Friday 23 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 8

மறக்க முடியாத முகங்கள் 8:

பயம் என்றால் என்ன? எப்படி இருக்கும்? நாம் பயப்படும்போது நம் முகம் எப்படி இருக்கும்? முகம் அஷ்டகோணலாக மாறுமா? இல்லை, நம்மை அறியாமல் திரைப்படக் கதாநாயகிகளைப் போல் வாயில் கை வைத்து அலறுவோமா?

சிறுவயதில் நிச்சயமாக பயந்திருப்போம். அதை யாராவது புகைப்படம் எடுத்து வைத்திருந்தால், அந்தப் புகைப்படத்தை நாம் இப்போது பார்க்க நேரிட்டால் “இதுக்கெல்லாமா பயந்தேன்?” என்று மனதுக்குள் சிரித்துக் கொள்வோம்.

ஆனால், வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு, நம்மில் பெரும்பாலானோர் இன்னும் உண்மையான பயத்தை அனுபவித்திருக்க மாட்டோம் என்றே நினைக்கிறேன் (திருமணமானவர்கள் இதற்கு விதிவிலக்கு). இது நல்லதா, கெட்டதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

சிறுவயதில் நாம் பயந்தபோது இருந்த நம் முகம், அந்த முகபாவம் இப்போது நம் நினைவில் இருக்க வாய்ப்பில்லை. விளையாட்டாக நம்மை பயமுருத்தியிருந்தாலும், அப்போது அது நமக்கு அசுர பயமாகத்தான் இருந்திருக்கும். நாம் சமீபத்தில் பார்த்த ஒரு சிறுவனது முகம் இப்படித்தான் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு, ஆட்டோவில் பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன். இரவு 10 மணி இருக்கும். வழியில் ஒரு டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அங்கு நின்றோம்.

அந்த இடத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது. நம்மூர் முனியாண்டி விலாஸ் போன்ற ஒரு ஹோட்டல் அது. அதன் வாசலில் இரண்டு பேர் ஒரு சிறுவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். அவனுக்கு 10, 11 வயது இருக்கும் என நினைக்கிறேன். மாநிறம். மொட்டைத் தலையில் ஆங்காங்கே முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் எப்படியாவது இவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட வேண்டும் என நினைத்து, பின்னால் சாய்ந்தபடியே கைகளை இழுத்தவண்ணம் இருந்தான். தப்பிக்க முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில் அங்கு இன்னொருவர் வந்தார். அவரும் அவனை நெருங்கி, சத்தம் போட்டு, மிரட்ட ஆரம்பித்தார். மூன்று பேரும் சேர்ந்து பலத்த குரலில் அவனைத் திட்ட ஆரம்பித்தனர். அப்போது அவன் முகத்தில் பயம் சத்தம்போட ஆரம்பித்தது. “சாரிண்ணா, சாரிண்ணா” என்று அலற, அழ ஆரம்பித்தான். இவர்கள் கேட்பதாகயில்லை. தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தனர். அந்த நேரத்தில் சிக்னலில் பச்சை விழுந்ததால் அடுத்து என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆட்டோவிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தபோது ஒருவரின் கை மேலும் கீழும் போய்க்கொண்டிருந்தது. அடிக்க ஆரம்பித்துவிட்டனரோ என்று வருத்தமாக இருந்தது.

எதையோ திருடிவிட்டானோ, அல்லது ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தப்பித்து ஓட நினைத்தானோ தெரியவில்லை. கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டான். அதனால் இந்த அடி. எத்தனையோ பேர் எவ்வளவோ கொள்ளையடித்தும் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பையனின் நிலைமை பாவமாக இருந்தது.

