Wednesday 23 July 2014

மறக்க முடியாத முகங்கள் – 11

மறக்க முடியாத முகங்கள் – 11:

“Humans are the most dangerous parasites on earth”

“மனிதர்களே இந்த பூமியிலுள்ள அதிபயங்கரமான ஒட்டுண்ணி”
இது நான் நம்பும் வாக்கியம். மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை சுருங்கியது. எத்தனையோ உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்தேவிட்டன.

“பலம், அறிவு போன்றவை அதிகமாகக் கிடைக்கப்பெற்ற ஒரு இனம் கட்டுக்கடங்காமல் பெருகும்போது, பலத்திலும் அறிவிலும் குறைந்த இனங்கள் சில அழிவது இயற்கை. தவிர்க்க முடியாதது” என்று சிலர் சொல்லக்கூடும். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், நாம் செய்யும் தவறுகளை, இரக்கமற்ற, கொடூரமான செயல்களை நியாயப்படுத்தவே இது அதிகம் சொல்லப்படுகிறது.

எறும்புகள், பேக்டீரியாக்கள், கோழிகள் ஆகியவை எண்ணிக்கையில் மனிதர்களைவிட அதிகமாக இருப்பதாக இணையத்தில் படித்தேன். இந்த மூன்றுக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது என எனக்குத் தோன்றியது.

எறும்புகளால் நமக்கு எந்த ஒரு லாபமோ, உபயோகமோ இல்லை. சீனா போன்ற சில பகுதிகளில் எறும்புகளை சாப்பிடுகிறார்களே ஒழிய மற்ற இடங்களில் எறும்புகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மேலும், இவற்றை வைத்து எந்த ஒரு அழகு சாதனப் பொருளோ, உடையோ தயாரிக்க முடியாது என்றே நினைக்கிறேன். அதனால், அவற்றை அழிக்க வேண்டியதில்லை.

பேக்டீரியாக்களை நாம் எவ்வளவு அழித்தாலும் அவை பிறந்துகொண்டு, வளர்ந்துகொண்டுதானிருக்கும். எதுவும் செய்யமுடியாது. அவை நம்மை அழிக்காமல் இருக்காதவரை சரிதான்.

கோழிகளை உணவாக உட்கொள்வதால் ஒரு புறம் அழித்தாலும், மறு புறம் அவற்றைப் பெருக்கிக் கொண்டு, பின் அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால், இவை மனிதர்களைவிட அதிகமாக இருக்கின்றன.

இந்த மூன்றும் ஏன் மனிதர்களைவிட அதிகமாக இருக்கின்றன என்பது இப்போது புரிந்ததா? ஒரு உயிரினம் நமக்குத் தேவையில்லை என்றால், அந்த உயிரினத்தால் நமக்கு எந்த லாபமோ, உபயோகமோ இல்லை என்றால், அந்த உயிரினம் வாழலாம். இதுதான் பூமியின் மன்னர்களாக நினைத்துக் கொண்டிருக்கிற மனிதர்களின் நினைப்பு என தோன்றுகிறது.

மற்ற உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கு நாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை, ரொம்பவே சுலபமான காரியம்தான். பிளாஸ்டிக் பாட்டில்கள், நகங்கள், இவ்வளவு ஏன் தலைமுடி கூட போதும்.

நேற்று மாலை சுமார் 7 மணி இருக்கும். என் மனைவி எங்கள் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு புறா தரையில் அசையாமல் சிலை மாதிரி கிடந்தது கண்ணில் பட்டது. உயிருடன்தான் இருந்தது. ஆனால் பறக்கவோ நடக்கவோ முடியவில்லை, பாவம்.

அவள் என்னிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, நான் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தேன். தலை குனிந்தவாறு நின்றுகொண்டிருந்தது அந்தப் புறா. பதறினேன் நான். சில ராகி மணிகளை அதற்குப் பக்கத்தில் போட்டுவிட்டு வேகமாக வீட்டுக்குள் வந்தேன்.

