Monday 27 January 2014

மறக்க முடியாத முகங்கள் - 3

மறக்க முடியாத முகங்கள் - 3:

வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போகும் வழியில் இரண்டு டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. முதல் டிராஃபிக் சிக்னலைக் கடப்பது அவ்வளவு பெரிய சிரமமாக இருக்காது என்றாலும் கூட, அந்த சிக்னலில் மாட்டிக்கொண்டால் கொஞ்சம் கடுப்பாகிவிடும். ஏனென்றால், அந்த இரண்டாவது டிராஃபிக் சிக்னலில் தினமும் இரண்டு முறையாவது நிற்கவேண்டியிருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு, இந்த முதலாவது சிக்னலில் மாட்டிக்கொண்டேன். அப்போது சில திருநங்கைகள் அங்கு வந்து ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது, பல நேரங்களில் அவர்களது இந்தச் செயலை நியாயப்படுத்தியும் இருக்கிறேன். ஏனென்றால், கட்டட வேலை, வீட்டு வேலை போன்ற வேலைகளுக்குக்கூட திருநங்கைகளை வைப்பதில்லை. என்னதான் செய்வார்கள் அவர்கள்?

அவர்கள் அடுத்து என் வண்டியின் அருகே வந்து, என்னிடமும் பணம் கேட்டார்கள். நானும் என் பர்ஸைத் திறந்து, பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன். அவர் அந்த ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு, இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றார். திகைத்துப்போனேன்.

"என்ன வேணும் உங்களுக்கு?" இது நான்.
"பௌர்ணமி வருது. பூஜை பண்றோம்" இது அவர்.
"சரி, அதுக்கு நான் என்ன பண்ணணும்?" இது நான்.
"ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தா, நல்லாருக்கும்" இது அவர்.
"என்னாது ஐநூறு ரூபாயா?" அதிர்ச்சியில் நான்.
"ஆமா, சரி அட்லீஸ்ட் ஒரு நானூறு ரூபாயாவது கொடுங்க. உங்க பேரைச் சொல்லி பூஜை பண்றோம்" விடாப்பிடியாக அவர்.
"என்னங்க இது. விட்டா கேட்டுட்டே இருப்பீங்க போல" இது நான்.

இப்படி கேட்கும்போது சிக்னலில் பச்சை விழ, பின்னால் நின்று கொண்டிருந்த வண்டிகள் ஹாரன் அடிக்க, அவசரமாக அங்கிருந்து கிளம்பினேன். வழியில் இந்த உரையாடலை மனதுக்குள் ரீப்ளே செய்துகொண்டே இருந்தேன்.

எத்தனையோ முறை இந்த மாதிரி பணம் கொடுத்திருக்கிறேன். ஆனால், இந்த முறைதான் இப்படி நடந்துவிட்டது. யார் இவர்? இவர் முகத்தை மறக்கக்கூடாது என நினைத்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, கண்ணாடியில் பார்த்தேன். ஒரு அப்பாவியான முகம் தோன்றியது கண்ணாடியில். அது ஏன் இவருக்கு என்னைப்பார்த்து இப்படி கேட்கத் தோன்றியது? ஒரு படத்தில் கவுண்டமணி அவர்கள் செந்திலைப் பார்த்து, "அது ஏன் என்னைப் பார்த்து இந்த மாதிரி கேட்கறே?" என்று கேட்பார். அதே கேள்வி, என்னைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன். அன்று மட்டும் இப்படி நடந்தது. அடுத்த சில நாட்கள் எப்பவும் போலவே இருந்தன.

மீண்டும் ஒரு நாள், அன்று நான் பார்த்த அதே நபர் சிக்னலில் நின்றுகொண்டிருந்தார். சுதாரித்துக்கொண்டேன். சிக்னலில் ஃப்ரீ லெஃப்ட் என்பதால், வண்டி நெரிசலில் சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டி, இடது பக்கம் திரும்பி ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன். எதையோ சாதித்துவிட்டது போல ஒரு உணர்வு.

இப்படி என்னை தலைதெரிக்க ஓடவைத்தவரின் முகமும், முதல் முறை அவரிடம் மாட்டிக்கொண்டு, அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கண்ணாடியில் பார்த்தபோது இருந்த என் முகமும் மறக்க முடியாத முகங்களே!

Thursday 23 January 2014

மறக்க முடியாத முகங்கள் - 2

மறக்க முடியாத முகங்கள் - 2:

சென்ற வாரம் ஒரு நாள், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவதற்கு தாமதம் ஆகிவிட்டது. மணி கிட்டத்தட்ட 9, 9:30 இருக்கும். மாலை 6 மணிக்கு மேல் பெங்களூர் எப்படி இருக்கும், காற்றும் குளிரும் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இங்கு குளிர்காலத்தில் ஒரு வாரமாவது வசிக்க வேண்டும், இல்லை இங்கிருப்பவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த வருடம் குளிர் காலம் சற்று தாமதமாகத்தான் தொடங்கியது. சென்ற வாரம் வரை, குளிர் கொஞ்சம் குறைவு தான். அந்த நினைப்பில் பல நாட்கள் ஜர்க்கின் அணிந்துகொள்ளாமல் அலுவலகம் சென்றிருக்கிறேன். அன்றும் அப்படித்தான் ஜர்க்கின் அணிந்துகொள்ளாமல் அலுவலகம் சென்றிருந்தேன்.

அலுவலகத்திலிருந்து வண்டியில் கிளம்பும்போதே "சரிதான், இன்னிக்கு செமையா மாட்டினேடா வெங்கட்" என்று நினைத்துக்கொண்டேன். அந்த அளவுக்கு இருந்தது குளிர். தோலை சின்னதாகக் கீரிவிட்டு, அந்தத் துளையின் வழியாக மெல்ல மெல்ல பனி உள்ளே செல்வது போல் இருந்தது. வேறு வழியில்லாமல் வண்டியின் வேகத்தைக் குறைத்து, மெதுவாக ஓட்டத் தொடங்கினேன்.

எங்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் மேம்பாலத்திற்கான வேலைகள் நடந்து வருவதால், ஒரு சின்ன பாதை, அதாவது சற்றே அகலமான ஒத்தையடிப் பாதை போன்ற ஒரு பகுதி.  இதைத் தவர்த்து, வேறு ஒரு வழியில் சுற்றிக் கொண்டு வந்தால் பத்து நிமிடங்கள் தாமதம் ஆகிவிடும். இதனால் அந்த வழியில்தான் டூ வீலர்காரர்கள் செல்வார்கள். நானும் அதேவழியில்தான் செல்வேன்.