திருடுவது தவறுதான். திருடர்களைப் பார்த்தால் கோபம் பீறிட்டு வருவது இயற்கை. ஆனால், இந்த மாதிரி ஒரு சிறுவன் திருடிவிட்டு, பிடிபடும்போது கோபத்துடன் சேர்த்து வேதனையும், வருத்தமும் வரும். இந்தச் சிறு வயதில் திருடுகிறானே என்ற வேதனை, வருத்தம். இந்த வேதனையை, வருத்தத்தை நம் மூளை புரிந்துகொள்வதற்குள், நம் கோபம் அதிகரித்துவிடுகிறது. கோபத்தின்முன் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். அதனால் அடுத்து அடிதான்.

அந்தச் சிறுவனால் நேரடியாக பாதிக்கப்பட்டது நானில்லை என்பதாலோ என்னவோ எனக்குக் கோபம் வரவில்லை; வருத்தமும் வேதனையும் மட்டுமே மிஞ்சியது. கனமான மனதுடன் ரயிலேறினேன்.



பயம் தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் முகத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

Sunday 18 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 7

மறக்க முடியாத முகங்கள் – 7:

நாளை திங்கட்கிழமை. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கு திங்கட்கிழமை என்றால் திகில்கிழமைதான். சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வீட்டிலோ, வெளியிலோ நிம்மதியாக இருந்துவிட்டு திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்லவேண்டும் என நினைக்கும்போது, ஒரு சின்ன சோகம் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். இப்படி நினைப்பதுதான் இயல்பு என நினைக்கும் அளவுக்கு மாறிவிட்டது நிலைமை. இப்படி நினைக்காதவர்களை சங்கத்தைவிட்டே ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள்.

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலை. அலுவலகம் சென்று வர அலுவலகப் / அரசுப் பேருந்து, இல்லையென்றால் இரு / நான்கு சக்கர வாகனம், ஏ.சி அறைகள், நேரத்துக்கு சாப்பாடு, சிற்றுண்டி வசதி, நினைத்த நேரத்துக்கு காபி, டீ குடிக்க வசதி, இன்டர்னெட் வசதி.

இப்படி ஏராளமான வசதிகள் இருந்தாலும், எப்படியாவது அடுத்தவரைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும், சென்ற முறை கிடைத்த சம்பள உயர்வைவிட இந்த முறை அதிகம் வாங்கிவிட வேண்டும் போன்ற போட்டிகளால் மன அழுத்தம் அதிகமாகிறது.

கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை எப்படியாவது சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என நினைப்பது சரிதான். அது நம் கடமையும்கூட. ஆனால், அந்த வேலையை முடித்தவுடன் அடுத்து வேறு ஒரு முக்கியமான வேலையை இழுத்துப்போட்டு செய்யவேண்டும், அப்போதுதான் அப்ரைசல் நேரத்தில் இந்த எக்ஸ்ட்ரா வேலையைப்பற்றி சொல்லலாம் என நினைத்துக்கொண்டு, அந்த வேலையைப் பற்றி தெரியாமலே அதற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டோ, வேலையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டோ இருந்தால், நம் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் பற்றி யார்தான் கவலைப்படுவது?

சரி, எக்ஸ்ட்ரா வேலை செய்தால் என்ன தவறு? அவருக்கு அதற்கேற்றார்போல் சம்பளமும், பதவி உயர்வும் கிடைக்குமே என நினைப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல். தன் வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பவருக்கும், எக்ஸ்ட்ரா வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவருக்கும், இந்தக் காலகட்டத்தில், மாதச் சம்பளத்தில் 3500 (அதிகபட்சம்) ரூபாய்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்படி உடல் நலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வேலை செய்துகொண்டிருந்தால் மருத்துவச் செலவு கூடி, கடைசியில் இருவருடைய சேமிப்பிலும் பெரிய வித்தியாசம் இருக்காது. பணம், பணம் என்று ஓடிக்கொண்டே இருந்தால், நம்மைப் பாதுகாக்க, நம் குடும்பத்தைப் பாதுகாக்க வானத்திலிருந்து யாராவது வருவார்களா? சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?

