Saturday 14 February 2015

சிறுகதை 022 - ஆட்டோ (June 2014)

ஆட்டோ


“வாடா விஜய். எப்படி இருக்கே? ஒரு வழியா இங்க வர்றதுக்கு வழி கண்டுபிடிச்சிட்டியா? உன் பிஸியான நேரத்துல இங்க வர்றதுக்கு உனக்கு நேரம் கிடைச்சுதா?” என்று வீட்டுக்கு வந்திருந்த என் நெருங்கிய நண்பன் விஜய்யைக் கிண்டலாகக் கேட்டேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு பெங்களூர் வந்திருக்கிறான் அவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா சென்றவன், கடந்த வாரம்தான் இந்தியா வந்தான்.

“நல்லாஇருக்கேண்டா. நீ எப்படி இருக்கே?” என்று என் கிண்டலை சற்றும் பொருட்படுத்தாமல் சொன்னான் அவன்.

“சூப்பரா இருக்கேன். உட்காரு, இதோ வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவனை சோபாவில் அவனை உட்காரச்சொல்லிவிட்டு, உள்ளே சென்று ஒரு கண்ணாடிக் கோப்பையில் மாம்பழ ஜூஸ் எடுத்து வந்தேன்.

“ஜூஸ் வேணாம்டா. காபி குடுக்கறியா?”

“ஏன்டா? மேங்கோ ஜூஸ் உனக்குப்பிடிக்குமே?”

“தலை வலிக்குதுடா. அதான்”

“என்ன ஹேங்க்ஓவரா? இந்தியாவுலயும்குடிக்க ஆரம்பிச்சிட்டியா?” கண்ணடித்தேன்.

“டேய், தென் ஆப்பிரிக்காவுல குடிக்காத ஒரே ஆள் நான்தான். நீ என்னடான்னா ஹேங்க் ஓவரான்னு கேக்கறே?” அப்பாவியாய் காட்டிக் கொள்ள இப்படி சொன்னானோ என நினைத்துக்கொண்டேன்.

“சரி, இரு வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று சுடச்சுட காபி போட்டு, பிரிட்ஜின் மேல் இருந்த டப்பாவை எடுத்தேன். அதில் இருந்து ஒரு தலைவலி மாத்திரையை எடுத்துக் கொண்டு காபிக் கோப்பையையும், மாத்திரையையும் விஜய்யிடம் நீட்டினேன்.

காபிக் கோப்பையை வாங்கி குடிக்க ஆரம்பிக்கும்போது, “டேய், ராவாஅடிக்கறியே. கொஞ்சம் தண்ணி, சோடா ஏதாவது கலக்கட்டுமா?” என்று சின்சியராகக் கேட்டேன்.

கையை நீட்டி, தனக்குள் என்னை ஏதேதோ வார்த்தைகளால் திட்டி சபித்துவிட்டு, காபி குடிக்க ஆரம்பித்தான். எனக்கு உடனே விக்கியது. ஒரு வேளை இவன் சொன்னது எல்லாமே உண்மையோ என நினைத்துக்கொண்டே டைனிங் டேபிளின் மேல் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து பீர் குடித்தேன்.

என்ன தண்ணீர் பாட்டிலில் பீரா என்கிறீர்களா? ஆம், எனக்கு அது அப்படித்தான் தெரிந்தது. பல வருடங்களுக்குப் பிறகு நண்பன் வருகிறான் என்ற சந்தோஷத்தில் நான் ஏற்கனவே ‘லைட்’டாக மது அருந்தியிருந்தேன். அதனால்தான் எனக்கு இப்படி தெரிகிறதோ என்னவோ.

காபி குடித்து முடித்து மாத்திரையைப் போட்டுக் கொண்டான் விஜய்.

“டேய் ரவி, நம்ம சையது இங்கதான் எம். ஜி. ரோடு பக்கத்துல இருக்கான். அவன் வீட்டுக்குப் போகலாம் வா” என்றான்.

