Monday 30 December 2013

என் இரண்டாவது சிறுகதை - நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எழுதியது (1993)

என்னுடைய நான்காம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் நான் எழுதியிருந்த அந்த இரண்டாவது கதை இதுதான்.

----------------------------------------------------------------------------------------------------------
ராஜாவுக்கு நாய்க்குட்டிகள் ரொம்ப பிடிக்கும். அப்படிதான் அன்று தெருவில் இருந்த ஓரு நாய்க்குட்டியை தன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

தினமும் அந்த நாய்க்குட்டியை நன்றாக பார்த்துக்கொண்டான். தினமும் அந்த நாய்க்குட்டிக்கு பிஸ்கெட், தயிர்சாதம், பால் எல்லாம் கொடுத்தான். அந்த நாய்க்குட்டியுடன் தினமும் விளையாடினான்.

ஆனால், கொஞ்ச நாட்களில் அந்த நாய்க்குட்டியை பராமரிப்பதை விட்டுவிட்டான். கடைசியில் அந்த நாய்க்குட்டியை தெருவில் விட்டான். அது கொஞ்ச நாட்களில் உடல் நிலை மோசமாகி, செத்துப்போனது.

அந்த நாய்க்குட்டியின் ஆவி, தன்னை சரியாக பார்த்துக்காத ராஜாவை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாயினுள் புகுந்தது அந்த ஆவி.

ஒரு நாள் ராஜா மொட்டை மாடியில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அன்று அந்த நாய் படிக்கட்டு ஏறி, மொட்டை மாடிக்குப் போய், அங்கிருந்து ராஜாவைக் கீழே தள்ளிவிட்டது.

தரையில் விழுந்தான் ராஜா. அடி பட்டு ரத்தம் வந்தது. அப்போது அந்த நாய்க்குட்டியின் ஆவி, அவன் முன் வந்தது. அதைப் பார்த்ததும் "ஸாரி, தெரியாம உன்ன விட்டுட்டேன். இனிமே இப்படி செய்யமாட்டேன்" என்று அழுதான்.

அதற்கு அந்த ஆவி, "அப்படீன்னா, இந்த நாயை நீ தான் பாத்துக்கணும்" என்று சொன்னது. அதற்கு சரி என்றபடி தலையாட்டினான் ராஜா. இதைப் பார்த்து அந்த நாய்க்குட்டிக்கும், நாய்க்கும் சந்தோசம்.
----------------------------------------------------------------------------------------------------------

எப்படி இருக்கிறது இந்தக் கதை? சின்ன வயசுல "வா அருகில் வா", "மனைவி ஒரு மாணிக்கம்", "அதிசய மனிதன்" படங்களை எல்லாம் பார்த்தால், இந்த மாதிரி எல்லாம் தோணும்..

என் முதல் சிறுகதை - நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எழுதியது (1993)

எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய, சிறிய நோட்டுப்புத்தகம் ஒன்று கிடைத்திருக்கிறது.

நான்காம் வகுப்பு A பிரிவில் படித்துக் கொண்டிருந்த போது எழுதியது இந்தக் கதை என நினைக்கிறேன். அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்ல பையன். எல்லா நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்திலும் என் பெயரையும், வகுப்பு - பிரிவையும், உள்ளே தேதியையும் குறிப்பிடுவேன். இதை வைத்துதான், இந்தக் கதையை நான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது எழுதியது என்று சொல்கிறேன்.

அப்படி நான் எழுதிய முதல் கதை இதுதான்.
---------------------------------------------------------------------------------------------------
"வானத்தில் வெள்ளை மேகம் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தது.

கீழேயிருந்து, மரங்களும் மேகத்துடன் சேர்ந்து, தலையை ஆட்டி ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது இதைப் பார்த்து ஒரு கறுப்பு நிற மேகம் அங்கு வந்து, இந்த வெள்ளை மேகத்தை திட்டி, அடிக்க ஆரம்பித்தது. சில நேரத்தில் அங்கிருந்த வெள்ளை மேகம் காணாமல் போனது.

நண்பனை அடித்த கறுப்பு மேகத்தின் மேல் கோபம் வந்தது கீழே இருந்த மரங்களுக்கு. தங்கள் நண்பனான காற்றை, அந்த கறுப்பு மேகத்தை மிரட்ட, தேவைப்பட்டால் அடிக்க அனுப்பின அந்த மரங்கள்.

காற்று வேகமாகப் போய், அந்த கறுப்பு மேகத்தை மிரட்டி, அடித்தது. அந்த வலியை தாங்க முடியாமல் கறுப்பு மேகம் அழுதது. அதுதான் மழையாய் வந்தது.

சில நேரம் அழுது முடித்ததும், கறுப்பு மேகத்தை அங்கிருந்து கிளம்ப சொல்லியது காற்று. கறுப்பு மேகமும் அங்கிருந்து கிளம்பியது. உடனே ஜாலியாக வெள்ளை மேகம் அங்கு மீண்டும் வந்து, மரங்களுடன் சேர்ந்து விளையாடியது"
---------------------------------------------------------------------------------------------------

எப்படி இருக்கிறது இந்த கதை?

Saturday 28 December 2013

சிறுகதை 014 - ஸ்ரீராமஜெயம் (October 2013)

கிரிக்கும் பிரமிளாவுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய பெற்றோர் பார்த்து நிச்சயித்து செய்து வைத்த திருமணம்தான் என்றாலும் இருவருடைய சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது.

கிரி மிகவும் பொறுமைசாலி. கோபம் வராது, வந்தால் எளிதில் போகாது. பிரமிளா இதற்கு நேர்எதிர். அடிக்கடி கோபப்படுவாள், ஆனால் சில மணி நேரத்தில் அந்த கோபம் மறைந்துவிடும்.

திருமணமாகி முதல் ஆறு மாதங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், மகிழ்ச்சி நிறைந்திருந்தது இவர்களது வாழ்க்கை. அப்போதெல்லாம் கிரியின் அலுவலகத்திலும் அவனுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததில்லை. அதனால் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, நிம்மதி இருந்தது.

ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலைப்பளு அதிகமாகியிருந்தது கிரிக்கு. பல ஞாயிற்றுக்கிழமைகளில்கூட அவன் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இவர்களது வீட்டில் சின்னச்சின்ன சண்டைகள் அவ்வப்போது தோன்ற ஆரம்பித்தன.

நாளடைவில் இந்த சண்டைகள் அதிகமாயின.கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல, நிலைமை இன்னும் மோசமாகி, தினம் ஒரு சண்டை என்றானது.கிரியின் பொறுமையின் எல்லை குறைந்து கொண்டே வந்தது.

அன்றொரு நாள், கிரி அலுவலகத்தில் இருந்த சமயம். பிரமிளாவிடம் இருந்து கிரியின் செல்ஃபோனுக்கு அழைப்பு வந்தது. இரண்டு முறை அழைப்பைத் துண்டித்து செல்ஃபோனை கீழே வைத்தான்.