பிராணிகளை, பறவைகளை பாதுகாக்கும், மீட்டெடுக்கும் ப்ளூ க்ராஸ் போன்ற சேவை மையங்களின் தொலைப்பேசி எண்களையும், கைப்பேசி எண்களையும் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒவ்வொன்றாகத் தொடர்பு கொண்டேன். சில எண்கள் உபயோகத்தில் இல்லை, சிலர் வேறு ஒரு எண்ணைக் கொடுத்து, அந்த எண்ணை அழைக்கச் சொன்னார்கள். இது இப்படியே போய்க் கொண்டிருக்க, கடைசியில் BBMP-ன் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு பிரிவின் கைப்பேசி எண் கிடைத்து, அப்போது மணி இரவு 8 ஆகியிருந்தது.

அந்த எண்ணை அழைத்தேன். அழைப்பை ஏற்றவரின் பெயர் ஷரத். விஷயத்தைக் கேள்விப்பட்டு, காலை ஒருவரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். ஆனால், நான் அவரை வற்புறுத்தியதால், ஒருவரை இன்றே அனுப்பிவைப்பதாகச் சொன்னார். அவரிடம் என்னை அழைத்து, வீட்டுக்கு வரும் வழியைக் கேட்கச் சொல்வதாகவும் சொன்னார். எனக்கு ஒரே ஒரு சதவீதம் நம்பிக்கை இருந்தாலும், இந்த நேரத்தில், ஒரு புறாவிற்காக யார் வரப்போகிறார் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. மனிதர்களையே மதிக்காத மனித விலங்குகள் அதிகமாகி வரும் இந்த காலகட்டத்தில், புறாவுக்காகவா வரப்போகிறார்?

அந்தப் புறா ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தால், ஒரு வேளை பூனை ஏதாவது வந்து அடித்துவிடப்போகிறது என்று பயந்தேன். உடனே ஒரு அட்டைப் பெட்டியை பரணையில் இருந்து எடுத்து வைத்துவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்றேன். அந்தப் புறாவை இன்றிரவு அந்த அட்டைப் பெட்டியில் வைத்து, வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு வந்து பார்த்துக் கொள்ளலாம், காலை அவர்கள் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன்.

மாடிக்குச் சென்று அந்த புறாவை மெதுவாகத் தூக்கினேன். பஞ்சு போல் இருந்தது அந்தப் புறா. இதற்கு முன் புறாவை நான் தூக்கிக் கொஞ்சியதில்லை. இன்றுதான் ஒரு புறாவை முதன்முதல் தூக்குகிறேன் என்றாலும், கொஞ்சும் நிலையில் அதுவோ, நானோ இல்லை. சில மணி நேரங்களாக எங்குமே நகராமல் ஒரே இடத்தில் நின்றிருந்ததால் அது மிகவும் சோர்ந்து போயிருந்தது. தலையைத் தூக்கிப் பார்க்கக்கூட முடியவில்லை. வாயிருந்தால் நிச்சயம் கத்தி கதறியிருக்கும் அந்தப் புறா. வாயிருக்கும் நான் மனதுக்குள் கதறினேன்.

அதை அப்படியே தூக்கிக் கொண்டு படிக்கட்டை நோக்கி மெதுவாக நடந்தேன். மனம் கடவுளின் பெயரை சொல்லிக் கொண்டே, அவரின் கருணையை வேண்டிக்கொண்டே இருந்தது.

அப்போது கையிலிருந்து விடுபட்டு தரையில் விழுந்தது அந்தப் புறா. எழுந்து நடக்கப் பார்த்தது, பறக்கப் பார்த்தது. ஆனால் முடியவில்லை, பாவம். தத்தித் தத்தி ஒரு இடத்தில் சென்று நின்றது. தலை சாய்ந்தது. அவ்வளவு சோர்வாக இருந்தது, பாவம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அந்த நேரத்தில் எனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பரத் என்ற நபர். இந்தப் புறாவைப் பற்றி ஷரத் சொன்னதாகச் சொன்னபோது ஒரு சிறு நம்பிக்கை என்னுள் பூக்க ஆரம்பித்தது. வீட்டுக்கு வரும் வழியை அவருக்குச் சொன்னேன். அவர் வீட்டுக்கு வந்து சேரும்போது மணி சுமார் 9:30 ஆகியிருந்தது.

