Wednesday 23 July 2014

மறக்க முடியாத முகங்கள் – 11

மறக்க முடியாத முகங்கள் – 11:

“Humans are the most dangerous parasites on earth”

“மனிதர்களே இந்த பூமியிலுள்ள அதிபயங்கரமான ஒட்டுண்ணி”
இது நான் நம்பும் வாக்கியம். மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை சுருங்கியது. எத்தனையோ உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்தேவிட்டன.

“பலம், அறிவு போன்றவை அதிகமாகக் கிடைக்கப்பெற்ற ஒரு இனம் கட்டுக்கடங்காமல் பெருகும்போது, பலத்திலும் அறிவிலும் குறைந்த இனங்கள் சில அழிவது இயற்கை. தவிர்க்க முடியாதது” என்று சிலர் சொல்லக்கூடும். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், நாம் செய்யும் தவறுகளை, இரக்கமற்ற, கொடூரமான செயல்களை நியாயப்படுத்தவே இது அதிகம் சொல்லப்படுகிறது.

எறும்புகள், பேக்டீரியாக்கள், கோழிகள் ஆகியவை எண்ணிக்கையில் மனிதர்களைவிட அதிகமாக இருப்பதாக இணையத்தில் படித்தேன். இந்த மூன்றுக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது என எனக்குத் தோன்றியது.

எறும்புகளால் நமக்கு எந்த ஒரு லாபமோ, உபயோகமோ இல்லை. சீனா போன்ற சில பகுதிகளில் எறும்புகளை சாப்பிடுகிறார்களே ஒழிய மற்ற இடங்களில் எறும்புகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மேலும், இவற்றை வைத்து எந்த ஒரு அழகு சாதனப் பொருளோ, உடையோ தயாரிக்க முடியாது என்றே நினைக்கிறேன். அதனால், அவற்றை அழிக்க வேண்டியதில்லை.

பேக்டீரியாக்களை நாம் எவ்வளவு அழித்தாலும் அவை பிறந்துகொண்டு, வளர்ந்துகொண்டுதானிருக்கும். எதுவும் செய்யமுடியாது. அவை நம்மை அழிக்காமல் இருக்காதவரை சரிதான்.

கோழிகளை உணவாக உட்கொள்வதால் ஒரு புறம் அழித்தாலும், மறு புறம் அவற்றைப் பெருக்கிக் கொண்டு, பின் அழித்துக் கொண்டிருக்கிறோம். இதனால், இவை மனிதர்களைவிட அதிகமாக இருக்கின்றன.

இந்த மூன்றும் ஏன் மனிதர்களைவிட அதிகமாக இருக்கின்றன என்பது இப்போது புரிந்ததா? ஒரு உயிரினம் நமக்குத் தேவையில்லை என்றால், அந்த உயிரினத்தால் நமக்கு எந்த லாபமோ, உபயோகமோ இல்லை என்றால், அந்த உயிரினம் வாழலாம். இதுதான் பூமியின் மன்னர்களாக நினைத்துக் கொண்டிருக்கிற மனிதர்களின் நினைப்பு என தோன்றுகிறது.

மற்ற உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கு நாம் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை, ரொம்பவே சுலபமான காரியம்தான். பிளாஸ்டிக் பாட்டில்கள், நகங்கள், இவ்வளவு ஏன் தலைமுடி கூட போதும்.

நேற்று மாலை சுமார் 7 மணி இருக்கும். என் மனைவி எங்கள் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு புறா தரையில் அசையாமல் சிலை மாதிரி கிடந்தது கண்ணில் பட்டது. உயிருடன்தான் இருந்தது. ஆனால் பறக்கவோ நடக்கவோ முடியவில்லை, பாவம்.

அவள் என்னிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, நான் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தேன். தலை குனிந்தவாறு நின்றுகொண்டிருந்தது அந்தப் புறா. பதறினேன் நான். சில ராகி மணிகளை அதற்குப் பக்கத்தில் போட்டுவிட்டு வேகமாக வீட்டுக்குள் வந்தேன்.

பிராணிகளை, பறவைகளை பாதுகாக்கும், மீட்டெடுக்கும் ப்ளூ க்ராஸ் போன்ற சேவை மையங்களின் தொலைப்பேசி எண்களையும், கைப்பேசி எண்களையும் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒவ்வொன்றாகத் தொடர்பு கொண்டேன். சில எண்கள் உபயோகத்தில் இல்லை, சிலர் வேறு ஒரு எண்ணைக் கொடுத்து, அந்த எண்ணை அழைக்கச் சொன்னார்கள். இது இப்படியே போய்க் கொண்டிருக்க, கடைசியில் BBMP-ன் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு பிரிவின் கைப்பேசி எண் கிடைத்து, அப்போது மணி இரவு 8 ஆகியிருந்தது.

