Sunday 8 June 2014

யாரது (11 - 15) (September 2013)

11. திங்கட்கிழமை. ஆஃபீஸுக்கு 9 மணிக்குள் வந்திருந்தாள் ரேவதி. மோகன் ஆஃபீஸுக்குள் நுழையும்போது மணி 9:10. தன் இருக்கைக்கு வந்தவுடன் தனக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ரேவதியைப் பார்த்து, “என்ன ரேவதி, இன்னிக்கு ஆஃபீஸுக்கு டைமுக்கு வந்துட்டே? என்றான் மோகன்.

அதற்கு ரேவதி, “நான் எப்பவோ வந்துட்டேன். என்ன சொல்லிட்டு நீ இன்னிக்கு லேட்டா வர்றே? என்றாள். “இன்னிக்கு ரெட் கலர் பொட்டு வெச்சிட்டு வந்திருக்கியே, அதான் சீக்கிரம் வந்திருக்க. பச்சை கலர் பொட்டு வெச்சாத்தான் நீ லேட்டா வருவன்னு நினைக்கிறேன் என்றான் மோகன்.

“ஆமா, ஒரு பொட்டு வெக்கறதுக்குத்தான் அவ்ளோ லேட்டாகுது. நீயும் உன்னோட லாஜிக்கும்

“நான் சொன்னது கரெக்டா? தப்பா? நீ லேட்டா வர்றன்னிக்கெல்லாம் இந்த கலர் பொட்டுதான் உன் நெத்தியில இருக்கும். மத்த நாள்ல எல்லாம் கரெக்டா டைமுக்கு வந்துடுவ. ஸோ, நான் சொல்றதுல என்ன தப்பு?

“யப்பா, உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? ஆளை விடு சாமி. என்னை வேலை செய்யவிடு என்றாள் ரேவதி. அதற்கு மோகன், “சரி பொழைச்சுப் போ என்றான். அவரவர் வேலையை செய்யத்தொடங்கினர் இருவரும்.
மதியம் 1 மணி. ஆஃபீஸில் உள்ள அனைவரும் மதிய சாப்பாடு சாப்பிடச் சென்றிருந்ததனர், மோகனையும் ரேவதியையும் தவிர. தினமும் ஒன்றாகத் தான் சாப்பிடுவார்கள் இவ்விருவரும்.

“சாப்பிட போகலாமா ரேவதி? மணி 1 ஆச்சு. 2 மணிக்கு ஒரு மீட்டிங்க் இருக்கு, அதுக்கு சீக்கிரம் சாப்பிட்டு வந்து தயார் பண்ணிக்கணும் என்றான் மோகன்.

அதற்கு ரேவதி, “ஒரு பத்து நிமிஷம் டைம் கொடு மோகன். ஒரு முக்கியமான நியூஸ படிச்சிட்டிருக்கேன். முடிச்சுட்டு வர்றேன் என்றாள். 

அதற்கு மோகன், “சரி, முடிச்சுட்டு சொல்லு என்றான். பதினைந்து நிமிடங்கள் கழித்து ரேவதியும், மோகனும் மதிய சாப்பாடு சாப்பிட ஆஃபீஸ் கேண்டீனுக்குச் சென்றனர்.

அந்த கேண்டீனில், இருபது வரிசைகளில் மொத்தம் நூறு டேபிள்கள் இருந்தன. நானூறு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு பெரிய கேண்டீன். குளிர்சாதன வசதி கொண்டது என்பதால் எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்துக்கொண்டு சாப்பிடலாம். வியர்வை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

கேண்டீன் கவுன்டருக்குச் சென்று மோகன் புளிசாதமும், ரேவதி தயிர்சாதமும் வாங்கிக்கொண்டு சுமார் பத்து வரிசைகள் தள்ளி பின்னால் இருந்த ஒரு டேபிளில் உட்கார்ந்தனர். சாப்பிடத் தொடங்கினர் இருவரும்.
மூன்று, நான்கு வாய் சாப்பிட்டிருப்பான் மோகன். ஆனால் ரேவதி, எதையோ யோசித்துக்கொண்டு, தான் வாங்கிய தயிர்சாதத்தை ஸ்பூனால் புரட்டியபடியே இருந்தாள்.

“ஹேய் ரேவதி, சாப்பிடாம என்ன தயிர்சாதத்தை உழுதுட்டிருக்கே?
“ஒன்னும் இல்ல. வெள்ளிக்கிழமை ராத்திரி ஒரு கொலை நடந்திருக்கு. அதப்பத்திதான் யோசிச்சிட்டிருக்கேன்

“எந்த கொலை அது? அத ஏன் இப்போ போய் யோசிச்சிட்டிருக்கே?

தங்கம் மல்டிப்ளேக்ஸ் ஓனரோட பையனை யாரோ கொலை செஞ்சிருக்காங்க. அதப்பத்தி தான்

“ஏன்? அந்த பையனை உனக்குத் தெரியுமா?

“அவனைத் தெரியாது. ஆனா அந்த கேஸ இன்ஸ்பெக்டர் விஜய்கிட்ட ஒப்படைச்சிருக்காங்களாம், நியூஸ்ல போட்டிருந்தாங்க

“அதுக்கு என்ன இப்போ?

“அந்த இன்ஸ்பெக்டர் ஒரு வேஸ்ட்டு. ஒன்னும் சரியா கண்டுபிடிக்க மாட்டார்

“நீ எப்படி சொல்ற? ஏற்கனவே உனக்குத் தெரியுமா அவரை?