வேகமாக மொட்டை மாடிக்குச் சென்று அந்தப் புறாவை பரத்திடம் காட்ட, அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டார். உடனே அதன் காலைப் பார்த்தபோது, அந்த பயங்கரம் தெரிந்தது. புறாவின் கால்களில் உள்ள விரல்களில் தலைமுடி எசகுபிசகாகச் சிக்கிக் கொண்டு, விரல்களை நெருக்கியிருந்தது. முடிச்சுப் போட்டது போல் உறுதியாக இருந்தது அந்தக் கட்டு. அந்த விரல்களுக்கு இரத்தம் சென்று கொண்டிருந்ததோ இல்லையோ தெரியவில்லை, கொஞ்சம் வெள்ளையாக இருந்தது.

அந்தப் புறாவை வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு வந்து, கத்தியை உபயோகப்படுத்தி அந்த முடிக்கட்டை அறுத்து எறிந்தோம். நேராக வைத்தால், கிட்டத்தட்ட 4 அடி வரை நீண்டிருக்கும் அந்த முடி. இப்படி இரண்டு கால்களிலும் இருந்தது. எவ்வளவு வலித்திருக்கும் அந்தப் புறாவுக்கு என்று நினைத்தபோது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது.

அந்தப் புறா மிகவும் சோர்வாக இருந்ததால், அதன் அலகைத் திறந்து அதனுள் ராகி மணிகளை உள்ளே தள்ளினார். பிறகு, உள்ளங்கையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, புறாவின் அலகைத் திறந்து அதனுள் விட்டார். ஒரு அம்மா, தன் குழந்தையைக் கையாள்வதைப்போல் அந்தப் புறாவை பரத் கையாண்டார். பார்க்க பிரமிப்பாய் இருந்தது.

ஒரு வழியாக அந்தப் புறாவை ஓரளவுக்குத் தேற்றியாகிவிட்டது. அது நிமிர்ந்து இரண்டு அடி எடுத்து வைத்ததைப் பார்த்தபோது, ஒரு குழந்தை முதல் அடிகளை எடுத்து வைத்ததைப் பார்த்ததுபோல் இருந்தது. பெருமகிழ்ச்சியான தருணம். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். உயிர் போய் உயிர் வந்தது.

பரத் அந்தப் புறாவைத் தன் வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகச் சொன்னார். அப்போது அவர் வீடு எங்கிருக்கிறது என கேட்டபோது பன்னார்கட்டாவில் இருப்பதாகவும், அங்கிருந்துதான் இந்தப் புறாவுக்காக வந்ததாகவும் சொன்னார். ஆச்சரியத்தில் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நின்றேன்.

பன்னார்கட்டா எங்கள் வீட்டிலிருந்து குறைந்தது 20 கிலோமீட்டர் தூரம் இருக்கும். பரத், அவ்வளவு தொலைவிலிருந்து இந்தப் புறாவிற்காக இரவு நேரத்தில் தன் இரு சக்கர வாகனத்தில் வந்தது சாதாரண விஷயமாக எனக்குப் படவில்லை. ஒரு வேளை நான் அந்த நிலையில் இருந்திருந்தால், அடுத்த நாள் வருவதாக தட்டிக் கழித்திருக்கவும் வாய்ப்புண்டு.

“எப்படி இவ்வளவு தூரத்துல இருந்து, இந்த நேரத்துல இங்க வந்தீங்க? ரொம்ப பெரிய மனசு வேணும் சார். ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்” என்று பரத்திடம் சொன்னேன்.

அதற்கு அவர், “இதுல என்ன இருக்கு சார்? எனக்கு புறாக்கள்னா ரொம்பப் பிடிக்கும். அதுக்காகத்தான் வந்தேன். வீட்டுல 50, 60 புறாக்கள் கூடு கட்டி வாழ்ந்துட்டு இருக்குங்க. அதோட இதை விட்டுடறேன். கவலைப்படாதீங்க. நான் நல்லபடியா பாத்துக்கறேன்” என்றார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? ஆச்சரியம் கலந்த ஆனந்தம். கைச் செலவுக்காக ஒரு சிறு தொகையை அவருக்குக் கொடுத்தேன். ஏதோ என்னால் முடிந்த ஒரு சின்ன காரியம்.

