Sunday 8 June 2014

யாரது (16 - 19) (September 2013)

16. “டேய் சிவா, விஷயம் தெரியுமாடா என்றான் வீட்டுக்குள் நுழைந்த மோகன்.

“என்னடா விஷயம்? அந்த சுமோதான் போயிடுச்சே. எங்கேயாவது ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சா அந்த வண்டிக்கு?

“அது இல்லடா. நம்ம டாக்டர் ஜான் இருக்காருல்ல. நாம கூட அவரோட கிளினிக்குக்குப் போனோமே?

“ஆமாம், விஜய் வீட்டுல பாத்தோமே. அவர் தானே?

“அவரேதான். அவரை இன்னிக்கு காலைல கொன்னுட்டாங்க

அதிர்ந்து போனான் சிவா. “டேய், என்னடா இது? ஏன் இப்படி எல்லாம் நடக்குது?

“தெரியலடா. இவரையும் கொடூரமா கொன்னிருக்கானுங்க. மண்டையில ஓங்கி அடிச்சு கொன்னுட்டு அவரோட கையிலேர்ந்து கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் வெட்டி போட்டிருக்கானுங்க

“முருகனோட கொலைக்கும் இந்த கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ மோகன்? ரெண்டுமே கொடூரமான கொலைங்க

“இருக்கலாம்டா. ஆனா இந்த டாக்டர எதுக்காக கொன்னானுங்கன்னு தான் புரியல. முருகனாவது பணக்காரன், அதனால பொறாமைப்பிடிச்சவங்க, எதிரிங்கன்னு யாராவது இருக்கலாம். ஆனா, இவர் சாதாரண டாக்டர். அதுவும் காசு கம்மியா வாங்கற டாக்டர். இந்த மாதிரி டாக்டருங்க இந்த காலத்துல அபூர்வம். இவரப்போய் யாரு கொன்னாங்கன்னு, எதுக்கு கொன்னாங்கன்னு தெரியல

“மோகன், எனக்கு ஒன்னு தோனுதுடா

“சொல்லு சிவா

“டாக்டரோட கை விரல எதுக்கு வெட்டணும்?”

“என்ன சொல்ல வர்ற சிவா? எனக்கு புரியல

“ஒரு சர்ஜனுக்கு, ஆப்பரேஷன் செய்யற ஒரு டாக்டருக்கு அவரோட கை விரல் முக்கியமான ஒன்னு. அதுவும் கட்டை விரலும், ஆள் காட்டி விரலும் ரொம்ப முக்கியம். ஏன்னா, இந்த ரெண்டு விரல்லதான் கத்தியை வெச்சு ஆப்பரேஷன் பண்ணுவார்

“ஆமா, சரி தான்

“கரெக்ட். ஸோ, இப்படி ஒரு டாக்டரோட அந்த ரெண்டு கை விரலையும் வெட்டியிருக்காங்கன்னா என்னவோ நடந்திருக்குன்னு நினைக்கிறேன் மோகன்

“நல்ல பாய்ண்ட் சிவா. ஒரு வேளை இவர் தப்பா சர்ஜரி ஏதாவது செஞ்சிருக்கலாம். இப்படி இவரால பாதிக்கப்பட்ட யாராவது இப்படி அவரை கொலை செஞ்சிருக்கலாம். ஆனா இதுக்கெல்லாம் ஆதாரம் வேணுமே? அது வரைக்கும் இதெல்லாம் வெறும் கற்பனைதான்

“இதே மாதிரி முருகன் கொலையையும் யோசிச்சா என்ன?

“இதே மாதிரின்னு சொன்னா, அந்த முருகன் என்னவோ யோசிக்கக்கூடாததை யோசிச்சிருக்கான். அதனாலதான் மண்டை ஒட்டை அடிச்சே உடைச்சு, அதுல சில துண்டுகள் மூளையில குத்தற அளவுக்கு அடிச்சிருக்காங்க

“ஹும், அதுக்கும் சான்ஸ் இருக்கு

“இத விஜய் கிட்ட சொல்லலாம். ஏதாவது ஒன்னா சேர்ந்து செய்யலாமான்னு பாக்கலாம். என்ன சொல்ற மோகன்?

“எனக்கு விஜய் மேல கூட சந்தேகம் இருக்கு சிவா. அதனால் இப்போதைக்கு அவங்கிட்ட சொல்ல வேணாம்

“ஏன்? என்ன சந்தேகம் உனக்கு?

“நம்மள நேத்து ஃபாலோ பண்ணது யார் தெரியுமா?

“தெரியல. கார் பூரா கறுப்பு கலர் ஸ்டிக்கர் தானே இருந்தது. உள்ள யார் இருந்தாங்கன்னு தெரியல

“நான் இன்னிக்கு காலைல அந்த காரை ஓட்டினவன பாத்தேன்

“அப்படியா? யார் அந்த ஆளு?

“ரவுடி தயா. கேள்விப்பட்டிருக்கியா?

