Saturday 4 April 2015

சிறுகதை 023 - நடப்பதெல்லாம் நன்மைக்கே (September 2014)

நடப்பதெல்லாம் நன்மைக்கே

சிவாவின் வாழ்க்கையில் மட்டும் எத்தனை சவால்கள், எத்தனை இடையூறுகள், எத்தனை ஏமாற்றங்கள்?

“அதிர்ஷ்டக்கட்டை”என்ற ஒரு சொல்லை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதே போல் “துரதிர்ஷ்டக்கட்டை”என்ற ஒரு சொல்லையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சிவா ஒரு ஆகச்சிறந்த துரதிர்ஷ்டக்கட்டை.
வேறு யாராக இருந்தாலும் இந்நேரம் உடைந்து நொறுங்கி போயிருப்பார்கள். ஆனால், சிவா மட்டும் தனி ரகம். தன் உடல் மற்றவர்களைவிட கொஞ்சம் தடியான சதையினாலும், தன் இதயம் கொஞ்சம் உறுதியான பொருளாலும் செய்யப்பட்டிருக்குமோ என்னவோ என்று சிவாவே வியந்ததுண்டு.

பெங்களூரில் இந்திரா நகரில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறான் சிவா. ஏகப்பட்ட மரங்களை வெட்டியெடுத்து, கட்டிடங்களைக் கட்டிக் கட்டி, “கார்டன் சிட்டி” என அழைக்கப்பட்டு வந்த பெங்களூர் இப்போது “கான்கிரீட் காடாக” வேகமாக மாறிவரும் நிலையில், இந்திரா நகர் போன்ற சில பகுதிகளில்தான் இன்னமும் கொஞ்சமாவது மரங்களும், பூங்காக்களும் எஞ்சியுள்ளன. அப்படி ஒரு பூங்காவுக்குப் பக்கத்தில்தான் இவர்களது வீடு உள்ளது.

தினமும் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, இந்த பூங்காவில் ஜாக்கிங் போவது சிவாவின் வழக்கம். இவனைப் போலவே ஏராளமானோர் பூங்காவில் ஜாக்கிங் போவார்கள். பனி படர்ந்திருக்கும் காலை வேளையில் இந்தப் பூங்காவில் பலர் வெள்ளை நிற டீ-சர்ட் மற்றும் பேண்ட் உடுத்திக்கொண்டு ஜாக்கிங் போவதைப் பார்த்தால், ஆவிகள் காற்றில் மெதுவாக மிதந்து போவது போலவே இருக்கும்.

இவர்களுக்கு மத்தியில் சிவா கிளிப்பச்சை நிற டீ-சர்ட் மற்றும் பேண்ட் உடுத்தி, காதில் ஹெட் ஃபோன் மாட்டிக் கொண்டு, வாய் ஏதோ முணுமுணுக்க, சற்றே வேகமாக ஜாக்கிங் போவான். பார்ப்பதற்கு மனித உயர கிளி ஒடுவது போலவே இருக்கும்.

ஏனோ தெரியவில்லை, இன்று சிவாவின் முகத்தில் கோபமும், வருத்தமும் கலந்து தென்பட்டது.

இடது கண்ணில் ஆரம்பித்து, அப்படியே மேலே சென்று நெற்றியைத் தொட்டு, பின் அங்கிருந்து வலது கண்ணிற்கு இறங்கி, அங்கிருந்து மூக்கின் வழியாக இறங்கி, வாய் வரை கோடு போட்டுப் பார்த்தால், அவன் முகத்தில் ஒரு கேள்விக்குறி ஒளிந்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

சிவாவின் வாய் எதையோ விடாமல் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. அநேகமாக யாரையாவது திட்டிக் கொண்டிருக்கக்கூடும். வாருங்கள், என்ன முணுமுணுக்கிறான் என்று பார்க்கலாம்.

“எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ? வேற ஆளே கிடைக்கலையா? எனக்குத்தான் உலகத்துல இருக்கற கஷ்டம் எல்லாம் ஒன்னா சேர்ந்து வரணுமா?”அலுத்தவாறே சொல்லிக் கொண்டிருந்தான் சிவா. எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வான், பாவம்.

யாரோ ஒருவரின் பதிலுக்குக் காத்திருப்பது போல சில நொடிகள் மௌனம்.

பின் தொடர்ந்து புலம்பினான்.

“தினம் சாமி கும்பிட்டுட்டுதான் ஆஃபீஸுக்குப் போறேன். சின்சியரா வேலை செய்யறேன். ஆனா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது? ப்ரமோஷன் கிடைக்கலைன்னாலும் பரவாயில்ல. நான் செஞ்ச நல்ல விஷயத்தை இன்னொருத்தன் செஞ்சதா நெனக்கிறாரு மேனேஜர். இந்த மாதிரி ஒரு மேனேஜரையும் மேய்ச்சுட்டு, நான் பாட்டுக்கு ஒழுங்கா சின்சியரா வேலை பாக்கறேன். ஆனாலும் ஒரு பலனும் இல்லை. ப்ச் என்ன வாழ்க்கைடா”

சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தான்.