ஒரு அட்டைப்பொட்டியில் காற்றோட்டத்துக்காக சில துளைகளைப் போட்டு, அதனுள் இந்தப் புறாவை வைத்து எடுத்துச் சென்றார். ஏதோ இமயமலையையே என் தலையிலிருந்தும், மனதிலிருந்தும் இறக்கி வைத்துவிட்டதுபோல் இருந்தது.

எதேச்சையாக ஏதோ ஒரு இடத்தில் போடப்பட்ட தலைமுடி, ஒரு புறாவை எத்தனை துன்பத்துக்குள்ளாக்கியது பாருங்கள். மற்றவர்களின் மேல் அக்கறை இல்லாமல் எத்தனையோ பேர் இருக்க, புறாவுக்காக இரவு நேரத்தில் இருபது கிலோமீட்டர் தாண்டி வந்து, அதனைக் காப்பாற்றி மீட்டெடுத்த பரத்தின் முகம் மறக்க முடியாத முகமே!

BBMP-ன் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு பிரிவு மற்றும் பரத் ஆகியோரின் கைப்பேசி எண்கள் பின்வருமாறு:

BBMP-ன் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு பிரிவு – 9880108801

பரத் - 9036660171

Wednesday 16 July 2014

மறக்க முடியாத முகங்கள் – 10

மறக்க முடியாத முகங்கள் – 10:

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் – இந்த மூன்றும்தான் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்களாக, காலங்காலமாகச் சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் குறிப்பிடப்படாததாலோ என்னவோ தெரியவில்லை, தண்ணீரின் அருமையை, தேவையை, முக்கியத்துவத்தை நாம் உணரவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு பக்கம், ஏரிகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றி, அந்த நிலங்களில் கட்டிடங்கள் கட்டுகிறோம். இப்படி கட்டப்படுகிற கட்டிடங்களின் அடித்தளங்கள் உறுதியாக இல்லாததால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படும்போது சில நாட்கள் வருந்துகிறோம். அடுத்த சில நாட்களில் வருந்துவதற்கு, சண்டை போடுவதற்கு வேறு ஏதாவது ஒரு விஷயம் கிடைக்கும். அப்போது இதை மறக்கிறோம்.

இன்னொரு பக்கம், மரங்களை வெட்டி அந்த இடத்தை சமப்படுத்திவிட்டு, கட்டிடங்கள் கட்டுகிறோம். மரங்கள் குறைந்துவருவதால், மழையின் அளவு வருடாவருடம் குறைந்துகொண்டே வருகிறது. இருக்கும் மிச்ச சொச்ச மரங்களால் கிடைக்கும் மழையும் சரியான நீர்ப்பிடிப்பு பகுதிகள் இல்லாத காரணத்தால் வீணாகிறது.

அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகத்தான் வரப்போகிறது என்று பல ஆண்டுகளாக பல அறிஞர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படி இருந்தும், தண்ணீரை சேமிக்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

வீடுகளைக் கட்டுகிறோம், தண்ணீர்த் தொட்டிகளைக் கட்டுகிறோம். ஆனால், அந்தத் தொட்டிகளில் பிடித்து, சேமித்து வைக்க தண்ணீர் கிடைக்காமல், விலை கொடுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

மூச்சுக்கு முன்னூறு முறை “கட்டிக் காப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் ஒரு பகுதியை மட்டும் செவ்வனே செய்து வருகிறோம். கட்டிக் கொண்டே போகிறோம். காக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் இன்றைய நிலைமை.

இந்தியாவில் முதன்முதலாக மழை நீரை சேமிப்பதற்காக ப்ரத்யேகமாக ஒரு திட்டம் தீட்டி, அதை ஓரளவுக்கு வெற்றிகரமாக நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு என்றே நினைக்கிறேன். இப்போது தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இது பின்பற்றப்படுகிறது என்பது தெரியவில்லை.

