம் முடிஞ்சாச்சு, வீட்டுக்குப் போகலாம் வாங்க என்று ஆசிரியர் ஒருவர் சொல்ல, அரை மனதோடு அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தோம். ஆசிரியர் முன்னே செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்து நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது என் நண்பன் ஒருவன், “அவங்க போகட்டும், நாம இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு போகலாம்டா என்று யோசனை கூற, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வெங்கட் என்று நினைத்துக்கொண்டு, “சரிடா, வா கிரவுண்டுக்குப் போகலாம் என்று அங்கிருந்து நைசாக நழுவினோம்.

அப்போதுதான் விதி விளையாடியது.

நாங்கள் இருவரும் மைதானத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை, காரில் அந்த வழியாக வந்துகொண்டிருந்த நண்பனின் தந்தை பார்த்து, எங்களருகே வந்து அவனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இடத்தில் தனிமரமாய் நின்றுகொண்டிருந்தேன்.

சரி வீட்டுக்காவது கிளம்பலாம் என்று யோசித்தபோதுதான் உறைத்தது, எந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன் என்று தெரியாது என்பது. பயத்தில் அழுகைதான் வந்தது. மைதானத்தில் நின்று அழுதுகொண்டிருந்தேன், கேட்பார் யாருமில்லை.

அப்போது, கடவுளே அனுப்பி வைத்ததுபோல் எங்கிருந்தோ வந்தான் கண்ணன் என்ற என் வகுப்பு நண்பனொருவன். நின்றுபோயிருந்த இதயம் மீண்டும் துடிப்பதுபோல் இருந்தது.

என்னடா வெங்கட், அழுதுட்டிருக்கே?” என்று அக்கறையுடன் கேட்க, “வீட்டுக்கு வழி தெரியலைடா கண்ணா என்று அழுதுகொண்டே பதில் சொன்னேன்.

சரி வா, நான் உங்க வீட்டுல உன்னை இறக்கி விட்டுடறேன் என்று தன்னுடைய ஹெர்குலஸ் சைக்கிளில் என்னை உட்கார வைத்துக்கொண்டு எங்கள் வீட்டை நோக்கி அழைத்துச்சென்றான்.

கடவுள் தேரோட்டுவதுபோல் தூர்தர்ஷனில் மகாபாரதத்தில் பார்த்திருக்கிறேன். இங்கு என்னை உட்கார வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதாய் நினைத்தேன்.

வழி நெடுக அவனுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லிக்கொண்டே இருந்தபோது எதிரில் என் தந்தை நடந்து வந்துகொண்டிருப்பதைக் கவனித்து வண்டியை நிறுத்தச்சொல்லி, “அப்பா என்று நான் கத்த, என்னைப் பார்த்த நிம்மதியில் அவர் எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.

அங்கிள், இவன் கிரவுண்டுல இருந்தான். அதான் உங்க வீட்டுல கொண்டுவந்து விட்டுடலாம்னு வந்தோம் என்று கண்ணன் சொன்னபோது என் தந்தை, “அப்படியா? தேங்க்ஸ்பா என்றார். அப்போது நான் சைக்கிளைவிட்டு கீழே இறங்கி, சமத்துப்பிள்ளையைப் போல் அப்பாவின் அருகே நின்றுகொண்டேன்.

சரிங்க அங்கிள். நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு ரெக்கை கட்டி பறந்தது கண்ணனோட சைக்கிள். அப்போது என் தந்தையின் முகத்தைப் பார்த்தேன். கோபத்திலும், பதற்றத்திலும் கண்கள் சிவந்திருந்தன.

நல்ல பிள்ளையைப் போல் அவரது கைவிரலைப் பிடித்துக்கொண்டு, வாலை சுருட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். வாசலில் என் அம்மா கவலையில் அழுதுகொண்டிருந்தார். எங்களைப் பார்த்த நிம்மதியில், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்களுடன் வீட்டுக்குள் வந்தார்.

உள்ளே வந்ததும், “எவ்ளோ தைரியம் இருந்தா சொல்லாம கொல்லாம கிரவுண்டுக்குப் போயிருப்பே?” என்று கோபத்தில் அப்பா கேட்க, என் அம்மா தன் பற்களைக் கடித்துக்கொண்டு என்னை திட்ட ஆரம்பித்தார்.

பாவம், வெகு நேரமாகியும் வராததால் பயந்துபோயிருந்தவர்கள் அல்லவா, அப்படித்தானே கேட்பார்கள். ஆனால், இதெல்லாம் எனக்கு அப்போது புரியவில்லை. சிறுவனாயிற்றே. அவர்கள் திட்டத் திட்ட, எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

அன்று என் வீட்டில் மட்டும் தமிழில் அர்ச்சனை நடந்தது.

தொலைந்து போயிருந்தால்கூட இவ்வளவு திட்டுகள் கிடைத்திருக்காதே என்று நொந்துபோனேன். பாசனத்துக்குத் திறந்துவிட்ட மேட்டூர் அணையைப் போல் என் கண்களிலிருந்து கண்ணீர் வருவதைப் பார்த்து கொஞ்சம் சமாதானமாகியிருந்த என் அம்மா, “சரி சரி, அழுதது போதும், இந்த டிஃபனை சாப்பிடு என்று என் கையில் ஒரு தட்டை திணித்தார்.

அந்தத் தட்டில் இருந்தது வேறெதுவுமில்லை, சாட்ஷாத் இட்லி உப்புமா.

நான் பசியில் அழுதுகொண்டே சாப்பிட்டுக்கொண்டிருக்க, என் அப்பா இன்னும் சில நிமிடங்களுக்கு அர்ச்சனையைத் தொடர, மொத்தத்தில் அது மிகவும் கசப்பான ஒரு தருணமாக என் மனத்தில் பதிந்துவிட்டது.

அன்று முதல் இன்று வரை இட்லி உப்புமா என்றாலே அலர்ஜி. சாப்பிடாமல்கூட இருந்துவிடுவேன், இட்லி உப்புமா மட்டும் வேண்டவே வேண்டாம் என்று பலமுறை வாதாடி, வேறு சில சிற்றுண்டிகளை சுவைத்திருக்கிறேன்.

நிலைமை இப்படியிருக்கையில், இன்று மீண்டும் இட்லி உப்புமாவா? அந்த சொக்கநாதர் தன் திருவிளையாடலை என்னிடம்தான் காட்ட வேண்டுமா? சில நிமிடங்களுக்குப் பிறகு என் அறைக்கதவைத் திறந்து வீட்டுக்கூடத்துக்குச் சென்றேன்.

இன்னிக்கு சாயங்கால டிஃபன் இட்லி உப்புமா இல்லை, பூரி மசால். திருப்தியா இப்போ?” என்றார் என் மனைவி. பல ஆண்டுகளாக அடிமையாய் இருந்து ஒருவழியாக சுதந்திரம் கிடைத்ததுபோல் உணர்ந்தேன்.

பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த், அறையை விட்டு வெளியே வந்ததும் அவரது போலீஸ் தம்பி, “அண்ணன் அடிச்ச அந்த ரவுடிங்க ஆண்டவன் புண்ணியத்துல உயிர் பொழைச்சிட்டாங்க என்று சொன்னதும் ஒரு நிம்மதிப்பெருமூச்சு விடுவாரே, அந்த மாதிரி உணர்ந்தேன்.

ஒரு வழியாக ஒளி பிறந்தது என்று நினைத்துக்கொண்டு டிவியை ஆன் செய்தேன்.

சூர்யவம்சம் படத்தில் தன் மகள் தேவயானி செய்துகொடுத்த இட்லி உப்புமாவைப் பற்றி ஜெய்கணேஷ் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். மறுபடியும் இட்லி உப்புமாவா? பூனையைக் கண்ட எலிபோல் உடனே சானலை மாற்றினேன்.

கடவுள் நல்லவர்களை சோதிப்பான், ஆனால் ஒருபோதும் கைவிடமாட்டான் 🙂

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

10-Mar-2017:

 

சட்டம் தன் வீட்டு வாசலைத் தட்டுவதற்கு முன், விஜய் மல்லையா நாட்டை விட்டு ஓடிவிடுவார் என்பதை ஆட்டுப்புளுக்கை அளவுக்கு அறிவுள்ளவர்களால்கூட யூகித்திருக்க முடியும். இவர் தப்பித்தது ஒரு விஷயமே அல்ல. இவர் இப்படி தப்பித்த முதல் ஆளுமல்ல, கடைசி ஆளாக இருக்கப்போவதுமில்லை. விஷயம் இவர் தப்பித்துப் போனது இல்லை.

பல வருடங்களுக்கு முன்பு வரை, கடன் வாங்குவது என்பது மிகப்பெரிய விஷயம். கௌரவக்குறைவு. குடும்பத்தில் கடன் அதிகமாக இருந்தால், அந்த வீட்டுப் பையனுக்கு. / பெண்ணுக்கு திருமணம் என்பது எட்டாக்கனி.

சில வருடங்களுக்குப் பின், இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத். தொடங்கியது. வீட்டுக்கடன் தொடங்கி, கடன் அட்டை என்று சொல்லப்படுகிற கிரெடிட் கார்ட் வரை ஏகப்பட்ட வளர்ச்சி. வசதி, வாய்ப்பு. வங்கி ஊழியர்களே நம்மைத் தொடர்பு கொண்டு, நம்மைக் கடன் வாங்க வைக்க கால் கடுக்கக் காத்திருக்கும் அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சி.

கடன் வாங்குவது என்பது கடைக்குச் சென்று காய்கறி வாங்குவது போல எளிதான, சாதாரணமான ஒரு விஷயமாகிப்போய்விட்டது இப்போது.

தேவைக்காக கடன் வாங்க ஆரம்பித்து, இப்போது ஆசைக்காக கடன் வாங்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம். இப்படி நம் நாட்டில் ஏகப்பட்ட கடன்காரர்கள் உள்ளோம், என்னையும் சேர்த்து.

கடன் வேண்டி விண்ணப்பித்தால், இவருக்குக் கடன் கொடுக்கலாமா, கொடுத்தால் இவரால் ஒழுங்காக தவணை கட்ட முடியுமா, இல்லையென்றால் அந்த அளவுக்கு சொத்து இருக்கிறதா இவருக்கு என்று ஏகப்பட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் கடன் கொடுப்பார்கள்.

ஆனால், அதே நேரம், தன் தகுதிப்படி தனக்குக் கிடைக்க வேண்டிய கடன் தொகையைவிட கூடுதலான தொகையைப் பெறுவதும் நடந்துகொண்டுதானிருக்கிறது, அந்த வங்கிகளில் வேலை செய்யும் நபர்களின் தயவால். சாதாரண, மிடில் கிளாஸ் குடிமகன் ஒருவனால் இப்படி அதிக கடன் வாங்க முடியும் எனும்போது, அந்த குடிமகனுக்கு குடிக்க சரக்கு தயாரிக்கும் நிறுவனத்தின் ஓனரால் வாங்க முடியாமல் போய்விடுமா என்ன?

ஒரே ஒரு வேறுபாடுதான் இவ்விருக்குமிடையே. கடன் வாங்கிய குடிமகன் ஒருவன் சில மாதங்களாக தவணை கட்டவில்லை என்றால் அவன் வீட்டுக்கு அடியாள் அனுப்புவார்கள். ஆனால் மல்லையா போன்றவர்களுக்கு எப்போதும் இந்த நிலை வராது, அவ்வளவே!

அதே குடிமகன், ரோட்டில் டிராபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டால், "கோர்ட்டுக்குப் போனா ஆயிரம் ரூபா கட்டணும், என்கிட்ட இரு நூறு வெட்டினா போதும்" என்னும் குதூகல ஆடித்தள்ளுபடி ஆபரைக் கேட்டதும் சட்டென இரு நூறு ரூபாய் கொடுத்து அவனால் தப்பிக்க முடியும் என்னும்போது கோடி கோடியாய் கொட்டி வைத்திருக்கும் மல்லையாவால் தப்பிக்க முடியாதா? ஆக, இதுவும் ஒரு பெரிய விஷயமே இல்லை, இது மாறப்போவதுமில்லை.

கடன் வாங்கும் தொழிலதிபர்கள் வாங்கிக்கொண்டுதானிருப்பார்கள்.

கடனை அடைக்கக் கவலைப்படாத (அடைக்க முடியாதவர்களல்ல) தொழிலதிபர்கள் எப்படியாவது தப்பித்துக்கொண்டுதானிருப்பார்கள்.

மாதா மாதம் EMIயை கணக்கு செய்து பார்த்துப் பார்த்து செலவு செய்பவர்களும் இருப்பார்கள்.

கிராமங்களில், தாம் வாங்கிய சில ஆயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும், ஏழைகளும் இருப்பார்கள்.

இது எதுவுமே மாறப்போவதில்லை.

 "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகும்" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது!

#பேருந்துப்_பயணங்களில்! #Rewind!

 

 

 

19-Feb-2017:

 

#கனடா_குறிப்புகள் அடுத்த பகுதி வரவேயில்லையே என்று சில நண்பர்கள் சில நாட்களுக்கு முன்பு கேட்டனர். கடந்த சில வாரங்களாய் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், முதல்வர் மியூசிக்கல் சேர், உங்களில் யார் அடுத்த முதல்வர், சமாதியில் சபதம், ரிமோட் கன்ட்ரோல் அரசு போன்ற உக்கிரமான விஷயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் மூளை, இப்போதுதான் கொஞ்சம் அமைதியாகி இருக்கிறது, என்ன கத்தினாலும் மாறப்போவதில்லை என்ற ஞானோதயத்தால். ஆனது ஆகட்டும், கடமையைச் செய்வோம் என்று வந்துவிட்டேன்.

நான் கீழே விழுந்து கை உடைபட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அரசியல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட்டால், சிறையில் புத்தகம் எழுதுவார்கள், இல்லையென்றால் புத்தகம் படிப்பார்கள். அந்த மாதிரி, கிட்டத்தட்ட ஒரு மாதம் கை உடைபட்டு வீட்டுச்சிறையில் இருந்தேன். எழுதுவதற்கு, தட்டச்சு செய்வதற்குக் கை அவசியம் என்பதால் அதை மட்டும் செய்ய முடியவில்லை. நிலைமை கொஞ்சம் முன்னேறியதும் மறுபடி வேதாளம் பேஸ்புக் ஏறியது. சில வாரங்களாக தொடர்ந்து இணையச் சேவை புரிந்துகொண்டிருக்கிறேன்.

குளிர்காலத்தில், சாலையில் வழுக்கி விழுவது இவ்வூரில் சர்வ சாதாரணம்போல. அதாவது நம்மூரில் வாராவாரம் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே, அதுமாதிரி. ஆண்சிங்கமாய் இருந்தாலும், பெண் ராணியாய், அதாவது குயினாய் இருந்தாலும், குளிர்காலத்தில் இவ்வூரில் பென்குயின் (Penguin) போலத்தான் நடக்க வேண்டுமாம். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் கனடாக்காரர்கள் அருளிய தேவவாக்கு இது. கீழே விழுந்தபிறகு கற்றுக்கொண்ட பாடம்.

அன்றொரு நாள், அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருக்கையில், நான் விழுந்த அதே இடத்தில் ஒருவன் கீழே விழுந்தான். சுற்றிலும் அவனது நண்பர்கள் அவனைப் பார்த்துச் சிரிக்க, அவனும் சிரிக்க, சுற்றியிருந்தவர்களும் சிரிக்க, இன்று நான் தப்பினேன் என்று நான் உள்ளூர சிரிக்க, அன்று அலுவலகத்தில் ஏதோ ஒரு Escalation வர, அதனால் க்ளைண்ட் முறைக்க, அதற்குக் காரணமாய் இருந்தது அவர்களில் ஒருவர் செய்த செயல் என்று தெரிந்ததும் அவரைப் பார்த்து லேசாய்ச் சிரிக்க.. இப்படி அன்று ஒரே சிரிப்பு மயம்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வரும் வழியில் ஒரு குஜராத்திக் கடைக்குச் சென்று, தேவையான பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, பெங்களூரிலிருந்து கனடா வந்திருக்கும் நண்பனொருவன் அலைபேசியில் என்னை அழைத்தான். நான் அவனிடம் கன்னடத்தில் பேசிக்கொண்டே, காய்கறி, பழங்கள் போன்றவற்றை தரம் பார்த்து ட்ராலியில் போட்டுக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு முன்னேயிருந்த பெண்ணொருத்தி அடிக்கடி திரும்பியவண்ணம், என்னைப் பார்த்துக்கொண்டிருந்ததை நான் கவனிக்காமலில்லை. முகத்தில் பெங்களூர்ச் சாயல் அப்பட்டமாய்த் தெரிந்தது. ஏகப்பட்ட சபதங்களைத் தாங்கிய சமாதியாய் நான் கண்டுகொள்ளாமல் இருந்தேன்.