“இதுகூட பொறுத்துக்கலாம். அத்தி பூத்த மாதிரி, எங்க டீம்ல வந்து சேர்ந்தாள் நீலிமா. அழகா சிரிச்சு, அழகா பேசி, அழகா வெட்கப்பட்டு.. இப்படி எவ்வளவோ விஷயங்களை அழகா பண்ணினா. எத்தனையோ சனி, ஞாயிறு கிழமைகள்ல ரெண்டு பேரும் வெளியே சுத்தினோம். எவ்வளவோ வாங்கி கொடுத்திருக்கேன். கடைசியில என்னை அண்ணான்னு சொல்லிட்டு, புண்ணாக்கினா”

இப்போது சிவாவின் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது. அதை அவன் உணர்ந்த அடுத்த சில நொடிகளில் அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டு, யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று பார்த்தான். காக்கா, குருவிகூட அவனை சீண்டவில்லை. நொந்து கொண்டான்.

கோபம் தலைக்கேற, வானத்தைப் பார்த்து, “நீயெல்லாம் கடவுளா? எத்தனை தடவை உன்னை கோவில்ல வந்து கும்பிட்டுப் போயிருக்கேன்? எவ்வளவு அர்ச்சனை, அபிஷேகம் பண்ணிருக்கேன்? கொஞ்சமாவது என் மேல கருணை இருக்கா உனக்கு? என் மேல தப்பு இல்லாத போது எதுக்கு எனக்கு இவ்ளோ தண்டனை? ஏன் எனக்கு கிடைக்க வேண்டிய எதுவுமே கிடைக்க மாட்டேங்குது?”என்று மனதார மனதுக்குள் திட்டினான். அப்போதும் அவனை யாரும் கவனிக்கவில்லை.

உண்மையிலேயே, இந்த உலகத்தில், தான் ஒரு தனித்தீவு என்று நினைத்து, தன்னை நொந்து கொண்டான். தலையில் கை வைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்தான். இந்த நொடிப்பொழுதே கண் காணாத, யாருக்கும் தெரியாத ஒரு இடத்துக்குப் பறந்து விடவேண்டுமென்று நினைத்தான்.

“அப்போது திடீரென அந்த இடத்தில் காற்று“உஷ்” என்ற சத்தத்துடன் பலமாக வீசத் தொடங்கியது.

தரையில் கிடந்த இலைகள் பறக்க ஆரம்பித்தன.

மரங்கள் ஆட ஆரம்பித்தன.

பறவைகள் கூவ ஆரம்பித்தன.

மழைச் சாரல் ஆரம்பித்தது.

ஏதோ ஒரு கோவிலின் மணியோசை கேட்டது. அது சங்கீதமாய் இருந்தது

இப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்த நாள் சிவா புலம்பியவரை எப்படி இருந்ததோ இன்னமும் அப்படியே சாதாரணமாகவே இருந்தது.

அப்போது யாரோ ஒரு வாலிபர், ஜாக்கிங் ஓடியபடியே சிவாவை நோக்கி வந்தார். சிவாவின் தோளைத் தட்டி, “தம்பி சிவா. என்னாச்சு இப்படி உட்கார்ந்துட்டிருக்கே?”என்று அக்கறையுடன் கேட்டார். அதை அவன் சட்டை செய்யாமலே இருந்தான்.

திடீரென உட்கார்ந்திருந்தவாறே காற்றில் மிதந்தான் சிவா. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, எதிரில் நின்று கொண்டிருந்த வாலிபரை மேலும் கீழும் கூர்ந்து கவனித்தான்.

வெள்ளை நிற டீ-சர்ட் மற்றும் பேண்ட். கால்களில்சிகப்பு நிற ஷூ. ஒரு காதில் மட்டும் ஒரு சின்ன வளையம். கண்களில் ஒரு ‘ரே பான்’ கூலிங் கிளாஸ். குறுந்தாடி. கைகளில் புரியாத டாட்டூக்கள். காதில் ஹெட் ஃபோன். அதில் ஏதோ ஒரு மொழியில் ராப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

சில நொடிகள் அந்த நபரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. அப்போது அந்த நபர் அவனை உலுக்கி, நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து, “நீதானே சிவா?என்றுகேட்டார்.

ஆமா. நீங்க?

இவ்ளோ நேரம் என்னைத் திட்டிக்கிட்டு இருந்தியே. தெரியலையா?

சார், நீங்க யாருன்னே தெரியாது. நான் ஏன் உங்களைத் திட்டணும்?

அர்ச்சனை பண்ணேன், அபிஷேகம் பண்ணேன்னு இவ்ளோ நேரம் என்னை அர்ச்சனை பண்ணியே. மறந்துட்டியா?

தான் தன் மனதில் கடவுளைத் திட்டியது இவருக்கு எப்படி தெரிய வந்தது என்று தூக்கி வாரிப் போட்டது சிவாவுக்கு.

உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?தயக்கத்துடன், பயத்துடன் கேட்டான் சிவா.

