Saturday 4 April 2015

பொங்கல் நல்வாழ்த்துகள் (January 2015)

பொங்கல் என்றதும் பொங்கல் பானை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கரும்பு, சூரியன், வண்ண கோலங்கள், மாடுகள், ஜல்லிக்கட்டு போன்றவை பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வரும். எனக்கு இவற்றோடு சேர்த்து என் பள்ளிக்காலமும், அப்போது கொண்டாடிய பண்டிகைகளும் நினைவில் தோன்றும்.
1990-களில் பொங்கலுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்பது மிகச் சாதாரணமான ஒரு விஷயம். இந்த மூன்று நாட்கள் அந்தக் காலகட்டத்தில் மறக்க முடியாத நாட்களாகவே இருந்தன. ஒவ்வொரு ஆண்டும்.
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கென ப்ரத்யேகமாக அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் சிலவற்றை வாங்கி, அவற்றில் நம் கையால் நண்பர்களின் பெயர்களை, அவர்களின் முகவரியை, பண்டிகை வாழ்த்துகளை எழுதி தபாலில் அனுப்பிய காலம் அது. நாம் இப்போது இருப்பது ஓர் உலக கிராமம் (Global Village) என்று சொல்லிக் கொண்டாலும், அப்போது நம் கைப்பட வாழ்த்து அட்டைகளை எழுதி நண்பர்களுக்கு அனுப்பியபோது நாம் அடைந்த மகிழ்ச்சி, திருப்தி இப்போது ஏனோ கிடைப்பதில்லை.
சரி, விஷயத்துக்கு வருகிறேன்.
பொங்கல் பானையில் பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என்று சத்தமாகச் சொல்வதுதானே உலக நியதி? ஆனால், நான் மட்டும் பெரிய பிஸ்தா என்ற நினைப்பில் “Olagnop lagnop” என்று சொல்வேன். அதாவது “Pongalo Pongal” என்பதை வார்த்தைகளை திருப்பிப் போட்டு உளறுவேன்.
இந்தச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் பொங்கலை ருசித்துவிட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பேன். பாட்டி, மாமாக்கள் வீட்டுக்கு வருவார்கள். அவரவர் வீட்டில் செய்யப்பட்ட பொங்கல், வடை, பாயசம் போன்றவற்றை பரிமாறிக் கொண்டிருப்பார்கள். வயிறும் மனமும் நிரம்பும்.
பிறகு, மதியம் ஒரு குட்டித் தூக்கம். மாலையில் நண்பர்களுடன் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன்.
வேலூரில், எங்கள் வீட்டருகில் சத்திரம் என்றொரு இடம் உள்ளது. “சத்திரம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே அந்த இடத்திற்குச் சென்று பட்டம், நூற்கண்டு, பம்பரம், கயிறு போன்றவற்றை வாங்கி வருவோம் நாங்கள்.
பொங்கல் சமயத்தில் பக்கத்து ஊர்களில், கிராமங்களில் இருந்து பல காளை மாடுகள் இந்த சத்திரத்திற்கு கொண்டுவரப்படும். மாடுகளின் கொம்புகளில் விதவிதமான வண்ணங்கள் பூசியிருப்பார்கள். பலூன் கட்டிவிட்டிருப்பார்கள்.
இவற்றையெல்லாம் அந்த மாடுகளைக் கேட்டுத்தான், அவற்றின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டுதான் செய்தார்களா என்று பல முறை வியந்திருக்கிறேன். சிறு வயதில் நாம் சரியென்றதும்தானே பெற்றோர்கள் நம் விரல்களுக்கு மருதாணி வைப்பார்கள்? மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசுவதும் இது போன்றதொரு செயல்தானே என்பதுதான் அப்போதைய சந்தேகம். இதற்கான விடை எனக்குக் கிடைக்கவேயில்லை.
மாட்டுப்பொங்கலன்று மாலையில் சத்திரத்தில்தான் “மாடு விடுவார்கள்”.
அதென்ன “மாடு விடுவார்கள்” என்று கேட்கிறீர்களா? இன்று வரை எனக்கு அதன் சரியான அர்த்தம் தெரியாது.
மாடுகளுக்கென நடத்தப்படும் ஓட்டப்பந்தயத்தில் மாடுகளைக் கலந்துகொள்ள விடுவதால்தான் “மாடு விடுவார்கள்” என்ற பெயர் வந்தது என்று சிலர் சொல்ல கேள்வி. இன்னும் சிலர், மாடுகளை ஓடவிட்டு, அவற்றை அடக்கும் பந்தயம் நடைபெறுவதால் இந்தப் பெயர் வந்த்து என்று சொன்னார்கள். எது சரியென்று எனக்குத் தெரியாது. எல்லாம் மாட்டையே வாகனமாக வைத்திருக்கும் அந்த சிவனுக்கே வெளிச்சம்.
மாடு விடும் வைபவம் மாலை 6, 7 மணிக்கு முடிந்துவிடும்.
இரவு 8:30, 9 மணிக்கு எங்கள் தெருவில் உள்ள வீடுகளில் உள்ள பெண்கள், அலுமினிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்து வாசல் தெளிக்க ஆரம்பிப்பார்கள். தெருவே அமைதியாக இருக்கும் நேரத்தில் தார் சாலையில் தண்ணீர் விழும் சத்தம் எப்படியிருக்கும் தெரியுமா? அருவிக்கு அருகில் இருப்பதுபோல, கேட்கவே ரம்மியமாக இருக்கும்.
சுத்தமாகத் தெளித்துவிட்டு கோலம் போட ஆரம்பிப்பார்கள். கோலப்பொடிக்கென ஒரு டப்பா / கொட்டாங்குச்சி இருக்கும். அதற்குப் பக்கத்திலேயே இன்னும் சில டப்பாக்களில் / கொட்டாங்குச்சிகளில் சிகப்பு, மங்கள், பச்சை, நீலம் போன்ற வண்ண வண்ண பொடிகள் இருக்கும்.
கோலப்புத்தகங்களைப் பார்த்து அழகாக தரையில் கோலம் போடுவார்கள், ஆங்காங்கே பலவிதமான வண்ணங்களை நிரப்பி. “Magnified Photocopy” எடுத்தது போலவே இருக்கும். எங்கள் வாசலில் கோலம் போடுவது என் அம்மாவும், அக்காவும்தான் என்றாலும் அதில் எனது சிறு பங்களிப்பும் இருக்கும்.
எங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு முடித்துவிட்டு மற்றவர்கள் வீட்டு வாசலில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர், எந்தெந்த நிறங்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் போன்றவற்றை நோட்டம்விட கிளம்புவோம். திரும்பி வந்து அவற்றைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் எங்கள் கோலங்களையெல்லாம் பார்த்தவண்ணம் போய்க்கொண்டிருப்பார்கள். இந்தத் தகவல் பரிமாற்றம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடக்கும்.
வெண்பொங்கலில் ஆரம்பித்த பொங்கல் தினம் வண்ணக் கோலங்களுடன் இனிதே நிறைவுபெறும்.
அப்போது அதிகமாயிருந்த தனி வீடுகளின் மொட்டை மாடிகளும், தனி வாசல்களும் தற்போது நடந்துவரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் படையெடுப்பில் அழிந்து வருவதை நினைக்கும்போது ஒரு சின்ன வருத்தம் எழவே செய்கிறது.
எது எப்படியோ, அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் smile emoticon

No comments:

Post a Comment