Saturday, 28 December 2013

சிறுகதை 007 - ராஜேஷின் கல்யாணம் (December 2012)

மோகன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம் ஆகிறது. எட்டு வருடங்களுக்கு முன், பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

பொறியியல் படிப்பு முடித்து விட்டு அமெரிக்கா சென்றவன், வருடத்திற்கு ஒரு முறை, மதுரையில் வசிக்கும் தன் பெற்றோரைப் பார்க்க வருவான். எப்போது வந்தாலும், இந்தியாவில் இரண்டு வாரங்கள் இருந்துவிட்டு அமெரிக்கா திரும்பிவிடுவான். இந்த முறை ஒரு மாதம் இருந்துவிட்டு போகலாம் என்று எண்ணியிருந்தான்.

மதுரையில், தன் வீட்டில், மோகன் தினமும் காலை 9 மணிக்கு எழுவான். பத்து மணிக்கு சாப்பிட்டு, பிறகு கொஞ்ச நேரம் தன் தந்தை, தாயுடன் அரசியல் விவாதம் நடத்துவான். மதியம் 2 மணிக்கு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு 5 மணி வரை தூக்கம். மகன் வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருப்பதால் அவனுக்கு பிடித்தவற்றை சமைத்துப் போடுவார் மோகனின் தாய் கீதா. தினமும் ராஜோபசாரம் தான் அவனுக்கு.

மாலை எழுந்து, இரவு சாப்பாடு, டிஃபன் செய்வதில் தன் தாய்க்கு உதவுவான். இரவு 9 மணிக்கு இரவு சாப்பாடு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தால் அவன் தூங்கப்போக இரவு 11 மணி ஆகிவிடும். இந்த அட்டவணையை தினமும் பின்பற்றி வந்தான்.

அன்று வியாழக்கிழமை, மணி மாலை 6 மணி. மோகனும், அவன் அம்மாவும் சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். “சொல்ல மறந்துட்டேன் மோகன். ரெண்டு, மூணு வாரம் முன்னாடி உன் ஃப்ரெண்ட் விஜய் வந்திருந்தான்பா. மாசம் ஒரு தடவ வந்துடுவான், நீ எப்பொ வர்றன்னு கேட்டான். அநேகமா உன்ன பாக்க வருவான்னு நெனக்கிறேன்” என்றார் மோகனின் தாய்.

அதற்கு மோகன், “அப்படியாமா? அவன் இங்க வர்ற விஷயத்த எல்லாம் எனக்கு இ-மெயில்ல அனுப்புவான். இந்த தடவ என்ன விஷயமா வந்தான்? தெரியுமா அம்மா உனக்கு?” என்று கேட்டான். “உங்க ஃப்ரெண்ட் ராஜேஷுக்கு கல்யாணமாம். அத சொல்லத்தான் வந்தான்னு நெனக்கிறேன்பா” என்றார் மோகனின் தாய்.
இவர்கள் இங்கு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்து உள்ளே வந்த விஜய்யை மோகனின் தந்தை வரவேற்று கூடத்தில் உட்கார வைத்து, “மோகன், இங்க பாருடா. விஜய் வந்திருக்கான்” என்று மோகனைக் கூப்பிட்டார்.

மோகன் கூடத்திற்கு வந்து, “வாடா விஜய், பாத்து எவ்ளோ நாளாச்சு? எப்படி இருக்க? அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா?” என்றான். அதற்கு விஜய், “எல்லாரும் நல்லாயிருக்கோம்டா. நீ எப்படி இருக்க?” என்றான். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்து, “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று சமையலறைக்குப் போனார் மோகனின் தந்தை.

மோகன், விஜய், ராஜேஷ் மூவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு மோகனும், விஜய்யும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். ராஜேஷ் திருச்சியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.

இரு நெருங்கிய நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தால் என்னவெல்லாம், எப்படியெல்லாம் பேசுவார்களோ, அதையெல்லாம், அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர் மோகனும், விஜயும். சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
“டைம் போனதே தெரியலடா. நான் கிளம்பறேன், ராஜேஷ் கல்யாணத்துக்கு தங்க மோதிரம் வாங்கித்தரலாம்னு நம்ம ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. நான் அத வாங்கணும்” என்றான் விஜய். அதற்கு மோகன், “சரிடா, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் இங்க தான் இருப்பேன். அப்புறமா வா, எங்கயாவது வெளிய போகலாம்” என்றான்.

அதற்கு விஜய், “நாளைக்கு நீ சும்மாதானே இருக்க? நாளைக்கு ராஜேஷோட ரிசெப்ஷன் இருக்கு. நீயும் வாடா. உனக்கும் இன்விடேஷன் அனுப்பியிருக்கானாம் அவன். இன்விடேஷன் கிடைச்சதா?” என்றான். “பாத்தமாதிரி ஞாபகம், சரியா ஞாபகம் இல்லடா” என்றான் மோகன். “சரிடா, நாளைக்கு சாயங்காலம் 6 மணிக்கு ரங்காலயா கல்யாண மண்டபத்துக்கு வந்துடுடா” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் விஜய்.

அடுத்த நாள் மாலை 6:30 மணி. ரங்காலயா கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான் மோகன். மதுரையிலேயே மிகப்பெரிய கல்யாண மண்டபம் தான் இந்த ரங்காலயா கல்யாண மண்டபம். குறைந்தபட்சம் 3000 பேர் உட்காரக்கூடிய அளவுக்கு பெரிய ஹால் இருந்தது.

உள்ளே வந்த மோகனைப் பார்த்து கையசைத்தான் ஹாலில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த விஜய். அவன் அருகில் உட்கார்ந்தான் மோகன். “ஏன்டா கடைசில இருக்கோம்? முன்னாடி போய் உக்காரலாம் இல்ல?” என்றான் மோகன். அதற்கு விஜய், “முன்னாடி எங்கயுமே இடம் இல்லடா. அதான் நம்ம காலேஜ்ல இருந்த மாதிரி கடைசி வரிசைல இடம் பிடிச்சுட்டேன்” என்றான்.

“இங்க இருந்து மேடையில நடக்கறது ஒண்ணுமே தெரியலடா. ராஜேஷப் பாத்து ரொம்ப நாளாச்சு. அவன பாக்கலாம்னு பாத்தா இப்படி இருக்கு. இங்க செவுத்துல இருக்கற டி.வியிலயும் சரியா தெரியாமாட்டேங்குது” என்றான் மோகன். அதற்கு விஜய், “விடுடா. அவனுக்கு கிஃப்ட் கொடுக்கும்போது மேடை ஏறுவோம்ல அப்பொ பாக்கலாம்” என்றான்.

7:30 மணிக்குள் மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மோகனிடம் விஜய், “நீ எப்போடா கல்யாணம் பண்ணிக்கப்போற? உன் அம்மாவும், அப்பாவும் உங்கிட்ட இதப்பத்தி பேச சொன்னாங்க. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டியாமே?” என்று கேட்டான். அதற்கு மோகன், “தெரியலடா. கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இப்போதைக்கு இல்ல” என்றான்.

அத்றகு விஜய், “சரி விடு. எது எப்போ நடக்கணும்னு இருக்கோ அது அப்போ தான் நடக்கும். வா, நாம மேடை ஏறி ராஜேஷுக்கு கிஃப்ட் கொடுத்துட்டு வரலாம்” என்றான். இருவரும் மேடையை நோக்கிச் சென்றனர்.

“என்னடா இது? மேடை படிக்கட்டுல இருந்தாவது ராஜேஷ பாக்கலாம்னு பாத்தா எல்லாரும் கிஃப்ட் கொடுக்கறேன்னு முழுசா மறைச்சிட்டாங்களே” என்றான் மோகன். அதற்கு விஜய், “இங்க வந்து பாருடா. சரியா தெரியும் உனக்கு” என்றான்.

மணமக்களைப் பார்த்தான் மோகன். அதிர்ச்சியில் மனமுடைந்து போனான். மணமகன் ராஜேஷின் வலது பக்கத்தில் இருந்தது மணமகள் திவ்யா. மோகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. மிகவும் சிரமப்பட்டு அதைக் கட்டுப்படுத்தி மேடையை விட்டு கீழே இறங்கினான் மோகன். அவன் தோளில் கை வைத்துக்கொண்டு விஜய்யும் கீழே இறங்கினான். இருவரும் மண்டபத்தின் வாசலுக்குச் சென்று, மண்டபத்துக்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் நின்றனர்.

மோகனும் திவ்யாவும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் உண்மையாகவும், தீவிரமாகவும் காதலித்து வந்தனர்.

ஆனால், கல்லூரி இறுதியாண்டில், அந்த வயதுக்கே உரிய பக்குவமின்மையால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோகனை விட்டு பிரிந்து சென்றாள் திவ்யா. இருந்தாலும், மோகனால் திவ்யாவை மறக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள் திரும்பி வருவாள் என்று சில நொடிகளுக்கு முன்பு வரை நினைத்திருந்தான். அந்த எண்ணம் இப்போது சுக்குநூறானது.

விஜய்யின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கினான் மோகன். “நீ எதுக்குடா அழற? திவ்யா அங்க சிரிச்சுட்டு இருக்கா. நீ மட்டும் எதுக்கு அழணும்” என்றான் விஜய். அதற்கு மோகன், “திவ்யாதான் கல்யாணப்பொண்ணுன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தும் ஏன்டா எங்கிட்ட சொல்லலை? நான் கல்யாணத்துக்கே வந்திருக்க மாட்டேன்” என்று அழுதபடியே சொன்னான்.

“நீ திவ்யாவ இன்னும் மறக்கலைன்னு எனக்குத் தெரியும். நீ யாரை நெனச்சு கல்யாணம் பண்ணிக்காம காத்துக்கிட்டு இருக்கியோ, அவளுக்கு இப்போ கல்யாணம். அதை நீ தெரிஞ்சுக்க வேணாமா? அதனால தான் உங்கிட்ட சொல்லலை” என்றான் விஜய்.

“நான் வீட்டுக்குப் போறேன்டா. நான் மண்டபத்துக்குள்ள வரலை. நீ போய்ட்டு வா” என்றான் மோகன். அதற்கு விஜய், “நானும் வர்றேன். வெளிய ஏதாவது ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு போகலாம் வா” என்றான்.

ஹோட்டலில் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 11 ஆகியிருந்தது. மோகனின் கண்கள் வரண்டு போயிருந்தன, முகத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது. “நான் உன்ன உங்க வீட்டுல டிராப் பண்ணிட்டு போறேன். வண்டியில உக்காரு” என்று விஜய் சொல்ல, மோகனும் வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

மோகன் வீட்டு வாசலில் அவனை இறக்கிவிட்டு, விஜய், “சொன்னதெல்லாம் யோசிச்சு பாருடா. உனக்கே புரியும். நான் நாளைக்கு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். வீட்டின் உள்ளே நுழைந்த மோகனைப் பார்த்து அவன் தாய், “என்னப்பா ரிசெப்ஷன் நல்லா நடந்ததா? ராஜேஷுக்கு வாழ்த்துக்கள் சொன்னியா?” என்றார். அதற்கு மோகன், “எல்லாம் நல்லா நடந்ததுமா” என்றான்.