“அவர்தான் என் அப்பா, அம்மா கொலையை இன்வெஸ்டிகேட் பண்ணார். இதுவரைக்கும் ஒன்னும் கண்டுபிடிக்கல, என்று ரேவதி சொல்லும்போது அவள் குரல் சற்றே ததும்பியது. ஒருவித கோபமும், ஆதங்கமும், வருத்தமும் இருந்தது அந்தக் குரலில்.

கண்களில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது ரேவதிக்கு. அவளை திசைதிருப்ப மோகன், “ஓ அப்படியா? சரி விடு. இந்த புளிசாதம், தயிர்சாதத்துக்குப் பின்னாடி ஒரு வரலாறே இருக்கு. தெரியுமா உனக்கு? என்றான்.

“என்ன பெருசா இருக்கப்போகுது? என்னவோ கதை விடப்போறன்னு மட்டும் தெரியுது. கதை விடறதுலதான் நீ பெரிய புலியாச்சே. புலி, புளிசாதத்தைப் பத்தி சொல்லப்போகுதா? அடடே, ஆச்சரியக்குறி என்று நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னாள் ரேவதி.

“நான் என்னோட காலேஜ் டேஸ்ல தினமும் மத்தியானம் சாப்பிடறதுக்கு புளிசாதம்தான் எடுத்துக்கிட்டு போவேன். எங்க அம்மா செய்யற புளிசாதம் அவ்ளோ நல்லா இருக்கும். அதனால தினமும் எடுத்துட்டு போவேன்”, என்றான் மோகன்.

அதற்கு ரேவதி, “அய்யோ ராமா, இதையா வரலாறுன்னு சொன்னே?என்று சொல்லி, தன் தலையில் கை வைத்துக்கொண்டாள்.

“இதுக்கே அலுத்துக்கிட்டியே. தயிர்சாதத்தோட வரலாறை நீ கேட்டா மயக்கமே போட்டிருவே”, என்றான் மோகன். அதற்கு ரேவதி, “வேணாம்னு சொன்னா என்னை விடப்போறியா? சொல்லித் தொலை என்றாள்.

“ஒரு நாள் கூட நான் காலேஜுக்கு தயிர் சாதம் எடுத்துக்கிட்டு போனதில்லை. இதுதான் தயிர் சாதத்தோட வரலாறு”, என்றான் மோகன். 

இதைக்கேட்டு ரேவதி, கும்பிடுபோடுவது போல் தன் தலையில் கைகளை வைத்து, “இனிமே நான் உன் முன்னாடி தயிர்சாதமே சாப்பிடமாட்டேண்டா சாமி என்று சொல்லி மோகனை முறைத்தாள்.

“வரலாறு மிக முக்கியம் ரேவதி. உனக்கு இப்போ தெரியாது வரலாறோட முக்கியத்துவம் என்றான் மோகன். அதற்கு ரேவதி, “தெரியாம வரலாறப்பத்தி கேட்டுட்டேன். என்னை சாப்பிடவிடு என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு வழியாக ரேவதியின் சிந்தனையை மாற்றியதை நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டான் மோகன்.



12. அந்த வாரம் முழுவதும் வேறு எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் கடந்தது. தேதி மார்ச் 17, சனிக்கிழமை. காலை 8 மணி. காலை டிஃபன் சாப்பிட்டுவிட்டு சிவாவுக்கும் பார்சல் வாங்கிக்கொண்டு வந்தான் மோகன்.

நடந்த கொலை பற்றிய வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இன்னும் போலீஸ் துப்பு துலக்கிக்கொண்டிருப்பதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ரூமுக்கு வந்ததும் சிவாவை எழுப்பினான் மோகன். “டேய் சிவா, எழுந்திருடா. டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கேன். பிரஷ் பண்ணிட்டு, குளிச்சிட்டு வா. சாப்பிட்டு வெளியே போகணும். கொஞ்சம் வேலை இருக்கு என்றான் மோகன்.

அதற்கு சிவா, “டேய் இன்னிக்கு என்னடா வேலை. போன சனிக்கிழமைதான் சினிமாவுக்கு போகலாம்னு சொல்லி வெளியே போய் அவ்ளோ விஷயத்தப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு எனக்கு தூக்கம் போச்சு. நான் வரலைடா. ஆஃபீஸுக்குப் போறேன். உன்னோட வெளியே வர்றதுக்கு அதுவே மேல் என்றான்.

இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மோகன், “பேசி முடிச்சிட்டியா? முதல்ல ரெடி பண்ணிட்டு வந்து சாப்பிடு. விஜய்க்கு ஃபோன் பண்ணி வீட்டுல இருக்கானான்னு கேளு. அங்க போகணும் என்றான்.

“ஐய்யய்யோ, இன்னிக்கும் என்ன விடமாட்டியா நீ. இருடா அடுத்த வீக்கெண்ட் ஊர விட்டு எங்கயாவது ஓடிடறேன். அப்பத்தான் நிம்மதியா இருக்கும் எனக்குஎன்று சொல்லிவிட்டு எழுந்து சென்று தன்னை ரெடி செய்துக்கொண்டு டிஃபன் சாப்பிட வந்தான் சிவா. முடித்தவுடன் விஜய்க்கு ஃபோன் செய்து, அவன் வீட்டிலிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு கிளம்பினர் மோகனும், சிவாவும்.

சரியாக 10 மணிக்கு விஜய் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் இருவரும். வீட்டுக்கு வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர். உள்ளே வேறு யாரோ ஒரு 50, 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தான் விஜய்.

