Sunday 28 September 2014

தீக்குளிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தீக்குளிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

ஒரு அரசியல் தலைவருக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. சிறைத்தண்டனை உறுதி என்கிறது அந்தத் தீர்ப்பு.

இதைக் கேட்டதும் அந்த அரசியல் தலைவரின் கட்சியும், தொண்டர்களும், அபிமானிகளும், அவரது மாநிலமும், ஏன், ஒட்டுமொத்த நாடுமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

அவரது அபிமானிகள் வருந்துகின்றனர். கட்சித் தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர். இத்தனை பெரிய அநீதியை இழைத்துவிட்டதே இந்த நீதித்துறை என்று உஷ்ணம் தலைக்கேறி, சாலைகளில் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்துகின்றனர். அதுவும் எப்படி?

அப்பாவி மக்களின் கடைகளையும், உடைமைகளையும், வண்டிகளையும் அடித்து நொறுக்குகின்றனர்.

கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் அடித்து நொறுக்கப்படுகின்றன.

கடைகளில் உள்ள சாமான்கள் தெருவில் போட்டு உடைக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் செய்து அலுத்துப் போனால், அடுத்த குறி பேருந்துகள். அதுவும் இருக்கவே இருக்கிறது அரசுப் பேருந்துகள். ரொம்ப சவுகரியம்.

இதில் ஒரே ஒரு நல்ல பண்பு என்னவென்றால், பேருந்தில் உள்ள மக்களை பேருந்தைவிட்டு வெளியே துரத்திவிட்டு, அதன் பிறகே பேருந்தைக் கொளுத்துகின்றனர். உண்மையில் மனிதம் இந்த அளவிலாவது இன்னமும் இருக்கிறதே என்று நினைத்து நிம்மதியடையலாம்.

இந்த சம்பவங்களில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. என்ன தெரியுமா?

இவற்றையெல்லாம் செய்பவர்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்றாகத் தெரிந்தே செய்பவர்கள். அதனால்தான் மற்றவர்களின் சொத்துக்களை, பொதுச் சொத்துக்களை நொறுக்குகிறார்கள். இவர்களை யார் தட்டிக் கேட்கப் போகிறார்கள்?

நம் கண் முன்னே, பெரிய ஆயுதமொன்றை எடுத்துக்கொண்டு ஒருவர் நம்மை அடிக்க வந்தால், முதலில் நாம் அவனிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்றுதான் நினைப்போம். இதுதான் இயற்கை. இதைத்தான் வன்முறையாளர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எத்தனை வன்முறையாளர்கள் தங்களின் அரசியல் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக தங்களின் சொந்த வீட்டை, வண்டியை கொளுத்தியிருக்கிறார்கள்? தங்களின் சொந்த கடைகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்?

இவர்கள் ஒரு ரகம் என்றால், இன்னொரு ரக தொண்டர்கள் உள்ளார்கள். அவர்கள் இவர்களுக்கு ஒரு படி மேல்.

தங்களின் தலைவனுக்கு / தலைவிக்கு எதிராகத் தீர்ப்பு வந்துவிட்டதே என்று பொங்கி, உணர்ச்சிவசப்பட்டு, விரக்தியின் உச்சத்துக்கே போய், தங்களை தீயிட்டுக் கொள்பவர்கள் / தீக்குளிக்க முயல்பவர்கள்தான் இந்த இரண்டாம் ரகம்.

“மத்தவங்களுக்கு கொடுக்கறதுதான் உன்னோடது. அதுவும் நீ கொடுக்கற அந்த நொடிப்பொழுதுதான். அதுக்கப்பறம் அதுவும் உன்னோடதில்ல என்பார் என் தாத்தா. என் பார்வையில் இது முற்றிலும் உண்மை.

இப்படி இருக்கையில், யார் இவர்களுக்கு இந்த உரிமையை, அதாவது தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையைக் கொடுத்தது?

“கட்சிக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பொறுக்காமல் தீக்குளித்தான் எங்கள் படை வீரன் என்றும் “இது ஒரு வீர மரணம் என்றும் சில நாட்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தீக்குளித்தவர்களைப் பற்றி மேடை போட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். எவ்வளவோ சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு, போராடி இந்த அளவுக்கு வளர்த்த பெற்றோர்களை, குடும்பத்தினரை விட்டுவிட்டு யாரோ ஒருவருக்காக உயிரை மாய்த்துக் கொள்வதுதான் வீரமா?