“விஜய் உங்கிட்ட வேற ஏதாவது சொன்னானா மோகன்?” என்று கேட்டார் மோகனின் தந்தை. அதற்கு மோகன், “சொன்னான். நான் யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்பா” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

சிறுகதை 006 - மழை (November 2012)

மாலை 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருப்பதால், இன்றாவது ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான் கார்த்திக். மணி 5 ஆனது. சரி, கிளம்பலாம் என்று எண்ணி அவனுடைய இருக்கையிலிருந்து எழும்போது அவனுடைய மேனேஜர் அவனைப் பார்த்து, தன் இருக்கைக்கு வருமாறு செய்கை காட்டினார். “என்னடா இது, சீக்கிரம் கிளம்பலாம்னு நெனச்சா இப்ப போய் இவர் என்ன பாக்கணுமா? எதுக்கு கூப்பிடறார்னு தெரியல. எவ்ளோ நேரம் ஆகும்னும் தெரியல” என்று நினைத்தபடி அவனுடைய மேனேஜரின் இருக்கைக்கு சென்றான்.

“கார்த்திக், என்ன கிளம்பிட்டீங்க போல?” என்று கேட்டார் கார்த்திக்கின் மேனேஜர் ரகுராம். உண்மையை சொன்னால் தப்பாக நினைத்துக்கொள்ளப் போகிறார் என்று எண்ணி, “இல்ல சார், அப்படியே போய் ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்னு எழுந்தேன். சொல்லுங்க சார்”, என்றான் கார்த்திக்.

“அப்படியா, சரி. ஒண்ணும் இல்ல. இன்னிக்கு ஈவினிங் 5:30 மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் கொஞ்சம் அவசரமா வெளிய போகணும். நம்ம டீம்ல நீங்க தான் சீனியர். அதனால எனக்கு பதிலா நீங்க அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியுமா?” என்று கேட்டார் ரகுராம். மேனேஜர் கேட்டதை முடியாது என்று நிராகரித்தால் அது சரியாக இருக்காது என்று எண்ணிய கார்த்திக், “நோ ப்ராப்ளம் சார். நான் பாத்துக்கறேன்” என்றான்.

“தேங்க்ஸ் கார்த்திக். நான் உங்க கிட்ட இருந்து மீட்டிங்க்ல நடந்ததப்பத்தி நாளைக்கு கேட்டு தெரிஞ்சுக்கறேன். சீ யூ டுமாரோ” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ரகுராம். தான் நினைத்தது இப்படி ஆகிவிட்டதே என்று நொந்தபடியே ஆஃபீஸில் இருக்கும் கேன்டீனுக்குச் சென்றான் கார்த்திக்.

ஒரு கப் டீ வாங்கி, அருகில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்தான் கார்த்திக். அங்கு அவனைப் பார்த்த அவன் நண்பன் விமல், “என்னடா கார்த்திக், வீட்டுக்குப் போகலையா? 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருக்கு. தெரியும்ல?” என்றான். “வாடா விமல். நான் அப்பவே கிளம்பலாம்னு தான் இருந்தேன். ஆனா 5:30 மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அத முடிச்சுட்டு கிளம்பிடுவேன்” என்றான் கார்த்திக்.

“அடப்பாவி, எப்ப இருந்து உனக்கு இவ்ளோ பொறுப்பு வந்தது? கிரிக்கெட் மேட்ச், அதுவும் இந்தியா விளையாடுதுன்னா, அன்னிக்கு உடம்பு சரியில்ல, அப்படி இப்படின்னு ஏதாவது சாக்கு சொல்லி லீவு போடுவ நீ. இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா?” என்று கிண்டலாகக் கேட்டான் விமல்.

அதற்கு கார்த்திக், “ஏன்டா வயித்தெரிச்சல கிளப்பற. நான் கிளம்பின நேரத்துல கரெக்டா என் மேனேஜர் பாத்து கூப்பிட்டார். அவருக்கு ஏதோ வேலை இருக்காம், அதனால அவரால அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியாதாம். அதனால என்ன அட்டெண்ட் பண்ண சொன்னார். எல்லாம் என் நேரம்” என்று அலுத்தபடியே சொன்னான் கார்த்திக்.

“சரி, நீ நல்லா என்ஜாய் பண்ணு. நான் கிளம்பறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல மேட்ச் ஆரம்பிச்சிடும்” என்று கிண்டலாக சொன்னான் விமல். “டேய், ரொம்ப பேசற நீ. பாரு, வானம் இருட்டி இருக்கு. நீ வீட்டுக்கு போறதுக்குள்ள பயங்கரமா மழை வரப்போகுது. நீ அதுல மாட்டிக்கப்போற” என்று கார்த்திக் சபித்ததை சற்றும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பினான் விமல்.

5:30 மணிக்கு ஆரம்பித்த மீட்டிங் முடியும்போது மணி 6:15 ஆகி இருந்தது. “பரவாயில்ல, கொஞ்சம் சீக்கிரமே முடிஞ்சிருச்சு. வீட்டுக்கு போய் நிம்மதியா மேட்ச் பாக்கலாம்” என்று எண்ணியபடியே தன் பைக்கில் உட்கார்ந்தான். தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மழை தூரல் போட ஆரம்பித்தது. மழை வலுப்பதற்குள் சென்றுவிட வேண்டும் என்று எண்ணி தன் பைக்கை சற்று வேகமாக ஓட்டத் தொடங்கினான்.

அவனுடைய துரதிஷ்டம், அடுத்த சில நொடிகளில் மழை வலுத்தது. வேறு வழியே இல்லாமல் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையோரத்தில் இருக்கும் மரத்தடியில் சென்று நின்றான். அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை.

மழை ஆரம்பித்து இருபது நிமிடங்கள் ஆகியும் குறைந்தபாடில்லை. “என்ன கொடுமை இது. இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னே தெரியல” என்று கார்த்திக் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த போது எதிரில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டி வந்து நின்றது. கறுப்பு நிற டீ சர்ட், நீல நிற ஜீன்ஸில் அழகான ஒரு பெண் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, தோளில் லேப்டாப் பையுடன் அந்த மரத்தடியில் வந்து நின்றாள். அந்த கறுப்பு நிற டீ சர்ட் அவளுடைய நிறத்தை இன்னும் தூக்கிக் காட்டியது.

மழை சற்றும் குறையவில்லை. மரத்தடியிலும் மழைத்துளிகள் பெரிது பெரிதாக விழத்தொடங்கின. தன் பையிலிருந்து குடையை எடுத்து, அதனை விரித்து மழைத்துளிகள் தன் மேலே விழாதவாறு நின்றாள் அந்தப் பெண். இதைப் பார்த்தும் பார்க்காதது போல், மழையில் நனைந்தபடியே நின்றிருந்தான் கார்த்திக்.
“ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ. மழை ரொம்ப அதிகமா வருது. வேணும்னா இந்த குடைக்குள்ள வந்து நில்லுங்க, இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்றாள் அந்தப் பெண். இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக், “ரொம்ப தேங்க்ஸுங்க. நான் உங்கள எப்படி கேக்கறதுன்னு இருந்தேன்” என்றான்.

மழைச்சத்தத்தைத் தவிர அங்கு வேறு சத்தமே கேட்கவில்லை. அந்த இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். “என் பேர் கார்த்திக். இங்கதான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன். நீங்க என்ன பண்றீங்க?” என்று பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக். அதற்கு அந்த பெண், “அப்படியா? வெரி குட்” என்றாள். இப்படி ஒரு பதிலை கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“என்னங்க, அவ்ளோ தானா? மழை வேற நிக்கற மாதிரி தெரியல. அதுவரைக்கும் ஏதாவது பொழுதுபோற மாதிரி பேசலாம்னு பாத்தா ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க. உங்களப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன், இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்றான் கார்த்திக்.

அதற்கு அந்த பெண், “மை நேம் இஸ் ஜெயா. நானும் இங்கதான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன்” என்றாள். அதற்கு கார்த்திக், “ஓ இஸ் இட்? வெரி குட். உங்க லேப்டாப் பேக்குல போட்டிருக்கறத பாத்தா நீங்க ஐ.பி.எம்-ல வேல பாக்கறீங்கன்னு நெனக்கிறேன். கரெக்டா?” என்றான்.

“ஓ, அப்போ நான் சரவண பவன் பேக் வெச்சிருந்தேன்னா அந்த ஹோட்டல்ல வேலை பாக்கறேன்னு சொல்லுவீங்களோ? என்று நக்கலாகக் கேட்டாள் ஜெயா. இதைக்கேட்டு கார்த்திக் வழிந்துக்கொண்டு, “அப்படி இல்லீங்க. ஏதோ தோணிச்சு, அதான் சொன்னேன்” என்று ஒரு வழியாக சமாளித்தான்.

“பாருங்க என் நிலைமையை. 5 மணிக்கே கிளம்பலாம், வீட்டுக்கு போய் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பாக்கலாம்னு இருந்தேன். கடைசி நேரத்துல ஒரு வேலை வந்துடுச்சு. அதனால ஆஃபீஸ்ல இருந்து கிளம்பறதுக்கு லேட் ஆகிடுச்சு. இப்பொ மழை வேற பயங்கமா கொட்டுது. எப்பொ நிக்கும்னு தெரியல” என்று தன் நிலைமையைப் பற்றி புலம்பினான் கார்த்திக். அதற்கு ஜெயா, “சரி விடுங்க. நம்மால என்ன பண்ண முடியும். நான்கூட இன்னிக்கு ‘வெற்றி நிச்சயம்’ படத்துக்குப் போகலாம்னு இருந்தேன். ஆனா இந்த மழையால அந்த ப்ளான் அவுட் ஆகிடுச்சு. எது நடக்கணும்னு இருக்கோ அதான் நடக்கும்” என்றாள்.

“நல்ல வேளை இன்னிக்கு மழை வந்து உங்கள காப்பாத்தியிருக்கு. போன வாரம் தான் அந்த படத்த பாத்தேன். அதுக்கு, மழைய விடுங்க, சுட்டெரிக்கற வெயிலே பெட்டர்” என்றான் கார்த்திக். இதைக்கேட்டு சிரித்தபடியே ஜெயா, “அப்படியா? நல்ல வேளை தப்பிச்சேன். இதே மாதிரி நீங்களும் தப்பிச்சுட்டீங்க” என்றாள்.

“என்னங்க சொல்றீங்க? நான் தான் அந்த படத்துக்கு மறுபடியும் போகப்போறதில்லையே. அப்பறம் எப்படி தப்பிச்சேன்னு சொல்றீங்க?” என்றான் கார்த்திக். “நீங்க மேட்ச் பாக்கணும்னு சொன்னீங்களே, அதைத்தான் சொன்னேன். யாரு எவ்ளோ ரன் அடிக்கணும், எவ்ளோ விக்கெட் எடுக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம். அதையெல்லாம் பாத்தா தேவையில்லாம டென்ஷன்தான் மிச்சம். அதுக்குத்தான் நீங்க தப்பிச்சுட்டீங்கன்னு சொன்னேன்” என்றாள் ஜெயா.

அதற்கு கார்த்திக், “கலக்கறீங்க போங்க. சொல்றதுக்கெல்லாம் டக், டக்குனு பதில் தர்றீங்க. நீங்க வக்கீலா ஆகியிருந்தீங்கன்னா செமையா வந்திருப்பீங்க” என்றான். “ஓஹோ அப்படியா? ஸோ, இப்பொ நான் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கறதால சரியா வரமாட்டேன்னு சொல்ல வர்றீங்களா?” என்று நக்கலாகக் கேட்டாள் ஜெயா.

அதற்கு கார்த்திக், “பாத்தீங்களா? நான் சொன்ன ஒரு சின்ன விஷயத்துல இருந்து ஒரு கேள்வி கேட்டு மடக்க பாக்கறீங்க. இதத்தான் சொன்னேன்” என்று சிரித்தபடியே சொல்ல ஜெயாவும் சிரிக்க ஆரம்பித்தாள். இப்படியே சிரிப்பும் சத்தமுமாய் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஒரு சிறு நட்புணர்வு வளரத் தொடங்கியிருந்தது.

