Saturday, 28 December 2013

சிறுகதை 011 - அவர்களும் குழந்தைகளே (May - June 2013)

வேலூர் காந்தி நகரில் இருக்கும் தன் வீட்டு வாசலில், தன் ஒன்றரை வயது மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில். மழலைப்பேச்சில் மனம் உருகி, முகம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது செந்திலுக்கு.

“இங்க பாரு தேஜஸ், அப்பா சொல்லு, அப்பா சொல்லு” என்று செந்தில் சொல்ல, அதற்கு அந்த குட்டிப்பாப்பா தேஜஸ்,“வா, வா” என்று சொல்லிக்கொண்டிருந்தான். நடுநடுவில் அர்த்தம் புரியாத சில சொற்களும் கலந்து வந்துக்கொண்டிருந்தன.

வெகு நேரம் மன்றாடிக்கொண்டிருந்தான் செந்தில். அனாலும் அவன் எதிர்பார்த்த அப்பா என்ற அந்த ஒரு வார்த்தை மட்டும் வரவேயில்லை.

எப்படியாவது அவன் வாயிலிருந்து அப்பா என்ற வார்த்தையை வரவழைத்துவிட வேண்டுமென்று போராடிக்கொண்டிருந்தான். அவன் என்ன செய்வான் பாவம், ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் தன் குடும்பத்துடன் செலவிட முடிகிறது அவனால்.

செந்திலின் தந்தை மாதவனும், தாய் மீனாவும் அவனுடன்தான் இருந்து வருகின்றனர்.மாதவனுக்கு எழுபது வயது ஆகிறது. மீனாவுக்கு அறுபத்தைந்து வயதாகிறது.

மாதவன் தன்னுடைய முப்பத்தி மூன்றாவது வயதில் ஆரம்பித்த இந்த ஜவுளி வியாபாரம், இன்று ஒரு ஜவுளி சாம்ராஜ்யம் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் மாதவனுடைய நேர்மையும், உழைப்பும் என்றாலும், கடந்த எட்டு வருடங்களாக இந்த சாம்ராஜ்யத்தை வழிநடத்தி, சிறப்பாக வளர்த்ததில் செந்திலுக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

செந்திலின் மனைவி ரேவதி.வீட்டு வேலைகளை செய்ய பணியாட்கள் இருந்தாலும், எல்லாவற்றையும்சரிபார்த்து, தேஜஸையும் பாதுகாத்து, தன் மாமனார், மாமியாரையும் கவனித்து வருகிறாள். ஆனால் இந்த எதையுமே அவள் ஒரு பாரமாக நினைக்காமல், விருப்பத்தோடு செய்து வருவதால் குடும்பத்தில் எப்போதுமே அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் கடையை தன் மேனேஜரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது செந்திலின் வழக்கம். அந்த மாதிரிதான் இன்று தன் மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில்.

அரை மணி நேரமாக செந்தில் போராடிக்கொண்டிருந்தாலும், அப்பா என்ற வார்த்தையை மட்டும் தேஜஸ் சொல்லவேயில்லை. “என்னடா தேஜஸ், அப்பான்ற வார்த்தைய மட்டும் சரியா சொல்ல மாட்டேங்கிற? என்ன பண்ணா நீ சரியா பேசுவன்னு தெரியலஎன்று தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான் செந்தில்.

அப்போது மாதவன் அங்கு வந்து செந்திலிடம்செந்தில், கிரீம் பிஸ்கெட் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு சாப்பிடணும்போல இருக்கு. நீ வெளிய போனா, கொஞ்சம் வாங்கிட்டு வர்றியாப்பா?” என்றார். அதற்கு செந்தில், “சரிப்பா, நான் வெளிய போயிட்டு வரும்போது வாங்கிட்டு வர்றேன்என்றான்.

வயது முதிர்ச்சியின் காரணமாக மாதவனுக்கு செந்தில் என்ன சொன்னான் என்பது சரியாக கேட்கவில்லை. “என்ன செந்தில், இன்னிக்கு கொஞ்சம் கிரீம் பிஸ்கெட் வாங்கிட்டு வர்றியாப்பா? சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. ஆசையா இருக்குஎன்றார் மாதவன்.

