Wednesday 24 September 2014

இரண்டு நாட்கள், இரண்டு சம்பவங்கள் - பகுதி 1

இரண்டு நாட்கள், இரண்டு சம்பவங்கள்!

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய, கவனிக்கப்பட வேண்டிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

  • நேற்று (23-Sep-2014) டெல்லி உயிரியல் பூங்காவில் பார்வையாளர் ஒருவரை புலி “அடித்துக் கொன்றது”
  •  450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று (24-Sep-2014) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


பகுதி 1:

முதல் சம்பவத்துக்கு வருவோம்.

நேற்று பகல், சுமார் 1:30 மணியளவில் டெல்லி உயிரியல் பூங்காவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் எதிர்பாராத விதமாக வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் விழுந்தான்.

எப்படி விழுந்தான்? எதனால் விழுந்தான்? யாருடைய குற்றம் இது?

முதல் விஷயத்துக்கு வருவோம்.

புலிகள் அடைக்கப்பட்டிருக்கிற பகுதியைச் சுற்றி கிட்டத்தட்ட 15 அடி உயரத்தில் ஒரு தடுப்புச் சுவர் உள்ளது. அதாவது புலிகள் அடைக்கப்பட்டிருப்பது, நம் நிலத்தை விட 15 அடி தாழ்வான ஒரு நிலப்பரப்பில்.

இந்தச் சுவற்றைச் சுற்றிலும் ஒரு சிறு இடைவெளி விட்டு ஒரு இரும்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக இரண்டு அல்லது மூன்று அடி உயரம் இருக்கலாம். இந்த வேலியைத் தாண்டுவது குற்றம் என்றும், தாண்டினால் இத்தனை ரூபாய் அபராதம் என்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த மாணவன் இந்த எச்சரிக்கையை வெறும் ஒரு அறிவிப்பாகவே கருதி, வேலியைத் தாண்டியது முதல் குற்றம். இதை ஒரு தவறு என்று சொல்லி, ஒதுக்கிவிட முடியாது. தெரிந்தே செய்த செயல் இது.

யார் தன்னைப் பிடிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவேளை பிடித்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தினால்தான் துணிந்து வேலியைத் தாண்டி, சுவற்றில் இருந்து எட்டிப் பார்த்திருக்கிறான் என நினைக்கிறேன். பிடிக்கப்போவது புலி என்று தெரிந்திருந்தால் நிச்சயம் வேலியைத் தாண்டியிருக்கமாட்டான். அந்த எண்ணமும் அவனுள் தோன்றியிருக்காது. விதிகளையும், எச்சரிக்கைகளையும் அலட்சியம் செய்ததால் வந்த வினை இது.

இந்த விஷயத்தில் இவனுக்கும் சாலையில் கன்னாபின்னாவென்று வாகனம் ஓட்டுபவர்களுக்கும், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் போகிறவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

செய்வது சிறு தவறுதான், தண்டிக்கப்படமாட்டோம், மாட்டிக் கொண்டாலும் தப்பித்துவிடலாம் என்று நினைத்து, வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் ஏராளம். பல சமயங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள். சில சமயங்களில் இந்த மாணவனைப் போல் மாட்டிக்கொள்கிறார்கள்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? குழியில் விழுந்த பின்பு புலியிடம் மன்னிப்பு கேட்டு, உயிர்ப்பிச்சை கேட்டு என்ன பயன்? இழப்பு அவருக்கும், அவரது குடும்பத்துக்கும்தானே?

இரண்டாவது விஷயம்.

மாணவன் குழிக்குள் விழுந்து கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகே அந்த புலி இவனது கழுத்தைக் கவ்வியிருக்கிறது. அதாவது, டெல்லி விலங்கியல் பூங்கா அதிகாரிகளுக்கு இந்த மாணவன் உயிரைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் அவகாசம் இருந்திருக்கிறது. அதற்குள் ‘டிராங்க்விலைசர்’ (Tranquilizer) என்று சொல்லப்படும் மயக்க ஊசியை புலிக்கு செலுத்தி அந்த மாணவனைக் காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால், அந்தப் பூங்காவில் இந்த மாதிரி அத்தியாவசியமான பொருட்கள் இல்லாததால் வெளியிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்படுவதற்குள் எல்லாம் முடிந்திருக்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நம் நாட்டிலுள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு ‘டிராங்க்விலைசர்’ போன்ற தேவையான பொருட்களை வாங்குவது, சுற்றுச் சுவர்களின் உயரத்தை அதிகரிப்பது, வேலியைத் தாண்டுவதைத் தடுக்க அபராதத் தொகையை உயர்த்துவது போன்றவை நடக்கும் என நினைக்கிறேன். வழக்கம்போல் இவற்றிலும் ஊழல் நடக்கும் என்பது வேறு விஷயம்.