மணி 7:30 ஆனது. மழை சற்று ஓய்ந்திருந்தது. “சரிங்க. மழை நின்னுடுச்சு. நான் கிளம்பறேன்” என்றாள் ஜெயா. அதற்குள் மழை நின்றுவிட்டதே என்று தன் அதிர்ஷ்டத்தை எண்ணி பெருமூச்சு விட்டவனாக, “சரிங்க. டைம் நல்லா வேகமா போயிடுச்சு. மணி 7:30 ஆனதே தெரியல. தேங்க்ஸ் ஒன்ஸ் அகெய்ன்” என்றான் கார்த்திக். “வெல்கம் கார்த்திக். அப்பறம் பாப்போம்” என்று சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியில் உட்கார்ந்து கிளம்பினாள் ஜெயா.

கார்த்திக்கும் அவனுடைய பைக்கில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். அவன் கிளம்பி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை, மறுபடியும் மழை பலமாக பெய்ய ஆரம்பித்தது. “அடடா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மழை வந்திருக்கக் கூடாதா” என்று நினைத்தபடியே மழைக்கு ஒதுங்க ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே அவனுடைய வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.
அவன் கண்களுக்கு, சற்று தொலைவில் ஒரு மரம் இருப்பது தென்பட்டது. அருகே சென்று பார்த்தால் அதே சிவப்பு நிற ஸ்கூட்டியும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

“ஹாய் கார்த்திக். இன்னிக்கு மழை நம்மள விடாதுன்னு நெனக்கிறேன்” என்றாள் அந்த மரத்தடியில் நின்றுக்கொண்டிருந்த ஜெயா. மறுபடியும் அந்த குரலைக் கேட்ட கார்த்திக் முகத்தில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி. மழைக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே அந்த மரத்தருகில் சென்றான் கார்த்திக்.

மழை வலுக்கத் தொடங்கியது.

சிறுகதை 005 - மார்கோனி (September 2012)

வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும், கோபாலும். இருவரும் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகின்றனர். மாடசாமியின் மனைவி மீனாவும், கோபாலின் மனைவி ராஜாத்தியும் தினமும் தங்கள் கணவர்களுக்கு மதிய உணவை அவர்களுடைய வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம்.

“ஏங்க, இப்ப எல்லாம் மத்தியானத்துல வெயில் அதிகமா இருக்குல்ல?” என்று பேச்சை ஆரம்பித்தாள் மீனா. “ஆமா, நீ வீட்டுல சும்மா இருக்க. உனக்கே சூடு அதிகமா இருந்ததுனா, நானும் கோபாலும் வயல்ல நாள் பூரா வேலை செய்யறோம், எங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றான் மாடசாமி. “அதுக்கு இல்லீங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, நம்ம கிராமத்துக்கு கரன்ட் வந்து ஆறு, ஏழு மாசம் ஆகுது. நீங்கதான் தனியா கொஞ்சம் காசு சேத்து வெச்சிருக்கீங்கல்ல. அதுல எதாவது வாங்கலாமா?” என்றாள் மீனா. இதைக்கேட்ட கோபால், “என்னடா, தனியா காசு சேத்து வெச்சிருக்கியா? என்ன செய்யப்போற அத வெச்சு?”. அதற்கு மாடசாமி, “இப்போ சொல்லமாட்டேன். செஞ்சதுக்கு அப்பறம் சொல்றேண்டா” என்றான்.

உண்டுமுடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் மீனாவும், ராஜாத்தியும். “உனக்கு ஏதாவது வாங்கி குடுக்கறதுக்கு தான் உன் வீட்டுக்காரர் காசு சேத்துட்டு வர்றார்னு நினைக்கிறேன்டி. குடுத்துவெச்சவ நீ”, என்றாள் ராஜாத்தி. இதைக்கேட்டு ஒருவித மகிழ்ச்சியில் மீனா, “அப்படியா? நீ சொன்னது உண்மையா இருந்த சந்தோஷம் தான். ஆனா அவ்ளோ காசுல என்னத்த வாங்கப்போறார்னு தான் தெரியல” என்றாள். “எவ்ளோ காசு இருக்கும்?” என்று கேட்டாள் ராஜாத்தி. அதற்கு மீனா, “கிட்டத்தட்ட முண்ணூறு ரூபா இருக்கும். இவ்ளோ காசுல என்ன செய்யப்போறார்னு தெரியல” என்றாள்.

“என்னாது? முண்ணூறு ரூபாயா? அவ்ளோ காசுல உன்ன தங்கத்துலயே குளிப்பாட்டப்போறாரு. அஞ்சு பவுன் தங்கம் வாங்கலாம் அந்த காசுல”, என்றாள் ராஜாத்தி. அதற்கு மீனா, “ஹும், நாம மட்டும் இதப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது. அவரு என்ன நெனச்சிருக்காரோ அது தெரியலயே” என்று பெருமூச்சுவிட்டாள். வீட்டை அடைந்தனர் இருவரும்.

சில நாட்கள் கழிந்தன. அன்று சனிக்கிழமை, நேரம் காலை 8 மணி. அன்று சீக்கிரமே எழுந்து, எங்கேயோ வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் மாடசாமி. “மீனா, அந்த சின்ன தகரப்பெட்டில வெச்சிருக்கற காசை எடுத்துட்டுவா. நான் வெளிய கிளம்பணும்”, என்று மீனாவைப் பார்த்து கூறினான் மாடசாமி. “இதோ ஒரே நிமிஷம், இப்பொ எடுத்துட்டு வர்றேங்க” என்று வேகவேகமாக உள்ளே சென்றாள் மீனா. அவளிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, “நான் திருச்சி வரைக்கும் போய்ட்டு வர்றேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் மத்தியானம் சாப்பிடறதுக்கு வந்துடுவேன்” என்றான்.

நேரம் பத்து மணி. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை தன்னுடைய மிதிவண்டியில் வந்தடைந்தான் மாடசாமி. முருகன் ரேடியோ கடையின் வாசலில் தன் மிதிவண்டியை நிறுத்தி கடைக்கு உள்ளே சென்றான். “வா மாடசாமி. எப்படி இருக்க? வீட்டுல மீனா சௌக்கியமா? என்றார் அந்த கடையின் முதலாளி முருகன். “எல்லாரும் நல்லா இருக்கோம் பெரியப்பா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான் மாடசாமி. “நான் நல்லா இருக்கேன். அப்பறம் என்ன சமாச்சாரம்? இந்த தடவ தேவையான அளவு காசு எடுத்துட்டு வந்திருக்கியா?” என்ற முருகனிடம் “இருக்கு பெரியப்பா” என்றபடியே கடையில் அங்கும் இங்கும் நடந்தவண்ணம் இருந்தான் மாடசாமி.

சரி, இங்க வா, இதப்பாரு. இது தான் இருக்கறதுலயே சூப்பர். இத வாங்கிக்கோ” என்றார் முருகன். “இது வேணாம் பெரியப்பா. எனக்கு மார்கோனி கம்பெனி ரேடியோ தான் வேணும்”, என்றான் மாடசாமி. “மார்கோனியும் நல்ல கம்பெனி தான். அதயே எடுத்துக்கோ” என்றார் முருகன். “எவ்ளோ விலை பெரியப்பா?” என்று மாடசாமி கேட்க, “உனக்கு முண்ணூறு ரூபா, மத்தவங்களுக்கு முண்ணூத்தி அம்பது ரூபா” என்றார் முருகன். அவரிடம் தான் கொண்டுவந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, ரேடியோவை மிதிவண்டியின் பின்புற இருக்கையில் வைத்து இறுக கட்டிவிட்டு, தன் பெரியப்பாவிடம் விடைபெற்று, மிகவும் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினான் மாடசாமி. பெரிதாக எதையோ சாதித்துவிட்டது போல் உணர்ந்தான்.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி 12.40. தன் கணவன் வந்திருக்கும் சத்தத்தைக் கேட்டு, தனக்கு ஏதாவது வாங்கி வந்திருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் வீட்டு வாசலுக்கு விரைந்து வந்தாள் மீனா. “என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க? எனக்காக வாங்கறதுக்காகவா அவ்ளோ தூரம் போய்ட்டு வந்தீங்க”? என்று ஆவலுடன் கேட்டாள் மீனா. அதற்கு மாடசாமி, “இங்க பார் என்ன வாங்கிருக்கேன்னு” என்று மகிழ்ச்சியுடன் தான் கொண்டுவந்திருக்கும் ரேடியோவை மீனாவிடம் காட்டினான். இதை சற்றும் எதிர்பாராத மீனா, “என்னங்க இதப்போய் வாங்கிருக்கீங்க? தங்கம், வெள்ளினு ஏதாவது வாங்கியிருந்தாலாவது பிற்காலத்துல உதவும். இத வெச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும்?” என்று சற்றே தயக்கம் கலந்த ஏமாற்றத்துடன் கூறினாள். “எனக்கு இத வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அத ஒருவழியா வாங்கிட்டேன்னு சந்தோஷமா இருக்கேன், நீ என்ன இப்படி பேசற?” என்று சிறு கோபத்துடன் மாடசாமி கேட்க, மீனா வேறு வழியின்றி அமைதியானாள். அந்தக்காலத்தில் கணவன் பேச்சை தட்டிக்கேட்கமாட்டார்கள் மனைவிமார்கள்.

வீட்டுக்குள் சென்று, வீட்டுக்கூடத்தில் இருந்த ஒரு மேஜையை ஒரு ஓரமாக வைத்து, அதன் மேல் ஒரு துணியை விரித்து, அந்த துணியின் மேல் மிகவும் பொறுமையாக தான் வாங்கிவந்த ரேடியோவை வைத்தான் மாடசாமி. மின்கம்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து, ப்ளக் பாய்ன்ட்டில் சொருகி ஸ்விட்சைப் போட்டான். ரேடியோவில் ஏதோ ஒரு சத்தம் கேட்க ஆரம்பித்தது, ஆனால் தெளிவாக ஏதும் கேட்கவில்லை. சற்று டியூன் செய்து பார்த்தான் மாடசாமி. இலங்கை வானொலி நிலையத்தில் ஏதோ ஒரு செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ரேடியோ சரியாக வேலை செய்வதை எண்ணி மகிழ்ந்தான் மாடசாமி. அன்று முதல், தினமும் வீட்டுக்கு வந்தவுடன் ரேடியோவில் ஒலிபரப்பாவதைக் கேட்காமல் தூங்கியதில்லை மாடசாமி.

