Sunday 8 June 2014

யாரது (06 - 10) (September 2013)

6. கடற்கரை சாலையை வந்தடைந்தனர் இருவரும். ஒரு டீக்கடையின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தனர். கரையை நெருங்கும்வரை இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டே நடந்தனர். அவர்களது வலது பக்கத்தில், சற்று தொலைவில், கரைக்கு அருகில் ஏதோ ஒரு கூட்டம் கூடியிருந்தது.

“மோகன், ரைட் சைடுல பாரு. ஏதோ ஒரு கூட்டம் இருக்கு. என்னன்னு போய் பாப்போம் வா”, என்றான் சிவா. இருவரும் அந்த கூட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

கூட்டத்துக்குப் பின்னால் வந்து நின்றனர். ஆனால் எதுவும் தெரியவில்லை, என்ன நடக்கிறது என்பதும் புரியவில்லை. அங்கு கூடியிருந்த மக்கள், கரையின் ஒரு பகுதியை சுற்றி வளைத்து நின்றவண்ணம் இருந்ததால், கூட்டத்தின் நடுவில்தான் ஏதோ முக்கியமான ஒன்று நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனால் கூட்டத்தில் இருந்த மக்கள் அனைவரும் அமைதியாக இருந்ததால் என்ன நடக்கிறது என்பதை கேட்கவும் முடியவில்லை.

கஷ்டப்பட்டு கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தால் அங்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், கரை மணலில் முட்டிபோட்டவண்ணம் மணலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சில அடிகள் முன்னால் நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் நான்கு திசையிலும் நின்று யாரும் அங்கு நுழையாதவண்ணம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து சிவா, “ஹாய் விஜய். எப்படி இருக்கே? நான் யார்னு தெரியுதா? என்றான். யாரது தன்னை பெயர் சொல்லி கூப்பிடுவது என்று அந்த இன்ஸ்பெக்டர் சுற்றிமுற்றி பார்க்க, அவன் திசையை நோக்கி கையசைத்தான் சிவா.

“ஹாய் டா சிவா. என்ன இந்தப் பக்கம்? எப்படி இருக்க? என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

“நான் நல்லாருக்கேன் டா. இன்னிக்கு சனிக்கிழமை ஆச்சே. அதான் சும்மா அப்படியே பீச்சுக்கு வரலாம்னு நானும் என் ஃப்ரெண்டும் வந்தோம். இவன்தான் மோகன். என் ரூம்மேட், ஃப்ரெண்ட்என்று மோகனை விஜயிடம் அறிமுகம் செய்துவைத்தான் சிவா. “இருடா வர்றேன் என்று விஜய் சிவாவிடம் சொல்லி, தொலைவில் நின்றுகொண்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டரை அழைத்தான்.

“டேய் சிவா. என்னடா உனக்கு போலீஸ்ல கூட ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா? சொல்லவேயில்லை?என்றான் மோகன். அதற்கு சிவா, “ஆமாம்டா. நானும் அவனும் ப்ளஸ் டூ வரைக்கும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். அப்போ ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் நாங்க. அப்பறம் நான் இங்க வந்துட்டேன். அவன் போலீஸ் ஆகிட்டான் என்றான்.

சப்-இன்ஸ்பெக்டரை அந்த இடத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து சிவாவையும், மோகனையும் கூட்டிக்கொண்டு நடந்தான் விஜய்.

“இன்னிக்கு காலங்காத்தால ஒரு தியேட்டர் ஓனரோட பையன யாரோ கொன்னுட்டாங்கன்னு நியூஸ்பேப்பர்ல பாத்திருப்பியே. அந்த கொலை இந்த இடத்துலதான் நடந்திருக்கு. அதான் ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பாத்துட்டு இருக்கேன்”, என்றான் விஜய்.

“இந்த இடத்த சுத்தியும் பாத்தாச்சா? இத்தன ஜனங்க இங்க நின்னுட்டு இருக்கோமே. ஏதாவது க்ளூ இங்க இருந்து, அது எங்களோட கால் பட்டு அழிஞ்சிடுச்சுன்னா? என்றான் மோகன்.

“அங்க எல்லாம் காலைலேயே பாத்துட்டோம். இன்னும் சொல்லப்போனா, இன்னிக்கு காலைல 11 மணி வரைக்கும் யாரையுமே இந்த இடத்துல இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் உள்ளே வர அனுமதிக்கவேயில்லை. சுத்தமா தேடிப் பாத்துட்டோம். இந்த இடத்துக்குப் பக்கத்துல ஏழு, எட்டு இடத்துல அந்த பையனோட ரத்தம் தெளிச்சிருக்கும் போல. அந்த மணலை எல்லாம் எடுத்துட்டு போய் ப்ளட் க்ரூப் டெஸ்ட் பண்ண அனுப்பினோம். அது அந்த முருகனோட ப்ளட் க்ரூப் ரத்தம்தான்னு கன்ஃபர்ம் ஆகியிருக்கு

“கொடூரமா கொலை பண்ணியிருக்காங்கன்னு கேள்விப்பட்டேனே. அப்படியா?