இந்த மாதிரி மேடைப் பேச்சுக்களில் தங்கள் உயிரைத் துறந்தவர்களுக்காக உண்மையிலேயே வருந்துபவர்களைவிட ஆதாயம் தேடுபவர்கள்தான் அதிகம். வீர முழக்கமிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், செத்தவர்களின் குடும்பம் என்னாகும்? அவர்களின் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு யார் பதில் சொல்வது? அவர்களது எதிர்காலம் என்னாகும்? இதனால் ஏற்படும் இழப்புகளை அந்தத் தலைவராலோ தலைவியாலோ ஈடுகட்ட முடியுமா?

இப்படி தீக்குளிப்பவர்களுக்காக பரிதாபப்பட முடியவில்லை. வருத்தமும் கோபமும் தான் மிஞ்சுகிறது. இப்படிப்பட்டவர்கள் இந்த பூமிக்கு பாரமாக இருப்பதைவிட போய்ச் சேர்ந்தாலே நல்லது என்று நினைக்கத் தோன்றுகிறது.

தீக்குளிப்பவர்கள், தற்கொலை செய்ய முற்படுபவர்கள், அவர்களைத் தூண்டியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களாவது விழித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

செய்தி:

Wednesday 24 September 2014

இரண்டு நாட்கள், இரண்டு சம்பவங்கள் - பகுதி 1

இரண்டு நாட்கள், இரண்டு சம்பவங்கள்!

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய, கவனிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

  • நேற்று (23-Sep-2014) டெல்லி உயிரியல் பூங்காவில் பார்வையாளர் ஒருவரை புலி “அடித்துக் கொன்றது”
  •  450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று (24-Sep-2014) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


பகுதி 1:

முதல் சம்பவத்துக்கு வருவோம்.

நேற்று பகல், சுமார் 1:30 மணியளவில் டெல்லி உயிரியல் பூங்காவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் எதிர்பாராத விதமாக வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் விழுந்தான்.

எப்படி விழுந்தான்? எதனால் விழுந்தான்? யாருடைய குற்றம் இது?

முதல் விஷயத்துக்கு வருவோம்.

புலிகள் அடைக்கப்பட்டிருக்கிற பகுதியைச் சுற்றி கிட்டத்தட்ட 15 அடி உயரத்தில் ஒரு தடுப்புச் சுவர் உள்ளது. அதாவது புலிகள் அடைக்கப்பட்டிருப்பது, நம் நிலத்தை விட 15 அடி தாழ்வான ஒரு நிலப்பரப்பில்.

இந்தச் சுவற்றைச் சுற்றிலும் ஒரு சிறு இடைவெளி விட்டு ஒரு இரும்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக இரண்டு அல்லது மூன்று அடி உயரம் இருக்கலாம். இந்த வேலியைத் தாண்டுவது குற்றம் என்றும், தாண்டினால் இத்தனை ரூபாய் அபராதம் என்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த மாணவன் இந்த எச்சரிக்கையை வெறும் ஒரு அறிவிப்பாகவே கருதி, வேலியைத் தாண்டியது முதல் குற்றம். இதை ஒரு தவறு என்று சொல்லி, ஒதுக்கிவிட முடியாது. தெரிந்தே செய்த செயல் இது.

யார் தன்னைப் பிடிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவேளை பிடித்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தினால்தான் துணிந்து வேலியைத் தாண்டி, சுவற்றில் இருந்து எட்டிப் பார்த்திருக்கிறான் என நினைக்கிறேன். பிடிக்கப்போவது புலி என்று தெரிந்திருந்தால் நிச்சயம் வேலியைத் தாண்டியிருக்கமாட்டான். அந்த எண்ணமும் அவனுள் தோன்றியிருக்காது. விதிகளையும், எச்சரிக்கைகளையும் அலட்சியம் செய்ததால் வந்த வினை இது.

இந்த விஷயத்தில் இவனுக்கும் சாலையில் கன்னாபின்னாவென்று வாகனம் ஓட்டுபவர்களுக்கும், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் போகிறவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

செய்வது சிறு தவறுதான், தண்டிக்கப்படமாட்டோம், மாட்டிக் கொண்டாலும் தப்பித்துவிடலாம் என்று நினைத்து, வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் ஏராளம். பல சமயங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள். சில சமயங்களில் இந்த மாணவனைப் போல் மாட்டிக்கொள்கிறார்கள்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? குழியில் விழுந்த பின்பு புலியிடம் மன்னிப்பு கேட்டு, உயிர்ப்பிச்சை கேட்டு என்ன பயன்? இழப்பு அவருக்கும், அவரது குடும்பத்துக்கும்தானே?