பெங்களூரைப் பொறுத்தவரையில், புதிதாகக் கட்டப்படுகிற அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டியாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பார்கள். இது ஏட்டில் இருந்தாலும், இதில் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், இந்த மழை நீர் சேகரிப்பு தொட்டிகளுக்கெல்லாம் முன்பாகவே, நமக்குத் தெரியாமலே நாம் மழை நீர் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். எப்படி தெரியுமா? எல்லாம் நம் சாலைகளில்தான்.

முதல் கட்டமாக, மழைக்காலத்தின் முதல் மழையால் சாலையில் குண்டும், குழியும், பள்ளமும் ஏற்படும். சில சமயம், நிலவில் காணப்படுகிற பள்ளங்களைக் காட்டிலும் நம் சாலைகளில் அதிக பள்ளங்கள் காணப்படும்.

இரண்டாம் கட்டமாக, அடுத்தடுத்த மழையால் அந்தப் பள்ளங்களில் மழை நீர் சேர்ந்துவிடும். இப்படித்தான் நமக்குத் தெரியாமலே மழை நீர் சேகரிப்பு என்பது நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள பிரதான சாலையில் சில பல பள்ளங்கள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை இது.

இந்தப் பிரதான சாலையின் ஒரு பகுதியில் இருக்கிற பள்ளங்கள் நாளடைவில் பெரிதாகி, தார் சாலைக்கு அடியில் போடப்பட்டிருக்கிற குடிநீர்க் குழாய்களில் ஒன்று தேய்ந்து, அதில் ஓட்டை விழுந்துவிட்டது. அதன் வழியாக தண்ணீர் வழிந்து சாலையில் இருக்கிற பள்ளத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சாலையை ஒட்டியபடி உள்ள ஒரு நிலத்தில், பாதி கட்டப்பட்டு, பின் அப்படியே விடப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. அந்த நிலத்தின் சொந்தக்காரர் ஏதோ ஒரு வழக்கைப் போட்டு கட்டிட வேலைகளை நிறுத்திவிட்டதாகத் தகவல். கிட்டத்தட்ட மூன்று தளங்கள் கட்டப்பட்டு, இப்போது எலும்புக்கூடு போல் நின்றுகொண்டிருக்கிறது இந்தக் கட்டிடம். இன்னமும் வெறும் செங்கல், சிமெண்ட் சகிதம் காட்சியளிக்கிறது.

பக்கத்தில் ஒரு காலி இடம் இருக்கிறது. காலி இடம்தான் என்றாலும் அதில் தார்பாலின் டெண்ட் போட்டு குடியிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று காலை இந்தப் பிரதான சாலை வழியாக செல்ல நேர்ந்தது. நான் மேலே குறிப்பிட்ட, குழாயிலிருந்து வழிந்து தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிற பள்ளத்துக்குப் பக்கத்தில் ஒரு ஆண், ஒரு சிறுமி உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தார்பாலின் டெண்ட்களில் குடியிருப்பவர்கள் என்றே நினைக்கிறேன். சீவாத பரட்டைத் தலை, கிழிந்த உடுப்புகள், பழுப்பு நிற பற்கள் என வறுமையின் அடையாளங்கள் அவர்களின் முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

இந்த இருவரும் சேர்ந்து, பள்ளத்தில் வழிந்து கொண்டிருந்த தண்ணீரை மொண்டு ஒரு பக்கெட்டில் ஊற்றிக் கொண்டிருந்ததை இன்றுதான் கவனித்தேன். அவர்களுக்குப் பக்கத்திலேயே இருந்த சில காலி பக்கெட்டுகள், சொல்வதற்கு ஏராளமான கதைகளுடன், மௌனமாய் இருந்தன.

இந்தக் காட்சியைப் பார்த்ததும் உள்ளூர உறுத்த ஆரம்பித்தது. மனிதனாகப் பிறந்ததைவிட கொடுமையான ஒரு தண்டனை கிடையாது என்று தோன்றியது. இது எனக்கு மேலும் இரண்டு விஷயங்களைப் புரிய வைத்தது.