மூன்றாவது முறை அவளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான். ஒரு நிமிடம்கூட ஆகியிருக்காது. அதற்குள் கிரிக்கு கோபம் வந்துவிட்டது.

“ஆமா, இன்னிக்கும் லேட்டாதான் வருவேன். வேலை இருக்கு. இதெல்லாம் உங்கிட்ட சொல்லி புரிய வெக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல” என்று கோபமாகப் பேசிவிட்டு அடுத்த நொடி அந்த அழைப்பைத் துண்டித்தான்.

டெய்லி இதே டார்ச்சராப் போச்சு. எப்போ பாத்தாலும் சீக்கிரம் வா, ஏன் லேட்டுன்னு..ஒரே தொல்லைஎன்று முணுமுணுத்தபடியே தன் செல்ஃபோனை அணைத்தான்.

அன்று அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேரும்போது மணி இரவு பத்து ஆகியிருந்தது. வீட்டின் காலிங்க்பெல்லை அடித்தவுடன் பிரமிளா வந்து கதவைத் திறந்தாள்.

என்னகிரி, இன்னிக்கும் இவ்ளோ லேட்டு? லேட்டாகும்னு முன்னாடியே சொல்லிருக்கலாமில்ல?என்று பதற்றத்துடன் கேட்டாள் பிரமிளா. அதற்கு கிரி, “நான்தான் அப்பவே சொன்னேனே லேட்டாகும்னு. எத்தனை தடவை அதையே சொல்லணும்னு நெனைக்கிறே? என்று வேண்டாவெறுப்பாக பதில் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அந்த பாழாப்போன செல்ஃபோனை எங்க வெச்சு தொலைச்சீங்க?

எங்கிட்டதான் இருக்கு. ஏன், அது எதுக்கு உனக்கு?

கொஞ்சம் உங்க செல்ஃபோனை ஆன் செஞ்சு பாருங்க. எத்தனை தடவை கால் பண்ணேன் தெரியுமா?

அதெல்லாம் அப்பறமா பாக்கறேன். நான் ஆஃபீஸ்லயே சாப்பிட்டுட்டேன். தூக்கம்வருது. நாளைக்கும் நெறைய வேலைஇருக்கு. சீக்கிரம் ஆஃபீஸுக்குப் போகணும் என்று எதையுமே பொருட்படுத்தாமல் தங்கள் அறைக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் படுத்தான். இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போனாள் பிரமிளா. சிறிது நேரத்தில் அவளும் வந்து, கிரியின் வலது பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.

யாரோ அழுவது போல் சத்தம் கேட்டதால், தன் வலது பக்கம் திரும்பிப் பார்த்தான் கிரி. பிரமிளா அந்தப் பக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். “ஒன்னுமில்லாத விஷயத்துக்கு என்னோட சண்டை போட்டுட்டு இப்போ அழுது நாடகமாடுறா இவ என்று நினைத்தபடியே அதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் திரும்பிப் படுத்தான்.

ஒரு மணி நேரம் போனது. அழுகைச் சத்தம் நின்றிருந்தது. இப்போது என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்கு மீண்டும் தன் வலது பக்கம் திரும்பிப் படுத்தான் கிரி. பிரமிளா அந்த இடத்தில் இல்லை. வீட்டுக்கூடத்தில் விளக்கு எரிந்துகொண்டிருப்பது தெரிய, எழுந்து கூடத்திற்குப் போனான் கிரி.

கூடத்தின் வலது பக்கத்தில், சாமி படங்களை மாட்டி வைத்திருக்கும் ஒரு சின்ன பூஜை அறையில் உட்கார்ந்து பிரமிளா எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் கிரி. வெகுநேரம் அழுதுகொண்டிருந்ததால் அவள் கண்கள் சற்று சிவந்திருந்தன.

ஏன் அழுதிட்டு இருந்தே நீ? என்று பிரமிளாவைக் கேட்டான் கிரி. பதில் ஏதும் வரவில்லை அவளிடமிருந்து.

கேக்கறேன்ல. எதுக்கு அழுதுட்டு இருந்தே?

நான் அழுததை நீங்க பாத்தீங்கன்னு எனக்குத் தெரியும். இப்பவாவது ஏன்னு கேக்கறீங்களே! சந்தோஷம் என்று வருத்தத்துடன் சொன்னாள் பிரமிளா.

ஆமா, நீ இப்பல்லாம் சும்மாவே அழ ஆரம்பிச்சுடறே. அதான் எல்லாத்தையும் கேக்கறதில்லை
உங்களுக்கு இப்படித்தான் தோணும்

சரி, விஷயத்தைச் சொல்லு. ஏன் அழுதுட்டு இருந்தே?

இன்னிக்கு சாயங்காலம் நான் வெளியே போய் காய்கறி வாங்கிட்டு வரும்போது நம்ம மெயின் ரோடுல ஒரு பெரிய ஆக்ஸிடென்ட் நடந்திருந்தது. அதுல ஒரு பைக் பயங்கரமா அடிபட்டு, சொட்டையா இருந்தது. அது நீங்க வெச்சிருக்கற அதே கறுப்பு கலர் பல்சர் பைக். நம்பர் ப்ளேட் நொறுங்கி போயிருந்துச்சு. பார்த்து பதறிட்டேன். என்ன செய்யறதுன்னே தெரியலை எனக்கு

எனக்கு ஃபோன் பண்ணியிருக்க வேண்டியதுதானே?

நான் ஆறு தடவை உங்க செல்ஃபோனுக்கு கால் பண்ணேன். நீங்கதான் உங்க ஃபோனை அணைச்சு வெச்சிருந்தீங்க

தான் வேண்டுமென்றே செல்ஃபோனை அணைத்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது கிரிக்கு. பதில் ஏதும் பேச முடியவில்லை அவனால்.

பதட்டத்துல அங்க இருந்தவங்க கிட்ட அந்த பைக்கை ஓட்டிட்டு வந்தவரோட அடையாளத்தைக் கேட்டு தெரிஞ்சுக்கிட்ட அப்பறம்தான் அது நீங்க இல்லைன்னு தெரிய வந்தது. ஆனாலும் நீங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் பயந்துக்கிட்டே இருந்தேன். அதனாலதான் நீங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே உங்ககிட்ட அப்படிக் கேட்டேன். நீங்க கோபிச்சுக்கிட்டீங்க

தான் செய்த தவறு புரிந்தது கிரிக்கு. எங்கே போனது தன்னுடைய இயல்பான பொறுமை என்று தன்னைத்தானே கேட்கத் தொடங்கினான்.

சில நொடிகளுக்குப் பிறகு, “ஸாரி பிரமிளா, ஆஃபீஸ் டென்ஷன்ல அப்படி பேசிட்டேன் என்று தன் தவறை உணர்ந்தவனாக சொன்னான். மீண்டும், பழைய கிரி போல் பொறுமையாக, அடிக்கடி கோபப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

நான்தான் ஸாரி சொல்றேன்ல பிரமிளா. இனிமே இப்படி செய்யமாட்டேன். இன்னும் ஏன் இங்க உக்காந்துட்டு இருக்கே? தூங்கலாம் வா என்றான் கிரி.

