மறக்க முடியாத முகங்கள்
– 6
இன்று மாலை அலுவலகத்திலிருந்து என் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி வீட்டை நோக்கி
வந்து கொண்டிருந்தேன். வழியில் இரண்டு டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. அவற்றை கடந்துதான்
வர முடியும்.
முதல் சிக்னல் அலுவலகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. ஏகப்பட்ட
மென்பொருள் நிறுவனங்கள் இருக்கும் பகுதி என்பதால் எப்போதுமே சாலையில் கார்களும், இரு
சக்கர வாகனங்களும் சென்று கொண்டிருக்கும்.
காலை 7:30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7:30 மணி வரை போக்குவரத்து உச்சக்கட்டத்தில்
இருக்கும். போக்குவரத்தை கட்டுப்படுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இரவு 9 மணி வரை
இருப்பார்கள்.
இந்த சிக்னலில் சாலை விதிகளை மீறுபவர்களை அலேக்காகப் பிடித்து அபராதம் விதித்துவிடுவார்கள்.
என் நண்பர்கள் சிலரும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு, அபராதம் கட்டிவிட்டு வந்திருக்கிறார்கள்
என்பதால் இது எனக்குத் தெரியும்.
இங்கிருந்து வலது பக்கம் திரும்பி நேராக வந்தால், சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில்
இன்னொரு டிராஃபிக் சிக்னல். நான்கு சாலைகள் சந்திக்கும் ஒரு சந்திப்பு. இந்த இடத்தில்
ஒரே ஒரு காவல்துறை அதிகாரிதான் இருப்பார். அவரும் பெரும்பாலான சமயங்களில் ஒரு ஓரத்தில்
நின்றுகொண்டு, வெரித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதால், இந்த சிக்னலில் பலர்
சாலை விதிகளை மீறிச் செல்வார்கள்.
இன்று இந்த சிக்னலில் நான் நின்று கொண்டிருந்தபோது என் பக்கத்தில் ஒரு இரு சக்கர
வாகனம் வந்து நின்றது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர்தான் ஓட்டுபவர். அவருக்குப்
பின்னால் ஒரு சிறுவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். 7, 8 வயது இருக்கும் என நினைக்கிறேன்.
சில நொடிகள் அந்த சிக்னலில் நின்றுவிட்டு, பொறுமையிழந்து அங்கும் இங்கும் பார்த்தார் அந்த நபர்.
கண்காணிக்க யாரும் இல்லாததால் விருட்டென கிளம்பி சென்றுவிட்டார். அந்த சிறுவனோ நிமிர்ந்து
சிக்னலை பார்த்துக்கொண்டும், பின் மற்ற வண்டிகளை பார்த்துக்கொண்டும் இருந்தான். சிக்னலில்
சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது!
இதைப் பார்த்ததும் எனக்கு கவலை கலந்த கோபம் வந்தது. போக்குவரத்துத்துறை அதிகாரி
யாராவது அந்த இடத்தில் நின்றிருந்தால் இந்த நபர் சிக்னலை மதிக்காமல் சென்றிருப்பாரா
என்பது சந்தேகமே. அவர் அங்கு இல்லாதது ஏன் என்று தெரியாமல் ஒரு முடிவுக்கு வரமுடியாது. சரி, இதை விட்டுவிடலாம்.
கண்காணிப்பதற்கு, தவறு செய்தால் பிடிப்பதற்கு, தண்டனை கொடுப்பதற்கு யாருமே இல்லையென்றால்
இந்த மாதிரி சின்னச் சின்ன தவறு செய்பவர்கள், நாளை இதே மாதிரி சந்தர்ப்பம் அமைந்தால்
பெரிய தவறுகளை செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
படித்தவர்கள் மனிதர்களாக, பண்புடையவர்களாக, பொது அறிவு உள்ளவர்களாக நடந்து கொள்வதற்கு
கண்காணிப்பும், தண்டனையும், அவமானமும் அவசியமென்றால், நமக்கும் சர்க்கஸில் இருக்கும்
மிருகங்களுக்கும், ஆட்டு மந்தைக்கும் என்ன வித்தியாசம்?
மிருகங்கள் சர்க்கஸிலும், மந்தையிலும் தங்கள் இயற்கை குணத்தை கட்டுப்படுத்த வேண்டிய,
இயற்கை குணத்துக்கு மாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் இப்படி அடங்கி ஒடுங்கி
நடக்கின்றன. சில மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனக்குப் புரியவில்லை. இதையும்
விட்டுவிடலாம்.
வண்டியின் பின்னிருக்கையில் இருந்த அந்த சிறுவன் சிக்னலை திரும்பத் திரும்பப் பார்த்துக்
கொண்டே இருந்தான். மற்ற வண்டிகள் சிக்னலில் நின்று கொண்டிருந்ததை அவன் நிச்சயம் கவனித்திருப்பான்
என நினைக்கிறேன். இது எவ்வளவு ஆபத்தான ஒரு உதாரணம்?
சிறுவர்களும், குழந்தைகளும் நாம் சொல்லிக்கொடுப்பதைவிட, நம்மைப் பார்த்துதான் பல
விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். நம் மொழி, மாடுலேஷன், உடல் அசைவு, ஒழுக்கம் முதலிய
எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள். அதன்படியே நடக்கவும் செய்வார்கள். இதனால்தான்
நாம் எப்போதும் நல்லதையே பேச வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்று பெரியவர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், கண் முன்னாலேயே இப்படி சாலை விதிகளை மதிக்காமல் சென்றால்,
அச்சிறுவனுள் சாலை விதிகளை சில சமயம் மீறினால் தவறேதும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால்,
அதற்கு அந்த நபரும் ஒரு காரணம். இது பிற விதிமுறைகளுக்கும் பொருந்தும் என்று அச்சிறுவன்
யோசிக்கத் தொடங்கினால் இன்னும் கேடு.
இந்த காலத்தில் சாலை விதிகளை மீறுவது ஒரு சிறிய விஷயமாகிவிட்டது. ஆனால், அதன் விளைவு
ஏதாவது ஒரு விபத்தின்போதுதான் நமக்கு புரிகிறது. பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டால்தான்
சிலர் கற்றுக் கொள்கிறார்கள்.
நம்மால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தவறுகளை, கெட்ட செயல்களை
செய்யாமல் இருந்தாலே பெரிய விஷயம். நம் நாட்டுக்கும், உலகத்துக்கும், பிற உயிர்களுக்கும்
நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு இதுவாகத்தான் இருக்க முடியும்.
இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே, கடைசியில், கோபத்துடனும், கவலையுடனும் வீடு
வந்து சேர்ந்தேன்.
சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்ததையும், அப்போது மற்ற வண்டிகள் நின்றுகொண்டிருந்ததையும்
திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவனின் முகம் மறக்க முடியாத முகமே!
No comments:
Post a Comment