அன்று வழக்கம்போல் நானும் இந்த வழியில் சென்றேன். இந்த ஒத்தையடிப் பாதை முடிந்து மெயின் ரோட்டை அடையும் இடத்தில் இடது பக்கத்தில், ஒரு சைக்கிளில் பானி பூரிகளை வைத்துக்கொண்டு ஒரு சிறுவன் நின்றிருந்தான். கொஞ்சம் கிழிந்து போன வெள்ளை நிற சட்டை, பிரவுன் நிற டிராயர் அணிந்திருந்தான். பார்ப்பதற்கு ஏதோ ஒரு பள்ளி சீருடையைப் போல் இருந்தது.

எனக்கு என்னவோ தோன்றியது. வண்டியை நிறுத்தி அவனருகில் சென்றேன். கன்னடத்தில் பேசத் தொடங்கினேன். அந்த உரையாடலின் தமிழாக்கம் இதோ:

"என்னப்பா, இவ்வளவு தாமதமாகியும் இங்கே பானி பூரி விற்றுக் கொண்டிருக்கிறாயே?"

"ஆமாம். இன்னும் யாராவது வந்து பானி பூரி வாங்கி சாப்பிடுவார்களா என்று காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா. உங்களுக்கு வேண்டுமா?"

"டிராயர் போட்டுக்கொண்டு நிற்கிறாயே. குளிரவில்லையா உனக்கு?"

"அதையெல்லாம் பார்த்தால் சரிப்பட்டு வராது"

"நீ அணிந்திருப்பது ஏதோ பள்ளி சீருடை போலிருக்கிறதே? எந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாய்?"

"இது என்னுடையது அல்ல. என் தம்பியினுடையது. அவன் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்"

"நீ படிக்கவில்லையா?"

"இல்லை அண்ணா"

"ஏன்?"

"குடும்ப சூழ்நிலை. பள்ளிக்குப் போனால் நிறைய விளையாடலாம். என்னால் அது முடிவதில்லை. அது மட்டும்தான் வருத்தம். மற்றபடி படிக்க ஆர்வம் எல்லாம் கிடையாது"

"உன் தம்பியோடு நீ காலையில், மாலையில் விளையாடலாமே?"

"என் தம்பி பள்ளிக்குப் போவதற்குள் நான் அன்றைய பானி பூரி மசாலாக்களையெல்லாம் என் அம்மாவுடன் சேர்ந்து தயார் செய்துவிடவேண்டும். ஒரு 8, 9 மணியளவில் நான் இங்கிருந்து கிளம்பி கிருஷ்ணராஜபுரம் பகுதிக்குச் சென்று அங்கு பானி பூரி விற்பேன். அங்கிருந்து ஒரு 12, 1 மணியளவில் மாரத்தஹள்ளி சென்று அங்கு பானி பூரி விற்றுவிட்டு, மாலை இந்த இடத்திற்கு வந்துவிடுவேன்"

"ஒரு நாளைக்கு எவ்வளவு விறபனையாகும்?"

"குறைந்தபட்சம் 150, 200 லாபம் வந்தால்தான் பிழைக்கமுடியும். இன்று இன்னும் அந்த அளவு வரவில்லை. அதனால்தான் இங்கே இன்னும் நின்றுகொண்டிருக்கிறேன்"

"அப்படியா? சரி ஒரு இருபது ரூபாய்க்கு பானி பூரி பார்சல் செய்து கொடு"

அவன் முகத்தில் உடனே ஒரு மாற்றம். அடுத்த சில நிமிடங்களில் இருபது ரூபாய்க்கு பானி பூரி, மசாலா, இரண்டு வகையான ரசம் எல்லாம் தனித்தனி கவரில் பார்சல் செய்து கொடுத்தான். அவனிடம் காசு கொடுத்துவிட்டு நான் கிளம்பினேன். எனக்கு பானி பூரி அவ்வளவாக பிடிக்காது. அன்று அவனுக்காக சிலவற்றைக் கஷ்டப்பட்டு சாப்பிட்டு, மற்றவற்றை குப்பைத்தொட்டியில் போட்டேன்.

அலுவலகத்தில், ஏர் கண்டிஷனில், ஹாயாக உட்கார்ந்துகொண்டு வேலை செய்துவிட்டு, அது சரியில்லை, இது சரியில்லை, சம்பளம் போதவில்லை என குறை கூறுபவர்கள் ஏராளம். நானும் இதில் அடக்கம்.

ஆனால், இந்தச் சிறுவனைப் போல் தின பிழைப்புக்காக இப்படி அலைந்து திரிந்து, தம்மை வருத்திக் கொள்பவர்களைப் பார்த்தாவது நம் நிலையை நினைக்க வேண்டும்; மகிழ வேண்டாம், குறைந்தபட்சம் குறை கூறாமல், இந்த நிலையை அளித்த கடவுளுக்கு நன்றியாவது சொல்ல வேண்டும்.

எத்தனையோ திரைப்படங்களில் தம்பிக்காக, தங்கைக்காக, தன் குடும்பத்திற்காக ஒருவன் பாடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள். நான் "இருபது ரூபாய்க்கு பான் பூரி கொடு" என்று சொன்னவுடன் மாறிய அவன் முகம், அதற்கு முன் இருந்த அந்த முகம் இந்த இரண்டுமே மறக்க முடியாத முகங்கள்.

Tuesday 21 January 2014

மறக்க முடியாத முகங்கள் - 1

மறக்க முடியாத முகங்கள் - 1:

இரண்டு வாரங்களுக்கு முன், சென்னைக்கு அவசர அவசரமாகக் கிளம்பினேன். பெங்களூரைத் தாண்டி கோலார், சித்தூர் வரை வெயில் பொறுத்துக் கொள்ளும்படியே இருந்தது. சென்னையை அடைந்தவுடன் வெயிலின் உக்கிரம் தெரிந்தது. இத்தனைக்கும் சென்னையில் இரண்டு வருடங்கள் இருந்து, அதை அனுபவித்தவன் நான். இன்றும் எப்போது சென்னைக்குத் திரும்பப் போகிறேன் என்று ஏங்கிக் கொண்டிருப்பவன். பெங்களூர் வானிலை என்னை மாற்றிவிட்டது.

நான் போகவேண்டிய இடத்தின் முகவரி என் மொபைலில் இருந்தது, ஆனால் எப்படிச் செல்வது என்பது தெரியாது. வழியில் விசாரித்துக்கொண்டே போகலாம் என நினைத்து, வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி, ஒரு ஆட்டோக்காரரிடம் நான் போக வேண்டிய விலாசத்தைப் பற்றி கேட்டேன். அந்த ஆட்டோக்காரர் என்னை ஏற இறங்க பார்த்தார். என்ன செய்வது, என் பழக்கதோஷம், கன்னடத்தில் கேட்டுத் தொலைத்துவிட்டேன். இத்தனை வருடங்களாக பெங்களூரில் ஆட்டோக்காரர்களிடம் பேசி, சண்டை போட்டு, அப்படியே பழகிவிட்டது!