“ஆமாம், இன்னிக்கு காலைல வந்து பாத்தப்போ, அடிச்ச அடியில அந்த பையனோட மண்டை ஓடு பயங்கரமா உடைஞ்சு போயிருந்துச்சு. யார் இந்த அளவுக்கு பயங்கரமா கொன்னாங்கன்னு தான் தெரியல

“எந்த விஷயத்துக்காக இப்படி கொன்னுருக்கானுங்கன்னு ஏதாவது தெரிஞ்சுதா? நானும் சிவாவும் ரொம்ப நேரமா இதப்பத்தி தான் பேசிட்டு இருக்கோம்

“அது இன்னும் தெரியல. காலைல இருந்து ஒரு க்ளூவும் கிடைக்கல. பக்காவா ப்ளான் பண்ணி கொலை செஞ்சிருக்கானுங்க. பல பேர்கிட்ட விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா இன்னும் எதுவும் சரியா தெரியல. அவனோட கறுப்பு ஸ்கார்ப்பியோ கார் இந்த பீச் ஓரத்துல தான் நின்னுட்டிருந்தது. அதுலயும் செக் பண்ணிட்டோம், ஒரு க்ளூவும் கிடைக்கல. அவனோட கை ரேகைதான் கார்ல இருக்கு, வேற எந்த ஒரு கை ரேகையும் பதிவாகல

“ஒரு க்ளூவும் கிடைக்கலயா? பொதுவா தப்பு செய்யறவங்க, அவங்களுக்கே தெரியாம ஏதாவது ஒரு க்ளூவ விட்டுட்டு போயிடுவாங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேனே. இதுல அப்படி ஒன்னும் கிடைக்கலயா?

“ஆமா மோகன். இந்த பீச் முழுசா தேடியாச்சு. மணல ஜலிச்சே பாத்தாச்சு. ஒரு சின்ன துப்பு கூட கிடைக்கல

அந்த பையனோட அப்பாவுக்கு வேண்டாதவங்க யாராவது இப்படி செஞ்சிருக்கலாமில்ல? யாராவது ஃபோன் பண்ணி மிரட்டினாங்களா? என்று கேட்டான் சிவா. அதற்கு விஜய், “இல்ல. ஒரு ஃபோனும் வரல அவருக்கு. சும்மா அப்படியே ஹோட்டலுக்குப் போயிட்டு வர்றேன்னு சொல்லி அவனோட கார்ல கிளம்பியிருக்கான். அவனே ஓட்டிட்டு போயிருக்கான். அவ்ளோதான் என்று சொல்லி முடிக்கும்போது அவனது மொபைல் ஃபோனுக்கு அவனுடைய மேலதிகாரியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

மொபைலில் பேசி முடித்துவிட்டு விஜய், “சரிடா சிவா, மோகன். கமிஷனர் ஆஃபீஸுக்குப் போகணும். அப்பறமா பாக்கலாம். ஃப்ரீயா இருக்கும்போது என் மொபைலுக்கு கால் பண்ணு. எங்கயாவது வெளிய போகலாம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான் விஜய். பதில்களைவிட கேள்விகளே அதிகமாகியிருந்தன மோகனிடம். அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தனர் மோகனும், சிவாவும்.

“என்னடா சிவா இது, ஒன்னுமே புரிய மாட்டேங்குது. பயங்கரமான ஒரு கொலை நடந்திருக்கு. ஆனா ஒரு க்ளூவும் கிடைக்கல. பையன் கிளம்பினதுக்கு அப்பறம் அந்த பையனோட அப்பாவுக்கு எந்த ஒரு மிரட்டல் காலும் வரல. ஒரே குழப்பமா இருக்கு என்றான் மோகன்.
அதற்கு சிவா, “கொஞ்ச நாள் பொறுத்திருந்து பாப்போம் டா. 

போலீஸ்காரங்க இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல எப்படியும் உண்மை தெரிஞ்சிடும். அது வரைக்கும் நீ மண்டைய போட்டு குழப்பிக்காதே டா என்றான். உண்மை வெளிவரும் வரை, காத்திருப்பதை விட வேறு வழியில்லை என்பது மோகனுக்கும் புரிந்தது. இந்தக் கொலையைப் பற்றி பேசியே அந்த நாளைக் கழித்தனர் இருவரும்.



7. சனிக்கிழமை முழுவதும் அந்தக் கொலையைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்ததால் அன்றிரவு சிவாவால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தூக்கத்தில், தான் பார்த்த ஆங்கிலமொழிப் பேய் படங்களில் வரும் கோரக் காட்சிகள் அவனுடைய கனவில் மாறி மாறி வந்தது. தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

ஞாயிற்றுக்கிழமை. காலை பத்து மணி ஆகியும் சிவா எழுந்திருக்கவில்லை. ரமேஷ் வழக்கம்போல் வீட்டில் இல்லை. மோகன் அப்போதுதான் குளித்துவிட்டு வந்தான்.

“டேய் சிவா, எழுந்திருடா. மணி பத்து ஆச்சு. சாப்பிடாம இருக்காதே. அல்சர் வரும் என்று சிவாவை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தான் மோகன். அதற்கு சிவா, “நைட்டு பூரா சரியான தூக்கமே இல்ல டா. இப்பதான் தூக்கம் வர்ற மாதிரி இருக்கு. நீ போய் சாப்பிட்டுட்டு, எனக்கு ஏதாவது டிஃபன் பார்சல் வாங்கிட்டு வா. நான் எழுந்ததுக்கப்பறம் சாப்பிட்டுக்கறேன் என்றான்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தான் மோகன். பக்கத்தில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் டிஃபன் சாப்பிட்டு முடித்துவிட்டு, சிவாவுக்கும் ஒரு பார்சல் வாங்கிக்கொண்டு வந்தான்.