ஏற்கனவே தண்ணீரை விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தாகிவிட்டது. வசதி படைத்தவர்களுக்கு விலை ஒரு பொருட்டில்லை. ஆனால், மற்றவர்களுக்கு?

அனைவருக்கும் பொதுவான விஷயங்களான தண்ணீர், காற்று போன்றவை எப்போது சிலருக்காக மட்டுமே என்று மாறுகிறதோ, அப்போது நாம் தோற்க ஆரம்பிக்கிறோம். அப்போது மனிதர்களுக்கும், எல்லை பிரித்து ஆளும் மிருகங்களுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

நியாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் சாலையில் தேங்கி நிற்கிற அழுக்குத் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு செல்கிறவர்கள் அதிக அளவில் இருக்கும் வரை எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. அவர்களின் நியாயமான சாபம், வயிற்றெரிச்சல், கோபம் அந்த நாட்டை வளரவிடாது. இது முதல் விஷயம்.

இரண்டாவது விஷயம் தண்ணீரின் முக்கியத்துவம். எந்த ஒரு பொருளாக, உறவாக இருந்தாலும், அதன் அவசியத்தை, முக்கியத்துவத்தை அது இல்லாதபோதுதான் நாம் அறிந்து கொள்வோம். பல வகையான மரங்களை, விலங்குகளை அழித்தாகிவிட்டது. தண்ணீரையாவது விட்டுவைப்போமா? என்னிடம் பதில் இல்லை.


இந்த இரண்டு விஷயங்களை எனக்கு உணர்த்திய அந்த ஆணின் முகமும், சிறுமியின் முகமும் மறக்க முடியாதவையாகும்!

Wednesday 2 July 2014

ஒரு பக்கக் கதைகள் 01 - 05 (December 2013 - April 2014)

ஒரு  பக்கக் கதைகள்:

1.   உயிரைக் காணவில்லை


வீடு முழுக்கத் தேடியாகிவிட்டது. ரவியின் உயிரினும் மேலான அவள், எங்கே போயிருப்பாள், தெரியவில்லை. அவள் இல்லாமல் இவன் வெளியே சென்றதில்லை. ஆனால் இன்று அவளைக் காணவில்லை. பதறியது மனம்.

சமையலறையில் முதலில் தேடினான். அங்கு காலையில் சமைத்த சாம்பாரின் மணம் இருந்ததே தவிர, அவன் மனம் இல்லை.
பூஜையறையில் தேடினான். அப்போது கடவுள் அங்கு இருந்தாரே தவிர பக்தை இல்லை.

அவளுடன் செலவழித்த.. இல்லையில்லை.. பகிர்ந்த அந்த சமயங்கள் எத்தனை அழகு.. எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை நினைத்துக் கொண்டான். தேடலைத் தொடர்ந்தான்.

படுக்கையறைக்குச் சென்று பார்த்தான். அங்கும் இல்லை.
கட்டிலுக்குக் கீழே பார்த்தான். அங்கு கிடத்தப் பட்டிருந்த அவளைப் பார்த்து பயந்து, துடிதுடித்தான். குனிந்து எடுத்து, அவளைத் தன் கையில் ஏந்தினான்.

அப்பாடா என்று சொல்வதா? இல்லை, ஐயோ என்று சொல்வதா? தெரியவில்லை, நிம்மதியும், சோகமும், கோபமும் பெருக்கெடுத்து ஓடியது.

அவளைக் கையில் வைத்துக் கொண்டே, அவசர அவசரமாக முதலுதவி செய்தான். உயிர் முழுவதுமாகப் போயிருக்கவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

ஏய் சாந்தி, ஏன் என்னோட ஆன்ட்ராய்ட் போனை கீழே போட்டிருக்கே? சார்ஜ் சுத்தமா இல்லஎன்று கோபமாகக் கத்திக் கொண்டே தன் உயிரினும் மேலான கைப்பேசியைச் சார்ஜில் போட்டு, மனைவியுடன் சண்டை போட ஆயத்தமானான்.