நாட்கள் ஒடின. அந்த ரேடியோவை பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்தான் மாடசாமி. அன்று ஒரு இரவு, வீட்டுக்கூடத்தில் அமர்ந்து ரேடியோவில் எதையோ கேட்டுக்கொண்டிருந்தனர் மாடசாமியும், மீனாவும். “நான் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றான் மாடசாமி. சிறிது நேரத்தில் ரேடியோவிலிருந்து வந்துக்கொண்டிருந்த சத்தம் திடீரென நின்றது. “என்னங்க, ரேடியோ வேலை செய்யலங்க. என்ன ஆச்சுன்னு தெரியல” என்றாள் மீனா. ஆனால் பதில் ஏதும் வரவில்லை. உள்ளே சென்று பார்த்த மீனாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. மாடசாமி மயங்கி கீழே விழுந்திருந்தான். “ஐய்யோ! என்னங்க, என்னாச்சுங்க? எழுந்திருங்க” என்றபடியே மாடசாமியில் முகத்தில் பதற்றத்துடன் தண்ணீர் தெளித்தாள் மீனா. மாடசாமி மெதுவாக கண் திறந்ததைக் கண்டபின் தான் நிம்மதி அடைந்தாள். “திடீர்னு மயக்கம் வந்திருச்சு, அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியல. எனக்கு ஒண்ணும் இருக்காது, நீ பயப்படாத” என்று மீனாவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி கூடத்திற்கு அழைத்துவந்தான் மாடசாமி. கூடத்திற்கு வந்து நாற்காலியில் மாடசாமி அமர்ந்த அடுத்த நொடி ரேடியோ வேலை செய்யத்தொடங்கியது. மீனாவுக்கு ஆச்சர்யம். நடந்த விஷயத்தை மாடசாமியிடம் கூற, “பாத்தியா? நான் நம்ம ரேடியோவ எவ்ளோ நல்லா பாத்துக்கறேன், அதனாலதான் நான் மயங்கி விழுந்தது உனக்கே தெரிஞ்சது. நான் ரேடியோ வாங்கினது எவ்ளோ நல்ல விஷயம் பாரு” என்றான் மாடசாமி. பதில் ஏதும் பேசாமல் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அமர்ந்தாள் மீனா. அடுத்த சில நாட்கள் வழக்கம்போல் இருந்தன.

திடீரென ஒரு நாள், ராஜாத்தி அவசர அவசரமாக மீனாவின் வீட்டுக்கு வந்து “மீனா, ஒரு கெட்ட சேதி. கொஞ்சம் பதட்டப்படாம இரு” என்று மூச்சிரைக்க மீனாவிடம் கூறினாள். “என்னடி சொல்ற. என்ன ஆச்சு?” என்றாள் மீனா. “உன் வீட்டுக்காரர் இன்னிக்கி, ...” என்று ஆரம்பித்த ராஜாத்தி, சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் திணறினாள். “என்னடி ஆச்சு அவருக்கு? சொல்லுடி” என்று கதறத்தொடங்கினாள். “இன்னிக்கி வயல்ல வேலை செஞ்சிட்டிருக்கும்போது திடீர்னு மயங்கி விழுந்துட்டார். என் வீட்டுக்காரர்தான் அவர ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருக்கார். கவலப்படாத. பயப்படாம இரு. சரி ஆகிடும்” என்று மீனாவுக்கு தைரியம் கூற முயற்சித்தாள் ராஜாத்தி.  “இவருக்கு மட்டும் இப்படியே ஆகுதே! நாங்க என்ன பாவம் பண்ணோம்! கடவுளே, நீ தான் அவர காப்பாத்தணும். எங்கள காப்பாத்து கடவுளே” என்று கதறினாள் மீனா. ராஜாத்தி எவ்வளவோ சமாதானம் சொல்லியும் மீனாவை சமாதானப்படுத்த முடியவில்லை.


என்ன தோன்றியதோ தெரியவில்லை மீனாவுக்கு, பூஜை அறையில் அமர்ந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்த அவள், திடீரென எழுந்து கூடத்திற்கு சென்றாள். ரேடியோவை ஆன் செய்து பார்த்தாள். ஆனால் அது வேலை செய்யவில்லை. இதையே மூன்று, நான்கு முறை செய்தாள். ஆனால் ரேடியோவில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மீனாவுக்கு கவலை அதிகமானது. ஓ என்று அலறியடித்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்றாள். சத்தம்போட்டு அழத்தொடங்கிய மீனாவை ராஜாத்தி சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. ராஜாத்தியின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்த மீனா, சட்டென்று கூடத்திற்கு சென்றாள். ரேடியோவில் ஏதோ பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட பிறகு தான் தன்னை சற்று சுதாரித்துக்கொண்டாள். அவளுக்குள் சின்ன ஒரு நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.

சிறுகதை 004 - பழக்கம் (May 2012)

கிழக்கு கடற்கரை சாலை. நேரம் பகல் ஒரு மணி. சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த குமாரை வழிமறித்து நின்றது ஒரு கார். கார் ஒட்டுனரைப் பார்த்து அவனை திட்டுவதைப்போல் கையசைத்துவிட்டு தன் வழியில் சென்றான் குமார். சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே கார் குமாரை வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கி, குமார் முன்னே வந்து நின்றான் ஒருவன்.

“எப்படி இருக்க குமார்? என்ன ஞாபகம் இருக்கா?” என்றான் அவன். “டேய், ரவிதான நீ? எப்படிடா இருக்க? பாத்து எவ்ளோ நாள் ஆச்சு?” என்றான் குமார். அதற்கு ரவி, “ஆமாம்டா. நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? பரவாயில்லையே, இன்னும் என்னை ஞாபகம் வெச்சிருக்கியே? என்றான். “என்னடா இப்படி சொல்லிட்ட. நாம போலீஸ் டிரெய்னிங்ல எவ்ளோ கூத்து அடிச்சிருக்கோம். உன்னை மறக்கமுடியுமா?” என்றான் ரவி.

மூன்று வருடங்களுக்கு முன், போலீஸ் டிரெய்னிங்கில் ஒரே நேரத்தில் சேர்ந்தனர் குமாரும், ரவியும். குமார் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். குமாரின் தந்தை ஒரு ராணுவ வீர்ர். கார்கில் போரின் போது அவருக்கு காலில் பலத்த அடி பட்டு, அவரால் நடக்க முடியாமல் போனது. அதனால் அவர், ராணுவத்தில் இருந்து விலகி, வீட்டிலேயே இருக்கும்படி ஆனது. குமாரின் தாய் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு டியூஷன் நடத்திக் கொண்டு வருகிறார். கடுமையாக உழைத்து தன்னை தயார்படுத்திக் கொண்டதால் குமாரால் போலீஸ் வேலையில் சேர முடிந்தது.

ரவி கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். ரவியின் தந்தை ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ரவியின் தாய் ஒரு வார இதழில் இணை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ரவியின் அண்ணன் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். சிறுவயது முதலே ரவிக்கு போலீஸாக வரவேண்டும் என்று ஆசை. அவனுடைய பெற்றோரும் அவனுடைய ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல் அவனுக்கு போலீஸ் வேலை கிடைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்தனர். ரவியும் நல்லபடியாக போலீஸ் வேலையில் சேர்ந்தான். போலீஸ் பயிற்சி காலத்தின் போதுதான் குமாரும் ரவியும் சந்தித்தனர். நாளடைவில் நல்ல நண்பர்களாகினர்.

“அப்பறம்டா, எப்படி இருக்க? இன்னும் ட்ராஃபிக் போலீஸாத்தான் இருக்கியா?”, என்று குமாரைப் பார்த்து கேட்டான் ரவி. “ஆமாம்டா, எனக்கு இது தான் பிடிச்சிருக்கு. தினமும் ஜனங்களோட ஒருத்தனா இருந்து வேலை செய்யறது ரொம்ப திருப்தியா இருக்கு. நீ சைதாப்பேட்டை ஸ்டேஷன்ல தான சப்-இன்ஸ்பெக்டரா இருக்க?” என்றான் குமார். அதற்கு ரவி, “ஆமாம்டா அங்கதான் இருக்கேன். உனக்கு கலெக்ஷன் எப்படி? நல்லா வருதா? தினம் நல்லா கிடைக்குமே?” என்றான். “நான் லஞ்சம் வாங்கமாட்டேன்டா. எனக்கு அது பிடிக்காது, ஒத்தும் வராது. அதப்பத்தி பேசாத எங்கிட்ட” என்றான் குமார். “என்னது? லஞ்சம் வாங்கமாட்டியா? என்னால நம்பமுடியலடா. சரி விடு, எங்க ஸ்டேஷன்ல நல்லா வசூல் வரும். அதுல வந்ததுதான் இந்த கார்” என்று பெருமிதமாகக் கூறினான் ரவி. அதற்கு குமார், “அப்படியா, உனக்கு இது தப்பா தெரியலன்னா யாரும் ஒன்னும் செய்யமுடியாது. உனக்கா புரிஞ்சாதான் உண்டு” என்றபடியே ஒரு தேனீர் கடைக்குள் நுழைந்தான் குமார்.

“ரெண்டு டீ போடுங்க” என்று கூறிவிட்டு, பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான் ரவி. “சிகரெட் பிடிக்கறியாடா?” என்றபடி இன்னொரு சிகரெட்டை குமாரிடம் நீட்டினான் ரவி. அதற்கு குமார், “இல்லடா. சிகரெட் பிடிக்கறதில்ல” என்றான். அதற்குள் தேனீரும் வந்தது. பழைய கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருவரும் தேனீர் அருந்தி முடித்தனர். “எவ்ளோ ஆச்சு?” என்று கடைக்காரரை குமார் கேட்க, “ஒன்னும் வேணாங்க, பரவாயில்ல” என்றார் கடைக்காரர். அதைக்கேட்டு சற்று கோபமடைந்த குமார், “ஏன் இப்படி செய்யறீங்க? உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதால தான் சில நல்ல போலீஸ்காரங்ககூட கெட்டு போறாங்க. எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுங்க ஒழுங்கா” என்று குரலை உயர்த்தி பேசினான். இதை எதிர்பார்க்காத அந்த கடைக்காரர் விலையை சொல்ல, அதை அவரிடம் கொடுத்துவிட்டு கிளம்பினர் குமாரும், ரவியும்.

திரும்பி செல்லும் வழியில் குமாரைப் பார்த்து ரவி, “ஏன்டா, அவ்ளோ நல்லவனாடா நீ. அந்த டீக்கடைக்காரன் என்னடா தப்பு செஞ்சான்? எல்லாரும் செய்யறத தான அவனும் செஞ்சான். அவனப் போய் இப்படி மிரட்டற?” என்று சற்று கிண்டலாகக் கேட்டான். அதற்கு குமார், “எனக்கு இப்படியெல்லாம் செஞ்சா பிடிக்காதுடா. என் உத்தியோகத்தால யார்கிட்ட இருந்தும் எனக்கு இலவசமா எது வந்தாலும் எனக்கு பிடிக்காது. என்னால உன்ன மாதிரி எல்லாம் இருக்க முடியாது” என்றான் குமார். “சரி, இன்னும் எத்தன நாளுக்கு நீ இப்படி இருப்ப-னு பாப்போம். நான் கிளம்பறேன்டா. டைம் இருந்தா எனக்கு ஃபோன் பண்ணு” என்று கூறி விடைபெற்றான் ரவி.

குமார் அன்று வீட்டுக்கு செல்லும்போது இரவு எட்டு மணி. உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினான். விடியற்காலை 4 மணி ஆனது. திடீரென யாரோ ஒருவர் வலி தாங்க முடியாமல் கத்துவது போல் ஒரு சத்தம் கேட்டது. எழுந்து போய் பார்த்தால் அவனது தந்தை, கால் வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தார். “திடீர்னு கால் வலி தாங்க முடியல குமார். பயங்கரமா வலிக்குது” என்றார் குமாரின் தந்தை. அவரை தூக்கிக்கொண்டு அவசர அவசரமாக அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றான். மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, முழங்காலை முழுவதுமாக வெட்டி எடுத்து மரக்கால் வைத்தால் தான் வலி குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி செய்யவில்லை என்றால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என்றும், அதற்கு குறைந்தது ஐந்து லட்சம் ஆகும் என்றும் கூறினர். இதைக்கேட்டு திகைத்துப் போனான் குமார்.

