Tuesday 9 September 2014

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

சமீபத்தில் என் நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக விளையாடி, இப்போது ஒரே ஊரில் பணியில் இருந்தாலும், அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு அமைவதில்லை. நாம் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பது நம் கையில் மட்டும் இல்லை என்பதை நம்புபவன் நான். அன்று நண்பனைச் சந்தித்ததும் யதேச்சையாக நடந்த ஒன்றுதான்.

வழக்கமான நலம் விசாரிப்புகளில் தொடங்கிய எங்கள் உரையாடல் அப்படியே சினிமா, விளையாட்டு என பயணித்து கோவில்கள், ஆன்மிகம் வரை வந்தது. அப்போது அவன் தந்தைக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னான் நண்பன். அதை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 60, 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் நண்பரின் வீட்டுக்கு வந்திருந்தார். பார்ப்பதற்கு மிகவும் அப்பிரானியாகவும் அப்பாவியாகவும் இருந்தார்.

அவரை வீட்டினுள் வரவழைத்து கூடத்தில் உட்கார வைத்து, அவரைப் பற்றியும், வந்திருப்பதற்கான காரணத்தைப் பற்றியும் நண்பரின் தந்தை கேட்டார்.

அதற்கு அவர், தாம் திருப்பதியிலிருந்து வருவதாகவும், திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் உண்டியல் மேற்பார்வை பொறுப்பில் இருப்பதாகவும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பெருமாள் ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான் இந்த நபரை அனுப்பியிருக்கிறார் என நண்பரின் தந்தை நினைத்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

வந்திருந்த நபர், தம் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அவளுக்குத் தாலி செய்ய மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும், அந்தப் பகுதியிலுள்ள ஒரு கோவிலில் பணிபுரியும் ஒரு குருக்கள் சொல்லி அவரிடம் மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும் சொன்னார்.

நல்ல விஷயம்தான், தப்பில்லை என நினைத்து நண்பரின் தந்தை அவரிடம் ஒரு தொகையைக் கொடுக்க, வந்தவர் தம் கண்ணீரின் மூலம் நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அப்போது தொடங்கிய இந்தப் பழக்கம், அந்த நபர் ஊருக்கு வரும்போதெல்லாம் நண்பரின் வீட்டுக்குச் சென்று, நண்பரின் தந்தையையும் தாயையும் சந்தித்து திருப்பதி கோவில் பிரசாதத்தைக் கொடுக்கும் அளவுக்கு, அங்கேயே சிற்றுண்டி சாப்பிடும் அளவுக்கு வளர்ந்தது.

கேட்காமலேயே பெருமாளின் பிரசாதம் கிடைப்பதை, அதுவும் தங்கள் வீட்டிலேயே “டோர் டெலிவரி” செய்யப்படுவதை நினைக்கும்போதெல்லாம் நண்பரின் பெற்றோருக்கு ஆனந்தம். என்னே உன் கருணை, கோவிந்தா என மனமுருகினர் இருவரும்.

ஒவ்வொரு முறை வரும்போதும் திருப்பதி கோவிலுக்குள் சிறப்பு டிக்கெட்டில் அழைத்துச் செல்வதாகவும், வருவதற்கு ஒரு நாள் முன்பு தம்மிடம் சொன்னால் போதும்; மற்றவற்றை தாம் பார்த்துக் கொள்வதாகவும் சொன்னார் அவர்.

தாம் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று சொல்லி, தம் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்தக் காலத்திலும் அலைபேசி பயன்படுத்தாத ஒரு நபரா?

அந்த நபர் இத்தனை முறை அழைத்தும், தம்மை நேரில் வந்து சந்திக்கச் சொல்லி பெருமாளிடமிருந்து கட்டளை வரவில்லை. அவர் உத்தரவிட்டால்தானே அவரைத் தரிசிக்க முடியும்?

