Wednesday 16 July 2014

மறக்க முடியாத முகங்கள் – 10

மறக்க முடியாத முகங்கள் – 10:

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் – இந்த மூன்றும்தான் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்களாக, காலங்காலமாகச் சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் குறிப்பிடப்படாததாலோ என்னவோ தெரியவில்லை, தண்ணீரின் அருமையை, தேவையை, முக்கியத்துவத்தை நாம் உணரவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு பக்கம், ஏரிகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றி, அந்த நிலங்களில் கட்டிடங்கள் கட்டுகிறோம். இப்படி கட்டப்படுகிற கட்டிடங்களின் அடித்தளங்கள் உறுதியாக இல்லாததால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படும்போது சில நாட்கள் வருந்துகிறோம். அடுத்த சில நாட்களில் வருந்துவதற்கு, சண்டை போடுவதற்கு வேறு ஏதாவது ஒரு விஷயம் கிடைக்கும். அப்போது இதை மறக்கிறோம்.

இன்னொரு பக்கம், மரங்களை வெட்டி அந்த இடத்தை சமப்படுத்திவிட்டு, கட்டிடங்கள் கட்டுகிறோம். மரங்கள் குறைந்துவருவதால், மழையின் அளவு வருடாவருடம் குறைந்துகொண்டே வருகிறது. இருக்கும் மிச்ச சொச்ச மரங்களால் கிடைக்கும் மழையும் சரியான நீர்ப்பிடிப்பு பகுதிகள் இல்லாத காரணத்தால் வீணாகிறது.

அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகத்தான் வரப்போகிறது என்று பல ஆண்டுகளாக பல அறிஞர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படி இருந்தும், தண்ணீரை சேமிக்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

வீடுகளைக் கட்டுகிறோம், தண்ணீர்த் தொட்டிகளைக் கட்டுகிறோம். ஆனால், அந்தத் தொட்டிகளில் பிடித்து, சேமித்து வைக்க தண்ணீர் கிடைக்காமல், விலை கொடுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

மூச்சுக்கு முன்னூறு முறை “கட்டிக் காப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் ஒரு பகுதியை மட்டும் செவ்வனே செய்து வருகிறோம். கட்டிக் கொண்டே போகிறோம். காக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் இன்றைய நிலைமை.

இந்தியாவில் முதன்முதலாக மழை நீரை சேமிப்பதற்காக ப்ரத்யேகமாக ஒரு திட்டம் தீட்டி, அதை ஓரளவுக்கு வெற்றிகரமாக நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு என்றே நினைக்கிறேன். இப்போது தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இது பின்பற்றப்படுகிறது என்பது தெரியவில்லை.

பெங்களூரைப் பொறுத்தவரையில், புதிதாகக் கட்டப்படுகிற அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டியாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பார்கள். இது ஏட்டில் இருந்தாலும், இதில் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், இந்த மழை நீர் சேகரிப்பு தொட்டிகளுக்கெல்லாம் முன்பாகவே, நமக்குத் தெரியாமலே நாம் மழை நீர் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். எப்படி தெரியுமா? எல்லாம் நம் சாலைகளில்தான்.

முதல் கட்டமாக, மழைக்காலத்தின் முதல் மழையால் சாலையில் குண்டும், குழியும், பள்ளமும் ஏற்படும். சில சமயம், நிலவில் காணப்படுகிற பள்ளங்களைக் காட்டிலும் நம் சாலைகளில் அதிக பள்ளங்கள் காணப்படும்.

இரண்டாம் கட்டமாக, அடுத்தடுத்த மழையால் அந்தப் பள்ளங்களில் மழை நீர் சேர்ந்துவிடும். இப்படித்தான் நமக்குத் தெரியாமலே மழை நீர் சேகரிப்பு என்பது நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள பிரதான சாலையில் சில பல பள்ளங்கள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை இது.