எல்லாவற்றையும் வாங்கிவிட்டு, கேஷ் கவுண்டருக்கு முன்னே இருந்த வரிசையில் நிற்கும்போதுதான் கவனித்தேன், அந்தப் பெண் வரிசையில் எனக்கு முன்னே இருந்ததை. "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க..." என்ற பாடல் அந்தச் சமயத்தில் என் மனதில் ஒலித்தது என்று நான் சொல்லவும் வேண்டுமா!

கேஷ் கவுண்டரில் வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்திவிட்டு, கதவைத் திறந்து வெளியே வந்தேன். சில அடி தொலைவில் யாருக்காகவோ காத்துக்கொண்டிருப்பதுபோல் அங்கு இருந்தாள் அந்த ஹுடுகி (கன்னடத்தில் 'பெண்' என்று பொருள்). நான் ஜல்லிக்கட்டு காளைபோல் துள்ளி நடக்க ஆரம்பிக்க, இடதுகை லேசாக வலிக்க ஆரம்பிக்க, சில வாரங்களுக்கு முன்பு வேகமாய் நடக்கும்போது கீழே விழுந்து கை உடைந்துபோனது மனத்திரையில் விரிய, எம்.எல்.ஏக்களைப் பார்த்த ரிஸார்ட் முதலாளிபோல் மெதுவாய், பவ்யமாய் நடக்க ஆரம்பித்தேன்.

"எக்ஸ்க்யூஸ் மீ" என்று ஏதோ ஒரு பெண்குயில் குரல் ஒலிக்க, குயிலின் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். அதே பெண்தான். என்னைப் பார்த்துதான்.

"யெஸ்" என்றேன் நான். கன்னடத்தில் ஆரம்பித்த அந்த உரையாடலை நண்பர்கள் படித்து பயன்பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இங்கே தமிழில் பதிகிறேன்.

"நீங்க கன்னடிகாவா?" என்றாள் அவள்.

"இல்லை, தமிழ். கன்னடம் பேசுவேன்"

", அப்படியா. சரி. கன்னடத்துல பேசிட்டிருந்தீங்களேன்னுதான் கேட்டேன். என் பேர் அகிலா"

"ஹும்"

"நீங்க?"

"வெங்கட்"

"ஓ. நான் இங்கவந்து ஒரு வாரம்தான் ஆகுது. இங்கதான் மெக்கில் காலேஜ்ல சேர்ந்திருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல க்ளாஸ் ஆரம்பிச்சிடும், அதுக்குள்ள சும்மா ஊர் சுத்தலாம்னு முன்னாடியே இங்க வந்துட்டேன்"

"குளிர்காலத்துல போய் வந்திருக்கீங்க?"

"எப்படியும் இங்க சில பல குளிர்காலத்தைக் கடக்கணும், காலேஜ் ஆரம்பிச்சதும். அதனால முன்னாடியே வந்துட்டேன். கொஞ்சம் பழகிக்கலாமுன்ன்"

"ஓகே"

"நீங்க என்ன பண்றீங்க? எந்த காலேஜ்?"

உடனே என் மனதில், "காலேஜ் நானா? ஹா ஹா ஹா" என்று ஒருத்தி சொன்னதும், தொலைவிலிருந்து அவளது மகள், "மம்மி...." என்று கத்திக்கொண்டு ஓடிவரும் சந்தூர் சோப்பு விளம்பரம் நினைவுக்கு வந்தது.

ஒரு மெல்லிய புன்னகை பூத்துவிட்டு, "காலேஜெல்லாம் இல்லை. இங்க வேலை செய்யறேன். ஐ.டி துறை" என்றேன்.

", அப்படியா? வெரி குட். எங்க தங்கியிருக்கீங்க?"

"சிட்டி டவுன்டௌன்ல"

"நானும் அங்கதான் இருக்கேன். If you dont mind, வாங்களேன், ரெண்டு பேரும் கிளம்பலாம்"

"இல்லைங்க. இங்க நண்பனோட வீட்டுக்குப் போகணும். யூ கேரி ஆன்" என்று நான் என் மனதை எதிர்த்துப் பொய் சொன்னதும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்ததுபோன்ற ஒரு பாவனையைக் காட்டிய தன் முகத்தை அடுத்த நொடி சிரிப்பால் அலங்கரித்துவிட்டு, "ஓகே, சீ யூ. டேக் கேர்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். நான் அதற்கு எதிர்திசையில் மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி நடைகட்டினேன். "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" (உபயம்: திருவள்ளுவர்)

நடந்தவற்றை அசைபோட்டபடியே நான் நடந்துகொண்டிருக்க, என்னை ஓவர்டேக் செய்து அவசர அவசரமாய்ச் சென்றாள் சீனப்பெண்ணொருத்தி. கையில் இருந்த அவளது அலைபேசி, அவளது இம்சை தாங்காமல் அலறியிருக்கும், அந்த அளவுக்கு அதை நோண்டிக்கொண்டே நடந்தாள்.

நான் தரையைப் பார்த்தபடி, மனத்திரையில், "அடிப்போடி கிறுக்குப்பயபுள்ளை, உனக்கு வயசிருக்கு, வாலிபமிருக்கு" என்று 'முதல் மரியாதை' படத்தில் ராதாவைப் பார்த்து சிவாஜி சொன்ன வசனத்தை, அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க, திடீரென யாரோ விழுந்ததுபோல் சத்தம் கேட்டது.

என்னை முந்திச் சென்றாளே சீனப்பெண், அவள்தான் விழுந்தது. தரையில் Ice இருந்ததை அவள் கவனிக்கவில்லை. அவளிடமிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அவளது அலைபேசி எண்ணியதோ என்னவோ, அவள் விழுந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து அடி தள்ளி விழுந்திருந்தது.

ஐயையோ, விழுந்துவிட்டாளே, பாவம், எழுப்புவோம் என்று நான் அவளுக்குக் கை நீட்ட, என் கால் வழுக்க ஆரம்பித்தது. சுதாரித்துக்கொண்டு, Ice இல்லாத பகுதியாய்ப் பார்த்து நகர்ந்தேன். அந்தப் பெண் மெதுவாய் எழுந்து, தொலைவில் இருந்த மொபைலை எடுத்து, மீண்டும் அதை நோண்டியபடியே நடந்து சென்றாள்.

எனக்கு பதிலாகக் கீழே விழுந்து, என்னை அலெர்ட் செய்து, இப்போது ஒன்றுமே ஆகாதது போல் செல்கிறாயே, இதற்காகத்தான் அவசர அவசரமாய் என்னை முந்திக்கொண்டு சென்றாயா சீனத்துப்பெண்ணே, நம் பூர்வீக பந்தம்தான் என்ன என்று எண்ணிய்படியே வீடு வந்துசேர்ந்தேன்.

#பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

03-Jan-2017:

 

#Rewind!

"ஆலுமா டோலுமா ஐசாலக்குடி மாலுமா" என்ற 'வேதாளம்' பட பாடலுக்கு என்ன அர்த்தம் என்று பல அறிஞர்கள் குழம்பிக் கொண்டிருக்க, ஜனங்களின் கவிஞன் உங்கள் #கவிக்கோ_கோக்ககோலா அவர்கள், இந்த வரிக்கான பொருளை, அதன் உள்ளர்த்தத்தை விளக்குகிறார் பாருங்கள்..

ஆலுமா - உருளைக்கிழங்கை ஹிந்தியில் 'ஆலு' என்பார்கள். மேலும், அருந்தமிழ்ப்பாடல்களில் 'கப்பக்கிழங்கே', 'சக்கரவள்ளிக்கிழங்கே' என்றெல்லாம் கவிஞர்கள் ஏற்கனவே எழுதிவிட்டதால், இப்பாடலின் கவிஞர் உருளைக்கிழங்கை சேர்த்து பாடலை சிறப்பாக்கியிருக்கிறார். ரசிகர்களை, நண்பர்களைச் செல்லமாக 'மா' என்று கூப்பிடுவதற்காக, சொல்லின் இறுதியில் 'மா' என்ற வார்த்தையைச் சேர்த்திருக்கிறார் கவிஞர்..

டோலுமா - 'போடு' என்பதை ஹிந்தியில் 'டாலோ' என்பார்கள். கலோக்கியலாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக 'டாலு' என்பதற்கு பதிலாக 'டோலு' என்று சேர்த்திருக்கிறார்.

இதுவரை: "ஆலுமா டோலுமா" - "உருளைக்கிழங்கு போடுமா"..

இப்போது அடுத்த வரியைப் பார்ப்போம்.

"ஐசாலக்கடி மாலுமா"

ஐசாலக்கடி - இங்குதான் கவிஞரின் வார்த்தை விளையாட்டு கேட்போரை, விவரம் அறிந்தோரை வியக்க வைக்கிறது..

ஐசா - "இப்படி" என்ற வார்த்தையை ஹிந்தியில் "ஐசா" என்பார்கள்..

லடுகி - இதற்கு ஹிந்தியில் "பெண்" என்று பொருள்..

ஐசா லடுகி - இப்படியொரு பெண்

"ஐசா" மற்றும் "லடுகி" ஆகிய வார்த்தைகளை இணைத்து "ஐசாலடுகி" என்று யாராலும் எழுதிவிட முடியும். அதற்கு கவிஞர்கள் தேவையில்லை..

இந்த இடத்தில் தனக்கே உரிய இலக்கணச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, "ஐசாலடுகி" என்பதற்கு பதிலாக "ஐசாலக்கடி" என்று மாற்றி வைத்து, சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, தன்னைப் பற்றித்தான் பாடுகிறார்கள் என்று தெரியாமல் இருக்கும்படி வார்த்தை ஜாலம் நிகழ்த்தி, பெண் சுதந்திரத்தைப் போற்றுகிறார் கவிஞர். என்னே ஒரு பாண்டித்தியம்!

மாலுமா - இதற்கு "தெரியுமா" என்று பொருள்..

"ஐசாலக்கடி மாலுமா" - "இப்படியொரு பெண்ணைத் தெரியுமா"

இப்போது இப்பாடலின் முதல் வரியை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்..

"ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா" - "உருளைக்கிழங்கு போடுமா, இப்படியொரு பெண்ணைத் தெரியுமா!"

பாடலின் 'தல'வன், தலைவியைப் பார்த்து, "அனைவரையும் கவர்ந்த உருளைக்கிழங்கைப் போன்ற சிறப்புமிக்க, இப்படியொரு பெண்ணை பார்த்ததுண்டா" என்று வியந்து பாடும்படி வார்த்தைகளைச் சேர்த்து பாடியிருக்கிறார் கவிஞர்.

இப்போது புரிகிறதா கவிஞரின் ஞானம், திறமை, பன்மொழியறிவு எல்லாம்!

இப்பேர்ப்பட்ட ஈடு இணையற்ற கவிஞரை தலை வணங்குகிறான் இந்த ஜனங்களின் கவிஞன், உங்கள் கவிக்கோ_கொக்ககோலா!

#பேருந்துப்_பயணங்களில்! #அவ்ளோதான்! #ஹிந்தி_அறிவோம்!

 

 

 

31-Dec-2016:

 

பொங்கலும், ஜல்லிக்கட்டும்

ஜனவரி மாதம்தான் பொங்கல் பண்டிகை, இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் நவம்பர் மாதமே ஆரம்பித்துவிடும். பொங்கலைப் பற்றிய பொங்கல் அல்ல. ஜல்லிக்கட்டைப் பற்றிய பொங்கல்.

எங்கு பார்த்தாலும் ஜல்லிக்கட்டு தமிழ்க் கலாசாரத்தில் ஊறிய விஷயம், தமிழ்ப் பண்பாடு என்று பெரும்பாலானோர் தங்கள் பக்கங்களில் பகிர ஆரம்பிப்பார்கள்.

சில பிரபலங்கள் ஜல்லிக்கட்டை எதிர்த்துப் பேசுவார்கள். அந்தப் பிரபலம் திரைப்படக் கதாநாயகராக இருக்கலாம், கிரிக்கெட் வீரராகவும் இருக்கலாம். சமூக வலைத்தளங்களில் அடுத்த சில நாட்களுக்கு அவரை வைத்து பொங்கல் வைப்பார்கள். திரைப்படங்களில், நாடகங்களில் வருவதைவிட பல மடங்கு உணர்ச்சிகரமான வசனங்கள் எல்லாம் மீம் வடிவில் வரும்.

சில வாரங்களுக்குப் பிறகு அந்தக் கதாநாயகரின் படம் வரும்போது அதை வரவேற்று ஆதரவு கொடுத்து வெற்றியடையச் செய்துவிடுவோம். அந்தக் கிரிக்கெட் வீரர் ஒரு சதம் அடித்ததும் முதல் ஆளாக, அந்த வீரரின் உற்ற தோழனாக நம்மை நாமே எண்ணி மகிழுவோம்.

திடீரென சில பிரபலங்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்துப் பேசுவார்கள். உடனே அவர்கள் மக்கள் மத்தியில் ஹீரோ ஆகிவிடுவார்கள். அந்தப் பிரபலத்திடமிருந்து ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் கருத்து வந்த அந்த நாளுக்கு முந்தைய நாள் வரை அவர் கெட்டவர் என்று பெயர் பெற்றிருந்தாலும், அவப்பெயர் சம்பாதித்திருந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கருத்து சொன்ன அடுத்த நொடியே அவருடைய அவப்பெயர் எல்லாம் சலவை செய்யப்பட்டு, பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டு அவர் புனிதராகிவிடுவார்.

இதில் தவறேதுமில்லை. நம் கருத்தை, நம் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை எதிர்ப்புகளை மீறி யாராவது ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்பது சாதாரண விஷயம்தான். ஆனால் ஆண்டுதோறும் இதே மாதிரி நடந்துகொண்டிருந்தால் இதற்கான தீர்வுதான் என்ன?

நம் வரலாறு, தமிழ்க் கலாச்சார விஷயங்கள், நம் பண்பாடு ஆகியவை தமிழர்களாகிய நம்மைத்தவிர வேறு எத்தனைப் பேருக்குத் தெரியும்? வட இந்தியர்களை விடுங்கள், நம் அண்டை மாநிலத்தவர்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியுமா? ஏன், தமிழர்களிலேயே சிலருக்கு இவையெல்லாம் தெரியாது என்றே நினைக்கிறேன்.

என் அலுவலகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த, ஆனால் சிறு வயதிலேயே டெல்லியில் குடியேறிய நண்பன் ஒருவன் இருக்கிறான். ஒரு நாள் கிளையண்ட் மீட்டிங் ஒன்றில் உலக மொழிகள், மற்றும் இந்திய மொழிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடன் கிளையண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் அப்போது இருந்தார்.

அந்த விவாதத்தின்போது இந்திய மொழிகளைப் பற்றிப் பேசும்போது, "இந்தியாவுக்கென்று தேசியமொழி ஏதும் கிடையாது. அலுவல் மொழிகள் நிறைய உள்ளன" என்று நான் சொல்ல, அதற்கு அவன், "இல்லையில்லை, ஹிந்திதான் இந்தியாவின் தேசியமொழி" என்றான்.

நான் அதை மறுத்தேன். அதற்கு அவன் ஏளனமாய்ச் சிரித்துக்கொண்டே, "இல்லை. ஹிந்திதான் நம் தேசிய மொழி" என்றான். எனக்கு சுர்ரென்று கோவம் தலைக்கேறியது, அவனைக் கண்ணாபின்னாவெனத் திட்டத் தோன்றியது. என்ன செய்ய, அயல்நாட்டவர் இருக்குமிடத்தில், அயல்நாட்டில் நம் நாட்டைப் பற்றி, மொழியைப் பற்றி சண்டை போட்டு நம் நாட்டு மானத்தை வாங்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அந்த மீட்டிங் முடித்து வந்ததும், தேசிய மொழி சம்மந்தப்பட்ட இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை அவனுக்கு அனுப்பிவைத்து புண்பட்ட என் நெஞ்சை ஆற்றிக்கொண்டேன்.

இதேபோன்று இன்னொரு விஷயம்.

அதே நண்பனுடன் அரசர்கள், கவிஞர்கள் பற்றி இன்னொரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவன், "முகலாய ஆட்சிக்காலத்துலதான் கவிதை, கதை இவையெல்லாம் தனித்தொழிலா மாறுச்சு, அதுக்கு அப்பறம்தான் மத்த மொழிகள்லாம் வளர ஆரம்பிச்சு, மொத்த இந்தியாவே தங்கள் மொழிகள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சாங்க" என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பிறகு, அவனுக்குச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் வரலாற்றைப்பற்றியும், திருவள்ளுவர் போன்ற புலவர்களைப் பற்றியும் எடுத்துச்சொன்னேன்.

என் நண்பன் புத்தகப்புழு, தேடித்தேடி படிப்பவன். அறிவாளி. அவனுக்கே இந்த விஷயமெல்லாம் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்கு?

இதற்குக் காரணம் அவன் படித்து வளர்ந்த பாடப்புத்தகங்கள் மற்றும் அதிலுள்ள விஷயங்கள் ஆகியவற்றை  வடிவமைத்தவர்கள்தாம்.