அதான் சொன்னேனே அப்பா, நான் வாங்கிட்டு வர்றேன்னு. சும்மா ஏன் அதையே திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க? கொஞ்ச நேரம் நான் என் பையனோட விளையாடும்போது தான் இந்த மாதிரி எல்லாம் உங்களுக்குத் தோணும்என்று கோபத்துடன் உரத்த குரலில் சொன்னான். இதைக்கேட்ட மாதவனின் முகம் வாடியது.

மாதவன் வருத்தத்துடன்தன் அறைக்குள்ளே நுழையும்போது, அங்கு இருந்த மீனா அவரைப் பார்த்து, “இதுக்குத்தான் செவுட்டு மிஷின் வாங்கிக்கோங்கன்னு நான் அப்பவே சொன்னேங்க, நீங்கதான் அதப் போட்டா ஏதோ உடம்புல ஊனம் இருக்கற மாதிரி இருக்கும், வேணாம்னு சொல்லிட்டீங்கஎன்று சொன்னார். அதற்கு மாதவனிடம் இருந்து வந்த பதில் வெறும் மௌனம்தான். மீனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

சிறிது நேரத்தில் ரேவதி வீட்டு வாசலுக்கு வந்தாள். “என்னங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதோ சத்தம் கேட்டுச்சே. என்னாச்சு? ஏன் கத்தினீங்க?” என்றாள். அதற்கு செந்தில், “எங்க அப்பாதான். கிரீம் பிஸ்கெட் வேணுமாம். அதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்தறாருஎன்றான். குரலில் ஒரு கோபம் கலந்து இருப்பதை உணர முடிந்தது ரேவதியால்.

இதுல என்னங்க தப்பு இருக்கு? எதனால கடுப்பேத்தறாருன்னு சொல்றீங்க?”

ஒரு விஷயத்த இத்தன தடவை சொல்லணுமா? முதல் தடவை அவர் சொன்னப்போவே நான் சரின்னு சொல்லிட்டேன். திரும்ப திரும்ப அதையே சொல்லணுமா?”

, அதான் கோபிச்சுக்கிட்டீங்களா?”

ஆமாம், பின்ன கோபம் வராதா? எனக்கு என்ன காது செவுடா?”

சரி, இப்போ தேஜஸ் கிட்ட எதையோ சொல்லி அலுத்துக்கிட்டு இருந்தீங்களே? என்ன அது?”

அதை ஏன் கேக்கறே? அரை மணி நேரமா அவனோட போராடிக்கிட்டு இருக்கேன். அப்பான்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறான். அந்த வார்த்தையை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் உளறிட்டு இருக்கான்”. செந்திலின் குரல் சற்று சகஜ நிலைக்கு மாறியிருந்தது.

தேஜஸ் கிட்ட பேசும்போது மட்டும் எப்படி இவ்ளோ பொறுமை வந்தது உங்களுக்கு?” என்ற ரேவதியின் கேள்விக்கு செந்திலிடம் பதில் இல்லை. தொடர்ந்து பேசினாள் ரேவதி.

நீங்க தேஜஸ் கிட்ட பேசின மாதிரி தானே உங்க அப்பாவும் நீங்க குழந்தையா இருந்தப்போ பேசியிருப்பார்என்றாள் ரேவதி. அதற்கு செந்தில், “ஆமாம், ஏன்னா அப்போ நான் சின்ன குழந்தை. எதுவும் சரியா புரியாது. அதனாலதான் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருந்திருக்கும்என்று தன் செயலை நியாயப்படுத்த முயற்சித்தான்.

“அதேமாதிரிதான் வயசான பெரியவங்களுக்கும் எல்லாமே உடனே புரிஞ்சிடாது, சரியா நடக்க முடியாது, பாக்க முடியாது, கேட்க முடியாது. ஏற்கனவே உங்க அப்பாவுக்கு காது சரியா கேட்க மாட்டேங்குது, பாவம்.இது உங்களுக்கும் தெரியும். இந்த நேரத்துல நீங்க அவரோட நிலைமையை புரிஞ்சு நடந்துக்க வேணாமா? நம்மள விட்டா அவங்களுக்கு வேற யார் இருக்காங்க?”