என்ன செய்வதென்று புரியாமல் இருந்தபோது அவனுக்கு ரவி ஞாபகம் வந்தது. ரவியை தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினான் குமார். ரவி அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, மருத்துவர் அறைக்குள் நுழைந்து ஏதோ பேசிவிட்டு வந்தான். “ஒன்னும் பிரச்சனை இல்லடா. நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். நாளைக்கே ஆபரேஷன் வெச்சுக்கலாம்னு சொல்லிட்டார். நான் பாத்துக்கறேன், நீ கவலப்படாத” என்றான் ரவி. தன் நண்பனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் அவனை கட்டித் தழுவியபோது குமாரின் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து, ரவியின் உதவியுடன் தன் தந்தையை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தான் குமார். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ரவி. அவனை வழியனுப்ப வாசலுக்கு வந்தான் குமார். “மறுபடியும் சொல்றேன், ரொம்ப நன்றிடா. நீ மட்டும் இல்லனா என்ன நடந்திருக்கும்னு நினைச்சு பாக்கவே முடியல. இன்ஷூரன்ஸ் காசு வந்தவுடனே உனக்கு நான் திருப்பிக் கொடுத்துடறேன். அது வரைக்கும் தயவுசெஞ்சு கொஞ்சம் பொறுத்துக்கோ”, என்றான் குமார். அதற்கு ரவி, “பரவாயில்லடா, அது வந்ததுக்கு அப்பறமே கொடு” என்றான். அவனுடைய காரில் ஏறி கிளம்புவதற்கு முன், “இதுக்குத்தான் நான் அன்னிக்கு உங்கிட்ட கலெக்ஷனப் பத்தி கேட்டேன். நீ மட்டும் கொஞ்சமாவது லஞ்சம் வாங்கியிருந்தேனா, பிரச்சனை வந்த அன்னிக்கு உனக்கு உதவியிருக்கும். என்னால அவ்ளோதான் சொல்ல முடியும், நீ பொறுமையா உக்காந்து யோசி. நான் வர்றேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான் ரவி. இதை சற்றும் எதிர்பாராத குமார், ரவி கூறியதைப்பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். நாட்களும் நகர்ந்தன.

சில நாட்களுக்குப் பிறகு, குமார் பணியில் இருக்கும்போது, சிகப்பு விளக்கு எரிவதை மதிக்காமல், சிக்னலைக் கடந்து சென்றது ஒரு கார். அதைப் பார்த்ததும், அவனுடைய பைக்கில் ஏறி அந்த காரை துரத்திப்பிடித்தான். அந்த கார் ஓட்டுனரை கோபமாக திட்டிவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு குமார் தன் கையில் எதையோ வாங்கிக்கொண்டு வருவதை அந்த வழியாக வந்த ரவி பார்த்தான். குமார் அவனுடைய பைக்கில் ஏறி கிளம்பும்போது அங்கு வந்தான் ரவி.


இருவரும் அருகில் இருந்த தேனீர் கடைக்குச் சென்றனர். அப்போது ரவி, “என்னடா, அந்த கார் டிரைவர் கிட்ட இருந்து என்னவோ வாங்கிட்டு வந்த நீ? வாங்க ஆரம்பிச்சுட்டியா நீயும்? அப்படி வா வழிக்கு” என்றான். அதைக்கேட்டு குமார், “இல்லடா. எங்கிட்ட எப்பவுமே, எந்த தப்புக்கு எவ்ளோ அபராதம்னு போட்டிருக்கற ஒரு சின்ன புத்தகம் இருக்கும். அந்த புத்தகத்த அந்த டிரைவர் கிட்ட காட்டி, சரியான அபராதத்தொகைய வாங்கிட்டு வந்தேன். இந்த காசு எனக்கு இல்ல. நம்ம ஸ்டேஷனுக்கு தான் போகும்” என்றான். “ஏன்டா இப்படி இருக்க நீ? எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தது உனக்கு? இன்னுமா இப்படி?” என்றான் ரவி. அதற்கு குமார், “நான் ஒழுங்கா இருந்ததாலதான் எனக்கு அந்த பிரச்சனை நல்லபடியா முடிஞ்சது. இல்லனா மத்தவங்களோட சாபத்தால இன்னும் மோசமாயிருக்கும். ஒரு தடவை லஞ்சம் வாங்க ஆரம்பிச்சா அப்புறம் அதுவே பழக்கமாகிடும். அது எனக்கு வேணாம்டா” என்று கூறினான். இதைக்கேட்டு திகைத்துப்போன ரவி, தன் நண்பனைப்பற்றி நினைத்து பெருமிதம் கொண்டு, “நீ போடா, நான் கடைக்காரர்கிட்ட நாம டீ குடிச்சதுக்கு காசு கொடுத்துட்டு வர்றேன்” என்ற சிரித்தபடியே கூறிவிட்டு தேனீருக்கான காசைக் கடைக்காரரிடம் கொடுத்தான்.

சிறுகதை 003 - பயம் (April 2012)

“வாங்கடா சீக்கிரம், படம் ஆரம்பிச்சிடப் போறாங்க” என்று தன் நண்பர்களான சிவா, பாபு, மணி ஆகியோரை கிளப்பிக்கொண்டு திரையரங்கத்திற்கு உள்ளே சென்றான் ரவி. படம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த்த போது இடைவேளை வந்தது. “சரிடா, சாப்படறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரலாம் வா” என்று சிவாவை அழைத்தான் ரவி. மணி சற்றே பதற்றத்தோடு இருப்பதைக் கண்ட ரவி, “என்னடா ஆச்சு? டென்ஷனா இருக்க?” என்று கேட்டான். “என்னோட பர்ஸ காணோம்டா. அதுல நூறு ரூபா, என்னோட காலேஜ் ஐடி கார்டு எல்லாம் இருந்தது. அதான்” என்றான். “இந்த சின்ன விஷயத்துக்கா இப்படி இருக்க?” என்று கிண்டலாகக் கேட்டான் சிவா. அதற்கு மணி, “சின்ன விஷயம் இல்லடா. ஐடி கார்டு இல்லனா காலேஜ்ல உள்ள விடமாட்டாங்க” என்று ஒரு சின்ன பயத்துடன் கூறினான் மணி. “கவலைப்படாத மணி. நாளைக்கு காலேஜுக்குப் போன உடனே வேற ஐடி கார்டு வாங்கிடலாம்” என்று அவனைத் தேற்றினான் ரவி.

ரவி, சிவா, பாபு, மணி ஆகிய நால்வரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். ஏழாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். நால்வரும் படிப்பிலும், விளையாட்டிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்குபவர்கள். ரவியின் பெற்றோர் அரசாங்க வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். அவனுக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். சிவாவின் பெற்றோரும் மணியின் பெற்றோரும் மருத்துவர்கள். சிவாவுக்கு ஒரு அக்கா இருக்கிறார். மணி அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவன். பாபுவின் தந்தை ஒரு பெரிய மளிகைக்கடை நடத்திவருகிறார். அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான்.

பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, நால்வரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தனர். ஹாஸ்டலில் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைகள் ஓரளவு சௌகரியமாக இருந்தன. விடுமுறை தினங்களில் ஒன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்தனர். அப்படித்தான் இன்று அந்த திரையரங்கிற்கு வந்திருக்கும் போது மணியின் பர்ஸைக் காண்வில்லை.
மணியைத் தேற்றிவிட்டு ரவியும் சிவாவும் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிவர வெளியே சென்றனர். 

அப்போது ஒருவன் யாரையோ தேடுவது போல இவர்களை நோக்கி வந்தான். மணியிடம் வந்து, “இந்த பர்ஸ் உங்களுதா?” என்று கேட்டான். அதைப் பார்த்து, “ஆமா, இது என்னோட பர்ஸ் தான். ரொம்ப நன்றி. எங்க இருந்தது?” என்று கேட்டான். அதற்கு அவன், “கீழ பாத்தேன். உங்க ஐடி கார்டு ஃபோட்டோ பாத்து உங்கள தேடிட்டு வந்தேன்” என்றான். “ரொம்ப நன்றிங்க” என்று அவனிடம் நன்றி கூறிவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். சில நிமிடங்களில் ரவியும் சிவாவும் திரும்பினர். அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறி மகிழ்ந்தான் மணி. படம் முடிந்ததும் நால்வரும் ஹாஸ்டலுக்குத் திரும்பினர்.

நால்வரும் வகுப்பில் இரண்டாம் வரிசையில் அமர்ந்து, பாடங்களை உன்னிப்பாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொள்வார்கள். பாபுவும், ரவியும் பரீட்சைக்கு ஒரு வாரம் முன்பு தான் படிக்க ஆரம்பிப்பர். சிவா ஒவ்வொரு வாரமும் படிப்பான். மணி தினமும் படிப்பான். இருந்தாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் நால்வரும் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுப்பது வழக்கம். இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் பொறாமை இருந்ததில்லை.

வகுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் சரியாகவும், பொறுமையாகவும் பதில் சொல்வதால், வகுப்பு ஆசிரியர்களுக்கு மணிதான் செல்லப்பிள்ளை. இவனைப்போலவே ரேகா என்று ஒரு மாணவி இருந்தாள். நன்றாக படிப்பவள். திறமைசாலியும் கூட. தினமும் அடையாறில் இருக்கும் தன் வீட்டிலிருந்து கிளம்பி, காலை எட்டரை மணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்துவிடுவாள். வகுப்புகள் முடிந்த பிறகு, மாலை ஐந்து மணிக்கு தன் வீட்டிற்கு புறப்படுவாள்.

மணிக்கும், ரேகாவுக்கும் தான் வகுப்பில் ஒவ்வொரு பரீட்சையிலும் யார் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற போட்டி இருக்கும். ஒரு முறை மணி முதலிடம் பிடித்தால், அடுத்த முறை ரேகா முதலிடம் பிடிப்பாள். இதனாலேயே ஒருவர் மேல் இன்னொருவருக்கு மரியாதையும், நன்மதிப்பும் உருவானது. ரவி, சிவா, பாபு இவர்களுக்கு அடுத்த இடங்களைப் பெறுவர். இதுவே அந்த வகுப்பின் எழுதப்படாத விதியாக இருந்தது.

ஒரு நாள், மணியின் அறையில், அன்று வகுப்பில் நடந்ததைப்பற்றி பாபுவும் மணியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மணியின் செல்ஃபோனுக்கு ஏதோ ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று மணி “ஹலோ” என்று சொன்னதும், “ஹலோ, ஈஸ் இட் மணி?” என்று அந்தப்பக்கத்தில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது. “ஆமா. நீங்க?” என்று மணி கேட்க, “நான்தான் ரேகா பேசறேன். எலெக்ட்ரானிக்ஸ்ல இன்னிக்கு நடத்தினதுல ஒரு சந்தேகம் இருக்கு. உனக்கு தெரிஞ்சிருக்கலாம், உன்ன கேக்கலாம்னு தான் ஃபோன் பண்ணேன்” என்றாள் ரேகா. அதற்கு மணி, “ஓ அப்படியா. சரி சொல்லு ரேகா” என்று கூற, ரேகா தன் சந்தேகத்தைக் கேட்டாள். அவள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க அவனுக்கு ஒரு மணி நேரம் ஆனது.