ஆனாலும், எத்தனையோ பேர் குடும்பச் சூழல் காரணமாக இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை வருத்திக் கொண்டு, மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகள் படக்கூடாது என்று உறுதிபூண்டு, உழைத்து உழைத்து ஓடாய்ப் போகிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக தங்கள் நிகழ்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பதில் ஒரு திருப்தி இவர்களுக்கு. சமீபத்தில் நான் சென்னை சென்றிருந்தபோது இப்படிப்பட்ட ஒருவரைச் சந்தித்தேன்.

தாம்பரத்திலிருந்து மயிலாப்பூர் செல்லவேண்டியிருந்தது. மணி இரவு 9:30 ஆகியிருந்ததால் பேருந்துகளை நம்ப மனமில்லை எனக்கு. சரி, ஆட்டோ பிடித்து சென்றுவிடலாம் என முடிவெடுத்து காத்துக் கொண்டிருந்தேன்.
நிறைய ஆட்டோக்காரர்கள் இவ்வளவு தூரம் வர முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். இன்னும் சிலர் இதற்குக் கட்டணமாக ஐநூறு ரூபாய் கேட்டார்கள். இப்படியே தொடர்ந்தால் என்னதான் செய்வது என நினைத்து கடவுளை வேண்டத் தொடங்கியவுடன் வந்தார் இந்த ஆட்டோக்காரர். மீட்டர் கட்டணத்துக்கு மேல் இருபது ரூபாய் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்து வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வழியில் வழக்கம்போல் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அதிகம் படித்தவரில்லை. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை, கள்ளம் கபடம் இல்லாமல் தன் உள்ளிருந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டார். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள், தலைவர்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம். பல அரசியல் தலைவர்களைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லையென்பது அவர் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அடுத்து விலைவாசி பற்றி பேச ஆரம்பித்தோம். காய்கறி விலையில் தொடங்கி, கல்விக்கான விலை வரை பேசினோம். காய்கறி விலை உயர்வால் மக்கள் தினசரி பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், மிக அதிக கல்விக் கட்டணத்தால் அவர்களின் நிகழ்காலமும், எதிர்காலமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்தார். அப்போதுதான் தன் குடும்பத்தைப் பற்றியும் தன் உழைப்பைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்.

அவருக்கு இரண்டு மகன்களாம். என்ன படிக்கிறார்கள், எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது என் நினைவில் இல்லை. ஆனால் படிப்புச் செலவு மட்டும் மாதத்திற்கு கிட்டத்தட்ட பதினான்காயிரம் ஆகிறதாம். இதை எப்படி சமாளிக்கிறாராம் தெரியுமா?

காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு, ஏழு மணி வரை ஒருவரிடம் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறாராம். மாதச் சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய். அதற்குப் பிறகு, தினம் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாய் வருமானம் (டீசல் செலவு போக) வரும் வரை ஆட்டோ ஓட்டுகிறாராம். காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு வந்துவிடுகிறாராம். அதற்குப் பிறகு அன்று முழுவதும் அவர்களுடன் பேச நேரம் கிடைப்பதேயில்லையாம்.

இப்படி அலைந்துகொண்டே இருப்பதால், வாரத்தில் நான்கைந்து நாட்களில், ஐந்து மணி நேரம்தான் தூங்க நேரம் கிடைக்கிறதாம். எத்தனை மணி நேரம்? ஐந்து மணி நேரம்!

இதைக் கேட்டதும் வாயடைத்துப் போனேன். குறைந்தது ஏழு மணி நேர தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் முழுவதும் அழுது வடிந்து போகும் எனக்கு. அப்படியிருக்கையில் வெறும் ஐந்து மணி நேரம்தான் தூக்கம் என்றால்?

இவர் படும் கஷ்டத்தை இவர் மனைவி தங்கள் பிள்ளைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்ப்பதாகவும், அவர்களும் நிலைமையைப் புரிந்து நன்றாகப் படித்து வருவதாகவும் சொன்னார். படிப்புதான் நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் பெரிய சொத்து என்றார். வேதவாக்கு. தொடர்ந்து பேசினோம்.