வெரி சிம்பிள். நாந்தான் கடவுள். ஐ அம் தி காட் பொறுமையாகச் சொன்னார் அந்த நபர்.

சிவாவால் நம்ப முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

உன்னோட குறைகளுக்கு என்னை ஏன் திட்டறே? உன் வேலையை நல்லபடியா முடிச்சிட்டு, நீ உன் மேனேஜர் கிட்ட அதைப் பத்தி சொன்னியா? உன் காதலை நீலிமாக்கிட்ட நீ சொன்னியா? இப்படி உன் பக்கத்துல இருந்து நீ எதுவுமே செய்யாமல், எல்லாத்துக்கும் என் மேல பழி போட்டா எப்படி நியாயம்? இது கடவுளுக்குக்கூட அடுக்காது என்று விளக்கினார் அந்த நபர்.

மனதில் நினைத்தவற்றையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.
மன்னிச்சிடுங்க காட். இனிமே இப்படி தப்பு செய்ய மாட்டேன்.. வந்தது வந்துட்டீங்க. எனக்கு ஒரு வரமாவது நீங்க கொடுக்கணும். ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சினான்.

சில நிமிடங்கள் சிவாவைக் கெஞ்சவிட்டு, பின், “ரொம்ப கெஞ்சாதே. என்ன வேணும்னு கேளு என்றார் கடவுளாகிய அந்த நபர்.

சில நிமிடங்கள் யோசித்துவிட்டு, “நான் ஏதாவது ஒரு விஷயத்தை நினைச்சுட்டு, அதை சொல்லிட்டு, அது நடக்கணும்னு சொன்னா, அது கண்டிப்பா நடக்கணும். இந்த வரத்தை மட்டும் நீங்க எனக்குக் கொடுக்கணும் என்று கெஞ்சினான்.

சரி, போய்த் தொலை, பொழச்சுப்போ. ஆனா, இந்த வரம் உயிர் இல்லாத பொருட்களை நெனச்சு சொன்னாத்தான் பலிக்கும், சின்ன விஷயங்களுக்குதான் இது பொருந்தும். ததாஸ்து என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஜாக்கிங் சென்றபடி, அப்படியே பனியில் கலந்து கரைந்து மறைந்து போனார் கடவுள்.

நடந்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான் சிவா. வரத்தின் பலத்தை சோதித்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, தன் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து தரையில் வைத்தான்.

என்ன சொல்லலாம் என சில நொடிகள் யோசித்துவிட்டு, பின், “இந்த பர்ஸ் முழுக்க ஆயிரம் ரூபா நோட்டுக்களால நிரம்பி வழியணும். இது நடக்கணும் என்று சொல்லிவிட்டு, தன் பர்ஸையே வெறித்துப் பார்த்தான்.

உடனே, அந்த பர்ஸுக்கு கால் முளைத்து, அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தது.


பி.கு: முடிவு புரியவில்லை என்றால் சிவா கேட்ட வரத்தை இன்னொரு முறை படிக்கவும்

நாடோடிகள்‬ (November 2014)