சென்ற வாரம் அந்த நபர் நண்பரின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது தம் மகனுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், திருமண செலவுகளுக்காக மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும் சொன்னார். உடனே நண்பரின் தந்தை ஒரு தொகையை அவரிடம் கொடுத்தார்.

“கல்யாணத்துக்குன்னு நான் கேட்கும்போதெல்லாம் நீங்க தயங்காம எனக்கு உதவி பண்றீங்களே.. உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ணப்போறேன்..”

“இதுல என்ன இருக்கு சார்.. நல்ல விஷயம்தானே.. இத்தனை நாள் பழகியிருக்கோம்.. இதுகூட பண்ண மாட்டோமா?” என்று நண்பரின் தந்தை சாதாரணமாகச் சொல்ல, அவரின் கைவிரல்களை இறுகப் பற்றிக் கொண்டு மறுபடியும் கண்ணீரின் மூலம் தம் நன்றியைத் தெரிவித்தார் அந்த நபர்..

அப்போது அவருக்குள் ஏதோ தோன்ற, தம் பையில் இருந்து பத்து டிக்கெட்டுகளைக் எடுத்துக் காண்பித்து, அவை ஏதோ ஒரு சிறப்பு சேவைக்கான டிக்கெட்டுகள் என்றும், ஒரு டிக்கெட்டின் மதிப்பு மற்றவர்களுக்கு 500 ரூபாய்க்கும் மேலாக இருந்தாலும், கோவிலில் பணிபுரிபவர்களுக்கு வெறும் 350 ரூபாய்தான் என்றும் சொன்னார்.

மேலும், வெள்ளிக்கிழமையன்று தாம் சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய வேலை இருப்பதால், விருப்பமிருந்தால் திரும்பும் வழியில் தாமே அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அன்று திருப்பதியிலேயே தம்முடனேயே தங்க வைப்பதாகவும் நண்பரின் பெற்றோரிடம் சொல்ல, அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் உறவினர்கள் சிலரிடம் உடனடியாக இந்த விஷயத்தைச் சொல்ல, அவர்கள் தாங்களும் வருவதாகச் சொன்னதால், நண்பரின் பெற்றோர் ஆறு டிக்கெட்டுகளை வாங்கினர்.

தனியாக ஒரு வேனை ஏற்பாடு செய்துகொண்டு, அதில் திருப்பதி சென்று பெருமாளைத் தரிசிக்கலாம் என முடிவெடுத்தனர் நண்பரின் பெற்றோரும், அவர்களது உறவினர்களும்.

இருந்தாலும், திரும்பும்வழியில் தாம் அவர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வதாகச் சொன்னார் அந்த நபர்.

வெள்ளிக்கிழமை. திட்டமிட்டபடியே நண்பரின் உறவினர்கள் வந்தாகிவிட்டது. மாலை வரை பொறுத்துப் பார்த்து, அதற்குப் பிறகு அந்த நபருடைய தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டார் நண்பரின் தந்தை. அதிர்ந்து போனார். அப்படி ஒரு தொலைபேசி எண்ணே இல்லையென்றும், தொடர்பு கொண்ட எண்ணை சரிபார்க்கவும் என்றும் தெலுங்கில் சொன்னது தொலைபேசி. மனமுடைந்து போனார் நண்பரின் தந்தை.

அந்த நபருடைய தொலைபேசியில் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்புண்டு என்று தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக் கொண்டு, எப்படியும் மறுநாள் திருப்பதி கோவிலுக்குப் போகப்போகிறோமே, அங்கேயே சென்று அவரைச் சந்திக்கலாம் என நினைத்தார்.

திட்டமிட்டபடி திருப்பதி கோவிலுக்குச் சென்று, திருவேங்கடமுடையானைத் தரிசித்தனர் ஆறு பேரும். திவ்விய தரிசனம். காணக் கண் கோடி வேண்டும். சில நொடிகளில் “ஜருக்கண்டி ஜருக்கண்டி” என்ற குரல் கேட்க, அங்கிருந்து வர மனமே இல்லாமல் பெருமாளிடம் விடைபெற்று வெளியே வந்தனர்.