வீடு வந்து சேர்ந்தோம். வண்டியை விட்டு இறங்கும்போது “நான் அம்பது, அம்பத்தஞ்சு வயசு வரைக்கும்தான் வாழ்வேன்னு நினைக்கிறேன் சார். இவ்ளோ அலைச்சல், டென்ஷன், பிரஷர். எப்படி தாங்குவனோ தெரியல. இப்பவே உடம்புல ஏகப்பட்ட பிரச்சினை. ஆனா, அதுக்கு முன்னாடி என் பசங்களை நல்லா செட்டில் பண்ணிட்டா போதும் சார். எனக்கு வேற கவலையில்லை” என்றார். கண்கள் ஈரமாகின. அவருக்கும், எனக்கும்.


பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். அடுத்த திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்லவேண்டுமே என்ற அலுப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.

என்னையும் இப்படி மாற்றிய இவரது முகம் மறக்க முடியாத முகமே!

Friday 9 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 6

றக்க முடியாத முகங்கள் – 6

இன்று மாலை அலுவலகத்திலிருந்து என் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். வழியில் இரண்டு டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. அவற்றை கடந்துதான் வர முடியும்.

முதல் சிக்னல் அலுவலகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. ஏகப்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் இருக்கும் பகுதி என்பதால் எப்போதுமே சாலையில் கார்களும், இரு சக்கர வாகனங்களும் சென்று கொண்டிருக்கும்.

காலை 7:30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7:30 மணி வரை போக்குவரத்து உச்சக்கட்டத்தில் இருக்கும். போக்குவரத்தை கட்டுப்படுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இரவு 9 மணி வரை இருப்பார்கள்.

இந்த சிக்னலில் சாலை விதிகளை மீறுபவர்களை அலேக்காகப் பிடித்து அபராதம் விதித்துவிடுவார்கள். என் நண்பர்கள் சிலரும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு, அபராதம் கட்டிவிட்டு வந்திருக்கிறார்கள் என்பதால் இது எனக்குத் தெரியும்.

இங்கிருந்து வலது பக்கம் திரும்பி நேராக வந்தால், சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இன்னொரு டிராஃபிக் சிக்னல். நான்கு சாலைகள் சந்திக்கும் ஒரு சந்திப்பு. இந்த இடத்தில் ஒரே ஒரு காவல்துறை அதிகாரிதான் இருப்பார். அவரும் பெரும்பாலான சமயங்களில் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு, வெரித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதால், இந்த சிக்னலில் பலர் சாலை விதிகளை மீறிச் செல்வார்கள்.

இன்று இந்த சிக்னலில் நான் நின்று கொண்டிருந்தபோது என் பக்கத்தில் ஒரு இரு சக்கர வாகனம் வந்து நின்றது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர்தான் ஓட்டுபவர். அவருக்குப் பின்னால் ஒரு சிறுவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். 7, 8 வயது இருக்கும் என நினைக்கிறேன்.

சில நொடிகள் அந்த சிக்னலில் நின்றுவிட்டு, பொறுமையிழந்து அங்கும் இங்கும் பார்த்தார் அந்த நபர். கண்காணிக்க யாரும் இல்லாததால் விருட்டென கிளம்பி சென்றுவிட்டார். அந்த சிறுவனோ நிமிர்ந்து சிக்னலை பார்த்துக்கொண்டும், பின் மற்ற வண்டிகளை பார்த்துக்கொண்டும் இருந்தான். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது!

இதைப் பார்த்ததும் எனக்கு கவலை கலந்த கோபம் வந்தது. போக்குவரத்துத்துறை அதிகாரி யாராவது அந்த இடத்தில் நின்றிருந்தால் இந்த நபர் சிக்னலை மதிக்காமல் சென்றிருப்பாரா என்பது சந்தேகமே. அவர் அங்கு இல்லாதது ஏன் என்று தெரியாமல் ஒரு முடிவுக்கு வரமுடியாது. சரி, இதை விட்டுவிடலாம்.