அவரது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, தமிழில் கேட்க, அவர் வழி சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த இடத்தை நோக்கி சென்றேன். இதெல்லாம் நடந்தது பகல் 2, 2:30 மணிக்கு. வெயில் எப்படி மண்டையைக் காயவைத்திருக்கும் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த ஆட்டோக்காரர் சொன்ன அடையாளங்களைத் தேடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போது சாலையோரத்தில் ஒரு பாட்டி நடந்து சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 70, 75 வயது இருக்கும். இந்தத் தள்ளாத வயதில் கையில் ஏதோ ஒரு சின்ன எவர்சில்வர் டப்பாவை எடுத்துக்கொண்டு, நடந்து கொண்டிருந்தார். பழைய சுங்குடி சேலை போல் எதையோ அணிந்திருந்தார். காலில் செருப்பு இல்லை, தலைமுடி முழுவதுமாக நரைத்திருந்தது. முகத்தில் சில சுருக்கங்கள், சோகம், சோர்வு, தன் நிலை மாறுமா, முன்னேறுமா என்பது போன்ற ஒரு எதிர்பார்ப்பு, அத்தனையும் நிறைந்திருந்தது.

இன்று வரை அந்த முகம் என் நினைவில் இருக்கிறது. இன்னமும் இருக்கும் என நினைக்கிறேன், ஒரு சின்ன உறுத்தலுடன்.

Tuesday 14 January 2014

சிறுகதை 017 - உன்னருகே நானிருந்தால் (December 2013)


உன்னருகே நானிருந்தால்

ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 6 மணி. காலிங் பெல் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து முழித்தார் கணேசன். “நீ தூங்கு மீனா. இன்னிக்கு நான் சமையல் வேலை எல்லாத்தையும் பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். மீனா வேறு யாரும் இல்லை, அவர் மனைவி.

கதவைத் திறப்பதற்குள் இன்னொரு முறை மணி அடித்தாகிவிட்டது. பால்காரருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. “இதோ வர்றேன்பா. கொஞ்சம் பொறு என்று சொல்லிக்கொண்டே பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார் கணேசன்.

கதவைத் திறந்து வெளியே சென்றார். பால்காரர் தன்னைப் பார்த்ததும் சிரிப்பதுபோல் இருந்தது கணேசனுக்கு. “என்னப்பா சிரிக்கறே? இன்னிக்கு ஒரு நாள் வீட்டம்மா வேலையெல்லாம் நான் செய்யலாம்னுதான் நான் பால் வாங்க வந்தேன் என்றார்.

“எதுக்கு சார் இந்த வம்பு எல்லாம்? ஆறு வருடங்களாக பால் ஊற்றிவருவதால் கொஞ்சம் உரிமையோடு கேட்டார் பால்காரர்.

“ஒரு நாள்தானே. போயிட்டு போகுதுன்னுதான்

ஒரு லிட்டர் பால் ஊற்றிவிட்டு, “வாழ்த்துகள் சார். நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் பால்காரர். பால் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து பால் பாத்திரத்தை ஒரு நாற்காலியின் மீது வைத்துவிட்டு, கதவை பூட்டிவிட்டு வந்தார் கணேசன்.

சமையலறைக்குச் சென்று மின்விளக்கை ஆன் செய்து, பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்தார். இரண்டு டபரா, டம்ப்ளர் எடுத்து மேஜையில் வைத்தார். பக்கத்தில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலைத் திறந்து, இரண்டு டம்ப்ளர்களிலும் இரண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸை போட்டார்.

ஐந்து நிமிடம் ஆகியும் பால் பொங்கவில்லை. கேஸ் தீர்ந்துவிட்டதோ என்று குனிந்து பார்த்தால், தான் அடுப்பை பற்ற வைக்கவேயில்லை என்பது தெரிந்தது கணேசனுக்கு. இதைப்போய் மறந்துவிட்டாயே கணேசா என்று தன் தலையில் ஒரு முறை தட்டிக்கொண்டு, அடுப்பைப் பற்ற வைத்தார். பால் காயத் தொடங்கியது.

அடுத்த சில நிமிடங்களில் பால் பொங்க, அடுப்பை அணைத்தார். ஒரு இடுக்கியை எடுத்து, அதை உபயோகித்து, பால் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, மேஜையில் வைத்தார்.

“நேத்திக்கு நான் சொல்லி சொல்லி கேட்காம, நீ நிறைய ஸ்வீட் சாப்பிட்டே. அதனால, இன்னிக்கு உனக்கு சக்கரை ஒரு ஸ்பூன்தான் போடப்போறேன் என்று சத்தமாக சொல்லிவிட்டு சர்க்கரை வைத்திருந்த பாட்டிலைத் திறந்து, ஒரு டம்ப்ளரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும், இன்னொரு டம்ப்ளரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையும் போட்டு நன்றாக்க கலந்தார்.

சில நிமிடங்களில் தனக்காகப் போட்டு வைத்திருந்த ஹார்லிக்ஸை குடித்துவிட்டு, பாத்ரூமுக்குச் சென்றார். காலைக்கடன்களை முடித்து, குளித்து, வெளியே வர அரை மணி நேரம் ஆனது.

அந்த இன்னொரு டம்ப்ளரில் இருந்த ஹார்லிக்ஸ் அப்படியே இருந்ததைப் பார்த்தார் கணேசன். மேஜையில் இருந்த ஒரு ஃப்லாஸ்கை எடுத்து, அதை நன்றாகக் கழுவி, அதில் அந்த ஹார்லிக்ஸை ஊற்றிவைத்தார். “உனக்காக கலந்த ஹார்லிக்ஸை இந்த ஃப்லாஸ்குல வெச்சிருக்கேன். எழுந்ததும் மறக்காம குடி என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, பூஜையறைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் பூஜை செய்துவிட்டு, பூஜையறையிலிருந்து நேராக சமையலறைக்குச் சென்றார். இட்லி குக்கரில் எட்டு இட்லிக்கான மாவு ஊற்றி, அடுப்பைப் பற்ற வைத்தார்.

அப்போது அவரது கைப்பேசி ஒலித்தது. மறுமுனையில் அவர் மகன் சிவா, “பஸ் ஒரு மணி நேரம் லேட்டு. இப்பதான் வந்திருக்கு. நான் ரவியை கூட்டிக்கிட்டு இன்னும் முக்கால் மணி நேரத்துல வந்திடுவேன் என்றான்.