“ஹாய் விஜய் என்றபடியே உள்ளே சென்றான் சிவா.

“ஹாய் சிவா. ஹாய் மோகன். உள்ளே வாங்க, வந்து உக்காருங்க என்றான் விஜய். அதற்கு மோகன், “இல்ல விஜய். நீ ஏதோ முக்கியமான விஷயமா பேசிக்கிட்டு இருக்கே. நாங்க வெளிய வெயிட் பண்றோம். நீ பொறுமையா உன்னோட வேலைய முடிச்சிட்டு வா என்றான்.

“பரவாயில்ல மோகன், உள்ள வா. நம்ம போன வாரம் டிஸ்கஸ் பண்ண கேஸைப் பத்தி தான் நாங்க இப்போ பேசிக்கிட்டிருக்கோம். இவர் தான் டாக்டர் ஜான். பாடியை போஸ்ட் மார்ட்டெம் பண்ண டாக்டர். சீஃப் சர்ஜன். அதோட என் ஃப்ரெண்டும்கூட என்று வந்திருந்த நபரை மோகனுக்கும், சிவாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

“டாக்டர், நான் சொல்லலை, போன வாரம் இந்த கொலையப்பத்தி ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிட்டிருந்தேன்னு. இவங்கதான் அது. மோகன், சிவா என்று அவர்களை டாக்டரிடம் அறிமுகம் செய்து வைத்தான். கை குலுக்கிக்கொண்டனர் மூவரும்.

“போஸ்ட்மார்ட்டெம் ரிசல்ட் வந்தாச்சா? பேப்பர்ல ஒரு நியூஸயும் காணோம்? என்று கேட்டான் மோகன். அதற்கு விஜய், “ஒரு 4, 5 நாள் ஆச்சு. ஆனா எங்க டிபார்ட்மென்ட்ல இருக்கறவங்களுக்குத்தான் இது தெரியும். அதப்பத்தி பேசறதுக்குத்தான் வந்திருக்கார் டாக்டர் என்றான்.

அதற்கு சிவா, “அப்பாடா. நல்ல வேளை இந்த போஸ்ட்மார்ட்டெம் ரிசல்ட் வந்தாச்சு. நானும் ஒரு வாரமா எப்படி மண்டை ஓட்டை உடைச்சானுங்கன்னு புரியாம குழம்பியிருந்தேன் என்று பெருமூச்சுவிட்டபடி சொன்னான்.

அதற்கு டாக்டர் ஜான், “கோல்ட் ப்ளட்டெட் மர்டர்ரஸ். ஒரு பெரிய இரும்பு கம்பியை உபயோகிச்சிருக்கானுங்கன்னு நினைக்கிறோம். அதை வெச்சு, அந்த முருகன் உயிரோட இருக்கும்போதே அவன் மண்டையில பயங்கரமா வெறி பிடிச்ச மாதிரி அடிச்சிருக்கானுங்க. அடிச்ச அடியில மண்டை ஒட்டோட சில துண்டுகள் மூளையை குத்தியிருக்கு என்று சொல்லும்போது அவர் முகம் வியர்த்திருந்தது. கண்களில் ஒரு வித பயமும் காணப்பட்டது. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான் மோகன்.

இதைக்கேட்டு சிவா, “மை காட். கேக்கும்போதே பயமா இருக்கே. எப்படி அந்த கொலைகாரனுக்கு இத செய்ய மனசு வந்தது. மனுஷனே இல்ல அவன்என்றான் பதற்றத்தோடு.

“சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் கிளம்பறேன். கிளினிக்குக்கு போகணும் என்று அங்கிருந்து கிளம்பினார் டாக்டர் ஜான். அவரை வழியனுப்ப அவருடன் வீட்டு வாசலுக்குச் சென்றான் விஜய்.

“எதுக்கும் கவலைப்படாதீங்க டாக்டர். நான் பாத்துக்கறேன் என்றான் விஜய். அதற்கு டாக்டர், “கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லாம் எதுக்கு இந்த போஸ்ட்மார்ட்டெம் ரிசல்ட்டை பத்தியெல்லாம் என்னை சொல்லச் சொல்ற? சீக்ரெட்டா வெச்சிக்க வேணாமா? என்றான்.

“இந்த மோகன் இருக்கானே, நல்ல மூளை அவனுக்கு. நல்லா யோசிக்கறான். போன வாரம் கூட அவன் என் வீட்டுக்கு வந்து, அந்த டிராஃபிக் சிக்னல் விஷயத்தப்பத்தி சொன்னதுக்கு அப்பறம்தான், அந்த ஆங்கிள்ல யோசிக்க ஆரம்பிச்சோம். இந்த விஷயத்துலயும் யோசிச்சு, ஏதாவது சொன்னாலும் சொல்லுவான்னுதான் அவன் முன்னாடி இதப்பத்தி சொன்னேன் என்றான் விஜய்.

“என்னவோ போ. இன்னும் என்ன எல்லாம் நடக்கப்போகுதோன்னு பயமாத்தான் இருக்கு. எதுக்கும் நீயும் ஜாக்கிரதையா இரு விஜய் என்று சொல்லி அவருடைய காரில் ஏறி கிளம்பினார்.



13. டாக்டரை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தான் விஜய். சோஃபாவில் உட்கார்ந்திருந்த சிவா, மோகனைப் பார்த்து, “என்ன சமாச்சாரம்? ஏதோ பேசணும்னு ஃபோன்ல சொன்னீங்க? என்றான்.