இதை பார்த்துக்கொண்டிருந்த பாபு, “அடப்பாவி, இந்த சந்தேகத்த தான் நானும் கேட்டேன். ஆனா, நீ உனக்கே சரியா புரியலன்னு சொன்ன. இப்பொ ரேகாவுக்கு மட்டும் எப்படிடா புரியவெச்ச?” என்றான். “அவளுக்கே பாதி தெரிஞ்சிருந்ததுடா. அதனால ரொம்ப சுலபமாப் போச்சு”, என்றான் மணி. அதற்கு பாபு, “ஒரு பொண்ணு கேட்டா உடனே பண்ணிடுவீங்களே! என்னடா நடக்குது இங்க?” என்று சொல்லும் போது, ரவியும் சிவாவும் உள்ளே வந்தனர். அவர்களிடம் நடந்த விஷயத்தை பாபு கூற, மூவரும் மணியை கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அன்று முழுவதும் இதே கச்சேரி தான்.

நாட்கள் ஓடின. மணியும், ரேகாவும் வகுப்புக்குறிப்புகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். கல்லூரி நூலகத்திலும், கேன்டீனிலும் சந்தித்து அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்தைப் பற்றி பேசுவர். அவர்களுக்குள் நட்பு வளரத் தொடங்கியது. அவர்களின் சந்திப்புகள் அதிகமானது. ஒரு நாள் மணியிடம் ரேகா, “என் அப்பாவும், அம்மாவும் உன்ன பாக்கணும்னு சொன்னாங்க. இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வரியா?” என்று கேட்க, அதற்கு மணி, “அப்படியா? என்ன விஷயம்?” என்று கேட்டான். மணி இது வரை தன்னுடைய எந்த ஒரு தோழி வீட்டிற்கும் சென்றதில்லை, அதனால் அவனுக்கு சிறு தயக்கம். “ஒன்னும் இல்ல. சும்மாதான். பயப்படாம வா. எங்கப்பாவும் அம்மாவும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று ரேகா கூற, மணியும் அதற்கு சம்மதித்தான்.

சனிக்கிழமையும் வந்தது. “இன்னிக்கு மத்தியானம் ஒரு மணிக்கு, ரவியும், பாபுவும், நானும் படம் பார்க்க போறோம்டா. நீயும் வரியா?” என்று மணியைப் பார்த்து கேட்டான் சிவா. அதற்கு மணி, “இல்லடா. இன்னிக்கு ரேகா அவ வீட்டுக்கு கூப்பிட்டிருக்கா. அங்க போறேன். அடுத்த தடவ நீங்க போகும்போது வர்றேன்” என்றான். அதற்கு சிவா, “என்னடா உன்ன மட்டும் வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கா? லவ் பண்றீங்களா ரெண்டு பேரும்? சொல்லவே இல்ல” என்றான். அதற்கு சிவா, “அப்படி எல்லாம் இல்ல டா” என்று சற்று வெட்கத்துடன் கூறுவதைக் கண்ட சிவா, “டேய், வெக்கப்படாத டா. அதான் உன் முகத்தைப் பாத்தாலே தெரியுதே. நல்லா இருந்தா சரி தான்” என்றான். “நன்றிடா. இன்னும் அவ கிட்ட லவ் சொல்லல. அவகிட்ட சொன்னதுக்கு அப்பறம் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்” என்றான் மணி. “நான் அவங்ககிட்ட சொல்லிக்கறேன். நீ போய்ட்டு வா. குட் லக்” என்று கூறி அவனை வாழ்த்திவிட்டு கிளம்பினான் சிவா.

மாலை ஆறு மணி ஆனது. படம் பார்த்துவிட்டு மூவரும் நேராக மணியின் அறைக்குச் சென்றனர். “என்னடா மணி, எப்பொ வந்தே? சொல்லவே இல்ல. சிவா தான் எல்லாத்தையும் சொன்னான். கங்க்ராட்ஸ் டா. அவ கிட்ட சொல்லிட்டியா? என்ன சொன்னா ரேகா?” என்று கேட்டான் ரவி. அதற்கு மணி, “நான் நாலு மணிக்கே வந்துட்டேன்டா. அவங்க வீட்டுல இருந்து கிளம்பும் போது அவ கிட்ட என் லவ்வ சொன்னேன். ஆனா அவ சம்மதிக்கலடா. ரொம்ப கோவப்பட்டா. இனிமே நாம பேசக்கூட வேணாம்னு சொல்லிட்டா” என்று கூறினான். மேலும், “கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் அழுதுட்டு இருந்தேன். அப்பறம் தான் யோசிச்சேன். நான் ஏன் அழனும்? அவள உயிருக்குயிரா காதலிச்ச ஒருத்தன அவ தான் இழந்துட்டா. அதனால இழப்பு அவளுக்கு தான். என்ன காதலிச்ச யாரையும் நான் இழக்கல. அதனால நான் அழக்கூடாதுன்னு நினைச்சேன்டா” என்றான் மணி. அவனை மூவரும் கட்டியணைத்து, அவனை எண்ணி பெருமைப்பட்டனர்.


“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நானும் சிவாவும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றோம்” என்று பாபுவிடம் கூறிவிட்டு சிவாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான் ரவி. சிவாவால் மணியின் செயலை நம்ப முடியவில்லை. “நம்ம மணியாடா இது? சாதாரணமாவே அவன் ரொம்ப பயந்தவன். எப்படி இவ்ளோ தெளிவா பேசறான்? இந்த மாதிரி நடந்தா அவனால தாங்க முடியாது, ஏதாவது தப்பான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சேன். நல்ல வேளை, என்ன ஆனாலும் பரவாயில்லை, வாழ்க்கையை சந்திக்கலாம்னு தைரியமான முடிவு எடுத்திருக்கான். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான் சிவா. அதற்கு ரவி, “அவன் அப்படி யோசிச்சிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்டா. அவன் தப்பான முடிவு எடுத்து இருந்தான்னா, அவனுக்கு அப்புறம் அவனோட அப்பா, அம்மாவ பாத்துக்க யாரும் இல்ல. அவங்க நிலைமையை யோசிச்சு பாத்து, அந்த பயத்துலதான் இந்த முடிவுக்கு வந்திருக்கான்னு நினைக்கிறேன்” என்றான். “அப்படியும் இருக்கலாம். எது எப்படியோ, நம்ம மணி நல்லா இருக்கான்டா. அது போதும்” என்று சிவா கூற, “ஆமாம்டா. பயமும் சில விஷயத்துல, சில நேரங்கள்ல நல்லதுதான்” என்றான் ரவி.

சிறுகதை 002 - தூக்கம் (March - April 2012)

நேரம் காலை பத்து மணி. தாய் ராஜலக்ஷ்மி, தந்தை சிவப்ரகாஷ், மனைவி மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு சென்னையில் அடையாரில் இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் கடைக்குச் செல்ல தயாரானான் பாபு. சிவப்ரகாஷுக்கு வயது 70 ஆகிறது, ராஜலக்ஷ்மிக்கு வயது 60. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு  விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவப்ரகாஷ். அந்தக்காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், அரசாங்க வேலையை நம்பாமல் விவசாயம் செய்து வந்தவர். ராஜலக்ஷ்மி வீட்டு வேலைகளை கவனித்து வந்தாள்.

சிவப்ரகாஷ் – ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்தவன் முருகனுக்கும், பாபுவுக்கும் 5 வயது வித்தியாசம். கடைக்குட்டி என்பதால் பாபுவுக்கு நிறைய செல்லம் கொடுத்து வளர்த்தாள் ராஜலக்ஷ்மி. முருகன் படிப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வந்தான். பாபுவுக்கு படிப்பைவிட விவசாயத்திலும், வியாபாரத்திலும் மிகுந்த ஆர்வம். இதனால் படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை.

பாபுவுக்கு குறும்புத்தனம் கொஞ்சம் அதிகம். சிவப்ரகாஷுக்கு யார் வெளியே சென்றிருந்தாலும் வீட்டுக்கு 6 மணிக்குள் வந்துவிடவேண்டும். கொஞ்சம் தாமதமானாலும் மிகவும் கோபப்படுவார். தாமதமாக வருபவருக்கு அன்றிரவு சாப்பாடு கிடையாது. இதனால் முருகன் எங்கு சென்றாலும் சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிடுவான். ஆனால் பாபு பல சமயங்களில் வெளியே சென்றுவிட்டு தாமதமாக வருவான். அந்த நாட்களில் பக்கத்து வீட்டு மொட்டைமாடியில் இருந்து தன் வீட்டு மொட்டைமாடியில் குதித்து பின்புறமாக வந்துவிடுவான். அவன் வரும்வரை ராஜலக்ஷ்மியும் ஏதாவது சாக்கு சொல்லி அவனை தப்பிக்க வைத்து விடுவாள்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, மதிய உணவுக்கு இருவருக்கும் வீட்டில் சமைத்து கொடுத்துவிடுவாள் ராஜலக்ஷ்மி. சில நாட்களில் வடை, முருக்கு என்று சிறப்பு விருந்து கூட கிடைக்கும். இந்த வடை, முருக்கு இவற்றை பல நாட்கள் சாப்பிட்டாலும், சில நாட்கள் அவற்றை பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருக்கும் கடையில் விற்றுவிட்டு மிட்டாய் வாங்கி சாப்பிடுவான் பாபு. அப்படி ஒரு நாள் கடையில் இருந்து மிட்டாய் வாங்கி சாப்பிடுவதை சிவப்ரகாஷ் பார்த்துவிட்டார். அன்று பாபு வீட்டுக்கு வந்ததும் அவனை கடுமையாக கண்டித்தார் சிவப்ரகாஷ்.

முருகன் நன்றாக படித்து அரசாங்க வேலையில் சேர்ந்தான். அவனுக்கு சிறப்பாக திருமணமும் நடந்து, மணமக்கள் சென்னையில் குடியேறினர். பாபுவும் ஒரு வழியாக படித்து முடித்து, சென்னையில் இருக்கும் சிவப்ரகாஷின்  வீடு ஒன்றில் வந்து தங்கி, அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தான். சிவப்ரகாஷும் ராஜலக்ஷ்மியும் பாபுவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்த சமயம் அவனுடைய நண்பன் மணி, மெயின் ரோடில் ஒரு மருந்து கடையை திறக்கலாம் என்று ஒரு யோசனை கூறினான். அந்த இடத்தில் வேறு மருந்து கடை இல்லாத்தால் இது நல்ல யோசனையாகப்பட்டது பாபுவுக்கு. இதை தன் பெற்றோரிடம் கூறினான். ஆனால் அரசாங்க வேலை இன்னும் சில நாட்களில் கிடைத்துவிடும் என்றும், சொந்தக் காசைப் போட்டு வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும் கூறி பாபுவின் இந்த யோசனைக்கு சம்மதிக்கவில்லை அவன் பெற்றோர். இதனால் மணி தனியாக மருந்து கடை ஆரம்பித்தான்.

நாட்கள் ஓடின. இன்னும் பாபுவுக்கு அரசாங்க வேலை கிடைத்தபாடில்லை. ஆனால் மணி ஆரம்பித்த மருந்து கடையில் வியாபாரம் நன்றாக பெருகி வேறு ஒரு இடத்தில் இன்னொரு கடை ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்தான். கடைசியில் அரசாங்க வேலைக்குக் காத்திருக்காமல் தானும் ஒரு தொழில் செய்யலாம் என்று எண்ணினான் பாபு. அந்த நேரத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது ஆர்வமுற்று, அவன் ஆரம்பித்த கடை தான் அன்னை எலெக்ட்ரானிக்ஸ்.