இரண்டாவது விஷயம்.

மாணவன் குழிக்குள் விழுந்து கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகே அந்த புலி இவனது கழுத்தைக் கவ்வியிருக்கிறது. அதாவது, டெல்லி விலங்கியல் பூங்கா அதிகாரிகளுக்கு இந்த மாணவன் உயிரைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் அவகாசம் இருந்திருக்கிறது. அதற்குள் ‘டிராங்க்விலைசர்’ (Tranquilizer) என்று சொல்லப்படும் மயக்க ஊசியை புலிக்கு செலுத்தி அந்த மாணவனைக் காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால், அந்தப் பூங்காவில் இந்த மாதிரி அத்தியாவசியமான பொருட்கள் இல்லாததால் வெளியிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்படுவதற்குள் எல்லாம் முடிந்திருக்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நம் நாட்டிலுள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு ‘டிராங்க்விலைசர்’ போன்ற தேவையான பொருட்களை வாங்குவது, சுற்றுச் சுவர்களின் உயரத்தை அதிகரிப்பது, வேலியைத் தாண்டுவதைத் தடுக்க அபராதத் தொகையை உயர்த்துவது போன்றவை நடக்கும் என நினைக்கிறேன். வழக்கம்போல் இவற்றிலும் ஊழல் நடக்கும் என்பது வேறு விஷயம்.

இந்த மாணவனின் உயிர் போன்ற ஏதாவது ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டால்தான் அது ஏன் ஏற்பட்டது, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க என்ன செய்வது போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறோம்,

இந்த நிலையில், என்னுடைய கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் ஏராளம் உள்ளது; அதற்கு இன்னும் எத்தனை பெரிய இழப்புகளையெல்லாம் சந்திக்கப்போகிறோமோ?

மூன்றாவது விஷயம்.

செய்திகளில் மாணவனை புலி ‘அடித்துக் கொன்றது’ என்று சொல்கிறார்கள். இது நியாயமா?

பரந்த காடுகளில் சுதந்திரமாகத் திரியும் புலிகளைக் கொண்டு வந்து கூண்டுகள் போன்ற சிறையில் அடைத்துவிடுகிறோம். இதனால் அவைகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

அப்படி ஒரு இடத்தில் திடீரென ஒரு புது மிருகம் நுழைந்துவிட்டால், அது என்ன, எப்படி இருக்கிறது போன்றவற்றை புரிந்துகொள்ள முயலும். கொஞ்சம் பயமோ, பசியோ எட்டிப் பார்த்தால் போதும், தங்களின் இயற்கை குணம் - வேட்டையாடும் குணம் - எட்டிப்பார்க்கும்.

மாணவன் குழியில் விழுந்ததும் புலி அவனருகே வந்து சில நிமிடங்கள் அவனை அவதானித்தது. அவன் பேசும் மொழி புலிக்கு எப்படி புரியும்? சில நிமிடங்கள் அப்படியே இருந்தது.

அதற்குள் இவற்றையெல்லாம் நேரில் பார்த்துக்கொண்டிருந்த நம் சக மனிதர்கள் புலியை பயமுறுத்தி அங்கிருந்து விரட்டிவிட்டு அவனைக் காப்பாற்றிவிடலாம் என்றெண்ணி கூச்சல் போட ஆரம்பிக்க, கையில் கிடைத்த பொருட்களை புலியின் மேல் எறிய ஆரம்பிக்க, ஏற்கெனவே சந்தேகத்தில் இருந்த புலி. சட்டென்று அந்த மாணவனின் கழுத்தைக் கவ்வி, அவனை அப்படியே இழுத்துச் சென்றிருக்கிறது. தற்காப்புக்காக இப்படிச் செய்ததா, அல்லது பசியினால் இப்படிச் செய்ததா என்பது அந்தப் புலிக்குத்தான் தெரியும். ஆனால், தூண்டிவிட்டது அங்கிருந்தவர்கள்தான்.

நிலைமை இப்படி இருக்கையில், புலி மாணவனை ‘அடித்துக் கொன்றதாக’ இதை எப்படிச் சொல்ல முடியும்?

வழக்கம்போல், மனிதர்கள் நாம் செய்யும் குற்றங்களுக்கு மற்றவர்களை, மற்றவைகளைப் பொறுப்பாக்குவது போல், இந்த முறை புலியைப் பொறுப்பாக்கியிருக்கிறோம். அவ்வளவே!