அதற்கு மோகன், “கொலை நடந்து ஒரு வாரம் ஆச்சு. இன்னும் போஸ்ட்மார்ட்டெம் ரிப்போர்ட் வந்தமாதிரி தெரியல. பேப்பர்லயும் எதுவும் வரல. அதான் என்னாச்சுன்னு கேக்கலாம்னுதான் வந்தோம் விஜய் என்றான்.

“அப்படியா, சரி. அதான் இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும் மோகன். மத்ததெல்லாம் போலீஸ் சீக்ரெட் மேட்டர்

“புரியுது விஜய். ஆமா, வந்துட்டுப்போனாரே டாக்டர் ஜான். இவர உனக்கு ரொம்ப நாளா தெரியுமா?

“தெரியும். ஏன் கேக்கறே? என்ன விஷயம்?

“ஒன்னுமில்ல, சும்மாதான் கேட்டேன். கிளினிக்குக்குப் போகணும்னு சொன்னாரே. எங்க இருக்கு அவரோட கிளினிக்?

“அடையாறுல கஸ்தூரிபாய் நகர்ல இருக்கு. பேரு ஜான் கிளினிக். சண்டே மட்டும் லீவு. மத்த நாள்ல சாயங்காலம் 6 மணிலேர்ந்து ராத்திரி 10 மணி வரைக்கும் இவர் அங்க இருப்பார்

“ஓ, அடையாறுல ஜான் கிளினிக்னு ஒன்னு, வெறும் பத்து ரூபாய்தான் கன்சல்டேஷன் ஃபீஸ் வாங்கறதா நியூஸ்ல பாத்திருக்கேன். அந்த ஜான் கிளினிக் இவரோடதுதானா?”, என்றான் சிவா.

“அதேதான். இந்த டாக்டர் ரொம்ப நல்லவர். சில நேரங்கள்ல இலவசமா கூட ட்ரீட்மெண்ட் கொடுப்பார், காசு இல்லாதவங்களுக்கு ஆப்பரேஷனும் இலவசம்தான். காசைப்பத்தி கவலைப்படவே மாட்டார்

“சூப்பர். இனிமே ஏதாவது பிரச்ச்னைன்னா நேரா இவரோட கிளினிக்குக்கு போயிட வேண்டியதுதான். சரி விஜய், நாங்க கிளம்பறோம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு, கண்டிப்பா செய்யறோம்என்று சொல்லி அங்கிருந்து மோகனை எழுப்பிக்கொண்டு கிளம்பினான் சிவா.

அரை மணி நேரத்தில் ரூமுக்கு வந்து சேர்ந்தனர் மோகனும், சிவாவும். வண்டியை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர்.

“என்ன வெயில்டா? மார்ச் மாசமே இப்படின்னா, ஏப்ரல், மே மாசத்துல எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்கவே முடியல என்றான் சிவா. அவன் உடல் முழுதும் வியர்த்து, சட்டை நனைந்திருந்தது.

அதற்கு மோகன், “வெளியே வெயில். அதான் நமக்கு வியர்க்குது. ஆனா விஜய் வீட்டுல ஏ.சி போட்டிருந்தானே. அங்க எப்படி அவ்ளோ வியர்வை வந்தது? என்றான் மோகன்.

“என்னடா சொல்றே மோகன்? அவன் வீட்டுக்கு உள்ளே போனவுடனே ஏ.சி. காத்து அடிக்கறது தெரிஞ்சுதே. அவ்ளோ ஜில்லுனு இருந்துச்சு அங்க. எனக்கு கொஞ்சம் கூட வியர்க்கலையே

“எனக்கும்தான் வியர்க்கல. ஆனா அந்த டாக்டரோட முகத்தைப் பார்த்தியா நீ

“பார்த்தேனே. முடி எல்லாம் நரைச்சு போயிருந்துச்சு

“சரி, வேற ஏதாவது கவனிச்சியா நீ? அவரோட மூக்குக்கு கீழே மீசை இருந்துச்சா, அதப் பாத்தியா நீ?

“டேய், என்னடா தில்லு முல்லு படத்துல தலைவர் சொல்ற வசனத்தை எங்கிட்ட சொல்றே?

“ஆமா, பின்ன உங்கிட்ட வேற என்ன கேக்கறது? முகத்தை சரியா பாத்தியான்னு கேட்டா, முடி நரைச்சு போயிருந்துச்சுன்னு சொல்றே

“சரி விடு. நீ என்ன எதிர்பார்க்கறன்னு எனக்குத் தெரியல. நீயே சொல்லிடு

“நம்மகிட்ட பேசும்போது அவர் முகத்துல அவ்ளோ வியர்வை. சட்டையும் நனைஞ்சிருந்துச்சு. கவனிச்சியா நீ?

சிறிது நேரம் யோசித்துவிட்டு சிவா, “கரெக்ட் டா. பயங்கரமா வியர்த்திருந்துச்சு. கண்ணுகூட திடீர்னு பெருசா ஆன மாதிரி இருந்துச்சு என்றான்.

“அப்பாடா, இப்பவாவது இத சொன்னியே. ஏ.சி குளிருல எப்படி ஒருத்தருக்கு அவ்ளோ வியர்க்கும்? விஜய் வீட்டுல ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததா சொன்னான். பேசினா எப்படி அவ்வளவு வியர்க்கும்?

