Friday 6 June 2014

சுயம்வர போட்டிகள் - டிப்ஸ் (January 2014)

சுயம்வர போட்டிகள் - டிப்ஸ்

சுயம்வரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மன்னர்கள், தங்கள் மகள்களின் துணைகளைத் தேர்ந்தெடுக்க பன்னாட்டு அரசர்களை, இளவரசர்களை அழைத்து, போட்டிகள் நடத்தி, அவற்றில் வெற்றி பெறுபவர்களுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பார்கள்.

முன் ஜென்ம ஞாபகம் இருப்பவர்களுக்கு, தாங்கள் சுயம்வரத்தில் பங்கெடுத்து வென்றதும் / தோற்றதும் இன்னும் நினைவில் இருக்கும்.

இந்த ஜென்மத்தில் கூட சில நவீன சுயம்வரப் போட்டிகள் நடந்திருக்கின்றன என்பதை திரைப்படங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. கல் தூக்கும் போட்டி, காளையை அடக்கும் போட்டி, படகு ஓட்டும் போட்டி போன்ற விதவிதமான போட்டிகள்.

இந்தக் காலத்தில், இணையதள ஃபேஸ்புக், டிவிட்டர் காலத்தில் இப்படி என்னென்ன போட்டிகளை நடத்தலாம் என்ற ஒரு கற்பனை ஆக்கம்தான் இது.

டிஸ்க்ளைமர்: இந்த லிஸ்ட்டில் வரும் போட்டிகளும், கருவிகளும், சூழ்நிலைகளும், கேள்விகளும் யாரையும் குறிப்பிடுவன அல்ல. முழுக்க முழுக்கக் கற்பனையே. இந்த மாதிரி சம்பவங்கள் யார் வாழ்விலாவது நிகழ்ந்திருந்தால் / இனிமேல் நிகழ்ந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

தலைப்புகள்:
கணிணி / இணையதள அறிவு
பொது அறிவு
அரசியல்
திரைப்படம்
விளையாட்டு

கணிணி / இணையதள அறிவு:

1. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் ஐ.ஆர்.சி.டி.சியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போட்டி வைக்கலாம். அப்படி டிக்கெட் முன்பதிவு செய்ய முடிந்தவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. ஃபேஸ்புக் / டிவிட்டர் தளங்களில் எத்தனை ப்ரொஃபைல்கள் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவற்றை ஆராயந்து சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. அ. (உட்பிரிவு). ஃபேஸ்புக் / டிவிட்டர் தளங்களில் அவர்கள் போடும் நிலைத்தகவலைப் (ஸ்டேட்டஸ்) பார்த்து, ஆராய்ந்து சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. ஆ. (உட்பிரிவு). ஃபேஸ்புக் / டிவிட்டர் தளங்களில் காணப்படும் ப்ரொஃபைல்களில் சிலவற்றைக் காட்டி, அவற்றுள் எவை ஒரிஜினல், எவை போலி என்பதை சரியாகச் சொல்பவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. ‘கணிணி மூலம் ஜோசியம் பார்ப்பதால் விளையும் நன்மைகள்’ என்ற தலைப்பில் ஒரு பேச்சுப்போட்டி நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
4. ‘சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்வதில், அவற்றைச் செய்வதில் திறமைசாலிகள் கணிணிகளா, கணவன்மார்களா?’ என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


பொது அறிவு:

1. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சாலை விதிகளை, போக்குவரத்து விதிகளை எத்தனை நாள் கடைப்பிடித்து வண்டி ஓட்டுகிறார்கள் என்பதையே ஒரு தனிப்பெரும் போட்டியாக வைக்கலாம்.
2. கோடைக் காலத்தில் அவரவர் ஊரில் எத்தனை மணி நேரம் மின்வெட்டு என்றும், எப்போது இந்த மின்வெட்டு நடக்கும் என்றும் கேட்கலாம்.
2. அ. (உட்பிரிவு). வீட்டில் இன்வர்ட்டர் / யூ.பீ.எஸ் / ஜெனரேட்டர் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். அங்கு சென்று வாழப்போகிறவள் உங்கள் மகள் அல்லவா?
3. அவரவர் ஊரில் டாஸ்மாக் கடைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கேட்கலாம்.
3. அ. (உட்பிரிவு). சரக்கு பாட்டில்களின் விலையைப் பற்றி கேள்விகள் கேட்கலாம். பதில் சரியாகச் சொல்பவர்களை நிராகரிக்கலாம்.
3. ஆ. (உட்பிரிவு). ‘கட்டிங் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு சரக்கைப் பற்றி மட்டுமே பதில் சொல்பவர்களை நிராகரிக்கலாம்.
4. ‘ஆண்களுக்கான டியோடரண்ட் விளம்பரங்களில் அரைகுறை ஆடைகளில் வரும் பெண்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

