Thursday 12 June 2014

மறக்க முடியாத முகங்கள் – 9

மறக்க முடியாத முகங்கள் – 9:

இன்று மாலை அலுவலகத்தில் ஒரு நண்பனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவன் தன்னுடைய நண்பன் ஒருவனைப் பற்றிச் சொன்னான். அந்த நண்பன் இரண்டு ஆண்டுகளில் மூன்று வேலைகளை விட்டிருப்பதாகச் சொன்னான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இப்போது நிலவுகிற பொருளாதாரச் சூழலில் எத்தனை பேர் இப்படி நினைத்த நேரத்தில் இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறொரு நிறுவனத்தில், வேறொரு வேலையில் சேர்ந்து விடுகின்றனர்? எனக்குத் தெரிந்தவரை, என் நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் அடுத்த வேலை கிடைக்கும் முன், இருக்கிற வேலையை யாரும் விட்டதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டாவது, அடுத்த வேலை கிடைக்கும் வரை அதே வேலையில் இருந்திருக்கிறார்கள். ஏன், நானும் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் அப்படித்தான் இருந்தேன்.

நினைத்த நேரத்தில் வேலையை விட தைரியம், நம்பிக்கை இரண்டும் மிக மிக முக்கியம். இப்படி ஒருவன் இரண்டு ஆண்டுகளில் மூன்று பெரிய நிறுவனங்களில் கிடைத்த வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறானே என்று எனக்குள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. அவனைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமானது.

அவன் முதலில் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் ஏதோ பண நெருக்கடி போல. ஆஃபர் லெட்டரில் 25000 ரூபாய் மாதச் சம்பளம் என்று போட்டிருந்தாலும், மூன்று வேளை சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றிற்கு பணம் பிடித்துக் கொண்டு கையில் 5000 ரூபாய்தான் கொடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்ட அன்றைய தினமே அந்த வேலையை விட்டுவிட்டானாம். இதுதான் முதல் விக்கெட்.

அடுத்ததாக ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தானாம். அங்கு சில மாதங்கள் வேலை செய்துவிட்டு, வேலை பிடிக்காத காரணத்தினால் அந்த வேலையை விட்டுவிட்டானாம். இது இரண்டாவது விக்கெட்.

அடுத்து ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலை. அதுவும் ஐந்து சுற்று நேர்காணல்களையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்து, வென்ற வேலை. ஏகப்பட்ட சம்பளம், அருமையான சூழல்.

இப்படிப்பட்ட வேலையை இவன் சென்ற வாரம் விட்டிருக்கிறான். காரணம் அவனும் அவனுடைய நண்பனும் சேர்ந்து இணையத்தில் பயன்படுத்தப்படக்கூடிய மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களாம். அது இந்த வாரமோ அடுத்த வாரமோ வெளியாகிவிடுமாம். எங்கிருந்து எங்கு வந்திருக்கிறான் பார்த்தீர்களா?

இத்தனை வேலைகளை விட்டுவிட்டு, இப்போது இவனே ஒரு முதலாளி ஆகி ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்போகிறான். அவனுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லச் சொன்னேன் என் நண்பனிடம்.

கீழே இறங்கி வந்துகொண்டிருந்தபோது, நாம் செய்கிற பல விதமான வேலைகளையும், அவற்றிலுள்ள நிறைகளையும், குறைகளையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது இன்று காலை நான் பார்த்த ஒரு சிறுவனின் முகமும், சில மாதங்களுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு சிறுவனின் முகமும் என் கண் முன் வந்து போனது.

இன்று காலை 9:15 மணியளவில், அலுவலகத்திற்குப் போகும் வழியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்றேன். அங்குதான் இருந்தான் அந்தச் சிறுவன்.

அழுக்குப் படிந்த சட்டை, பேண்ட். தோளில் ஒரு ஜோல்னாப்பை. அவனுக்கு ஒரு 11, 12 வயது இருக்கும் என நினைக்கிறேன். அவனுக்குப் பக்கத்தில் அவன் கயிறு பிடித்து இழுத்துக்கொண்டு வந்திருந்த பூம் பூம் மாடு ஒன்று இருந்தது. அதன் மேல் ஒரு சிவப்பு நிற துணி போர்த்தப்பட்டிருந்தது.

இந்த பூம் பூம் மாடுகளை எங்கள் வீட்டருகே பார்த்திருக்கிறேன். ஆனால், IT HUB என்று சொல்லப்படும் WHITEFIELD பகுதியில் பார்ப்பது இதுதான் முதல் முறை.

பெட்ரோல் பங்கில் வந்திருந்த நபர்களிடம் அந்த மாட்டை இழுத்துச் சென்று காசு கேட்டான் அந்தச் சிறுவன். யாரும் கொடுக்கவில்லை. அதற்குள் அந்த பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பவர்கள் “இங்கே நிக்காதே. வேற எங்கேயாவது போ” என்று கடுமையான குரலில் அவனைத் திட்ட ஆரம்பித்தனர்.

அந்த பூம் பூம் மாட்டுக்கு இவர்கள் கத்தியது புரிந்ததோ என்னவோ தெரியவில்லை. நடக்க ஆரம்பித்தது. ஆனால், அந்தச் சிறுவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். வயிற்றுப் பிழைப்பு!

அந்தக் காட்சி என்னை உள்ளூர உறுத்தியதால் ஒரு பத்து ரூபாய் தாளை அவனிடம் கொடுத்தேன். அதனை வாங்கும்போது அவன் முகத்தில் பெரிய மகிழ்ச்சி எதுவும் தென்படவில்லை. சிறு நிம்மதி எட்டிப் பார்த்ததென நினைக்கிறேன். அங்கிருந்து நான் கிளம்பி வந்துவிட்டேன்.

இந்தச் சிறுவனைப் போலவே இன்னொரு சிறுவனை, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் சந்தித்தேன். பெட்ரோல் பங்கிலிருந்து அலுவலகத்திறுகுச் செல்லும் வழியில் அவன் நினைவு வந்தது எனக்கு.

சாலையோரத்தில் செடிகள், மண் தொட்டிகள், செம்மண் போன்றவற்றை விற்பவர்களை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு இடத்தில்தான் இந்தச் சிறுவன் இருந்தான்.

செம்மண் குவியலுக்குப் பக்கத்தில் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, முகமும் செம்மண் நிறத்தில் இருந்தது. ஆனால், சிரிப்பும், வெளேர் நிற பற்களும், 10 வயது சிறுவர்களுக்கே உரித்தான அந்த அழகிய, வெகுளி முகத்தை மேலும் அலங்கரித்தன.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். அழகாக, சுட்டியாகப் பேசினான். அவனிடம் விலை பேரம் பேசக்கூட எனக்கு மனம் வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மாதிரி இனிமையாகப் பழகுபவர்களிடம், இனிமையாகப் பேசுபவர்களிடம் வாதமோ பேரமோ செய்யத் தோன்றாது. சிறுவர்களைத் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி இனிமையாகப் பேசவும், பழகவும் முடியாது என்று தோன்றியது. இதையெல்லாம் நினைத்துக் கொண்டே அலுவலகத்தில் நுழைந்து முதல் வேலையாக இணையத்தினுள் விழுந்தேன்.

இணையத்தில் நான் பார்த்த முதல் செய்தி - “இன்று குழந்தை தொழிலாளர் தினம்”......


இன்னும் இந்த சிந்தனைகளிலிருந்து மீள முடியவில்லை. அந்த இரண்டு சிறுவர்களின் முகங்களையும் மறக்க முடியவில்லை.

No comments:

Post a Comment