இன்னும் சிவா படுத்துக்கொண்டுதான் இருந்தான். “சிவா, நான் டிஃபன் வாங்கி வந்திருக்கேன். சாப்பிட்டுட்டு தூங்கு. எழுந்திரு முதல்ல என்று சிவாவை உலுக்கி எழுப்பினான் மோகன்.

“என்னடா டேய், உன் தொல்லை தாங்க முடியல. கொஞ்ச நேரம் தூங்க விடறியா

“அப்பறமா தூங்கலாம். முதல்ல இந்த டிஃபனை சாப்பிடு. காலங்காத்தால வயித்த பட்டினி போடாதே

எழுந்து சென்று பல் துலக்கிவிட்டு, மோகன் வாங்கி வந்திருந்த டிஃபனை சாப்பிட்டான் சிவா. அவனுடைய கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்த மோகன், “என்னடா, உன்னோட கண்ணெல்லாம் சிவந்திருக்கு? என்னாச்சு? என்றான்.

அதற்கு சிவா, “அதான் சொன்னேனே. ஒழுங்கா தூங்கலன்னு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை முழிச்சேன். விட்டுவிட்டு தான் தூங்கினேன். டிஸ்டர்ப்டு ஸ்லீப் என்றான்.

“அதான் ஏன்னு கேட்டேன். நீ எப்பவுமே ஒழுங்கா தூங்கிடுவியே. தரையை முகர்ந்தவுடனே தூங்கறவனாச்சே நீ. உனக்கா இந்த நிலைமை?

“எல்லாம் உன்னாலதான். தேவையில்லாம அந்த முருகனோட கொலையைப் பத்தி ஓவரா யோசிச்சதால என் கனவுல மாத்தி மாத்தி பேய் படத்தோட சீனா வந்துச்சு. அதுலதான் தூக்கம் கலைஞ்சு போச்சு

“இன்னுமாடா நீ வளரல? கனவுல பேய், மிருகம், அதனால தூக்கம் போச்சு, பயமா இருந்துச்சுன்னு சின்ன பசங்க மாதிரி சொல்றியேடா

“உனக்கென்னடா தெரியும். என் கனவுல வந்த பேய்ங்க, உன் கனவுலயும் வந்தாதான் தெரியும். இதெல்லாம் எப்படியாவது கேமராவுல ரெக்கார்ட் பண்ண முடிஞ்சா அத உனக்குப் போட்டுக் காட்டுவேன். அப்போ உனக்கே தெரியும் எவ்ளோ பயங்கரமா இருந்துச்சுங்க அந்த பேய்ங்கன்னு

“ஆமாமா, அப்படியே கேமராவுல ரெக்கார்ட் பண்ணினாலும்... என்று சொல்லும்போது ஏதோ ஒரு விஷயம் தோன்றியது மோகனுக்கு.

“டேய் சிவா, நேத்து நடந்துச்சே அந்த கொலை... என்று மோகன் ஆரம்பித்த மறு நொடி “டேய் போதும்டா சாமி. இனிமே நான் அதைப்பத்தி கேக்க மாட்டேன். ஆள விடு என்றான் சிவா.

“முழுசா கேளுடா. அந்த பையனோட வீடு இருக்கற இடம் டி.நகர். நேத்து அந்த பையன் வீட்டை விட்டு தன்னோட காருல கிளம்பினான். அவனை கொலை செஞ்சது மெரினா பீச்சுல. அவனோட கார் பீச் ஓரத்துல இருந்ததா உன் ஃப்ரெண்ட் விஜய் சொன்னான். ஸோ, அவன் மவுன்ட் ரோடு வழியா போயிருந்தான்னா, அவன் அங்க கார்ல வந்தது, மவுன்ட் ரோடுல இருக்கற ஏதாவது ஒரு டிராஃபிக் கேமராவுல ரெக்கார்ட் ஆகியிருக்கும் இல்லையா?

இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட சிவா, “டேய், நீ சொல்றது கரெக்ட்டு டா. ஒரு வேளை ரெக்கார்ட் ஆகியிருந்தா, அவன் கூட யாராவது இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கலாம். நான் உடனே விஜய்க்கு ஃபோன் பண்றேன் என்று உற்சாகத்துடன் சொன்னான். விஜய்க்கு ஃபோன் செய்தான்.

“ஹலோ விஜய், நான் சிவா பேசறேன்டா. கொஞ்சம் ஃப்ரீயா இருக்கியா? உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தப் பத்தி தனியா பேசணும் என்றான் சிவா. அதற்கு விஜய், “என் வீட்டுக்கு வா. அப்பா, அம்மா எல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க. வீட்டுல என்னைத் தவிர வேற யாரும் இல்ல. இங்கயே பேசலாம் என்றான்.

“மோகன், விஜய் வீட்டுக்கே போயிடலாம். அவன் வீடு எங்க இருக்குன்னு எனக்குத் தெரியும். அவன் வீட்டுல வேற யாரும் இப்போ இல்லையாம். அதனால, அங்கயே இதப்பத்தி பேசலாம். நான் போய் குளிச்சுட்டு ரெடி பண்ணிட்டு வர்றேன் என்றான் சிவா.