சன் டிவியில் இப்போது ஆயிரத்து முப்பதாவது தடவையாக ‘நாடோடிகள்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக சில திரைப்படங்களை ஒரு தடவை பார்த்தாலே சலித்துவிடும். சில திரைப்படங்களை பல தடவை பார்க்கலாம். என்னைப் பொறுத்தவரையில் ‘நாடோடிகள்’ இரண்டாம் வகையைச் சேர்ந்தது. இதற்கு முக்கியமான காரணம் கிட்டத்தட்ட இந்தப் படத்தில் வந்தது போலவே ஒரு சம்பவம் எங்கள் வாழ்வில் நிகழ்ந்ததுதான்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும், பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் எப்போதும் ஒரே குழுவாக இருப்போம். கூடைப்பந்து, சீட்டுக்கட்டு, கம்ப்யூட்டர் விளையாட்டுகள் போன்றவை இல்லாமல் எங்களின் நாள் முடிவடையாது.
பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருத்தி, அதுவும் வட இந்தியப் பெண், எங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவனை சின்சியராக காதலிப்பதாகவும், ஆனால் அதற்கு இவன் அசைந்து கொடுக்காமல் இருப்பதாகவும் என் உயிர் நண்பனிடம் சொன்னாள்.
இதை விஜய் என்னிடம் சொல்ல, எப்படியாவது நண்பனை சம்மதிக்க வைத்து காதலை வாழவைக்க வேண்டும் எனத் தோன்றியது எங்கள் இருவருக்கும். உள்ளூரிலேயே யாரும் சீண்டாமல் இருந்த காலத்தில், வட இந்தியாவிலிருந்து ஒரு அப்ளிகேஷன் வருகிறது என்றால் சொல்லவா வேண்டும்? இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “ஷாஜகான்” அந்த காலகட்டத்தில்தான் வெளிவந்தது என்பதை இந்தச் சமயத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும்.
நண்பனை எப்படி வழிக்குக் கொண்டு வந்து, அவன் விக்கெட்டை எடுப்பது என்று நானும் விஜய்யும் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் இன்னொரு நண்பனின் அக்காவின் திருமணம் திருநெல்வேலியில் நடக்கவிருப்பது தெரிய வர, அந்தப் பயணத்தில் எப்படியாவது நண்பனை காதலுக்கு சம்மதிக்க வைத்து, அவனை அவுட்டாக்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தோம். இதற்காக ஒரு ப்ரத்யேக அண்டர்கவர் ஆப்பரேஷனை மேற்கொண்டோம் நானும் விஜய்யும்.
வேலூரிலிருந்து விழுப்புரம் சென்று, அங்கிருந்து திருநெல்வேலி செல்வது என்று முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் கிளம்பினோம். வழிநெடுக நண்பனை மூளைச்சலவை செய்து ரிவர்ஸ் கியரில் இருந்தவனை நியூட்ரலுக்கு கொண்டு வந்துவிட்டோம்.
திருநெல்வேலியில் கிடைத்த கேப்பிலெல்லாம் எங்கள் அண்டர்கவர் ஆப்பரேஷனை நாங்கள் செவ்வனே செய்து வந்து, முதல் கியர், இரண்டாம் கியர் என படிப்படியாக நண்பனை முன்னேற்றினோம். நெல்லையப்பரும், திருச்செந்தூர் முருகனும் எங்களைப் பார்த்து சிரித்து, எங்களுக்கு அருள் புரிவதாக நினைத்தோம். அவனின்றி ஓரணுவும் அசையாதல்லவா?
இறுதியில், மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வேலூர் திரும்பியபோது நண்பனை டாப் கியர் போடவைத்திருந்தோம். அவன் விக்கெட்டை எடுத்த பவுலர்கள் நானும் விஜய்யும்தான் என்றாலும் எங்களின் மற்ற நண்பர்களும் ஃபீல்டர்களாக இருந்து பேருதவியாற்றினர்.
எங்கள் அண்டர்கவர் ஆப்பரேஷனை நல்லபடியாக செய்து முடிக்க வைத்த நெல்லையப்பருக்கும், திருச்செந்தூர் முருகனுக்கும் நன்றி சொன்னோம் நானும் விஜய்யும். ஆத்ம திருப்தி எங்களுக்கு.
இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்பிறையாக வளர்ந்து சில வருடங்களில் தேய்பிறையாக தேய ஆரம்பித்தது. இறுதியில் பிரிந்தேவிட்டனர். எங்கள் ஆப்பரேஷன் வெற்றி பெற்றிருந்தாலும், கடைசியில் பேஷண்ட் அவுட்டாகி பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
‘நாடோடிகள்’ திரைப்படத்தில் வருவதுபோல இந்த காதல் ஜோடியை சமாதானம் செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் நல்ல வேளை நானும் விஜய்யும் அப்போது நினைக்கவில்லை. ஒருவேளை அப்படி முயற்சிகள் செய்து, படத்தில் வருவதுபோலெல்லாம் நிகழ்ந்திருந்தால் கால் உடைந்து, காது கேட்காமல் யார் கிடப்பது!
நெல்லையப்பரும், திருச்செந்தூர் முருகனும் எங்களைப் பார்த்து அப்போது சிரித்த சிரிப்பின் அர்த்தத்தை இந்த ‘நாடோடிகள்’ படம் வெளிவந்த பிறகுதான் புரிந்துகொண்டோம் நாங்கள்.

பொங்கல் நல்வாழ்த்துகள் (January 2015)