“கரெக்ட். கண்ணுல ஏதோ ஒருவித பயமும் இருந்த மாதிரி தெரிஞ்சுச்சு எனக்கு

“எக்ஸாக்ட்லீ. எதுக்கு ஒரு டாக்டர் இவ்ளோ பயப்படணும்? அப்படி எதப் பாத்து பயந்தாரு?

“விஜய் முகத்துல எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லயே. ஓரு வேளை விஜய் பயமுறுத்தினானா?

“விஜய் அப்படிப்பட்டவனா இருக்கமாட்டான் மோகன். அவன் மேல சந்தேகப்படாதே

“அத நீ எப்படி சொல்றே?

“நானும் அவனும் க்ளாஸ்மேட்ஸ் டா. அதான் சொன்னேனே

“சரி, அப்போ எப்படி இருந்தான் அவன்?

“அவன் உண்டு, அவன் வேலை உண்டுன்னு இருப்பான். சுமாராதான் படிப்பான். ஆனா ஃப்ரெண்ட்ஸுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்
“எப்படி போலீஸ்ல சேர்ந்தான்?

“எல்லாம் பணம்தான். அவனோட அப்பா பெரிய பணக்காரர். இவனுக்கு போலீஸாகணும்னு ரொம்ப நாளா ஆசை. அத அவங்க அப்பா நிறைவேத்திட்டார். அவ்ளோதான்

“ஒன்னுமே புரியல. சரி விடு, டாக்டரை நேர்ல பாத்துட வேண்டியதுதான்

“என்னடா சொல்ற மோகன்? எப்படி அவர நேர்ல பார்ப்பே?

“இன்னிக்கு சனிக்கிழமை தானே. அவர் கிளினிக்குக்கு இன்னிக்கு சாயங்காலம் 7 மணிக்குப் போகலாம். அப்ப தான் க்ளியர் பண்ணிக்க முடியும் சிவா

“நீ தேவையில்லாம இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருக்கன்னு தோணுது மோகன். பாத்து ஜாக்கிரதை

“என்ன, ஜாக்கிரதைனு சொல்ற? நீ என் கூட இருக்கும்போது எனக்கென்ன கவலை என்று மோகன் சிரித்துக்கொண்டே சொல்ல தலைமேல் கைவைத்து தரையில் உட்கார்ந்தான் சிவா.


14. மாலை 6:30 மணி. அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் இருக்கும் ஜான் கிளினிக்கிற்கு செல்லத் தயாரானான் மோகன். சிவா இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

“டேய் சிவா, எழுந்திருடா. டைம் ஆச்சு. கிளினிக் போகணும் என்று சிவாவை எழுப்பினான் மோகன்.

தூக்கக்கலக்கத்தில் சிவா, “டேய், என்னை விடுடா. உனக்கு வேணும்னா நீ போக வேண்டியதுதானே. என் உசுர ஏண்டா எடுக்கறே? என்றான்.

“டேய், நீ இல்லன்னா எனக்கு வேற யாரு இருக்காங்க? நீயே இப்படி சொல்லலாமா?

“இந்த சினிமா டயலாக்கை எல்லாம் கரெக்டா சொல்லு. ஆனா கூட இருக்கறவன நிம்மதியா தூங்கவிடாதே. உன்னோட ஒரே இம்சையாப் போச்சு

“எல்லாம் சரி, எழுந்திருடா. டைம் ஆச்சு. இன்னிக்கு மட்டும் என் கூட வா. இனிமே உனக்கு தொல்லை கொடுக்கமாட்டேன்

“என்ன எழவோ. இரு வர்றேன். ஆனா, நைட் டின்னர் நீதான் வாங்கித்தரணும். அதுவும் சங்கீதா ஹோட்டல்ல. இதுக்கு ஓ.கேன்னா நான் வர்றேன்

“சரிடா, இன்னிக்கு என் ட்ரீட் தான். சீக்கிரம் வா

சரியாக 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினர் இருவரும். அடையாறு மெயின் ரோடு சிக்னலில் நின்றது வண்டி.

“டேய் மோகன், உன்னோட ரைட் சைடுல பாரு. இதான் நான் சொன்ன சங்கீதா ஹோட்டல். இங்கதான் நீ ட்ரீட் தரணும். ஞாபகம் வெச்சுக்கோ என்றான் சிவா.

அதற்கு மோகன், “டேய், எப்போ பாத்தாலும் சாப்பிடறதப் பத்தியே யோசிக்காதே. முதல்ல போய் டாக்டரப் பாப்போம். அதுக்கப்பறம் தான் இது என்று சொல்லும்போது சிக்னலில் பச்சை விளக்கு எரிய வண்டி அங்கிருந்து கிளம்பியது.

ஜான் கிளினிக் வந்து சேர்ந்தனர் இருவரும். மஞ்சள் நிற, இரண்டு அடுக்கு கொண்ட புதிய கட்டிடம் அது. கீழ்த்தளத்தில் ஒரு சிறிய கன்சல்டேஷன் அறை. மேலே ஈ.சி.ஜி, எக்ஸ் ரே வசதி கொண்ட சோதனைக்கூடம். ஆனால், பூட்டப்பட்டிருந்தது. அங்கு ஒருவரும் இல்லை. இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை மோகனுக்கு.

“என்னடா மோகன், கடைசில அல்வா கொடுத்திட்டாரு டாக்டரு?
“அதான் தெரியல டா. டாக்டர் எல்லா நாளும் கிளினிக் வர்றதாதானே விஜய் சொன்னான். இன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. இரு, அந்த பக்கத்துல இருக்கற மெடிக்கல் ஷாப்புல விசாரிச்சிட்டு வர்றேன் என்று அந்த மருந்துக்கடையை நோக்கிச் சென்றான் மோகன்.