சரியாக ஒரு மணி நேரத்தில் விஜய் வீட்டை வந்தடைந்தனர் மோகனும், சிவாவும். “வாடா சிவா, வாடா மோகன். உக்காருங்க என்று அவர்களை வீட்டிற்குள் அழைத்து சோஃபாவில் உட்கார வைத்தான் விஜய்.

“சொல்லுடா சிவா. ஏதோ முக்கியமான விஷயத்தப் பத்தி பேசணும்னு சொன்னியே”, என்றான் விஜய். “ஒன்னுமில்ல விஜய். எல்லாம் அந்த கொலை சம்பந்தப்பட்டது தான்என்றான் மோகன்.

“சொல்லு மோகன்

முருகனோட கார் பீச் ஓரத்துல இருந்ததுன்னு நீ சொன்னியே. அத யார் ஓட்டிட்டு வந்தாங்கன்னு ஏதாவது தெரியுமா

“இல்ல, இன்னும் அந்த ஆங்கிள்ல விசாரிக்கல. இப்போதைக்கு அந்த பையனுக்கோ, இல்ல அவனோட அப்பாவுக்கோ எதிரிங்க யாராவது இருக்காங்களான்னு தான் விசாரிச்சுட்டு இருக்கோம்

“டி.நகர்ல இருந்து அந்த பையன் ஹோட்டலுக்குப் போயிட்டு வர்றேன்னு கிளம்பியிருக்கான். கடைசில அவன் கார் பீச்சுல இருந்திருக்குது. ஒரு வேளை அவன் மவுன்ட் ரோடு வழியா பீச்சுக்கு வந்திருக்கலாம் இல்ல

“ஆமாம், அதுக்கும் சான்ஸ் இருக்கு

“ஸோ, அப்படி அவன் மவுன்ட் ரோடு வழியா வந்திருந்தான்னா, அதுல இருக்கற ஏதாவது ஒரு டிராஃபிக் கேமராவுல அவன் கார் கடந்து போறது ரெக்கார்ட் ஆகியிருக்கும். அதுல பாத்தா அவன் கூட யாராவது இருந்தாங்களான்னு தெரிஞ்சுக்கலாம் இல்லையா?

“ப்ரில்லியன்ட் மோகன். அதுல பாத்தா நமக்கு விஷயம் கொஞ்சம் கிளியராகும். இருங்க நான் ரெடி பண்ணிட்டு வர்றேன். டிராஃபிக் கன்ட்ரோல் ரூமுக்குப் போகலாம், தேங்க் யூ, தேங்க்ஸ் எ லாட் என்று மோகனின் கையை குலுக்கிவிட்டு உடை மாற்றிக்கொள்ள உள்ளே சென்றான் விஜய்.

அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் உடைக்கு மாறினான் விஜய். அவனுடைய பைக்கில் ஏறி உட்கார்ந்து “என்னை ஃபாலோ பண்ணிட்டு வாங்க ரெண்டு பேரும் என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்தான். அங்கிருந்து டிராஃபிக் கன்ட்ரோல் ரூமுக்குக் கிளம்பினர் மூவரும்.


8. டிராஃபிக் கன்ட்ரோல் ரூமை வந்தடைந்தனர் மூவரும். விஜயைப் பார்த்தவுடன் வாசலில் இருந்த செக்யூரிட்டி எழுந்து நின்று சல்யூட் அடித்தார். விஜயும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து உள்ளே சென்றான்.

பின்னால் வந்த மோகன், சிவா வண்டியை வாசலில் நிறுத்தி அவர்களை விசாரிக்க ஆரம்பித்தார் அந்த செக்யூரிட்டி. அதைப் பார்த்த விஜய் செக்யூரிட்டியிடம் அவர்களை உள்ளே அனுப்புமாறு சைகை காட்ட, அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

வண்டியை காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு உள்ளே வந்தனர் மோகனும், சிவாவும். ஒரு கல்யாண மண்டபம் அளவுக்கு மிகப்பெரிய அறை அவர்களை வரவேற்றது. சுற்றியிருக்கும் சுவர்களில் 21 இன்ச் டி.விக்கள் வரிசையாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. 4 டி.விக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் அங்கு போலீஸ்காரர்கள் இருந்தனர்.

இடது பக்கத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த விஜயைப் பார்த்து அவனுக்கு அருகில் சென்று நின்றனர் மோகனும், சிவாவும். “சேர் எடுத்துப் போட்டு உக்காந்துக்கங்க என்றான் விஜய். பக்கத்தில இருந்த இரண்டு சேர்களை இழுத்துப்போட்டு உட்கார்ந்தனர்.

அவனுக்கு எதிரே இருந்த 4 டி.விக்களில் ஒன்றைச் சுட்டிக்காட்டி, “கோபி, மவுன்ட் ரோடு ட்ராஃபிக் கேமரால தெரியறது எல்லாம் இந்த டி.வில தானே தெரியும்? என்று கேட்டான் விஜய். “ஆமாம் சார். இதுதான் அந்த கேமிராவோட கனெக்ட் ஆகியிருக்கு என்றான் அந்த கேமராக்களையும், டி.விக்களையும் இயக்கிக்கொண்டிருந்த கோபி.

“நேத்து காலைல ஒரு மணியில இருந்து, ரெண்டு மணி வரைக்கும் என்னென்ன வண்டிங்க போச்சுன்னு பாக்க முடியுமா? அதெல்லாம் ரெக்கார்ட் ஆகியிருக்குமா? என்று கேட்டான் விஜய். “இருக்கும் சார். ஆனா இப்போ பாக்க முடியாது சார். ஏன்னா நான் இப்போ ட்ராஃபிக்க மானிட்டர் பண்ணணும். வேணும்னா உங்களுக்கு அந்த டைம் பீரியட்ல ரெக்கார்ட் ஆனதை ஒரு டி.வி.டியில போட்டுத் தர்றேன் என்றான் கோபி.