“அவனா? அவன் பெரிய ரவுடி டா. அவன் எதுக்கு நம்மள ஃபாலோ பண்ணணும்?

“இதுக்கே ஷாக் ஆகிட்டியே, இன்னொன்னு சொன்னா நீ பயந்தே போயிடுவே

“என்ன? சீக்கிரம் சொல்லு

“நீ விஜய்க்கு ஃபோன் பண்ணிட்டு எனக்கு ஃபோன் பண்ணப்போ, அந்த தயாவும் யார்கிட்டயோ ஃபோன் பேசிட்டே வந்து, காருல ஏறி அவசர அவசரமா கிளம்பினான். ஒரு வேளை விஜய் அவங்கிட்ட ஃபோன் பண்ணி கிளம்ப சொன்னானோ?

“அவன் ஏன் சொல்லணும்? அப்படியே சொல்லிருந்தாலும் தயா ஏன் உடனே கிளம்பணும்?”

“ஒரு வேளை விஜய் அவன கிளம்ப சொல்லிருக்கலாமில்ல? ஃபாலோ பண்றதுன்னா, யாரை ஃபாலோ பண்றோமோ அவங்களுக்குத் தெரியாமதான் ஃபாலோ பண்ணணும். நீ தயாவோட டாடா சுமோவ பாத்து விஜய்க்கு போன் பண்ணியிருக்க. அதனால, இதுக்கு மேல சந்தேகம் வந்துடக்கூடாதுன்னு நெனச்சு தயாவை அங்கேயிருந்து உடனே கிளம்ப சொல்லியிருக்கலாமில்ல?

“சான்ஸ் இருக்கு மோகன். அதே நேரத்துல, ஒரு வேளை அந்த டாக்டரோட சாவை யாரோ ஒருத்தர் அந்த தயாகிட்ட சொல்லி, அதனால அவன் வேகமா அங்கயிருந்து கிளம்பியிருக்கலாம். டாக்டர் ஏதோ தப்பு பண்ணியிருக்கார்ன்னு நெனச்சா, அந்த தப்புல தயாவோட பங்கும் இருக்கலாம். இந்த மாதிரி கூட யோசிக்கலாமில்ல?

“டாக்டருக்கும், விஜய்க்கும் பழக்கம் இருக்கு. இவங்க ரெண்டு பேருக்கும் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியும். முருகன் கொலையைப் பாத்து கொஞ்சம் பயந்து போயிருந்தார் டாக்டர். இதை, நாம விஜய் வீட்டுல பேசிட்டிருந்தப்போ அவர் கண்ணுல இருந்த அந்த பயந்த பார்வையை வெச்சு சொல்லலாம். தயாவை விஜய்க்கும் தெரிஞ்சிருக்கலாம், டாக்டருக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா இதுக்கு ஆதாரம் இல்ல
“ஒரு வேளை இந்த நாலு பேருக்கும் ஒருததருக்கு ஒருத்தர் சம்பந்தமாக்கூட இருக்கலாம். இதுக்கும் ஆதாரம் இல்ல. இதுல ஏதாவது ஒன்னு கன்ஃபர்ம் ஆச்சுன்னாதான் கொஞ்சம் கிளியரா இருக்கும். அது வரைக்கும் இது எல்லாமே யூகம்தான் மோகன்

“சரி, இந்த தயா எப்படிப்பட்ட ஆளு? அவனப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணுமே. யாரை கேக்கறது? உனக்கு யாராவது தெரியுமா சிவா?

“எனக்கு எந்த ரவுடியும் ஃப்ரெண்ட் இல்லடா. ஒரே ஒரு போலீஸ்காரன்தான் ஃப்ரெண்டு. அவனையும் கேக்கமுடியாது, ஏன்னா விஜய் மேலயும் சந்தேகம் இருக்கே

“ஹும், கொஞ்சம் சிக்கல்தான். பார்ப்போம். போகப்போக ஏதாவது க்ளூ கிடைக்காமலா போயிடும்

“சரி, பாக்கறது இருக்கட்டும். நீ வாங்கிட்டு வந்த பார்சல முதல்ல ஓபன் பண்ணு. பசிக்குது. சாப்பிடணும் என்று சிவா சொல்ல, மோகன் அந்த பார்சலைத் திறந்தான். இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

மாலை 4 மணி ஆனது. பொழுதுபோகவில்லை சிவாவுக்கு. டி.வியைப் போட்டான். முக்கிய செய்தி என்று ஒன்று ஓடிக்கொண்டிருந்தது அந்த சேனலில் - “பிரபல ரவுடி தயா காந்தி மண்டபத்தில் சுட்டுக்கொலை. கொலை செய்த இன்ஸ்பெக்டர் சரணடைந்தார்

பயங்கர ரவுடி ஒருவனை, தங்களைப் பின்தொடர்ந்து பயமுறுத்தியவனை ஒரு போலீஸ்காரர் சுட்டு கொன்று விட்டார் என்பதை நினைத்து உள்ளூர சந்தோஷம்தான் சிவாவுக்கு. சரி, முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று செய்திகளை கவனித்துக் கொண்டிருந்தான். வெளியே சென்றிருந்த மோகன் அப்போதுதான் உள்ளே நுழைந்தான்.

மோகனிடம் இந்த செய்தியை சிவா சொல்ல, அவனும் டி.வி முன்பு உட்கார்ந்தான். செய்தி வாசிப்பாளர் செய்தியை வாசிக்க ஆரம்பித்தார். இதோ அந்தச் செய்தி:

“சென்னையில் பட்டப்பகலில் பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த காந்தி மண்டபத்தில் ஒரு பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற பல குற்ற செயல்களில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் ரவுடி தயா இன்று பகல் சுமார் 2 மணியளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவன் ரவுடி என்று தெரிய வந்ததும், பொது மக்களும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த துணிகர செயலை வரவேற்றனர். ரவுடியை கொன்றுவிட்டு இன்ஸ்பெக்டர் விஜய் அடையார் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இதையடுத்து அவர் அடையார் போலீஸ் ஸ்டேஷன் செல்லில் அடைக்கப்பட்டார்

என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை மோகனுக்கும், சிவாவுக்கும். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரது வாயும் ஆவென்று பெரிதாக திறக்கப்பட்டிருந்தாலும், ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை.

தாங்கள் போட்டு வைத்திருந்த கணக்கு எல்லாம் ஒரே நாளில் அர்த்தமில்லாமல் போனது. விஜய்க்கும் ரவுடி தயாவுக்கும் தொடர்பு இருக்குமென்ற சந்தேகம் மெல்ல உடைய ஆரம்பித்தது.

“என்னடா மோகன்? ஒன்னுமே புரியமாட்டேங்குது? யாரை சந்தேகப்பட்டோமோ அவனே ரவுடியை கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டான். இப்போ என்னதான் செய்யறது? என்று மோகனைக் கேட்டான் சிவா.

அதற்கு மோகன், “அதான்டா எனக்கும் விளங்கலை. இவங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைச்சோம். ஆனா இப்போ விஜய், தயாவை கொன்னுட்டு சரண்டர் ஆகிட்டான். அடுத்து என்ன நடக்கும்னே தெரியல என்றான்.

“ஒரு வேளை தனக்கும் தயாவுக்கும் இருக்கற சம்பந்தம் வெளிய தெரிஞ்சிடுமோன்னு பயந்து விஜய் தயாவை சுட்டானா?

“அப்படியே வெச்சுக்கிட்டாலும், எதுக்கு இவ்ளோ ஜனங்க வர்ற பிஸியான இடத்துல கொல்லணும்? யாருக்குமே தெரியாத மாதிரி கொலை செஞ்சிருந்தா ஒரு வேளை அப்படி யோசிக்கலாம்

“ஸோ, பப்ளிக்கா கொன்னதால, அப்படி இருக்காதுன்னு சொல்றியா?

“ஆமாம்டா. இதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்குமான்னு தெரியல. உயர் அதிகாரிகள் விஜய்யை விசாரணை செஞ்சு, அந்த விசாரணையோட தகவல் வெளிய வந்தாத்தான் கொஞ்சமாவது புரிய வரும். பார்ப்போம். வெயிட் பண்ணுவோம்

“ஆமா, எப்படியும் வேற வழியில்ல. எப்போதான் நடந்த உண்மை வெளிய வரப்போகுதோ? என்று உச்சுக்கொட்டினான் சிவா.

“சரி விடு, வரும்போது பாத்துக்கலாம். இப்போ டையர்டா இருக்கு. கொஞ்ச நேரம் தூங்கறேன். ஏதாவது முக்கியமான விஷயம்னா எழுப்பு என்று சொல்லிவிட்டு தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் படுத்தான் மோகன். படுத்துக்கொண்டே யோசித்துக்கொண்டிருந்தான். மெல்ல அப்படியே தூங்கினான்.


17. மணி 7:30 ஆனது. மோகனை அவசர அவசரமாக எழுப்பினான் சிவா.
“என்னடா சிவா? எதுக்கு எழுப்பினே என்ன?

“டேய், இந்த நியூஸப் பாருடா. மண்டையே வெடிக்கற மாதிரி இருக்கு

“என்னடா, மறுபடியும் நியூஸா? என்னாச்சு?

“விஜய் எல்லா விஷயத்தையும் ஒத்துக்கிட்டானாம். போலீஸ் கமிஷனர் ராஜரத்தினம் இன்டர்வியூல சொல்றாரு பாரு

இந்தக் கொலை வழக்கைப் பற்றிய செய்தி என்று தெரிந்தவுடன் டக்கென்று எழுந்து உட்கார்ந்தான் மோகன். போலீஸ் கமிஷனர் ராஜரத்தினத்துடைய பத்திரிக்கையாளர் சந்திப்பு நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது டி.வியில். அந்த சந்திப்பில் அவர் சொன்னது எல்லாம் இவை தான்:

“இன்ஸ்பெக்டர் விஜய், தான் செஞ்ச கொலையை ஒத்துக்கிட்டார். இந்த கொலையைப் பத்தி அவர்கிட்ட நாங்க விசாரணை செஞ்சோம். அதுல பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவந்திருக்கு. நாங்களே எதிர்பார்க்கலை இதெல்லாம்

“கொஞ்ச நாளாவே சென்னையில கிட்னி திருட்டு, ஏழைங்க காணாமல் போறது அதிகமா இருக்குன்னு புகார்கள் வந்துக்கிட்டு இருக்கறது உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். இன்ஸ்பெக்டர் விஜய்யும் அதுல சம்பந்தப்பட்டிருக்கறதா அவரே சொன்னார்

“இன்ஸ்பெக்டர் விஜய், டாக்டர் ஜான், ரவுடி தயா, தங்கம் மல்டிப்ளெக்ஸ் ஓனரோட பையன் முருகன். இவங்க நாலு பேரும் இந்த கிட்னி திருட்டு, ஆட்கடத்தல் விஷயத்துல ஈடுபட்டிருக்காங்க. டாக்டர் ஜானும், முருகனும் ஒரே சீட்டாட்டக் கிளப்புக்குப் போயிட்டு இருந்தவங்க. அங்க அவங்களுக்குள்ள பழக்கம் ஆச்சு. முருகன்தான் இந்த திருட்டு பிஸினஸ் பத்தி ஐடியா கொடுத்திருக்கான். டாக்டர் ஜான், தன் கிட்ட வர்ற பேஷண்ட்டுக்கு ஆப்பரேஷன் பண்ணி, பேஷன்ட்டுக்குத் தெரியாம கிட்னியை திருடி, வயசான பணக்காரங்க, பிஸினெஸ்மென் அவங்களுக்குப் பொருத்தி லட்சக்கணக்குல காசு கறந்திருக்கார். மனுஷங்களை வெச்சு மருந்து டெஸ்ட் பண்றதுக்கு தன்கிட்ட வர்ற பேஷண்ட்ஸை ஏமாத்தி, கடத்திட்டு போய் அவங்ககிட்ட வித்துடுவாங்க. அவர் ஏழைங்ககிட்ட கன்சல்டேஷன் ஃபீஸ் ரொம்ப கம்மியா வாங்கறதால, அவரோட கிளினிக்குக்கு நிறைய பேஷண்ட்ஸ் வர ஆரம்பிச்சாங்க. இதனால அவங்களுக்கு அதிகமா கிட்னியும் கிடைச்சுது, ஆளும் கிடைச்சாங்க, பணமும் கிடைச்சுது

“இந்த விஷயம் ரவுடி தயாவுக்கும் தெரிய வர, அவன் டாக்டரை மிரட்டியிருக்கான். அதனால் வேற வழியில்லாம, வர்ற காசுல தயாவுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டியதாப்போச்சு. டாக்டர் ஜான் இந்த விஷயத்த தன் ஃப்ரெண்ட் விஜய் கிட்ட சொல்ல, அவரும் இதுல பங்கு கேட்க ஆரம்பிச்சார். வேற வழியில்லாம எல்லாருக்கும் பங்கு கொடுக்க வேண்டியதாப்போச்சு. சில சமயம், மருந்து டெஸ்ட் பண்ணும்போது நிறைய பேர் இறந்திருக்காங்க. அவங்களைப் புதைச்ச இடத்தையும் சொல்லியிருக்கார் விஜய்

“இந்த மாதிரி சென்னையில நிறைய நடக்குதுன்னு தெரிய வந்தவுடனே இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பிச்சார் பழைய போலீஸ் கமிஷனர் ஜெய்சங்கர். இந்த நாலு பேரை அவர் நெருங்க நெருங்க, அவரை கொலை செய்ய வேண்டியதாப்போச்சு இவங்களுக்கு. அதனால அவரை கொன்னாங்க. கொலை செய்யறதை அவரோட மனைவி சாந்தி பார்த்துட்டதால அவங்களையும் கொன்னாங்க

“முருகனும் டாக்டரும் செத்துட்டதால விஜய்க்கு வருமானம் குறைஞ்சிடுச்சு. அதனால தயாகிட்ட மாமூல் வாங்க ஆரம்பிச்சார். காசு பிரிக்கற விஷயத்துல தயாவுக்கும், விஜய்க்கும் தகராறு ஆரம்பிச்சுது. அந்த பிரச்சனை பெருசாக பெருசாக, வேற வழியில்லாம தயாவை சுட்டுக் கொன்னுட்டார் விஜய். ஆனா, எப்படி அவரா வந்து சரணடைஞ்சார்னு தெரியல. அதப்பத்தியும் விசாரிச்சிட்டிருக்கோம்

கமிஷனர் ராஜரத்தினத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தது. ஷாக் அடித்தது போல இருந்தது மோகனுக்கும், சிவாவுக்கும். விஜய் இவ்வளவு மோசமானவனாக இருப்பான் என்று கனவில் கூட நினைத்ததில்லை இவர்கள்.

டேய் சிவா, என்னடா உன் ஃப்ரெண்ட் விஜய் இவ்ளோ பயங்கரமான ஆளா இருக்கான்?

“ஏன் டா கேக்கற. நானே நடந்தது எல்லாத்தையும் நம்ப முடியாம இருக்கேன். இவ்ளோ வேகமா இவ்ளோ விஷயம் வெளிய வந்திருக்கு. நேத்துதான் முருகனோட கொலை நடந்த மாதிரி இருக்கு. ஆனா அதுக்குள்ள திடீர்னு எல்லாம் முடிஞ்ச மாதிரி இருக்கு

“டேய், இன்னும் முருகனையும், ஜானையும் யார் கொன்னதுன்னு தெரிய வரல. அதப்பத்தி கமிஷனர் பேசவே இல்ல

“அட, ஆமாம் டா. நான் அதை கவனிக்கவே இல்ல

“எல்லாம் சரி. எப்படி விஜய் எல்லா உண்மையையும் சொன்னான்? எப்படி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டான்?

“ரொம்ப டார்ச்சர் பண்ணிருப்பாங்களோ என்னவோ, யாருக்குத் தெரியும்?

“அதுக்கு வாய்ப்பு கம்மிதான். ஏன்னா இவன் சரண்டர் ஆனது தயாவ சுட்ட கேஸுல. மத்த விஷயத்த எல்லாம் இவன் சொல்லலைன்னா யாருக்கும் தெரிய வந்திருக்காது. எப்படி சொன்னான்?

“நோ ஐடியா. எப்படியோ வெளிய வந்துடுச்சுன்னு சந்தோஷப்படு

“இன்னும் அந்த கொலை கேஸுங்களோட முடிவு என்னவா இருக்குமோ?

“அதான் எனக்கும் புரியல. பாப்போம்

அன்றைய தினம் இந்த விஷயத்தைப்பற்றி பேசியே கழிந்தது.



18. மறு நாள் திங்கட்கிழமை. வழக்கம்போல அலுவலகத்துக்குச் சென்றான் மோகன். ரேவதி அன்று வரவில்லை.

அவனுடைய மேனேஜர் கையில் ஏதேதோ கொண்டு வந்து மோகனிடம், “மோகன், ரேவதிக்கு உடம்பு சரியில்லையாம். அதனால இன்னிக்கு ஆஃபீஸுக்கு வரமாட்டாங்க. இந்த அமெரிக்கா விசா டாக்குமென்ட்ஸ்ல அவங்களோட கையெழுத்து வேணும். இன்னிக்கே சப்மிட் செஞ்சாகணும். நீங்களும் ரேவதியும் ஃப்ரெண்ட்ஸ் தானே. உங்களால கொஞ்சம் அவங்க வீட்டுக்குப் போய் கையெழுத்து வாங்கிட்டு வர முடியுமா? என்று கேட்டார்.

“கண்டிப்பா சார், இப்பவே கிளம்பறேன் என்று அங்கிருந்து கிளம்பினான் மோகன்.

ரேவதி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பைத் தன் வண்டியில் வந்தடைந்தான் மோகன். குடியிருப்புக்கு வெளியே ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.  செக்யூரிட்டியிடம் ரேவதியின் வீடு எது என்று விசாரித்துவிட்டு உள்ளே சென்று, லிஃப்டில் ரேவதியின் வீடு இருக்கும் தளத்தை அடைந்தான்.

வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான். சில நொடிகளில் கதவைத் திறந்தாள் ரேவதி. பார்க்க மிகவும் சோர்ந்து இருந்தது போல இருந்தாள். அழுது வடிந்திருந்தது முகம்.

“வா மோகன். உள்ளே வா

“என்னாச்சு ரேவதி? இவ்ளோ வீக்கா இருக்கே?

“நேத்துலேர்ந்து ஜுரம். குறையவே இல்ல. உக்காரு முதல்ல. என்ன சாப்பிடறே?

சோஃபாவில் உட்கார்ந்தான் மோகன். “எதுவும் வேணாம் ரேவதி. மேனேஜர் ஃபோன் பண்ணாரா உனக்கு?

"“ஃபோன் பண்ணாரு. நீ டாக்குமென்ட்ஸ் எடுத்துட்டு வர்றதா சொன்னார். நீ உக்காரு, நான் போய் டீ போட்டுட்டு வர்றேன் என்று சொல்லி சமையலறைக்குச் சென்றாள் ரேவதி.

வீட்டைச் சுற்றிமுற்றி பார்க்க ஆரம்பித்தான் மோகன். மூன்று பெட்ரூம் வீடு அது. கிட்டத்தட்ட 2000 சதுர அடி இருக்கும் அதன் அளவு. அவ்வளவு பெரிய வீட்டில் எப்படி தனியாக இருக்கிறாள் ரேவதி? எல்லா பொருட்களும் சுத்தமாக இருந்தன. அழுக்கு, தூசி இல்லவே இல்லை.

வீட்டு வாசலைப் பார்த்தது போல் இருக்கும் சுவரை ஒட்டி போடப்பட்டிருந்தது சோஃபா. அந்த சுவரில் ரேவதியின் குடும்பப் புகைப்படம் லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது.

அந்தப் புகைப்படத்தில் போலீஸ் உடையில் இருந்தார் ரேவதியின் தந்தை ஜெய்சங்கர். நெற்றியில் சின்ன கோடாக விபூதி இருந்தது. வக்கீல் உடையில் இருந்தார் தாய் சாந்தி. நெற்றியில் பச்சை நிறத்தில் சிறிய வட்டமான பொட்டு இருந்தது. மெல்லிய புன்னகை அவரது முகத்தை அலங்கரித்து இருந்தது.

தந்தையும் தாயும் நின்றுக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு நடுவில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் ரேவதி. நீல நிற சுடிதார் உடுத்தியிருந்தாள். நெற்றியில் ஒரு சிறிய சிவப்பு நிற பொட்டு இருந்தது. வாயில் இருக்கும் பற்கள் எல்லாம் தெரியும்வண்ணம் சிரித்துக்கொண்டிருந்தாள்.

இந்த புகைப்படத்தைப் பார்த்தாலே எவ்வளவு சந்தோஷமாக இருந்த குடும்பம் அது என்பது புரியும். அப்படி சந்தோஷமாக இருந்த குடும்பம், இப்போது இந்த நிலைமையில் இருப்பதை நினைத்து மனம் உறுத்தியது மோகனுக்கு.

அந்த சுவற்றிற்கு இடது பக்கம் டி.வி இருந்தது. 40 இன்ச் டி.வி அது. அவ்வளவு பெரிய டி.விக்கு ஏற்றாற்போல அழகிய டி.வி. ஸ்டாண்டும் இருந்தது. அதன் மேல் இன்னொரு குடும்பப் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதிலும் ரேவதியின் தாய் சாந்தி பச்சை நிற பொட்டு வைத்துக்கொண்டு இருந்தார்.

இப்படி அந்த வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் எல்லா குடும்பப் புகைபடங்களிலும் ரேவதியின் தாய் பச்சை நிற பொட்டு வைத்துக்கொண்டிருந்தார். அதே சமயம், ஒரு படத்தில் கூட ரேவதி பச்சை நிற பொட்டோடு இல்லை. அந்த புகைப்படங்கள் தன்னிடம் எதையோ சொல்வது போல் இருந்தது மோகனுக்கு.

வீட்டைச் சுற்றிப்பார்ப்பது போல் உள்ளே சென்றான். முதல் பெட்ரூம் விருந்தாளிகளுக்காக கட்டப்பட்டது போல் இருந்தாலும் பெரியதாகவே இருந்தது. துணி மணி வைக்க அலமாரி, ஏ.சி., டி.வி, பாத்ரூம் என எல்லாமே இருந்தது அந்த அறையில்.

அதற்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு பெட்ரூம் இருந்தது. இது தான் அநேகமாக ரேவதியினுடையதாக இருக்கும். பெரிய பால்கனி ஒன்று இருந்தது. கண்ணாடியாலான பால்கனி கதவு மூடப்பட்டிருந்தது. 

அவளுடைய லேப்டாப், உடைகள் போன்றவை எல்லாம் அப்படியே மெத்தை மேல் வீசப்பட்டிருந்தது. அவளுக்கு அப்படி இருப்பதுதான் பிடிக்கும் போல.

மூன்றாவது பெட்ரூமுக்குள் சென்றான். மிகவும் சுத்தமாக இருந்தது அந்த அறை. யாரோ அதை உபயோகப்படுத்திக் கொண்டிருப்பது போல் இருந்தது. கலையாத பெட்ஷீட்கள், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரி, இப்படி எல்லாமே முறையாக இருந்தது. உள்ளே ஒரு மேஜை இருந்தது. ஒரே ஒரு புத்தகம் மட்டும் பாதி படித்துவிட்டு வைத்திருந்தது போல் அந்த மேஜையில் இருந்தது. இங்கும் ஒரு அழகான குடும்பப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

எல்லா அறைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டு கூடத்திற்கு வந்தான். டி.வி ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் ஒரு டிராயிங் போர்டு இருந்தது. அதில் 10 தாள்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. எல்லா தாள்களிலும் வலது புறத்தில், ஓவியத் தாள்களின் கீழ்ப்பகுதியில் ஓவியம் வரையப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்று கூட புதியது இல்லை.

வரிசையாக ஒவ்வொரு ஓவியத்தையும் பார்த்து வந்தான் மோகன். மூன்று ஓவியங்கள் மட்டும் கொஞ்சம் புதியதாக இருப்பது போல் தோற்றமளித்தது. ஆனாலும், ஓவியத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதி இரண்டு வாரங்களுக்கு முந்தைய தேதி.