தான் செய்த தவறு புரிந்தது செந்திலுக்கு. “ஆமா ரேவதி. நீ சொன்னது சரிதான். நான்தான் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன். நான் போய் முதல்ல கிரீம் பிஸ்கெட் வாங்கிட்டு வர்றேன். நீ தேஜஸைப் பாத்துக்கோஎன்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.


முதியவர்கள் உடம்பாலும், மனதாலும் குழந்தைகளே என்பது புரிந்தது செந்திலுக்கு.

சிறுகதை 010 - ஹீரோ (April 2013)

வெற்றி நாயகன் தேவா என்றால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோ. அவர் இது வரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 50 படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட். இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் துவக்க விழாவுக்கே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள். அவ்வளவு பிரபலம்.

ஒரு படத்தில் சிறைக்கைதி வேடம் அவருக்கு. அந்தப் படம் வெளிவந்த போது, படம் வெளியான ஒவ்வொரு திரையரங்கத்திலும் சிறைக்கைதி உடையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இவர்களைப் பார்த்து, உண்மையான கைதிகள்தான் தப்பித்து இங்கு வந்துவிட்டார்களோ என்று காவல்துறைக்கு சந்தேகமே வந்துவிட்டது. அப்படியொரு கூட்டம்.

இதே போல், ஒரு படத்தில் கான்ஸ்டபிள் வேடம் அவருக்கு. அவரது ரசிகர்கள் கான்ஸ்டபிள் உடையணிந்து திரையரங்கத்தில் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர்.

அந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இனி எந்த ஒரு படத்திலும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது என்று முடிவு எடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்கவே முடியாது.

என்னதான் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவரிடம் கொஞ்சம் கூட திமிர், ஆணவம் கிடையாது. திரைத்துறையில் நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இன்று வரை இருக்கிறார். எல்லோரிடமும் மரியாதையோடு பேசுவார். குரல் உயரவே உயராது. பண்பானவர், எளிமையானவர். முடிந்த வரை எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று எண்ணி, தனக்குத் தெரிந்த வகையில் உதவி செய்வார்.

எப்போது வேண்டுமானாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்கலாம். வீட்டுக்கு ரசிகர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டுதான் மறு வேலை. தலைவாழை விருந்தே இருக்கும். ரசிகர்களுடன் சமமாக உட்கார்ந்து அவரும் சாப்பிடுவார்.

இப்படி தேவாவின் தீவிர ரசிகர்களில் ஒருவன் முருகன். திருச்சி மாம்பழச்சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான். 19 வயது தான் ஆகிறது. படிப்பில் ஆர்வம் இருந்தாலும், தன் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்காமல் வேலை பார்த்து வருகிறான்.

இவன் தாய் வீட்டு வேலை செய்பவர். தந்தை ஒரு கூலித் தொழிலாளி. 8 வருடங்களுக்கு முன் குடிபோதையில் சாலையைக் கடக்க முயற்சித்தபோது விபத்து ஏற்பட்டு இறந்தார். இரண்டு தங்கைகள் வேறு முருகனுக்கு. அன்றிலிருந்து படிப்பை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு வேலை செய்து, தன்னால் முடிந்த அளவுக்கு குடும்ப சுமையைத் தன் சிறிய தோள்களில் தாங்கிக்கொண்டு இருக்கிறான்.

வேலை நேரத்தில் மிகவும் கடினமாக உழைப்பான் முருகன். டீ, காபி குடிக்கும் நேரத்திலும், தான் வேலை பார்க்கும் கடைக்கு வந்திருக்கும் வண்டிகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். இதனாலேயே கடையின் முதலாளி வேலுவுக்கு முருகனை ரொம்பப் பிடிக்கும்.

எப்படியாவது தொழில் கற்றுக்கொண்டு தானும் ஒரு மெக்கானிக் கடை திறக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசைகளில் ஒன்று. ஆனால் அவனுடைய கனவு எல்லாம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது தேவாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கனவு.

அன்று காலை 10 மணி. வழக்கம்போல் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தான் முருகன். அப்போது கடைக்கு வந்த வேலு முருகனிடம், “டேய் முருகா, இங்க வாடா என்று முருகனைக் கூப்பிட்டான்.
“ஒரு ரெண்டு நிமிஷம் முதலாளி. இந்த டி.வி.எஸ் 50 ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. என்னன்னு பாத்துட்டு வந்துடறேன் என்றான் முருகன்.

“பரவாயில்ல முருகா, ஒரு நிமிஷம் அந்த வண்டிய விட்டுட்டு இங்க வா. உனக்கு ஒரு முக்கியமான, சந்தோஷமான விஷயம் சொல்லணும்

வண்டியை கடையின் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு வேலுவிடம் சென்றான்.

“சொல்லுங்க முதலாளி. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னீங்களே?

“சந்தோஷமான விஷயம்னு சொன்னேன்ல. என்ன விஷயம் சொல்லு பார்ப்போம்?

சிறிது நேர யோசனைக்குப்பிறகு முருகன். “தெரியல முதலாளி. நீங்களே சொல்லிடுங்களேன் என்றான்.

“சொன்னா கடையை விட்டுட்டு ஓடிட மாட்டியே? உன்னை நம்பி சொல்லலாமா?

“என்ன முதலாளி இப்படி சொல்லிட்டீங்க? உங்களை விட்டுட்டு நான் எங்க போக முடியும்? எனக்கு தொழில் கத்து கொடுத்தவர் நீங்க தானே. அப்படியெல்லாம் செய்வேனா?

“சரி உன்னை நம்பி சொல்றேன். தேவா வந்திருக்கார் நம்ம ஊருக்கு. தலைவா ஹோட்டல்ல தான் தங்கியிருக்கார். தெரியுமா?

“எந்த தேவா பத்தி சொல்றீங்க முதலாளி? நம்ம கடையில ஏதாவது வண்டியை ரிப்பேருக்கு கொடுத்துட்டு போனவரா அவரு?

“டேய் முட்டாப்பயலே, சினிமா ஹீரோ தேவா டா. உனக்குக்கூட ரொம்பப் பிடிக்குமே. அந்த தேவா

இதைக் கேட்டவுடன் ஒரு இனம்புரியா சந்தோஷம் முருகனுக்கு. முகம் மலர்ந்தது.

“அட, என்ன முதலாளி சொல்றீங்க? தேவா சார் இங்க வந்திருக்காரா? நம்மூருல ஷூட்டிங்கா? சூப்பர் முதலாளி நீங்க குரலில் ஒரு ஆச்சரியம் கலந்த உற்சாகம்.

“ஆமாம் டா. நம்ம ஏரியாவுல தான் ஷூட்டிங்காம். ஆனா நாளைக்கு கிளம்பறாராம். எனக்குத் தெரிஞ்ச போலீஸ்கார் ஒருத்தர் சொன்னார்

“ஐய்யய்யோ, அப்போ நாளைக்கே நம்ம ஊர விட்டு போயிடுவாரா? அவரை நான் எப்படியாவது பாக்கணும்னு இருந்தேனே. குரலில் ஒரு சோகம்.

“கவலைப்படாதே முருகா. இன்னிக்கு போய் பாத்துட்டு வா. கடையை நான் பாத்துக்கறேன்

முருகன் கண்ணில் ஆனந்தம். “ரொம்ப நன்றி முதலாளி. தேவா சார் படம் போட்ட சட்டை ஒன்னு என் கிட்ட இருக்கு. அதை எடுத்து போட்டுக்கிட்டு, அப்படியே அவரை பாத்துட்டு வந்துடறேன் முதலாளி என்றான்.

“இந்தா என்னோட வண்டி சாவி. அதுல போயிட்டு வா. மெதுவா ஓட்டு, ஜாக்கிரதை. சீக்கிரமா வந்துடு என்று தன் யமஹா வண்டியின் சாவியை அவனிடம் கொடுத்தான் வேலு.