ரவியும் சிவாவும் நெருங்கிய நண்பர்கள். பனிரெண்டாம் வகுப்பு வரை சென்னையில் ஒரே பள்ளியில் படித்து வந்தனர் இருவரும். அதற்குப் பிறகு, கணேசனுக்கு கரூருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்ததால், அங்கு குடும்பத்தோடு குடியேறினர். இப்போது கரூரில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறான் சிவா.

ரவி ஒரு மனோதத்துவ டாக்டர். அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. சிவாவின் வீட்டுக்கு இன்றுதான் முதல்முறையாக வருகிறான் ரவி. அதனால்தான் சிவாவே பேருந்து நிலையத்திற்குச் சென்று, அவனை அழைத்து வருகிறான்.

பேருந்தைவிட்டு இறங்கியதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர் ரவியும், சிவாவும். வரும் வழியில் ரவி, “என்னடா திடீர்னு வரச் சொல்லியிருக்கே? என்ன விஷயம்?என்று சிவாவைக் கேட்டான். அதற்கு சிவா, “முதல்ல நீ வீட்டுக்கு வா. சொல்றேன் என்றான்.

வீட்டுக்கு வர நாற்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. தன்னிடமிருந்த ஒரு வீட்டு சாவியை வைத்து, பூட்டப்பட்டிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றான் சிவா.

“வாடா ரவி, உள்ளே வா என்று சிவா சொல்ல அவனைப் பின்தொடர்ந்து ரவி உள்ளே நுழைந்தான்.

இவர்கள் வரும் சத்தத்தைக் கேட்டு கணேசன் கூடத்திற்கு வந்தார். “வாப்பா ரவி. எப்படி இருக்கே? பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு என நலம்விசாரித்தார் கணேசன்.

“நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க? ஆண்ட்டி எப்படி இருக்காங்க?

“ம், எல்லாரும் நல்லாருக்கோம். ஆண்ட்டி தூங்கிட்டு இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் போய் கை, கால் கழுவிட்டு வாங்க. நான் அதுக்குள்ள ஹார்லிக்ஸ் போட்டு வைக்கிறேன்

“என்ன அங்கிள் நீங்க சமைக்கிறீங்க? ஆண்ட்டிக்கு லீவா இன்னிக்கு?

“ஆமாம்பா. ஆண்ட்டி தூங்கிட்டு இருக்காங்க. இன்னிக்கு ஒரு நாளாவது நான் சமைக்கலாம்னுதான்

“கலக்குங்க அங்கிள்

அப்போது சிவா குறுக்கிட்டு, “அப்பா, நீங்க போய் ஹார்லிக்ஸ் போடுங்க. நானும், ரவியும் பின்னாடியே வந்துடறோம் என்று சொல்ல, கணேசன் உள்ளே சென்றார்.

“ரவி, இங்கே என்கூட வா என்று சொல்லி, ரவியை வாசலுக்கு அழைத்து வந்தான் சிவா.

“என்னடா சிவா, வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னு சொன்னியே? என்ன விஷயம்?

“எங்க அப்பாவை பார்த்தியே, எப்படி இருக்கார் அவர்? நார்மலா இருக்காரா? சந்தேகத்துடன் கேட்டான் சிவா.

“அவருக்கு என்னடா சிவா. நல்லாத்தானே இருக்கார். ஏன் சந்தேகப்படறே?

“இங்கே வா, சொல்றேன் என்று ரவியை தன் அறைக்குள் அழைத்துச் சென்றான் சிவா.

“இங்கே பாருடா ரவி. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு இப்ப புரியும்னு நினைக்கிறேன் என்று தன் அறையில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஃபோட்டோவைக் காட்டினான். அந்த ஃபோட்டோ வேறு யாருடையதுமல்ல, சிவாவின் தாயின் ஃபோட்டோதான் அது. ஃபோட்டோவிற்கு மாலை போடப்பட்டிருந்தது.

அதிர்ந்து போனான் ரவி. “டேய், என்னடா சொல்றே? உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு? எப்போ..வார்த்தைகள் வரவில்லை.

“ரெண்டு மாசம் முன்னாடி.. ஹார்ட் அட்டாக்ல.. சரியாக பேச முடியவில்லை சிவாவால். சோகம் தொண்டையைக் கட்டிப்போட்டது போல் இருந்தது.

“வெரி சாரிடா. எனக்கு தெரியவே தெரியாது

“அத விடுடா, பரவாயில்லை. இப்ப அப்பாவை நினைச்சாதான் பயமா இருக்கு. அம்மா இறந்தது அவருக்கு தெரியுமா, தெரியாதா? இல்ல நடிக்கிறாரா? இல்ல இது ஏதாவது நோயா? எதுவுமே புரியலடா

“எப்போ இருந்து இந்த மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சார் உங்க அப்பா?

“ரெண்டு வாரமா இப்படித்தான் பண்ணிட்டு இருக்கார். அதான் பயந்துபோய் உன்னை இங்க வரச்சொன்னேன்

“அதுக்கு நான் சில டெஸ்ட் எல்லாம் செய்யணும்டா. அப்பதான் கொஞ்சமாவது தெரிய வரும். இங்க எந்த ஹாஸ்பிட்டலுக்காவது உங்க அப்பாவை கூட்டிக்கிட்டு போனியா நீ?

“இல்ல, அவரை என்ன சொல்லி கூட்டிக்கிட்டு போறதுன்னு தெரியல. அதான் உன்னையே இங்க வரச்சொல்லி கேட்டேன்டா

“அப்படியா.. சரி வா. உங்க அப்பாக்கிட்ட பேச்சு கொடுத்து பார்க்கறேன். ஏதாவது தெரியுதான்னு பார்க்கலாம்

இருவரும் சமையலறைக்குச் சென்றனர். அங்கிருந்த மேஜையின் மேல் இரண்டு டம்ப்ளர்கள், நான்கு தட்டுகள் இருந்தன. அந்தத் தட்டுகளில் தலா இரண்டு இட்லிகள் வைக்கப்பட்டிருந்தன.

“வாங்கப்பா. ஹார்லிக்ஸ் ரெடி, அப்படியே ரெண்டே ரெண்டு இட்லி வெச்சிருக்கேன். அடுத்த ஈடு இட்லி குக்கர்ல வெச்சிருக்கேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க என்றார் கணேசன்.

“அங்கிள், நாம மூணு பேருக்கு மூணு தட்டு ஓ.கே. இந்த நாலாவது தட்டு யாருக்கு? என்று கேட்டான் ரவி.