அந்த மருந்துக்கடையில் விசாரித்துவிட்டு, திரும்பி வந்த மோகன், சிவாவிடம், “அந்த கடைக்காரருக்கும் தெரியலயாம் டா. நாம அநேகமா டாக்டரை சந்திக்க திங்கக்கிழமை வரைக்கும் வெயிட் பண்ணணும்னு நினைக்கிறேன் என்றான்.

திங்கக்கிழமை நாம இங்க வந்தாலும் வேஸ்ட்தான். இன்னிக்கு ஏதோ ஒரு விஷயத்தப்பத்தி பேசினப்போ அவர் பயந்த மாதிரி இருக்கு. அந்த பயம் திங்கக்கிழமை வரைக்கும் இருக்கறது சந்தேகம் தான்

“டேய் சிவா, கலக்கற டா. நீ சொல்றது கரெக்ட்தான். எப்படிடா உன்னால இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? என்று கிண்டலாகச் சொன்னான் மோகன்.

அதற்கு சிவா, “நீ ஓவராப் பேசி, கொடுக்க வேண்டிய ட்ரீட்டை மறந்துடாதே. வா ஹோட்டலுக்குப் போகலாம் என்று பதில் சொல்ல, இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

ஹோட்டல் சங்கீதா வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர். “டேய் மோகன். சொன்னது ஞாபகம் இருக்குல்ல? நீதான் இன்னிக்கு ட்ரீட் கொடுக்கறன்னு சொல்லிருக்க. மறந்திடாதே என்றான் சிவா.

அதற்கு மோகன், “சரிடா. ஞாபகம் இருக்கு. மறக்கலை. வேணுங்கிற அளவுக்கு சாப்பிட்டுக்கோ என்றான். ஒன்றரை மணி நேரம் ஆனது சாப்பிட்டு முடிக்க. மொத்தம் 700 ரூபாய்க்கு சாப்பிட்டிருந்தனர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு, ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது சிவா மோகனிடம், “டேய் மோகன், நானும் ரொம்ப நேரமா பாத்துட்டு இருக்கேன். அந்த கறுப்பு கலர் டாடா சுமோ நம்மளையே ஃபாலோ பண்ணிட்டு வருது. எனக்கென்னவோ பயமா இருக்குடா என்றான்.

மோகன் திரும்பிப் பார்த்தான். அந்த கறுப்பு நிற டாடா சுமோ அங்கிருந்து சுமார் 200 அடியில் நின்றிருந்தது. நம்பர் ப்ளேட் இல்லை அந்த வண்டிக்கு. கண்ணாடிகளில் கறுப்பு நிற பேப்பர் ஒட்டப்பட்டிருந்தது.

“எங்கெங்க டா பார்த்த அந்த வண்டியை? நான் இப்போதான் பாக்கறேன்

“நீ வண்டிய ஓட்டிட்டு வர்றே. நான்தானே பின்னாடி உக்காந்திருக்கேன். நான்தான் பாத்தேன். முதல்ல நாம இந்த சிக்னல்ல நின்னப்போ நமக்குப் பின்னாடி இருந்துச்சு. அப்பறம் அந்த ஜான் கிளினிக்கிக்கு பக்கத்துல நின்னுச்சு. இப்போ இங்க வந்திருக்கு

“ரிட்டர்ன் போகும்போது என்ன நடக்குதுன்னு பாப்போம் வா என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தான் மோகன். சிவா வண்டியில் அவனுக்குப் பின்னால் உட்கார்ந்தான். அந்த டாடா சுமோ மட்டும் அங்கேயே இருந்தது. காரிலிருந்து யாரும் இறங்கவுமில்லை, ஏறவுமில்லை.

சிறிது தூரம் சென்ற பிறகு மோகன் சிவாவிடம், “என்ன டா, டாடா சுமோ இன்னும் நம்மள ஃபாலோ பண்ணுதா? எங்க வருதுன்னு தெரியுதா உனக்கு? என்று கேட்டான். அதற்கு சிவா, “தெரியல டா. ராத்திரின்றதால கிளியரா சொல்ல முடியல. எல்லா வண்டியும் ஒரே மாதிரி தான் இருக்கு என்றான்.

“சரி, நாம இங்க எங்கயாவது மறைஞ்சு நின்னு, அந்த வண்டி வருதான்னு பாப்போம். என்ன சொல்ற சிவா?

“ஓ.கே. அந்த சைடுல ஒரு ஐஸ்கிரீம் கடை இருக்கு பாரு. அங்க போகலாம். அதுக்கு அடுத்து ஒரு சின்ன சந்து இருக்கு. அங்க வண்டிய நிறுத்தி, ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டே பாக்கலாம். நீயே காசு கொடுத்துடு

“அடப்பாவி, இன்னும் உன் வயித்துல இடம் இருக்கா? மனசாட்சியே இல்லாம சாப்பிடுறியேடா. போனாப்போகுது, இன்னிக்கு ஒரு நாள் உனக்கு வாங்கித்தர்றேன் என்று அந்த ஐஸ்கிரீம் கடைக்குப் பக்கத்தில இருக்கும் அந்தச் சின்ன சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு, கடைக்கு வந்தனர்.

