Thursday 23 January 2014

மறக்க முடியாத முகங்கள் - 2

மறக்க முடியாத முகங்கள் - 2:

சென்ற வாரம் ஒரு நாள், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவதற்கு தாமதம் ஆகிவிட்டது. மணி கிட்டத்தட்ட 9, 9:30 இருக்கும். மாலை 6 மணிக்கு மேல் பெங்களூர் எப்படி இருக்கும், காற்றும் குளிரும் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இங்கு குளிர்காலத்தில் ஒரு வாரமாவது வசிக்க வேண்டும், இல்லை இங்கிருப்பவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த வருடம் குளிர் காலம் சற்று தாமதமாகத்தான் தொடங்கியது. சென்ற வாரம் வரை, குளிர் கொஞ்சம் குறைவு தான். அந்த நினைப்பில் பல நாட்கள் ஜர்க்கின் அணிந்துகொள்ளாமல் அலுவலகம் சென்றிருக்கிறேன். அன்றும் அப்படித்தான் ஜர்க்கின் அணிந்துகொள்ளாமல் அலுவலகம் சென்றிருந்தேன்.

அலுவலகத்திலிருந்து வண்டியில் கிளம்பும்போதே "சரிதான், இன்னிக்கு செமையா மாட்டினேடா வெங்கட்" என்று நினைத்துக்கொண்டேன். அந்த அளவுக்கு இருந்தது குளிர். தோலை சின்னதாகக் கீரிவிட்டு, அந்தத் துளையின் வழியாக மெல்ல மெல்ல பனி உள்ளே செல்வது போல் இருந்தது. வேறு வழியில்லாமல் வண்டியின் வேகத்தைக் குறைத்து, மெதுவாக ஓட்டத் தொடங்கினேன்.

எங்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் மேம்பாலத்திற்கான வேலைகள் நடந்து வருவதால், ஒரு சின்ன பாதை, அதாவது சற்றே அகலமான ஒத்தையடிப் பாதை போன்ற ஒரு பகுதி.  இதைத் தவர்த்து, வேறு ஒரு வழியில் சுற்றிக் கொண்டு வந்தால் பத்து நிமிடங்கள் தாமதம் ஆகிவிடும். இதனால் அந்த வழியில்தான் டூ வீலர்காரர்கள் செல்வார்கள். நானும் அதேவழியில்தான் செல்வேன்.

அன்று வழக்கம்போல் நானும் இந்த வழியில் சென்றேன். இந்த ஒத்தையடிப் பாதை முடிந்து மெயின் ரோட்டை அடையும் இடத்தில் இடது பக்கத்தில், ஒரு சைக்கிளில் பானி பூரிகளை வைத்துக்கொண்டு ஒரு சிறுவன் நின்றிருந்தான். கொஞ்சம் கிழிந்து போன வெள்ளை நிற சட்டை, பிரவுன் நிற டிராயர் அணிந்திருந்தான். பார்ப்பதற்கு ஏதோ ஒரு பள்ளி சீருடையைப் போல் இருந்தது.

எனக்கு என்னவோ தோன்றியது. வண்டியை நிறுத்தி அவனருகில் சென்றேன். கன்னடத்தில் பேசத் தொடங்கினேன். அந்த உரையாடலின் தமிழாக்கம் இதோ:

"என்னப்பா, இவ்வளவு தாமதமாகியும் இங்கே பானி பூரி விற்றுக் கொண்டிருக்கிறாயே?"

"ஆமாம். இன்னும் யாராவது வந்து பானி பூரி வாங்கி சாப்பிடுவார்களா என்று காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா. உங்களுக்கு வேண்டுமா?"

"டிராயர் போட்டுக்கொண்டு நிற்கிறாயே. குளிரவில்லையா உனக்கு?"

"அதையெல்லாம் பார்த்தால் சரிப்பட்டு வராது"

"நீ அணிந்திருப்பது ஏதோ பள்ளி சீருடை போலிருக்கிறதே? எந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாய்?"