பொங்கல் என்றதும் பொங்கல் பானை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கரும்பு, சூரியன், வண்ண கோலங்கள், மாடுகள், ஜல்லிக்கட்டு போன்றவை பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வரும். எனக்கு இவற்றோடு சேர்த்து என் பள்ளிக்காலமும், அப்போது கொண்டாடிய பண்டிகைகளும் நினைவில் தோன்றும்.
1990-களில் பொங்கலுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்பது மிகச் சாதாரணமான ஒரு விஷயம். இந்த மூன்று நாட்கள் அந்தக் காலகட்டத்தில் மறக்க முடியாத நாட்களாகவே இருந்தன. ஒவ்வொரு ஆண்டும்.
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கென ப்ரத்யேகமாக அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் சிலவற்றை வாங்கி, அவற்றில் நம் கையால் நண்பர்களின் பெயர்களை, அவர்களின் முகவரியை, பண்டிகை வாழ்த்துகளை எழுதி தபாலில் அனுப்பிய காலம் அது. நாம் இப்போது இருப்பது ஓர் உலக கிராமம் (Global Village) என்று சொல்லிக் கொண்டாலும், அப்போது நம் கைப்பட வாழ்த்து அட்டைகளை எழுதி நண்பர்களுக்கு அனுப்பியபோது நாம் அடைந்த மகிழ்ச்சி, திருப்தி இப்போது ஏனோ கிடைப்பதில்லை.
சரி, விஷயத்துக்கு வருகிறேன்.
பொங்கல் பானையில் பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என்று சத்தமாகச் சொல்வதுதானே உலக நியதி? ஆனால், நான் மட்டும் பெரிய பிஸ்தா என்ற நினைப்பில் “Olagnop lagnop” என்று சொல்வேன். அதாவது “Pongalo Pongal” என்பதை வார்த்தைகளை திருப்பிப் போட்டு உளறுவேன்.
இந்தச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் பொங்கலை ருசித்துவிட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பேன். பாட்டி, மாமாக்கள் வீட்டுக்கு வருவார்கள். அவரவர் வீட்டில் செய்யப்பட்ட பொங்கல், வடை, பாயசம் போன்றவற்றை பரிமாறிக் கொண்டிருப்பார்கள். வயிறும் மனமும் நிரம்பும்.
பிறகு, மதியம் ஒரு குட்டித் தூக்கம். மாலையில் நண்பர்களுடன் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன்.
வேலூரில், எங்கள் வீட்டருகில் சத்திரம் என்றொரு இடம் உள்ளது. “சத்திரம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே அந்த இடத்திற்குச் சென்று பட்டம், நூற்கண்டு, பம்பரம், கயிறு போன்றவற்றை வாங்கி வருவோம் நாங்கள்.
பொங்கல் சமயத்தில் பக்கத்து ஊர்களில், கிராமங்களில் இருந்து பல காளை மாடுகள் இந்த சத்திரத்திற்கு கொண்டுவரப்படும். மாடுகளின் கொம்புகளில் விதவிதமான வண்ணங்கள் பூசியிருப்பார்கள். பலூன் கட்டிவிட்டிருப்பார்கள்.
இவற்றையெல்லாம் அந்த மாடுகளைக் கேட்டுத்தான், அவற்றின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டுதான் செய்தார்களா என்று பல முறை வியந்திருக்கிறேன். சிறு வயதில் நாம் சரியென்றதும்தானே பெற்றோர்கள் நம் விரல்களுக்கு மருதாணி வைப்பார்கள்? மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசுவதும் இது போன்றதொரு செயல்தானே என்பதுதான் அப்போதைய சந்தேகம். இதற்கான விடை எனக்குக் கிடைக்கவேயில்லை.
மாட்டுப்பொங்கலன்று மாலையில் சத்திரத்தில்தான் “மாடு விடுவார்கள்”.
அதென்ன “மாடு விடுவார்கள்” என்று கேட்கிறீர்களா? இன்று வரை எனக்கு அதன் சரியான அர்த்தம் தெரியாது.
மாடுகளுக்கென நடத்தப்படும் ஓட்டப்பந்தயத்தில் மாடுகளைக் கலந்துகொள்ள விடுவதால்தான் “மாடு விடுவார்கள்” என்ற பெயர் வந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. இன்னும் சிலர், மாடுகளை ஓடவிட்டு, அவற்றை அடக்கும் பந்தயம் நடைபெறுவதால் இந்தப் பெயர் வந்த்து என்று சொன்னார்கள். எது சரியென்று எனக்குத் தெரியாது. எல்லாம் மாட்டையே வாகனமாக வைத்திருக்கும் அந்த சிவனுக்கே வெளிச்சம்.
மாடு விடும் வைபவம் மாலை 6, 7 மணிக்கு முடிந்துவிடும்.
இரவு 8:30, 9 மணிக்கு எங்கள் தெருவில் உள்ள வீடுகளில் உள்ள பெண்கள், அலுமினிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்து வாசல் தெளிக்க ஆரம்பிப்பார்கள். தெருவே அமைதியாக இருக்கும் நேரத்தில் தார் சாலையில் தண்ணீர் விழும் சத்தம் எப்படியிருக்கும் தெரியுமா? அருவிக்கு அருகில் இருப்பதுபோல, கேட்கவே ரம்மியமாக இருக்கும்.
சுத்தமாகத் தெளித்துவிட்டு கோலம் போட ஆரம்பிப்பார்கள். கோலப்பொடிக்கென ஒரு டப்பா / கொட்டாங்குச்சி இருக்கும். அதற்குப் பக்கத்திலேயே இன்னும் சில டப்பாக்களில் / கொட்டாங்குச்சிகளில் சிகப்பு, மங்கள், பச்சை, நீலம் போன்ற வண்ண வண்ண பொடிகள் இருக்கும்.
கோலப்புத்தகங்களைப் பார்த்து அழகாக தரையில் கோலம் போடுவார்கள், ஆங்காங்கே பலவிதமான வண்ணங்களை நிரப்பி. “Magnified Photocopy” எடுத்தது போலவே இருக்கும். எங்கள் வாசலில் கோலம் போடுவது என் அம்மாவும், அக்காவும்தான் என்றாலும் அதில் எனது சிறு பங்களிப்பும் இருக்கும்.
எங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு முடித்துவிட்டு மற்றவர்கள் வீட்டு வாசலில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர், எந்தெந்த நிறங்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் போன்றவற்றை நோட்டம்விட கிளம்புவோம். திரும்பி வந்து அவற்றைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் எங்கள் கோலங்களையெல்லாம் பார்த்தவண்ணம் போய்க்கொண்டிருப்பார்கள். இந்தத் தகவல் பரிமாற்றம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடக்கும்.
வெண்பொங்கலில் ஆரம்பித்த பொங்கல் தினம் வண்ணக் கோலங்களுடன் இனிதே நிறைவுபெறும்.
அப்போது அதிகமாயிருந்த தனி வீடுகளின் மொட்டை மாடிகளும், தனி வாசல்களும் தற்போது நடந்துவரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் படையெடுப்பில் அழிந்து வருவதை நினைக்கும்போது ஒரு சின்ன வருத்தம் எழவே செய்கிறது.
எது எப்படியோ, அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் smile emoticon