கடைக்கு உள்ளே சென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, இரண்டு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான் சிவா. மோகன் எதையும் சாப்பிடாமல், கடைக்கு வெளியே வந்து நின்றுக்கொண்டு, இரண்டு பக்கமும் ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்தவண்ணம் இருந்தான்.
ஒரு டாடா சுமோகூட அந்த வழியாகப் போகவில்லை. அரை மணி நேரம் அந்தக் கடையிலேயே கழிந்தது. ஆனாலும் அந்த வண்டி அந்தப்பக்கம் வந்ததுபோல் இல்லை.

ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்து வெளியே வந்த சிவா, “என்னடா மோகன், அந்த வண்டி வந்துச்சா? என்று மோகனைக் கேட்டான். அதற்கு இல்லை என்பது போல தலையசைத்தான் மோகன்.

“சரி இங்க பாரு. நான் ரெண்டு ஐஸ்கிரீம்தான் சாப்பிட்டேன். அதுக்கே இருநூறு ரூபா ஆயிடுச்சு. நீ போய் காசு கொடுத்துட்டு வா. அது வரைக்கும் நான் வெளியே இருக்கேன். அந்த வண்டி வருதான்னு பாக்கறேன்

“ஒரே ஆளு, இருநூறு ரூபாய்க்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கியே, மனிஷனாடா நீயெல்லாம்? அது வயிறா, இல்ல ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியா? இவ்ளோ அதுக்குள்ள போட்டுக்கிட்டே இருக்கியே

“பொறாமைப்படாதே மோகன். நல்ல உள்ளம், அதான் கள்ளம் கபடம் இல்லாம சாப்பிடறேன். போ, போய் முதல்ல காசு கொடுத்துட்டு வா
மோகன் உள்ளே சென்று பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். 

“என்னடா சிவா, அந்த வண்டிய பாத்தியா? இந்தப் பக்கம் வந்துச்சா?

“இல்லடா. நாமதான் புத்திசாலித்தனமா அவனுங்கள ஏமாத்திட்டோம்னு நினைக்கிறேன்

“ம், பாப்போம். சரி வா, நாம கிளம்பலாம் என்று மோகன் சொல்ல, அவனுக்குப் பின்னால் சிவாவும் சென்றான். யாரும் தங்களை இப்போது பின்தொடரவில்லை என்று எண்ணி அங்கிருந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்து சென்ற சில நொடிகளில் அந்த கறுப்பு நிற டாடா சுமோ அவர்கள் சென்ற அதே வழியில் சென்றது.



15. அடுத்த நாள் காலை 10 மணி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று அவன் எழுந்தது முதல் சோம்பேறித்தனமாக இருந்தது மோகனுக்கு. பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸுக்கு செல்ல வெளியே வந்தான்.

அந்த தெருவின் முனையில் அந்த கறுப்பு நிற டாடா சுமோ நின்றிருந்ததைப் பார்த்தான் மோகன். உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்துவிட வேண்டும் என்று காரின் அருகில் சென்றான்.

கார் கதவில் இருக்கும் கண்ணாடி வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். அதில் யாரும் இருப்பதுபோல் தெரியவில்லை. காரை ஓட்டியவர் இங்கு வண்டியை நிறுத்திவிட்டு எங்காவது சென்றிருக்கக்கூடும் என்று நினைத்து, அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று, அங்கிருந்து யார் இந்த காரில் ஏறுகிறார்கள் என்பதைப் பார்க்க எண்ணி, அந்த டீக்கடைக்குச் சென்றான் மோகன்.

சில நிமிடங்கள் கழித்து ஒருவன், தன் மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே அவசர அவசரமாக அந்த காரில் ஏறி, அங்கிருந்து கிளம்பினான். பார்ப்பதற்கு சற்று பருமனாக இருந்தான் அவன். முகத்தில் பெரிய தாடி, கழுத்தில் நிறைய தங்க நகைகள். அவனை எங்கேயோ பார்த்திருந்தது போல் தோன்றியது மோகனுக்கு, ஆனால் சரியாக நினைவுக்கு வரவில்லை.

“அதோ அந்த சுமோவ எடுத்துட்டு போறாரே, யார் அவர்? உங்களுக்கு தெரியுமா? என்று அந்த டீக்கடைக்காரரை கேட்டான் மோகன். அதற்கு அவர், “இவன்தான் ரவுடி தயா. மகா பொல்லாதவன். ஈவு, இரக்கமில்லாம காசுக்காக எதையும் செய்யறவன் என்றார்.

அதிர்ந்து போனான் மோகன். எதற்காக ஒரு ரவுடி தன்னை பின்தொடர்ந்து வர வேண்டும் என்று புரியவில்லை அவனுக்கு. உள்ளூர ஒரு பயம். இதைப்பற்றி யோசித்துக்கொண்டே மெஸ்ஸை நோக்கி நடந்தான். 

அப்போது அவனுடைய மொபைல் ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது, சிவாவிடம் இருந்து. அழைப்பை ஏற்று பேசத்தொடங்கினான்.

“சொல்லுடா சிவா

“டேய் மோகன், எங்கடா இருக்க நீ?

“இங்கதான் டா. மெஸ்ஸுக்கு வந்தேன். என்ன விஷயம்? ஏன் இவ்ளோ பதட்டமா பேசற நீ?