வரலாறு பாடத்தில் வட இந்திய அரசர்களைப் பற்றிப் படித்தோம் நாம். இதேபோல், வட இந்தியர்கள் நம் மன்னர்களைப் பற்றியெல்லாம் படித்திருப்பார்களா? மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

விஜயநகர அரசர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம் நாம். இதேபோல், ஆசியாவிலேயே மிக வலிமைவாய்ந்த கடற்படையை அமைத்து ஆட்சி நடத்திய சோழர்களைப் பற்றியெல்லாம் நம் அண்டை மாநிலத்தவர்களாவது படித்திருப்பார்களா? சந்தேகம்தான்.

என்றாவது நாம் தேர்ந்தெடுத்த மந்திரிகள் இதைப்பற்றி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கிறார்களா? புகழ்பெற்ற நம் இலக்கியங்களைப் பற்றி, அவற்றின் சிறப்பைப் பற்றி யாராவது எடுத்துரைத்திருக்கிறார்களா?

இவ்வளவு ஏன், ஆண்டுதோறும் வரும் காவிரிப் பிரச்சினையின்போதும், முல்லை பெரியாறு பிரச்சினையின்போதும் அந்த மாநிலங்களை ஆதரித்துப் பேச, மத்திய அரசில் அதிகாரம் பொருந்திய ஏதோ ஒரு துறையின் மத்திய அமைச்சராக அல்லது அதற்கு இணையான ஒரு பதவியில் அந்த மாநிலத்துக்காரர் இருக்கிறார். நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாதிரி ஒரு நிலையில் இருந்திருக்கிறார்களா? அப்படி இருந்திருந்தாலும், அவர்களால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்து, நம் உரிமைகள் நமக்குக் கிடைத்தனவா? ஒவ்வொரு ஆண்டும் போராடிக்கொண்டுதானே இருக்கிறோம்?

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் நிலைமை இதுதான் என்றிருக்க, ஜல்லிக்கட்டு போன்ற விஷயங்களெல்லாம் அவர்களுக்குப் புரியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு, பிரிவினைவாதம் பற்றிப் பேசாமல், நம் தமிழ்மொழியின் சிறப்பு, அதன் வளம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றிப் பரவலாகப் பேச வேண்டும். ஆட்சி, அதிகாரம் இருக்குமிடத்தில் பேச வேண்டும். ஆட்சியாளர்களுக்குப் புரியும் மொழியில் பேச வேண்டும். அதற்கு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், கற்றுக்கொள்ள வேண்டும். அம்மொழியைக் கற்று, நம் மொழியின் சிறப்பை, நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை எடுத்துரைக்க வேண்டும்.

பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவற்றைச் சரிபார்க்க உண்மையான தமிழ்ப் பற்றுள்ள நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் இப்பணியைச் செவ்வனே செய்ய வேண்டும்.

இவையெல்லாம் நடக்காதவரை ஜல்லிக்கட்டு போன்ற விஷயங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருந்துகொண்டேதானிருக்கும், பொங்கலில் இருக்கும் மிளகுபோல் விலக்கி வைக்கப்படுவது மாறாது!

#பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

11-Sep-2016:

 

#பேருந்துப்_பயணங்களில்!

அலுவலகத்திலிருந்து மெட்ரோ ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மொபைலில் இருந்த பாடல்களை ஒவ்வொன்றாக என் காதிற்குள் கொண்டு சென்று தன் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டிருந்தது Ear-phone.

பாடல்களாக இருந்தாலும் சரி, படங்களாக இருந்தாலும் சரி, அனைத்தையும் மொபைலில் வைத்துக்கொள்ளலாம். உலகத்தையே கைக்குள் அடக்கிவிடுகிறது இப்போதைய தொழில்நுட்பம். அதற்கு அடங்கிக்கிடக்கிறோம் நாம்.

ஒரே ஒரு மொபைலில் ஏகப்பட்ட பாடல்கள்  வைத்துக்கொண்டு உலாவிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்ததும், ஆடியோ சிடிக்கள் பிரபலமாகாத சமயத்தில் பாடல் கேசட் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் வாங்கிய கேசட்கள், அதன் தொடர்பான சம்பவங்கள் போன்றவை நினைவில் தோன்றின.

முதலில் ஜீன்ஸ் படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட்டை வாங்கிய சம்பவம் நினைவுக்கு வந்தது.

சங்கர் -.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்றாலே பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். எதையாவது புதுமையாய்ச் செய்து மக்களைக் கவர்வார் சங்கர் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்த சமயம் அது. பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. டீக்கடை, திரையரங்கம் என எங்கு சென்றாலும் ஜீன்ஸ் படப் பாடல்கள்தான் ஒலித்தன.

எப்படியாவது அந்தப் படத்தின் கேசட்டை வாங்கிவிட எண்ணி, என் அம்மாவிடம் கொஞ்சம் பணம் வாங்கி, வீட்டெதிரே இருந்த கேசட் கடைக்குச் சென்றேன். என் துரதிர்ஷ்ட்டம், அந்தக் கடையில் ஜீன்ஸ் படக் கேசட் காலியாகியிருந்தது. அன்று மாலை வேறொரு கடைக்குச் சென்று வாங்கி வருவதாகவும், அடுத்த நாள் வாங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னார் அந்தக் கடைக்காரர். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எப்போது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலை கேசட் கடைக்குச் சென்று, கையிலிருந்த பணத்தை நீட்டி, "அண்ணா, ஜீன்ஸ் கேசட் கொடுங்க" என்றேன். கடைக்காரர் அந்தப் பணத்தை வாங்கி தன் பாக்கெட்டில் போட்டுவிட்டு அவருக்குப் பின்னால் இருந்த Rack-கிலிருந்து ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட் வடிவில் எதையோ கொடுத்தார். எனக்கு அது என்னவென்று புரியவில்லை.

ஜீன்ஸ் பேண்ட்டின் பின் பாக்கெட்டை உள்ளங்கை அளவுக்கு வெட்டியெடுத்து அதனுள் கேசட் போடப்பட்டது போல் இருந்தது. கூடவே ஒரு Eclairs சாக்லேட் வேறு.

"என்ன அண்ணா, யார் பாக்கெட்டையாவது பிக் பாக்கெட் அடிச்சீங்களா?" என்று அப்பாவியாய் கடைக்காரரைக் கேட்க, அதற்கு அவர், "இல்லப்பா, இந்தப் படத்தோட கேசட் இப்படித்தான் வருது" என்றார் சிரித்தபடியே. ஒரு படத்தின் பாடல் கேசட்டை இவ்வளவு வித்தியாசமாய்ச் சிந்தித்து வெளியிட்டிருக்கிறார்களே என்ற வியப்பு எனக்கு. என்னை வெகுவாய்க் கவர்ந்தது அது.

இதே போல், உயிரே படத்தின் பாடல் கேசட் வாங்கியவிதமும் நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தின் பாடல்களை நண்பன் Gnanasekar Dasarathan வீட்டில் கேட்டு ரசித்து, எப்படியாவது அந்தப் படத்தின் ஒரிஜினல் கேசட்டை வாங்கிவிட எண்ணி அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்று ஒரிஜினல் கேசட் வாங்கிவந்துவிட்டேன். வந்ததும் எனக்கும் அக்கா Priya Anand-க்கும் சண்டை. எதற்காக பணத்தை வீணடிக்கிறாய் என அவர் கேட்க, நான் அதற்கு பதில் சொல்ல என வீட்டில் பெரும் கூச்சல் அன்று. சமாதானம் ஏற்பட சில நிமிடங்கள் ஆனது.

படத்தின் ஒரிஜினல் கேசட்கள் போலவே 60 மற்றும் 90 ஆகிய இரண்டு விதமான கேசட்கள் வெளிவந்து கொண்டிருந்தன அந்தக்காலத்தில். அதாவது காலியான, பாடல்கள் பதியப்படாத Sony, TDK, T-Series நிறுவனங்களின் கேசட்கள். 60 வகை கேசட்டில் ஒரு பக்கத்திற்கு 6 பாடல்கள் என்ற கணக்கில் மொத்தம் 12 பாடல்கள் பதித்துக்கொள்ளலாம். 90 வகை கேசட்டில் ஒரு பக்கத்திற்கு 9 பாடல்கள், மொத்தம் 18 பாடல்கள் பதித்துக்கொள்ளலாம்.

பெரும்பாலும் படங்களின் ஒரிஜினல் கேசட் வாங்கமாட்டோம். பிடித்த பாடல்களின் பட்டியல் தயாரித்து அவற்றை ஒரு கேசட்டில் பதியச்செய்து வாங்குவோம், காசும் மிச்சம், நிறைய படங்களின் பாடல்களையும் கேட்கலாம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இப்படிச் செய்து செய்து மலை போல கேசட்கள் குவிந்திருக்கும் எங்கள் வீட்டில்.

ஒவ்வொரு முறை வெளியூருக்குச் செல்லும்போதும் காரில் போட்டு கேட்பதற்கு என்னென்ன கேசட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேர்வு செய்த சம்பவங்கள் சுவாரசியமானவை.

ருத்ரம், சமகம், பாண்டிச்சேரி அன்னை பக்திப்பாடல்கள் ஆகிய கேசட்கள் காரில் நிரந்தர  உறுப்பினர்கள் என்பதால்  அவற்றைத்தவிர 8 - 10 கேசட்கள்தான் எடுத்துக்கொள்ள முடியும். கேசட் தேர்வு செய்வது தொடர்பாக நீண்ட நெடிய விவாதம் நடக்கும் எனக்கும் என் அக்காவுக்குமிடையே.

புன்னகை மன்னன், பழைய பாடல்கள் அடங்கிய கேசட்களை அவர் எடுத்து வைப்பார், ஜீன்ஸ், உயிரே போன்ற கேசட்களை நான் எடுத்து வைப்பேன். பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும். சில மணி நேரங்களுக்குப் பிறகு சுமுகமான, இரு தரப்பும் ஒத்துப்போகும்படி முடிவெடுத்து கேசட்களை எடுத்து வைத்துக்கொள்வோம்.

வண்டி கிளம்பியதும் பக்திப்பாடல்களுக்கு ஒரு அரை மணி நேரம் ஒதுக்கிவிட்டு, அதற்குப்பிறகு ஒவ்வொரு கேசட்டாக போட்டு வழிநெடுக பாட்டு கேட்டுக்கொண்டே பயணிப்போம். கூடவே நாங்களும் பாடி, பாட்டுக்குப் பாட்டு விளையாடிக்கொண்டே சென்ற சமயங்களும் உண்டு. மறக்க முடியாத நினைவுகள் அவை.

இப்போது எண்ணற்ற பாடல்களை மொபைலில் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், கேசட்டுக்காக சண்டை போட்ட அந்த நினைவுகளை எண்ணும்போது ஏதோ ஒரு சிறு விஷயத்தை மிஸ் செய்வது போல் தோன்றும்.

இது கேசட்டோடு நின்றுவிடுவதில்லை.

முன்பெல்லாம் நண்பர்களின், நெருக்கமான உறவினர்களின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் போன்றவற்றை எந்தவொரு தொழில்நுட்பத்தின் துணையுமின்றி நம் நினைவில் வைத்துக்கொள்வோம், காலையில் எழுந்து தேதியைப் பார்த்ததும் யாருக்குப் பிறந்த நாள் என்று நம் மூளையில் அலாரம் அடிக்கும், உடனே அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்லிவிடுவோம். சிரமப்பட்டு மனப்பாடம் செய்து மூளையிலேற்றி வாழ்த்து சொன்ன காலம். இப்போதெல்லாம் அதற்கான தேவை குறைந்துகொண்டே வருகிறது.

யாருடைய பிறந்த நாளையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. எல்லாவற்றையும் பேஸ்புக்கும், மொபைலில் வைக்கப்பட்டிருக்கும் Reminder-ம் சொல்லிவிடும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முதல் யாரென்றே தெரியாத virtual  நண்பர்கள் வரை எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிடலாம். சிரமப்படவேண்டியதில்லை.

இது நல்ல விஷயம்தான் என்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியால்தான் இதெல்லாம் சாத்தியமென்றாலும், நினைவில் வைத்துக்கொண்டு நண்பர்கள் வாழ்த்துவதில் இருக்கும் ஒரு சிறு சந்தோஷம், இந்த ஆட்டோமேட்டிக் Reminder மூலம் சொல்லப்படும் வாழ்த்தில் இருப்பதில்லை. ஏதோ ஒரு சிறு பர்சனல் டச் இல்லாமல் போகிறது என்பது என் எண்ணம்.

இப்படி தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்து வந்தால் இன்னும் என்னென்ன சின்னச் சின்ன விஷயங்களைத் தொலைக்கப்போகிறோமோ என்பது கடவுளுக்கே வெளிச்சம்..

 

 

 

02-May-2019:

 

மறக்க முடியாத முகங்கள் – 5:

இப்பகுதியை நான் “A tale of two heart attacks” என்று ஆங்கிலத்தில் எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் மொழிபெயர்ப்பு செய்ய சோம்பேறித்தனமாக இருந்ததால் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன். ஆங்கிலம் தப்பித்தது.

நான் வசிக்கும் பகுதியில் ஒரு அரசியல்வாதி இருக்கிறார். இல்லையில்லை, இருந்தார். 1980-களில் இருந்து 2013 வரை அரசியலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மாரடைப்பில் உயிரிழந்தார்.

அரசியல்வாதி என்றாலே நேர்மையற்றவராகத்தான் இருப்பார் என்ற எண்ணம் நமக்கெல்லாம் தானாகத் தோன்றிவிடும். இது நம் தவறில்லை என்றும் நம்மில் சிலர் நினைக்கக்கூடும். எவ்வளவு வேடிக்கையான விஷயம் இது?

சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் எப்போது மக்கள் பணத்தை, மக்கள் சொத்தை அடைய நினைத்தாரோ, அப்போதே அப்பகுதி மக்கள் அவரது செயலை கண்டித்து, அவரை தண்டித்திருந்தால், இப்போது இந்த கொள்ளையடிக்கும் கலாச்சாரம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா?

இது நம் தவறுதான். சொல்லப்போனால், இதுதான் மிகப்பெரிய தவறு. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்வதை தடுக்காமல் இருப்பதும் தவறுதான். இதை என்று நாம் உணரப்போகிறோமோ? எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம் (இறைவன் இருக்குமிடத்தில் மின்வெட்டு இருக்காது என நினைக்கிறேன்!).

விஷயத்துக்கு வருவோம். இந்த அரசியல்வாதிக்கு நிறைய சொத்துகள், சில பல கல்லூரிகள் இருப்பதாக பலர் சொல்கின்றனர். செல்வச்செழிப்புடன்தான் இருந்தார்.

இவ்வளவு சொத்துகள் இருந்து என்ன பயன், மன அமைதி என்பது இருந்தால்தானே எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியும்? இவரின் மகன் மனவளர்ச்சி குன்றியவராம்.

முற்பிறவியிலோ, இப்பிறவியிலோ நாம் செய்த பாவங்கள் நிச்சயம் நம்மை வந்தடையும் என்பது என் நம்பிக்கை. நம் உடலையும், மனதையும் வருத்தும். வறுத்து அரைத்துவிடும். இந்த அரசியல்வாதியின் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது என நினைக்கிறேன்.

உயிர் பிரியும் அந்த இறுதி நொடிகளில், நிச்சயம் தன் மகனின் நிலைமையைப் பற்றி நினைத்திருப்பார். ஆனால், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

இந்த அரசியல்வாதியை நான் நேரில் பார்த்ததில்லை, பழகியதில்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான். அதனால் இவரது மரணம் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இன்னொருவரது மரணம் என்னை சற்று சங்கடப்படுத்தியது.

சென்ற வாரம் முடிதிருத்தகத்திற்குச் (சலூன் கடை) சென்றிருந்தேன். வழக்கமாக செல்லும் கடைதான். சென்றபோதெல்லாம் இதன் உரிமையாளரை சந்தித்திருக்கிறேன்.

கிரிக்கெட் மைதானத்தில் காணப்படும் புல் போல லெவலாக இருந்த சின்ன தாடி, கண்ணாடி, நெற்றியில் குங்குமத்தில் ஒரு சின்ன கோடு, சரியாக சீவப்பட்ட தலை. எப்போதும் கை மடிக்கப்பட்டிருந்த கட்டம் போட்ட ஒரு முழுக்கை சட்டை, கறுப்பு / சாம்பல் நிற பேண்ட். இதுதான் அவர்.

இரண்டு, மூன்று முறைதான் அவருடன் பேசியிருக்கிறேன். தாய்மொழி தெலுங்கு என்றாலும், கன்னடமும் பேசுவார். என்னதான் பேசினாலும் சத்தம் வராது. மணிரத்னம் அவர்களின் திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவார்.