இரண்டு சம்பவங்கள் (January 2015)

வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை தத்துவத்துடன் கூடிய சம்பவமொன்றை, இல்லையில்லை, இரண்டு சம்பவங்களைச் சொல்லலாம் என்ற எண்ணம். பொறுமையாய் தொடர்ந்து படிக்கவும். ஞானம் கிடைக்கும்.
சம்பவம் 1:
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போதுதான் கணிப்பொறி மெல்ல மெல்ல பிரபலமாகவும் பரவலாகவும் ஆகிக்கொண்டிருந்தது.
எங்கள் வீட்டில் அசம்பிள்டு செட் வாங்கினோம். அதாவது கணிப்பொறியின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நிறுவனத்தாருடையது. எல்.ஜி மானிட்டர், டி.வி.எஸ் மல்ட்டிமீடியா கீபோர்ட், ஸ்பீக்கர் வேறு ஏதோ ஒரு நிறுவனத்தாருடையது.
விளையாட்டு விளையாடுவதற்கும், பாட்டு கேட்பதற்கும், படம் பார்ப்பதற்கும்தான் வீடுகளில் கணிப்பொறி பயன்படுத்தப்பட்ட காலத்தில் நானும் என் கடமையை செவ்வனே ஆற்றிவந்தேன்.
டூம், டியூக் 3டி, உல்ஃப், ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா போன்ற விளையாட்டுகள் அந்த காலகட்டத்தில் மிக மிகப் பிரபலம். விளையாடுபவர்களையும், விளையாடுபவர்களைப் பார்ப்பவர்களையும் அந்த உலகத்துக்கே கொண்டு போய் விடக்கூடிய விளையாட்டுகள் இவை.
அப்படி ஒரு நாள் உல்ஃப் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் வருவது நின்றுவிட்டது. ஸ்பீக்கரிலிருந்து “வெறும் காத்துதான் வந்தது” (உபயம் – ‘தேவர் மகன்’). விளையாட்டில் தோற்றுவிட்டேன்.
கடுப்பாகி விளையாட்டிலிருந்து விடைபெற்று பாட்டு கேட்கலாம் என்று பாடல்கள் போட்டேன். சத்தம் சுத்தமாக வரவேயில்லை. சரி, உள்ளே ஏதோ கெட்டுப் போய்விட்டது. அதான் சத்தம் வரவில்லை என்ற முடிவுக்கு வந்தாலும், “எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் கேம் விளையாடினா இப்படித்தான் ஆகும். இனிமே கம்ப்யூட்டர் தொட்டனா பாரு” என்று கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டிவிடுவாரோ என் அப்பா என்ற ஒரு சின்ன பயம் எட்டிப் பார்த்தது.
கணிப்பொறியை அசம்பிள் செய்தவரை அவசர அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, அவர் இரண்டொரு நாட்களில் வருவதாகச் சொன்னார். தேவையான தருணத்தில்தான் எல்லாமே தாமதப்படுத்தப்படும் என்பது அன்றுதான் புரிந்தது. மன உளைச்சலுக்கு ஆளானேன்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அவரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்த காரணத்தினால் இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்தார் அவர்.
ஸ்விட்சைப் போட்ட சில நொடிகளில் சிஸ்டம் பூட் ஆனது. சத்தம் இன்னும் சுத்தம்தான். அவர் கீபோர்டில் ஏதோ ஒரு கீயை அழுத்தி அதன் பிறகு ஏதோ ஒரு பாட்டைப் போட, சத்தம் பக்காவாக வந்தது. அதைக் கேட்டதும் என்னைப் பார்த்து முறைத்தார் பாருங்கள் ஒரு முறை. சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருக்கும் ஓர் குற்றவாளியை இந்த சமூகம் முறைப்பது போன்ற ஒரு முறைப்பு அது.