வண்டியைக் கிளப்பி நேராக அவன் வீட்டுக்குச் சென்றான் முருகன். தேவா படம் போட்ட மஞ்சள் நிற சட்டையைத் தேடி கண்டுபிடித்து எடுத்து, அதை உடுத்திக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

தேவாவைப் பார்க்கப் போகிறோமே என்ற சந்தோஷத்தில் வண்டியில் சாவியை போடாமல் உதைத்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து தான் விளங்கியது அவனுக்கு. தன் பின்தலையில் லேசாக தட்டிவிட்டு, சாவியை வண்டியில் போட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வழியெல்லாம் தேவாவிடம் என்ன பேசுவது என்பது குறித்து யோசித்தவண்ணம் இருந்தான். தலைவா ஹோட்டல் ஒரு மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல். தன்னை உள்ளே அனுமதிப்பார்களா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. என்ன ஆனாலும் சரி, எப்படியாவது உள்ளே சென்று தேவாவை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

தலைவா ஹோட்டலை நெருங்கினான். ஹோட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேவா வெளியே வருவதைப் பார்த்தான். எங்கே அவரை சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்து, வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதே இருக்கையில் இருந்து எழுந்து, “தலைவா, தலைவா என்று கத்தினான்.

யாரோ தன்னை கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்து தேவா முருகன் வரும் திசையைப் பார்த்தார். தன்னை சந்திக்கத்தான் இப்படி வருகிறான் என்பது புரிந்து முருகன் வரும் திசையை நோக்கி கையசைத்தார்.
ஆனால் அதற்குள் அந்த வண்டியை ஒரு லாரி மோதியது. வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டான் முருகன். தலையில் பலத்த அடி, ஏகப்பட்ட ரத்தம் போயிருந்தது.

அங்கிருந்தவர்கள் உடனே அவனை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவா அவர்களைப் பின்தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு வந்தான். நிறைய ரத்தம் போயிருப்பதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னவுடன், அதற்கான செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாக சொன்னான் தேவா.

உடனடியாக ஆப்பரேஷன் நடந்தது. அந்த நாள் முழுவதும் மயக்கமாகவே இருந்தான் முருகன். வேலுவும், முருகனின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டனர்.

அடுத்த நாள் முருகனுடைய நிலைமை சற்று முன்னேறியிருந்தது. வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தான். ஆனால் தேவாவை சந்திக்க முடியவில்லையே என்ற சோகத்தினால் யாரிடமும் சரியாக பேசவில்லை அவன்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் தேவா. தன்னை நோக்கி தேவா நடந்து வருவதைப் பார்த்த முருகனின் கண்கள் ஈரமானது. தேவா இன்று ஊரை விட்டு கிளம்பியிருக்க வேண்டும், ஆனாலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம். இதனால் தான் முருகன் கண்கள் ஈரமானது.

தேவா தன்னருகில் வந்தவுடன், மெத்தையில் இருந்து எழுந்து நிற்க முயற்சித்தான் முருகன். அவனை படுத்துக்கொண்டே இரு என்று சொல்வது போல் சைகை காட்டினார் தேவா. மெத்தையில் படுத்தபடியே, கைகளைக் கூப்பி, தேவாவுக்கு வணக்கம் சொன்னான் முருகன். ஆனால், சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை அவனுக்கு.

“என்ன முருகா, எப்படி இருக்கீங்க? இப்போ உடம்பு எப்படி இருக்கு? நலம் விசாரித்தார் தேவா.

“தலைவா, என்னால நம்பவே முடியல. நீங்களா இங்க வந்து என்னோட பேசறது? நான் எவ்ளோ கொடுத்து வெச்சிருக்கணும்? கண்ணீர் வழிய சொன்னான் முருகன்.

சிறு புன்னகையுடன், “நானே தான். இப்போ எப்படி இருக்கீங்க? வலி எல்லாம் போயிடுச்சா? என்றார் தேவா.