அதுவும் காதலர்கள் நடுராத்திரியில் போர்வைக்குள்ளேயிருந்து பேசுவதுபோல் அமைதியாக பேசுவார். சில சமயம் அவர் பேசியது அவருக்காவது கேட்டிருக்குமா என வியந்திருக்கிறேன்.

எந்த ஒரு வார்த்தை / வாக்கியம் பேசினாலும் அதன் முடிவில் ஒரு சின்ன புன்னகை அவரது முகத்தை அலங்கரித்துவிடும். அதைப் பார்த்ததும், பதிலுக்கு நம்மால் புன்னகைக்காமல் இருக்கமுடியாது.

இந்த முறை அதே முடிதிருத்தகத்திற்குச் சென்றிருந்தபோது, இவரது புகைப்படம் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. மல்லிகைப்பூ மாலை அந்த புகைப்படத்தின் மேல் மாட்டப்பட்டிருந்தது.

என்ன நடந்தது என விசாரித்தேன். மாரடைப்பில் இறைவனடி சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள் கடையில் வேலை பார்ப்பவர்கள். சொல்ல முடியாத ஒரு சின்ன சோகம் என்னை சூழ்ந்து கொண்டது.

ஒரு நாவலை, தொடர்கதையை படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முக்கிய பகுதி அந்த நாவலில், தொடர்கதையில் இல்லை என்றால் நாம் எப்படி உணர்வோம்? காசு கொடுத்துவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்து புன்னகைக்க அவர் இனி இருக்கமாட்டார் என நினைக்கும்போது எனக்குள் இந்த உணர்வுதான் இருந்தது.

அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனாலும் அவரது மரணம் என்னை பாதித்தது என்றால் அதற்கு அவரது புன்னகை ஒரு முக்கிய காரணம்.

ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன புன்னகையின் மூலம் அந்த நொடியை இனிமையானதாக மாற்றிய அவரது முகம் மறக்க முடியாத முகமே!

#Rewind  #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

18-Dec-2018:

 

#பேருந்துப்_பயணங்களில்!

அலுவலகப் பேருந்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வந்தேன். இந்த 'அறிவிருக்கா' விஷயம் இப்போதைக்கு பரபரப்பாக போய்க்கொண்டிருப்பதால் அதைப் பற்றி பேச ஆரம்பித்து, அப்படியே சினிமா, இசை, அரசியல், விளையாட்டு என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு எழுதி பிரசுரித்துவிட்டு, உத்தியோகம், படிப்பு போன்ற விஷயங்களைப் பேச ஆரம்பித்தோம். காரசாரமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது அந்த உரையாடல்.

முன்பெல்லாம் ஊரில் நிறைய ஆடிட்டர்கள், டீச்சர்கள், சில இஞ்சினியர்கள், வெகுசில டாக்டர்கள் இருந்தார்கள்.

ஆடிட்டர் என்றால் கணக்கு வழக்குகளைச் சரி பார்ப்பவர், டீச்சர் என்றால் பாடம் நடத்துபவர், டாக்டர் என்றால் மருந்து மாத்திரை கொடுத்து உடம்பைச் சரி செய்பவர் என்ற புரிதல் இருந்தாலும், இஞ்சினியர் என்றால் கட்டிடம், மேம்பாலம் கட்டுபவர் என்ற பொதுவான புரிதல்தான் இருந்தது. "என் மகன் இஞ்சினியர் ஆகி பெரிய பெரிய கட்டிடம் கட்டுவான் பாரு" என்று சொன்ன ஏராளமானோரைத் தெரியும்.

அதிலிருந்து மாறி, இப்போது இஞ்சினியர் என்றால் ஏதாவதொரு கணிப்பொறி நிறுவனத்தில் வேலை, நல்ல சம்பளம், சில வருடங்களில் வெளிநாடு பயணம் என்ற பிம்பம் இருக்கிறது. இதனாலேயே இந்தப் படிப்பின் மீதான மோகம் இன்னும் குறைந்தபாடில்லை.

பெங்களூரில் பழமொழி ஒன்று.. இல்லையில்லை, புதுமொழி ஒன்று உண்டு.

'பெங்களூரில் ஏதாவதொரு சாலையில் கல்லெறிந்தால் அது ஏதாவதொரு காரின் மேல் விழும், இல்லையேல் இஞ்சினியர் மேல் விழும்' என்பதுதான் அந்த புதுமொழி. அந்த அளவுக்கு இப்போது எங்கு பார்த்தாலும் இஞ்சினியர்கள்தான். வேலையில்லாமல் திண்டாடும் நிலைமையைவிட இது எவ்வளவோ மேல்!

மருத்துவப்படிப்பின் மீதிருந்த மோகம் குறைந்துவிட்டதாகவும், அதற்கான பிரதானமான காரணங்களுள் ஒன்றாக மருத்துவக் கல்லூரியின் சீட்டின் விற்பனை விலை ('பேர விலை'யிலிருந்து 'விற்பனை விலை'யாய் மாறியிருக்கிறது போல) எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பது என்றும் சொன்னார். அவர் சொன்னதைப் பார்த்தால் லகரங்களில் இருந்து கோடிகளுக்குத் தாவி கல்பகோடி வருடங்கள் ஆகிவிட்டதுபோல இருக்கிறது.

நல்ல வேளை, 'சேவை வரி' என்று எதுவும் வாங்காமல் இருக்கிறார்களே, அதுவே பெரிய விஷயம்.

அடுத்து பள்ளிப்படிப்பு, கட்டண நிலவரம் போன்ற திசையில் பயணித்தது எங்கள் பேச்சு.தன் மகனைப் பற்றியும், அவன் படிக்கும் பள்ளியைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

ஏழு வயதாகிறது அவரது மகனுக்கு. இந்தியா முழுவதும் பல கிளைகளைக் கொண்ட ஒரு பள்ளியில் படிப்பதாகச் சொன்ன போது அவர் முகத்தில் பெருமை தாண்டவமாடியது.

பாட்டு, நீச்சல் இப்படி ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லித்தருவதாகவும், வீட்டுப்பாடங்களைகூட இணையத்தை உபயோகப்படுத்தி அதிலிருந்து பார்த்து படித்து எழுதி எடுத்து வரச் சொல்வதாகவும் பூரிப்புடன் சொன்னார்.

ப்ராஜெக்டுகள் நிறைய கொடுக்கிறார்களாம், அதற்கு பெற்றோரும் உதவ வேண்டுமாம். இப்படி அடுக்கிக்கொண்டே போனார். இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தபோது அவர் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். ஆயிரம் வாட் விளக்கு தோற்றது போங்கள்.

பள்ளி கட்டணத்தைக் கேட்டதும் ஒரு கணம் தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

"என்னங்க, மூணாங்க்ளாசுக்கு இவ்ளோ கொடுக்கணுமா?" என்று கேட்டேன்.

"அதையேன் கேக்கறீங்க, இப்போல்லாம் எந்த ஸ்கூல்ல பசங்க படிக்கறாங்கன்னு சொல்றதே ஒரு ப்ரெஸ்டீஜ் விஷயமில்லையா!" என்றார்.

இது இந்த காலகட்டத்தில் முற்றிலும் உண்மையான, வேதனையான ஒரு விஷயம்.

'பள்ளியின் பெயரைச் சொன்னதும், கேட்பவரின் தலைக்கு மேல் ஒரு பல்ப் எரியவேண்டும்."பரவாயில்லையே, உங்க பசங்க பெரிய ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க" என்று அவர் சொல்ல வேண்டும். "எப்படி அட்மிஷன் கெடைச்சுது, சிபாரிசு கடிதம் கொடுத்தால் சீட்டு கெடைக்குமா, உங்களுக்கு ஏதாவது டெஸ்ட் வெச்சாங்களா, அதுக்கு நீங்க படிச்சீங்களா" என்றெல்லாம் கேட்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நொடி பொறாமைப் பார்வையாவது அவரிடமிருந்து பரிசாய் கிடைக்க வேண்டும். இதில் எதுவுமே நடக்கவில்லையென்றால் ஏதோ ஒரு பெரிய சமூகக் குற்றம் புரிந்துவிட்டது போல் தோன்ற வேண்டும்' - இந்த மாதிரி ஒரு மனநிலையை இந்த மாதிரி சில பள்ளிகள் நம் மக்கள் பலரின் மனதில் வெற்றிகரமாக விதைத்துவிட்டது. அதன் விளைவுதான் நண்பர் சொன்ன இந்த 'ப்ரெஸ்டீஜ்' விஷயம்.

பள்ளி கட்டணத்தைச் சமாளிக்கவே கடன் வாங்க வேண்டிவரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

இது எங்கே போய் முடியப்போகிறதோ, எல்லாம் அந்த சரஸ்வதிக்கே வெளிச்சம்!

#Rewind

 

 

 

20-Jul-2018:

 

நானும் போலி பெண்ணியவாதியும்:

வீட்டுக்கு வந்திருந்த போலி பெண்ணியவாதி தோழியும், நானும், என் மனைவியும் எங்கள் மகள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி/இணையதளப் பாடல்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவற்றில் சிலவற்றை தொலைக்காட்சியில் போட்டுக் காண்பித்தோம்.

முதலில் "அம்மா இங்கே வா வா" என்ற பாடல் வந்தது.

நான்: இதுதான் விரும்பிப் பார்ப்பா எங்கள் மகள்

போலி பெண்ணியவாதி: என்ன பாட்டு இது?

நான்: இது தெரியாதா?

போலி பெண்ணியவாதி: மறந்துபோச்சு, பாட்டைப் ப்ளே பண்ணு.

நான்: சரி இரு

பாடலை யூடியுப் வழியாகத் தொலைக்காட்சியில் போட்டேன். பாடல் ஆரம்பித்தது.

"அம்மா இங்கே வா வா

ஆசை முத்தம் தா தா"

இந்த இரு வரிகளையும் அமைதியாய் கேட்ட அந்தப் போ.பெ. "இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு" எனற அடுத்த இரு வரிகளைக் கேட்டதும் கொஞ்சம் நிதானமிழந்தது போல் தெரிந்தது.

போ.பெ: என்ன இது இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டுன்னு? ஏன் அம்மாதான் சோறு போடணுமா, அப்பா சோறு போட்டா என்ன குறைஞ்சிடுவாரா?

பதிலேதும் பேசவில்லை நான். அந்தப் பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பித்தது.

"தோசையம்மா தோசை

அம்மா சுட்ட தோசை

அரிசி மாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை"

மறுபடியும் "அம்மா சுட்ட தோசை" என்று வருகிறதே, என்ன சொல்லப்போகிறாரோ என நினைத்து போ.பெயைப் பார்த்தேன், கொஞ்சம் கோபத்தில் இருந்தார்போல. இப்போதுதான் ஆரம்பித்தது வினை.

"தோசையம்மா தோசை

அம்மா சுட்ட தோசை

அரிசி மாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை

அப்பாவுக்கு நாலு

அம்மாவுக்கு மூணு

அண்ணனுக்கு ரெண்டு

பாப்பாவுக்கு ஒன்னு" என்று பாடல் முடிந்தது. ஆரம்பித்தார் போ.பெ.

போ.பெ: இங்கயும் partiality பாரு. சமத்துவமே இல்லை. தோசை சுட்டு தர்ற அம்மாவுக்கு மூணே மூணு தோசையாம், சும்மா உக்கார்ந்து சாப்பிடற அப்பாவுக்கு நாலு தோசையாம். என்ன அநியாயம் இது?

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் நான், "அதனால என்ன, அம்மாவுக்கு நாலுன்னு நெனச்சுக்கவேண்டியதுதானே" என்றேன்.

"நெனச்சா மட்டும் பத்தாது. சிஸ்டத்தையே மாத்தணும். நம்ம நாடே சரியில்லை. பெண்ணும் ஆணும் சரிசமம் என்பது நம்ம நாட்டுல யாருக்குமே தோனறதில்லை, இப்படியே போச்சுன்னா நல்லதில்லை" என்று உடனே வந்தது பதில் அவரிடமிருந்து.

இப்படியே போனால் சண்டைதான் வரும் என நினைத்து, யாருமே அழைக்காத என் அலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டு, "ஹலோ, யாரு தன்ராஜா..." என்று 'சூரியன்' படத்தில் வரும் கவுண்டமணியைப் போல் அங்கிருந்து நழுவினேன்.

டிஸ்கி: இப்பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.

#கனடா_குறிப்புகள்! #பேருந்துப்_பயணங்களில்! #Rewind

 

 

 

30-Nov-2017:

 

#நாடோடிகள்!

சன் டிவியில் இப்போது ஆயிரத்து முப்பதாவது தடவையாக நாடோடிகள் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக சில திரைப்படங்களை ஒரு தடவை பார்த்தாலே சலித்துவிடும். சில திரைப்படங்களை பல தடவை பார்க்கலாம். என்னைப் பொறுத்தவரையில் நாடோடிகள் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. இதற்கு முக்கியமான காரணம் கிட்டத்தட்ட இந்தப் படத்தில் வந்தது போலவே ஒரு சம்பவம் எங்கள் வாழ்வில் நிகழ்ந்ததுதான்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும், பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் எப்போதும் ஒரே குழுவாக இருப்போம். கூடைப்பந்து, சீட்டுக்கட்டு, கம்ப்யூட்டர் விளையாட்டுகள் போன்றவை இல்லாமல் எங்களின் நாள் முடிவடையாது.

பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருத்தி, அதுவும் வட இந்தியப் பெண், எங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவனை சின்சியராக காதலிப்பதாகவும், ஆனால் அதற்கு இவன் அசைந்து கொடுக்காமல் இருப்பதாகவும் என் உயிர் நண்பன் Vijay Kumar ரிடம் சொன்னாள்.

இதை விஜய் என்னிடம் சொல்ல, எப்படியாவது நண்பனை சம்மதிக்க வைத்து காதலை வாழவைக்க வேண்டும் எனத் தோன்றியது எங்கள் இருவருக்கும். உள்ளூரிலேயே யாரும் சீண்டாமல் இருந்த காலத்தில், வட இந்தியாவிலிருந்து ஒரு அப்ளிகேஷன் வருகிறது என்றால் சொல்லவா வேண்டும்? இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஷாஜகான் அந்த காலகட்டத்தில்தான் வெளிவந்தது என்பதை இந்தச் சமயத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும்.

நண்பனை எப்படி வழிக்குக் கொண்டு வந்து, அவன் விக்கெட்டை எடுப்பது என்று நானும் விஜய்யும் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் இன்னொரு நண்பனின் அக்காவின் திருமணம் திருநெல்வேலியில் நடக்கவிருப்பது தெரிய வர, அந்தப் பயணத்தில் எப்படியாவது நண்பனை காதலுக்கு சம்மதிக்க வைத்து, அவனை அவுட்டாக்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தோம். இதற்காக ஒரு ப்ரத்யேக அண்டர்கவர் ஆப்பரேஷனை மேற்கொண்டோம் நானும் விஜய்யும்.

வேலூரிலிருந்து விழுப்புரம் சென்று, அங்கிருந்து திருநெல்வேலி செல்வது என்று முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் கிளம்பினோம். வழிநெடுக நண்பனை மூளைச்சலவை செய்து ரிவர்ஸ் கியரில் இருந்தவனை நியூட்ரலுக்கு கொண்டு வந்துவிட்டோம்.

திருநெல்வேலியில் கிடைத்த கேப்பிலெல்லாம் எங்கள் அண்டர்கவர் ஆப்பரேஷனை நாங்கள் செவ்வனே செய்து வந்து, முதல் கியர், இரண்டாம் கியர் என படிப்படியாக நண்பனை முன்னேற்றினோம். நெல்லையப்பரும், திருச்செந்தூர் முருகனும் எங்களைப் பார்த்து சிரித்து, எங்களுக்கு அருள் புரிவதாக நினைத்தோம். அவனின்றி ஓரணுவும் அசையாதல்லவா?

இறுதியில், மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வேலூர் திரும்பியபோது நண்பனை டாப் கியர் போடவைத்திருந்தோம். அவன் விக்கெட்டை எடுத்த பவுலர்கள் நானும் விஜய்யும்தான் என்றாலும் எங்களின் மற்ற நண்பர்களும் ஃபீல்டர்களாக இருந்து பேருதவியாற்றினர்.

எங்கள் அண்டர்கவர் ஆப்பரேஷனை நல்லபடியாக செய்து முடிக்க வைத்த நெல்லையப்பருக்கும், திருச்செந்தூர் முருகனுக்கும் நன்றி சொன்னோம் நானும் விஜய்யும். ஆத்ம திருப்தி எங்களுக்கு.

இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்பிறையாக வளர்ந்து சில வருடங்களில் தேய்பிறையாக தேய ஆரம்பித்தது. இறுதியில் பிரிந்தேவிட்டனர். எங்கள் ஆப்பரேஷன் வெற்றி பெற்றிருந்தாலும், கடைசியில் பேஷண்ட் அவுட்டாகி பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

நாடோடிகள் திரைப்படத்தில் வருவதுபோல இந்த காதல் ஜோடியை சமாதானம் செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் நல்ல வேளை நானும் விஜய்யும் அப்போது நினைக்கவில்லை. ஒருவேளை அப்படி முயற்சிகள் செய்து, படத்தில் வருவதுபோலெல்லாம் நிகழ்ந்திருந்தால் கால் உடைந்து, காது கேட்காமல் யார் கிடப்பது!