கடை ஆரம்பித்த சில மாதங்கள் நன்றாக இருந்தன பாபுவுக்கு. அந்த இடத்தில் வேறு எலெக்ட்ரானிக் கடைகள் இல்லாததால் ஒரளவு வருமானம் வந்தது. இந்த நேரத்தில் தான் பாபுவுக்கு திருமணம் செய்துவைத்தனர். திருமணத்துக்குப் பின் முதல் சில மாதங்கள் பாபுவுக்கு மிக இனிமையானவையாக அமைந்தன. வருமானமும் நன்றாக இருந்தது. அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு தன் பெற்றோருக்கும், மனைவிக்கும் நிறைய துணிமணிகள், திண்பண்டங்கள் வாங்கி வருவான். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு அவனுடைய வருமானம் குறைய ஆரம்பித்தது. இதனால் பாபுவுக்கு சற்றே மன அழுத்தம். வீட்டில் உள்ளவர்கள் மீது அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தான். என்ன தான் கோபம் இருந்தாலும் தன் பெற்றோர் மீதும் மனைவி மீதும் கொள்ளை பிரியம். ஆனால் ராஜலக்ஷ்மியின் கண்களுக்கு, பாபுவின் கோபம் அவன் பாசத்தை மறைக்க ஆரம்பித்தது போல் தெரிந்தது. வீட்டிலும் அடிக்கடி சண்டை வந்ததால், பாபுவின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவனுடைய கோபம் தான் நிரந்தரம் என்று நினைக்கத்தொடங்கினாள். இதைப்பற்றி முருகனிடமும் புலம்ப ஆரம்பித்தாள். அவனும் தன்னுடன் வந்து இருக்கும்படி கூறினான்.

அன்று காலை பாபு கடைக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து, முருகன் வீட்டுக்கு செல்வதாகவும், இனி அங்குதான் இருக்கப்போவதாகவும் மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு கிளம்பினர் ராஜலக்ஷ்மியும் சிவப்ரகாஷும். மீனாக்ஷி எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இந்த தகவல் அறிந்த பாபு, தன் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, தான் கோபப்பட்டதற்கு தன்னை மன்னிக்க வேண்டுமென்றும், தன்னுடனேயே இருக்க வேண்டுமென்றும் கெஞ்சினான். ஆனாலும் ராஜலக்ஷ்மியும் சிவப்ரகாஷும் தாம் முருகனின் வீட்டில் தான் இருக்கப்போவதாகக் கூறிவிட்டு கிளம்பினர்.

வீட்டு வாசலில் வந்து இறங்கியிருக்கும் தன் பெற்றோரை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர் முருகனும் அவன் மனைவி செல்வியும். செல்வி ஒரு கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்துக்கொண்டு இருக்கிறாள். இருவருக்கும் கை நிறைய சம்பளம். ஓரிரு மாதங்கள் ஆயின, எந்தவித பிரச்சனையுமின்றி இருப்பது போல் உணர்ந்தனர் சிவப்ரகாஷும் ராஜலக்ஷ்மியும். என்ன தான் தன்னைவிட்டு சென்றிருந்தாலும், தினமும் தன் பெற்றோருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் பாபு.


அன்றொரு நாள், இரவு உணவை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர் நால்வரும். அப்போது செல்வி, “நீங்க நாளைக்கு உங்க வீட்டுக்கு போகும் போது, மறக்காம உங்க தலகாணி, போர்வையையும் எடுத்துக்கிட்டு போங்க” என்றாள். இதைக்கேட்டு திகைத்துப்போன ராஜலக்ஷ்மி, “நாங்க ரெண்டு பேரும் இங்கயே இருக்கலாம்னு நெனச்சோம் செல்வி. நீ ஏம்மா இப்படி சொல்ற?” என்று கேட்டாள். அதற்கு செல்வி, “இல்லம்மா, நாங்க வாங்கற சம்பளத்துல நம்ம நாலு பேரும் சமாளிக்கறது கஷ்டம். அதனால தான். நாளைக்கு உங்களுக்கு நான் டாக்ஸிக்கு சொல்லிடட்டுமா?” என்றாள். முருகன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த ராஜலக்ஷ்மிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. “வேணாம்மா, நாங்களே பாத்துக்கறோம்” என்று கூறினாள் ராஜலக்ஷ்மி. “சரிம்மா, நான் தூங்கப்போறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் ராஜலக்ஷ்மி. எவ்வளவோ முயற்சி செய்தும் தூக்கம் வரவில்லை. இத்தனை வருடங்கள் தங்களை அன்போடு கவனித்து வந்தவர்கள் பாபுவும், மீனாக்ஷியும். தன்னுடைய நிலைமையை எண்ணி கோபப்பட்டாலும், அவனுடைய கோபத்தை பெரிதுபடுத்தி, அவன் அன்றுவரை அவர்களை பாசத்தோடும், மரியாதையோடும் நடத்தியதை மறந்து, அவனை விட்டு விலகி வந்து, அவன் மனதை புண்படுத்தியது தவறு என்பது புரிய ஆரம்பித்தது. செய்த தவறை உணரும் நேரத்தில், உண்மை புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் யாருக்குத் தான் தூக்கம் வரும்!

சிறுகதை 001 - சிவப்பு மஞ்சள் பச்சை (January - February 2012)

                           சிவப்பு மஞ்சள் பச்சை

வீட்டிலிருந்து பத்து மணிக்கு மனைவி அம்பிகா, மகள் அஞ்சலி, மகன் அரவிந்தனுடன் லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு புறப்படுகிறான் கார்த்திக். இரட்டையர்களான அஞ்சலி, அரவிந்தனுக்கு ஐந்து வயது. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இணை இயக்குனரான கார்த்திக்கும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரியும் அம்பிகாவும் லண்டனுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. தம் பெற்றோர்களை சந்திப்பதற்கு வருடத்திற்கு இரண்டு முறை இந்தியா செல்வது கார்த்திக் – அம்பிகாவின் வழக்கம்.

“நம்ம வீட்டிலிருந்து ஏர்போர்டுக்கு எவ்ளோ நேரம் ஆகும் அப்பா?” என்று கேட்டாள் அஞ்சலி. “ஒரு மணி நேரம் ஆகும் அஞ்சலி” என்றான் கார்த்திக். அதற்கு அரவிந்தன், “நீங்க காரை வேகமா ஓட்டினா இன்னும் சீக்கிரமா போயிடலாம் இல்லையா அப்பா?” என்று கேட்க, கார்த்திக் புன்னகைத்தான். “டிராஃபிக் ரூல்ஸ் எல்லாம் இருக்கு அரவிந்த். அதன்படி தான் போகணும்” என்றான் கார்த்திக். “அது என்னென்ன?” என்று அரவிந்தன் கேட்க, டிராஃபிக் சிக்னலில் மஞ்சள் நிறம் வந்ததால் வண்டியை நிறுத்தினான் கார்த்திக். “இப்போ மஞ்சள் சிக்னல் வந்ததால உங்க அப்பா வண்டியை நிறுத்தினார் இல்லையா? அது மாதிரி நிறைய ரூல்ஸ் இருக்கு அரவிந்த்” என்று முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த அம்பிகா கூறினாள். “ரெட் லைட் வந்தாலும் காரை நிறுத்தறீங்க. மஞ்சள் லைட் வந்தாலும் நிறுத்தனுமா அப்பா?” என்று கேட்டாள் அஞ்சலி. அதற்கு கார்த்திக், “மஞ்சள் லைட் வந்ததுன்னா வண்டியை ஸ்லோ பண்ணி நிறுத்தணும். ரெட் சிக்னல் வந்தா இருக்கிற இடத்தை விட்டு நகரக்கூடாது. கிரீன் லைட் வந்தாமட்டும்தான் நகரணும்” என்று பொறுமையோடு விளக்கினான் கார்த்திக். அடுத்த சில நொடிகளில் சிக்னலில் பச்சை விளக்கு எரிய, வண்டி புறப்பட்டது.

சிறிது நேரத்தில் அரவிந்தன் “ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணலைன்னா இன்னும் சீக்கிரம் போயிடலாம் இல்லையா அப்பா?” என்று கேட்க, உரையாடல் எந்த திசையில் செல்கிறது என்பதை உணர்ந்தான் கார்த்திக். “ரூல்ஸ ஃபாலோபண்ணாம இருக்கறது தப்பு அரவிந்த். எது எது எப்படி செய்யணுமோ அது அது அப்படித்தான் செய்யணும். இல்லைன்னா போலீஸ் அங்கிள் பிடிச்சிட்டு போயிடுவாங்க” என்றான் கார்த்திக். “அதனாலதான் 2 மணி ஃப்ளைட்டுக்கு இவ்ளோ சீக்கிரம் கிளம்பினோமா அப்பா?” என்று அஞ்சலி கேட்க, “ஆமாம் அஞ்சலி. இப்போ உங்க ரெண்டு பேருக்கும் புரிஞ்சுதா?” என்று கார்த்திக் கேட்க, அதற்கு இருவரும் புரிந்தது என்றபடி தலையசைத்தனர். விமான நிலையத்தை அடைந்து, செக்யூரிட்டி செக்கிங் எல்லாம் முடிந்து, தாங்கள் செல்ல வேண்டிய விமானத்தில் ஏறி உட்கார்ந்தனர். சிறிது நேரத்தில் விமானம் சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அஞ்சலியும், அடுத்து அரவிந்தனும் உட்கார்ந்துகொண்டு, ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தனர். இவர்களுக்கு முன் இருக்கின்ற வரிசையில் அம்பிகாவும் கார்த்திக்கும் உட்கார்ந்து இருந்தனர். விமானம் கிளம்பி ஒரு மணி நேரம் ஆனது. அஞ்சலியும் அரவிந்தனும் உறங்கிக்கொண்டிருந்தனர். “நல்லா கேள்வி கேக்க ஆர்மபிச்சுட்டாங்க இல்ல?” என்று பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக். அதற்கு அம்பிகா, “ஆமாம். நிறைய கேள்வி கேக்கறாங்க. நல்லது எது, கெட்டது எதுன்னு நாமதான் சரியா சொல்லிக்கொடுக்கணும். இப்போ மனசுல பதியறதுதான் கடைசிவரைக்கும் இருக்கும்” என்றாள். “என்னை மாதிரியே இவங்களையும் நல்லவங்களா வளர்க்கணும்” என்று கூறிய கார்த்திக்கைப் பார்த்து அம்பிகா, “இன்னும் எத்தனை நாளுக்கு இதே நினைப்போட இருப்பீங்க. NPK தான் உங்களுக்கு” என்றாள். அதென்ன NPK என்று கார்த்திக்கிற்கு புரிவதற்க்குள் “NPK என்றால் நெனப்புதான் (N) பொழப்பைக் (P) கெடுக்கும் (K). இதுகூட தெரியாதா?” என்று அம்பிகா விளக்க, “எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுமான்னு செக் பண்ணேன்” என்று மழுப்பி ஒரு வழியாக சமாளித்தான் கார்த்திக்.

மணி 3:30 ஆனது. அம்பிகாவும் உறங்க ஆரம்பித்திருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு தான் பிறந்த ஊரான சென்னைக்கு செல்வதால் கார்த்திக்கிற்கு உறக்கம் வரவில்லை. ஒவ்வொரு வருடமும் இதே நிலைமைதான் அவனுக்கு. தான் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்ததைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான்.
7 வருடங்களுக்கு முன்பு, கார்த்திக் பணிபுரிந்துக்கொண்டிருந்த அலுவலகத்தில், அவனுடைய அணியிலிருந்து ஒருவர் லண்டன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. மற்றவரகளைவிட திறமைசாலி என்பதால் லண்டனுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டான் கார்த்திக். ஒரு புறம் அவனுக்கு மகிழ்ச்சி என்றாலும், மறு புறம் தனியாக எப்படி செல்வது என்று ஒரு சிறு அச்சம். முதன்முறையாக வெளிநாடு சென்று, தனியாக என்ன செய்வது என்ற எண்ணம் வேறு. சரி, என்ன இருந்தாலும், என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டான் கார்த்திக்.

