Saturday 4 April 2015

இரண்டு சம்பவங்கள் (January 2015)

வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை தத்துவத்துடன் கூடிய சம்பவமொன்றை, இல்லையில்லை, இரண்டு சம்பவங்களைச் சொல்லலாம் என்ற எண்ணம். பொறுமையாய் தொடர்ந்து படிக்கவும். ஞானம் கிடைக்கும்.
சம்பவம் 1:
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போதுதான் கணிப்பொறி மெல்ல மெல்ல பிரபலமாகவும் பரவலாகவும் ஆகிக்கொண்டிருந்தது.
எங்கள் வீட்டில் அசம்பிள்டு செட் வாங்கினோம். அதாவது கணிப்பொறியின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நிறுவனத்தாருடையது. எல்.ஜி மானிட்டர், டி.வி.எஸ் மல்ட்டிமீடியா கீபோர்ட், ஸ்பீக்கர் வேறு ஏதோ ஒரு நிறுவனத்தாருடையது.
விளையாட்டு விளையாடுவதற்கும், பாட்டு கேட்பதற்கும், படம் பார்ப்பதற்கும்தான் வீடுகளில் கணிப்பொறி பயன்படுத்தப்பட்ட காலத்தில் நானும் என் கடமையை செவ்வனே ஆற்றிவந்தேன்.
டூம், டியூக் 3டி, உல்ஃப், ப்ரின்ஸ் ஆஃப் பெர்ஷியா போன்ற விளையாட்டுகள் அந்த காலகட்டத்தில் மிக மிகப் பிரபலம். விளையாடுபவர்களையும், விளையாடுபவர்களைப் பார்ப்பவர்களையும் அந்த உலகத்துக்கே கொண்டு போய் விடக்கூடிய விளையாட்டுகள் இவை.
அப்படி ஒரு நாள் உல்ஃப் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் வருவது நின்றுவிட்டது. ஸ்பீக்கரிலிருந்து “வெறும் காத்துதான் வந்தது” (உபயம் – ‘தேவர் மகன்’). விளையாட்டில் தோற்றுவிட்டேன்.
கடுப்பாகி விளையாட்டிலிருந்து விடைபெற்று பாட்டு கேட்கலாம் என்று பாடல்கள் போட்டேன். சத்தம் சுத்தமாக வரவேயில்லை. சரி, உள்ளே ஏதோ கெட்டுப் போய்விட்டது. அதான் சத்தம் வரவில்லை என்ற முடிவுக்கு வந்தாலும், “எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் கேம் விளையாடினா இப்படித்தான் ஆகும். இனிமே கம்ப்யூட்டர் தொட்டனா பாரு” என்று கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டிவிடுவாரோ என் அப்பா என்ற ஒரு சின்ன பயம் எட்டிப் பார்த்தது.
கணிப்பொறியை அசம்பிள் செய்தவரை அவசர அவசரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல, அவர் இரண்டொரு நாட்களில் வருவதாகச் சொன்னார். தேவையான தருணத்தில்தான் எல்லாமே தாமதப்படுத்தப்படும் என்பது அன்றுதான் புரிந்தது. மன உளைச்சலுக்கு ஆளானேன்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அவரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்த காரணத்தினால் இரண்டு நாட்களில் வீட்டுக்கு வந்தார் அவர்.
ஸ்விட்சைப் போட்ட சில நொடிகளில் சிஸ்டம் பூட் ஆனது. சத்தம் இன்னும் சுத்தம்தான். அவர் கீபோர்டில் ஏதோ ஒரு கீயை அழுத்தி அதன் பிறகு ஏதோ ஒரு பாட்டைப் போட, சத்தம் பக்காவாக வந்தது. அதைக் கேட்டதும் என்னைப் பார்த்து முறைத்தார் பாருங்கள் ஒரு முறை. சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருக்கும் ஓர் குற்றவாளியை இந்த சமூகம் முறைப்பது போன்ற ஒரு முறைப்பு அது.