நெல்லையப்பரும், திருச்செந்தூர் முருகனும் எங்களைப் பார்த்து அப்போது சிரித்த சிரிப்பின் அர்த்தத்தை இந்த நாடோடிகள் படம் வெளிவந்த பிறகுதான் புரிந்துகொண்டோம் நாங்கள்.

#Rewind  #பேருந்துப்_பயணங்களில்

 

 

 

06-Feb-2017:

 

நேற்றிரவு ஷாந்தி நகர் பேருந்து நிலையத்திற்கு டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தோம். எந்த வண்டியென்று சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கடுப்பேற்றுகிற சிற்றுண்டி என்றதும் உப்புமா நினைவுக்கு வருவதும், டாக்ஸி வண்டி என்றதும் டாடா இண்டிகா நினைவுக்கு வருவதும் இந்தியர்களுக்கே உரிய டிசைன். இதை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது என்றே நினைக்கிறேன், மாறிவிடவும் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். பின் என்ன, நாம் மட்டும்தான் இவற்றையெல்லாம் அனுபவிக்கவேண்டுமா? யாம் பெற்ற இன்பம் பெறுக அனைவரும்.

வழியில் பயங்கர போக்குவரத்து நெரிசல். வழிநெடுக இதே கதைதான். ஆனால் இது ஒன்றும் புதியதல்லவே. வாழ்க்கையைப் பொறுத்தவரை மூன்று விஷயங்கள் நிதர்சனம்.

1. பிறப்பு

2. இறப்பு

3. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல்.

இவற்றில் முதல் இரண்டும் எப்படியோ தெரியவில்லை, மூன்றாவது விஷயம் நிதர்சனம் மட்டுமல்ல, நிரந்தரமும்கூட.

சரி, விஷயத்துக்கு வருவோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டது. நெரிசலில் சிக்கிய வண்டிகள், வண்டிக்காரர்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விட வேண்டுமே என்று என்னைப் போலவே சில பேர் வேண்டியிருக்கக்கூடும். சில நொடிகளில் ஆம்புலன்ஸ் செல்லத் தேவையான அகலமுள்ள வழியொன்றை ஏற்படுத்திக் கொடுத்தனர் நம் மக்கள். "நான் இருக்கேன் குமாரு" என்று அந்த நொடி கடவுள் மனிதனிடம் சொல்லியிருப்பார் என நினைத்துக்கொண்டேன் .

சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றால், அதன் பின்னாலேயே மரண வேகத்தில் சென்று, அப்படிச் செல்லும்போது ஒரு வேளை விபத்து நேர்ந்தால் அந்த ஆம்புலன்ஸில் அப்படியே அலேக்காக ஏறிவிடும் அளவுக்கு வண்டியை ஓட்டுபவர்கள் இருப்பார்களே, அவர்களைப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. யாருமே அந்த ஆம்புலன்ஸ் பின்னால் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடவில்லை. "நான் இன்னமும் இருக்கேன்" என்று மனிதன் கடவுளிடம் சொல்லியிருப்பானோ?

எப்படி வந்தது இந்த மாற்றம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பக்கத்தில் யாரோ ஒருவர் இன்னொருவரை செம்மொழியில் வசை பாடிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்து என் கவனம் கலைந்தது. யாரென்று பார்க்கையில், அது யாரோ ஒரு பெண்மணி என்று புலப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்துகொண்டு யாரை இப்படி வசை பாடிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தேன். யாருமே இவர் பேசுவதை, இல்லையில்லை, ஏசுவதை பொருட்படுத்தவில்லை என்பது புரிந்தது.

யாரைத்தான் இப்படி ஏசிக்கொண்டிருக்கிறார் என்று யோசித்தபோதுதான் புரிந்தது, அவர் வசை பாடிக்கொண்டிருந்தது தன் தலைக்கவசத்தினுள் மறைத்து வைத்திருந்த அலைபேசியில் ஒலித்தக்கொண்டிருந்த குரலுக்குச் சொந்தக்காரரான யாரோ ஒருவரைத்தான் என்று.

யார் அந்த பாவப்பட்ட ஜென்மம் என்று நான் உச்சுக்கொட்டி பரிதாபப்பட்ட நேரத்தில், போக்குவரத்து நெரிசல் சற்று க்ளியரானது. அடுத்த நொடி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல சீறிப் பாய்ந்தன வண்டிகள். எங்கள் பயணமும் தொடர்ந்தது.

சாலையில் எங்களுக்கு முன்னே சற்று தூரத்தில் ஒரு போர்ஷே கார் போய்க்கொண்டிருந்தது. ஆஜானுபாகுவாக இருந்தது. நம்பர் ப்ளேட்டைப் பார்த்தேன், பாண்டிச்சேரியில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட வண்டியென்று தெரிந்தது. லட்சங்களையும் கோடிகளையும் போட்டு விலையுயர்ந்த வண்டிகளை வாங்கிவிட்டு, சாலை வரியில் சில பல லகரங்களை சேமிப்பதற்காக பாண்டிச்சேரியில் வண்டியை ரெஜிஸ்டர் செய்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இவர். சரி, இருந்துவிட்டுப்போகட்டும். அவர்  பணம், அவர் உரிமை (உபயம் - கல்யாண் ஜிவல்லர்ஸ் பிரபு). அவருக்கான நேரம் வரும் வரை பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கத் தேவையான மருந்து அவரிடம் நிறையவே இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும்.

அப்போது திடீரென வண்டியின் ஜன்னல் கண்ணாடியொன்றைத் தாழ்த்திவிட்டு, உபயோகப்பட்டுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்பொன்றை சாலையில் போட்டது வண்டிக்குள்ளிருந்து தோன்றிய கை. அந்த கப் தரையில் விழுவதற்குள் விருட்டென பறந்தது அந்த போர்ஷே. அந்த நொடியில் எனக்கு அந்த போர்ஷே கார் மீது இருந்த ஈர்ப்பு மறைந்து அதை ஓட்டிக்கொண்டிருந்தவனின் மீது வெறுப்பும், அருவருப்பும்  தோன்றியது. கார் காஸ்ட்லியாக இருந்தாலும் அதை வாங்கிய ஆட்கள் 'சீப்'பாக இருக்கலாம் என்ற உண்மை விளங்கியது.

"இந்த மாதிரி படித்த பரதேசிகள் உள்ளவரை இந்தியாவை அசைக்கவே முடியாது" என்று கடவுள் சொன்னது என் காதில் மட்டும்தான் விழுந்ததோ?

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

25-Dec-2016:

 

#பேருந்துப்_பயணங்களில்! #Rewind!

சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பதிவொன்றைப் பார்த்தேன். அதில் இந்த உலகத்தின் கடன், ஏன், நம் பூமியின் கடன் சில ஆயிரம் ட்ரில்லியன் டாலர்கள், ஆனால் இத்தொகையானது யாரிடமிருந்து வாங்கிய கடன்?” என்று போடப்பட்டிருந்தது.

அருமையான கேள்வி!

இன்று காலை முடி திருத்தும் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது இக்கேள்வி நினைவில் வர, இதைப் பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

சில நாட்களுக்கு முன்பு, திரையுலக, திரை பிரபஞ்ச நாயகன் ஒருவர், “தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் சலுகைத் தொகையை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தால் மக்களின் வசதி பெருகிவிடுமே என்று சொன்னது போலவும், பின்பு அதை வேறொருவர் சொன்னது போலவும் உலவிய செய்தியும் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒன்றுதான்.

எப்படி இவர்களால் இந்த மாதிரி யோசித்து கேள்விகளை கேட்க முடிகிறது, அறிக்கைகளை விட முடிகிறது என்ற வியப்பில் ஆழ்ந்து இருந்ததில் கடையைத் தாண்டி சென்றுவிட்டேன். சில நொடிகளுக்கு பின் சுதாரித்துக்கொண்டு, கடையை வந்தடைந்தேன்.

இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட, குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒரு கார்பரேட் சலூன் அது.

உள்ளே நுழைந்தபோது ஸ்பீக்கரில், “அடிடா அவளை, உதைடா அவளை..என்ற அற்புதமான, பின் நவீனத்துவ, கருத்துச் சுதந்திரத்தின் முழு வடிவமான பாடலொன்று ஒலித்துக்கொண்டிருந்தது.

அடடா, என்ன ஒரு பீப்க்கர்.. இல்லையில்லை, ஸ்பீக்கர், எத்தனை அருமையான சவுண்ட் எஃபெக்ட் என்று வியந்தேன்.

அங்கிருந்த யாரோ ஒருவர் ஏ.சி.யை கம்மியாக வைத்திருந்ததால், வேலூரை விட்டு.. ஏன், 'தமிழ்நாட்டை விட்டே, வெளியேறியதைப்' போல் உணர்ந்தேன். ஆனால், வேறு போக்கிடம் இல்லாததால் சில நொடிகளிலேயே நிகழ்காலத்துக்கு, நிதர்சனத்துக்கு வந்தேன்.

இந்த மாதிரி கார்பரெட் சலூன் கடைகளுக்குப் போவதற்குமுன், குறிப்பிட்ட நேரத்துக்கான அப்பாயின்மெண்ட் வாங்கிவிடுவது சாலச் சிறந்தது. இது இன்றுதான் எனக்குப் புரிந்தது. நல்ல வேளை, நான் அப்பாயின்மெண்ட் வாங்கியிருந்தேன்.

கடையில், எனக்கு முன்பே வந்து, தங்களின் முறைக்காகக் காத்திருந்த சிலரை இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்க வைத்துவிட்டு, விமான நிலையத்தில் வெகு நேரமாகக் காத்துக்கொண்டிருக்கும் பொதுஜன வரிசையையெல்லாம் கொஞ்சமும் மதிக்காமல், அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிற மந்திரியைப் போல, என்னை அழைத்துச் சென்று குஷன் போட்ட ரோலிங்க் நாற்காலியில் என்னை அமர வைத்தார் அங்கு வேலை செய்பவர்.

கட்டிங்கா, ஷேவிங்கா, டிரிம்மிங்கா, இத்யாதி இத்யாதி கேள்விகளுக்கு க்விக் ஃபையர் ரவுண்டில் பதில் சொன்னதும், பொன்னாடை போர்த்துவது போல், கருப்புத் துண்டொன்றை போர்த்திவிட்டு, ‘பொருட்களை எடுத்து வந்து தன் பணியைச் செவ்வனே செய்தார்.

லெஃப்ட், ரைட், யூ டர்ன் எல்லாம் போட்டபடி, அவர் சொன்னபடியெல்லாம் தலையை அசைத்தேன். என்ன செய்வது, இருப்பது ஒரே ஒரு தலையாயிற்றே, அதையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே!

அப்போது, பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் தலையில், கரைத்து வைத்த கெமிக்கல் மருதாணி கோட்டிங்க் நிகழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். சரியாக அதே நேரத்தில், ‘சக்கரகட்டி படத்தில் வந்த மருதாணி விழியில் ஏன்?’ என்ற பாடல் ஒலிபரப்பானதும், இருவரும் புன்னகைத்தோம்.

கட்டிங் முடித்துவிட்டு, ஷேவிங் செய்யச் சொன்னேன். பொருளை எடுத்து, புதிய ப்ளேட் ஒன்றை உடைத்து, ஒரு பகுதியை அதனுள் செருகி, கன்னத்துக்குப் பக்கத்தில் எடுத்து வந்த போது, “லேசா லேசா என்ற பாடல் ஸ்பீக்கரில் ஒலிக்க ஆரம்பிக்க, நானும் ஷேவிங் செய்பவரும் லேசாக ஒரு புன்னகையை பரிமாறிக்கொண்டோம்.

ஒரு கன்னத்தில் கத்தி வைக்கப்பட்டு வேலை முடிந்ததும் மறு கன்னத்தையும் காட்டி, வேலை முடியும் வரை பொறுமையாய் இருந்தேன். இந்த நாள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுபிதாவின் பிறந்தநாளான கிருஸ்துமஸ் திருநாளாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஷேவிங் செய்யும்போது இரு கன்னங்களையும் காட்டித்தானே ஆக வேண்டும் 🙂

வேலையை முடித்துவிட்டு, “சார் வாஷ் பண்ணிக்கிறீங்களா?” என்றார் அவர். அதாவது, ஹேர் வாஷ். அதாவது அதாவது தலை குளியல். சரியென்றேன்.

இந்த மாதிரி கார்பரேட் சலூன் கடைகளில் அவர்களே நமக்கு தலை குளிப்பாட்டி விடுவார்கள். இதற்கென தனியாக ஒரு தொகையை கரந்துவிடுவார்கள் என்றாலும், ‘சின்ன தம்பி படத்தில் வந்த உச்சந்தலை உச்சியில உள்ளிருக்கும் புத்தியில என்ற பாடலில் குஷ்பூவின் மூன்றாவது அண்ணனின் தலையை பிரபு மசாஜ் செய்வது போல் இவர்களும் மசாஜ் மாதிரி செய்வார்கள். நன்றாக இருக்கும், ரிலாக்ஸாகிவிடுவோம்.

என் நல்ல வேளை, என் தலைக்கு மசாஜ் செய்தவர் இப்போதைய பிரபு மாதிரி இல்லை 🙂

நல்லதொரு மசாஜ் கிடைக்கப்பெற்று, இறுதியாக இவற்றுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்காக ரிசப்ஷனை நோக்கி வந்தபோது, பெண்கள் அறையிலிருந்து அழகு ஆன பெண் ஒருவர் வெளியே வர,

சரியாக அந்த நேரத்தில் லேசா லேசா படத்திலிருந்து அவள் உலக அழகியே என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்க,

நான் என்னை அறியாமல் அவரைப் பார்த்து புன்னகைக்க,

ரிசப்ஷனில் ரொம்ப நேரமாகக் காத்துக்கிடந்த அந்தப் பெண்ணின் கணவர் என்னைப் பார்த்து முறைக்க ஆரம்பிக்க,

ச்சே, கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லாத நாடு, மாநிலம், ஊர், தெரு.. இதைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்து, கட்டணத்தைக் கட்டிவிட்டு வெளியே வந்தேன்.

 

 

 

28-Nov-2015:

 

#பேருந்துப்_பயணங்களில்! Part 2:

'வெற்றிப்படமான, எனக்குப் பிடித்திருந்த 'கோலி சோடா' படத்தின் இயக்குனர் விஜய் மில்டனின் இயக்கத்தில், சீயான்' விக்ரம் நடிப்பில், வெளிவந்த படம்தான் 'பத்து என்றதுக்குள்ள'.

விக்ரம் நடித்திருக்கிறார் என்றால் படத்தில் ஏதாவதொரு புதுமையான விஷயமிருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. படத்தில் புதுமையான விஷயங்கள் இரண்டு இருந்தது.

1. ஹீரோவின் கதாபாத்திரத்துக்கு பெயர் கிடையாது. ஜேம்ஸ் பாண்ட், மணிரத்னம் என்று ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு பெயர் சொல்வார் விக்ரம்.

2. ஹீரோயின் சமந்தாவுக்கு இந்த படத்தில் இரட்டை வேடம்.

மற்றபடி சொல்வதற்கில்லை.

விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றால், படத்தில் நிச்சயம் ஏதாவதொரு விஷயம் இருக்கும் என்று படம் ஆரம்பித்ததுமுதல், தூங்காமல் கண்களில் விளக்கெண்ணை ஊற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். இடைவேளை வரும்போது என் பக்கத்திலிருந்தவரின் குறட்டை சத்தம் என் காதைத் துளைத்தது!

திரையரங்காக இருந்திருந்தால் இடைவேளையில் கிளம்பியிருக்கலாம், பேருந்தில் அப்படிச் செய்ய முடியாது. கையில் ரிமோட் இருந்திருந்தால் படத்தை நிறுத்தியிருக்கலாம் அல்லது நானும் தூங்கியிருக்கலாம்.

ஆனால், ஏனோ, விக்ரம் மீது ஒரு மரியாதை, ஒரு பரிதாபம். அதனால் எப்படியாவது படத்தை முழுமையாகப் பார்த்துவிடவேண்டும் என்று சபதம் பூண்டேன். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய், "பீசு பீசா கிழிந்தபோதும் ஏசு போல பொறுமை" நிறைந்த பாட்ஷா ரஜினியாய்த் தொடர்ந்தேன்.

இரண்டாம் பாகம் இன்னும் கொடுமை. '' விக்ரம் பாணியில் சொல்லவேண்டும் என்றால், "அதுக்கும் மேல".

படத்தில் மூன்று 'டெரர்' வில்லன்கள் இருந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இனி இந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று வில்லன்கள் சபதமெடுத்தாலொழிய இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்பு கொஞ்சம்கூட இல்லை.