  
அரசியல்:


1. தேர்தல் நேரம் என்றால் வாக்களித்ததற்கான அடையாளமாக கையில் மை இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். அப்படி கையில் மை இருக்குமானால், அதை நன்றாகக் கழுவியும் போகாமல் இருக்கிறதா என்றும் பரிசோதிக்கலாம்.
1. . (உட்பிரிவு). ஒரு வேளை அவர்கள் வாக்களித்திருந்தால், ஃபேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ வாக்களித்ததைப் பற்றி ஸ்டேட்டஸோ, ஃபோட்டோவோ போட்டிருக்கிறார்களா என்பதைப் பார்த்து அதற்கேற்றபடி தேர்ந்தெடுக்கலாம்.
2. நம் நாட்டில் நடந்த ஊழல்களைப் பற்றி ஒரு பொது அறிவுப் போட்டி நடத்தலாம்.
3. அரசியல் கட்சிகளின் முழு பெயர்களையும், அவர்களின் சின்னங்களையும், கொள்கைகளையும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொலைக்காட்சி சேனல்களையும் சரியாகச் சொல்லவேண்டும் என்று தீர்மானிக்கலாம்.
4. ‘ஏகப்பட்ட ஆண்டுகளாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடாகவே இருக்கும் நம் இந்தியா என்றைக்கு முன்னேறிய நாடாகும்?’ என்ற தலைப்பில் ஒரு பேச்சுப்போட்டி நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


திரைப்படம்:

1. ‘புரியாத புதிர்’ திரைப்படத்தில், நடிகர் ரகுவரன், எத்தனை முறை ‘I Know’ என்று சொன்னார் என்றும் ‘கில்லி’ திரைப்படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் எத்தனை முறை ‘செல்லம்’ என்று சொன்னார் என்றும் கேட்கலாம்.
2. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிவந்த திரைப்படங்களில், ஹீரோ இன்ட்ரோ சாங் (கதாநாயகன் அறிமுகப் பாடல்) இல்லாத 20 திரைப்படங்களைப் பட்டியலிடச் சொல்லலாம்.
2. அ. (உட்பிரிவு) மேற்கூறப்பட்டுள்ள காலக்கட்டத்தில் வெளிவந்த திரைப்படப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகளே இல்லாத 30 பாடல்களைப் பட்டியலிடச் சொல்லலாம்.
2. ஆ. (உட்பிரிவு) ஒரு திரைப்படம் எத்தனை நாட்கள் ஓடினால் அதன் வெற்றிவிழா கொண்டாடலாம் என்று கேட்கலாம். சரியான விளக்கத்துடன் பதில் சொல்பவரைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. நடிகர்களின் கட் அவுட்களுக்குப் பால் அபிஷேகம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், நடிகைகளுக்குக் கோவில்கள் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடத்தி, அவற்றில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
4. ‘திரைப்படங்களில் அமெரிக்க மாப்பிள்ளைகளின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு பேச்சுப்போட்டி நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.



விளையாட்டு:


1. ஒலிம்பிக் போட்டிகளில் இருநூறு இந்திய வீரர்கள் பங்கேற்றால், அவர்களுடன் எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் செல்வார்கள் என்று கேட்கலாம். இருநூறுக்கும் மேல் என்ற சரியான விடையைச் சொல்பவர்களைப் பரிசீலிக்கலாம்.
2. ‘ஐ.பி.எல் போட்டிகளில் சீயர் லீடர்களுக்கும் கிரிக்கெட் போட்டிக்குமான சம்பந்தம்’ என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. அ. (உட்பிரிவு). ஐ.பி.எல் சீசன்போது, ‘நம் தேசிய விளையாட்டு என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஹாக்கீ’ என்ற சரியான பதிலைச் சொல்பவர்களைப் பரிசீலிக்கலாம்.
3. ‘அரசியலில் விளையாட்டு வீரர்கள் நுழைவதால் விளையும் நன்மைகள் அதிகமா, விளையாட்டில் அரசியல்வாதிகள் நுழைவதால் விளையும் நன்மைகள் அதிகமா’ என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
4. ‘சதுரங்கப் போட்டியில் எதற்காக வெள்ளை காய்களைக் கொண்டு ஆட்டத்தை தொடங்க வேண்டும், ஏன் கறுப்பு காய்களை முதலில் நகர்த்தக்கூடாது?’ என்ற கேள்விக்குச் சரியான பதில் சொல்பவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
5. ‘வீரர்கள் தங்களின் முழு உழைப்பை தருவது விளம்பரங்களிலா, விளையாட்டுப் போட்டிகளிலா?’ என்ற தலைப்பில் ஒரு பட்டி மன்றம் நடத்தி, அதில் சிறப்பாகப் பேசுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.


No comments:

Post a Comment