கொசுறு: புலி ஒரு ஆட்கொல்லி கிடையாது, புலிகளுக்கு கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த மிருகங்களே பிடிக்கும். அந்த கொழுப்பிலிருந்துதான் அவைகளுக்கான சக்தி கிடைக்கும்.


இன்னும் சொல்லப்போனால், மனிதர்களால் அழிந்த புலிகளின் எண்ணிக்கை, புலிகளால் அழிந்த மனிதர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நம் நாட்டில் நமது தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை வெறும் 1706 மட்டுமே.

Tuesday 9 September 2014

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

சமீபத்தில் என் நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக விளையாடி, இப்போது ஒரே ஊரில் பணியில் இருந்தாலும், அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு அமைவதில்லை. நாம் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பது நம் கையில் மட்டும் இல்லை என்பதை நம்புபவன் நான். அன்று நண்பனைச் சந்தித்ததும் யதேச்சையாக நடந்த ஒன்றுதான்.

வழக்கமான நலம் விசாரிப்புகளில் தொடங்கிய எங்கள் உரையாடல் அப்படியே சினிமா, விளையாட்டு என பயணித்து கோவில்கள், ஆன்மிகம் வரை வந்தது. அப்போது அவன் தந்தைக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னான் நண்பன். அதை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 60, 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் நண்பரின் வீட்டுக்கு வந்திருந்தார். பார்ப்பதற்கு மிகவும் அப்பிரானியாகவும் அப்பாவியாகவும் இருந்தார்.

அவரை வீட்டினுள் வரவழைத்து கூடத்தில் உட்கார வைத்து, அவரைப் பற்றியும், வந்திருப்பதற்கான காரணத்தைப் பற்றியும் நண்பரின் தந்தை கேட்டார்.

அதற்கு அவர், தாம் திருப்பதியிலிருந்து வருவதாகவும், திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் உண்டியல் மேற்பார்வை பொறுப்பில் இருப்பதாகவும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பெருமாள் ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான் இந்த நபரை அனுப்பியிருக்கிறார் என நண்பரின் தந்தை நினைத்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

வந்திருந்த நபர், தம் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அவளுக்குத் தாலி செய்ய மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும், அந்தப் பகுதியிலுள்ள ஒரு கோவிலில் பணிபுரியும் ஒரு குருக்கள் சொல்லி அவரிடம் மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும் சொன்னார்.

நல்ல விஷயம்தான், தப்பில்லை என நினைத்து நண்பரின் தந்தை அவரிடம் ஒரு தொகையைக் கொடுக்க, வந்தவர் தம் கண்ணீரின் மூலம் நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அப்போது தொடங்கிய இந்தப் பழக்கம், அந்த நபர் ஊருக்கு வரும்போதெல்லாம் நண்பரின் வீட்டுக்குச் சென்று, நண்பரின் தந்தையையும் தாயையும் சந்தித்து திருப்பதி கோவில் பிரசாதத்தைக் கொடுக்கும் அளவுக்கு, அங்கேயே சிற்றுண்டி சாப்பிடும் அளவுக்கு வளர்ந்தது.

கேட்காமலேயே பெருமாளின் பிரசாதம் கிடைப்பதை, அதுவும் தங்கள் வீட்டிலேயே “டோர் டெலிவரி” செய்யப்படுவதை நினைக்கும்போதெல்லாம் நண்பரின் பெற்றோருக்கு ஆனந்தம். என்னே உன் கருணை, கோவிந்தா என மனமுருகினர் இருவரும்.

ஒவ்வொரு முறை வரும்போதும் திருப்பதி கோவிலுக்குள் சிறப்பு டிக்கெட்டில் அழைத்துச் செல்வதாகவும், வருவதற்கு ஒரு நாள் முன்பு தம்மிடம் சொன்னால் போதும்; மற்றவற்றை தாம் பார்த்துக் கொள்வதாகவும் சொன்னார் அவர்.

தாம் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று சொல்லி, தம் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்தக் காலத்திலும் அலைபேசி பயன்படுத்தாத ஒரு நபரா?

அந்த நபர் இத்தனை முறை அழைத்தும், தம்மை நேரில் வந்து சந்திக்கச் சொல்லி பெருமாளிடமிருந்து கட்டளை வரவில்லை. அவர் உத்தரவிட்டால்தானே அவரைத் தரிசிக்க முடியும்?

