Sunday 3 August 2014

கல்லூரி கலாட்டாக்கள் - பகுதி 2

கல்லூரி கலாட்டாக்கள்

கலாட்டா 5:

பொறியியல் மூன்றாம் ஆண்டு என நினைக்கிறேன். அலைபேசி அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்திருந்தது.

ஒரு தனியார் நிறுவன அலைபேசியை 500 ரூபாய்க்கு வாங்கலாம் என்று வந்திருந்த காலம் அது. அன்றைய நாட்களில் 500 ரூபாய்க்கு அலைபேசி கிடைக்கச் செய்த அந்த நிறுவனமும், அதை அவர்கள் விளம்பரப்படுத்தியதும் இன்றைய காலகட்டத்தில் நாம் காண்கிற அலைபேசிகளின் விற்பனைக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணங்களுள் ஒன்று என்பதை மறுக்க முடியாது,

ஆனால், அந்த குறிப்பிட்ட அலைபேசியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றால் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என நினைத்து பலர் அந்த அலைபேசியை வீட்டிலோ, விடுதியிலோ வைத்துவிட்டு வெறுங்கையோடு வகுப்பறைக்கு வந்ததுண்டு. சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் கடன் வாங்கியோ, வீட்டில் பொய் சொல்லியோ கொஞ்சம் விலையுயர்ந்த அலைபேசியை வாங்கி, அதை எடுத்துக் கொண்டு கம்பீரமாக வகுப்பறைக்கு வருவார்கள்.

பல மாணவ, மாணவிகள் அலைபேசியை இன்றியமையாத ஒரு பொருளாக எண்ணத் தொடங்கியிருந்தனர். அலைபேசியின் விலை எத்தனை அதிகமோ, அதை வைத்திருப்பவரது பொருளாதார நிலையும் அத்தனை உயர்ந்திருந்ததாக காட்சி இருந்தது.

நாளடைவில், அனைவரது கையிலும் நோட்டுப் புத்தகங்கள் இருந்ததோ இல்லையோ, அலைபேசி ஒன்றாவது இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த கலாட்டா அரங்கேறியது.

எங்கள் வகுப்பறையில், ஆசிரியரிடம் மாட்டி விடுவதற்கென்றே சில நண்பர்களின் பெயர்களை உரக்கச் சொன்ன காலம் அது. அதாவது, யாராவது ஒருவர் பாடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை செமினார் எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்னால், உடனே கடைசி வரிசையில் இருந்த நாங்களும், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த நண்பர்களும் சிலரின் பெயர்களைச் சொல்ல ஆரம்பிக்க, உடனே வகுப்பிலிருந்த மற்றவர்களும் அந்தப் பெயர்களை வழிமொழிய ஆரம்பிக்க, இறுதியில் அந்தப் பெயர்களில் ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். இதுதான் வழக்கம்.

இப்படி எங்களால் மாட்டிக் கொண்டவர்கள், இல்லையில்லை, நாங்கள் மாட்டிவிட்டவர்கள் அல்லது போட்டுக் கொடுத்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவன் செந்தில். எங்கள் நெருங்கிய நண்பர்களுள் ஒருவன்.

ஒரு நாள் காலை வகுப்பறையில் நுழைந்தபோது அவனது அலைபேசி ஒலிக்க, அந்த அழைப்பை ஏற்று பேசிக்கொண்டே உள்ளே வந்தான் செந்தில். கடைசி வரிசையில் இருந்த நாங்களும், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த அசோக் என்ற நண்பனும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அசோக்கிற்கு அந்த ஒரு அருமையான யோசனை தோன்றியது.

வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு அலைபேசியின் ரிங் டோனைக் கத்தவிட்டு, உடனே அனைவரும் “செந்தில்” என்று கத்த வேண்டும் என்று யோசனை சொன்னான் அசோக். சரி, ஒரு வழியில் எங்களுக்கும் பொழுது போகும் என்ற நினைப்பில் அந்த யோசனையைக் கடைசி வரிசையில் இருந்த நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.

ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் மிகவும் சின்சியராக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அசோக் எங்கள் பக்கம் திரும்பி இப்போது தன் அலைபேசியின் ரிங் டோனைக் கத்தவிடப் போவதாகவும், அடுத்த நொடி “செந்தில்” என்று அனைவரும் கத்த வேண்டும் என்றும் சொன்னான். நாங்கள் சரியென்றோம்.

சொன்னது போலவே அசோக் தன் அலைபேசியின் ரிங் டோனை ஒலிக்க வைத்து எங்கள் பக்கம் திரும்பி, “செந்தில்” என்று கத்த ஆரம்பித்தான். ஆனால், அதற்குள் நாங்கள் அனைவரும் “அசோக்” என்று கத்த ஆரம்பித்திருந்தோம். உடனே வகுப்பிலிருந்த மற்றவர்களும் “அசோக்” என்று கத்த ஆரம்பிக்க, அசோக் ஒருவன் மட்டுமே “செந்தில்” என்று கத்திக் கொண்டிருந்தது யார் காதிலும் விழவில்லை, பாவம். கடைசியில், தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டான்.


“செந்தில்” என்பதற்குப் பதிலாக “அசோக்” என்று கத்தவேண்டும் என்று கடைசி வரிசையில் இருந்த நாங்கள் பேசி வைத்துக் கொள்ளவில்லை. தானாகவே இப்படிக் கத்தியது எங்களுக்குள் இருந்த புரிதலைக் காட்டியது என்றே நினைக்கிறேன்.

No comments:

Post a Comment