"இது என்னுடையது அல்ல. என் தம்பியினுடையது. அவன் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்"

"நீ படிக்கவில்லையா?"

"இல்லை அண்ணா"

"ஏன்?"

"குடும்ப சூழ்நிலை. பள்ளிக்குப் போனால் நிறைய விளையாடலாம். என்னால் அது முடிவதில்லை. அது மட்டும்தான் வருத்தம். மற்றபடி படிக்க ஆர்வம் எல்லாம் கிடையாது"

"உன் தம்பியோடு நீ காலையில், மாலையில் விளையாடலாமே?"

"என் தம்பி பள்ளிக்குப் போவதற்குள் நான் அன்றைய பானி பூரி மசாலாக்களையெல்லாம் என் அம்மாவுடன் சேர்ந்து தயார் செய்துவிடவேண்டும். ஒரு 8, 9 மணியளவில் நான் இங்கிருந்து கிளம்பி கிருஷ்ணராஜபுரம் பகுதிக்குச் சென்று அங்கு பானி பூரி விற்பேன். அங்கிருந்து ஒரு 12, 1 மணியளவில் மாரத்தஹள்ளி சென்று அங்கு பானி பூரி விற்றுவிட்டு, மாலை இந்த இடத்திற்கு வந்துவிடுவேன்"

"ஒரு நாளைக்கு எவ்வளவு விறபனையாகும்?"

"குறைந்தபட்சம் 150, 200 லாபம் வந்தால்தான் பிழைக்கமுடியும். இன்று இன்னும் அந்த அளவு வரவில்லை. அதனால்தான் இங்கே இன்னும் நின்றுகொண்டிருக்கிறேன்"

"அப்படியா? சரி ஒரு இருபது ரூபாய்க்கு பானி பூரி பார்சல் செய்து கொடு"

அவன் முகத்தில் உடனே ஒரு மாற்றம். அடுத்த சில நிமிடங்களில் இருபது ரூபாய்க்கு பானி பூரி, மசாலா, இரண்டு வகையான ரசம் எல்லாம் தனித்தனி கவரில் பார்சல் செய்து கொடுத்தான். அவனிடம் காசு கொடுத்துவிட்டு நான் கிளம்பினேன். எனக்கு பானி பூரி அவ்வளவாக பிடிக்காது. அன்று அவனுக்காக சிலவற்றைக் கஷ்டப்பட்டு சாப்பிட்டு, மற்றவற்றை குப்பைத்தொட்டியில் போட்டேன்.

அலுவலகத்தில், ஏர் கண்டிஷனில், ஹாயாக உட்கார்ந்துகொண்டு வேலை செய்துவிட்டு, அது சரியில்லை, இது சரியில்லை, சம்பளம் போதவில்லை என குறை கூறுபவர்கள் ஏராளம். நானும் இதில் அடக்கம்.

ஆனால், இந்தச் சிறுவனைப் போல் தின பிழைப்புக்காக இப்படி அலைந்து திரிந்து, தம்மை வருத்திக் கொள்பவர்களைப் பார்த்தாவது நம் நிலையை நினைக்க வேண்டும்; மகிழ வேண்டாம், குறைந்தபட்சம் குறை கூறாமல், இந்த நிலையை அளித்த கடவுளுக்கு நன்றியாவது சொல்ல வேண்டும்.

எத்தனையோ திரைப்படங்களில் தம்பிக்காக, தங்கைக்காக, தன் குடும்பத்திற்காக ஒருவன் பாடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள். நான் "இருபது ரூபாய்க்கு பான் பூரி கொடு" என்று சொன்னவுடன் மாறிய அவன் முகம், அதற்கு முன் இருந்த அந்த முகம் இந்த இரண்டுமே மறக்க முடியாத முகங்கள்.

No comments:

Post a Comment