அதற்கு விஜய், “சரி கோபி. எதுக்கும் நேத்து நைட் 12:30 மணியிலிருந்து 2:30 மணிவரை ரெக்கார்ட் ஆனதை எனக்கு ஒரு டி.வி.டியில ரைட் பண்ணி கொடுத்துடு என்றான். அடுத்த பத்து நிமிடத்திற்குள் அதை ஒரு டி.வி.டியில் ரெக்கார்ட் செய்து அந்த டி.வி.டியை விஜயிடம் கொடுத்தான் கோபி. “தேங்க்ஸ் எ லாட் கோபி. அப்பறம் பாப்போம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான் விஜய். அவனைப் பின்தொடர்ந்து சென்றனர் மோகனும், சிவாவும்.

விஜய் வீட்டை வந்தடைந்தனர் மூவரும். பூட்டைத் திறந்து உள்ளே நுழையும்போது, “விஜய், தினம் எல்லா டிராஃபிக்கையும் ரெக்கார்ட் பண்ணுவீங்களா? என்று கேட்டான் சிவா. அதற்கு விஜய், “ஆமா, கடந்த சில வருஷமா இப்படித்தான் செஞ்சுட்டு வர்றோம். ஆனா, இந்த விஷயம் ஜனங்களுக்குத் தெரியாது என்றான்.

வீட்டுக்கூடத்தில் உள்ள சோஃபாவில் உட்கார்ந்தனர் மோகனும், சிவாவும். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் விஜய். டி-சர்ட், ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு வந்து டி.வியையும் டி.வி.டி ப்ளேயரையும் ஆன் செய்து, கோபி கொடுத்த அந்த டி.வி.டியை அதனுள் போட்டான்.

வீடியோ ப்ளே ஆக ஆரம்பித்தது. டி.வி ஸ்கிரீனில் அப்போதைய நேரம் தெரிந்தது, அதாவது வீடியோ துவங்கும்போது மணி இரவு 12:30 மணி என்று காட்டியது. 12:30 மணி என்று ஆரம்பித்த அந்த வீடியோவில் 12:45 ஆனதுவரை மொத்தம் பத்து வண்டிகள் தான் அந்த சாலையை கடந்திருப்பது தெரிய வந்தது, ஆனால் அந்த கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ மட்டும் இன்னும் வரவேயில்லை. மற்ற நேரங்களில், ஏதோ சுவற்றில் போஸ்டர் ஒட்டியது போல், சோடியம் வேப்பர் விளக்குகள் வெளிச்சத்தில் வெறும் மவுண்ட் ரோடு மட்டும் தெரிந்தது.

வீடியோவில் மணி இரவு ஒன்று ஆனது. இன்னும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ வரவில்லை. “விஜய், ஒரு வேளை, அந்த கொலைகாரங்க, வண்டிய ஏதாவது குறுக்குவழியில ஓட்டிட்டு போயிருந்தா எப்படி கண்டுபிடிக்கறது? குறுக்குவழில எல்லாம் கேமரா இல்லையே?என்று கேட்டான் சிவா.

அதற்கு விஜய், “அப்படி செஞ்சிருந்தா இந்த வீடியோல நமக்குத் தெரிய வராது. எல்லா இடத்துலயும் கேமரா இல்ல என்றான்.

“ஆனா மவுன்ட் ரோடுல இந்த மாதிரி கேமரா இருக்கற விஷயம் நிறைய ஜனங்களுக்கு தெரியாதே. அதனால இந்த ரோடுல வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன். எதுக்கும் பாப்போம் என்றான் மோகன்.

வீடியோவில் மணி 1:10 ஆனது. அப்போது திடீரென ஒரு கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ அந்த சிக்னலை அதிவேகமாக கடந்து சென்றது. “அதோ பாரு விஜய், இந்த வண்டியா இருக்கலாம். வண்டி நம்பர் செக் பண்ணியா?என்று கேட்டான் சிவா.

அதற்கு விஜய், “இருக்கலாம். ஆனா, நாம இந்த வண்டி க்ராஸ் பண்ண நேரத்த குறிச்சு வெச்சுக்கலாம். ஏன்னா இதே மாதிரி நூத்துக்கணக்கான கறுப்பு கலர் ஸ்கார்ப்பியோ நம்ம ஊருல இருக்கு. அதனால எப்பவெல்லாம் கறுப்பு கலர் ஸ்கார்ப்பியோ போகுதோ, அந்த நேரத்த குறிச்சு வெச்சுக்கலாம். அப்பறம் நம்பர் செக் பண்ண வசதியா இருக்கும் என்றான்.

“ஆனா, இந்த வீடியோவுல நம்மளால நம்பர் செக் பண்ணமுடியாதே. வண்டியே கொஞ்சம் சின்னதா தெரியுது, நம்பர் கண்டிப்பா க்ளியரா தெரியாது”, என்றான் மோகன்.

“அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல மோகன். எங்க கன்ட்ரோல் ரூம்ல, கேமரால ரெக்கார்டான வீடியோல க்ளோஸ்-அப்ல பாக்கறதுக்கு ஒரு ஸ்பெஷல் சாஃப்ட்வேர் இருக்கு. அதுல வண்டி நம்பர், வண்டி உள்ள இருக்கறவங்கன்னு எல்லாத்தையும் பாக்கலாம் என்றான் விஜய்.

வீடியோவில் 1:10 மணிக்கு கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்ததைப் போல் 1:38 மணிக்கும், 1:54 மணிக்கும், 2:08 மணிக்கும் கறுப்பு நிற ஸ்கார்ப்பியோக்கள் வந்தன. அதன் பிறகு வேறு ஒரு ஸ்கார்ப்பியோ அந்த வீடியோவில் வரவில்லை. இந்த நேரங்களைக் குறித்துக்கொண்டான் மோகன்.



9. மூவரும் மறுபடியும் டிராஃபிக் கன்ட்ரோல் ரூமுக்குச் சென்றனர். “கோபி, நான் சில டைமைக் குறிச்சு வெச்சிருக்கேன். அந்த டைம்ல வர்ற வண்டிய க்ளோஸ்-அப்ல பாக்கணும். அதுக்கு உன் உதவி வேணும் என்றான் விஜய்.

“கண்டிப்பா சார். நான் உங்களுக்கு அந்த சாஃப்ட்வேர்ல எப்படி ஆப்பரேட் பண்ணா க்ளோஸ்-அப்ல போகலாம், என்ன பண்ணா பின்னாடி வரலாம்னு சொல்லித்தர்றேன். நீங்களே அத வெச்சு பாக்கலாம் என்றான் கோபி. “சரி கோபி, அப்படியே பண்ணுவோம் என்றான் விஜய்.

டி.வி.டியை கம்ப்யூட்டருக்குள் போட்டு, அந்த சாஃப்ட்வேரை ஆரம்பித்தான் கோபி. அடுத்த ஐந்து நிமிடங்களில் விஜய்க்கு அந்த சாஃப்ட்வேரை எப்படி இயக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுத்தான். “தேங்க்ஸ் ஒன்ஸ் அகெய்ன் கோபி என்று கோபிக்கு நன்றி சொன்னான் விஜய். “இதுல என்ன சார் இருக்கு. என் கடமையைதானே செஞ்சேன் என்றான் கோபி.
வீடியோவை 1:08 மணி வரை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்தான் விஜய். 

வீடியோவில் சரியாக 1:10 மணி ஆனபோது முதல் கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்தது. சாஃப்ட்வேரை இயக்கி வண்டியின் எண்ணைப் பார்த்தான். அந்த வண்டி எண்ணும், இவர்கள் தேடிக்கொண்டிருக்கும் வண்டியின் எண்ணும் வேறு வேறு.

“சரி, முதல் ஸ்கார்ப்பியோ இல்ல. மத்த வண்டி ஏதாவதா இருக்கலாம். அடுத்த டைம் சொல்லு சிவா என்று விஜய் சொல்ல அதற்கு சிவா “அடுத்தது 1:38 மணிக்கு என்றான்.

வீடியோவை 1:36 மணி வரை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்தான் விஜய். 1:38 மணிக்கு மறுபடியும் ஒரு கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்தது. ஆனால் அந்த வண்டியின் எண்ணும் வேறு.

“அடுத்தது 1:54 மணி என்றான் சிவா. வீடியோவை 1:53 மணி வரை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து பார்த்ததில் அந்த வண்டியும் இல்லை என்று தெரியவந்தது. “சரி இதுதான் கடைசி சான்ஸ். மணி 2:08 என்றான் சிவா.
வீடியோவை 2:07 மணி வரை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்தான் விஜய். 

சரியாக 2:08 ஆனபோது ஒரு கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ வந்தது. க்ளோஸ்-அப்பில் பார்த்தால அந்த வண்டியின் எண்ணும், இவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த எண்ணும் ஒன்றே.

“மோகன், நீ சொன்னது கரெக்ட். இதுதான் அந்த பையனோட வண்டி. ஆனா யார் ஓட்டிட்டு இருக்காங்கன்னு தான் தெரியல. இரு இன்னும் கொஞ்சம் முன்னாடி போய் பாப்போம்என்றான் விஜய்.

யார் வண்டி ஓட்டியது என்பதை பார்த்ததும் விஜயின் முகத்தில் ஒரு வித ஏமாற்றம் தெரிந்தது. ஓட்டுனர் இருக்கையில் அந்த முருகன்தான் இருந்தான். பக்கத்தில் வேறு யாரும் இல்லை.

“சே, என்னடா இது. யாரு முருகனை கொன்னிருக்கலாம்னு கண்டுபிடிச்சிடலாம்னு பாத்தா, இன்னும் ஒன்னுமே தெரியலயே. அவனேதான்டா ஓட்டிட்டு போயிருக்கான். வண்டியில வேற யாரும் இல்ல என்று சற்று அலுத்தபடியே சொன்னான் விஜய்.

“இன்னும் கொஞ்சம் க்ளோஸ்-அப்ல போகமுடியுமா விஜய்? முருகனோட முகத்தை கொஞ்சம் பாக்கலாம் என்றான் மோகன். அதன்படி இன்னும் கொஞ்சம் க்ளோஸ்-அப்பில் அவனுடைய முகம் மட்டும் தெரியும்படி செய்தான் விஜய்.