சென்ற வாரம் அந்த நபர் நண்பரின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது தம் மகனுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், திருமண செலவுகளுக்காக மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும் சொன்னார். உடனே நண்பரின் தந்தை ஒரு தொகையை அவரிடம் கொடுத்தார்.

“கல்யாணத்துக்குன்னு நான் கேட்கும்போதெல்லாம் நீங்க தயங்காம எனக்கு உதவி பண்றீங்களே.. உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ணப்போறேன்..”

“இதுல என்ன இருக்கு சார்.. நல்ல விஷயம்தானே.. இத்தனை நாள் பழகியிருக்கோம்.. இதுகூட பண்ண மாட்டோமா?” என்று நண்பரின் தந்தை சாதாரணமாகச் சொல்ல, அவரின் கைவிரல்களை இறுகப் பற்றிக் கொண்டு மறுபடியும் கண்ணீரின் மூலம் தம் நன்றியைத் தெரிவித்தார் அந்த நபர்..

அப்போது அவருக்குள் ஏதோ தோன்ற, தம் பையில் இருந்து பத்து டிக்கெட்டுகளைக் எடுத்துக் காண்பித்து, அவை ஏதோ ஒரு சிறப்பு சேவைக்கான டிக்கெட்டுகள் என்றும், ஒரு டிக்கெட்டின் மதிப்பு மற்றவர்களுக்கு 500 ரூபாய்க்கும் மேலாக இருந்தாலும், கோவிலில் பணிபுரிபவர்களுக்கு வெறும் 350 ரூபாய்தான் என்றும் சொன்னார்.

மேலும், வெள்ளிக்கிழமையன்று தாம் சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய வேலை இருப்பதால், விருப்பமிருந்தால் திரும்பும் வழியில் தாமே அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அன்று திருப்பதியிலேயே தம்முடனேயே தங்க வைப்பதாகவும் நண்பரின் பெற்றோரிடம் சொல்ல, அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் உறவினர்கள் சிலரிடம் உடனடியாக இந்த விஷயத்தைச் சொல்ல, அவர்கள் தாங்களும் வருவதாகச் சொன்னதால், நண்பரின் பெற்றோர் ஆறு டிக்கெட்டுகளை வாங்கினர்.

தனியாக ஒரு வேனை ஏற்பாடு செய்துகொண்டு, அதில் திருப்பதி சென்று பெருமாளைத் தரிசிக்கலாம் என முடிவெடுத்தனர் நண்பரின் பெற்றோரும், அவர்களது உறவினர்களும்.

இருந்தாலும், திரும்பும்வழியில் தாம் அவர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வதாகச் சொன்னார் அந்த நபர்.

வெள்ளிக்கிழமை. திட்டமிட்டபடியே நண்பரின் உறவினர்கள் வந்தாகிவிட்டது. மாலை வரை பொறுத்துப் பார்த்து, அதற்குப் பிறகு அந்த நபருடைய தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டார் நண்பரின் தந்தை. அதிர்ந்து போனார். அப்படி ஒரு தொலைபேசி எண்ணே இல்லையென்றும், தொடர்பு கொண்ட எண்ணை சரிபார்க்கவும் என்றும் தெலுங்கில் சொன்னது தொலைபேசி. மனமுடைந்து போனார் நண்பரின் தந்தை.

அந்த நபருடைய தொலைபேசியில் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்புண்டு என்று தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக் கொண்டு, எப்படியும் மறுநாள் திருப்பதி கோவிலுக்குப் போகப்போகிறோமே, அங்கேயே சென்று அவரைச் சந்திக்கலாம் என நினைத்தார்.

திட்டமிட்டபடி திருப்பதி கோவிலுக்குச் சென்று, திருவேங்கடமுடையானைத் தரிசித்தனர் ஆறு பேரும். திவ்விய தரிசனம். காணக் கண் கோடி வேண்டும். சில நொடிகளில் “ஜருக்கண்டி ஜருக்கண்டி” என்ற குரல் கேட்க, அங்கிருந்து வர மனமே இல்லாமல் பெருமாளிடம் விடைபெற்று வெளியே வந்தனர்.

நேராக உண்டியல் பகுதிக்கு வந்து அந்த நபரின் பெயரைச் சொல்லி விசாரித்தார் நண்பரின் தந்தை. அப்படி ஒரு நபர் அங்கு இல்லை என்பதை அங்கு இருந்தவர்கள் சொன்னதை அவரின் மதி ஏற்றாலும், மனம் ஏற்கவில்லை.