ஆனாலும் அவர் என்ன மாயம் செய்து சத்தம் வரவைத்தார் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை. அவரையே கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது மல்ட்டிமீடியா கீபோர்டில் வால்யூம் அப்/டவுன் கீகளும், ம்யூட் கீயும் உள்ளன என்பதும், அவை வேலை செய்யும் என்பதும். விளையாடிக் கொண்டிருந்தபோது ஆர்வத்தில் ம்யூட் பட்டனை அழுத்திவிட்டேன் போல. அதுதான் காரணம்.
இந்த சின்ன விஷயத்துக்காக அவரை விடாமல் அழைத்து, வீட்டுக்கு அலைக்கழைத்து... ஷப்பப்பா... அவர் என்ன நினைத்திருப்பாரோ என்னவோ..
சம்பவம் 2:
கல்லூரி படிப்பு முடிந்து டி.சி.எஸ்ஸில் சேர்ந்தாகிவிட்டது. ப்ராஜெக்டும் கிடைத்தாகிவிட்டது. அது ப்ரொடக்ஷன் சப்போர்ட் வகையைச் சேர்ந்தவொரு ப்ராஜெக்ட். அதாவது கிட்டத்தட்ட நம் கஸ்டமர் கேர் போன்றது. நெட் பேக் முடிந்துவிட்டது, அதிக கட்டணம் எடுத்துவிட்டீர்கள் என்று நாம் சொல்லும்/கத்தும் பிரச்னைகளை எப்படி கஸ்டமர் கேர் நபர்கள் தீர்த்து வைக்கிறார்களோ அது போன்ற வேலைதான் எங்களுடையது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் எங்கள் கஸ்டமர். ஐ.ஆர்.சி.டி.சி போன்ற அவர்களது ஆன்லைன் அப்ளிகேஷன் ஒன்றை நாங்கள் கவனித்து, போற்றிப் பாதுகாத்து வந்தோம். அதான்பா.. Maintenance and Support.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியரால் அந்த ஆன்லைன் அப்ளிகேஷனில் லாக் இன் (login) செய்ய முடியவில்லை. இதுதான் பிரச்னை. என் தலையில் வந்து விழுந்தது இந்தப் பிரச்னை.
முழு ஈடுபாடுடன் இதில் மூழ்கி முத்தெடுத்து பேரெடுக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் கண்டமேனிக்கு அலசி ஆராய ஆரம்பித்தேன். பல பேருடைய உதவியையும் நாடினேன். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனாலும் இந்தப் பிரச்னையை தீர்த்துவைக்க முடியவில்லை. உலகமே என்னைக் கைவிட்டதோ என்று நினைத்த நேரத்தில், அந்த ஊழியரையே தொடர்பு கொண்டு ஏதாவது கூடுதல் விபரங்கள் சேகரிக்க முடியுமா என்று பார்க்கலாம் எனத் தோன்றியது. கூடுதல் விபரங்கள் பல நேரங்களில் உதவியிருக்கின்றன. அதனால்தான் இந்த முடிவு.
அவரைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்னையைப்பற்றி நான் கேட்க, அதற்கு அவர் இந்தப் பிரச்னை அன்றே தீர்ந்துவிட்டதாகச் சொன்னார். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என் மண்டையையும், என் நண்பர்களின் மண்டைகளையும் சேர்த்து எவ்வளவோ மண்டைகளை உடைத்தும் பிடிபடாத, தீர்க்க முடியாத இந்தப் பிரச்னையை எப்படி இவர் தீர்த்தார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பீறிட்டது.
அவரையே கேட்டேன். அதற்கு அவர் கூலாக, “லாக் இன் செய்யும்போது கேப்ஸ் லாக் (Caps lock) பட்டன் ஆன் ஆகியிருந்ததை கவனிக்கவில்லை. பிறகுதான் கவனித்தேன்” என்றார். பதிலேதும் பேசாமல், நன்றிகூட தெரிவிக்காமல் அழைப்பைத் துண்டித்தேன். வாழ்க்கை ஒரு வட்டம்தான்.
அன்று நான் இருந்தது ஒரு தனியறையாக இருந்திருந்தால் நிச்சயம் சுவற்றில் என் தலையை முட்டிக்கொண்டிருப்பேன். என் அணியில் எல்லோரும் இருந்ததால் தலையும், சுவரும் தப்பித்தது.
மாரல் ஆஃப் தி ஸ்டோரி:
இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களின் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்னும் அரிய தத்துவம்தான்..