“இருடா டிரஸ் மாத்திக்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு என் அறைக்குள் சென்றேன். சில நிமிடங்களில் பனியன், லுங்கியிலிருந்து டீ சர்ட், ஜீன்ஸுக்கு மாறினேன்.

“வாடா போகலாம். பைக் சர்வீஸுக்கு குடுத்திருக்கேன். அதனால, இங்கயிருந்து ஷேர் ஆட்டோல மார்க்கெட் வரைக்கும் போயிட்டு, அங்க இருந்து பஸ்ஸுல போகலாம்” என்றேன். என் வார்த்தைக்கு மறுப்பேது.

அபார்ட்மெண்ட் லிஃப்ட்டில் கீழே வந்து, மெயின் ரோட்டுக்கு வந்தோம். பிஸியான சாலை அது. ஏகப்பட்ட ஆட்டோக்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கும். அனேகமாக எல்லாமே ஷேர் ஆட்டோக்கள்தான்.

காலியாக ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. கை காட்டியவுடன் நின்றது அந்த ஆட்டோ. விஜய்யை முதலில் ஏற்றிவிட்டு, பிறகு நான் ஏறினேன். வண்டி புறப்பட்டது.

“டேய், மார்க்கெட் போகணும்னு சொல்லவேயில்லையே?” என்ன ஒரு சந்தேகம் விஜய்க்கு. இங்கு எல்லா ஷேர் ஆட்டோக்களும் எப்போதுமே மார்க்கெட்டில் நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிவிடும். இந்த உண்மையை விளக்கினேன்.

அப்போது ஒரு பெண் அவசர அவசரமாக சாலையைக் கிராஸ் செய்து வந்து கை நீட்டினாள். கிட்டத்தட்ட 6 மாதக் குழந்தை அவள் வயிற்றில் எட்டி உதைத்துக் கொண்டிருந்தது போலும்.

என் பக்கத்தில் உட்கார்ந்தாள். நான் பொதுவாகவே கூச்ச சுபாவம் உள்ளவன் என்பதால், நான் விஜய் பக்கம் நெருக்கி உட்கார்ந்தேன். வண்டி போய்க்கொண்டிருந்தது.

பிஞ்சுக்குழந்தையின் கை, கால் போல் வளைத்து நெளித்து ஓட்டிக் கொண்டிருந்தார் ஆட்டோக்காரர். இப்படி வண்டி ஓட்டியும், எப்படி இந்த பெண்ணுக்கு இன்னும் சுகப் பிரசவம் ஆகவில்லை என்ற அறிவியல் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

அப்போது அந்த பெண், தன் புடவைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து என் கழுத்தில் வைத்தாள்.

“சத்தம் போட்டீங்க.. அவ்ளோதான்” என்று மிரட்டி, “நீ வண்டியவிடாம ஓட்டு மச்சான்” என்றாள் இந்த பெங்களூரு சொர்ணாக்கா.

சில கொள்ளைக் கும்பல்கள் இந்த ஆதிகால டெக்னிக்கை இன்னுமா பின்பற்றுகின்றனர் என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன். விஜய்யின் முகத்தில் பயம் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது.

மார்க்கெட்டைக் கடந்து சென்ற அந்த ஆட்டோ, ஒரு குறுகிய வளைவில் சென்று நின்றது. அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் மிகக் குறைவு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலா இந்த மாதிரி ஆட்டோக்காரர்கள் நிறுத்துவார்கள்?

“இறங்குடா” சொன்னாள் சொர்ணாக்கா. செய்தோம் இருவரும்.

“ஒழுங்கு மரியாதையா உங்ககிட்ட இருக்கற காசு, போட்டிருக்கற செயின் மோதிரம் எல்லாத்தையும் குடுத்துடு. இல்ல....” சொர்ணாக்கா கர்ஜித்தாள்.

“அட நீ வேற, இவங்கள பாத்தா எதுவும் உங்கிட்ட குடுக்கற மாதிரி தெரியல. பேசாம கழுத்த அறுத்துடு. அப்பறம் எல்லாத்தையும் எடுத்துக்கலாம்” என்றான் அந்த ஆட்டோவின் சாரதி. டெரர் காட்டுவதாய் நினைக்கிறான் என நினைத்தேன் நான்.