“உங்கள பாத்து, உங்ககிட்ட பேசிட்டேன்ல. இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு தலைவா. உங்கள பாத்த சந்தோஷத்துல எப்படி பேசறது, என்ன பேசறதுன்னே தெரியல தலைவா

“சரி, நீங்க வண்டியில வரும்போது ஏன் எழுந்து நின்னு கத்திட்டே வந்தீங்க?

“தயவுசெஞ்சு வாங்க, போங்கன்னு பேசாதீங்க. நான் தான் உங்கள அப்படி கூப்பிடணும்

“சரி, அப்படியே கூப்பிடறேன் இனிமேல். சந்தோஷமா?

“நன்றி தலைவா. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்களோட ‘நாளை உனது படத்துல நீங்க சொல்லுவீங்களே, சிகரெட், சாராயம் எல்லாம் விட்டுடுன்னு. அந்த படத்தைப் பார்த்ததுல இருந்து நான் சிகரெட் பிடிக்கறதையே விட்டுட்டேன்

“வெரி குட். சரி, நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே? வண்டியில வரும்போது ஏன் எழுந்து நின்னு கத்திட்டே வந்தே? ஏன் ஹெல்மெட் போடலை

“உங்களோட ‘நாளை உனது படத்துல, நீங்க ஹீரோயினப் பாத்துட்டு அப்படித்தான் வருவீங்க. அது அப்படியே மனசுல பதிஞ்சிடுச்சு தலைவா. அதான் அப்படியே வந்திடுச்சு

முருகனின் இந்த வாக்கியத்தைக் கேட்டவுடன் உள்ளூர உறுத்தியது தேவாவுக்கு. தான் செய்வதை மக்கள், குறிப்பாக இளைஞர்கள் செய்கிறார்கள் என்பது புரிந்தது. என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினார் தேவா.

முருகனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் தேவா. அடுத்த நாள் சென்னையில் ஷூட்டிங்க். அடுத்து படமாக்கப்படவேண்டிய காட்சியை விவரித்துக்கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர்.


அப்போது ஒரு காட்சியை அவர் விவரிக்கும்போது, தேவா அதற்கு மறுப்பு தெரிவிப்பது போல் தலையை ஆட்டி, “இல்ல சார், நான் பைக்குல் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வர்றதுதான் கரெக்ட்டா இருக்கும். நாம செய்யறத பாத்து, பல பசங்க அதை அப்படியே செய்யறாங்க. அதனால எதையுமே இனிமே ஒழுங்கா, கரெக்ட்டா செய்யணும்னு நினைக்கிறேன். என்னால யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும், பாதிப்பும் வரக்கூடாது சார் என்றார். இயக்குனரும் அதை ஆமோதிக்க, அடுத்த சில நிமிடங்களில், ஹெல்மெட் அணிந்து தேவா வண்டி ஓட்டிக்கொண்டு வரும் காட்சி அன்று படமாகியது. தேவாவின் இந்த படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்று சொல்லவா வேண்டும்!

சிறுகதை 009 - மெமரி கார்ட் (March 2013)

விமல் ஸ்போர்ட்ஸ் என்றால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அத்துப்படி. அங்கு எல்லா வகையான விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். இரண்டு கிரிக்கெட் பேட்டும், ஐந்து டென்னிஸ் பந்துகளும் வாங்குவதற்கு அந்த கடைக்குச் சென்றனர் திலீப்பும், கிரியும்.

“கிரிக்கெட் பேட், டென்னிஸ் பால் வேணும் என்று அந்த கடையில் வேலை பார்ப்பவரிடம் சொன்னான் திலீப். “எந்த ரேட்ல வேணும் தம்பி? என்றார் அந்த கடைக்காரர். “ஒரு முன்னூறு, நானூறு ரேஞ்சுல காமிங்க அண்ணா என்றான் திலீப்.