2.       நேரம்


“என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும் சொல்லு?” என்று தன் காதலன் விமலிடம் கேட்டாள் ராதா. அதற்கு விமல், “ரொம்பப் பிடிக்கும்டி. என்ன திடீர்னு கேக்கற?” என்றான்.

“இந்த மாதிரி மொட்டையா பேசி மழுப்பாதடா. எவ்ளோ பிடிக்கும்னு ஒழுங்கா சொல்லு”

“ஏன் இப்படி விடாம இதையே கேட்டுக்கிட்டு இருக்க?” என்றான்.

“இல்ல, இன்னிக்கு என் ஃப்ரெண்ட் பிரியாவ பாத்தேன். அவளுக்கு அவளோட பாய்ஃப்ரெண்ட் ராகேஷ் ஒரு வைர மோதிரம் வாங்கி கொடுத்திருக்கான். நீ இந்த மாதிரி எதுவுமே வாங்கி தரலைராதாவின் முகத்தில் ஒரு சின்ன, செல்ல கோபம்.

“அந்த ராகேஷ் என் ஃப்ரெண்ட் தான். அவன் அடிக்கடி பிரியாவ பாக்க வர்றானா? அது தெரியுமா உனக்கு?”

“இல்ல, வேலை அதிகமாம், அதனால ரெண்டு, மூணு வாரத்துக்கு ஒரு தடவை தான் பாக்க வர்றானாம்”

“தெரியும் எனக்கு. நாங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனில தான் வேலை செய்யறோம். எனக்கும் அவ்ளோ வேலையெல்லாம் இருக்கு. நான் டெய்லி உன்னை பாக்காம வீட்டுக்கு போறதில்ல. அவன் மோதிரம் வாங்கறதுக்கு காசு செலவுபண்ணான். ஆனா, காச எப்பொ வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம். நான் உனக்காக என்னோட நேரத்த செலவுபண்றேன். அது போச்சுன்னா திரும்ப கிடைக்குமா சொல்லு?” என்று கேட்டான்.

இதை சற்றும் எதிர்பாராத ராதா விமல் சொன்ன வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து, “தெரியும்டா, சும்மா தான் கேட்டேன்” என்று புன்னகைத்தாள்.


3.       இல்லை


கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியே வந்துக்கொண்டிருந்தனர் நண்பர்களான ரவியும், மனோகரும். “நல்ல தரிசனம்டா இன்னிக்கு. இப்படியே ஒவ்வொரு தடவையும் அமைஞ்சுட்டா நல்லாருக்கும் என்று ரவியிடம் சொன்னான் மனோகர்.

“ஆமாம்டா. சரி அது கிடக்கட்டும், நீ சீக்கிரம் வா. கோவில் வாசல்ல இருக்கற அந்த வயசான பிச்சைக்காரங்க நம்மள பாத்தா, அய்யா, சாமி, பிச்சை போடுங்கன்னு தொல்லை பண்ணுவாங்க என்றான் ரவி.

“அவங்க ஏன் அப்படி கேக்கறாங்கன்னு தெரியுமா?

எதுக்கோ கேக்கறாங்க. அநேகமா அவங்ககிட்ட எதுவும் இல்லன்னு அப்படி கேக்கறாங்கன்னு நினைக்கிறேன் என்றான் ரவி.

அதற்கு மனோகர், “இல்லைனு அவங்க கேக்கும்போது, நீயும் இல்லைனு சொன்னா, உனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டான் மனோகர். சுளீரென்று உரைத்தது ரவிக்கு.

கோவிலுக்கு வெளியே வந்ததும் தங்களால் முடிந்த பணத்தை பிச்சைக்காரர்கள் தட்டுகளில் போட்டு, வீட்டை நோக்கிச் சென்றனர் இருவரும்.

  
4.   அவர்களும் குழந்தைகளே


ஏதோ கோபத்துடன் வீட்டுக்கூடத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஷிடம் அவன் மனைவி மீனா, “என்னங்க? உங்க அப்பாக்கிட்ட ஏதோ சொல்லி சத்தம் போட்டுட்டு வர்றீங்க? என்னாச்சு?” என்று கேட்டாள்.