அதற்குப் பிரமிளா, “இல்லைங்க. நீங்க போய் தூங்குங்க. அந்த ஆக்ஸிடெண்டான வண்டியைப் பார்த்தவுடனே ரொம்ப பயந்துபோயிட்டேன். உங்களையும் தொடர்பு கொள்ள முடியலை. அந்த நேரத்துல நீங்க நல்ல படியா வீட்டுக்குத் திரும்பணும், அதுக்காக ஆயிரம் தடவை ஸ்ரீராமஜெயம் எழுதறதா வேண்டிக்கிட்டேன். அது இப்போதான் ஞாபகம் வந்தது. அதை முதல்ல எழுதி முடிச்சிட்டு வர்றேன் என்றாள்.

பிரமிளா தன் மீது வைத்திருக்கும் உண்மையான பாசமும், காதலும் புரிந்தது கிரிக்கு. தன் செயலை நினைத்து தன்னைத் தானே மனதுக்குள் திட்டிக்கொண்டான். இனி இப்படி நடந்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்து கூடத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.


நீங்க போய் தூங்குங்க. நான் எழுதி முடிச்சிட்டு வர்றேன். இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்றாள் பிரமிளா, “பரவாயில்லை பிரமிளா. நான் வெயிட் பண்றேன். நீ பொறுமையா எழுது. ஸ்ரீராமஜெயம் எழுதறதுக்கு ஸ்பெல்லிங் கரெக்ட்டா தெரியுமில்லை உனக்கு? என்று கிரி கிண்டல் செய்ய, பிரமிளா புன்னகைத்தாள்.

சிறுகதை 013 - வாழ்க்கை என்கிற விமானம் (August 2013)

நேரம்பகல் 3:30 மணி. புதுடில்லியில் இருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ விமானம் கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது. பெங்களூர் வந்தடைய இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.

ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தான் ரவி. காலை ஒன்பது மணிக்கு ஏர்போர்ட்டில் சிற்றுண்டி சாப்பிட்டதோடு சரி, அதற்குப்பிறகு அவன் எதுவுமே சாப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், ரவிக்கு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.அதற்குக் காரணம் விமலா.

ரவியும் விமலாவும் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர் இருவரும்.

விமலா புது டில்லியைச் சேர்ந்த ஒரு வங்காளப்பெண். ரவியின் குடும்பம் சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகிறது.

இவர்களது காதலுக்கு ரவியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்தனர். தங்களுடைய காதல் விவகாரத்தைப் பற்றி தன் பெற்றோரிடத்தில் சொல்லவேயில்லை விமலா. அவர்கள் எப்படியும் சம்மதித்து விடுவார்கள் என்று நினைத்திருக்கலாம். ஏனென்றால் விமலாவின் அண்ணனுடைய திருமணம் ஒரு காதல் திருமணம்தான்.

இந்த வருட தீபாவளி விடுமுறைக்கு புது டில்லி சென்று இந்த விஷயத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லி எப்படியாவது அவர்களுடைய சம்மதத்தை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள் விமலா.

இரண்டு வாரங்களுக்கு முன் புது டில்லிக்குச் சென்றவிமலா, தன் காதலைப்பற்றி எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவளுடைய பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரமாக போராடி, கெஞ்சி, மன்றாடியும் இவள் எதிர்பார்த்த பதில் மட்டும் வரவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று ரவிக்கு விமலாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்ததால் அவசர அவசரமாக பெங்களூரிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு புது டில்லி வந்தான் ரவி.

இன்று காலை சாப்பிட்டுவிட்டு விமலா வீட்டுக்குச் சென்று,  தன்னைப்பற்றியும், தங்கள் காதலைப்பற்றியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் ரவி. ஆனால் விமலாவின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவேயில்லை.

விமலாவின் அண்ணனின் காதல் திருமணம் அவர்களுடைய பெற்றோரை ஓரளவு பாதித்திருந்தது. அதனால் தங்களுடைய மகளுக்குத் தாம்தான் மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற நிலையிலேயே உறுதியாக இருந்தனர் அவர்கள்.

தன் தாய்க்கு ரத்தக்கொதிப்போடு சேர்ந்து இதயமும் பலவீனமாக இருப்பதால் அவர்களை மீறி எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பவில்லை விமலா. இதனால் ரவியிடம் தாம் இருவரும் பிரிந்துவிடுவதுதான் நல்லது என்று விமலா சொல்லிவிட்டதால், தன் காதல் தோல்வியை நினைத்து பெரும் சோகத்தில் இருந்தான் ரவி. தன் வாழ்க்கையே அர்த்தமற்றதானதாக நினைத்தான். இதனால்தான் அவனுக்கு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை.

இந்த நேரத்தில்தான் தன் இருக்கை வரிசைக்கு சில வரிசைகள் பின்னால் இருந்து “ஹாய் ரவி” என்று ஒரு பெண் குரல் கேட்டது ரவிக்கு. யாரது தன்னைக் கூப்பிடுவது என்று தன் தலையைத் திருப்பிப் பார்த்தான். கூப்பிட்டது வேறு யாருமில்லை, ஏர் ஹோஸ்டஸ் நந்திதாதான்.

நந்திதாவைப் பார்த்ததும் தன் இருக்கையில் இருந்து அவளை நோக்கி கையசைத்தபடி வந்தான் ரவி.
“ஹே நந்திதா, எப்படி இருக்கே? பார்த்து எவ்ளோ நாளாச்சு?”

“ஐ ஆம் டூயிங் கிரேட் ரவி. நீ எப்படி இருக்கே? காலேஜ் டேஸ்ல பார்த்தது உன்னை”

“ஆமா, ஆறு வருஷமாச்சு காலேஜ் முடிச்சு. அதுக்கு அப்பறம் இன்னிக்குதான் நாம ரெண்டுபேரும் பாத்துக்கறோம் இல்ல?”

“யெஸ் ரவி. நீ எப்படி இருக்கே? என்ன வேலைல இருக்கே?”

“நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன். நீ எப்போ இந்த ஏர் ஹோஸ்டஸ் வேலைல சேர்ந்தே?”

“ஒரு வருஷமா இந்த வேலைலதான் இருக்கேன் ரவி”

“ஓ அப்படியா? குட். சரி உன் கல்யாணம்.... சாரி, உன் கல்யாண இன்விடேஷன் கிடைச்சுது எனக்கு. ஆனா நான் அந்த நேரத்துல அமெரிக்காவுல இருந்ததால வரமுடியல. சாரி நந்திதா”

“பரவால்ல ரவி. ஐ அண்டர்ஸ்டாண்ட்”

“உன் ஹஸ்பெண்ட் எப்படி இருக்கார்? விக்னேஷ்தானே அவர் பேரு?”