அதற்கு கணேசன், “அது ஆண்ட்டிக்கு ரவி. தூங்கிட்டு இருக்காங்க பாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க. அதான் அவங்களுக்கும் சேர்த்து தட்டு வெச்சிருக்கேன். அவங்களோட ஹார்லிக்ஸ் ஃப்லாஸ்குல இருக்கு என்றார்.

நிலைமை புரிந்தது ரவிக்கு. இட்லி சாப்பிட்டுவிட்டு கை கழுவ வாஷ் பேசினுக்கு அருகில் செல்லும்போது, “சிவா, இவரை சென்னைக்கு கூட்டிக்கிட்டு வந்துடு. எவ்ளோ சீக்கிரம் கிளம்பறோமோ, அவ்ளோ நல்லது. நான் வீட்டுலயே ஒரு கிளினிக் வெச்சிருக்கேன். அங்க வெச்சு இவருக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம், கவுன்சிலிங் போதுமான்னு எல்லாம் பாத்துக்கலாம் என்றான்.

அன்றிரவே சென்னை கிளம்பலானார்கள் மூவரும். ரவிக்கு கல்யாணம் என்று கணேசனிடம் சொல்லப்பட்டிருந்தது. பேருந்தில் காலியாக இருந்த ஜன்னலோர இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்தார் கணேசன். அவருக்குப் பக்கத்து இருக்கையில் சிவாவும், பின்னிருக்கையில் ரவியும் உட்கார்ந்திருந்தனர்.

வண்டி கிளம்பியது. தன் தோளில் போட்டிருந்த சால்வையை எடுத்து, அந்த ஜன்னலோர இருக்கையில், ஒரு நபருக்குப் போர்த்துவது போல அந்த சால்வையைப் போட்டிருந்தார் கணேசன். “இந்த குளிர் காற்று, பஸ் டிராவல், ஜன்னலோர சீட்டுல நீ, உனக்குப் பக்கத்து சீட்டுல நான்.. அப்படியே நாம காலேஜ் படிக்கறப்போ ஊட்டிக்கு டூர் போனது மாதிரியே இருக்குல்ல என்று சொல்லி, தன் பழைய நினைவுகளை எண்ணி புன்னகைத்தார் கணேசன்.

சில நொடிகளில் வண்டியின் வேகம் கூடியது, சில்லென காற்று வீசியது. கொஞ்சம் குளிரடிக்குற மாதிரி இருக்கு, இல்ல?என்று கணேசன் கேட்க, ஜன்னல் கதவு தானாக மூடியது.

சிறுகதை 016 - அப்பனுக்குப் பிள்ளை (November 2013)


அப்பனுக்குப் பிள்ளை…

சென்னை ஏ. ஜி. எம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சாந்தி. தவறு அவளுடையது அன்று. சாலையோரத்தில் இருந்த ஓர் இளநீர் கடையில், இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போது அந்த சாலையில் நடந்த விபத்தினால், எதிர்பாராத விதமாக ஒரு கார் அவளை மோதியது. வயிற்றில் பலத்த அடி. வயிற்றில் மட்டும் அன்று, ஆம், கிரி-சாந்தி தம்பதியினரின் கனவிலும், வாழ்விலும் பலத்த அடி.

திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. பார்க்காத மருத்துவர் இல்லை, ஏறாத கோவில் இல்லை, வேண்டாத கடவுள் இல்லை. அப்படி இருந்த நிலைமை, அடுத்த சில மாதங்களில் மாறியது.

மூன்று மாதங்களுக்கு முன் கருவுற்றாள் சாந்தி. இந்த செய்தியைக் கேட்டு கிரியின் தந்தை ஜெயகோபாலும், தாய் சுந்தரியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சாந்தியோ, தன்னைவிட்டு பிரிந்து சென்ற தன் தந்தையோ, தாயோ தான் தனக்குப் பிறக்கப் போவதாக நினைத்து மகிழ்ச்சியுடன் கூடிய எதிர்பார்ப்பில் இருந்தாள். ஆனால் பாவம், இன்று இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது.

சாந்தியின் பையில் இருந்த கைப்பேசியை எடுத்து, அதில் இருந்த எண்ணைப் பார்த்து, சாந்தியின் நிலைமையைப் பற்றி, அலுவலகத்தில் இருந்த கிரிக்குத் தகவல் சொல்லப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் அவன் அந்த மருத்துவமனைக்கு வந்தான். அப்போது சாந்திக்கு ஆப்பரேஷன் நடந்துகொண்டிருந்தது. நடந்ததையெல்லாம் கிரி தன் பெற்றோரிடம் சொல்ல, அவர்களும் அடுத்த சில நிமிடங்களில் அந்த மருத்துவமனைக்கு வந்தனர்.

மூவரும் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தனர். இடையில் சொந்தங்களிடமிருந்து வந்த அழைப்புகளை ஏற்று நடந்த விவரத்தை சொல்லிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து ஒரு டாக்டரும், ஒரு நர்ஸும் வெளியே வந்து, கிரியிடம் ஏதோ பேசினர். கிரியிடம் ஏதோ ஒரு தாளைக் கொடுத்து அதில் அவனது கையெழுத்தை வாங்கி மறுபடியும் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் சென்றனர்.

கிரியின் முகத்தில் இருந்த சோகமும், பயமும் அதிகமானதுபோல் இருந்தது. இதைப் பார்த்துவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்து வந்து, கிரியிடம் ஏதோ சொல்ல நினைத்து ஆனால் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றார் ஜெயகோபால்.

பின் அவன் தோளை இறுக்கமாகப் பிடித்து, “கடவுள் இருக்காரு கிரி. கவலைப்படாதே…” என்று அவர் சொல்லும்போது அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அவரைக் கட்டியணைத்துக் கொண்டான் கிரி. வார்த்தைகள் வரவில்லை, கண்கள் கண்ணீரின் மூலம் வருத்தத்தை, கவலையை, சோகத்தைத் தெரிவித்தன. மனது குமுறிக்கொண்டிருந்தது, மூளை கடவுளிடம் ப்ரார்த்தனை செய்துகொண்டிருந்தது.

இரண்டு மணி நேர ஆப்பரேஷன் நல்லபடியாக முடிந்தது. சாந்தி இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருந்தாள், அதனால் அவளைப் பார்க்க அனுமதி வாங்குவது கடினம். அனுமதி கிடைத்தாலும் ஒரே நேரத்தில் மூவரும் உள்ளே சென்று பார்க்க முடியாது.

முதலில் கிரியை மட்டும் சாந்தியைப் பார்த்துவிட்டு வர அனுமதித்தனர் மருத்துவர்கள். அதற்குப் பிறகே ஜெயகோபாலும், சுந்தரியும் உள்ளே சென்று சாந்தியைப் பார்க்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது.