நேராக உண்டியல் பகுதிக்கு வந்து அந்த நபரின் பெயரைச் சொல்லி விசாரித்தார் நண்பரின் தந்தை. அப்படி ஒரு நபர் அங்கு இல்லை என்பதை அங்கு இருந்தவர்கள் சொன்னதை அவரின் மதி ஏற்றாலும், மனம் ஏற்கவில்லை.

இத்தனை நாட்கள் நல்லவனாக நடித்து, தம்மிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சென்று இப்படி ஏமாற்றிவிட்டானே என பொருமியிருக்கிறார். பணம் போனால் பரவாயில்லை, நம்ப வைத்து ஏமாற்றிவிட்டானே என்று நொந்துபோயிருக்கிறார் அவர். பாவம்.

சரி ஆனது ஆகட்டும், இவரால்தான் திருப்பதிக்கு வந்து பெருமாளைத் தரிசித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் என உறவினர்கள் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தினர். நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

இந்த விஷயத்தைக் கேட்டதும் அந்த நபரின் மீது எனக்கு கோபம் வந்தது. நம்பிக்கை துரோகம் செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது? அவரை, இல்லையில்லை, அவனை மனதுக்குள் திட்டித் தீர்த்துவிட்டு நண்பனிடம் விடைபெற்று வீட்டை நோக்கி வந்தேன். வழிநெடுக இதே சிந்தனை.

அப்போது பழைய பக்தித் திரைப்படங்களில் வந்த சில காட்சிகள் என் நினைவில் தோன்றி மறைந்தன.

அந்தத் திரைப்படங்களில் கடவுள் மனித வேடத்தில் வந்து பக்தனிடம் இருந்து ஏதோ ஒரு பொருளை அபகரித்துச் செல்வார் அல்லது ஒளித்துவைத்து விடுவார் அல்லது உடைத்து விடுவார்.

வந்தவர் கடவுள்தான் என்பது தெரியாமல் அந்த பக்தர் “கடவுளே என்னை இப்படியா சோதிப்பது?” என்று நியாயம் கேட்பார். கடைசியில் கடவுள் அந்த பக்தரிடம் “என்னை நன்றாகப் பார்” என்று சொல்லி கோவிலுக்குள் சென்று மறைந்துவிடுவார். அப்போதுதான் வந்தது சாட்ஷாத் கடவுளே என்று அந்த பக்தருக்குத் தெரியும். உடனே அவர் மனமுருகி ஒரு பாட்டு பாட, திரைப்படம் இனிதே முடிவடையும்.

இதுபோல், நண்பரின் வீட்டுக்கு திருப்பதியிலிருந்து வந்திருந்தவர் ஏன் கடவுளாக இருக்கக்கூடாது என நான் யோசித்தேன். மேலும், எப்போதோ, எந்த ஜென்மத்திலோ தாம் தவறான வழியில் சம்பாதித்த இந்தத் தொகையை, யாரிடமோ தாம் கடனாக வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் விட்டுவிட்ட இந்தத் தொகையை இப்போது கடவுளே வாங்கிக் கொண்டு போய்விட்டார் என ஏன் நண்பரின் தந்தை யோசிக்கக்கூடாது என நான் யோசித்தேன். இப்படி யோசித்தால் எதிர்பார்ப்பும், கவலையும் குறைந்து நிம்மதி நிலைக்குமே?

ஒரு வேளை எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால்தான், இப்படி ஒரு அனுபவம் வாய்த்தால்தான் அவரின் மனநிலையும், வேதனையும் புரியுமோ?

எது எப்படியோ, என்ன நடந்தாலும் “போற்றுவோர் போற்றலும், தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் பெருமாளுக்கே” என்று விட்டுவிடுவதுதானே நல்லது?


ஏடுகுண்டலவாடா, வெங்கடரமணா, கோவிந்தா கோவிந்தா!

No comments:

Post a Comment