சில வினாடி மௌனத்துக்குப்பிறகு, “ஹீ இஸ் நோமோர் ரவி” என்றாள் நந்திதா.

“வாட்? என்ன சொல்றே நீ?” அதிர்ந்தான் ரவி.

“யெஸ். அவர் இப்போ உயிரோட இல்லை. போன வருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட்ல...”

“ஐ ஆம் வெரி சாரி நந்திதா. தெரியாம கேட்டுட்டேன். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”

சில நிமிடங்கள் மௌனமாக இருந்தனர் இருவரும்.

“அப்பறம் நந்திதா. எப்படி இருக்கு இந்த ஏர் ஹோஸ்டஸ் வேலை? பிடிச்சிருக்கா? ரொம்ப பொறுமை வேணுமே இந்த வேலைல இருக்கறவங்களுக்கு?”

“எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு ரவி. இட் இஸ் எ சைக்கலாஜிக்கல் திங்”

“அப்படி என்ன சைக்கலாஜிக்கல் திங்க் இந்த வேலைல?”

“நம்ம வாழ்க்கையும் இந்த ஃப்ளைட்டும் கிட்டத்தட்ட ஒன்னுதான். தெரியுமா?”

“அப்படியா? எத வெச்சு இப்படி சொல்றே நீ?”

“நாம ஃப்ளைட்டுல போறது மாதிரிதான் நம்ம வாழ்க்கையும். ஒரே இடத்துல இருந்தா எங்கயுமே போக முடியாது. சில நேரத்துல ஸ்டெடியா, ஒழுங்கா எந்த தடங்கலும் இல்லாம போயிட்டு இருப்போம். சில நேரத்துல ஃப்ளைட் ஆட்டம் காணும். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி நாம போயிட்டே இருக்கணும். எதையாவது நினைச்சுட்டு ஒரே இடத்துல இருந்தாஒன்னு அப்படியே கீழே விழுந்திடுவோம், இல்லை துரு பிடிச்சு ஒன்னுத்துக்கும் உபயோகம் இல்லாம போயிடுவோம்”

தன்னுடைய இழப்பைவிட பெரிய இழப்பை சந்தித்த நந்திதா இவ்வளவு பக்குவமாக பேசுவதை நினைத்து ஆச்சரியமும், அதே நேரத்தில் தன் தோழியை எண்ணி பெருமையும் அடைந்தான் ரவி. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கும் உண்மை புரிந்தது ரவிக்கு.

“யோசிச்சுப் பார்த்தா, நீ சொன்னது எல்லாமே நூத்துக்கு நூறு உண்மை நந்திதா. பல விஷயங்களை எனக்குப் புரிய வெச்சிட்டே நீ. தேங்க்ஸ்”

“எனக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுத்ததே இந்த ஃப்ளைட் தான் ரவி. அதனால இந்த ஃப்ளைட்டுக்கும், இதைக் கண்டுபிடிச்ச ரைட் சகோதரர்களுக்கும்தான் நீ நன்றி சொல்லணும்”

“ஹா ஹா, சரிதான். அவங்களை நான் சந்திக்கும்போது நேரடியாவே நன்றி சொல்லிக்கறேன்” கண்ணடித்தான் ரவி.


பயணம் முடியும் வரை இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தனர் இருவரும். விமானம் பெங்களூர் வந்து சேர்ந்தது. தனது இந்த ஒரு விமானப் பயணத்தின் மூலம் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய ரவியின் கண்ணோட்டம் மாறியிருந்தது.

சிறுகதை 012 - காதல் - 21ம் நூற்றாண்டு (July 2013)

பெங்களூர் விமான நிலையம்.சென்னை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏதோ சின்ன கோளாறு இருப்பதால், அதை சரி செய்து அதற்குப் பிறகுதான் விமானம்கிளம்ப முடியும். அதற்குஇன்னும் 2 மணி நேரமாவது ஆகும் என அறிவிப்பு வந்தது.

எப்படி நேரத்தைக் கடத்துவது என்று யோசித்தான் கணேஷ். அதற்குள் பசி வயிற்றைக் குடைய ஆரம்பித்ததால் ஏதாவது நொறுக்குத்தீணி வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்து அங்கே இருந்த மெக்டோனால்ட்ஸுக்குள் நுழைந்தான்.

ஒரு சிக்கன் பர்கர் வாங்கி, வாசலுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் உட்கார்ந்தான். பசி ருசி அறியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போல் ருசி பசி அறியாது என்பதும் உண்மை.அந்த சிக்கன் பர்கர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் மேலும் இரண்டு சிக்கன் பர்கர் வாங்கினான்.

இரண்டாவது சிக்கன் பர்கரை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். அப்போது அங்கு வந்திருந்த ஒரு பெண், கணேஷைப் பார்த்ததும் அவனை நோக்கி நடந்து வந்து. “ஹாய் கணேஷ்” என்றாள்.

ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது யாரது தன்னை பெயர் சொல்லி கூப்பிடுவது என்று தன் தலையை நிமிர்த்திப் பார்த்தான் கணேஷ். அவள் முகத்தைப் பார்த்ததும் மலர்ந்தது இவனது முகம்.

“ஹே, ஹாய் ஸ்வேதா, வாட் எ சர்ப்ரைஸ்”. உற்சாகமானான் கணேஷ்.

“யெஸ், உண்மையிலேயே சர்ப்ரைஸ்தான் கணேஷ். எதிர்பார்க்கவே இல்லை உன்னை இங்க பார்க்கப்போறேன்னு”

“ஹும், அப்பறம் என்ன விஷயம் இங்க வந்திருக்கே? எப்படி இருக்கே ஸ்வேதா?”

“நான் சூப்பரா இருக்கேன். நீ எப்படி இருக்கே?”

“நீ சூப்பரா இருக்கறதாலதான் அப்போ உன்கிட்ட நான் என்லவ்வை சொன்னேன். இல்லன்னா லவ் பண்ணியிருப்பேனா?” கண்ணடித்தான் கணேஷ்.

“ஆனா நீ சுமாரா இருந்தாலும் பரவாயில்லை, போனா போகுதுன்னு நான் உன்னை அப்போ லவ் பண்ணேனே. அதான் உனக்கும் எனக்கும் வித்தியாசம்”. ஸ்வேதாவும் கண்ணடித்தாள்.

“அடிப்பாவி, பொசுக்குன்னு பொய் சொல்லறே? இன்னும் நீ மாறவே இல்ல ஸ்வேதா. அதே மாதிரி தான் இருக்கே”

“ஆமா, என்னவோ பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்துட்டு, அதுக்கு அப்பறம் இன்னிக்குதான் பார்க்கிற மாதிரி சொல்றே? போன மாசம் தானே சந்திச்சோம்”

“ஒரு மாசம்தான் ஆச்சா நாம மீட் பண்ணி? சரி சொல்லு. என்ன விஷயம்? என்ன இந்தப் பக்கம்?”

