Tuesday 21 January 2014

மறக்க முடியாத முகங்கள் - 1

மறக்க முடியாத முகங்கள் - 1:

இரண்டு வாரங்களுக்கு முன், சென்னைக்கு அவசர அவசரமாகக் கிளம்பினேன். பெங்களூரைத் தாண்டி கோலார், சித்தூர் வரை வெயில் பொறுத்துக் கொள்ளும்படியே இருந்தது. சென்னையை அடைந்தவுடன் வெயிலின் உக்கிரம் தெரிந்தது. இத்தனைக்கும் சென்னையில் இரண்டு வருடங்கள் இருந்து, அதை அனுபவித்தவன் நான். இன்றும் எப்போது சென்னைக்குத் திரும்பப் போகிறேன் என்று ஏங்கிக் கொண்டிருப்பவன். பெங்களூர் வானிலை என்னை மாற்றிவிட்டது.

நான் போகவேண்டிய இடத்தின் முகவரி என் மொபைலில் இருந்தது, ஆனால் எப்படிச் செல்வது என்பது தெரியாது. வழியில் விசாரித்துக்கொண்டே போகலாம் என நினைத்து, வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி, ஒரு ஆட்டோக்காரரிடம் நான் போக வேண்டிய விலாசத்தைப் பற்றி கேட்டேன். அந்த ஆட்டோக்காரர் என்னை ஏற இறங்க பார்த்தார். என்ன செய்வது, என் பழக்கதோஷம், கன்னடத்தில் கேட்டுத் தொலைத்துவிட்டேன். இத்தனை வருடங்களாக பெங்களூரில் ஆட்டோக்காரர்களிடம் பேசி, சண்டை போட்டு, அப்படியே பழகிவிட்டது!

அவரது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, தமிழில் கேட்க, அவர் வழி சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த இடத்தை நோக்கி சென்றேன். இதெல்லாம் நடந்தது பகல் 2, 2:30 மணிக்கு. வெயில் எப்படி மண்டையைக் காயவைத்திருக்கும் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த ஆட்டோக்காரர் சொன்ன அடையாளங்களைத் தேடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

அப்போது சாலையோரத்தில் ஒரு பாட்டி நடந்து சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 70, 75 வயது இருக்கும். இந்தத் தள்ளாத வயதில் கையில் ஏதோ ஒரு சின்ன எவர்சில்வர் டப்பாவை எடுத்துக்கொண்டு, நடந்து கொண்டிருந்தார். பழைய சுங்குடி சேலை போல் எதையோ அணிந்திருந்தார். காலில் செருப்பு இல்லை, தலைமுடி முழுவதுமாக நரைத்திருந்தது. முகத்தில் சில சுருக்கங்கள், சோகம், சோர்வு, தன் நிலை மாறுமா, முன்னேறுமா என்பது போன்ற ஒரு எதிர்பார்ப்பு, அத்தனையும் நிறைந்திருந்தது.

இன்று வரை அந்த முகம் என் நினைவில் இருக்கிறது. இன்னமும் இருக்கும் என நினைக்கிறேன், ஒரு சின்ன உறுத்தலுடன்.

No comments:

Post a Comment