உள்ளே சென்ற கிரி அரை மணி நேரம் சாந்தியுடன் பேசிவிட்டு வெளியே வந்தான். கண்கள் கலங்கியிருந்தன. அதற்குப் பிறகு உள்ளே சென்று, சாந்தியைப் பார்த்துவிட்டு, பின் வெளியே வந்தனர் ஜெயகோபாலும், சுந்தரியும்.

வெளியே வந்தவுடன், வீட்டுக்குப் போகும்போது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்துவிட்டு, உண்டியலில் ஆயிரத்தொரு ரூபாயைப் போட்டுவிட்டுத்தான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று ஜெயகோபாலிடம் சுந்தரி சொல்ல, அதற்கு ஜெயகோபாலும் சரி என்பதுபோல தலையசைத்தார்.

சாந்தி வீடு திரும்ப ஒரு வாரம் ஆனது. கிரிதான் அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்துவந்தான். நேரம் காலை பத்தரை மணி.

சாந்தியும் கிரியும் வீட்டுக்குள் நுழையும் முன் ஆரத்தி எடுத்து, திருஷ்டி எல்லாம் கழித்துவிட்டு அவர்களை உள்ளே அனுப்பினார் சுந்தரி.

பூரணமாக குணமாகியிருந்தாள் சாந்தி. ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த சோகத்தை, அவள் முகத்தால் மறைக்க முடியவில்லை. முகமும் ஒரு கண்ணாடிதானே.

கிரியின் தோளில் கைவைத்துக்கொண்டு, மெதுவாக நடந்து, வீட்டுக்கூடத்தில் போடப்பட்டிருந்த மர நாற்காலியில் உட்கார்ந்தாள் சாந்தி. ஜெயகோபால் உள்ளேயிருந்து அவளுக்கு தண்ணீர் எடுத்துவர, ஆரத்தித் தட்டில் இருந்த நீரை வெளியே கொட்டிவிட்டு, சுந்தரியும் அப்போது கூடத்திற்கு வந்தார்.

“அப்பா, இங்க வந்து உக்காருங்க. அம்மா நீங்களும் வாங்க. உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்” என்று சொன்னாள் சாந்தி.

“என்னம்மா வந்ததும், வராததுமா முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றே? கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோ. சாயங்காலம் பேசிக்கலாம்” என்றார் ஜெயகோபால்.

“இல்லப்பா, இப்பவே பேசிடலாம். தயவுசெஞ்சு நான் சொல்றதை கேளுங்க”

“சரிம்மா சொல்லு. எதுவா இருந்தாலும் பதட்டப்படாம சொல்லு”

“கிரிக்கு நீங்க வேற ஒரு கல்யாணம் பண்ணி வெக்கணும்னு நான் ஆசைப்படறேன். செய்வீங்களா?”. கண்கள் கலங்கின, குரல் நடுங்கியது.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஜெயகோபாலும், சுந்தரியும். சுந்தரி அதிர்ச்சியில் உறைந்து போனார். ஜெயகோபால், தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “ஏம்மா, என்னாச்சு? ஏன் திடீர்னு இப்படியெல்லாம் பேசறே? நாங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா எங்களை மன்னிச்சிடும்மா. உன் முடிவைக் கொஞ்சம் மாத்திக்கோம்மா ப்ளீஸ்” என்று கேட்டுக்கொண்டார். குரலில் இருந்த வருத்தம், நடுக்கம், அவர் சொன்ன வார்த்தைகள் மனதிலிருந்து வந்தவைதான் என்பதை உணர்த்தியது. சுந்தரியின் கண்கள் கலங்கின.

“இல்லப்பா. நான் கிரியை உண்மையா நேசிக்கறேன். என்னால அவர் கஷ்டப்படக்கூடாது. அதனாலதான் அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு சொல்றேன்” ஜெயகோபாலையும், சாந்தியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரி. வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டன, வெளியே வரவில்லை.

“அப்படி என்ன கஷ்டப்படப்போறான் கிரி? நீங்க ரெண்டு பேரும் இத்தனை வருஷம் சந்தோஷமா குடும்பம் நடத்தினது எங்களுக்குத் தெரியும். ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ பாசமா நடந்துப்பீங்க. இப்போ எங்கேயிருந்து இன்னொரு கல்யாணம் பண்ணுற பேச்சு வந்தது?”

“கிரி உங்ககிட்ட சொல்லலையா அப்பா? அம்மா, உங்களுக்கும் நான் எதனால சொல்றேன்னு தெரியலையா?”

“இல்லையே மா. என்னாச்சு? சொல்லேன். கிரி, நீயாவது சொல்லேன்டா”

அப்போது கிரி, “நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ ஒரு தாள்ல கையெழுத்து போட்டது ஞாபகமிருக்கா?” என்று ஜெயகோபாலைக் கேட்டான்.

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

“நடந்த விபத்துனால சாந்தியோட கரு கலைஞ்சுபோய், அவளோட கருப்பையும் ரொம்ப சேதம் ஆகியிருந்தது. அந்த கருப்பையை எடுக்கலைன்னா சாந்தியை காப்பாத்த முடியாதுன்னு சொல்லிருந்தார் டாக்டர். இந்த ஆப்பரேஷன் ரிஸ்க்கான ஒன்னு. அப்படி அந்த கருப்பையை எடுக்கும்போது அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா, அதுக்கு ஹாஸ்பிட்டல் பொறுப்பில்லை அப்படிங்கிற விஷயம்தான் அந்த தாள்ல இருந்தது. அதை படிச்சுப்பார்த்து கையெழுத்து போட்டேன். இதைப்பத்திதான் இப்போ சாந்தி சொல்றா”

அதிர்ச்சியாய் இருந்தது ஜெயகோபாலுக்கும், சுந்தரிக்கும். பூகம்பமே வெடித்ததுபோல் இருந்தது. தன் மருமகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்தில், சோகத்தில் அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை.

கிரி பேச்சைத் தொடர்ந்தான்.

“அதுக்கு நான் சொன்னேன். உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை அப்படிங்கற சினிமா வசனம் எல்லாம் நான் சொல்ல மாட்டேன். எத்தனையோ அனாதை ஆசிரமங்கள் இருக்கு. அதுல எத்தனையோ முத்து முத்தா குழந்தைங்க இருக்கு. அதுல ஒன்னு, ரெண்டு நாம தத்தெடுத்துக்கலாம். இந்த ரெண்டாவது கல்யாணம் பேச்செல்லாம் பேசாதேன்னு சொன்னேன் அப்பா” என்றான் கிரி.

அப்போது சாந்தி, “தத்து எடுக்கறதெல்லாம் சரி வராது. குழந்தை எப்படி ஒட்டும்? ரத்தப்பாசம் இருக்காதே?” என்றாள்.