இந்தப் பிரதான சாலையின் ஒரு பகுதியில் இருக்கிற பள்ளங்கள் நாளடைவில் பெரிதாகி, தார் சாலைக்கு அடியில் போடப்பட்டிருக்கிற குடிநீர்க் குழாய்களில் ஒன்று தேய்ந்து, அதில் ஓட்டை விழுந்துவிட்டது. அதன் வழியாக தண்ணீர் வழிந்து சாலையில் இருக்கிற பள்ளத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சாலையை ஒட்டியபடி உள்ள ஒரு நிலத்தில், பாதி கட்டப்பட்டு, பின் அப்படியே விடப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. அந்த நிலத்தின் சொந்தக்காரர் ஏதோ ஒரு வழக்கைப் போட்டு கட்டிட வேலைகளை நிறுத்திவிட்டதாகத் தகவல். கிட்டத்தட்ட மூன்று தளங்கள் கட்டப்பட்டு, இப்போது எலும்புக்கூடு போல் நின்றுகொண்டிருக்கிறது இந்தக் கட்டிடம். இன்னமும் வெறும் செங்கல், சிமெண்ட் சகிதம் காட்சியளிக்கிறது.

பக்கத்தில் ஒரு காலி இடம் இருக்கிறது. காலி இடம்தான் என்றாலும் அதில் தார்பாலின் டெண்ட் போட்டு குடியிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று காலை இந்தப் பிரதான சாலை வழியாக செல்ல நேர்ந்தது. நான் மேலே குறிப்பிட்ட, குழாயிலிருந்து வழிந்து தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிற பள்ளத்துக்குப் பக்கத்தில் ஒரு ஆண், ஒரு சிறுமி உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தார்பாலின் டெண்ட்களில் குடியிருப்பவர்கள் என்றே நினைக்கிறேன். சீவாத பரட்டைத் தலை, கிழிந்த உடுப்புகள், பழுப்பு நிற பற்கள் என வறுமையின் அடையாளங்கள் அவர்களின் முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

இந்த இருவரும் சேர்ந்து, பள்ளத்தில் வழிந்து கொண்டிருந்த தண்ணீரை மொண்டு ஒரு பக்கெட்டில் ஊற்றிக் கொண்டிருந்ததை இன்றுதான் கவனித்தேன். அவர்களுக்குப் பக்கத்திலேயே இருந்த சில காலி பக்கெட்டுகள், சொல்வதற்கு ஏராளமான கதைகளுடன், மௌனமாய் இருந்தன.

இந்தக் காட்சியைப் பார்த்ததும் உள்ளூர உறுத்த ஆரம்பித்தது. மனிதனாகப் பிறந்ததைவிட கொடுமையான ஒரு தண்டனை கிடையாது என்று தோன்றியது. இது எனக்கு மேலும் இரண்டு விஷயங்களைப் புரிய வைத்தது.

ஏற்கனவே தண்ணீரை விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தாகிவிட்டது. வசதி படைத்தவர்களுக்கு விலை ஒரு பொருட்டில்லை. ஆனால், மற்றவர்களுக்கு?

அனைவருக்கும் பொதுவான விஷயங்களான தண்ணீர், காற்று போன்றவை எப்போது சிலருக்காக மட்டுமே என்று மாறுகிறதோ, அப்போது நாம் தோற்க ஆரம்பிக்கிறோம். அப்போது மனிதர்களுக்கும், எல்லை பிரித்து ஆளும் மிருகங்களுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

நியாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் சாலையில் தேங்கி நிற்கிற அழுக்குத் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு செல்கிறவர்கள் அதிக அளவில் இருக்கும் வரை எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. அவர்களின் நியாயமான சாபம், வயிற்றெரிச்சல், கோபம் அந்த நாட்டை வளரவிடாது. இது முதல் விஷயம்.

இரண்டாவது விஷயம் தண்ணீரின் முக்கியத்துவம். எந்த ஒரு பொருளாக, உறவாக இருந்தாலும், அதன் அவசியத்தை, முக்கியத்துவத்தை அது இல்லாதபோதுதான் நாம் அறிந்து கொள்வோம். பல வகையான மரங்களை, விலங்குகளை அழித்தாகிவிட்டது. தண்ணீரையாவது விட்டுவைப்போமா? என்னிடம் பதில் இல்லை.


இந்த இரண்டு விஷயங்களை எனக்கு உணர்த்திய அந்த ஆணின் முகமும், சிறுமியின் முகமும் மறக்க முடியாதவையாகும்!

No comments:

Post a Comment