கடைக்காரர் இவர்களிடம் ஒரு ஏழு, எட்டு கிரிக்கெட் பேட்களைக் காட்டினார். திலீப் ஒவ்வொரு பேட்டையும் எடுத்து, எடை மற்றும் அகலத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அண்ணா, அப்படியே டென்னிஸ் பாலையும் காமிங்க. ஒரு அஞ்சு பால் வேணும் என்றான் கிரி. “உனக்குப் பின்னாடி இருக்கற டப்பாவுல டென்னிஸ் பால் இருக்குது பாரு. எல்லா கம்பெனி பாலும் இருக்கு என்றார் அந்த கடைக்காரர். கிரியும் அந்த டென்னிஸ் பந்துகளை எடுத்து சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

“கிரி, இந்த ரெண்டு பேட் எடுத்துக்கலாம். நீ அஞ்சு டென்னிஸ் பால் எடுத்துக்கோ என்றான் திலீப். “எடுத்தாச்சுடா. நீ பில் போட்டு வாங்கு. நம்ம பசங்க நம்மள நம்ப மாட்டானுங்க என்றான் கிரி. மொத்தம் தொள்ளாயிரம் ரூபாய் ஆகியிருந்தது. வாங்கிய பொருட்களை எல்லாம் ஒரு கிட் பேக்கில் வைத்து, அதற்கான காசைக் கொடுத்து, ரசீதை வாங்கிக்கொண்டு வந்தான் திலீப்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் கிரி, “திலீப், இங்க பாருடா என்று சொல்லி, பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த ஒரு டென்னிஸ் பந்தை எடுத்துக் காண்பித்தான். “டேய், என்னடா இது? எல்லா டென்னிஸ் பாலும் கிட் பேக்குல தான் இருக்கு. இது எங்கயிருந்து வந்தது? சுட்டுட்டியா? என்று கேட்டான் திலீப்.

அதற்கு கிரி, “ஆமாம் டா, டென்னிஸ் பால் எவ்ளோ அதிகமான விலையில விக்கறாங்க. அதான் ஒன்னு சுட்டுட்டேன் என்று தன் செயலை நியாயப்படுத்துபவனாகச் சொன்னான்.

“இப்படியே கடையில இருந்து சுடற எல்லாத்துக்கும் ஒரு சாக்கு சொல்லிட்டே இரு. ஒரு நாள் யார்கிட்டயாவது வசமா மாட்டப்போற. அப்போ தான் உனக்கு புத்தி வரும் என்றான் திலீப். “அதெல்லாம் வர்றப்போ பாத்துக்கலாம். நீ டென்ஷனாகாத என்றான் கிரி.

மாலை விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் கிரி. அவனுடைய அம்மா, “கிரி, உன் காலேஜ் ஃப்ரெண்ட் சிவா வந்திருந்தான். உங்க ஜூனியர்ஸ்க்கு நீங்க ஏதோ பார்ட்டி கொடுக்கறீங்களாமே. அதுக்கு உன்னோட டிஜிட்டல் கேமரா வேணும்னு கேட்டான். நாளைக்கு உன்ன காலேஜுக்கு எடுத்துட்டு வரச் சொன்னான் என்றார்.

அவசர அவசரமாக அவனுடைய கேமராவைத் தேடிக் கண்டுபிடித்து, அது சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தான் கிரி. கேமராவை ஆன் செய்ததும், அதனுள் பொருத்தப்பட்டிருந்த மெமரி கார்டில் இடம் இல்லை என்று காட்டியது. “அம்மா, மெமரி கார்ட்ல ஸ்பேஸ் இல்ல. நான் போய் வேற மெமரி கார்ட் வாங்கிட்டு வர்றேன் என்று சொல்லி வெளியே வந்தான்.

சற்று தொலைவில் ஒரு எலக்டிரானிக்ஸ் கடை இருந்தது. அங்கு போய் 8 GB மெமரி கார்ட் வேண்டுமென்று கேட்டான் கிரி. கடைக்காரரும் அவருக்குப் பின்னால் இருந்த ஷோக்கேஸில் இருந்து மெமரி கார்ட்களை எடுத்து மேஜையில் வைத்தார்.

மேஜையில் இருந்தவை எல்லாம் உயர்தர மெமரி கார்டுகள். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கிரி. அந்த குவியலுக்கு அடியில் ஒரே ஒரு மெமரி கார்ட் மட்டும் அட்டை இல்லாமல் அப்படியே இருந்ததை அவன் கவனித்தான்.