“சென்னை போகணும், அந்த ஃப்லைட்டுக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன். நீ என்ன இங்க?”

“நானும் அந்த ஃப்லைட்டுக்குத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்”

“ஓ, அப்படியா? குட். அப்பறம் லைஃப் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு? நம்ம ஃப்ரெண்ட்ஸ் தயா, ரம்யா எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. தயாவும், ரம்யாவும்ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணிட்டிருந்தாங்க, இப்போஅவங்களுக்கு சென்னையிலகல்யாணம். அதான் லேட்டஸ்ட் நியூஸ்”

“வாவ், கிரேட் நியூஸ். ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே, தட்ஸ் கிரேட்”

“யெஸ், சரி ஏன் நின்னுட்டே பேச்சிட்டிருக்கே. உக்காரு” கணேஷ் பக்கத்தில் உட்கார்ந்தாள் ஸ்வேதா.

மேஜையில் சிக்கன் பர்கர் இருப்பதைப் பார்த்த ஸ்வேதா, “என்ன கணேஷ், இன்னும் சிக்கன் பர்கர் சாப்பிடறதை விடலையா நீ?” என்று கேட்டாள்.

அதற்கு கணேஷ், “இல்லை. ஏன் விடணும்? எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா?” என்றான்.

“அது எல்லாம் சரி. நீ எப்போ சிக்கன் சாப்பிட ஆரம்பிச்சேன்னு ஞாபகம் இருக்கா உனக்கு?”

இரண்டு வருடங்களுக்கு முன், கணேஷும் ஸ்வேதாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சமயம். கணேஷ் அசைவம் சாப்பிடுவதில்லை. சிறு வயதிலிருந்தே அப்படியே வளர்க்கப்பட்டதால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.

கணேஷ் தன் காதலை ஸ்வேதாவிடம் சொல்ல, அவளும் அதை ஏற்றதனால், நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக அவர்களுடன் மெக்டோனால்ட்ஸுக்கு சென்றான். அன்று எதேச்சையாக இவன் கைகளில் சிக்கன் பர்கர் வந்துவிட அது அசைவம் என்று தெரியாமல் இவனும் ரசித்து ருசித்து சாப்பிட்டான். அன்று ஆரம்பித்த பழக்கம்தான் இது. இதைத்தான் சொல்கிறாள் ஸ்வேதா.

“யெஸ், ஞாபகம் இருக்கு. மறக்க முடியுமா அந்த நாளை. எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள் அது. சரி அதைவிடு, நீ என்ன விஷயமா சென்னை போயிட்டிருக்கே?”

“நான் போன மாசம் வேற ஒரு கம்பெனில ஜாயின் பண்ணேன் இல்ல. அந்த கம்பெனியோட சென்னை ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை நான்தான் செய்யணும். அதான் சென்னை போயிட்டிருக்கேன்”

“ஓ, அவ்ளோ பெரிய ஆளாயிட்டியா நீ?” என்று கணேஷ் சொல்லும்போது அவனுடைய செல் ஃபோனில் திவ்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரு நிமிடம் என்பது போல் ஸ்வேதாவிடம் சைகை காட்டிவிட்டு, தன்செல் ஃபோனில் பேசத் தொடங்கினான்.

அந்த நேரத்தில் ஸ்வேதாவை நோக்கி வந்தான் அஸ்வின். அவனைப் பார்த்தவுடன் ஸ்வேதாவின் முகம் மலர்ந்தது. பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.

கணேஷ், தன் செல் ஃபோனில் பேசி முடித்தவுடன், ஸ்வேதா, “கணேஷ், இவன்தான் அஸ்வின். என் பாய்ஃப்ரெண்ட். இவனோடதான் நான் சென்னை போறேன்” என்று அஸ்வினை அறிமுகப்படுத்தினாள். 
இருவரும் கை குலுக்கி யதார்த்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கணேஷுக்கு திவ்யாவிடம் இருந்து மறுபடியும் அழைப்பு வந்தது.

“சரி ஸ்வேதா, அஸ்வின்.தப்பா எடுத்துக்காதீங்க. என் கேர்ள்ஃப்ரெண்ட் திவ்யா திரும்ப திரும்ப கால் பண்றா. கொஞ்சம் பர்சனலான விஷயம். ஸோ..” என்று இழுத்தான் கணேஷ்.


அதற்கு ஸ்வேதாவும், அஸ்வினும், “நோ ப்ராப்ளம் கணேஷ்.அப்பறம் பார்க்கலாம். சீ யூ” என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப கணேஷ் தன் செல் ஃபோனை எடுத்து திவ்யாவுடன் பேசத்தொடங்கினான்.

சிறுகதை 011 - அவர்களும் குழந்தைகளே (May - June 2013)

வேலூர் காந்தி நகரில் இருக்கும் தன் வீட்டு வாசலில், தன் ஒன்றரை வயது மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில். மழலைப்பேச்சில் மனம் உருகி, முகம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது செந்திலுக்கு.

“இங்க பாரு தேஜஸ், அப்பா சொல்லு, அப்பா சொல்லு” என்று செந்தில் சொல்ல, அதற்கு அந்த குட்டிப்பாப்பா தேஜஸ்,“வா, வா” என்று சொல்லிக்கொண்டிருந்தான். நடுநடுவில் அர்த்தம் புரியாத சில சொற்களும் கலந்து வந்துக்கொண்டிருந்தன.

வெகு நேரம் மன்றாடிக்கொண்டிருந்தான் செந்தில். அனாலும் அவன் எதிர்பார்த்த அப்பா என்ற அந்த ஒரு வார்த்தை மட்டும் வரவேயில்லை.

எப்படியாவது அவன் வாயிலிருந்து அப்பா என்ற வார்த்தையை வரவழைத்துவிட வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்தான். அவன் என்ன செய்வான் பாவம், ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் தன் குடும்பத்துடன் செலவிட முடிகிறது அவனால்.

செந்திலின் தந்தை மாதவனும், தாய் மீனாவும் அவனுடன்தான் இருந்து வருகின்றனர்.மாதவனுக்கு எழுபது வயது ஆகிறது. மீனாவுக்கு அறுபத்தைந்து வயதாகிறது.

மாதவன் தன்னுடைய முப்பத்தி மூன்றாவது வயதில் ஆரம்பித்த இந்த ஜவுளி வியாபாரம், இன்று ஒரு ஜவுளி சாம்ராஜ்யம் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் மாதவனுடைய நேர்மையும், உழைப்பும் என்றாலும், கடந்த எட்டு வருடங்களாக இந்த சாம்ராஜ்யத்தை வழிநடத்தி, சிறப்பாக வளர்த்ததில் செந்திலுக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

செந்திலின் மனைவி ரேவதி.வீட்டு வேலைகளை செய்ய பணியாட்கள் இருந்தாலும், எல்லாவற்றையும்சரிபார்த்து, தேஜஸையும் பாதுகாத்து, தன் மாமனார், மாமியாரையும் கவனித்து வருகிறாள். ஆனால் இந்த எதையுமே அவள் ஒரு பாரமாக நினைக்காமல், விருப்பத்தோடு செய்து வருவதால் குடும்பத்தில் எப்போதுமே அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் கடையை தன் மேனேஜரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது செந்திலின் வழக்கம். அந்த மாதிரிதான் இன்று தன் மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில்.