விக்ரமின் ராசியே இப்படித்தானோ என்னவோ, தெரியவில்லை. 'பிதாமகன்', 'அந்நியன்', 'தெய்வத்திருமகள்' போன்ற படங்கள் கொண்ட வரிசையைவிட 'மஜா', 'பீமா', 'ராஜபாட்டை' போன்ற படங்கள் கொண்ட வரிசை வளர்ந்துகொண்டேயிருக்கிறது. படத்தைப் பொறுத்தவரையில், பாவம் அவர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும், படம் பார்த்த மக்களும்கூட.

நானும் 'இதோ, இப்போது படம் முடிந்துவிடும், இன்னும் சில நொடிகள்தான்' என்று நினைத்தபடி 'பத்து எண்ணிக்'கொண்டே வந்தேன். பத்து பத்தாய் பல ஆயிரங்கள் எண்ணியாயிற்று. படம் முடிந்தபாடில்லை.

மனிதனுக்கு துன்பம் வரும் வேளையில் இறைவன் ஏதாவதொரு வடிவில் வந்து உதவி செய்வார், நிம்மதி, ஆனந்தம் தருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? நேற்று 'ஆனந்தா உணவகம்' வடிவில் தோன்றி ஆனந்தம், நிம்மதி தந்து காத்தருளினார் கடவுள்.

வண்டியை அந்த உணவகத்தில் நிறுத்தி "வண்டி இங்க கொஞ்ச நேரம் நிக்கும், சாப்பிடறவங்க சாப்பிட்டுக்கலாம்" என்று அருள்வாக்குரைத்தார் ஓட்டுனர். முண்டியடித்துக்கொண்டு ஓடினேன். இறைவா, உன் லீலையே லீலை!

உணவகத்தில் சூடாக மிளகுப் பால் குடித்தபோதுதான் கவனித்தேன், அங்கு சில புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை. சாண்டில்யனின் நாவலொன்றை வாங்கி, இனி வேலூர் வரை இதுதான் நமக்கு பொழுதுபோக்கு என்று உறுதிபூண்டு பேருந்தில் ஏறினேன். பேருந்து அங்கிருந்து கிளம்பிய சில நொடிகளில் படம் முடிந்தது. சுபம்.

அப்பாடா, தப்பித்தோம், என்று நினைத்தபோது அடுத்த படம் ஓட ஆரம்பித்தது. 'நானும் ரவுடிதான்' படம். ஜாலியான, கலகலப்பான படம் போன்ற விமர்சனகளைப் படித்திருந்த நான் இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆனால், விதி வலியது!

படம் ஆரம்பித்து 'பத்து என்றதுக்குள்ள' நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. என் ராசியை நானே மெச்சிக்கொண்டேன்!

இறங்கும்போது, "நியாயமாப்பாத்தா டிக்கேட்டுல பாதி காசு நீங்க எனக்கு திருப்பிக்கொடுக்கணும். இப்படி மொக்கை படத்தை எல்லாம் போட்டு ஏன் டார்ச்சர் பண்றீங்க?" என்று ஓட்டுனரைக் கேட்டேன். அதற்கு அவரது பதில் ஒரு சின்ன புன்னகை.

ஒரு வேளை அவர் இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்திருப்பாரோ?

 

 

 

03-May-2017:

 

#சினிமாவின்_அடுத்த_கட்டம்!

கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் பார்த்த இடத்திலெல்லாம் "விஸ்வரூபம் பற்றியும், கமல் அவர்களைப் பற்றியும் புகழ்ந்து எழுதப்பட்ட வாக்கியங்கள் கண்ணில் தென்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதுவும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல கமல் எடுத்திருக்கும் இன்னொரு முயற்சி என்றும், “உலக சினிமா அளவுக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்வதற்கு எப்போதும் போல் இப்போதும் கமல் முயற்சி செய்திருக்கிறார், வாழ்த்துகள் என்றும் தென்பட்டது.

தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை. ஜாதகத்தில் 9 கட்டங்கள், சதுரங்கத்தில் 64 கட்டங்கள் பற்றி ஓரளவு தெரியும். அதென்ன தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்?

தலைக்கு மேல் வேலையிருந்ததால், இதை யோசித்துக் கொண்டே சலூன் கடைக்குச் சென்று உட்கார்ந்தேன். அங்கு இருந்த தொலைக்காட்சியில் பவன் கல்யாண் நடித்த ஏதோ ஒரு தெலுங்கு படம் ஓடிக்கொண்டிருந்தது. அனைவரும் படத்தையே பார்த்தபடி இருந்தனர். வழக்கமான மசாலா திரைப்படம்தான். அதையும் ரசித்துக்கொண்டிருந்தனர்.

தெலுங்கு சினிமாவில் இது எந்த கட்டம் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் சுழல் நாற்காலி காலியானது. இந்த கட்டத்தை முதலில் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அதனருகே சென்றபோது, அங்கு பணிபுரிபவர், “இவர் உங்களுக்கு முன்னாலேயே வந்துட்டார் சார் என்று இன்னொருவரை கைகாட்ட, “சரி, என் கட்டப்படி நான் இன்னும் கொஞ்ச நேரம் காத்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

சில நிமிடங்களில் எனக்கான நேரம் வர, சுழல் நாற்காலியில் உட்கார்ந்தேன். முடி திருத்துபவரிடம் ஃபுல்லா ஷார்ட் பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு மறுபடியும் அடுத்த கட்ட சிந்தனையில் ஆழ்ந்தேன். அப்போதுதான் அந்த உண்மை விளங்கியது.

அதாவது.. சினிமா விமர்சகர்கள், இணைய விமர்சகர்கள் நடிகர்களுக்கென்றே சில டெம்ப்ளேட்களை வைத்திருக்கிறார்கள். சில உதாரணங்கள்:

எத்தனை வயசானாலும் ரஜினி ரஜினிதான், “தான் நிரந்தர ஸ்டைல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் - இது ரஜினி படத்துக்கான டெம்ப்ளேட்கள்.

உலக சினிமா தரத்துக்கு தமிழ் சினிமாவை நகர்த்திக்கொண்டு செல்கிறார் கமல், “தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்தை நோக்கிய பயணம் கமல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, “தான் நடிப்பின் பல்கலைக்கழகம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்இது கமல் படத்துக்கான டெம்ப்ளேட்கள்.

விஜய்யின் நடனத்துக்காகவே படத்தைப் பார்க்கலாம், “லாஜிக் எல்லாம் பார்க்காமல் இரண்டரை மணி நேரம் தாராளமாக பொழுது போக்கிவிட்டு வரலாம், “பஞ்ச் வசனங்கள் கேட்ட ரசிகர்கள் ஆரவாரத்தில் குதித்தனர்இது விஜய் டெம்ப்ளேட்கள்.

தமிழ் சினிமா ஓப்பனிங் கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார், “திரையில் தல வந்தாலே, அதுவும் வழக்கம்போல் நடந்து வந்தாலே தியேட்டரில் காது கிழியும் அளவிற்கு சத்தம் எழுகிறது, “எந்தத் துணையும் இல்லாமல் இவ்வளவு உயரம் எட்டியிருக்கும் தலயைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியாதுஇது அஜித் டெம்ப்ளேட்கள்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டெம்ப்ளேட். விமர்சனம் எழுதும்போது இவற்றைப் பயன்படுத்தி, நடுவில் ஆங்காங்கே மானே, தேனே, பொன்மானே போட்டால் போதும், படத்துக்கான விமர்சனம் தயார்.

நிலை இப்படி இருக்கையில் அது என்ன அடுத்த கட்டம்?

என்னைப் பொறுத்தவரையில் இந்த கட்டங்கள் எல்லாம் இல்லவேயில்லை. அவரவர்க்குத் தோன்றுவதை அவரவர் எடுக்கிறார். அதை ஏற்பதும் ஏற்காமல் போவதும் பொதுஜனம்தான்.

ஓகே கண்மணியை திட்டி எழுதுபவர்கள் ஏராளமாக இருக்கும் நம் தமிழ்நாட்டில்தான் காஞ்சனாவை புகழ்ந்து எழுதுபவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். இவற்றில் எந்தப் படம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்மாணிப்பது மக்களின் ரசனையேயன்றி இந்த அடுத்த கட்டம், முந்தைய கட்டம் எல்லாம் தங்களை அறிவுஜீவிகளாகக் காட்டிக்கொள்ள நினைப்பவர்களின் முயற்சியே.

இந்த உண்மை விளங்கியபோதுதான் கவனித்தேன், என் முடியை வெட்டிக்கொண்டிருந்தவர் என் தலையில் கத்திரிக்கோலை வைத்துவிட்டு, தன் தலையைத் திருப்பி வைத்த கண் வாங்காமல் அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததை.

இப்படியே விட்டால், கடைசியில் எனக்கு கட்டம் கட்டிவிடுவார்கள் என்பதால் அவரை உலுக்கி நிகழ்காலத்துக்கு வரவழைத்தேன். காரியம், அதாவது முடி திருத்துவது, செவ்வனே முடிந்தது. சில மில்லிகிராம் எடை இழந்து பல கிராம் ஞானம் கிடைக்கப்பெற்றேன்.

ஆகவே மக்களே, இந்த அடுத்த கட்டம், “முன்னோக்கி செல்ல முயற்சி போன்றவற்றை நம்பாமல் "தியேட்டருக்குச் சென்று படம் பாருங்கள்" (நாங்களும் ஏதாவது மெஸேஜ் சொல்லணுமில்ல).

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

10-May-2017:

 

சில மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ள இந்நேரத்தில் சில வாரங்களுக்கு முன்பு நான் எழுதிய இப்பதிவு என் மூளையின் ஓரத்தில் எட்டிப்பார்த்தது..

-----------

H1B விசா விதிமுறைகளால் பாதிப்பு ஏற்படப்போகிறது என்றும், அடுத்த சில மாதங்கள் வரை H1B விசா வழங்கப்படுவது தடை செய்யப்படுகிறது என்றும் வரும் செய்திகளைக் கண்டு ஏராளமானோர் பீதியடைந்திருக்கின்றனர். இதில் சில மென்பொருள் நிறுவன முதலாளிகளும், CEO-க்களும் அடக்கம்.

அமெரிக்காவின் இந்த முடிவால் ஏற்படக்கூடிய விளைவுகளில் சிலவற்றையும், அவற்றிலிருந்து தப்பிக்க செய்யக்கூடிய காரியங்கள் சிலவற்றையும் பார்க்கலாம். இவை அனைத்தும் மென்பொருள் துறையில் பணிபுரிந்த அனுபவத்தில், இத்துறை பற்றிய என் புரிதலில் நான் அறிந்தவை. எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருப்பதுபோல் இதிலும் உண்டு. ஆனால், அவை விதிவிலக்குகள்தானே தவிர, Norm/விதி அல்ல.

1. இந்தியாவில் மென்பொருள் துறையில் கோலோச்சிக்கொண்டிருப்பவைகளில் பெரும்பான்மையானவை சர்வீஸ் கம்பெனிகள் (உதாரணம்: டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசண்ட், விப்ரோ, ஹெச்.சி.எல்). மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுபவை மிகச் சொற்பம்.

இந்த சர்வீஸ் கம்பெனிகள் கேம்பஸ் இண்டர்வியூ என்ற பெயரில் ஆண்டுதோறும் லாரியில் அள்ளிக்கொண்டு வரும் அளவுக்கு.. இல்லை, ரயிலில் அள்ளிக்கொண்டு வரும் அளவுக்கு பொறியியல் படிப்பவர்களைத் தேர்வு செய்கிறார்கள். இவை, கணினித்துறை மட்டுமல்லாது மெக்கானிக்கல், சிவில் போன்ற கணினித்துறைக்குக் கொஞ்சம்கூட தொடர்பில்லாத துறையைச் சேர்ந்த மாணவர்களையும் தேர்வு செய்கிறார்கள். சில கல்லூரிகளில் சில நிறுவனங்கள் பி.எஸ்.சி படிக்கும் மாணவர்களையும் தேர்வு செய்கிறார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பல ஆண்டுகள் கண்டிருக்கும் நம் நாட்டைப் பொறுத்தவரையில் படிப்பு முடித்தவுடனேயே நல்ல சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை கிடைப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் இதனால் ஏற்படக்கூடிய சில பிரச்சினைகளும் தெரியும்.

பொறியியலில் கணிப்பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற, கணிப்பொறி, மென்பொருள் தொடர்புடைய பிரிவுகளில் படித்தவர்களுக்கு இதனால் பெரிய பிரச்சினையில்லை. ஆனால், மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் போன்ற பொறியியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் இந்திய சர்வீஸ் நிறுவனங்களில் சேர்ந்தால், அவர்கள் படித்த படிப்புக்கும், செய்யப்போகிற வேலைக்கும் தொடர்பே இருக்காது. சில சர்வீஸ் நிறுவனங்களில் எலெக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன் தொடர்பான ப்ராஜெக்டுகள் இருந்தாலும், இவை மிகச் சொற்பமே.

இவ்வாறு, படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலையைச் செய்யும்போது சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இதனால் ஏற்படும் விளைவுகள் சில:

1. உதாரணமாக, மெக்கானிக்கல் துறையில் கைதேர்ந்த ஒருவனால் (மதிப்பெண்கள் அளவுகோல் அல்ல, அறிவும் திறமையும்தான் அளவுகோல்கள்) கணிப்பொறியியலில் சுமாராக, அதாவது ஆவரேஜ் அறிவுடைய, திறமையுடைய ஒருவன் செய்யும் அளவுக்குக்கூட சிறப்பாக வேலை செய்ய முடியாமல் போகலாம். ஏனென்றால், அவன் கற்ற பாடங்கள் வேறு, கணினித்துறையைப் பற்றிய அவனது புரிதல்கள் வேறாக இருக்கலாம். நிலைமை இப்படியிருக்க, நிறுவனம் ஆட்குறைப்பு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால், சரியாக வேலை செய்யாதவர்களையும், சுமாராக வேலை செய்பவர்களில் சிலரையும் பணிநீக்கம் செய்துவிடுவார்கள். மறுபடியும் வேலை தேடி அலைந்து முதல் படியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

2. தான் படித்த, கற்றறிந்த துறையை விடுத்து, வேறொரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வேலை செய்தால், நாளடைவில் தான் கற்ற துறை தொடர்புடைய அறிவு மங்கிப்போய்விடலாம். இதனால், பின்னாளில் தான்படித்த துறையில் சிறந்து விளங்கக்கூடிய நிறுவனங்களில் சேர்வது மிகக் கடினம்.

3. அந்நிறுவனங்கள், வேறொரு துறையில் பணிபுரிந்து அதனால் கிடைத்த அனுபவங்களை கருத்தில் கொள்ளமாட்டார்கள் ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சம்பளம் சராசரி சம்பளத்தைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.

4. குறிப்பிட்ட காலம் வேறொரு துறையில் பணிபுரிந்ததனால், தான் படித்த துறையில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்கள், அப்போதைய நிலவரங்கள் போன்றவற்றை அறிந்து, புரிந்துகொள்ள வேண்டும். இது எளிதான விஷயமல்ல.

எனவே, வேலைக்குச் சேரும்போது, தான் படித்த படிப்புக்குத் தொடர்புடைய, தனக்குத் தெரிந்த துறையில் வேலை தேடிக்கொள்வது நல்லது.

2. இந்திய சர்வீஸ் கம்பெனிகளிலுள்ள ப்ராஜெக்டுகள் பெரும்பாலும் Production Support மற்றும் Testing வகையைச் சேர்ந்தவை. Production Support என்பது இருக்கும் அப்ளிகேஷனில் இருக்கும் சின்னச்சின்ன Defect-களை தீர்க்கவேண்டும், கூடவே சிலவற்றை மானிட்டர் செய்யவேண்டும். Testing என்பது பிழை கண்டுபிடிப்பது. இவ்விருவகை ப்ராஜெக்டுகளுக்கும் பெரிய அளவில் திறமையோ, அறிவோ தேவையில்லை. பனிரெண்டாம் வகுப்பு படித்த, கணினிபற்றிய அடிப்படை அறிவிருக்கும் யாரும் இவற்றைச் செய்துவிட முடியும். அவர்களது படிப்பு குறைவு என்பதால், சம்பளமும் குறைவு. இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குக் காசு மிச்சம்.

ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் செய்யும் வேலையை ஆண்டுக்கு 1.5 அல்லது 2 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவனால் செய்யமுடியும் என்ற நிலை வந்தால், நிறுவனங்கள் குறைந்த சம்பளம் வாங்குபவனைத்தான் prefer செய்யும்.

மேலும், இவ்விருவகை ப்ராஜெக்டுகளில் Automation செய்வதற்கு ஸ்கோப் அதிகம். Automate செய்துவிட்டால், அங்கு அந்த வேலையை அதுவரை செய்துவந்த நபரின் தேவை, அவசியம் மறைந்துவிடும். இப்போது மென்பொருள் துறையில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே Automation பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே இதனால் ஆட்குறைப்பு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாய்த் தெரிகிறது.