அதற்கு ராஜேஷ், “ஒரே விஷயத்தை பத்து, பதினொறு தடவை சொல்ல வேண்டியிருக்கு. எத்தனை தடவை சொல்றது ஒரு செவிட்டு மிஷின் வாங்கித்தர்றேன், போட்டுக்கோன்னு. கேட்கவே மாட்டேங்கறாங்கஎன்றான் எரிச்சலுடன்.

அப்படியா? சரி, காலைலேர்ந்து நம்ம பையன் சித்தார்த்கிட்ட ஏதோ போராடிக்கிட்டு இருக்கீங்களே, என்ன விஷயம்?” அமைதியாகக் கேட்டாள் மீனா.

அதுவா, நானும் அவன் வாயிலேர்ந்து அப்பான்ற வார்த்தையை கேக்கணும்னு முயற்சி பண்ணிட்டிருக்கேன். சொல்லவே மாட்டேங்கிறான்ராஜேஷின் முகத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது.

ஒன்றரை வயசு பையன் உடனே சொல்லிடுவானா? நாமதான் பொறுமையா இருக்கணும். உங்க அப்பாவும் நீங்க குழந்தையா இருந்தப்போ உங்ககிட்ட இப்படித்தானே பொறுமையா பேசியிருப்பார்? அவர்கிட்டே போய் இப்படி சத்தம் போடணுமா?” கணிவுடன் கேட்டாள் மீனா. உரைத்தது ராஜேஷுக்கு.

மேலும் தொடர்ந்தாள்குழந்தைங்க மாதிரிதான் வயசான பெரியவங்களுக்கும் எல்லாமே உடனே புரிஞ்சிடாது, சரியா நடக்க முடியாது, பாக்க முடியாது, கேட்க முடியாது. ஏற்கனவே உங்க அப்பாவுக்கு காது சரியா கேட்க மாட்டேங்குது, பாவம். இது உங்களுக்கும் தெரியும். இந்த நேரத்துல நீங்க அவரோட நிலைமையை புரிஞ்சு நடந்துக்க வேணாமா? நம்மள விட்டா அவங்களுக்கு வேற யார் இருக்காங்க?”

தான் செய்த தவறை உணர்ந்தான் ராஜேஷ். முதியவர்கள் உடம்பாலும், மனதாலும் குழந்தைகள்தானே!


5.   ஒரு வேளை நாய்க்கு தெரியுமோ?


ஜெயமுருகன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பேய் படத்தை, தன் தோழி விமலாவுடன் பார்த்துவிட்டு, வெளியே வந்து தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினாள் கீதா. மணி இரவு 9 ஆகியிருந்தது.

“பயங்கரமா இருந்துச்சுடீ இந்தப் படம். நெறைய இடத்துல பயந்து கண்ணை மூடிக்கிட்டேன்” என்றாள் கீதா.

பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்த விமலா, “இதுக்குப்போய் பயந்துட்டியா? இன்னும் எவ்வளவோ இருக்கு” என்றாள்.

“படத்துல ஒரு சீன்ல, பேய் உக்காந்துட்டு இருக்கும் ஒரு வண்டியை பார்த்து நாய் குரைக்கும் பாத்தியா? ஒரு வேளை அதுங்களுக்கு மட்டும் பேய், பிசாசு எல்லாம் கண்ணுக்கு தெரியுமோ?”

“அது எனக்கு எப்படி தெரியும்?” என்று விமலா சொல்ல, இவர்கள் சென்றிருந்த பாதையில் இருந்த மின் விளக்குகள் அணைந்தன.

அங்கு இருந்த நாய்கள் ஒன்றுகூடி குரைக்க ஆரம்பிக்க, பயத்தில் கீதா வண்டியை நிறுத்தாமல் வேகமாக வண்டியை ஓட்டினாள்,

வீட்டை வந்தடையும்போதுதான் கவனித்தாள் தன் பின்னிருக்கையில் இருந்த விமலா இப்போது அங்கு இல்லையென்பதை.