இத்தனை நாட்கள் நல்லவனாக நடித்து, தம்மிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சென்று இப்படி ஏமாற்றிவிட்டானே என பொருமியிருக்கிறார். பணம் போனால் பரவாயில்லை, நம்ப வைத்து ஏமாற்றிவிட்டானே என்று நொந்துபோயிருக்கிறார் அவர். பாவம்.

சரி ஆனது ஆகட்டும், இவரால்தான் திருப்பதிக்கு வந்து பெருமாளைத் தரிசித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் என உறவினர்கள் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தினர். நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

இந்த விஷயத்தைக் கேட்டதும் அந்த நபரின் மீது எனக்கு கோபம் வந்தது. நம்பிக்கை துரோகம் செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது? அவரை, இல்லையில்லை, அவனை மனதுக்குள் திட்டித் தீர்த்துவிட்டு நண்பனிடம் விடைபெற்று வீட்டை நோக்கி வந்தேன். வழிநெடுக இதே சிந்தனை.

அப்போது பழைய பக்தித் திரைப்படங்களில் வந்த சில காட்சிகள் என் நினைவில் தோன்றி மறைந்தன.

அந்தத் திரைப்படங்களில் கடவுள் மனித வேடத்தில் வந்து பக்தனிடம் இருந்து ஏதோ ஒரு பொருளை அபகரித்துச் செல்வார் அல்லது ஒளித்துவைத்து விடுவார் அல்லது உடைத்து விடுவார்.

வந்தவர் கடவுள்தான் என்பது தெரியாமல் அந்த பக்தர் “கடவுளே என்னை இப்படியா சோதிப்பது?” என்று நியாயம் கேட்பார். கடைசியில் கடவுள் அந்த பக்தரிடம் “என்னை நன்றாகப் பார்” என்று சொல்லி கோவிலுக்குள் சென்று மறைந்துவிடுவார். அப்போதுதான் வந்தது சாட்ஷாத் கடவுளே என்று அந்த பக்தருக்குத் தெரியும். உடனே அவர் மனமுருகி ஒரு பாட்டு பாட, திரைப்படம் இனிதே முடிவடையும்.

இதுபோல், நண்பரின் வீட்டுக்கு திருப்பதியிலிருந்து வந்திருந்தவர் ஏன் கடவுளாக இருக்கக்கூடாது என நான் யோசித்தேன். மேலும், எப்போதோ, எந்த ஜென்மத்திலோ தாம் தவறான வழியில் சம்பாதித்த இந்தத் தொகையை, யாரிடமோ தாம் கடனாக வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் விட்டுவிட்ட இந்தத் தொகையை இப்போது கடவுளே வாங்கிக் கொண்டு போய்விட்டார் என ஏன் நண்பரின் தந்தை யோசிக்கக்கூடாது என நான் யோசித்தேன். இப்படி யோசித்தால் எதிர்பார்ப்பும், கவலையும் குறைந்து நிம்மதி நிலைக்குமே?

ஒரு வேளை எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால்தான், இப்படி ஒரு அனுபவம் வாய்த்தால்தான் அவரின் மனநிலையும், வேதனையும் புரியுமோ?

எது எப்படியோ, என்ன நடந்தாலும் “போற்றுவோர் போற்றலும், தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் பெருமாளுக்கே” என்று விட்டுவிடுவதுதானே நல்லது?


ஏடுகுண்டலவாடா, வெங்கடரமணா, கோவிந்தா கோவிந்தா!

Thursday 4 September 2014

சிறுகதை 021 - என் சாட்சி எடுபடுமா? (May 2014)

                என் சாட்சி எடுபடுமா?

இன்று இரவு 8 மணி இருக்கும் என நினைக்கிறேன். அப்போதுதான் கொலை செய்யப்பட்டாள் செலீனா.

கடந்த 2 வருடங்களாக வீட்டில் தனியாக இருந்து வந்தாள். பாதுகாப்புக்கு யாரும் இல்லை. பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். என்னை அவர்கள்தான் இங்கு அனுப்பி வைத்தார்கள்.

வருடத்திற்கு ஓரிரு முறைதான் நாங்கள் எல்லோரும் சந்திப்போம். அப்படி ஒரு சந்திப்பின்போதுதான் செலீனாவின் தந்தையின் நெருங்கிய நண்பரான போலீஸ் கமிஷனர் விக்ரமை முதன்முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகு அவரைப் பார்த்ததில்லை.