3. அமெரிக்காவின் தடையால் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும். நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்பதால், cost cutting எல்லா விதத்திலும் நடைபெறும். அதில் எளிதானது சரியாக வேலை செய்யாதவர்களை பணிநீக்கம் செய்வதுதான்.

இந்த இடத்தில் சரியாக வேலை செய்யாதவர்கள் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.

உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் கொடுத்த வேலையை எந்தவித தடங்கலுமின்றி முடித்துவிடுபவர்களாக இருக்கலாம். ஆனால் அதுமட்டும் போதாது. அன்றாடம் செய்யும் வேலையைச் செய்துவிட்டு, எக்ஸ்ட்ராவாக ஏதாவது செய்ய வேண்டும். எதையாவது Automate செய்வது, Document செய்வது, Idea/Proposal கொடுப்பது போன்ற எதையாவது செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், கொடுத்த வேலையை மட்டுமே செய்வீர்களேயானால், Eligible-to-be-fired பிரிவில் வந்துவிடுவீர்கள். Layoff என்பது நிறுவனத்தின் Board level-ல் இருந்து எடுக்கப்படும் முடிவு, இதனை நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு ப்ராஜெக்டும் கடைபிடிக்கவேண்டும் என்ற நிலை வந்தால், நீங்கள் பணிநீக்கம் செய்யப்படும் நாள் வந்துவிடும்.

4. நான் பார்த்த வரையில், எந்தவொரு நிறுவனத்திலும், dead weight, அதாவது வேலை செய்யாமல்/வாங்கும் சம்பளத்துக்கேற்ப வேலை செய்யாமல் இருப்பவர்கள் கணிசமானோர் உள்ளனர். கிட்டத்தட்ட 10-15%. Cost cutting செய்ய எளிய வழி இந்த 10-15% நபர்களைப் பணிநீக்கம் செய்வதுதான்.

என்னைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட இடைவெளியில் review செய்து வேலை செய்யாமல்/வாங்கும் சம்பளத்துக்கேற்ப வேலை செய்யாமல் இருப்பவர்களைத் தயவு தாட்சண்யமின்றி பணிநீக்கம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால், இருப்பவர்கள் பயத்தில் நன்றாக வேலை செய்வார்கள். Dead weight தானாகக் குறைந்துவிடும். லாபம் பெருகும்.

இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி, முன்பே சொன்னதுபோல, கொடுத்த வேலையை மட்டுமே நாள்தோறும் செய்துகொண்டிருக்காமல், எக்ஸ்ட்ராவாக எதையாவது செய்ய வேண்டும்.

8 மணி நேர வேலை இல்லை என்றால், உடனடியாக மேனேஜரிடம் சென்று, விஷயத்தைச் சொல்லி, ஏதாவது additional task-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும். கிடைத்தபிறகு, அதில் கவனம் செலுத்தி, சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

முக்கியமான விஷயம் – Appraisal என்பது Performance evaluation, அதாவது கடந்த ஆண்டில்/கடந்த 6 மாதங்களில் செய்த வேலையைப் பற்றிய ஒன்று மட்டும்தான் என எண்ணவேண்டாம். உங்களுடைய Potential-ஐப் பற்றிய முடிவுகளும் அதில் பெரும்பங்கு வகிக்கும். உங்களால் இன்னும் கொஞ்சம் வேலையைச் செய்யமுடியும், அதுவும் சிறப்பாகச் செய்யமுடியும் என்று உங்கள் மேனேஜர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால், உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது.

அப்படி அவர்களை நினைக்கவைக்க, நீங்கள் உங்களுக்குக் கொடுத்த வேலையை மட்டும் செய்யாமல், எக்ஸ்ட்ராவாக எதையாவது செய்யுங்கள். நீங்களாக எதையாவது செய்ய ஆரம்பிக்காமல், நீங்கள் செய்யவிருக்கும் விஷயத்தைப் பற்றி, உங்கள் மேனேஜருடன் கலந்தாலோசித்து, பிறகு ஆரம்பியுங்கள்.

ஆணியே பிடுங்குவதாக இருந்தாலும், பிடுங்கப்படவேண்டிய ஆணிகளைத்தான் பிடுங்கவேண்டும். இது மிக மிக முக்கியம்.

--------------

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்! #கனடா_குறிப்புகள்!

 

 

 

30-Mar-2016:

 

ராகவேந்திரன் கணேஷன்.

சென்ற வாரம் வரை இப்பெயர் மிகவும் பரிச்சயமான பெயரல்ல. இப்போதும் நம்மில் பலருக்கு யாரிவர் என்று தெரியாது. சென்ற வாரம் வரை நானும் அப்படித்தான் இருந்தேன். சென்ற வாரம் பெல்ஜியத்தில் அந்த கொடூரமான குண்டுவெடிப்பு நிகழும் வரை.

இன்போசிஸில் பணி புரிந்து வந்தவர் இந்த ராகவேந்திரன் கணேஷன். பணி நிமித்தமாக கடந்த சில ஆண்டுகளாக பெல்ஜியத்தில் வசித்து வந்தவர். ஐ. டி பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ஆன்சைட்டில் இருந்தவர். அதாவது கஸ்டமர் சைட் / வாடிக்கையாளரின் அலுவலகத்திலிருந்து பணி புரிந்து வந்தவர். அலுவலகத்திலும் சரி, அந்த வாடிக்கையாளரிடத்திலும் சரி, நற்பெயரை, ஏகப்பட்ட பாராட்டுகளை வாங்கி குவித்துள்ளவர். குவித்தவர்.

சென்ற செவ்வாய்க்கிழமை பெல்ஜியத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அதுவும் அவரது துரதிர்ஷ்டம் எப்படி இருந்தது தெரியுமா?

அன்று மொத்தம் மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முதல் இரண்டில் அதிர்ஷ்டவசமாக தப்பி, தான் பாதுகாப்பாக இருப்பதாக நண்பர் ஒருவரிடம் சொல்லிவிட்டு மெட்ரோ ரயிலேறி கிளம்பியவர். பாவம், அந்த மெட்ரோ ரயிலில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்திருக்கிறார். குண்டு வெடித்ததில் உடல் முழுவதும் கரிக்கட்டையாய் மாறியிருக்கிறது. முகத்தை வைத்தோ, கண்களை வைத்தோ அடையாளம் காண முடியாத நிலை. கடைசியில் அவரது டி.என்.ஏ வைத்து, இறந்தது இவர்தான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். என்னவொரு கொடுமை இது! கேட்டதும் மிகவும் வருத்தமாய் இருந்தது.

நியாயமாகப் பார்த்தால் இந்த மாதிரி இறப்புகள் பாகிஸ்தானிலும், சிரியாவிலும், ஈராக்கிலும், இன்னும் பல இடங்களிலும் தினந்தோறும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. அப்போதெல்லாம் ஏற்படும் வருத்தத்தைவிட கணேசனின் இறப்பு கூடுதல் வருத்தத்தைத் தந்தது. இதற்குக் காரணம் அவரும் நானும் ஒரே நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்பதுதான் என நினைக்கிறேன்.

ஆபத்து எங்கோ தொலைவில் இருக்கும்போது, அயலார்க்கு நடக்கும்போது, அதனால் பாதிக்கப்படுபவர்களின் கஷ்டங்கள், அவர்களின் இழப்புகள் சக மனிதன் என்ற முறையில் நமக்கு வருத்தம் தந்தாலும், நமக்குத் தெரிந்தவர், நம்முடன் பணி புரிபவர், சொந்தக்காரர், நண்பர் என கொஞ்சம் கொஞ்சமாக நம் வட்டத்துக்குள் வரும்போது அந்த இழப்பின் வலி அதிகமாகிறது. இழப்பு என்றால் என்ன என்று ஓரளவு உணர முடிகிறது.

இந்த மாதிரி இழப்புகள் ஒரு வேளை இயற்கைச் சீற்றத்தினால் நிகழ்ந்தால், நம்முள் ஒருவித உதவியற்ற உணர்வு மேலோங்கும். ஹெல்ப்லெஸ்னஸ். உடனே "இயற்கையின் முன்பு நாம் எம்மாத்திரம்" என்று வியாக்யானம் பேசுவோம், நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வோம். காலம் கடந்து இயற்கையிடம் மன்னிப்பு கேட்டு, சில நாட்கள் அடங்கி இருப்போம். பின், வழக்கம்போல் குட்டிச்சுவர்தான். அடுத்த இயற்கைச்சீற்றம் வரை இதே நிலைதான்.

அதுவே பெல்ஜியத்தில் நிகழ்ந்த மாதிரி தீவிரவாத சம்பவங்களால் இழப்புகள் ஏற்பட்டால் கோபமும் சீற்றமும் இயற்கையாய்த் தோன்றும். "என் நண்பனை, என் சகோதரனை, என் சுற்றத்தாரைக் கொன்றுவிட்டாயேடா, உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கோபத்தில் கையில் துப்பாக்கி எடுத்துச்சென்று அந்த தீவிரவாதிகளை தடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என நினைப்போம். சில நாட்கள் தொடரும் இந்த கோபம். இறுதியில் "எல்லாம் அவன் விதி, தலையெழுத்து" என்று சொல்லிவிட்டு வருத்தத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கப்போய்விடுவோம். இந்த இடத்திலும் ஹெல்ப்லெஸ்னஸ் தான் மேலோங்கும். தீவிரவாதிகளைக் கொல்ல, தீவிரவாதத்தை ஒழிக்க அரசாங்கங்களே தடுமாறும்போது தனி ஒருவனால் என்ன செய்துவிட முடியும்!

இறுதியில், அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது என்ற கேள்விக்கு விடையறியாதவர்களாய், விதியின் மேல் பழி சுமத்தி, நம் மனதை தேற்றிக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து நடைபோடுகிறோம். பழிகளைச் சுமத்துவதற்கு, ஆறுதல் அடைவதற்கு விதி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போனால் எப்படி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வோம் என்ற கேள்விக்கு விடை காண்பது கடினம்.

கணேஷனின் குடும்பத்தாரும், அவரைப் போன்ற எண்ணற்றோரும், விதியின் மேல் பழி சுமத்தி, இம்மாதிரி பேரிழப்புகளிலிருந்து, வருத்தங்களிலிருந்து மீண்டெழுந்து வர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதைத்தவிர தனி ஒருவனால் என்ன செய்துவிட முடியும்!

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்! 30-Mar-2016..

 

 

 

07-Feb-2017:

 

சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். இக்கோவிலுக்கு நான் செல்வது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து அப்படியே சில நொடிகள் நின்றுவிடுவேன். குறிப்பாக அதன் ராஜ கோபுரம்.. விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த முறையும் அப்படியே.

கட்டிடக்கலையில், சிற்பக்கலையில் எந்த அளவுக்கு சிறந்து விளங்கியவர்கள் நம் முன்னோர்கள் என்பதற்கான ஏராளமான சான்றுகள் இது போன்ற கோபுரங்களிலும், சிற்பங்களிலும் உள்ளன.

ராஜ கோபுரத்துக்குக் கீழே நின்று சில நொடிகள் அதனை அண்ணாந்து பார்த்து வியந்துவிட்டு, அதன் அழகை ரசித்துவிட்டு, பின் உள்ளே சென்றேன்.

அது வைகுண்ட ஏகாதசி சமயம் என்பதால் கூட்டம் அதிகமாய் இருந்தது. உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் என ஏகப்பட்ட இடங்களில் இருந்து வந்திருந்தனர் மக்கள்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், அதுவும் குறிப்பாக 2, 3 தமிழ்ச் சொற்களுக்குப் பிறகு 2, 3 ஆங்கில வாக்கியங்கள் என பன்மொழி உரையாடல்கள் காற்றை நிரப்பிய வண்ணமிருந்தன..  நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் இவையெல்லாம் சேர்ந்து செய்யப்பட்ட சர்க்கரை பொங்கலைப் போல் இனித்தது அந்த இடம் (அன்று சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை 🙂 ).

கட்டண தரிசனத்திற்கான வரிசையைவிட பொது தரிசனத்திற்கான வரிசையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஜோதியில் ஐக்கியமாகி, "பார்த்த விழி பார்த்த படி" பாடலில் வரும் கமலைப் போல வரிசையில் நின்று எட்டிப் பார்த்தபடி நின்றிருந்தேன்.

கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆகியும் வரிசை அதே இடத்தில் இருந்தது.

எனக்குப் பின்னால் இருந்தவரிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். அவர் உள்ளூர்க்காரர். வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு, கோவிலின் சிறப்பு என ஏகப்பட்ட விஷயங்களை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

சில மணி நேர காத்திருப்புக்குப் பின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறேன் போல, அப்பேர்ப்பட்ட தரிசனம். திவ்ய தரிசனம். பரவசமானேன்.

சிவபெருமானை அபிஷேகப்பிரியர் என்றும் பெருமாளை அலங்காரப்பிரியர் என்றும் சொல்வார்கள். எப்போதும் பெருமாளுக்கு பிரமிப்பூட்டும் அளவுக்கு அலங்காரம் செய்வார்கள். அதுவும் அன்று முத்தங்கி (முத்து + அங்கி (உடை)) சேவை வேறு. முத்தால் செய்யப்பட்ட அங்கியை உடுத்திக்கொண்டு காட்சி கொடுத்து அருள் பாலித்துக்கொண்டிருந்தார். காண கண் கோடி வேண்டும்.

தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்து விடலாம் என நினைத்து பிரகாரத்தை நோக்கி நடந்தேன், தரிசனம் தந்த சிலிர்ப்பிலிருந்து மீளாமல்.

பிரகாரத்தில் நிறைய காகிதங்கள், ப்ளாஸ்டிக் பைகள் இருந்ததைக் கண்டதும் தரிசன நினைவு கலைந்து நிதர்சன நிகழ்காலத்துக்கு வந்தேன். நொந்து போனேன்!

ச்சே, என்னே பிறவிகள் நாம்! எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தை மாசுபடுத்தி, குப்பை கூடமாக்கிவிடுகிறோம். சுத்தமாய் வைத்துக்கொள்ள சுட்டுப்போட்டாலும் வராது போலிருக்கிறது. குறைந்தபட்சம், குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் குப்பைத்தொட்டியிலாவது போடலாம், அதுவும் செய்வதில்லை.

இணையத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு காணொளி பார்த்தேன். அதில் கூறப்பட்டுள்ள விஷயம் கசப்பான, ஆனால் முற்றிலும் உண்மையான விஷயம்.

எந்தவொரு விலங்கோ, பறவையோ, ஓரிடத்தை விட்டு வேறிடத்துக்குச் செல்லும்போது, அந்த இடத்தில் தன கால்தடத்தை விட்டு விட்டுச் செல்லும். ஆனால், நாமோ குப்பைகளை விட்டு விட்டுச் செல்கிறோம். கோவில் பிரகாரத்தில் இருந்த காகிதங்களை, ப்ளாஸ்டிக் பைகளைப் பார்த்ததும் இதுதான் என் நினைவிற்கு வந்தது. என்று தான் திருந்தப்போகிறோமோ?

பிரகாரத்தில் இருந்த காகிதங்களில் பெரும்பாலானவை கடவுள் படங்கள் போட்ட ப்ளாஸ்டிக் பைகள், காகிதங்கள். இந்த மாதிரி கடவுள் படங்கள் போட்ட காகிதங்கள், ப்ளாஸ்டிக் பைகளில் சங்கடம் ஏற்படுத்தக்கூடிய இன்னொரு விஷயமும் இருக்கிறது.

கற்பூர பாக்கெட் முதல் சீயக்காய்த்தூள் பாக்கெட் வரை, கோவில்களில் விநியோகிக்கப்படும் பிரசாத பொட்டலங்கள் முதல் நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைப்புகள் வரை எல்லாவற்றிலும் கடவுள் படங்கள் அச்சிடுகிறார்கள். இவை யாவும் கடைசியில் குப்பைத்தொட்டியில்!

இது நம்மில் என்னைப்போன்று பலரை சங்கடப்படுத்தியிருக்கக்கூடும். இப்படி இவற்றில் அனாவசியமாக கடவுள் படத்தை அச்சிட்டு வெளியிடும் பழக்கம் மாறுமா? எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

#Rewind! #பேருந்துப்_பயணங்களில்!

 

 

 

28-Jan-2017:

 

வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை தத்துவத்துடன் கூடிய சம்பவமொன்றை, இல்லையில்லை, இரண்டு சம்பவங்களைச் சொல்லலாம் என்ற எண்ணம். பொறுமையாய் தொடர்ந்து படிக்கவும். ஞானம் கிடைக்கும்.

சம்பவம் 1:

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போதுதான் கணிப்பொறி மெல்ல மெல்ல பிரபலமாகவும் பரவலாகவும் ஆகிக்கொண்டிருந்தது.

