Monday 30 December 2013

என் முதல் சிறுகதை - நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எழுதியது (1993)

எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய, சிறிய நோட்டுப்புத்தகம் ஒன்று கிடைத்திருக்கிறது.

நான்காம் வகுப்பு A பிரிவில் படித்துக் கொண்டிருந்த போது எழுதியது இந்தக் கதை என நினைக்கிறேன். அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்ல பையன். எல்லா நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்திலும் என் பெயரையும், வகுப்பு - பிரிவையும், உள்ளே தேதியையும் குறிப்பிடுவேன். இதை வைத்துதான், இந்தக் கதையை நான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது எழுதியது என்று சொல்கிறேன்.

அப்படி நான் எழுதிய முதல் கதை இதுதான்.
---------------------------------------------------------------------------------------------------
"வானத்தில் வெள்ளை மேகம் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தது.

கீழேயிருந்து, மரங்களும் மேகத்துடன் சேர்ந்து, தலையை ஆட்டி ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது இதைப் பார்த்து ஒரு கறுப்பு நிற மேகம் அங்கு வந்து, இந்த வெள்ளை மேகத்தை திட்டி, அடிக்க ஆரம்பித்தது. சில நேரத்தில் அங்கிருந்த வெள்ளை மேகம் காணாமல் போனது.

நண்பனை அடித்த கறுப்பு மேகத்தின் மேல் கோபம் வந்தது கீழே இருந்த மரங்களுக்கு. தங்கள் நண்பனான காற்றை, அந்த கறுப்பு மேகத்தை மிரட்ட, தேவைப்பட்டால் அடிக்க அனுப்பின அந்த மரங்கள்.

காற்று வேகமாகப் போய், அந்த கறுப்பு மேகத்தை மிரட்டி, அடித்தது. அந்த வலியை தாங்க முடியாமல் கறுப்பு மேகம் அழுதது. அதுதான் மழையாய் வந்தது.

சில நேரம் அழுது முடித்ததும், கறுப்பு மேகத்தை அங்கிருந்து கிளம்ப சொல்லியது காற்று. கறுப்பு மேகமும் அங்கிருந்து கிளம்பியது. உடனே ஜாலியாக வெள்ளை மேகம் அங்கு மீண்டும் வந்து, மரங்களுடன் சேர்ந்து விளையாடியது"
---------------------------------------------------------------------------------------------------

எப்படி இருக்கிறது இந்த கதை?

No comments:

Post a Comment