“கரெக்ட். இந்த ஐடியாவை நானே உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன்” என்றேன். சொர்ணாக்காவின் முகமும், ஆட்டோ சாரதியின் முகமும் ஆட்டோ மீட்டர்போல் கொதித்து சிவந்தது.

விஜய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “மேடம் மன்னிச்சிடுங்க. இவன் இப்படித்தான் எப்பவும் பேசுவான். எங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க. நாங்க எல்லாத்தையும் குடுத்துடறோம்” என்று கைகூப்பி கெஞ்சினான்.

“ஹும் சரி, சீக்கிரம்
” என்று கட்டளை வந்தது சொர்ணாக்காவிடமிருந்து.

விஜய் அவசர அவசரமாக தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ் எல்லாவற்றையும் எடுத்து கீழே போட்டான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ஏய், என்ன பாக்கறே? நீயும் உன் பர்ஸ், நகை எல்லாத்தையும் எடு” என்று கட்டளை.

பேண்ட்டின் பின்பாக்கெட்டுக்குள் கை விடுவது போல் இடுப்பில் கை வைத்து பார்த்தேன். யூனிபார்மில் இல்லாமல், மஃப்டியில் இருக்கும்போது எப்போதும் எடுத்துச் செல்லும் கள்ளத் துப்பாக்கி கையில் பட்டது.

முடிவு 1:

துப்பாக்கியை விருட்டென்று எடுத்தேன். அடுத்த நொடியில் “டுமீல் டுமீல்” என்ற சத்தம் கேட்டது.

சொர்ணாக்காவும், ஆட்டோசாரதியும் தலைதெறிக்க ஓடினார்கள். குண்டுகள் அவர்கள் மீது படவேயில்லை.

கீழே கிடந்த தங்கச் சங்கிலி, மோதிரம், பர்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருக்கும்போது, “டேய், ஈஸியா அடிச்சிருக்க வேண்டியது. மிஸ் பண்ணிட்டே பாத்தியா. இதுக்குத்தான் குடிக்காதேன்னு சொன்னேன்” என்றான் விஜய் சிரித்துக்கொண்டே. வெட்கித் தலைகுனிந்தேன். எவ்வளவு பெரிய இழுக்கு எனக்கு.

அந்த நொடி முடிவெடுத்தேன். இனி குடி........................................................................................................................................................த்துவிட்டு நண்பனுடன் வெளியே செல்லக்கூடாது என்று.

முடிவு 2:

துப்பாக்கியை எடுத்து விஜய்யின் தலைக்கு நேரே குறி வைத்து “ஒழுங்கா உங்க பணம் நகை எல்லாத்தையும் கீழே போட்டுட்டு திரும்பி பார்க்காம ஓடுங்க.. இல்ல... “ என்று சொர்ணாக்காவையும், ஆட்டோசாரதியையும் மிரட்டினேன். விஜய்க்கு தூக்கி வாரிப் போட்டது.

மூவரும் தங்களிடம் இருந்த நகை, பணம் எல்லாவற்றையும் எடுத்து கீழே போட்டனர். சொர்ணாக்காவையும், ஆட்டோ சாரதியையும் ஓடுமாறு சைகை காட்டினேன், அவர்கள் ஓட்டம் எடுத்தார்கள்.

கிடைத்த நகை, பணம், ஆட்டோ ஆகியவற்றை சரிசமமாக பங்கு போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்து நானும் விஜய்யும் அங்கிருந்து அந்த ஆட்டோவிலேயே என் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மெக்கானிக் கடைக்குச் சென்றோம். பணமும், நகையும் எங்கள் பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது.
----------------------------------------------------------------------------------------------------------
இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் அன்றுநடந்திருக்க வேண்டும். ஆனால், அன்று நான் குடித்திருந்ததால், பேண்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுக்கும் போது, கவனம், நிதானம் இல்லாமல், டிரிக்கரை அழுத்திவிட்டேன்.


குண்டு படக்கூடாத இடத்தில் பட்டது. இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறேன்.