அப்போது சுந்தரி, “அதெல்லாம் இல்லம்மா. நாமதான் பாசம், அன்பு எல்லாத்தையும் ஊட்டி வளர்ப்போமே. பயப்படாதேமா. நாங்க எல்லாரும் இருக்கோம். இந்த மாதிரி ரெண்டாவது கல்யாணம், அது இதுன்னு தயவுசெஞ்சு உளறாதே” என்று சொல்லி, சாந்தியின் அருகில் வந்து அவள் தலையை தன்மீது சாய்த்துக்கொண்டார். சில நிமிடங்கள் அப்படியே இருந்தனர் அனைவரும். எதுவும் பேசவில்லை. சாந்திக்கு, தன் தாயின் மீது தலைசாய்த்து வைத்திருப்பது போன்ற உணர்வு.

“இது உங்க வாழ்க்கை. நீங்கதான் முடிவு செய்யணும். மனசுவிட்டு பேசுங்க. அப்பறம் உங்க முடிவை எங்ககிட்ட சொல்லுங்க. அதுக்குள்ளே நானும் அம்மாவும் பக்கத்துல இருக்கற முருகர் கோவிலுக்குப் போயிட்டு வர்றோம்” என்று சொல்லி, சுந்தரியை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார் ஜெயகோபால்.

கோவிலை வந்தடைந்தனர் இருவரும். உள்ளே நுழைந்தவுடன், “என்னங்க, நம்ம பையன் தெளிவா இருக்கான். ஆனா தத்தெடுக்கறதுக்கு சாந்தி மறுக்கிறாளே. முடிவை மாத்திப்பாளா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் சுந்தரி.

அதற்கு ஜெயகோபால், “நம்ம பையன் சாந்தியின் மனசை மாத்தி, நல்ல வழிக்குக் கொண்டு வந்திடுவான். குழந்தையும் தத்தெடுத்துப்பாங்க. கவலைப்படாதே. புரியுதா?” என்றார்.

“அதெப்படிங்க இவ்ளோ நம்பிக்கையோட சொல்றீங்க?” என்று சுந்தரி கேட்க, ஜெயகோபால் தன் பர்ஸில் இருந்து ஒரு தாளையும், ஒரு புகைப்படத்தையும் எடுத்து, சுந்தரியிடம் காண்பித்தார்.

அந்தத் தாளையும், புகைப்படத்தையும் பார்த்ததும் புரிந்தது சுந்தரிக்கு. கவலை மறையத் தொடங்கியது. எதையோ நினைத்து புன்னகைத்தார். முகத்தில் நம்பிக்கை தோன்றியது. அந்தப் புகைப்படத்தையே சில நிமிடங்கள் பார்த்துகொண்டிருந்தார். கண்களில் ஆனந்தக்கண்ணீர் நிரம்பியது.

அந்த தாளும், புகைப்படமும் என்ன தெரியுமா? கிரியைத் தத்தெடுத்ததற்கான ஒப்புதல் படிவத்தின் நகல், அவனைத் தத்தெடுத்த அன்று எடுக்கப்பட்ட ஒரு சின்ன புகைப்படம்.

அப்போது ஜெயகோபாலின் கைப்பேசி ஒலித்தது. மறுமுனையில் கிரி, “அப்பா, சாந்தி குழந்தைகளை தத்தெடுக்கறதுக்கு ஒரு வழியா சம்மதிச்சிட்டா” என்று சொன்னதைக் கேட்டு, ஜெயகோபாலின் முகம் மலர்ந்தது.

சிறுகதை 015 - ரிங் டோன் (November 2013)


                                                          ரிங் டோன்

மன்னன் திரைப்படத்தில் வரும் .”அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று பாடலுடன் சிவாவின் கைப்பேசி ஒலித்தது.

“சொல்லு மா, நான் இங்கதான் ரவி வீட்டுல இருக்கேன்” மறுமுனையில் சிவாவின் தாய் “காலையில சரியா சாப்பிடாமயே கிளம்பிட்டே சிவா. ரவி வீட்டுல ஏதாவது சாப்பிடு. இல்லைன்னா வெளியில ஏதாவது சாப்பிட்டுக்கோப்பா. மறந்திடாதே, பசி தாங்கமாட்டே நீ” என்றார்.

“நான் எவ்ளோ சாப்பிட்டாலும் உனக்கு நான் சரியா சாப்பிடாத மாதிரிதான் தெரியும்மா. நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே”

“சரிப்பா. எப்போ வீட்டுக்கு வருவே நீ?”

“மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்திடறேன்மா. இன்னும் பத்து நிமிஷத்துல கார்த்தி வந்திடுவான். பதினோறு மணிக்குதான் சினிமா. பாத்துட்டு நேரா வந்திடுறேன்”

“சரிப்பா, பாத்துக்கோ” அழைப்பைத் துண்டித்தார் சிவாவின் தாய்.

“என்னடா சிவா, அம்மாவுக்குத் தனியா ரிங் டோன் வெச்சிருக்கே? எல்லாருக்கும் இப்படிதானா?” என்று சிவாவைக் கேட்டான் ரவி. அதற்கு சிவா, “ஆமாடா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரிங் டோன். யாரு கூப்பிடறாங்கன்னு உடனே தெரிஞ்சுடும்ல. அதான்” என்றான்.

“அது சரி, அஞ்சலிக்கு என்ன ரிங் டோன்?”

சிவா, ரவி, கார்த்தி, அஞ்சலி ஆகிய நால்வரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அஞ்சலியை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறான் சிவா.

“அஞ்சலிக்கு ஒரு ஸ்பெஷல் ரிங் டோன் வெச்சிருக்கேன்டா. கேட்கறியா?” என்று சிவா சொல்லி தன் கைப்பேசியில் ஒரு பாடலைப் போட்டான். அந்த பாடல் இது தான் – “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” என்ற டூயட் திரைப்படத்தில் வரும் பாடல்.

“அருமையான பாட்டு. எல்லாம் சரி, ஆனா நீ வீட்டுல இருக்கும்போது இந்த பாட்டைக் கேட்டா, உன் வீட்டுல சந்தேகப்படமாட்டாங்களா?”

“நான் வீட்டுக்கு போன உடனே சைலன்ட் மோடுல என் மொபைலை வெச்சிடுவேன். யாருக்கும் தெரியாது”

“எதுக்குடா இந்த பொழப்பு உனக்கு? நல்லாதானே இருந்தே நீ?” என்று ரவி சொல்லும்போது, நண்பன் திரைப்படத்தில் வரும் “என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்” என்ற பாடலுடன் சிவாவின் கைப்பேசி ஒலித்தது. கார்த்திதான் அழைத்திருந்தான். திரையரங்கிற்குத் தான் நேரடியாக வந்துவிடுவதாகச் சொன்னான் கார்த்தி.