அரை மணி நேரமாக செந்தில் போராடிக்கொண்டிருந்தாலும், அப்பா என்ற வார்த்தையை மட்டும் தேஜஸ் சொல்லவேயில்லை. “என்னடா தேஜஸ், அப்பான்ற வார்த்தைய மட்டும் சரியா சொல்ல மாட்டேங்கிற? என்ன பண்ணா நீ சரியா பேசுவன்னு தெரியலஎன்று தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான் செந்தில்.

அப்போது மாதவன் அங்கு வந்து செந்திலிடம்செந்தில், கிரீம் பிஸ்கெட் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு சாப்பிடணும்போல இருக்கு. நீ வெளிய போனா, கொஞ்சம் வாங்கிட்டு வர்றியாப்பா?” என்றார். அதற்கு செந்தில், “சரிப்பா, நான் வெளிய போயிட்டு வரும்போது வாங்கிட்டு வர்றேன்என்றான்.

வயது முதிர்ச்சியின் காரணமாக மாதவனுக்கு செந்தில் என்ன சொன்னான் என்பது சரியாக கேட்கவில்லை. “என்ன செந்தில், இன்னிக்கு கொஞ்சம் கிரீம் பிஸ்கெட் வாங்கிட்டு வர்றியாப்பா? சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. ஆசையா இருக்குஎன்றார் மாதவன்.

அதான் சொன்னேனே அப்பா, நான் வாங்கிட்டு வர்றேன்னு. சும்மா ஏன் அதையே திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க? கொஞ்ச நேரம் நான் என் பையனோட விளையாடும்போது தான் இந்த மாதிரி எல்லாம் உங்களுக்குத் தோணும்என்று கோபத்துடன் உரத்த குரலில் சொன்னான். இதைக்கேட்ட மாதவனின் முகம் வாடியது.

மாதவன் வருத்தத்துடன்தன் அறைக்குள்ளே நுழையும்போது, அங்கு இருந்த மீனா அவரைப் பார்த்து, “இதுக்குத்தான் செவுட்டு மிஷின் வாங்கிக்கோங்கன்னு நான் அப்பவே சொன்னேங்க, நீங்கதான் அதப் போட்டா ஏதோ உடம்புல ஊனம் இருக்கற மாதிரி இருக்கும், வேணாம்னு சொல்லிட்டீங்கஎன்று சொன்னார். அதற்கு மாதவனிடம் இருந்து வந்த பதில் வெறும் மௌனம்தான். மீனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

சிறிது நேரத்தில் ரேவதி வீட்டு வாசலுக்கு வந்தாள். “என்னங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதோ சத்தம் கேட்டுச்சே. என்னாச்சு? ஏன் கத்தினீங்க?” என்றாள். அதற்கு செந்தில், “எங்க அப்பாதான். கிரீம் பிஸ்கெட் வேணுமாம். அதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்தறாருஎன்றான். குரலில் ஒரு கோபம் கலந்து இருப்பதை உணர முடிந்தது ரேவதியால்.

இதுல என்னங்க தப்பு இருக்கு? எதனால கடுப்பேத்தறாருன்னு சொல்றீங்க?”

ஒரு விஷயத்த இத்தன தடவை சொல்லணுமா? முதல் தடவை அவர் சொன்னப்போவே நான் சரின்னு சொல்லிட்டேன். திரும்ப திரும்ப அதையே சொல்லணுமா?”

, அதான் கோபிச்சுக்கிட்டீங்களா?”

ஆமாம், பின்ன கோபம் வராதா? எனக்கு என்ன காது செவுடா?”

சரி, இப்போ தேஜஸ் கிட்ட எதையோ சொல்லி அலுத்துக்கிட்டு இருந்தீங்களே? என்ன அது?”

அதை ஏன் கேக்கறே? அரை மணி நேரமா அவனோட போராடிக்கிட்டு இருக்கேன். அப்பான்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறான். அந்த வார்த்தையை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் உளறிட்டு இருக்கான்”. செந்திலின் குரல் சற்று சகஜ நிலைக்கு மாறியிருந்தது.

தேஜஸ் கிட்ட பேசும்போது மட்டும் எப்படி இவ்ளோ பொறுமை வந்தது உங்களுக்கு?” என்ற ரேவதியின் கேள்விக்கு செந்திலிடம் பதில் இல்லை. தொடர்ந்து பேசினாள் ரேவதி.

நீங்க தேஜஸ் கிட்ட பேசின மாதிரி தானே உங்க அப்பாவும் நீங்க குழந்தையா இருந்தப்போ பேசியிருப்பார்என்றாள் ரேவதி. அதற்கு செந்தில், “ஆமாம், ஏன்னா அப்போ நான் சின்ன குழந்தை. எதுவும் சரியா புரியாது. அதனாலதான் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருந்திருக்கும்என்று தன் செயலை நியாயப்படுத்த முயற்சித்தான்.

“அதேமாதிரிதான் வயசான பெரியவங்களுக்கும் எல்லாமே உடனே புரிஞ்சிடாது, சரியா நடக்க முடியாது, பாக்க முடியாது, கேட்க முடியாது. ஏற்கனவே உங்க அப்பாவுக்கு காது சரியா கேட்க மாட்டேங்குது, பாவம்.இது உங்களுக்கும் தெரியும். இந்த நேரத்துல நீங்க அவரோட நிலைமையை புரிஞ்சு நடந்துக்க வேணாமா? நம்மள விட்டா அவங்களுக்கு வேற யார் இருக்காங்க?”

தான் செய்த தவறு புரிந்தது செந்திலுக்கு. “ஆமா ரேவதி. நீ சொன்னது சரிதான். நான்தான் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன். நான் போய் முதல்ல கிரீம் பிஸ்கெட் வாங்கிட்டு வர்றேன். நீ தேஜஸைப் பாத்துக்கோஎன்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.


முதியவர்கள் உடம்பாலும், மனதாலும் குழந்தைகளே என்பது புரிந்தது செந்திலுக்கு.

சிறுகதை 010 - ஹீரோ (April 2013)

வெற்றி நாயகன் தேவா என்றால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோ. அவர் இது வரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 50 படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட். இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் துவக்க விழாவுக்கே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள். அவ்வளவு பிரபலம்.

