Saturday 4 April 2015

இந்தியாவை அசைக்கவே முடியாது (Feb 2015)

நேற்றிரவு ஷாந்தி நகர் பேருந்து நிலையத்திற்கு டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தோம். எந்த வண்டியென்று சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கடுப்பேற்றுகிற சிற்றுண்டி என்றதும் உப்புமா நினைவுக்கு வருவதும், டாக்ஸி வண்டி என்றதும் டாடா இண்டிகா நினைவுக்கு வருவதும் இந்தியர்களுக்கே உரிய டிசைன். இதை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது என்றே நினைக்கிறேன், மாறிவிடவும் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். பின் என்ன, நாம் மட்டும்தான் இவற்றையெல்லாம் அனுபவிக்கவேண்டுமா? யாம் பெற்ற இன்பம் பெறுக அனைவரும்.
வழியில் பயங்கர போக்குவரத்து நெரிசல். வழிநெடுக இதே கதைதான். ஆனால் இது ஒன்றும் புதியதல்லவே. வாழ்க்கையைப் பொறுத்தவரை மூன்று விஷயங்கள் நிதர்சனம்.
1. பிறப்பு
2. இறப்பு
3. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல்.
இவற்றில் முதல் இரண்டும் எப்படியோ தெரியவில்லை, மூன்றாவது விஷயம் நிதர்சனம் மட்டுமல்ல, நிரந்தரமும்கூட.
சரி, விஷயத்துக்கு வருவோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டது. நெரிசலில் சிக்கிய வண்டிகள், வண்டிக்காரர்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விட வேண்டுமே என்று என்னைப் போலவே சில பேர் வேண்டியிருக்கக்கூடும். சில நொடிகளில் ஆம்புலன்ஸ் செல்லத் தேவையான அகலமுள்ள வழியொன்றை ஏற்படுத்திக் கொடுத்தனர் நம் மக்கள். "நான் இருக்கேன் குமாரு" என்று அந்த நொடி கடவுள் மனிதனிடம் சொல்லியிருப்பார் என நினைத்துக்கொண்டேன் .
சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றால், அதன் பின்னாலேயே மரண வேகத்தில் சென்று, அப்படிச் செல்லும்போது ஒரு வேளை விபத்து நேர்ந்தால் அந்த ஆம்புலன்ஸில் அப்படியே அலேக்காக ஏறிவிடும் அளவுக்கு வண்டியை ஓட்டுபவர்கள் இருப்பார்களே, அவர்களைப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. யாருமே அந்த ஆம்புலன்ஸ் பின்னால் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடவில்லை. "நான் இன்னமும் இருக்கேன்" என்று மனிதன் கடவுளிடம் சொல்லியிருப்பானோ?
எப்படி வந்தது இந்த மாற்றம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பக்கத்தில் யாரோ ஒருவர் இன்னொருவரை செம்மொழியில் வசை பாடிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்து என் கவனம் கலைந்தது. யாரென்று பார்க்கையில், அது யாரோ ஒரு பெண்மணி என்று புலப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்துகொண்டு யாரை இப்படி வசை பாடிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தேன். யாருமே இவர் பேசுவதை, இல்லையில்லை, ஏசுவதை பொருட்படுத்தவில்லை என்பது புரிந்தது.
யாரைத்தான் இப்படி ஏசிக்கொண்டிருக்கிறார் என்று யோசித்தபோதுதான் புரிந்தது, அவர் வசை பாடிக்கொண்டிருந்தது தன் தலைக்கவசத்தினுள் மறைத்து வைத்திருந்த அலைபேசியில் ஒலித்தக்கொண்டிருந்த குரலுக்குச் சொந்தக்காரரான யாரோ ஒருவரைத்தான் என்று.
யார் அந்த பாவப்பட்ட ஜென்மம் என்று நான் உச்சுக்கொட்டி பரிதாபப்பட்ட நேரத்தில், போக்குவரத்து நெரிசல் சற்று க்ளியரானது. அடுத்த நொடி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல சீறிப் பாய்ந்தன வண்டிகள். எங்கள் பயணமும் தொடர்ந்தது.
சாலையில் எங்களுக்கு முன்னே சற்று தூரத்தில் ஒரு போர்ஷே கார் போய்க்கொண்டிருந்தது. ஆஜானுபாகுவாக இருந்தது. நம்பர் ப்ளேட்டைப் பார்த்தேன், பாண்டிச்சேரியில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட வண்டியென்று தெரிந்தது. லட்சங்களையும் கோடிகளையும் போட்டு விலையுயர்ந்த வண்டிகளை வாங்கிவிட்டு, சாலை வரியில் சில பல லகரங்களை சேமிப்பதற்காக பாண்டிச்சேரியில் வண்டியை ரெஜிஸ்டர் செய்துவிட்டு இந்தியா முழுவதும் சுற்றுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இவர். சரி, இருந்துவிட்டுப்போகட்டும். அவர் பணம், அவர் உரிமை (உபயம் - கல்யாண் ஜிவல்லர்ஸ் பிரபு). அவருக்கான நேரம் வரும் வரை பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கத் தேவையான மருந்து அவரிடம் நிறையவே இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும்.
அப்போது திடீரென வண்டியின் ஜன்னல் கண்ணாடியொன்றைத் தாழ்த்திவிட்டு, உபயோகப்பட்டுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்பொன்றை சாலையில் போட்டது வண்டிக்குள்ளிருந்து தோன்றிய கை. அந்த கப் தரையில் விழுவதற்குள் விருட்டென பறந்தது அந்த போர்ஷே. அந்த நொடியில் எனக்கு அந்த போர்ஷே கார் மீது இருந்த ஈர்ப்பு மறைந்து அதை ஓட்டிக்கொண்டிருந்தவனின் மீது வெறுப்பும், அருவருப்பும் தோன்றியது. கார் காஸ்ட்லியாக இருந்தாலும் அதை வாங்கிய ஆட்கள் 'சீப்'பாக இருக்கலாம் என்ற உண்மை விளங்கியது.
"இந்த மாதிரி படித்த பரதேசிகள் உள்ளவரை இந்தியாவை அசைக்கவே முடியாது" என்று கடவுள் சொன்னது என் காதில் மட்டும்தான் விழுந்ததோ?

No comments:

Post a Comment