கண்காணிப்பதற்கு, தவறு செய்தால் பிடிப்பதற்கு, தண்டனை கொடுப்பதற்கு யாருமே இல்லையென்றால் இந்த மாதிரி சின்னச் சின்ன தவறு செய்பவர்கள், நாளை இதே மாதிரி சந்தர்ப்பம் அமைந்தால் பெரிய தவறுகளை செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

படித்தவர்கள் மனிதர்களாக, பண்புடையவர்களாக, பொது அறிவு உள்ளவர்களாக நடந்து கொள்வதற்கு கண்காணிப்பும், தண்டனையும், அவமானமும் அவசியமென்றால், நமக்கும் சர்க்கஸில் இருக்கும் மிருகங்களுக்கும், ஆட்டு மந்தைக்கும் என்ன வித்தியாசம்?

மிருகங்கள் சர்க்கஸிலும், மந்தையிலும் தங்கள் இயற்கை குணத்தை கட்டுப்படுத்த வேண்டிய, இயற்கை குணத்துக்கு மாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் இப்படி அடங்கி ஒடுங்கி நடக்கின்றன. சில மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனக்குப் புரியவில்லை. இதையும் விட்டுவிடலாம்.

வண்டியின் பின்னிருக்கையில் இருந்த அந்த சிறுவன் சிக்னலை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருந்தான். மற்ற வண்டிகள் சிக்னலில் நின்று கொண்டிருந்ததை அவன் நிச்சயம் கவனித்திருப்பான் என நினைக்கிறேன். இது எவ்வளவு ஆபத்தான ஒரு உதாரணம்?

சிறுவர்களும், குழந்தைகளும் நாம் சொல்லிக்கொடுப்பதைவிட, நம்மைப் பார்த்துதான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். நம் மொழி, மாடுலேஷன், உடல் அசைவு, ஒழுக்கம் முதலிய எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள். அதன்படியே நடக்கவும் செய்வார்கள். இதனால்தான் நாம் எப்போதும் நல்லதையே பேச வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், கண் முன்னாலேயே இப்படி சாலை விதிகளை மதிக்காமல் சென்றால், அச்சிறுவனுள் சாலை விதிகளை சில சமயம் மீறினால் தவறேதும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு அந்த நபரும் ஒரு காரணம். இது பிற விதிமுறைகளுக்கும் பொருந்தும் என்று அச்சிறுவன் யோசிக்கத் தொடங்கினால் இன்னும் கேடு.

இந்த காலத்தில் சாலை விதிகளை மீறுவது ஒரு சிறிய விஷயமாகிவிட்டது. ஆனால், அதன் விளைவு ஏதாவது ஒரு விபத்தின்போதுதான் நமக்கு புரிகிறது. பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டால்தான் சிலர் கற்றுக் கொள்கிறார்கள்.

நம்மால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தவறுகளை, கெட்ட செயல்களை செய்யாமல் இருந்தாலே பெரிய விஷயம். நம் நாட்டுக்கும், உலகத்துக்கும், பிற உயிர்களுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு இதுவாகத்தான் இருக்க முடியும்.
இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே, கடைசியில், கோபத்துடனும், கவலையுடனும் வீடு வந்து சேர்ந்தேன்.


சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்ததையும், அப்போது மற்ற வண்டிகள் நின்றுகொண்டிருந்ததையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவனின் முகம் மறக்க முடியாத முகமே!

Thursday 8 May 2014

ஹைக்கூ கவிதைகள் – 1 - குளிர்காற்று

குளிர்காற்றவள்
அடித்ததனால்
அழுகிறானோ
கார்மேகன்?