எங்கள் வீட்டில் அசம்பிள்டு செட் வாங்கினோம். அதாவது கணிப்பொறியின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நிறுவனத்தாருடையது. எல்.ஜி மானிட்டர், டி.வி.எஸ் மல்ட்டிமீடியா கீபோர்ட், ஸ்பீக்கர் வேறு ஏதோ ஒரு நிறுவனத்தாருடையது.

விளையாட்டு விளையாடுவதற்கும், பாட்டு கேட்பதற்கும், படம் பார்ப்பதற்கும்தான் வீடுகளில் கணிப்பொறி பயன்படுத்தப்பட்ட காலத்தில் நானும் என் கடமையை செவ்வனே ஆற்றிவந்தேன்.

டூம், டியூக் 3டி, உல்ஃப், ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா போன்ற விளையாட்டுகள் அந்த காலகட்டத்தில் மிக மிகப் பிரபலம். விளையாடுபவர்களையும், விளையாடுபவர்களைப் பார்ப்பவர்களையும் அந்த உலகத்துக்கே கொண்டு போய் விடக்கூடிய விளையாட்டுகள் இவை.

அப்படி ஒரு நாள் உல்ஃப் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் வருவது நின்றுவிட்டது. ஸ்பீக்கரிலிருந்து வெறும் காத்துதான் வந்தது (உபயம் – ‘தேவர் மகன்). விளையாட்டில் தோற்றுவிட்டேன்.

கடுப்பாகி விளையாட்டிலிருந்து விடைபெற்று பாட்டு கேட்கலாம் என்று பாடல்கள் போட்டேன். சத்தம் சுத்தமாக வரவேயில்லை. சரி, உள்ளே ஏதோ கெட்டுப் போய்விட்டது. அதான் சத்தம் வரவில்லை என்ற முடிவுக்கு வந்தாலும், “எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் கேம் விளையாடினா இப்படித்தான் ஆகும். இனிமே கம்ப்யூட்டர் தொட்டனா பாரு என்று கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டிவிடுவாரோ என் அப்பா என்ற ஒரு சின்ன பயம் எட்டிப் பார்த்தது.

கணிப்பொறியை அசம்பிள் செய்தவரை அவசர அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, அவர் இரண்டொரு நாட்களில் வருவதாகச் சொன்னார். தேவையான தருணத்தில்தான் எல்லாமே தாமதப்படுத்தப்படும் என்பது அன்றுதான் புரிந்தது. மன உளைச்சலுக்கு ஆளானேன்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அவரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்த காரணத்தினால் இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்தார் அவர்.

ஸ்விட்சைப் போட்ட சில நொடிகளில் சிஸ்டம் பூட் ஆனது. சத்தம் இன்னும் சுத்தம்தான். அவர் கீபோர்டில் ஏதோ ஒரு கீயை அழுத்தி அதன் பிறகு ஏதோ ஒரு பாட்டைப் போட, சத்தம் பக்காவாக வந்தது. அதைக் கேட்டதும் என்னைப் பார்த்து முறைத்தார் பாருங்கள் ஒரு முறை. சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருக்கும் ஓர் குற்றவாளியை இந்த சமூகம் முறைப்பது போன்ற ஒரு முறைப்பு அது.

ஆனாலும் அவர் என்ன மாயம் செய்து சத்தம் வரவைத்தார் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை. அவரையே கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது மல்ட்டிமீடியா கீபோர்டில் வால்யூம் அப்/டவுன் கீகளும், ம்யூட் கீயும் உள்ளன என்பதும், அவை வேலை செய்யும் என்பதும். விளையாடிக் கொண்டிருந்தபோது ஆர்வத்தில் ம்யூட் பட்டனை அழுத்திவிட்டேன் போல. அதுதான் காரணம்.

இந்த சின்ன விஷயத்துக்காக அவரை விடாமல் அழைத்து, வீட்டுக்கு அலைக்கழைத்து... ஷப்பப்பா... அவர் என்ன நினைத்திருப்பாரோ என்னவோ..

சம்பவம் 2:

கல்லூரி படிப்பு முடிந்து டி.சி.எஸ்ஸில் சேர்ந்தாகிவிட்டது. ப்ராஜெக்டும் கிடைத்தாகிவிட்டது. அது ப்ரொடக்ஷன் சப்போர்ட் வகையைச் சேர்ந்தவொரு ப்ராஜெக்ட். அதாவது கிட்டத்தட்ட நம் கஸ்டமர் கேர் போன்றது. நெட் பேக் முடிந்துவிட்டது, அதிக கட்டணம் எடுத்துவிட்டீர்கள் என்று நாம் சொல்லும்/கத்தும் பிரச்னைகளை எப்படி கஸ்டமர் கேர் நபர்கள் தீர்த்து வைக்கிறார்களோ அது போன்ற வேலைதான் எங்களுடையது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் எங்கள் கஸ்டமர். ஐ.ஆர்.சி.டி.சி போன்ற அவர்களது ஆன்லைன் அப்ளிகேஷன் ஒன்றை நாங்கள் கவனித்து, போற்றிப் பாதுகாத்து வந்தோம். அதான்பா.. Maintenance and Support.

அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியரால் அந்த ஆன்லைன் அப்ளிகேஷனில் லாக் இன் (login) செய்ய முடியவில்லை. இதுதான் பிரச்னை. என் தலையில் வந்து விழுந்தது இந்தப் பிரச்னை.

முழு ஈடுபாடுடன் இதில் மூழ்கி முத்தெடுத்து பேரெடுக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் கண்டமேனிக்கு அலசி ஆராய ஆரம்பித்தேன். பல பேருடைய உதவியையும் நாடினேன். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனாலும் இந்தப் பிரச்னையை தீர்த்துவைக்க முடியவில்லை. உலகமே என்னைக் கைவிட்டதோ என்று நினைத்த நேரத்தில், அந்த ஊழியரையே தொடர்பு கொண்டு ஏதாவது கூடுதல் விபரங்கள் சேகரிக்க முடியுமா என்று பார்க்கலாம் எனத் தோன்றியது. கூடுதல் விபரங்கள் பல நேரங்களில் உதவியிருக்கின்றன. அதனால்தான் இந்த முடிவு.

அவரைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்னையைப்பற்றி நான் கேட்க, அதற்கு அவர் இந்தப் பிரச்னை அன்றே தீர்ந்துவிட்டதாகச் சொன்னார். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என் மண்டையையும், என் நண்பர்களின் மண்டைகளையும் சேர்த்து எவ்வளவோ மண்டைகளை உடைத்தும் பிடிபடாத, தீர்க்க முடியாத இந்தப் பிரச்னையை எப்படி இவர் தீர்த்தார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பீறிட்டது.

அவரையே கேட்டேன். அதற்கு அவர் கூலாக, “லாக் இன் செய்யும்போது கேப்ஸ் லாக் (Caps lock) பட்டன் ஆன் ஆகியிருந்ததை கவனிக்கவில்லை. பிறகுதான் கவனித்தேன் என்றார். பதிலேதும் பேசாமல், நன்றிகூட தெரிவிக்காமல் அழைப்பைத் துண்டித்தேன். வாழ்க்கை ஒரு வட்டம்தான்.

அன்று நான் இருந்தது ஒரு தனியறையாக இருந்திருந்தால் நிச்சயம் சுவற்றில் என் தலையை முட்டிக்கொண்டிருப்பேன். என் அணியில் எல்லோரும் இருந்ததால் தலையும், சுவரும் தப்பித்தது.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி:

இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களின் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் அரிய தத்துவம்தான்..

#பேருந்துப்_பயணங்களில்! #Rewind!

 

 

 

28-Nov-2015:

 

#பேருந்துப்_பயணங்களில்! Part 1:

பயணங்கள் இல்லாத வாழ்க்கையில்லை. ஏன், வாழ்க்கையே ஒரு பயணம்தானே. ஒவ்வொரு பயணமும் நமக்கு புதிதாய் பல விஷயங்களைச் சொல்கிறது, கற்றுக்கொடுக்கிறது. புத்துணர்ச்சியூட்டுகிறது. அலுவலகம் செல்லும் பயணங்கள் புத்துணர்ச்சியூட்டும் பயணங்கள் வரிசையில் இடம்பெறாது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை என்று நினைக்கிறேன் 😉

என் நேற்றைய பயணமும் சுவாரஸ்யமாக இருந்தது.

பெங்களூரின் ஒரு மூலையில் இருக்கும், பெங்களூரின் மூளையின் ஒரு பகுதியாகச் செயல்படும் எலெக்ட்ரானிக் சிட்டியிலிருந்து கிளம்பி வேலூர் வருவதாகத் திட்டம். தனியார் டிராவல்ஸ் ஒன்றில் டிக்கெட் முன்பதிவு செய்தாகிவிட்டது. சென்ற முறை வேலூர் வந்ததும் இதே தனியார் டிராவல்ஸ்தான்.

அப்போது வண்டியில் 'கேடி பில்லா, கில்லாடி ரங்கா' படம் போட்டிருந்தார்கள். அந்த பேருந்தே வேலூர் வரும்வரை கொஞ்சம் கலகலப்பாய் இருந்தது. வேலூரிலிருந்து பெங்களூருக்குத் திரும்பியபோது வேறொரு டிராவல்ஸ். அதில் 'பாகுபலி' படம் போட்டிருந்தார்கள். செம பிரிண்ட். நிம்மதியாய் பார்த்துக்கொண்டே பெங்களூர் வந்து சேர்ந்தேன்.

நேற்று பேருந்து வருகைக்காக காத்துக்கொண்டிருந்த போது இந்த பயணத்தில் எந்த படத்தை பார்க்கப்போகிறேன் என்று யூகித்துக்கொண்டிருந்தேன். அப்போது இந்த மாதிரி வீடியோ கோச், சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில் முதன்முறையாக பயணம் செய்தது எப்போது, அப்படியொரு பயணத்தில் பார்த்த முதல் திரைப்படம் என்ன என்பதை யோசித்துப்பார்த்தேன். சில நொடிகளிலேயே விடை கிடைத்தது.

ஒரு முறை வேலூரிலிருந்து மதுரைக்கு சூப்பர் டீலக்ஸ், வீடியோ கோச் வண்டி ஒன்றில் சென்றோம் நானும் என் பெற்றோரும். இல்லையில்லை, என்னை அழைத்துச் சென்றார்கள் என் பெற்றொர். அப்போது ஆறாம் வகுப்பில் இருந்ததாய் நினைவு. அந்த காலத்தில் சூப்பர் டீலக்ஸ், வீடியோ கோச் போன்ற வார்த்தைகளெல்லாம் புதியவை. அப்படிப்பட்ட பேருந்தில் பயணம் செய்வதென்பது ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்வது போல பெருமையான விஷயமாகக் கருதப்பட்ட காலம்.

'ராணி மங்கம்மா டிராவல்ஸ்' என்று அந்த வண்டியின் இரு பக்கங்களிலும் எழுதியிருந்தது இன்னமும் என் நினைவிலுள்ளது. வேலூரில் எங்கு பார்த்தாலும் 'பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம்', தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் 'பல்லவன்' என்று பார்த்து பழக்கப்பட்ட எனக்கு 'ராணி மங்கம்மா டிராவல்ஸ்' என்பது புதியதாக, என்னை கவர்வதாக இருந்தது.

வண்டியில் ஏறி, என் அரியணையாகிய ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து வேலூருக்கே டாட்டா காட்டியபடி கிளம்பினேன். அப்போதுதான் கவனித்தேன் வண்டியினுள் தொலைக்காட்சி பெட்டியொன்று இருந்ததை.

'ஒளியும் ஒளியும்', 'எதிரொலி' போன்ற நிகழ்ச்சிகள் வருமோ என்ற ஆவலில் பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்டக்டர் ஏதோவொரு படத்தின் வீடியோ கேஸட்டை 'டெக்'கில் நுழைத்து 'ப்ளே' செய்தார்.

மாதக்கடைசியில் சம்பளம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கும் நம்மைப்போல, தொலைக்காட்சியில் என்ன படம் வரப்போகிறது என்று பார்த்துக்கொண்டிருந்தேன். சில நொடிகளில் படம் ஆரம்பித்து, 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்று அந்த படத்தின் பெயர் திரையில் தோன்றியபோது குதூகலமானேன். பயணத்தின் போது படம் பார்க்க முடியுமா என்று ஆச்சரியம் எனக்கு. Technology has improved very much, you see!

முழுப்படத்தையும் பார்த்தேன். அந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. அன்று ஆரம்பித்ததுதான், பயணத்தின் போது படம் பார்க்கும் இந்த பழக்கம்.

பெங்களூரிலுள்ள நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வாரந்தோறும் வேலூர் வந்துவிடுவேன். வெள்ளிக்கிழமை நடுராத்திரி 7 மணிக்கே (பெங்களூர் குளிரில் காலை 7 மணியென்பது நடுராத்திரியேதான்) அலுவலகம் வந்துவிடுவேன். அங்கிருந்து பகல் 3 மணிக்கு கிளம்பி, சில்க் போர்ட் வந்து வேலூர் வருவேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படித்தான்.

சில சமயங்களில், சில்க் போர்டிலிருந்து வேலூர் செல்லும் வீடியோ கோச் வண்டிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்படியொரு பயணத்தின் போது 'சபரி - The Sharp Knife' என்ற உலகத்தரமான படத்தை பார்த்தேன்.

அந்தப் படத்தில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஒரு டாக்டர். ஆப்பரேஷன் செய்துகொண்டிருக்கும்போது திடீரென.. இல்லையில்லை, வழக்கம்போல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். சில நொடிகளுக்குப் பிறகும் ஜெனரேட்டர் 'ஆன்' செய்யப்பட்டிருக்காது. ஆப்பரேஷன் தியேட்டரை இருள் சூழ்ந்திருக்கும்.

ஆப்பரேஷன் தியேட்டரில் உள்ள டாக்டர்கள் அனைவரும்  'இது சீரியஸான ஆப்பரேஷன், சீக்கிரம் முடிக்கலன்னா பேஷண்ட்டை காப்பாத்தமுடியாது. கரண்ட் இல்லாம, வெளிச்சம் இல்லாம எப்படி?' என்று பதற்றத்தில் நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்போது நம் ஹீரோ, தன் மொபைலில் உள்ள டார்ச் லைட்டை 'ஆன்' செய்து அந்த வெளிச்சத்தில் ஆப்பரேஷனை வெற்றிகரமாய் முடித்துக்காட்டுவார். உடனே, மற்ற டாக்டர்கள் அனைவரும் நம் ஹீரோவை பாராட்டுவார்கள் (இந்த இடத்தில் அந்த பேஷண்ட்டும் எழுந்து உட்கார்ந்து ஹீரோவை பாராட்டுவது போல் வைத்திருந்தால் படம் வேறொரு தளத்திற்குச் சென்றிருக்கும், இந்த பொன்னான வாய்ப்பை தவற விட்டார் இயக்குனர் என்பது என் பணிவான கருத்து)

ஓர் உயிரைக் காப்பாற்றி, தன் கடமையைச் செய்த பிறகு, ஏன் ஜெனரேட்டர் 'ஆன்' செய்யப்படவில்லை என்று தெரிந்துகொளவதற்காகக் கீழே சென்று பார்த்தால், அங்கிருந்த செக்யூரிட்டி தூங்கிக்கொண்டிருப்பார். அவ்வளவுதான்! கோபமாக செக்யூரிட்டியை எழுப்பி, பக்கம் பக்கமாக அவருக்கு அறிவுரை சொல்லி, அவரை வேலையிலிருந்து நீக்கிவிடுவார் நம் ஹீரோ. இப்படியோரு அற்புதமான காட்சியைப் பார்த்து மெய்மறந்துபோனேன் அந்தப் பயணத்தில்.

இதே போல, மற்றொரு பயணத்தின்போது, 'இந்த திருப்பதி இறங்கிப்போறவன் இல்லடா, ஏறிப் போறவன்', '"என்ன அண்ணே" என்ற தன் தங்கையின் கேள்விக்கு, "ஆங், மண்ணெண்ணெய்"' என்று ஹீரோ பதில் சொல்வதாய் வந்த, பயங்கர காமெடி வசனங்கள் நிறைந்த படத்தையும் பார்க்க நேர்ந்தது. இந்த சம்பவங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

நேற்றைய பயணத்தில் இந்த மாதிரி உலகத்தரமான திரைப்படங்களை பார்க்கும் பாக்கியம் கிட்டிவிடப்போகிறதே என்று ஒருவித பயத்தில் இருந்தேன்.

பேருந்து வந்தது.

உள்ளே நுழைந்தால், நான் பயந்தது போலவே அதியற்புத திரைப்படம் ஓடிக்கொண்ருந்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் "His worst fears turned true" என்பார்கள். அப்படி நான் பார்க்க நேர்ந்த திரைப்படம்தான் 'பத்து என்றதுக்குள்ள'.

To be continued...