முருகனுடைய முகம் சற்று வித்தியாசமாக இருந்தது. சற்று வீங்கியிருந்தது போல் தோன்றியது அவன் முகம். கண்கள் ஈரமாக இருந்தன. வெகு நேரம் அழுதால் இப்படித்தான் இருக்கும் முகம்.

“சாகறதுக்கு முன்னாடி அழுதிருக்கான் போல. கண் ஈரமா இருக்கு, முகம் பெருசா வீங்கி இருக்கு. யாராவது அந்த நேரத்துல அவனுக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்களா? என்றான் மோகன்.

“ஆமா, அவனைப் பாத்தா அழுத மாதிரிதான் தெரியுது. ஆனா, அவனோட மொபைல் ஃபோன் கால் ரெக்கார்ட் வாங்கி பாத்ததுல ராத்திரி 8 மணிலேர்ந்து அவனுக்கு எந்த ஒரு காலும் வரலன்னு தெரியுது. வீட்டை விட்டு கிளம்பும்போது கூட சிரிச்ச மாதிரிதான் கிளம்பியதா அவனோட அப்பா சொன்னாரு. ஒரே குழப்பமா இருக்கு என்றான் விஜய்.

“சரி இதுக்கு மேல என்ன நடக்குதுன்னு பாப்போம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு விஜய் என்றான் சிவா. “ரொம்ப தேங்க்ஸ் சிவா, மோகன். உங்களால ஒரு முக்கியமான விஷயம் எனக்கு கிடைச்சிருக்கு. இத வெச்சு ஏதாவது பிடிபடுதான்னு பாக்கறேன் என்றான் விஜய். அவனிடம் இருந்து விடைபெற்று கிளம்பினர் மோகனும், சிவாவும்.



10. வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தனர் மோகனும், சிவாவும். அப்போது சிவாவின் மொபைல் ஃபோன் ஒலித்தது. அவனுடைய அம்மாதான் அவனை அழைத்திருந்தார். மோகனை, வண்டியை சாலை ஓரமாக நிறுத்தச்சொல்லி, வண்டி நின்றதும் இறங்கினான் சிவா.
அம்மாவிடம் பத்து நிமிடம் பேசி முடித்துவிட்டு, மோகனிடம் சிவா, 
“இன்னிக்கு என்னோட நட்சத்திரப் பிறந்தநாளாம், எங்கம்மா சொன்னாங்க. அதனால சாயங்காலம் ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வான்னு சொன்னாங்கடா என்றான்.

“இப்பவே அஞ்சு மணி ஆச்சு. வீட்டுக்குப் போயிட்டு, குளிச்சு ரெடி பண்ணிக்கிட்டு போகலாம்டா என்றான் மோகன். அதற்கு சிவா, “சரிடா, நேரா வீட்டுக்கு ஓட்டு வண்டியை என்றான்.

மாலை ஏழு மணி. வீட்டிலிருந்து கிளம்பி அடையார் மத்திய கைலாஷ் கோவிலுக்கு வந்தனர் மோகனும், சிவாவும். “இருடா, அர்ச்சனை டிக்கெட் வாங்கிட்டு வர்றேன் என்று சொன்னான் சிவா. அர்ச்சனை சீட்டு வாங்கி உள்ளே சென்றனர் இருவரும்.

சிவா, கோவில் குருக்களிடம் தன் பெயர், நட்சத்திரம் எல்லாம் சொல்ல, அவரும் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார். மோகன் கடவுளிடம் வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியாவது அந்த கொலையாளியை கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது தான் அது. இன்னும் அவனுடைய நினைவை விட்டு அகலவில்லை அந்தக் கொடூர சம்பவம்.

அர்ச்சனை முடித்துவிட்டு, பிரசாதம் வாங்கிக்கொண்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தனர் இருவரும். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ரேவதி இருப்பதைப் பார்த்தான் மோகன். அவளும் மோகன் வருவதைப் பார்த்து, அவனை நோக்கி கையசைத்தாள்.

“டேய் மோகன், யாருடா அது? உன்னைப்பாத்துக்கூட ஒரு பொண்ணு கை ஆட்டறா? என்று கேட்டான் சிவா. அதற்கு மோகன், “இவ தான் ரேவதி. என் கூட ஆஃபீஸ்ல வேலை செய்யற பொண்ணு என்றான்.

“ஹாய் மோகன். கோவில்லாம் வர்றே நீ? என்றாள் ரேவதி. அதற்கு மோகன், “இவன் என் ஃப்ரெண்ட், ரூம்மேட் சிவா. இவனுக்கு இன்னிக்கு நட்சத்திர பிறந்தநாளாம். அவங்க அம்மா இன்னிக்காவது கோவிலுக்கு போயிட்டு வான்னு சொன்னாங்க. அதான் சும்மா அப்படியே இங்க வந்தோம் என்றான்.

“ஓ அப்படியா, ஹாப்பி பர்த்டே சிவா. ஐ அம் ரேவதி. நானும் மோகனும் ஒரே ஆஃபீஸ்லதான் ஒர்க் பண்றோம் என்றாள் ரேவதி.

“தேங்க்ஸுங்க. இப்ப தான் சொன்னான் உங்களப்பத்தி சொன்னான் மோகன் என்றான் சிவா.

“ஓகே, ஸோ.. பர்த்டேக்கு என்ன ஸ்பெஷல்? வெளிய எங்கயாவது போனீங்களா?