பேசும் மொழி
புரியவில்லை..
ஆனாலும்
மரங்களைப்போல்
தலையசைத்துக் கொண்டிருக்கிறேன்
குளிர்காற்றும் ஒரு பெண்தான்

இனிமையான
குளிர்காற்றுடன்
பறந்து
வீட்டைவிட்டு
ஓடிவிடத் துடிக்கின்றன,
கொடியில்
காய்ந்து கொண்டிருக்கும்
துணிகள்

தலைமுடி
கையில்
கிடைத்தால்
போதும்,
புகுந்து விளையாடிவிடுகிறார்கள்
குழந்தைகளும்
குளிர்காற்றும்

குளிர்காற்றரசியின்
மேகப்படையின்
மழைத்தாக்குதலில்
எல்லாவற்றையும்,
எல்லோரையும்
வென்றுவிடுகிறாள்
பூமித்தாய்

குளிர்காற்றுப்பட்டால்
புத்துணர்ச்சி
கிடைக்கும்
என்கிறார்கள்
அறிஞர்கள்..
அப்பட்டமான பொய்..
மெய்மறந்து
உணர்ச்சியற்றவனாக
இருக்கிறேன் நான்..

ஆடத்தெரியாதவர்களையும்
ஆடத்தயங்குபவர்களையும்
ஆடவைத்துவிடுகிறாள்..
குளிர்காற்றும்
கடவுளே..

சலவை
செய்து
வெளுத்து எடுத்து விடுகிறாள்
வானத்தை..
கோபக்காரியோ?


குளிர்காற்றுக்கும்
அசைந்து
கொடுக்காதவர்கள்
‘இரும்பு’ மனிதர்கள் அல்லர்..
வெறும்
‘கல்’ நெஞ்சுக்காரர்கள்

Friday 2 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 5

மறக்க முடியாத முகங்கள் – 5:

இப்பகுதியை நான் “A tale of two heart attacks” என்று ஆங்கிலத்தில் எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் மொழிபெயர்ப்பு செய்ய சோம்பேறித்தனமாக இருந்ததால் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன். ஆங்கிலம் தப்பித்தது.

நான் வசிக்கும் பகுதியில் ஒரு அரசியல்வாதி இருக்கிறார். இல்லையில்லை, இருந்தார். 1980-களில் இருந்து 2013 வரை அரசியலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மாரடைப்பில் உயிரிழந்தார்.

அரசியல்வாதி என்றாலே நேர்மையற்றவராகத்தான் இருப்பார் என்ற எண்ணம் நமக்கெல்லாம் தானாகத் தோன்றிவிடும். இது நம் தவறில்லை என்றும் நம்மில் சிலர் நினைக்கக்கூடும். எவ்வளவு வேடிக்கையான விஷயம் இது?

சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் எப்போது மக்கள் பணத்தை, மக்கள் சொத்தை அடைய நினைத்தாரோ, அப்போதே அப்பகுதி மக்கள் அவரது செயலை கண்டித்து, அவரை தண்டித்திருந்தால், இப்போது இந்த கொள்ளையடிக்கும் கலாச்சாரம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா?

இது நம் தவறுதான். சொல்லப்போனால், இதுதான் மிகப்பெரிய தவறு. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்வதை தடுக்காமல் இருப்பதும் தவறுதான். இதை என்று நாம் உணரப்போகிறோமோ? எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம் (இறைவன் இருக்குமிடத்தில் மின்வெட்டு இருக்காது என நினைக்கிறேன்!).

விஷயத்துக்கு வருவோம். இந்த அரசியல்வாதிக்கு நிறைய சொத்துகள், சில பல கல்லூரிகள் இருப்பதாக பலர் சொல்கின்றனர். செல்வச்செழிப்புடன்தான் இருந்தார்.

இவ்வளவு சொத்துகள் இருந்து என்ன பயன், மன அமைதி என்பது இருந்தால்தானே எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியும்? இவரின் மகன் மனவளர்ச்சி குன்றியவராம்.

