மறக்க முடியாத
முகங்கள் – 7:
நாளை
திங்கட்கிழமை. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கு திங்கட்கிழமை
என்றால் திகில்கிழமைதான். சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வீட்டிலோ, வெளியிலோ
நிம்மதியாக இருந்துவிட்டு திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்லவேண்டும் என
நினைக்கும்போது, ஒரு சின்ன சோகம் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். இப்படி
நினைப்பதுதான் இயல்பு என நினைக்கும் அளவுக்கு மாறிவிட்டது நிலைமை. இப்படி
நினைக்காதவர்களை சங்கத்தைவிட்டே ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள்.
திங்கட்கிழமை
முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலை. அலுவலகம் சென்று வர அலுவலகப் / அரசுப்
பேருந்து, இல்லையென்றால் இரு / நான்கு சக்கர வாகனம், ஏ.சி அறைகள், நேரத்துக்கு
சாப்பாடு, சிற்றுண்டி வசதி, நினைத்த நேரத்துக்கு காபி, டீ குடிக்க வசதி,
இன்டர்னெட் வசதி.
இப்படி ஏராளமான
வசதிகள் இருந்தாலும், எப்படியாவது அடுத்தவரைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும்,
சென்ற முறை கிடைத்த சம்பள உயர்வைவிட இந்த முறை அதிகம் வாங்கிவிட வேண்டும் போன்ற
போட்டிகளால் மன அழுத்தம் அதிகமாகிறது.
கொடுக்கப்பட்டிருக்கும்
வேலையை எப்படியாவது சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என நினைப்பது சரிதான். அது
நம் கடமையும்கூட. ஆனால், அந்த வேலையை முடித்தவுடன் அடுத்து வேறு ஒரு முக்கியமான
வேலையை இழுத்துப்போட்டு செய்யவேண்டும், அப்போதுதான் அப்ரைசல் நேரத்தில் இந்த
எக்ஸ்ட்ரா வேலையைப்பற்றி சொல்லலாம் என நினைத்துக்கொண்டு, அந்த வேலையைப் பற்றி
தெரியாமலே அதற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டோ,
வேலையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டோ இருந்தால், நம் வாழ்க்கையையும், உடல்
நலத்தையும் பற்றி யார்தான் கவலைப்படுவது?
சரி, எக்ஸ்ட்ரா
வேலை செய்தால் என்ன தவறு? அவருக்கு அதற்கேற்றார்போல் சம்பளமும், பதவி உயர்வும்
கிடைக்குமே என நினைப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல். தன் வேலையை சிறப்பாகச்
செய்து முடிப்பவருக்கும், எக்ஸ்ட்ரா வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவருக்கும்,
இந்தக் காலகட்டத்தில், மாதச் சம்பளத்தில் 3500 (அதிகபட்சம்) ரூபாய்தான்
வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்படி உடல் நலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்
வேலை செய்துகொண்டிருந்தால் மருத்துவச் செலவு கூடி, கடைசியில் இருவருடைய
சேமிப்பிலும் பெரிய வித்தியாசம் இருக்காது. பணம், பணம் என்று ஓடிக்கொண்டே
இருந்தால், நம்மைப் பாதுகாக்க, நம் குடும்பத்தைப் பாதுகாக்க வானத்திலிருந்து
யாராவது வருவார்களா? சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?
ஆனாலும்,
எத்தனையோ பேர் குடும்பச் சூழல் காரணமாக இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை
வருத்திக் கொண்டு, மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் பட்ட
கஷ்டங்களை தன் பிள்ளைகள் படக்கூடாது என்று உறுதிபூண்டு, உழைத்து உழைத்து ஓடாய்ப்
போகிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக தங்கள் நிகழ்காலத்தைத்
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையைத்
தொலைப்பதில் ஒரு திருப்தி இவர்களுக்கு. சமீபத்தில் நான் சென்னை சென்றிருந்தபோது இப்படிப்பட்ட ஒருவரைச்
சந்தித்தேன்.
தாம்பரத்திலிருந்து
மயிலாப்பூர் செல்லவேண்டியிருந்தது. மணி இரவு 9:30 ஆகியிருந்ததால் பேருந்துகளை நம்ப
மனமில்லை எனக்கு. சரி, ஆட்டோ பிடித்து சென்றுவிடலாம் என முடிவெடுத்து காத்துக்
கொண்டிருந்தேன்.
நிறைய
ஆட்டோக்காரர்கள் இவ்வளவு தூரம் வர முடியாது என்று சொல்லிவிட்டு
கிளம்பிவிட்டார்கள். இன்னும் சிலர் இதற்குக் கட்டணமாக ஐநூறு ரூபாய் கேட்டார்கள்.
