Friday, 2 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 5

மறக்க முடியாத முகங்கள் – 5:

இப்பகுதியை நான் “A tale of two heart attacks” என்று ஆங்கிலத்தில் எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் மொழிபெயர்ப்பு செய்ய சோம்பேறித்தனமாக இருந்ததால் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன். ஆங்கிலம் தப்பித்தது.

நான் வசிக்கும் பகுதியில் ஒரு அரசியல்வாதி இருக்கிறார். இல்லையில்லை, இருந்தார். 1980-களில் இருந்து 2013 வரை அரசியலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மாரடைப்பில் உயிரிழந்தார்.

அரசியல்வாதி என்றாலே நேர்மையற்றவராகத்தான் இருப்பார் என்ற எண்ணம் நமக்கெல்லாம் தானாகத் தோன்றிவிடும். இது நம் தவறில்லை என்றும் நம்மில் சிலர் நினைக்கக்கூடும். எவ்வளவு வேடிக்கையான விஷயம் இது?

சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் எப்போது மக்கள் பணத்தை, மக்கள் சொத்தை அடைய நினைத்தாரோ, அப்போதே அப்பகுதி மக்கள் அவரது செயலை கண்டித்து, அவரை தண்டித்திருந்தால், இப்போது இந்த கொள்ளையடிக்கும் கலாச்சாரம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா?

இது நம் தவறுதான். சொல்லப்போனால், இதுதான் மிகப்பெரிய தவறு. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்வதை தடுக்காமல் இருப்பதும் தவறுதான். இதை என்று நாம் உணரப்போகிறோமோ? எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம் (இறைவன் இருக்குமிடத்தில் மின்வெட்டு இருக்காது என நினைக்கிறேன்!).

விஷயத்துக்கு வருவோம். இந்த அரசியல்வாதிக்கு நிறைய சொத்துகள், சில பல கல்லூரிகள் இருப்பதாக பலர் சொல்கின்றனர். செல்வச்செழிப்புடன்தான் இருந்தார்.

இவ்வளவு சொத்துகள் இருந்து என்ன பயன், மன அமைதி என்பது இருந்தால்தானே எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியும்? இவரின் மகன் மனவளர்ச்சி குன்றியவராம்.

முற்பிறவியிலோ, இப்பிறவியிலோ நாம் செய்த பாவங்கள் நிச்சயம் நம்மை வந்தடையும் என்பது என் நம்பிக்கை. நம் உடலையும், மனதையும் வருத்தும். வறுத்து அரைத்துவிடும். இந்த அரசியல்வாதியின் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது என நினைக்கிறேன்.

உயிர் பிரியும் அந்த இறுதி நொடிகளில், நிச்சயம் தன் மகனின் நிலைமையைப் பற்றி நினைத்திருப்பார். ஆனால், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

இந்த அரசியல்வாதியை நான் நேரில் பார்த்ததில்லை, பழகியதில்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான். அதனால் இவரது மரணம் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இன்னொருவரது மரணம் என்னை சற்று சங்கடப்படுத்தியது.

சென்ற வாரம் முடிதிருத்தகத்திற்குச் (சலூன் கடை) சென்றிருந்தேன். வழக்கமாக செல்லும் கடைதான். சென்றபோதெல்லாம் இதன் உரிமையாளரை சந்தித்திருக்கிறேன்.

கிரிக்கெட் மைதானத்தில் காணப்படும் புல் போல ‘லெவலாக இருந்த சின்ன தாடி, கண்ணாடி, நெற்றியில் குங்குமத்தில் ஒரு சின்ன கோடு, சரியாக சீவப்பட்ட தலை. எப்போதும் கை மடிக்கப்பட்டிருந்த கட்டம் போட்ட ஒரு முழுக்கை சட்டை, கறுப்பு / சாம்பல் நிற பேண்ட். இதுதான் அவர்.

இரண்டு, மூன்று முறைதான் அவருடன் பேசியிருக்கிறேன். தாய்மொழி தெலுங்கு என்றாலும், கன்னடமும் பேசுவார். என்னதான் பேசினாலும் சத்தம் வராது. மணிரத்னம் அவர்களின் திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவார்.

அதுவும் காதலர்கள் நடுராத்திரியில் போர்வைக்குள்ளேயிருந்து பேசுவதுபோல் அமைதியாக பேசுவார். சில சமயம் அவர் பேசியது அவருக்காவது கேட்டிருக்குமா என வியந்திருக்கிறேன்.

எந்த ஒரு வார்த்தை / வாக்கியம் பேசினாலும் அதன் முடிவில் ஒரு சின்ன புன்னகை அவரது முகத்தை அலங்கரித்துவிடும். அதைப் பார்த்ததும், பதிலுக்கு நம்மால் புன்னகைக்காமல் இருக்கமுடியாது.

இந்த முறை அதே முடிதிருத்தகத்திற்குச் சென்றிருந்தபோது, இவரது புகைப்படம் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. மல்லிகைப்பூ மாலை அந்த புகைப்படத்தின் மேல் மாட்டப்பட்டிருந்தது.

என்ன நடந்தது என விசாரித்தேன். மாரடைப்பில் இறைவனடி சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள் கடையில் வேலை பார்ப்பவர்கள். சொல்ல முடியாத ஒரு சின்ன சோகம் என்னை சூழ்ந்து கொண்டது.

ஒரு நாவலை, தொடர்கதையை படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முக்கிய பகுதி அந்த நாவலில், தொடர்கதையில் இல்லை என்றால் நாம் எப்படி உணர்வோம்? காசு கொடுத்துவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்து புன்னகைக்க அவர் இனி இருக்கமாட்டார் என நினைக்கும்போது எனக்குள் இந்த உணர்வுதான் இருந்தது.

அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனாலும் அவரது மரணம் என்னை பாதித்தது என்றால் அதற்கு அவரது புன்னகை ஒரு முக்கிய காரணம்.


ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன புன்னகையின் மூலம் அந்த நொடியை இனிமையானதாக மாற்றிய அவரது முகம் மறக்க முடியாத முகமே!

No comments:

Post a Comment