ஒரு படத்தில் சிறைக்கைதி வேடம் அவருக்கு. அந்தப் படம் வெளிவந்த போது, படம் வெளியான ஒவ்வொரு திரையரங்கத்திலும் சிறைக்கைதி உடையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இவர்களைப் பார்த்து, உண்மையான கைதிகள்தான் தப்பித்து இங்கு வந்துவிட்டார்களோ என்று காவல்துறைக்கு சந்தேகமே வந்துவிட்டது. அப்படியொரு கூட்டம்.

இதே போல், ஒரு படத்தில் கான்ஸ்டபிள் வேடம் அவருக்கு. அவரது ரசிகர்கள் கான்ஸ்டபிள் உடையணிந்து திரையரங்கத்தில் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர்.

அந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இனி எந்த ஒரு படத்திலும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது என்று முடிவு எடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்கவே முடியாது.

என்னதான் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவரிடம் கொஞ்சம் கூட திமிர், ஆணவம் கிடையாது. திரைத்துறையில் நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இன்று வரை இருக்கிறார். எல்லோரிடமும் மரியாதையோடு பேசுவார். குரல் உயரவே உயராது. பண்பானவர், எளிமையானவர். முடிந்த வரை எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று எண்ணி, தனக்குத் தெரிந்த வகையில் உதவி செய்வார்.

எப்போது வேண்டுமானாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்கலாம். வீட்டுக்கு ரசிகர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டுதான் மறு வேலை. தலைவாழை விருந்தே இருக்கும். ரசிகர்களுடன் சமமாக உட்கார்ந்து அவரும் சாப்பிடுவார்.

இப்படி தேவாவின் தீவிர ரசிகர்களில் ஒருவன் முருகன். திருச்சி மாம்பழச்சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான். 19 வயது தான் ஆகிறது. படிப்பில் ஆர்வம் இருந்தாலும், தன் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்காமல் வேலை பார்த்து வருகிறான்.

இவன் தாய் வீட்டு வேலை செய்பவர். தந்தை ஒரு கூலித் தொழிலாளி. 8 வருடங்களுக்கு முன் குடிபோதையில் சாலையைக் கடக்க முயற்சித்தபோது விபத்து ஏற்பட்டு இறந்தார். இரண்டு தங்கைகள் வேறு முருகனுக்கு. அன்றிலிருந்து படிப்பை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு வேலை செய்து, தன்னால் முடிந்த அளவுக்கு குடும்ப சுமையைத் தன் சிறிய தோள்களில் தாங்கிக்கொண்டு இருக்கிறான்.

வேலை நேரத்தில் மிகவும் கடினமாக உழைப்பான் முருகன். டீ, காபி குடிக்கும் நேரத்திலும், தான் வேலை பார்க்கும் கடைக்கு வந்திருக்கும் வண்டிகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். இதனாலேயே கடையின் முதலாளி வேலுவுக்கு முருகனை ரொம்பப் பிடிக்கும்.

எப்படியாவது தொழில் கற்றுக்கொண்டு தானும் ஒரு மெக்கானிக் கடை திறக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசைகளில் ஒன்று. ஆனால் அவனுடைய கனவு எல்லாம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது தேவாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கனவு.

அன்று காலை 10 மணி. வழக்கம்போல் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தான் முருகன். அப்போது கடைக்கு வந்த வேலு முருகனிடம், “டேய் முருகா, இங்க வாடா என்று முருகனைக் கூப்பிட்டான்.
“ஒரு ரெண்டு நிமிஷம் முதலாளி. இந்த டி.வி.எஸ் 50 ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. என்னன்னு பாத்துட்டு வந்துடறேன் என்றான் முருகன்.

“பரவாயில்ல முருகா, ஒரு நிமிஷம் அந்த வண்டிய விட்டுட்டு இங்க வா. உனக்கு ஒரு முக்கியமான, சந்தோஷமான விஷயம் சொல்லணும்

வண்டியை கடையின் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு வேலுவிடம் சென்றான்.

“சொல்லுங்க முதலாளி. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னீங்களே?

“சந்தோஷமான விஷயம்னு சொன்னேன்ல. என்ன விஷயம் சொல்லு பார்ப்போம்?

சிறிது நேர யோசனைக்குப்பிறகு முருகன். “தெரியல முதலாளி. நீங்களே சொல்லிடுங்களேன் என்றான்.

“சொன்னா கடையை விட்டுட்டு ஓடிட மாட்டியே? உன்னை நம்பி சொல்லலாமா?

“என்ன முதலாளி இப்படி சொல்லிட்டீங்க? உங்களை விட்டுட்டு நான் எங்க போக முடியும்? எனக்கு தொழில் கத்து கொடுத்தவர் நீங்க தானே. அப்படியெல்லாம் செய்வேனா?

“சரி உன்னை நம்பி சொல்றேன். தேவா வந்திருக்கார் நம்ம ஊருக்கு. தலைவா ஹோட்டல்ல தான் தங்கியிருக்கார். தெரியுமா?

“எந்த தேவா பத்தி சொல்றீங்க முதலாளி? நம்ம கடையில ஏதாவது வண்டியை ரிப்பேருக்கு கொடுத்துட்டு போனவரா அவரு?

“டேய் முட்டாப்பயலே, சினிமா ஹீரோ தேவா டா. உனக்குக்கூட ரொம்பப் பிடிக்குமே. அந்த தேவா

இதைக் கேட்டவுடன் ஒரு இனம்புரியா சந்தோஷம் முருகனுக்கு. முகம் மலர்ந்தது.

“அட, என்ன முதலாளி சொல்றீங்க? தேவா சார் இங்க வந்திருக்காரா? நம்மூருல ஷூட்டிங்கா? சூப்பர் முதலாளி நீங்க குரலில் ஒரு ஆச்சரியம் கலந்த உற்சாகம்.

“ஆமாம் டா. நம்ம ஏரியாவுல தான் ஷூட்டிங்காம். ஆனா நாளைக்கு கிளம்பறாராம். எனக்குத் தெரிஞ்ச போலீஸ்கார் ஒருத்தர் சொன்னார்

“ஐய்யய்யோ, அப்போ நாளைக்கே நம்ம ஊர விட்டு போயிடுவாரா? அவரை நான் எப்படியாவது பாக்கணும்னு இருந்தேனே. குரலில் ஒரு சோகம்.

“கவலைப்படாதே முருகா. இன்னிக்கு போய் பாத்துட்டு வா. கடையை நான் பாத்துக்கறேன்

முருகன் கண்ணில் ஆனந்தம். “ரொம்ப நன்றி முதலாளி. தேவா சார் படம் போட்ட சட்டை ஒன்னு என் கிட்ட இருக்கு. அதை எடுத்து போட்டுக்கிட்டு, அப்படியே அவரை பாத்துட்டு வந்துடறேன் முதலாளி என்றான்.

“இந்தா என்னோட வண்டி சாவி. அதுல போயிட்டு வா. மெதுவா ஓட்டு, ஜாக்கிரதை. சீக்கிரமா வந்துடு என்று தன் யமஹா வண்டியின் சாவியை அவனிடம் கொடுத்தான் வேலு.

