Friday 23 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 8

மறக்க முடியாத முகங்கள் 8:

பயம் என்றால் என்ன? எப்படி இருக்கும்? நாம் பயப்படும்போது நம் முகம் எப்படி இருக்கும்? முகம் அஷ்டகோணலாக மாறுமா? இல்லை, நம்மை அறியாமல் திரைப்படக் கதாநாயகிகளைப் போல் வாயில் கை வைத்து அலறுவோமா?

சிறுவயதில் நிச்சயமாக பயந்திருப்போம். அதை யாராவது புகைப்படம் எடுத்து வைத்திருந்தால், அந்தப் புகைப்படத்தை நாம் இப்போது பார்க்க நேரிட்டால் “இதுக்கெல்லாமா பயந்தேன்?” என்று மனதுக்குள் சிரித்துக் கொள்வோம்.

ஆனால், வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு, நம்மில் பெரும்பாலானோர் இன்னும் உண்மையான பயத்தை அனுபவித்திருக்க மாட்டோம் என்றே நினைக்கிறேன் (திருமணமானவர்கள் இதற்கு விதிவிலக்கு). இது நல்லதா, கெட்டதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

சிறுவயதில் நாம் பயந்தபோது இருந்த நம் முகம், அந்த முகபாவம் இப்போது நம் நினைவில் இருக்க வாய்ப்பில்லை. விளையாட்டாக நம்மை பயமுருத்தியிருந்தாலும், அப்போது அது நமக்கு அசுர பயமாகத்தான் இருந்திருக்கும். நாம் சமீபத்தில் பார்த்த ஒரு சிறுவனது முகம் இப்படித்தான் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு, ஆட்டோவில் பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன். இரவு 10 மணி இருக்கும். வழியில் ஒரு டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அங்கு நின்றோம்.

அந்த இடத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது. நம்மூர் முனியாண்டி விலாஸ் போன்ற ஒரு ஹோட்டல் அது. அதன் வாசலில் இரண்டு பேர் ஒரு சிறுவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். அவனுக்கு 10, 11 வயது இருக்கும் என நினைக்கிறேன். மாநிறம். மொட்டைத் தலையில் ஆங்காங்கே முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் எப்படியாவது இவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட வேண்டும் என நினைத்து, பின்னால் சாய்ந்தபடியே கைகளை இழுத்தவண்ணம் இருந்தான். தப்பிக்க முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில் அங்கு இன்னொருவர் வந்தார். அவரும் அவனை நெருங்கி, சத்தம் போட்டு, மிரட்ட ஆரம்பித்தார். மூன்று பேரும் சேர்ந்து பலத்த குரலில் அவனைத் திட்ட ஆரம்பித்தனர். அப்போது அவன் முகத்தில் பயம் சத்தம்போட ஆரம்பித்தது. “சாரிண்ணா, சாரிண்ணா” என்று அலற, அழ ஆரம்பித்தான். இவர்கள் கேட்பதாகயில்லை. தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தனர். அந்த நேரத்தில் சிக்னலில் பச்சை விழுந்ததால் அடுத்து என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆட்டோவிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தபோது ஒருவரின் கை மேலும் கீழும் போய்க்கொண்டிருந்தது. அடிக்க ஆரம்பித்துவிட்டனரோ என்று வருத்தமாக இருந்தது.

எதையோ திருடிவிட்டானோ, அல்லது ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தப்பித்து ஓட நினைத்தானோ தெரியவில்லை. கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டான். அதனால் இந்த அடி. எத்தனையோ பேர் எவ்வளவோ கொள்ளையடித்தும் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பையனின் நிலைமை பாவமாக இருந்தது.

திருடுவது தவறுதான். திருடர்களைப் பார்த்தால் கோபம் பீறிட்டு வருவது இயற்கை. ஆனால், இந்த மாதிரி ஒரு சிறுவன் திருடிவிட்டு, பிடிபடும்போது கோபத்துடன் சேர்த்து வேதனையும், வருத்தமும் வரும். இந்தச் சிறு வயதில் திருடுகிறானே என்ற வேதனை, வருத்தம். இந்த வேதனையை, வருத்தத்தை நம் மூளை புரிந்துகொள்வதற்குள், நம் கோபம் அதிகரித்துவிடுகிறது. கோபத்தின்முன் எல்லாமே இரண்டாம்பட்சம்தான். அதனால் அடுத்து அடிதான்.

அந்தச் சிறுவனால் நேரடியாக பாதிக்கப்பட்டது நானில்லை என்பதாலோ என்னவோ எனக்குக் கோபம் வரவில்லை; வருத்தமும் வேதனையும் மட்டுமே மிஞ்சியது. கனமான மனதுடன் ரயிலேறினேன்.



பயம் தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் முகத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

No comments:

Post a Comment