“டேய் ரவி, கார்த்தி தியேட்டருக்கு நேரா வந்துடறானாம். நாம கிளம்பலாமா?” என்று சிவா கேட்க, அதற்கு சரி என்பது போல் தலையசைத்தான் ரவி.

ரவியின் வண்டியில் இருவரும் திரையரங்கை நோக்கி செல்லத் தொடங்கினர். ரவிதான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

“டேய் சிவா, உன் லவ்வை அஞ்சலிகிட்ட சொல்லிட்டியாடா?”

“இன்னும் இல்லைடா. எப்படி சொல்றதுன்னு தெரியலை”

“நேரா போய் சொல்ல வேண்டியதுதானேடா. இதுக்கு ஏன் யோசிச்சிட்டு இருக்கே?”

“என்ன பதில் சொல்லுவாள்னு தெரியலைடா. முடியாதுன்னு சொல்லிட்டா கஷ்டமா இருக்கும். அதான் கொஞ்சம் பயமா இருக்கு”

“அதுக்காக சொல்லாம இருந்தா அவள் உன்னைப்பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கான்னு எப்படி தெரியும்? தைரியமா போய் சொல்லுடா”

“தைரியம்தான் வரவே மாட்டேங்குதுடா”

“லவ் பண்ண தைரியம் இருக்கு. அதை லவ் பண்ற பொண்ணுக்கிட்ட சொல்றதுக்கு தைரியம் இல்லையா?”

“டேய், நீயும் லவ் பண்ணி பாரு. அப்பத்தான் அந்த கஷ்டம் உனக்குத் தெரியும்” என்று சிவா சொல்லி முடிக்க, திரையரங்கை வந்து சேர்ந்தனர் இருவரும்.

திரையரங்கத்தின் வாசலில் “சிவா, நீ இங்கயே இறங்கிக்கோ. கார்த்திக்குக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துடு. நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு, சிவா வண்டியிலிருந்து இறங்கியதும், வண்டி நிறுத்தும் இடத்திற்குச் சென்றான் ரவி.

டிக்கெட் வாங்குவதற்கு கவுன்டரை நோக்கி நடந்து செல்லும்போது, அங்கு அஞ்சலி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான் சிவா. எதிர்பாராத சந்தோஷம் அவனுக்கு.

கருப்பு கலர் டீ ஷர்ட்டும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தாள். கையில் ஒரு சின்ன கருப்பு நிற ஹேண்ட் பேக், வலது உள்ளங்கையில் கைப்பேசி இருந்தது.

அப்போது ஏதோ ஒரு அழைப்பு அஞ்சலியின் கைப்பேசிக்கு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள் அஞ்சலி.

அந்த சமயம் வண்டியை நிறுத்திவிட்டு சிவாவை நோக்கி வந்தான் ரவி. சிவா அஞ்சலியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்த்தான்.

நேராக சிவாவிடம் வந்து, “டேய் சிவா, ஒரு ஐடியாடா. என்ன நடக்குதுன்னு பாப்போம். என்ன சொல்றே நீ?” என்றான் ரவி. அதற்கு சிவா, “என்ன ஐடியா? என்ன விஷயம்?” என்றான்.

தன் யோசனையை சிவாவிடம் சொல்லிவிட்டு நேராக அஞ்சலியை நோக்கி நடந்தான் ரவி. அவள் தன்னை உடனே பார்த்துவிட முடியாதபடி, அவள் பின்னால் சென்று நின்றான்.

“ஹாய் அஞ்சலி. வாட் எ சர்ப்ரைஸ்” என்றான் ரவி. யாரது தன்னிடம் பேசுவது என்று திரும்பிப் பார்த்தாள் அஞ்சலி. அங்கு ரவியைப் பார்த்தவுடன் அஞ்சலி, “ஹாய் ரவி, எதிர்பார்க்கவே இல்லை உன்னை இங்கே பார்ப்பேன்னு” என்றாள்.

இரண்டு நிமிடம் பேசியிருப்பார்கள் ரவியும், அஞ்சலியும். அப்போது பம்பாய் திரைப்படத்தில் வரும் “கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடலுடன் அஞ்சலியின் கைப்பேசி ஒலித்தது.

கைப்பேசியை எடுத்துப் பார்த்த அஞ்சலியின் முகம் ஒரு புதுப்பொலிவோடு மலர்ந்ததைக் கவனித்தான் ரவி. சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த சிவாதான் அஞ்சலியை அழைத்திருந்தான். அடுத்த சில நொடிகளிலேயே அந்த அழைப்பைத் துண்டித்தான் சிவா.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரவி, “சரி அஞ்சலி, அப்பறமா பாப்போம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். நடந்த விஷயத்தை சிவாவிடம் ரவி சொல்ல, சிவாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். காற்றில் பறப்பதுபோல் உணர்ந்தான்.

“டேய் ரவி, ரொம்ப தேங்க்ஸ்டா. உன்னோட இந்த ஐடியாவாலதான் எனக்கு அஞ்சலியோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுது. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா” என்று ஆனந்தத்துடன் சொன்னான் சிவா.

“ஃப்ரெண்ட்ஸ் மத்தியில என்னடா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு. ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரிதான். இனிமேலாவது தைரியமா போய் அவள்கிட்ட உன் லவ்வை சொல்லு” என்று ரவி சொல்லும்போது சிவாவின் கைப்பேசி “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” என்ற பாடலுடன் ஒலித்தது. முகம் முழுதும் மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினான் சிவா. அடுத்த நாள் கல்லூரியில் நடக்க இருக்கும் ஃபங்ஷன் பற்றி பேசினார்கள் சிவாவும், அஞ்சலியும்.

சிவா அன்றிரவு தூங்குவதற்குமுன் மறுநாள் அஞ்சலியிடம் தன் காதலைச் சொல்ல முடிவு செய்து படுத்தான். 

மறுநாள் ஃப்ங்ஷன் அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. சிவா கையில் ஒரு சிவப்பு ரோஜாவுடன் அஞ்சலியைத் தேடினான். ஒரு மரத்தடியில் அவள் சினேகிதி விஜியுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து, தன் கைப்பேசியில் அவளை அழைத்தான்.

"விஜி, ரொம்ப தாங்க்ஸ்டி. இந்தா உன் மொபைல். என் மொபைல் ரிப்பேர் செய்து வந்துவிட்டது" என்று அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அஞ்சலியின் கைப்பேசி ஒலித்தது "ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ” என்ற இனிமையான பாடலுடன்.