“ஒன்னும் ஸ்பெஷல் இல்லைங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னிக்கு கோவில் வந்திருக்கோம். அதான் ஸ்பெஷல்

“வாங்க, போங்கன்னு சொல்ல வேணாம், காஷுவலா வா, போன்னே சொல்லலாம் சிவா. அப்பறம்.. வீக்கெண்ட் என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்?“

“அத ஏன் கேக்கற? நானும் மோகனும் நேத்து ஒரு படத்துக்குப் போயிட்டு வந்து, அதுக்கப்பறம் நடந்த விஷயங்கள் இருக்கே.. யப்பா, அதெல்லாம் சொன்னா ரொம்ப நேரம் ஆகும். அது வந்து...என்று சிவா சொல்ல ஆரம்பிக்கும்போது மோகன் குறுக்கிட்டு, “அது ஒன்னுமில்ல ரேவதி. 

நேத்து படத்த பாக்கறதுக்குள்ள ஒரே அலைச்சல். அதத்தான் சொல்றான் இவன். சரி நீ நேத்து என்ன பண்ண? ஷாப்பிங்கா? என்றான்.
அதற்கு ரேவதி, “ஏன் ஷாப்பிங்கான்னு கேக்கற மோகன்?” என்றாள்.

“இல்ல, பொண்ணுங்க வீக்கெண்ட்னா பொதுவா ஷாப்பிங்க்னு ஒரு ஹாண்ட்பேக் எடுத்துட்டு கிளம்பிடுவாங்க. அதான் கேட்டேன்

“இது டூ மச். நேத்து ஃபுல்லா ரொம்ப டையர்டா இருந்தது. அதனால வீட்டுலயே ரெஸ்ட் எடுத்தேன். வெளிய எங்கயும் போகல

“ஏன்? உடம்பு சரியில்லையா?

“அதெல்லாம் இல்ல. என்னன்னு தெரியல. ஒரே டையர்டா, கொஞ்சம் வீக்கா இருந்தது. அதான் எதுக்கு வம்புன்னு வெளிய போகல”, என்று சொல்லி கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் ரேவதி. 

மணி 8 ஆகியிருந்தது.

“ரொம்ப டைம் ஆகிடுச்சு. உங்ககிட்ட பேசிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியல. நான் வீட்டுக்குப் போய் இனிமேல்தான் சமைக்கணும். ஸோ, நான் கிளம்பறேன் என்றாள் ரேவதி.

அதற்கு மோகன், “ஓகே ரேவதி. நாளைக்கு ஆஃபீஸுல பாப்போம் என்றான். “கண்டிப்பா பாப்போம். பை பை மோகன், சிவா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் ரேவதி.

“என்னடா சமைக்கணும்னு சொல்றா? அவளோட வீட்டுல யாரும் இல்லையா? என்று கேட்டான் சிவா. அதற்கு மோகன், “ஆமாம்டா. பாவம், அவளோட அப்பாவையும், அம்மாவையும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யாரோ கொன்னுட்டாங்க. இவள் தனியாதான் இருக்கா? என்றான்.

“ஸ்... அப்ப்ப்ப்பா... மறுபடியும் கொலையா? ரெண்டு நாளா கொலையப்பத்தி கேட்டு கேட்டு வெறுத்துப்போச்சு. அந்த கொலைக்கான காரணத்தையாவது கண்டுபிடிச்சாங்களா? கொன்னவங்கள பிடிச்சுட்டாங்களா?

“இன்னுமில்ல. அவளோட அப்பா ஜெய்சங்கர் போலீஸ் கமிஷனர், அம்மா சாந்தி ஒரு வக்கீல். அதனால சமூக விரோதிங்க யாரோ கொன்னுருப்பாங்கன்னு சொன்னாங்க போலீஸ். அதோட நின்னுப்போச்சு. அப்பறம் ஒரு முன்னேற்றமும் இல்ல அந்த கேஸ்ல. இவளும் கோர்ட் படிகளை, போலீஸ் ஸ்டேஷன் படிகளை பல தடவை ஏறிப் பாத்தா. ஒன்னும் நடக்கல, பாவம். அலுத்துப்போய் இப்போ விட்டுட்டா
“ஐயோ பாவம். ரொம்ப கஷ்டம் டா அந்த பொண்ணுக்கு. ஆனா ஒரு விஷயம் க்ளியரா தெரியுது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த போலீஸ் கமிஷனரோட கொலையவே இன்னும் யாரு செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கலன்னா, நேத்து நடந்த கொலைய எப்படி கண்டுபிடிக்கப் போறாங்க? விளங்கிடும்

“ம், நீ சொல்றதும் கரெக்ட்தான். பாப்போம் என்ன நடக்குதுன்னு

“அதெல்லாம் அப்பறமா பாக்கலாம். இப்போ எனக்கு பசிக்கற மாதிரி இருக்கு. வா, சீக்கிரமா போய் சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போகணும். நாளைக்கு ஆஃபீஸ் இருக்கேஎன்றான் சிவா. அதற்கு மோகன், “சரி வா, போகலாம் என்று சொல்லி கோவிலுக்கு வெளியே வந்து, அங்கு வைத்திருந்த செருப்பை மாட்டிக்கொண்டு பைக்கில் உட்கார்ந்தான். சிவாவும் அவனுடைய செருப்பை மாட்டிக்கொண்டு அவன் பின்னால் வந்து உட்கார, வண்டி புறப்பட்டது.

No comments:

Post a Comment