ஆனாலும் அவர் என்ன மாயம் செய்து சத்தம் வரவைத்தார் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை. அவரையே கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது மல்ட்டிமீடியா கீபோர்டில் வால்யூம் அப்/டவுன் கீகளும், ம்யூட் கீயும் உள்ளன என்பதும், அவை வேலை செய்யும் என்பதும். விளையாடிக் கொண்டிருந்தபோது ஆர்வத்தில் ம்யூட் பட்டனை அழுத்திவிட்டேன் போல. அதுதான் காரணம்.
இந்த சின்ன விஷயத்துக்காக அவரை விடாமல் அழைத்து, வீட்டுக்கு அலைக்கழைத்து... ஷப்பப்பா... அவர் என்ன நினைத்திருப்பாரோ என்னவோ..
சம்பவம் 2:
கல்லூரி படிப்பு முடிந்து டி.சி.எஸ்ஸில் சேர்ந்தாகிவிட்டது. ப்ராஜெக்டும் கிடைத்தாகிவிட்டது. அது ப்ரொடக்ஷன் சப்போர்ட் வகையைச் சேர்ந்தவொரு ப்ராஜெக்ட். அதாவது கிட்டத்தட்ட நம் கஸ்டமர் கேர் போன்றது. நெட் பேக் முடிந்துவிட்டது, அதிக கட்டணம் எடுத்துவிட்டீர்கள் என்று நாம் சொல்லும்/கத்தும் பிரச்னைகளை எப்படி கஸ்டமர் கேர் நபர்கள் தீர்த்து வைக்கிறார்களோ அது போன்ற வேலைதான் எங்களுடையது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் எங்கள் கஸ்டமர். ஐ.ஆர்.சி.டி.சி போன்ற அவர்களது ஆன்லைன் அப்ளிகேஷன் ஒன்றை நாங்கள் கவனித்து, போற்றிப் பாதுகாத்து வந்தோம். அதான்பா.. Maintenance and Support.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியரால் அந்த ஆன்லைன் அப்ளிகேஷனில் லாக் இன் (login) செய்ய முடியவில்லை. இதுதான் பிரச்னை. என் தலையில் வந்து விழுந்தது இந்தப் பிரச்னை.
முழு ஈடுபாடுடன் இதில் மூழ்கி முத்தெடுத்து பேரெடுக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் கண்டமேனிக்கு அலசி ஆராய ஆரம்பித்தேன். பல பேருடைய உதவியையும் நாடினேன். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனாலும் இந்தப் பிரச்னையை தீர்த்துவைக்க முடியவில்லை. உலகமே என்னைக் கைவிட்டதோ என்று நினைத்த நேரத்தில், அந்த ஊழியரையே தொடர்பு கொண்டு ஏதாவது கூடுதல் விபரங்கள் சேகரிக்க முடியுமா என்று பார்க்கலாம் எனத் தோன்றியது. கூடுதல் விபரங்கள் பல நேரங்களில் உதவியிருக்கின்றன. அதனால்தான் இந்த முடிவு.
அவரைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்னையைப்பற்றி நான் கேட்க, அதற்கு அவர் இந்தப் பிரச்னை அன்றே தீர்ந்துவிட்டதாகச் சொன்னார். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என் மண்டையையும், என் நண்பர்களின் மண்டைகளையும் சேர்த்து எவ்வளவோ மண்டைகளை உடைத்தும் பிடிபடாத, தீர்க்க முடியாத இந்தப் பிரச்னையை எப்படி இவர் தீர்த்தார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பீறிட்டது.
அவரையே கேட்டேன். அதற்கு அவர் கூலாக, “லாக் இன் செய்யும்போது கேப்ஸ் லாக் (Caps lock) பட்டன் ஆன் ஆகியிருந்ததை கவனிக்கவில்லை. பிறகுதான் கவனித்தேன்” என்றார். பதிலேதும் பேசாமல், நன்றிகூட தெரிவிக்காமல் அழைப்பைத் துண்டித்தேன். வாழ்க்கை ஒரு வட்டம்தான்.
அன்று நான் இருந்தது ஒரு தனியறையாக இருந்திருந்தால் நிச்சயம் சுவற்றில் என் தலையை முட்டிக்கொண்டிருப்பேன். என் அணியில் எல்லோரும் இருந்ததால் தலையும், சுவரும் தப்பித்தது.
மாரல் ஆஃப் தி ஸ்டோரி:
இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களின் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்னும் அரிய தத்துவம்தான்..

No comments:

Post a Comment