இவ்வளவு பெரிய பங்களாவிற்கு வாட்ச்மேன் ஒருவன்தான். சம்பத் அவன் பெயர். இரண்டு வருடங்களாக, அதாவது செலீனாவின் தந்தை இங்கு இருந்த காலத்திலிருந்தே வேலை பார்த்து வருகிறான். நம்பிக்கைக்குரியவன்.

செலீனாவின் நண்பர்கள் அவ்வப்போது வீட்டுக்கு வருவதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஆட்டம், பாட்டம், அரட்டை இருக்குமே தவிர மது, சிகரெட் போன்றவையெல்லாம் இருக்காது. என்னதான் பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் செலீனாவும் அவளின் நண்பர்களும் விசித்திரமானவர்கள் என நினைக்கிறேன்.

இன்று பகல், சுமார் 3 மணி என நினைக்கிறேன். செலீனாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்திருந்தது அவள் தந்தை. அவசரமாகப் பேசிவிட்டு வெளியே சென்றாள். நான் இங்கேயேதான் இருந்தேன்.

தனியாக இருக்க எனக்கு மிகவும் போர் அடித்தது. ஆனாலும் செலீனா திரும்பி வரும்வரை காத்திருக்கலாம் என நினைத்து, ஜன்னல் வழியாக வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரண்டு மணி நேரத்தில் வீட்டின் வெளிப்புற கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. செலீனாதான் தன் காரில் திரும்பி வந்திருந்தாள். சம்பத் கதவைத் திறந்து, காரில் இருந்த செலீனாவைப் பார்த்து சல்யூட் அடித்தான்.

காரை வீட்டுக் கூடத்திற்கு நேர் எதிரே பார்க் செய்துவிட்டு, முன் இருக்கையில் இருந்த பெட்டியை தன் இடது கையில் எடுத்துக் கொண்டு காரின் கதவைத் திறந்தாள். காரைவிட்டு இறங்கியதும் கதவை மூடி, ரிமோட் சாவியால் காரை பூட்டும் போது பெட்டி கீழே விழுந்தது.

பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டு கட்டுகள் கத்தை கத்தையாக கீழே விழுந்தன. அவற்றுக்கு பெட்டியிலிருந்து வெளியே வர அப்படி என்னதான் அவசரமோ, தெரியவில்லை. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ச்சே..” என்று சொல்லி, பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, ரூபாய் கட்டுகளை எடுக்கத் தொடங்கினாள் செலீனா. அப்போது சம்பத் அங்கே வந்து அவளுக்கு உதவினான்.

ரூபாய் கட்டுகளை எடுத்து பொறுமையாக அடுக்கிக் கொண்டிருந்த செலீனாவிடம் கீழே விழுந்திருந்த சில கட்டுகளை எடுத்து, “இந்தாங்க மேடம். பாத்து பத்திரமா வெச்சுக்கோங்க” என்று கொடுத்தான்.

“தேங்க்ஸ்ங்க” என்று சொல்லிவிட்டு, பெட்டியை பூட்டி உள்ளே எடுத்துக் கொண்டு வந்தாள்.

இப்படி ஒரு நேர்மையான வாட்ச்மேன் நமக்குக் கிடைத்திருக்கிறாரே, அவருடைய சம்பளத்தை அடுத்த மாதம் முதல் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என செலீனா நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. சம்பத்திடம் நன்றி சொல்லும்போது அவள் முகம் இதைச் சொன்னது போல் இருந்தது.

தன் அறைக்குச் சென்று பெட்டியை வைத்துவிட்டு கைப்பேசியில் தன் தந்தையை அழைத்தாள்.

“டாடி, அங்கிள் கிட்டயிருந்து நீங்க சொன்ன மாதிரி சூட்கேஸ் வாங்கிட்டேன்”

மறுமுனையில் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

“ஓ, அப்படியா? எப்போ வர்றீங்க?”

....

“ஐ யாம் வெரி ஹாப்பி டாடி. மம்மியும் வர்றாங்களா?”

....

“ச்சே, அவங்களும் வரலாமில்ல. ஒரு நாள் வந்துட்டு போறதுல என்ன ஆகிடப்போகுது?”

....

“தெரியும்தான். இருந்தாலும்...”

....

“சரி டாடி. சீ யூ நெக்ஸ்ட் வீக்”

....

அழைப்பைத் துண்டித்து, கூடத்தில் எனக்கு நேர் எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். தன் தலைக்குப் பின்னால் இருந்த ஜன்னலை மூடி, என்னை இயக்க ஆரம்பித்தாள்.