இந்த மாணவனின் உயிர் போன்ற ஏதாவது ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டால்தான் அது ஏன் ஏற்பட்டது, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க என்ன செய்வது போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறோம்,

இந்த நிலையில், என்னுடைய கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் ஏராளம் உள்ளது; அதற்கு இன்னும் எத்தனை பெரிய இழப்புகளையெல்லாம் சந்திக்கப்போகிறோமோ?

மூன்றாவது விஷயம்.

செய்திகளில் மாணவனை புலி ‘அடித்துக் கொன்றது’ என்று சொல்கிறார்கள். இது நியாயமா?

பரந்த காடுகளில் சுதந்திரமாகத் திரியும் புலிகளைக் கொண்டு வந்து கூண்டுகள் போன்ற சிறையில் அடைத்துவிடுகிறோம். இதனால் அவைகளுக்கு ஏற்படும் மன உளைச்சலை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

அப்படி ஒரு இடத்தில் திடீரென ஒரு புது மிருகம் நுழைந்துவிட்டால், அது என்ன, எப்படி இருக்கிறது போன்றவற்றை புரிந்துகொள்ள முயலும். கொஞ்சம் பயமோ, பசியோ எட்டிப் பார்த்தால் போதும், தங்களின் இயற்கை குணம் - வேட்டையாடும் குணம் - எட்டிப்பார்க்கும்.

மாணவன் குழியில் விழுந்ததும் புலி அவனருகே வந்து சில நிமிடங்கள் அவனை அவதானித்தது. அவன் பேசும் மொழி புலிக்கு எப்படி புரியும்? சில நிமிடங்கள் அப்படியே இருந்தது.

அதற்குள் இவற்றையெல்லாம் நேரில் பார்த்துக்கொண்டிருந்த நம் சக மனிதர்கள் புலியை பயமுறுத்தி அங்கிருந்து விரட்டிவிட்டு அவனைக் காப்பாற்றிவிடலாம் என்றெண்ணி கூச்சல் போட ஆரம்பிக்க, கையில் கிடைத்த பொருட்களை புலியின் மேல் எறிய ஆரம்பிக்க, ஏற்கெனவே சந்தேகத்தில் இருந்த புலி. சட்டென்று அந்த மாணவனின் கழுத்தைக் கவ்வி, அவனை அப்படியே இழுத்துச் சென்றிருக்கிறது. தற்காப்புக்காக இப்படிச் செய்ததா, அல்லது பசியினால் இப்படிச் செய்ததா என்பது அந்தப் புலிக்குத்தான் தெரியும். ஆனால், தூண்டிவிட்டது அங்கிருந்தவர்கள்தான்.

நிலைமை இப்படி இருக்கையில், புலி மாணவனை ‘அடித்துக் கொன்றதாக’ இதை எப்படிச் சொல்ல முடியும்?

வழக்கம்போல், மனிதர்கள் நாம் செய்யும் குற்றங்களுக்கு மற்றவர்களை, மற்றவைகளைப் பொறுப்பாக்குவது போல், இந்த முறை புலியைப் பொறுப்பாக்கியிருக்கிறோம். அவ்வளவே!

கொசுறு: புலி ஒரு ஆட்கொல்லி கிடையாது, புலிகளுக்கு கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த மிருகங்களே பிடிக்கும். அந்த கொழுப்பிலிருந்துதான் அவைகளுக்கான சக்தி கிடைக்கும்.


இன்னும் சொல்லப்போனால், மனிதர்களால் அழிந்த புலிகளின் எண்ணிக்கை, புலிகளால் அழிந்த மனிதர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நம் நாட்டில் நமது தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை வெறும் 1706 மட்டுமே.

2 comments: