Sunday 8 June 2014

யாரது (01 - 05) (September 2013)

                           யாரது?

1. அன்று வெள்ளிக்கிழமை. காலை மணி எட்டு ஆகியிருந்தது. கதவைத் திறந்து, வீட்டு வாசலில் தரையில் போடப்பட்டிருந்த ஆங்கில நாளிதழை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் ரேவதி. தலைப்புச்செய்திகளை வாசித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடினாள். வீட்டுக்கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்து நாளிதழைப் புரட்டியவண்ணம் 
செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தாள்.

மணி எட்டரை ஆனது. குளித்துவிட்டு பச்சை நிற சல்வார் உடுத்திக்கொண்டு சமையலறைக்குச் சென்று, தான் சமைத்து வைத்திருந்த தோசையுடன் சாம்பாரை சேர்த்துப் பிசைந்து வேகவேகமாக சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் தன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்துத் தன் ஹேண்ட்பேக் உள்ளே வைத்து, வீட்டைப் பூட்டி விட்டு, அவள் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்துக்குக் கிளம்ப வெளியே வந்தாள்.

தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியில் சாவியை நுழைத்து வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள் ரேவதி. இன்று அவளது முகத்தில் அப்படியொரு பொலிவு காணப்பட்டது. சூரியன் போல பளிச்சென்று இருந்தது அவள் முகம்.

ரேவதி இப்போது இருக்கும் இந்த வீட்டில்தான் அவள், அவளுடைய தந்தை, தாய் ஆகிய மூவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவள் பிறந்தது முதல் இந்த வீட்டில்தான் வாழ்ந்து வருகிறாள். உடன்பிறந்தவர்கள் என யாரும் கிடையாது அவளுக்கு.

இரண்டு வருடங்களுக்கு முன், சரியாக அக்டோபர் பத்தாம் தேதியன்று ரேவதியின் பெற்றோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களுடைய சடலங்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. அந்த சடலங்களைப் பார்த்தவுடன் துண்டு துண்டாக உடைந்து போனாள் ரேவதி. இனிமேல் அவளுக்கு உறவென்று யார் இருக்கிறார்கள்?

அன்று இறுதிச்சடங்கு எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேரும் போது மணி இரவு ஏழரை ஆகியிருந்தது. கொலை செய்யப்பட்டதால் காவல் நிலையத்தில் விசாரணை வேறு. காய்ந்து போன சருகு போல் மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.

வீட்டில் எங்கு பார்த்தாலும் அவளுடைய பெற்றோரின் முகம்தான் தெரிந்தது அவளுக்கு. எல்லா இடத்திலும் அவர்களுடைய குரல் ஒலிப்பது போல் இருந்தது. சில மணி நேரங்களில் தன் வாழ்வில் இவ்வளவு பெரிய மாற்றம், இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள்.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன பிறகே வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினாள் ரேவதி. தன்னை ஒரு வழியாக சமாதானப்படுத்திக்கொண்டு, தீவிரமாக வேலை தேடி, கடைசியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். இன்று வரை அதே நிறுவனத்தில்தான் வேலை செய்து வருகிறாள்.



2. அலுவலக வாசலில் இருக்கும் செக்யூரிட்டியிடம் தன்னுடைய ஐ.டி. கார்டை காட்டிவிட்டு, வண்டியை டூ வீலர் பார்க்கிங்கில் நிறுத்துவிட்டு, லிஃப்ட்டுக்குள் நுழைந்து நான்காவது தளத்துக்கான பட்டனை அழுத்தினாள். லிஃப்ட் நான்காம் தளத்தை வந்தடைந்தது. லிஃப்ட்டை விட்டு வெளியே வந்து தன் இருக்கையை நோக்கி நடந்தாள் ரேவதி.

தன் இருக்கையில் உட்கார்ந்து, மேஜையில் இருக்கும் கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். தனக்கு வந்திருந்த இமெயில்களை ஒவ்வொன்றாகப் படித்து முடித்துவிட்டு, தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

“ஹாய் ரேவதி. என்ன இன்னிக்கு கொஞ்சம் லேட்டா வந்திருக்கே போல? என்றான் அவளுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த மோகன்.

“ஹாய் மோகன். ஆமாம், ட்ராஃபிக் அதிகம் இன்னிக்கு. அதான் கொஞ்சம் லேட்டு என்றாள் ரேவதி.

“நானும் ஒரு வருஷமா பாக்கறேன். நீ எப்பவுமே ஆஃபிஸுக்கு டைமுக்கு வந்திடுவே. மாசத்துக்கு ஒரு நாள், இல்ல ரெண்டு நாள் மட்டும் லேட்டா வர்றியே. என்ன ஏதாவது வேண்டுதலா?

“நான் ப்ளான் பண்ணி இதெல்லாம் செய்யறதில்ல மோகன். அதுவா இப்படி அமைஞ்சிடுது. நான் என்ன செய்ய?

“நமக்கெல்லாம் இன்கம் டேக்ஸ் போக, கையில சம்பளம் கம்மியாதான் வருது. அதனால லேட்டா வந்தாலும் தப்பு இல்ல. நானும் லேட்டா வரலாம்னு நினைக்கறேன். ஆனா இந்த பாழாப்போன கம்பெனி பஸ் பத்து நிமிஷம் முன்னாடியே ஆஃபீஸுக்கு வந்து சேர்ந்துடுது

“லீவு போட்டுட்டு ஊர் சுத்த வேண்டியதுதானே? ஏன் டெய்லி ஆஃபீஸுக்கு வர்றே?

“என்னோட வீட்டுல இருக்கற பசங்க எல்லாரும் ரொம்ப ஆர்வக்கோளாருங்க. வீக்கெண்ட்ல கூட ஆஃபீஸுக்குப் போயிடறானுங்க. நான் லீவு போட்டு வீட்டுல சும்மாதான் இருக்கணும். அந்த கொடுமைய விட, நம்ம ஆஃபீஸுல வேலை செய்யற கொடுமை எவ்வளவோ பரவாயில்லை. அதான் வேற வழியில்லாம வர்றேன்

“ஏதாவது ஒரு கேர்ள்ஃப்ரெண்ட பிடிக்க வேண்டியதுதானே? ஊர் சுத்தறதுக்கு ஒரு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும் என்று கண் அடித்தபடியே சொன்னாள் ரேவதி.

“ரைட்டுதான். வர்ற சம்பளம் எனக்கே பத்த மாட்டேங்குது. இதுல கேர்ள்ஃப்ரெண்ட் ஒண்ணுதான் குறைச்சல் என்று அலுத்தபடியே சொன்னான் மோகன்.

“அதெல்லாம் சரி ரேவதி. என்ன இன்னிக்கு பச்சை கலர் பொட்டு வெச்சிட்டு வந்திருக்க? இந்த கலர் உனக்கு பிடிக்காதுன்னு சொல்லுவியே?

“என்னவோ தெரியல. இந்த கலர் பொட்டு எனக்கு நல்லா இருந்த மாதிரி தோணிச்சு. மேட்ச் ஆச்சு. அதான் என்று ரேவதி பதில் சொல்லும்போது அவளுடைய மேனேஜர் அவளைக் கூப்பிட அங்கிருந்து எழுந்து சென்றாள். வழக்கம் போல் சென்றது அந்த நாள்.



3. சனிக்கிழமை காலை ஒன்பது மணி. விடுமுறை என்றால் முழு நேர சோம்பேறிகளாகவே மாறிவிடுவார்கள் பிரம்மச்சாரிகள். ஆனால், பசியின் காரணமாக காலை ஒன்பது காலை மணிக்கே எழுந்தான் மோகன். பல் துலக்கிவிட்டு, பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தான்.

வழியில் இருக்கும் டீக்கடையில் ஒரு டீ வாங்கிக் குடித்துக்கொண்டே அன்றைய நாளிதழைப் புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். டீ குடித்து முடித்துவிட்டு அதற்கான காசைக் கொடுத்துவிட்டு, வாயில் சிகரெட்டைப் பற்ற வைத்து, எதையோ யோசித்துக்கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தான்.

மோகனின் வீட்டில் மோகனுடன் தங்கியிருக்கும் சிவாவும், ரமேஷும் எழுந்திருந்தனர். ரமேஷ் தன் மொபைல் ஃபோனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். சிவா வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான்.

“மச்சி, எங்கடா வெளிய கிளம்பிட்ட? ஃப்ரீயா இருந்தா இன்னிக்கு சினிமா போலாமா? வர்றியா?” என்று சிவாவைக் கேட்டான் மோகன். அதற்கு சிவா, “ஒண்ணும் இல்லடா. சும்மா அப்படியே வெளிய போகலாம்னுதான் கிளம்பினேன். கரெக்டா நீயே சினிமாவுக்கு போகலாம்னு கூப்படறே. இன்னிக்கு சும்மாதான் இருக்கேன். எந்த படம்? எத்தன மணிக்கு? 
என்றான்.

“என்னடா சிவா, ஆச்சரியமா இருக்கே? இன்னிக்கு சனிக்கிழமை, இன்னிக்கும் ஆஃபீஸுக்குப் போவன்னு நினைச்சேன்? எப்படி வர்றன்னு சொல்ற?

“ரொம்ப வேலை செஞ்சு செஞ்சு போரடிக்குது மோகன். அதான், சும்மா ஒரு சேஞ்சுக்கு சினிமா போகலாம்னு தான்

“சரி. ரமேஷ் வருவானா? காலங்காத்தாலயே மொபைல எடுத்து பேச ஆரம்பிச்சுட்டான், இவனுக்கு வேற வேலையே இல்லஎன்று மோகன் சொல்லி முடிக்கும்போது ரமேஷ் தன் மொபைல் ஃபோனில் வந்திருந்த அழைப்பைத் துண்டித்தான்.

“என்னடா ரமேஷ், நானும் சிவாவும் இன்னிக்கு ஏதாவது ஒரு படத்துக்குப் போகலாம்னு இருக்கோம். நீயும் வர்றியா? என்று ரமேஷைக் கேட்டான் மோகன்.

அதற்கு ரமேஷ், “இல்லடா. இன்னிக்கும் ஆஃபீஸுக்குப் போகணும். ஆஃபீஸ்ல இந்த புதுப்பசங்கள என் டீம்ல போட்டு, என்னை கொடுமைப் படுத்தறாங்க. அந்தப் பசங்க ஒரு முக்கியமான விஷயத்துல சொதப்பிட்டானுங்க போல. நான்தான் போய் சரி பண்ண்ணும். நீங்க போயிட்டு வாங்க என்றான்.

“இல்லன்னா மட்டும், என்னவோ நீ அப்படியே எங்களோட சினிமாவுக்கு வர்ற மாதிரி பேசற. என்னடா மோகன் கரெக்டுதானே? என்றான் சிவா.

அதற்கு மோகன், “டேய் சிவா. நீயே இன்னிக்கு தான் ஏதோ அதிசயமா சினிமாவுக்கு வர்றேன்னு சொல்லியிருக்க. இதுல நீ ரமேஷ கிண்டல் பண்றியா? எல்லாம் நேரம் டா என்று சொல்ல, சிவா சிரித்துக்கொண்டே, “விடு விடு. இதெல்லாம் பப்ளிக்கா சொல்லாதே என்று மழுப்பினான். சில நிமிடங்களில் சிவாவின் கறுப்பு பல்சர் பைக்கில் ஏறி கிளம்பினர் மோகனும் சிவாவும். மோகன்தான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.



4. “எந்த படம், எங்க போறோம்னு சொல்லவே இல்லயேடா மோகன்? என்று மோகனைக் கேட்டான் சிவா. அதற்கு மோகன், “ஒரு ப்ளானும் இல்ல. நாம தங்கம் மல்டிப்ளேக்ஸுக்குப் போகலாம். அங்க தான் அஞ்சு, ஆறு படம் ஒரே சமயத்துல ஓடிக்கிட்டிருக்குமே என்றான் மோகன். “கரெக்டு தான். அங்க போனா நமக்கு சாய்ஸ் அதிகமா இருக்கும். ஏதாவது ஒரு படம் பாக்கலாம் என்றான் சிவா.
தங்கம் மல்டிப்ளேக்ஸை வந்தடைந்தனர் இருவரும். ஒரு வண்டியும் நிறுத்தப்படாமல் காலியாக இருந்தது பார்க்கிங்க். “என்னடா ஒரு வண்டியும் காணோம். பார்க்கிங்க் இவ்ளோ காலியா இருக்கு? என்று கேட்டான் சிவா. அதற்கு மோகன், “தெரியல. காலியா இருநதா, நாம திரும்ப போகும்போது வண்டிய எடுக்க நமக்கு ஈஸியா இருக்கும். ஃப்ரீயா விடு என்றான்.

காம்பவுண்ட் வாசலுக்கு வெளியே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர். அங்கும் வெறிச்சோடிக் கிடந்தது, யாருமே இல்லை. டிக்கெட் கவுண்டர்களும் மூடப்பட்டிருந்தன. “என்னடா இன்னிக்கு தியேட்டருக்கு லீவு விட்டுருக்காங்களா? யாரையுமே காணோம்? என்றான் சிவா. அதற்கு மோகன், “தெரியலடா. லீவுதான் போல என்றான்.

“நானே என்னிக்காவது ஒரு நாள் தான் சினிமா பாக்கலாம்னு வர்றேன். அன்னிக்குன்னு தியேட்டரையே கிலோஸ் பண்ணிடறானுங்க இவனுங்க. என்ன கொடுமை இது மோகன்?

“ஆமா, நீ இனிமே சி.டி.லயே சினிமா பாத்துக்கோ. முக்கியமா உன்னோட கல்யாணத்துக்கு அப்பறம் தியேட்டர் பக்கமே தலை வெச்சு படுக்காதே என்றான் மோகன்.

“இது ரொம்ப ஓவர்டா. சரி வா, வேற ஏதாவது தியேட்டருக்குப் போகலாம் என்றான் சிவா. அதற்கு மோகன், “இரு, இங்க ஒரு செக்யூரிட்டி வாட்ச்மேன் இருக்கற மாதிரி இருக்கு. நான் போய் என்ன, ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன் என்று சொல்லி அந்த தியேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் டீக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த அந்த தியேட்டரின் செக்யூரிட்டியிடம் சென்று ஏதோ பேசிவிட்டு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தான். சிவா தன் மொபைல் ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.

“உக்காரு சிவா, நாம வேற ஏதாவது தியேட்டருக்குப் போகலாம் என்று மோகன் சொல்ல, சிவாவும் மொபைலில் பேசியபடியே வண்டியில் உட்கார்ந்தான். சிறிது நேரத்தில் அருகில் இருக்கும் இன்னொரு தியேட்டர் காம்ப்ளெக்ஸினுள் நுழைந்தது இவர்களுடைய கறுப்பு பல்சர் பைக். சிவாவை தியேட்டரிலிருக்கும் டிக்கெட் கவுன்டருக்கு அருகில் இறக்கிவிட்டு, நேராக சென்று வண்டியை இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வந்தான் மோகன்.
அப்போது சிவா, “என்னடா செக்யூரிட்டிகிட்ட பேசிட்டு வந்தியே, என்ன சொன்னார் அவர்? என்றான். “அதைன்டா கேக்கறே. பாவம், தங்கம் மல்டிப்ளேக்ஸ் ஓனரோட பையன் முருகனை யாரோ நேத்திக்கு நைட் கொன்னுட்டாங்களாம். அதனாலதான் இன்னிக்கு அந்த தியேட்டருக்கு லீவு விட்டிருக்காங்க என்றான் மோகன்.

“டேய் என்னடா சொல்ற? எங்க, எப்படி கொலை நடந்துச்சாம்? அந்த பையன் முருகனுக்கு எவ்ளோ வயசு?என்று பதற்றத்துடன் கேட்டான் சிவா.

“இன்னிக்கு காலைல ஒரு 2, 2:30 மணிக்கு நம்ம மெரினா பீச்சுல நடந்துச்சுன்னு சொன்னாருடா. அந்த பையனுக்கும் கிட்டத்தட்ட நம்ம வயசு தானாம், ஒரு 27, 28 இருக்குமாம். அந்த செக்யூரிட்டி சொன்னாருஎன்றான் மோகன்.

“கஷ்டம்டா. நம்ம வயசு பையனா அவன். பாவம் என்றான் சிவா.

“கொடூரமா கொன்னிருக்கானுங்க டா. அவனோட கை, காலெல்லாம் கட்டிப்போட்டு, தலையிலேயே பலமா, வேகமா திரும்பத் திருமப அடிச்சு மண்டை ஓட்டை உடைச்சிருக்கானுங்களாம். படுபாவிங்க என்றான் மோகன்.

இதைக்கேட்டுத் திகைத்துப்போனான் சிவா. “அய்யய்யோ. எவ்ளோ வலிச்சிருக்கும் அவனுக்கு. பாவம் டா அவன். அவனோட அப்பாக்கிட்ட இருக்கற சொத்துக்காகத் தான் இப்படி செஞ்சிருக்கானுங்களோன்னு தோணுது எனக்கு என்றான்.

“எத வெச்சுடா அப்படி சொல்ற? என்றான் மோகன். அதற்கு சிவா, “அவங்க அப்பாவுக்கு அவன் ஒரே பையன்டா. அதனால, அவன முதல்ல ஒழிச்சுக்கட்டிட்டா அதுக்கப்பறம் அவங்க அப்பாவுக்கு வாரிசே கிடையாது. கொஞ்ச நாள்ல அவரையும் மெதுவா மேல அனுப்பிட்டா சொத்து எல்லாத்தையும் சுருட்டிடலாம்னு நினைச்சிருப்பானுங்க. படுபாவிங்க என்றான்.

“டேய் இப்ப தான் தலைவரோட ராஜாதி ராஜா படத்த நீ டி.வில பாத்திருக்கன்னு நினைக்கிறேன். அதையே கொஞ்சம் உல்ட்டா பண்ணி சொல்ற. நான் அந்த படத்த எப்பவோ பாத்துட்டேன். என் கிட்டயேவா? நீங்க இன்னும் வளரணும் தம்பி என்று கிண்டலடித்தான் மோகன். அதற்கு சிவா, “ச்சே, இதுக்குத்தான் அடிக்கடி சினிமா பாக்கறவங்கிட்ட இந்த மாதிரியெல்லாம் சொல்லக்கூடாது. கரெக்டா கண்டுபிடிச்சிடறாங்க. எனிவே, இப்படியும் நடந்திருக்கலாமில்ல. யாருக்கு என்ன தெரியும் என்றான்.

“நடந்திருக்கலாம். நமக்கு தெரியாது. போலீஸ்காரங்க கண்டுபிடிச்சு சொன்னாத்தான் தெரியும். அது இருக்கட்டும், நீ இந்த மாதிரி கதைய எல்லாம் வெளிய சொல்லிட்டு திரியாத. யாராவது உன்னப் பிடிச்சு உள்ள போட்டுறப் போறாங்க என்றான் மோகன். “சரி நான் போய், அடுத்த ஷோ எப்போ, என்னன்னு விசாரிச்சிட்டு வர்றேன் என்றான் சிவா.

சிவா கவுன்டருக்கு சென்றவுடன் மோகன் தன் மொபைலை எடுத்து யாரிடமோ பேசத் தொடங்கினான். சிவா டிக்கெட் வாங்கி வருவதற்கும், மோகன் மொபைலில் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

“யாருடா ஃபோன்ல? என்று கேட்டான் சிவா. அதற்கு மோகன், “ஆஃபீஸ் ஃப்ரெண்ட் கால் பண்ணான். சரி நீ டிக்கெட் வாங்கிட்டியா? இப்ப ஏதாவது ஷோ இருக்கா? என்றான். “உம், இப்ப ஒரு ஷோ இருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்துல. அதுக்குள்ள நம்ம போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம் வா. எனக்கு பசிக்குது என்று சிவா சொல்ல இருவரும் தியேட்டருக்கு அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்குள் சென்றனர்.

சாப்பிட்டு முடித்து தியேட்டருக்குள் நுழைந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர் மோகனும், சிவாவும். “இன்னிக்கு தேதி என்ன? மார்ச் ஒன்பது தானே? என்றான் சிவா. “இல்லடா, இன்னிக்கு தேதி பத்து. ஏன், என்ன விஷயம்? என்றான் மோகன். அதற்கு சிவா, “மார்ச் பத்தாம் தேதி என்னோட காலேஜ் ஃப்ரெண்டோட பிறந்தநாள். அவனுக்கு நாளைக்கு ஃபோன் பண்ணணும். அதுக்குத்தான் என்று சிவா சொல்லும்போது படம் ஆரம்பித்தது.



5. படம் முடியும்போது பகல் 3 மணி ஆகியிருந்தது. “எங்கயாவது சாப்பிட போலாமாடா? பசிக்கற மாதிரி இருக்கு என்றான் மோகன். அதற்கு சிவா, “சரிடா. ஏதாவது ஒரு ஹோட்டல்ல நிறுத்து. நானும் ஒரு டீ குடிச்சுக்கறேன் என்றான்.

வசந்த விலாஸ் ஹோட்டல் முன் பைக்கை நிறுத்தினான் மோகன். பைக்கிலிருந்து இறங்கி உள்ளே சென்று மின்விசிறிக்குக் கீழே இருக்கும் நாற்காலியாகப் பார்த்து உட்கார்ந்தான் சிவா. அவனுக்கு எதிரில் இருக்கும் நாற்காலியில், வாசலை நோக்கியவாறு உட்கார்ந்தான் மோகன்.

இவர்களுடைய மேஜைக்கு சர்வர் வந்தார். மதிய சாப்பாட்டு நேரம் முடிந்திருந்ததால், சப்பாத்தி மட்டும்தான் இருந்தது அந்த ஹோட்டலில். இருவரும் ஆளுக்கு மூன்று சப்பாத்தி ஆர்டர் செய்தனர். பழைய சப்பாத்திகளை கொஞ்சம் சூடுபடுத்தி, இரண்டே நிமிடத்தில் சப்பாத்தி ப்ளேட்களைக் கொண்டு வந்து வைத்தார் சர்வர். சாப்பிட ஆரம்பித்தனர் இருவரும்.

மிகவும் மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மோகன். சிவா ஒரு சப்பாத்தி சாப்பிட்டு முடிக்கும்போது மோகன் பாதி சப்பாத்தி தான் சாப்பிட்டிருந்தான். “என்னடா மோகன், இவ்ளோ மெதுவா சாப்பிடற? நீதானே பசிக்குதுன்னு சொன்னே? என்று கேட்டான் சிவா.

அதற்கு மோகன், “இல்லடா. அந்த தியேட்டர் ஓனரோட பையன் முருகனை ஏன் கொன்னாங்கன்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன். அவன் நம்ம வயசு பையன்னு வேற சொல்ற நீ. இந்த வயசுல, கொலை செய்யற அளவுக்கு யாரு எதிரிங்க இருப்பாங்கன்னு தான் தெரியல என்றான்.

“ஒரு வேளை காதல் விவகாரமா இருக்குமோ? என்றான் சிவா.

“எதை வெச்சு அப்படி சொல்ற சிவா?

“இப்போ எல்லாம் நம்ம வயசு பசங்க லவ்வுல மாட்டிக்கிறது அதிகமா இருக்கே. அதான் ஒரு சந்தேகம்

“எனக்கு என்னவோ அப்படி இருக்காதுன்னு தோணுதுடா

“எப்படி சொல்ற நீ?

“அவன் அவ்ளோ பெரிய தியேட்டர் ஓனரோட ஒரே பையன்னு சொல்ற. அப்படின்னா அவனுக்கு சொத்து, செல்வாக்கு, செக்யூரிட்டி எல்லாம் ஜாஸ்தியா இருக்கும். பணக்காரப் பசங்கள பொதுவா இந்த மாதிரி கொலை பண்றாங்கன்னா அதுக்கு ஏதாவது, நம்ம சினிமால வர்ற மாதிரி குடும்பப்பகை காரணமாக இருக்கலாம்

“அவங்க அப்பாகிட்ட இருந்து பணம் பறிக்கறதுக்கு யாராவது இப்படி பண்ணியிருப்பாங்களோ?

“அதுக்கும் சான்ஸ் இல்ல. ஏன்னா நேத்து ராத்திரி 10 மணி வரைக்கும் அவன் வீட்டுலதான் இருந்தானாம். அப்புறம் ஏதோ ஹோட்டலுக்கு போயிட்டு வர்றதா சொல்லி கிளம்பினதா அந்த செக்யூரிட்டி சொன்னார்

“அதுக்கப்பறம் வெளிய வந்தான்னு சொல்றே இல்ல. அவன் ஹோட்டலுக்குப் போகற வழியில யாராவது அவன கடத்திட்டு போயிருக்கலாம் இல்லையா?

“பொதுவா பணம் பறிக்கற கும்பல் ஒரு பையன கடத்தினாங்கன்னா அவங்கள அன்னிக்கே, சில மணி நேரத்துலயே கொன்னுட மாட்டானுங்க. அவனோட பெத்தவங்கள காண்டாக்ட் பண்ணி, மிரட்டி, எவ்ளோ பணம் வேணுமோ அதுக்கேத்த மாதிரி பேரம் பேசுவாங்க. காசு வாங்கற வரைக்குமாவது அவன ஒண்ணும் பண்ணமாட்டானுங்க. பையன கொன்னுட்டா காசு கைக்கு வர்றாதே

“ஒரு வேளை அவனோட அப்பா போலீஸ்கிட்ட போனாரோ என்னவோ. ஊர்ல பெரிய ஆளு வேற. கேக்கவா வேணும். ஒரு வேளை அவர் போலீஸ் கிட்ட இந்த விஷயத்த சொல்லிருக்கலாம். அந்த விஷயம் அந்த கடத்தல் கும்பலுக்குத் தெரிய வந்து, அந்த பையனை கொலை செஞ்சிருக்கலாம்

ம், அப்படியும் நடந்திருக்கலாம். அதுக்கும் சான்ஸ் இருக்கு என்று சொல்லிவிட்டு ஒரு வழியாக ஒரு சப்பாத்தியை சாப்பிட்டு முடித்தான் மோகன்.

அடுத்த சப்பாத்தியை சாப்பிட ஆரம்பிக்கும்போது, “பையன் எப்படிப்பட்டவன்? தெரியுமா உனக்கு? என்று சிவாவைக் கேட்டான் மோகன்.

“ஆளு பாக்கறதுக்கு நல்லா இருப்பான். பாடி பில்டர். நான் போற ஜிம்முக்குத் தான் வருவான். நிறைய தடவை அவன அங்க பாத்திருக்கேன். டெய்லி ஜிம்ல 3, 4 மணி நேரம் எக்சர்சைஸ் பண்ணுவானாம், என்னோட ஜிம் ஃப்ரெண்ட்ஸ் சொல்லியிருக்காங்க

“அதெல்லாம் சரி. பழகறதுக்கு ஆளு எப்படி? எல்லாரோடயும் நல்லா பழகுவானா அந்த முருகன்? உங்கிட்ட பேசியிருக்கானா?

“எங்கிட்ட பேசினது இல்ல. மத்தவங்க கிட்டயும் அதிகமா பேச மாட்டான். ஜிம்முக்குள்ள வந்தவுடனே ஹெட் ஃபோன எடுத்து மாட்டிக்குவான். அவன் முக்கால்வாசி நேரம் தனியாதான் எக்சர்சைஸ் செஞ்சிட்டிருப்பான். அவனை விடுடா. நாம் வீட்டுக்குப் போய் அப்பறமா அவனப்பத்தி பேசலாம். நீ முதல்ல சாப்பிடுஎன்றான் சிவா. சாப்பிட்டு முடித்துவிட்டு, அதற்கான காசைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

டேய், போற வழியில அப்படியே மெரினா பீச்சுக்குப் போயிட்டு போகலாம் டா என்றான் மோகன். அதற்கு சிவா, “சரிடா. ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல. நாட்டுல நிறைய கொலை நடக்குது, நீ ஏன் இந்த கொலை சம்பவத்துல மட்டும் இவ்ளோ இன்டெரெஸ்ட் எடுத்துக்கறன்னு தெரியல என்றான்.

அதற்கு மோகன், “ஒன்னும் ஸ்பெஷலா இல்ல டா. நம்ம வயசுப்பையன இவ்ளோ கொடூரமா கொன்னுருக்காங்க. அது தான் கஷ்டமா இருக்கு. என்ன ஆச்சு, எதனால கொலை நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கணும்னு இருக்கு என்றான்.


“சரி, என்னவோ சொல்றே. நானும் நம்பறேன். பீச்சுக்கே ஓட்டு வண்டிய”. அங்கிருந்து கிளம்பி மெரினா பீச்சை நோக்கி புறப்பட்டது வண்டி.

No comments:

Post a Comment