வண்டியைக் கிளப்பி நேராக அவன் வீட்டுக்குச் சென்றான் முருகன். தேவா படம் போட்ட மஞ்சள் நிற சட்டையைத் தேடி கண்டுபிடித்து எடுத்து, அதை உடுத்திக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

தேவாவைப் பார்க்கப் போகிறோமே என்ற சந்தோஷத்தில் வண்டியில் சாவியை போடாமல் உதைத்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து தான் விளங்கியது அவனுக்கு. தன் பின்தலையில் லேசாக தட்டிவிட்டு, சாவியை வண்டியில் போட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வழியெல்லாம் தேவாவிடம் என்ன பேசுவது என்பது குறித்து யோசித்தவண்ணம் இருந்தான். தலைவா ஹோட்டல் ஒரு மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல். தன்னை உள்ளே அனுமதிப்பார்களா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. என்ன ஆனாலும் சரி, எப்படியாவது உள்ளே சென்று தேவாவை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

தலைவா ஹோட்டலை நெருங்கினான். ஹோட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேவா வெளியே வருவதைப் பார்த்தான். எங்கே அவரை சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்து, வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதே இருக்கையில் இருந்து எழுந்து, “தலைவா, தலைவா என்று கத்தினான்.

யாரோ தன்னை கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்து தேவா முருகன் வரும் திசையைப் பார்த்தார். தன்னை சந்திக்கத்தான் இப்படி வருகிறான் என்பது புரிந்து முருகன் வரும் திசையை நோக்கி கையசைத்தார்.
ஆனால் அதற்குள் அந்த வண்டியை ஒரு லாரி மோதியது. வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டான் முருகன். தலையில் பலத்த அடி, ஏகப்பட்ட ரத்தம் போயிருந்தது.

அங்கிருந்தவர்கள் உடனே அவனை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவா அவர்களைப் பின்தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு வந்தான். நிறைய ரத்தம் போயிருப்பதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னவுடன், அதற்கான செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாக சொன்னான் தேவா.

உடனடியாக ஆப்பரேஷன் நடந்தது. அந்த நாள் முழுவதும் மயக்கமாகவே இருந்தான் முருகன். வேலுவும், முருகனின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டனர்.

அடுத்த நாள் முருகனுடைய நிலைமை சற்று முன்னேறியிருந்தது. வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தான். ஆனால் தேவாவை சந்திக்க முடியவில்லையே என்ற சோகத்தினால் யாரிடமும் சரியாக பேசவில்லை அவன்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் தேவா. தன்னை நோக்கி தேவா நடந்து வருவதைப் பார்த்த முருகனின் கண்கள் ஈரமானது. தேவா இன்று ஊரை விட்டு கிளம்பியிருக்க வேண்டும், ஆனாலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம். இதனால் தான் முருகன் கண்கள் ஈரமானது.

தேவா தன்னருகில் வந்தவுடன், மெத்தையில் இருந்து எழுந்து நிற்க முயற்சித்தான் முருகன். அவனை படுத்துக்கொண்டே இரு என்று சொல்வது போல் சைகை காட்டினார் தேவா. மெத்தையில் படுத்தபடியே, கைகளைக் கூப்பி, தேவாவுக்கு வணக்கம் சொன்னான் முருகன். ஆனால், சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை அவனுக்கு.

“என்ன முருகா, எப்படி இருக்கீங்க? இப்போ உடம்பு எப்படி இருக்கு? நலம் விசாரித்தார் தேவா.

“தலைவா, என்னால நம்பவே முடியல. நீங்களா இங்க வந்து என்னோட பேசறது? நான் எவ்ளோ கொடுத்து வெச்சிருக்கணும்? கண்ணீர் வழிய சொன்னான் முருகன்.

சிறு புன்னகையுடன், “நானே தான். இப்போ எப்படி இருக்கீங்க? வலி எல்லாம் போயிடுச்சா? என்றார் தேவா.

“உங்கள பாத்து, உங்ககிட்ட பேசிட்டேன்ல. இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு தலைவா. உங்கள பாத்த சந்தோஷத்துல எப்படி பேசறது, என்ன பேசறதுன்னே தெரியல தலைவா

“சரி, நீங்க வண்டியில வரும்போது ஏன் எழுந்து நின்னு கத்திட்டே வந்தீங்க?

“தயவுசெஞ்சு வாங்க, போங்கன்னு பேசாதீங்க. நான் தான் உங்கள அப்படி கூப்பிடணும்

“சரி, அப்படியே கூப்பிடறேன் இனிமேல். சந்தோஷமா?

“நன்றி தலைவா. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்களோட ‘நாளை உனது படத்துல நீங்க சொல்லுவீங்களே, சிகரெட், சாராயம் எல்லாம் விட்டுடுன்னு. அந்த படத்தைப் பார்த்ததுல இருந்து நான் சிகரெட் பிடிக்கறதையே விட்டுட்டேன்

“வெரி குட். சரி, நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே? வண்டியில வரும்போது ஏன் எழுந்து நின்னு கத்திட்டே வந்தே? ஏன் ஹெல்மெட் போடலை

“உங்களோட ‘நாளை உனது படத்துல, நீங்க ஹீரோயினப் பாத்துட்டு அப்படித்தான் வருவீங்க. அது அப்படியே மனசுல பதிஞ்சிடுச்சு தலைவா. அதான் அப்படியே வந்திடுச்சு

முருகனின் இந்த வாக்கியத்தைக் கேட்டவுடன் உள்ளூர உறுத்தியது தேவாவுக்கு. தான் செய்வதை மக்கள், குறிப்பாக இளைஞர்கள் செய்கிறார்கள் என்பது புரிந்தது. என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினார் தேவா.

முருகனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் தேவா. அடுத்த நாள் சென்னையில் ஷூட்டிங்க். அடுத்து படமாக்கப்படவேண்டிய காட்சியை விவரித்துக்கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர்.


அப்போது ஒரு காட்சியை அவர் விவரிக்கும்போது, தேவா அதற்கு மறுப்பு தெரிவிப்பது போல் தலையை ஆட்டி, “இல்ல சார், நான் பைக்குல் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வர்றதுதான் கரெக்ட்டா இருக்கும். நாம செய்யறத பாத்து, பல பசங்க அதை அப்படியே செய்யறாங்க. அதனால எதையுமே இனிமே ஒழுங்கா, கரெக்ட்டா செய்யணும்னு நினைக்கிறேன். என்னால யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும், பாதிப்பும் வரக்கூடாது சார் என்றார். இயக்குனரும் அதை ஆமோதிக்க, அடுத்த சில நிமிடங்களில், ஹெல்மெட் அணிந்து தேவா வண்டி ஓட்டிக்கொண்டு வரும் காட்சி அன்று படமாகியது. தேவாவின் இந்த படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்று சொல்லவா வேண்டும்!