“நேத்திக்கு நம்மள ஒரு டாடா சுமோ ஃபாலோ பண்ணிட்டு வந்துச்சுல. அந்த வண்டியை நான் நம்ம வீட்டை விட்டு வெளியே வரும்போது இன்னிக்கு நம்ம வீட்டுக்கு பக்கத்துல பார்த்தேன்டா

“தெரியும்டா. நானும் பார்த்தேன்

“வண்டிய பார்த்தவுடனே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன். பயமா இருந்துச்சு. விஜய்க்கு ஃபோன் பண்ணேன் இந்த விஷயத்தப்பத்தி. அவன் நம்மள பயப்படாம இருக்கச்சொன்னான், அவன் பாத்துக்கறானாம்

“எப்போடா அவனுக்கு ஃபோன் பண்ணினே நீ?

“இப்போதான். ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி

“அப்படியா, சரி விடு. நான் வரும்போது உனக்கு பார்சல் வாங்கிட்டு வந்துடறேன் என்று சொல்லி ஃபோனை வைத்தான்.

யோசிக்க ஆரம்பித்தான் மோகன். பல கேள்விகள் அவனுக்குள் தோன்றின. சிவா சொன்னதை வைத்து கணக்குப்போட்டுப் பார்த்தால், விஜய்க்கு சிவா இந்த விஷயத்தை சொன்ன அடுத்த சில நொடிகளில் அந்த ரவுடி தயா இங்கிருந்து கிளம்பிவிட்டான்.

யாருடனோ மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே வந்து வண்டியை எடுத்து அங்கிருந்து கிளம்பினான். அவனை அழைத்தது ஏன் விஜய்யாக இருக்கக்கூடாது? அப்படியென்றால் தயாவுக்கும், விஜய்க்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ? அவன் எதற்காகப் பின்தொடர வேண்டும்?
இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தபோது, மோகனுடைய மொபைல் ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது. விஜய் அழைத்திருந்தான். தன்னுடைய சந்தேகத்தை எந்தவிதத்திலும் காட்டிக்கொள்ளக்கூடாது என்று எண்ணிக்கொண்டு, அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான் மோகன்.

“ஹலோ மோகன், விஜய் பேசறேன்

“சொல்லு விஜய்

“ஒரு ஷாக்கிங்க் நியூஸ். இன்னிக்கு காலைல டாக்டர் ஜானை யாரோ கொன்னுட்டாங்க. விஜயின் குரலில் ஒருவித கலக்கம், பயம் தெரிந்தது.

“என்ன சொல்ற விஜய்? நேத்துதான் உங்க வீட்டுல பேசிட்டிருந்தோமே, அவரையா? எப்படி? என்ன நடக்குது இங்க விஜய்? ஐ கான்ட் பிலீவ் திஸ். உண்மையிலேயே ஷாக்காக இருந்தது மோகனுக்கு.

“யெஸ், அவரேதான். இன்னிக்கு காலைல 3, 3:15 மணிக்கு இந்த கொலை நடந்திருக்கு

“உனக்கு எப்போ இந்த விஷயம் தெரிய வந்தது விஜய்?

“இப்போதான், ஒரு நிமிஷம்கூட ஆகல. நியூஸ் தெரிஞ்ச உடனே உனக்கு சொல்றேன். எனக்கு என்னவோ முருகன் கொலைக்கும், டாக்டர் ஜான் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமோன்னு தோணுது மோகன்

“ஏன்? எத வெச்சு இப்படி சொல்ற விஜய்?

“எப்படி முருகனை மண்டையில அடிச்சே கொன்னானுங்களோ, அதே மாதிரி டாக்டர் ஜானை மண்டையில அடிச்சு கொன்னுட்டு அவரோட கையிலேர்ந்து கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் வெட்டி போட்டிருக்கானுங்க அந்த நாய்ங்க

“மை காட். என்னதான் நடக்குது இங்க விஜய்? இப்படி ஒரு வாரத்துக்குள்ள ரெண்டு கொலைங்க. அதுவும் பயங்கரமான, கொடூரமான கொலைங்க. எப்படி இந்த கொலைகாரங்க சிட்டில சுத்திட்டு இருக்கானுங்க. எங்க நடந்தது இந்த கொலை?

“அவரோட ஜான் கிளினிக் வாசல்ல டெட் பாடி இருந்துச்சு

“எனக்கு ஒன்னுமே புரியல விஜய். எதுக்காக இந்த ரெண்டு பேரையும் கொலை செய்யணும்? அதுவும் இந்த டாக்டர் அவ்ளோ நல்லவர் வேற. ரெண்டு கொலைக்கும் என்ன லிங்க் இருக்குன்னு தெரியல

“எங்க டிபார்ட்மென்ட்லயும் அந்த கோணத்துலதான் விசாரணை பண்ணிட்டு இருக்கோம். உனக்கு ஏதாவது தோணிச்சுன்னா சொல்லு மோகன்

“கண்டிப்பா சொல்றேன் விஜய். ஃபோனை வைத்தான்.


நடப்பது ஒன்றுமே புரியவில்லை மோகனுக்கு. ஒரே வாரத்தில் இரண்டு கொலைகள். கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவன் இளைஞன், இன்னொருவர் கொஞ்சம் வயதானவர். ஒருவன் பணக்காரன், இன்னொருவர் ஏழைகளுக்கு உதவுவதாக சொல்லப்பட்ட டாக்டர். இப்படி அந்த இரு கொலைகளுக்கும் நேரடியாக எந்த ஒரு சம்பந்தமும் இல்லாததுபோல் இருந்தாலும், இரண்டுமே கொடூரமாக கொலைகள். யோசித்துக்கொண்டே மெஸ்ஸுக்குச் சென்று பார்சல் வாங்கிக்கொண்டு தன் ரூமுக்குச் சென்றான் மோகன்.

No comments:

Post a Comment