இப்படியே தொடர்ந்தால் என்னதான் செய்வது என நினைத்து கடவுளை வேண்டத் தொடங்கியவுடன்
வந்தார் இந்த ஆட்டோக்காரர். மீட்டர் கட்டணத்துக்கு மேல் இருபது ரூபாய் கேட்டார்.
நானும் அதற்கு சம்மதித்து வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வழியில் வழக்கம்போல்
பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.
அதிகம் படித்தவரில்லை.
அதனால்தானோ என்னவோ தெரியவில்லை, கள்ளம் கபடம் இல்லாமல் தன் உள்ளிருந்த
எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டார். தேர்தல் நேரம் என்பதால் அரசியல்
கட்சிகள், தலைவர்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம். பல அரசியல் தலைவர்களைப் பற்றி
அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லையென்பது அவர் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அடுத்து விலைவாசி
பற்றி பேச ஆரம்பித்தோம். காய்கறி விலையில் தொடங்கி, கல்விக்கான விலை வரை பேசினோம்.
காய்கறி விலை உயர்வால் மக்கள் தினசரி பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், மிக அதிக
கல்விக் கட்டணத்தால் அவர்களின் நிகழ்காலமும், எதிர்காலமும் எப்படி
பாதிக்கப்படுகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்தார். அப்போதுதான் தன்
குடும்பத்தைப் பற்றியும் தன் உழைப்பைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்.
அவருக்கு இரண்டு
மகன்களாம். என்ன படிக்கிறார்கள், எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதெல்லாம்
இப்போது என் நினைவில் இல்லை. ஆனால் படிப்புச் செலவு மட்டும் மாதத்திற்கு கிட்டத்தட்ட
பதினான்காயிரம் ஆகிறதாம். இதை எப்படி சமாளிக்கிறாராம் தெரியுமா?
காலை ஒன்பது மணி
முதல் மாலை ஆறு, ஏழு மணி வரை ஒருவரிடம் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறாராம். மாதச்
சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய். அதற்குப் பிறகு, தினம் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாய்
வருமானம் (டீசல் செலவு போக) வரும் வரை ஆட்டோ ஓட்டுகிறாராம். காலையில் பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு வந்துவிடுகிறாராம். அதற்குப் பிறகு அன்று
முழுவதும் அவர்களுடன் பேச நேரம் கிடைப்பதேயில்லையாம்.
இப்படி அலைந்துகொண்டே இருப்பதால், வாரத்தில்
நான்கைந்து நாட்களில், ஐந்து மணி நேரம்தான் தூங்க நேரம் கிடைக்கிறதாம். எத்தனை மணி
நேரம்? ஐந்து மணி நேரம்!
இதைக் கேட்டதும் வாயடைத்துப்
போனேன். குறைந்தது ஏழு மணி நேர தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் முழுவதும் அழுது
வடிந்து போகும் எனக்கு. அப்படியிருக்கையில் வெறும் ஐந்து மணி நேரம்தான் தூக்கம்
என்றால்?
இவர் படும்
கஷ்டத்தை இவர் மனைவி தங்கள் பிள்ளைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்ப்பதாகவும்,
அவர்களும் நிலைமையைப் புரிந்து நன்றாகப் படித்து வருவதாகவும் சொன்னார். படிப்புதான்
நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் பெரிய சொத்து என்றார். வேதவாக்கு. தொடர்ந்து
பேசினோம்.
வீடு வந்து
சேர்ந்தோம். வண்டியை விட்டு இறங்கும்போது “நான் அம்பது, அம்பத்தஞ்சு வயசு
வரைக்கும்தான் வாழ்வேன்னு நினைக்கிறேன் சார். இவ்ளோ அலைச்சல், டென்ஷன், பிரஷர்.
எப்படி தாங்குவனோ தெரியல. இப்பவே உடம்புல ஏகப்பட்ட பிரச்சினை. ஆனா, அதுக்கு
முன்னாடி என் பசங்களை நல்லா செட்டில் பண்ணிட்டா போதும் சார். எனக்கு வேற
கவலையில்லை” என்றார். கண்கள் ஈரமாகின. அவருக்கும், எனக்கும்.
பணத்தைக்
கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். அடுத்த திங்கட்கிழமையன்று அலுவலகம்
செல்லவேண்டுமே என்ற அலுப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.
என்னையும் இப்படி மாற்றிய இவரது முகம் மறக்க முடியாத முகமே!
No comments:
Post a Comment