இந்தியாவை அசைக்கவே முடியாது (Feb 2015)

நேற்றிரவு ஷாந்தி நகர் பேருந்து நிலையத்திற்கு டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தோம். எந்த வண்டியென்று சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கடுப்பேற்றுகிற சிற்றுண்டி என்றதும் உப்புமா நினைவுக்கு வருவதும், டாக்ஸி வண்டி என்றதும் டாடா இண்டிகா நினைவுக்கு வருவதும் இந்தியர்களுக்கே உரிய டிசைன். இதை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது என்றே நினைக்கிறேன், மாறிவிடவும் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். பின் என்ன, நாம் மட்டும்தான் இவற்றையெல்லாம் அனுபவிக்கவேண்டுமா? யாம் பெற்ற இன்பம் பெறுக அனைவரும்.
வழியில் பயங்கர போக்குவரத்து நெரிசல். வழிநெடுக இதே கதைதான். ஆனால் இது ஒன்றும் புதியதல்லவே. வாழ்க்கையைப் பொறுத்தவரை மூன்று விஷயங்கள் நிதர்சனம்.
1. பிறப்பு
2. இறப்பு
3. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல்.
இவற்றில் முதல் இரண்டும் எப்படியோ தெரியவில்லை, மூன்றாவது விஷயம் நிதர்சனம் மட்டுமல்ல, நிரந்தரமும்கூட.
சரி, விஷயத்துக்கு வருவோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டது. நெரிசலில் சிக்கிய வண்டிகள், வண்டிக்காரர்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விட வேண்டுமே என்று என்னைப் போலவே சில பேர் வேண்டியிருக்கக்கூடும். சில நொடிகளில் ஆம்புலன்ஸ் செல்லத் தேவையான அகலமுள்ள வழியொன்றை ஏற்படுத்திக் கொடுத்தனர் நம் மக்கள். "நான் இருக்கேன் குமாரு" என்று அந்த நொடி கடவுள் மனிதனிடம் சொல்லியிருப்பார் என நினைத்துக்கொண்டேன் .
சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றால், அதன் பின்னாலேயே மரண வேகத்தில் சென்று, அப்படிச் செல்லும்போது ஒரு வேளை விபத்து நேர்ந்தால் அந்த ஆம்புலன்ஸில் அப்படியே அலேக்காக ஏறிவிடும் அளவுக்கு வண்டியை ஓட்டுபவர்கள் இருப்பார்களே, அவர்களைப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. யாருமே அந்த ஆம்புலன்ஸ் பின்னால் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடவில்லை. "நான் இன்னமும் இருக்கேன்" என்று மனிதன் கடவுளிடம் சொல்லியிருப்பானோ?
எப்படி வந்தது இந்த மாற்றம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பக்கத்தில் யாரோ ஒருவர் இன்னொருவரை செம்மொழியில் வசை பாடிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்து என் கவனம் கலைந்தது. யாரென்று பார்க்கையில், அது யாரோ ஒரு பெண்மணி என்று புலப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்துகொண்டு யாரை இப்படி வசை பாடிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தேன். யாருமே இவர் பேசுவதை, இல்லையில்லை, ஏசுவதை பொருட்படுத்தவில்லை என்பது புரிந்தது.
யாரைத்தான் இப்படி ஏசிக்கொண்டிருக்கிறார் என்று யோசித்தபோதுதான் புரிந்தது, அவர் வசை பாடிக்கொண்டிருந்தது தன் தலைக்கவசத்தினுள் மறைத்து வைத்திருந்த அலைபேசியில் ஒலித்தக்கொண்டிருந்த குரலுக்குச் சொந்தக்காரரான யாரோ ஒருவரைத்தான் என்று.
யார் அந்த பாவப்பட்ட ஜென்மம் என்று நான் உச்சுக்கொட்டி பரிதாபப்பட்ட நேரத்தில், போக்குவரத்து நெரிசல் சற்று க்ளியரானது. அடுத்த நொடி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல சீறிப் பாய்ந்தன வண்டிகள். எங்கள் பயணமும் தொடர்ந்தது.
சாலையில் எங்களுக்கு முன்னே சற்று தூரத்தில் ஒரு போர்ஷே கார் போய்க்கொண்டிருந்தது. ஆஜானுபாகுவாக இருந்தது. நம்பர் ப்ளேட்டைப் பார்த்தேன், பாண்டிச்சேரியில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட வண்டியென்று தெரிந்தது. லட்சங்களையும் கோடிகளையும் போட்டு விலையுயர்ந்த வண்டிகளை வாங்கிவிட்டு, சாலை வரியில் சில பல லகரங்களை சேமிப்பதற்காக பாண்டிச்சேரியில் வண்டியை ரெஜிஸ்டர் செய்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இவர். சரி, இருந்துவிட்டுப்போகட்டும். அவர் பணம், அவர் உரிமை (உபயம் - கல்யாண் ஜிவல்லர்ஸ் பிரபு). அவருக்கான நேரம் வரும் வரை பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கத் தேவையான மருந்து அவரிடம் நிறையவே இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும்.
அப்போது திடீரென வண்டியின் ஜன்னல் கண்ணாடியொன்றைத் தாழ்த்திவிட்டு, உபயோகப்பட்டுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்பொன்றை சாலையில் போட்டது வண்டிக்குள்ளிருந்து தோன்றிய கை. அந்த கப் தரையில் விழுவதற்குள் விருட்டென பறந்தது அந்த போர்ஷே. அந்த நொடியில் எனக்கு அந்த போர்ஷே கார் மீது இருந்த ஈர்ப்பு மறைந்து அதை ஓட்டிக்கொண்டிருந்தவனின் மீது வெறுப்பும், அருவருப்பும் தோன்றியது. கார் காஸ்ட்லியாக இருந்தாலும் அதை வாங்கிய ஆட்கள் 'சீப்'பாக இருக்கலாம் என்ற உண்மை விளங்கியது.
"இந்த மாதிரி படித்த பரதேசிகள் உள்ளவரை இந்தியாவை அசைக்கவே முடியாது" என்று கடவுள் சொன்னது என் காதில் மட்டும்தான் விழுந்ததோ?