அந்த மூன்று ஓவியங்களை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு வந்து சோஃபாவில் உட்கார்ந்தான். ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கினான். நிஜமாகவே இருப்பதுபோல் மிகவும் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தன அந்த ஓவியங்கள். அழகாக வரையப்பட்டிருந்தன அந்த ஓவியங்கள். ஓவியங்களைப் பார்த்துவிட்டு தனக்குப் பக்கத்தில் வைத்தான்.

சில நொடிகளுக்குப் பிறகு என்னவோ அவனுக்குத் தோன்ற, மீண்டும் மீண்டும் அந்த ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிர்ந்து போனான் அவன். மூச்சு அடைப்பது போல் இருந்தது. லேசாக வியர்க்கத் தொடங்கியது அவனுக்கு. ஏனென்றால், அந்த மூன்று ஓவியங்கள் இவைதான் - கடற்கரையில் விழுந்து கிடக்கும் ஒரு உடல், ஜான் கிளினிக் வாசலில் விழுந்து கிடக்கும் ஒரு உடல், காந்தி மண்டபத்தின் வாசலில் விழுந்து கிடக்கும் ஒரு உடல்.



19. அதிர்ச்சியில் அந்த ஓவியங்களை கையில் எடுத்துப் பார்த்தபடியே இருந்தான் மோகன். பேச்சு வரவில்லை. வியர்த்துக் கொட்டியது. மூச்சு வாங்கியது.

திடீரென்று ஒரு குரல் கேட்டது, “என்ன மோகன், எல்லாத்தையும் பார்த்து முடிச்சிட்டியா?. பயத்தினால் மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான். அது ரேவதிதான். அவள் கையில் ஒரு தட்டும், அந்த தட்டில் டீயும், பிஸ்கட்டும் இருந்தன.

ரேவதியின் முகம் பளிச்சென்று இருந்தது. மோகன் வந்தபோது பார்த்த முகம் சில நிமிடங்களில் மறைந்து போயிருந்தது. மோகன், தன்னை சுதாரித்துக்கொண்டு மெதுவாக, “பார்த்தேன் ரேவதி. இதெல்லாம் யார் வரைஞ்சது? என்றான்.

“நான்தான் வரைஞ்சேன் மோகன். ஏன், நல்லா இல்லியா?

சில நொடிகளுக்குப் பிறகு, “நல்லாதான் இருக்கு என்று சொல்லி ரேவதி கையில் இருந்த தட்டை வாங்கி சோஃபாவில் வைத்தான். அப்போதுதான் கவனித்தான் ரேவதியின் நெற்றியில் பச்சை நிற பொட்டு இருந்தது.

மெல்ல தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தயங்கியபடியே “என்ன ரேவதி, பச்சை கலர் பொட்டு வெச்சிட்டு இருக்கே? உனக்கு இந்த கலர் பிடிக்காதுன்னு சொன்னியே? என்று மெல்லிய குரலில் கேட்டான் மோகன்.

சிரிக்க ஆரம்பித்தாள் ரேவதி. பேச ஆரம்பித்தாள்.

“அது எனக்கு பிடிச்ச கலர் மோகன். அதான் ரேவதி வெச்சிட்டிருக்கா
குழம்பினான் மோகன். ஒரு வித பயம் எட்டிப்பார்த்தது அவனுக்குள்.
“என்ன... சொல்ற... ரேவதி? எனக்குப் புரியல. வாயிலிருந்து வார்த்தை வரவில்லை மோகனுக்கு.

“இன்னுமா புரியல, ஹா ஹா ஹா ஹா.... சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். சிரிப்பு சத்தம் வீட்டில் எதிரொலித்தது.

“என்ன.. ரேவதி.. இப்படி சிரிக்கற? எனக்கு.. பயமா.. இருக்கு.. குரலில் தடுமாற்றம், பயம். உடல் நடுங்கத் தொடங்கியது. கண்களில் இருந்து நீர் வரத் தொடங்கியது.

“அவன பயமுறுத்தாதே மா. பாவம் அவன், விட்டுடு மா மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் ரேவதி.

“யார்கிட்ட.. பேசற.. ரேவதி? அம்மான்னு சொல்றே? பயம் அதிகமானது மோகனுக்கு. சோஃபாவிலிருந்து கீழே விழுந்தான்.

பொட்டு நிறம் மாறியது. இப்போது சிவப்பு நிறத்தில் இருந்தது ரேவதியின் நெற்றியில் இருந்த பொட்டு. “அது ஒன்னுமில்ல மோகன். நீ இந்த ஓவியங்களை பாத்துட்டே இல்ல, அதுக்குத்தான் உன்னை கொஞ்சம் பயமுறுத்தினாங்க என் அம்மா. நீ பயப்படாதே என்றாள் ரேவதி.

“விளையாடாதே ரேவதி.. என்ன.. நடக்குது.. இங்க? பதற்றம் அதிகமானது மோகனுக்கு.

விவரிக்கத் தொடங்கினாள் ரேவதி. “என்னோட அப்பாவும், அம்மாவும் என்னோடதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க இறந்ததுக்கு அப்பறம் நான் ரொம்ப பாதிப்படைஞ்சேன். என்னால ஒரு வேலையும் செய்ய முடியல. அடிக்கடி உடம்பு சரியில்லாம போகும். என்னோட நிலைமையை ஆவியான அவங்களால பாக்க முடியாம, கொஞ்ச நாளைக்கு அப்பறம் இங்க வந்து என் கூட பேச ஆரம்பிச்சாங்க

“நானும் முதல்ல உன்னமாதிரிதான் பயந்தேன். அப்பறம்தான் தெரிய வந்தது. இப்போ என் கூடத்தான் அவங்க இருக்காங்க. இவ்ளோ நேரம் உன் கிட்ட பேசிட்டு இருந்தது என்னோட அம்மா

ரேவதி சொன்னதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை மோகனால். ஆனால், ரேவதியின் நெற்றியில் இருந்த பொட்டு தானாக நிறம் மாறியதை கண்கூடாகப் பார்த்ததால் நம்பினான்.
“நம்பறதுக்கு.. கஷ்டமாத்தான்.. இருக்கு. ஆனாலும் நம்பறேன். ஆமா, நீ பச்சை கலர் பொட்டு வெச்சிட்டு சில நாள் ஆஃபீஸுக்கு வருவியே, அது.. நீயா இல்ல உங்க அம்மாவா?

“அது எங்கம்மாதான். எனக்குதான் பச்சை கலர் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமே

“ஓஹோ அப்படியா.. சரி பயம் சற்று குறைந்திருந்தது மோகனுக்கு. தெளிவாகப் பேசினான்.

டீயை எடுத்து குடித்தான். குடித்து முடித்தவுடன் மோகன், “சரி உங்க அம்மாதான் இப்போ வந்தவங்கன்னு நான் நம்பறேன். அதே மாதிரி, உங்க அப்பாவும் உன் கூடத்தான் இருக்காருன்னு சொன்னியே, எங்க அவர்? என்று ரேவதியைக் கேட்டான்.

அதற்கு ரேவதி, “நீ இப்போ பாத்தியே இந்த ஓவியங்கள். இது எல்லாம் எங்க அப்பாதான் வரைஞ்சார். இப்போ வெளிய போயிருக்கார் என்று சொன்னாள். அப்போது ஒரு சிறிய புன்னகை அவன் முகத்தில் தெரிந்தது.
என்ன நடந்திருக்கும் என்று புரியத் தொடங்கியது மோகனுக்கு. 

கொண்டுவந்த டாக்குமென்ட்களில் ரேவதியின் கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் மோகன்.

அலுவலகத்துக்குத் திரும்பிப் போகும் வழியெல்லாம் ரேவதி வீட்டில் நடந்ததை யோசித்துக்கொண்டே சென்றான் மோகன். அந்த மூன்று ஓவியங்களில் வரையப்பட்டு இருந்தவர்கள்தான் முருகன், டாக்டர் ஜான், தயா என்பது புரிந்தது அவனுக்கு.

இந்த மூன்று பேரும், விஜய்யும் சேர்ந்து ரேவதியின் தந்தை, தாயை கொலை செய்ததால் அதற்குப் பழி வாங்கவே இந்த மூவரையும் கொலை செய்திருக்கிறார் ரேவதியின் தந்தை ஜெய்சங்கர் என்பது புரிந்தது. மற்ற ஓவியங்கள் எவையும் மோகனின் நினைவில் இல்லை.

விஜய் செய்த தவறை ஒப்புக்கொண்டதும் ஒரு வேளை ரேவதியின் தந்தையின் செயலாக இருக்கலாம் என்றும் அடுத்து விஜய் சாகப்போவதும் உறுதி என்றும் தோன்றியது மோகனுக்கு. அலுவலகத்தை வந்தடைந்தான். மற்ற நாட்கள் போலவே அந்த நாளும் கடந்தது. நடந்த விஷயத்தையெல்லாம் மோகன் சிவாவுக்கு ஃபோன் செய்து சொல்ல, சிவாவுக்கு ஜுரமே வந்துவிட்டது.


அடுத்த நாள் காலை அலுவலகத்துக்குச் செல்ல தயாராகி, வெளியே வந்தான். சிவாவுக்கு ஜூரம் என்பதனால் அவனுடைய வண்டியில் அலுவலகத்துக்குச் சென்றான் மோகன். வழியில் இருக்கும் ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தினான். அந்த டீக்கடையில் தொங்கவிடப் பட்டிருந்த செய்தித்தாள்களில் ஒன்றை எடுத்து படித்து, சிரித்துவிட்டு, பின் அந்த செய்தித்தாளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான் மோகன். அவன் படித்த அந்த செய்தி: “இன்ஸ்பெக்டர் விஜய் ஜெயிலில் படுகொலை. போலீஸார் விசாரணை. யார் அது?

No comments:

Post a Comment