அந்த எண்ணை அழைத்தேன். அழைப்பை ஏற்றவரின் பெயர் ஷரத். விஷயத்தைக் கேள்விப்பட்டு, காலை ஒருவரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். ஆனால், நான் அவரை வற்புறுத்தியதால், ஒருவரை இன்றே அனுப்பிவைப்பதாகச் சொன்னார். அவரிடம் என்னை அழைத்து, வீட்டுக்கு வரும் வழியைக் கேட்கச் சொல்வதாகவும் சொன்னார். எனக்கு ஒரே ஒரு சதவீதம் நம்பிக்கை இருந்தாலும், இந்த நேரத்தில், ஒரு புறாவிற்காக யார் வரப்போகிறார் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. மனிதர்களையே மதிக்காத மனித விலங்குகள் அதிகமாகி வரும் இந்த காலகட்டத்தில், புறாவுக்காகவா வரப்போகிறார்?

அந்தப் புறா ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தால், ஒரு வேளை பூனை ஏதாவது வந்து அடித்துவிடப்போகிறது என்று பயந்தேன். உடனே ஒரு அட்டைப் பெட்டியை பரணையில் இருந்து எடுத்து வைத்துவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்றேன். அந்தப் புறாவை இன்றிரவு அந்த அட்டைப் பெட்டியில் வைத்து, வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு வந்து பார்த்துக் கொள்ளலாம், காலை அவர்கள் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன்.

மாடிக்குச் சென்று அந்த புறாவை மெதுவாகத் தூக்கினேன். பஞ்சு போல் இருந்தது அந்தப் புறா. இதற்கு முன் புறாவை நான் தூக்கிக் கொஞ்சியதில்லை. இன்றுதான் ஒரு புறாவை முதன்முதல் தூக்குகிறேன் என்றாலும், கொஞ்சும் நிலையில் அதுவோ, நானோ இல்லை. சில மணி நேரங்களாக எங்குமே நகராமல் ஒரே இடத்தில் நின்றிருந்ததால் அது மிகவும் சோர்ந்து போயிருந்தது. தலையைத் தூக்கிப் பார்க்கக்கூட முடியவில்லை. வாயிருந்தால் நிச்சயம் கத்தி கதறியிருக்கும் அந்தப் புறா. வாயிருக்கும் நான் மனதுக்குள் கதறினேன்.

அதை அப்படியே தூக்கிக் கொண்டு படிக்கட்டை நோக்கி மெதுவாக நடந்தேன். மனம் கடவுளின் பெயரை சொல்லிக் கொண்டே, அவரின் கருணையை வேண்டிக்கொண்டே இருந்தது.

அப்போது கையிலிருந்து விடுபட்டு தரையில் விழுந்தது அந்தப் புறா. எழுந்து நடக்கப் பார்த்தது, பறக்கப் பார்த்தது. ஆனால் முடியவில்லை, பாவம். தத்தித் தத்தி ஒரு இடத்தில் சென்று நின்றது. தலை சாய்ந்தது. அவ்வளவு சோர்வாக இருந்தது, பாவம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அந்த நேரத்தில் எனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பரத் என்ற நபர். இந்தப் புறாவைப் பற்றி ஷரத் சொன்னதாகச் சொன்னபோது ஒரு சிறு நம்பிக்கை என்னுள் பூக்க ஆரம்பித்தது. வீட்டுக்கு வரும் வழியை அவருக்குச் சொன்னேன். அவர் வீட்டுக்கு வந்து சேரும்போது மணி சுமார் 9:30 ஆகியிருந்தது.

வேகமாக மொட்டை மாடிக்குச் சென்று அந்தப் புறாவை பரத்திடம் காட்ட, அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டார். உடனே அதன் காலைப் பார்த்தபோது, அந்த பயங்கரம் தெரிந்தது. புறாவின் கால்களில் உள்ள விரல்களில் தலைமுடி எசகுபிசகாகச் சிக்கிக் கொண்டு, விரல்களை நெருக்கியிருந்தது. முடிச்சுப் போட்டது போல் உறுதியாக இருந்தது அந்தக் கட்டு. அந்த விரல்களுக்கு இரத்தம் சென்று கொண்டிருந்ததோ இல்லையோ தெரியவில்லை, கொஞ்சம் வெள்ளையாக இருந்தது.