முற்பிறவியிலோ, இப்பிறவியிலோ நாம் செய்த பாவங்கள் நிச்சயம் நம்மை வந்தடையும் என்பது என் நம்பிக்கை. நம் உடலையும், மனதையும் வருத்தும். வறுத்து அரைத்துவிடும். இந்த அரசியல்வாதியின் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது என நினைக்கிறேன்.

உயிர் பிரியும் அந்த இறுதி நொடிகளில், நிச்சயம் தன் மகனின் நிலைமையைப் பற்றி நினைத்திருப்பார். ஆனால், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

இந்த அரசியல்வாதியை நான் நேரில் பார்த்ததில்லை, பழகியதில்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான். அதனால் இவரது மரணம் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இன்னொருவரது மரணம் என்னை சற்று சங்கடப்படுத்தியது.

சென்ற வாரம் முடிதிருத்தகத்திற்குச் (சலூன் கடை) சென்றிருந்தேன். வழக்கமாக செல்லும் கடைதான். சென்றபோதெல்லாம் இதன் உரிமையாளரை சந்தித்திருக்கிறேன்.

கிரிக்கெட் மைதானத்தில் காணப்படும் புல் போல ‘லெவலாக இருந்த சின்ன தாடி, கண்ணாடி, நெற்றியில் குங்குமத்தில் ஒரு சின்ன கோடு, சரியாக சீவப்பட்ட தலை. எப்போதும் கை மடிக்கப்பட்டிருந்த கட்டம் போட்ட ஒரு முழுக்கை சட்டை, கறுப்பு / சாம்பல் நிற பேண்ட். இதுதான் அவர்.

இரண்டு, மூன்று முறைதான் அவருடன் பேசியிருக்கிறேன். தாய்மொழி தெலுங்கு என்றாலும், கன்னடமும் பேசுவார். என்னதான் பேசினாலும் சத்தம் வராது. மணிரத்னம் அவர்களின் திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவார்.

அதுவும் காதலர்கள் நடுராத்திரியில் போர்வைக்குள்ளேயிருந்து பேசுவதுபோல் அமைதியாக பேசுவார். சில சமயம் அவர் பேசியது அவருக்காவது கேட்டிருக்குமா என வியந்திருக்கிறேன்.

எந்த ஒரு வார்த்தை / வாக்கியம் பேசினாலும் அதன் முடிவில் ஒரு சின்ன புன்னகை அவரது முகத்தை அலங்கரித்துவிடும். அதைப் பார்த்ததும், பதிலுக்கு நம்மால் புன்னகைக்காமல் இருக்கமுடியாது.

இந்த முறை அதே முடிதிருத்தகத்திற்குச் சென்றிருந்தபோது, இவரது புகைப்படம் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. மல்லிகைப்பூ மாலை அந்த புகைப்படத்தின் மேல் மாட்டப்பட்டிருந்தது.

என்ன நடந்தது என விசாரித்தேன். மாரடைப்பில் இறைவனடி சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள் கடையில் வேலை பார்ப்பவர்கள். சொல்ல முடியாத ஒரு சின்ன சோகம் என்னை சூழ்ந்து கொண்டது.

ஒரு நாவலை, தொடர்கதையை படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முக்கிய பகுதி அந்த நாவலில், தொடர்கதையில் இல்லை என்றால் நாம் எப்படி உணர்வோம்? காசு கொடுத்துவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்து புன்னகைக்க அவர் இனி இருக்கமாட்டார் என நினைக்கும்போது எனக்குள் இந்த உணர்வுதான் இருந்தது.

அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனாலும் அவரது மரணம் என்னை பாதித்தது என்றால் அதற்கு அவரது புன்னகை ஒரு முக்கிய காரணம்.


ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன புன்னகையின் மூலம் அந்த நொடியை இனிமையானதாக மாற்றிய அவரது முகம் மறக்க முடியாத முகமே!