எனக்குள் வெப்பம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்திலேயே என்னுள் மூழ்கினாள். பல விஷயங்கள் கற்றுக் கொண்டோம். நேரம் கடந்ததே தெரியவில்லை.

அவளுக்கு அயர்ச்சியாய் இருந்தது போலும். என்னை அணைத்த பின், அப்படியே தூங்க ஆரம்பித்தாள். நான் அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.

இரவு 8 மணி ஆகியிருந்தது. எழுந்து தன் அறைக்குச் சென்றாள். என்ன பார்த்தாளோ தெரியவில்லை, அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து கூடத்தில் இருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

“வாட்ச்மேன் இங்கே வாங்க” என்று சத்தமாகக் கூப்பிட்டுவிட்டு உள்ளே வந்தாள். எல்லாவற்றையும் நான் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

“இதோ வர்றேன் மேடம்” சம்பத்தின் பதில்.

உள்ளே வந்த சம்பத்தை கோபமாக முறைத்தாள் செலீனா.

“என்னாச்சு மேடம்?”

“எதுக்கு திருடறீங்க வாட்ச்மேன்?”

திடுக்கிட்டது சம்பத் மட்டுமல்ல, நானும்தான். சம்பது இப்படி செய்யக்கூடியவன் இல்லை என்றே நானும் நினைத்திருந்தேன்.

“நான் எதையும் திருடலையே மேடம்”

“பொய் சொல்லாதீங்க” செலீனாவின் குரல், அவளின் கோபம் அதிகரித்திருந்ததை அப்பட்டமாக சொல்லியது.

“என்ன மேடம், என்னையே சந்தேகப்படறீங்களே! நான் உங்க அப்பா இங்க இருந்த காலத்துல இருந்து இருக்கேன்” சமாளிக்கப் பார்த்தான் சம்பத்.

“நடிக்காதீங்க. நான் இன்னிக்கு எடுத்துட்டு வரும்போது, இந்த பெட்டியில அஞ்சு கோடி ரூபாய் இருந்தது. இப்போ பத்து லட்சம் குறையுது, ஒரு முழு கட்டையே காணோம். எங்கே போயிருக்க முடியும்?”

“நீங்க எடுத்துட்டு வரும்போது சரியா எண்ணினீங்களா மேடம்?” ஒப்புக் கொள்வது போல் தெரியவில்லை.

“திருடறதையும் திருடிட்டு, இப்போ எங்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா? போலீஸுக்குப் போன் பண்ணட்டுமா?” உச்ச ஸ்தாயியில் கத்தினாள் செலீனா.

உண்மையைக் கண்டுபிடித்துவிட்டாள், இனி பொய் சொல்லி ஏதும் ஆகப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் சம்பத் என நினைக்கிறேன்.

விருட்டென்று செலீனாவை நெருங்கி, அவள் சுதாரிப்பதற்கு முன், அவளின் கழுத்தை நெறித்தான். துடித்தாள் அவள். சம்பத்தை தடுக்க நினைத்தேன், ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. ஏதும் செய்ய முடியாதவனாய் அப்படியே இருந்தேன்.

சில நிமிடங்களில் செலீனாவின் உயிர் பிரிந்தது என நினைக்கிறேன். எனக்கு எதிரே தரையில் சரிந்து விழுந்தாள். பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தான் சம்பத்.

ப்போது மணி பனிரெண்டு. இது வரை வீட்டுக்கு யாருமே வரவில்லை. தரையில் பாவமாய் உயிரற்று கிடக்கிறாள் செலீனா. அவள் கண்கள் இன்னமும் என்னை நோக்கியே இருந்தன.

பத்து, பதினைந்து முறை செலீனாவின் செல்போன் ஒலித்தது. ஆனால் அவள் பதில் பேசும் நிலையில் இல்லை என்பது அழைத்தவருக்குத் தெரியுமா?

தன் மகளைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் அவளுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க, கூடிய விரைவில் தன் நெருங்கிய நண்பர் விக்ரமையோ, அல்லது வேறு யாரையோ அனுப்பி வைப்பார் அவளின் தந்தை என கணிக்கிறேன்.

எல்லா உண்மையும் தெரிந்த நானும் அப்படியே இருக்கிறேன். நடந்த சம்பவத்தை மறக்காமல், ஒரு வசனம்கூட மாறாமல் என்னால் சொல்ல முடியும். ஆனால் ..........


காவல்துறை அதிகாரிகள் ஒரு வெளி நாட்டு ப்ளாஸ்மா டி.வியான என் சாட்சியை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.