அந்தப் புறாவை வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு வந்து, கத்தியை உபயோகப்படுத்தி அந்த முடிக்கட்டை அறுத்து எறிந்தோம். நேராக வைத்தால், கிட்டத்தட்ட 4 அடி வரை நீண்டிருக்கும் அந்த முடி. இப்படி இரண்டு கால்களிலும் இருந்தது. எவ்வளவு வலித்திருக்கும் அந்தப் புறாவுக்கு என்று நினைத்தபோது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது.

அந்தப் புறா மிகவும் சோர்வாக இருந்ததால், அதன் அலகைத் திறந்து அதனுள் ராகி மணிகளை உள்ளே தள்ளினார். பிறகு, உள்ளங்கையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, புறாவின் அலகைத் திறந்து அதனுள் விட்டார். ஒரு அம்மா, தன் குழந்தையைக் கையாள்வதைப்போல் அந்தப் புறாவை பரத் கையாண்டார். பார்க்க பிரமிப்பாய் இருந்தது.

ஒரு வழியாக அந்தப் புறாவை ஓரளவுக்குத் தேற்றியாகிவிட்டது. அது நிமிர்ந்து இரண்டு அடி எடுத்து வைத்ததைப் பார்த்தபோது, ஒரு குழந்தை முதல் அடிகளை எடுத்து வைத்ததைப் பார்த்ததுபோல் இருந்தது. பெருமகிழ்ச்சியான தருணம். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். உயிர் போய் உயிர் வந்தது.

பரத் அந்தப் புறாவைத் தன் வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகச் சொன்னார். அப்போது அவர் வீடு எங்கிருக்கிறது என கேட்டபோது பன்னார்கட்டாவில் இருப்பதாகவும், அங்கிருந்துதான் இந்தப் புறாவுக்காக வந்ததாகவும் சொன்னார். ஆச்சரியத்தில் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நின்றேன்.

பன்னார்கட்டா எங்கள் வீட்டிலிருந்து குறைந்தது 20 கிலோமீட்டர் தூரம் இருக்கும். பரத், அவ்வளவு தொலைவிலிருந்து இந்தப் புறாவிற்காக இரவு நேரத்தில் தன் இரு சக்கர வாகனத்தில் வந்தது சாதாரண விஷயமாக எனக்குப் படவில்லை. ஒரு வேளை நான் அந்த நிலையில் இருந்திருந்தால், அடுத்த நாள் வருவதாக தட்டிக் கழித்திருக்கவும் வாய்ப்புண்டு.

“எப்படி இவ்வளவு தூரத்துல இருந்து, இந்த நேரத்துல இங்க வந்தீங்க? ரொம்ப பெரிய மனசு வேணும் சார். ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்” என்று பரத்திடம் சொன்னேன்.

அதற்கு அவர், “இதுல என்ன இருக்கு சார்? எனக்கு புறாக்கள்னா ரொம்பப் பிடிக்கும். அதுக்காகத்தான் வந்தேன். வீட்டுல 50, 60 புறாக்கள் கூடு கட்டி வாழ்ந்துட்டு இருக்குங்க. அதோட இதை விட்டுடறேன். கவலைப்படாதீங்க. நான் நல்லபடியா பாத்துக்கறேன்” என்றார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? ஆச்சரியம் கலந்த ஆனந்தம். கைச் செலவுக்காக ஒரு சிறு தொகையை அவருக்குக் கொடுத்தேன். ஏதோ என்னால் முடிந்த ஒரு சின்ன காரியம்.

ஒரு அட்டைப்பொட்டியில் காற்றோட்டத்துக்காக சில துளைகளைப் போட்டு, அதனுள் இந்தப் புறாவை வைத்து எடுத்துச் சென்றார். ஏதோ இமயமலையையே என் தலையிலிருந்தும், மனதிலிருந்தும் இறக்கி வைத்துவிட்டதுபோல் இருந்தது.

எதேச்சையாக ஏதோ ஒரு இடத்தில் போடப்பட்ட தலைமுடி, ஒரு புறாவை எத்தனை துன்பத்துக்குள்ளாக்கியது பாருங்கள். மற்றவர்களின் மேல் அக்கறை இல்லாமல் எத்தனையோ பேர் இருக்க, புறாவுக்காக இரவு நேரத்தில் இருபது கிலோமீட்டர் தாண்டி வந்து, அதனைக் காப்பாற்றி மீட்டெடுத்த பரத்தின் முகம் மறக்க முடியாத முகமே!

BBMP-ன் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு பிரிவு மற்றும் பரத் ஆகியோரின் கைப்பேசி எண்கள் பின்வருமாறு:

BBMP-ன் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு பிரிவு – 9880108801

பரத் - 9036660171

No comments:

Post a Comment