லண்டனுக்கு புறப்பட வேண்டிய நாள் வந்தது. செக்யூரிட்டி செக்கிங் எல்லாம் முடித்து விமானத்தில் ஏறி உட்கார்ந்தான் கார்த்திக். முதன்முறையாக பயணம் செய்யப்போகிறோம் என்று ஒருவிதமான உற்சாகத்தில் இருந்தான். விமானம் புறப்படத் தயாரானது. பயணிகளை சீட் பெல்ட் அணியச்சொல்லி விமானத்தில் இருந்த ஏர் ஹோஸ்டஸ் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆர்வமிகுதியின் காரணமாக, சீட் பெல்ட்டை சரியாக அணிந்திருந்தபோதிலும், ஏர் ஹோஸ்டஸிடம் தன்னால் சீட் பெல்ட்டை இறுக அணியமுடியவில்லை என்றான் கார்த்திக். அவனுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு, சீட் பெல்ட்டை மேலும் இறுக்கினாள் அந்த ஏர் ஹோஸ்டஸ். வலித்தாலும், ஒரு அழகான பெண் எதிரில் அந்த வலியை காண்பிக்கக்கூடாது என்று நினைத்து, வலியினால் கண்களில் நீர் வந்தாலும் அதைத் துடைத்துக்கொண்டு சமாளித்தான் கார்த்திக்.

சிறிது நேரத்தில் சீட் பெல்ட்டை கழற்றி விடலாம் என்று விமானத்தில் அறிவிப்பு வந்தது. காந்தி ஜெயந்தியன்று பல இடங்களிலும் தேடி கிடைக்காமல், கடைசியில் ஒரு சிறு கள்ளுக்கடை திறந்திருப்பதைக் கண்டால் நம் நாட்டு ‘குடி’மக்கள் எப்படி உணர்வார்களோ, அப்படி இந்த அறிவிப்பைக் கேட்டு உணர்ந்தான் கார்த்திக். தன் குலதெய்வத்திற்கு நன்றி கூறிவிட்டு, சீட் பெல்டைக் கழற்ற முயன்றான். அவனுடைய கெட்ட நேரம், சீட் பெல்டைக் கழற்ற முடியவில்லை.  சீட் பெல்டுடன் போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து ஒரு ஏர் ஹோஸ்டஸ் அவனுக்கு உதவ முன்வர, வேண்டாம் என்று ஜம்பமாகக் கூறினான் கார்த்திக்.

போராட்டம் ஆரம்பித்து இருபது நிமிடம் ஆனது. இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவனுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த அயல்நாட்டவர் இந்தப் போராட்டத்தை சற்றும் கவனிக்காமல் தேநீர் (டீ) அருந்திக்கொண்டிருந்தார். ஜாதி, மதம் பாராமல் எல்லா தெய்வத்தையும் வேண்டி, தன் முழுபலத்தை உபயோகப்படுத்தி சீட் பெல்ட்டைக் கழற்ற முயன்றான் கார்த்திக். அடடா என்ன ஆச்சரியம்! சீட் பெல்ட் கழன்று விட்டது. பெருந்துயரத்திலிருந்து மீண்ட கார்த்திக், மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நன்றி கூறி, தனக்குப் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தான். ஐயோ பாவம் அவர். கார்த்திக் தன் முழுபலத்துடன் சீட் பெல்ட்டை கழற்றிய போது, அவனது வலது கை, அவர் அருந்திக்கொண்டிருந்த டீ கோப்பையை தட்டிவிட்டது. யாரையும் தொந்தரவு செய்யாமல், தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த அவரது வெள்ளை சட்டையில் டீ கொட்டியது. சாதாரண ஷர்ட்டை டீ ஷர்ட் ஆக்கிவிட்டான் கார்த்திக். அந்த அயல்நாட்டவரை சமாதானம் செய்ய அவனுக்கு அரை மணி நேரம் ஆனது. இவ்வாறாக தனது அனுபவங்களை நினைத்துக்கொண்டிருந்தான் கார்த்திக். விமானம் சென்னையை வந்தடைந்தது.

தன் மகன், மருமகள், பேரன், பேத்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கார்த்திக்கின் தந்தை சுந்தரம் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இவர்கள் நால்வரையும் கண்ட சுந்தரம், மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, பயணத்தைக் குறித்து கேட்டவாறே தனது கார் அருகே அழைத்துச்சென்றார்.  கார் ஓட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்பதால், காரின் சாவியை கார்த்திக்கிடம் கொடுத்தார் சுந்தரம். அதை ஆர்வத்துடன் வாங்கிக்கொண்ட கார்த்திக், அடையாரில் இருக்கும் தன் வீட்டை நோக்கி காரை ஓட்ட ஆரம்பித்தான்.

வீட்டை வந்தடைந்தனர் ஐவரும். இவர்கள் அனைவரையும் வரவேற்க கார்த்திக்கின் தாய் ஜானகியும், அம்பிகாவின் தந்தை நடராஜனும், தாய் கீதாவும், வீட்டு வாசலுக்கு விரைந்தனர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் கார்த்திக்கின் பெற்றோரும், அம்பிகாவின் பெற்றோரும், பயணத்தைப் பற்றிய வழக்கமான கேள்விகளை கேட்டனர். இரவு உணவை உண்டபின் அனைவரும் உறங்கச் செல்ல, அந்த நாள் இனிதே முடிந்தது.

அடுத்த நாள், தனது நெருங்கிய நண்பர்களான சையது, விஜய் இருவரையும் சந்திக்க, தனது பைக்கில் கிளம்பினான் கார்த்திக். இவர்கள் மூவரும் பள்ளிக்காலத்திலிருந்தே நண்பர்கள். பள்ளியிலும், பின்னர் கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், சிறு வயதில் செய்த சேட்டைகள் ஏராளம்.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த கார்த்திக், சையது, விஜய் மூவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுத்திருந்தனர். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். மூவரும் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தனர். முதல் நாள் என்பதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் (Head of the Department) வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவ மாணவியையும், பொறியியல் படிப்பு முடித்து என்ன ஆகப்போகிறாய் என ஒவ்வொரு வரிசையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.  இறுதியாக, கடைசி வரிசையைப் பார்த்து, “இன்ஜினியரிங் முடிச்சிட்டு நீங்க என்ன ஆகப்போறீங்க?” என்று கேட்டார். அதற்கு கார்த்திக், சையது, விஜய் மூவரும் எழுந்து நின்று, “நாங்க மூணு பேரும் இன்ஜினியரிங் முடிச்சிட்டு டாக்டர் ஆகப்போறோம்” என சொல்ல வகுப்பறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். இதுபோன்ற பல குரும்புகளைத் தன் அனுபவத்தில் பார்த்திருந்ததால், துறைத்தலைவர், சிறு [புன்னகையுடன் இவர்கள் மூவரையும் உட்காரச் சொல்லிவிட்டு கிளம்பினார். இதுபோல நிறைய சேட்டைகள் செய்தாலும், மூவரும் மிகவும் திறமைசாலிகள் என்பதாலும், படிப்பில் சிறந்து விளங்கியதாலும், கல்லூரி ஆசிரியர்கள் இவர்கள் செய்த எதையும் பொருட்படுத்தியதில்லை.

வெகுநாட்களுக்குப்பிறகு தன் நண்பர்களைப் பார்க்கப்போகிறோம் என்ற குதூகலத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோது, கார்த்திக்கின் செல் ஃபோனில் ஏதோ ஒரு அழைப்பு வந்தது. டிராஃபிக் போலீஸ் இல்லாத இடம் என்பதால் வண்டியை நிறுத்தாமல் செல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். விஜயிடமிருந்து வந்த அந்த அழைப்பை ஏற்று பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் கார்த்திக். ஒரு டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்துக்கொண்டிருந்ததால் வண்டியை நிறுத்தினான். சிவப்பிலிருந்து மஞ்சள் வந்து பச்சை விளக்கு எரிவதற்குள் அவசரமாக வண்டியை கிளப்பினான் கார்த்திக். இவனைப்போலவே டிராஃபிக் சிக்னலை மதிக்காத லாரி ஒன்று மிகவேகமாக இவன் எதிரில் வந்துக்கொண்டிருந்ததைப் பார்க்காததால், கார்த்திக்கின் வண்டி அந்த லாரியை மோதியது. செல் ஃபோனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிக்கொன்டிருந்ததால், எதிரில் வந்த லாரியை அவன் கவனிக்கவில்லை. மோதிய வேகத்தில், வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கார்த்திக், தன் முதுகு தரையில் படும்படி கீழே விழுந்தான். பின் மண்டையிலும் பலத்த அடிபட்டதால் மயக்கமடைந்த கார்த்திக்கை, சாலையில் இருந்தவர்கள், வேகவேகமாக ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட கார்த்திக்கின் குடும்பத்தினர், சையது மற்றும் விஜய் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். கார்த்திக்கைப் பரிசோதித்தபின் “பயப்படுவதற்கு ஒண்ணுமில்ல. அடிபட்டதுல மயக்கம் வந்திருக்கு. சில மாத்திரைகளை கொடுக்கறேன். அதை கொடுங்க. சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் கூற, அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அன்று மாலை கார்த்திக்கை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வரும் வழியில் கார்த்திக்கிடம் அஞ்சலி, “எப்படி அப்பா உங்களுக்கு இப்படி ஆச்சு?” என்று கேட்டாள். அதற்கு கார்த்திக், “செல் ஃபோன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டினேன். கிரீன் சிக்னல் வர்றதுக்கு முன்னாடி வண்டியை வேகமா ஓட்ட ஆரம்பிச்சேன். அதனாலதான் இப்படி” என்று பதில் அளித்தான். “இப்படி செய்யறது தப்புன்னு நீங்கதானே சொன்னீங்க. இப்படி செஞ்சா போலீஸ் அங்கிள் பிடிச்சிட்டு போயிடுவாங்கன்னு சொன்னீங்களே?” என்று கேட்டாள் அஞ்சலி. அதற்கு கார்த்திக், “அந்த இடத்துல போலீஸ் அங்கிள் இல்லம்மா. அதனாலதான் பரவாயில்லைன்னு அப்படி செஞ்சேன்” என்று கூறினான். இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரவிந்தன், “தப்பு செஞ்சா பிடிக்கறதுக்கு, தடுக்கறதுக்கு ஆள் இல்லன்னா தப்பு செய்யலாமா அப்பா?” என்று கேட்டு முடிக்கும்போது தங்கள் வீட்டை வந்தடைந்தனர். இதைக்கேட்டு திகைத்துப்போன கார்த்திக், தன்னை சுதாரித்துக்கொண்டு, “தப்பான விஷயம் எதையும் செய்யக்கூடாது அரவிந்த். செஞ்சா எனக்கு நடந்த மாதிரிதான் நடக்கும்” என்று தன் தவறை உணர்ந்தவனாகக் கூறினான்.

ஒரு வாரம் ஆனது. முற்றிலும் குணமடைந்திருந்தான் கார்த்திக். தன் குடும்பத்தினரை காரில் அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தான். சாலையில் டிராஃபிக் சிக்னலில் சிவப்பிலிருந்து மஞ்சள் விளக்கு எரிய, வண்டியை நிறுத்தினான். சில நொடிகளில் மஞ்சள் விளக்கு அணைந்து, பச்சை விளக்கு எரிய, வண்டியைக் கிளப்பினான்.