அதை அப்படியே கடைக்காரருக்குத் தெரியாமல் கைக்குள் அடக்கி வைத்துக்கொண்டு மற்ற கார்டுகளை பார்ப்பது போல் ஒவ்வொரு கார்டாக எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான். மெமரி கார்டின் குறைந்தபட்ச விலை என்ன என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு, பிறகு வந்து வாங்கிக்கொள்வதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டுக்கு வந்து அவனுடைய டிஜிட்டல் கேமராவை எடுத்து அதனுள் இந்த மெமரி கார்டைப் பொருத்தி, கேமராவை ஆன் செய்தான் கிரி. அந்த மெமரி கார்டில் 8 GB காலியாக இருப்பதாக காட்டியது கேமரா. காசு செலவு செய்யாமல் ஒரு மெமரி கார்ட் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான்.

கேமரா சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதிக்க, சில புகைப்படங்களை எடுக்கு முடிவு செய்தான். அதற்காக, தன் வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றான்.

தோட்டத்தில் சுற்றிமுற்றிப் பார்த்தான். எதை படம் பிடிப்பது என்பது தெரியவில்லை அவனுக்கு. அப்போது, சுவர் ஓரத்தில் இருந்த ரோஜா செடியில் ஒரு அழகிய சிவப்பு நிற ரோஜா பூத்திருப்பதைப் பார்த்தான். அதை படம் பிடித்துப் பார்ப்போம் என்று எண்ணி அந்தச் செடிக்கு அருகில் சென்றான்.

கேமராவை கண்ணுக்கு அருகே வைத்து அந்த ரோஜாப்பூவை ஃபோக்கஸ் செய்து ஒரு க்ளிக் செய்தான். உடனே அந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்கு கேமராவில் உள்ள டிஸ்ப்ளே பட்டனை அழுத்தினான். இவன் எடுத்த அந்த ரோஜாப்பூவின் படம் ஸ்கிரீனில் வந்தது. நேரில் பார்ப்பது போல இருந்தது அந்தப் படத்தைப் பார்த்தால். அவ்வளவு தத்ரூபமாக வந்திருந்தது அந்த புகைப்படம்.

கேமரா இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது, மெமரி கார்டும் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டு வீட்டுக்குள் செல்ல திரும்பினான் கிரி. ஆனால் ஏதோ நடந்ததைப் போல ஒரு நொடி நின்றுவிட்டு, மீண்டும் அந்த ரோஜாச் செடியைப் பார்த்தான். தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

அவன் புகைப்படம் எடுத்த அந்த ரோஜாப்பூ இப்போது அந்த செடியில் இல்லை. கீழே எங்காவது விழுந்திருக்கிறதா என்று தேடினான். கீழே எங்கும் இல்லை. சற்றே மிரண்டு போனான். கேமராவில் அந்தப் புகைப்படம் இன்னும் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை பார்த்தான். அதில் அந்தப் புகைப்படம் அப்படியே இருந்தது.

அந்த ரோஜாப்பூவுக்கு என்னானது என்று புரியவில்லை. என்ன செய்வது என்று கிரிக்கு தெரியவில்லை. கேமராவில் உள்ள பட்டன்களை ஒவ்வொன்றாக அழுத்திப்பார்ப்பதும், அந்த செடியைப் பார்ப்பதுமாக இருந்தான்.

கேமராவில் உள்ள பிரிண்ட் பட்டனை அழுத்தி அந்த ரோஜாச்செடியைப் பார்த்தான். என்ன ஆச்சர்யம்! அந்த ரோஜாப்பூ, முன்பிருந்த இடத்தில் இப்போது மீண்டும் தோன்றியது. எதுவும் நடக்காதது போலவே முன்பு எப்படி இருந்ததோ, அதே மாதிரி இப்போது இருந்தது அந்த ரோஜாப்பூ. நம்பமுடியவில்லை அவனால்.

இன்னும் கொஞ்சம் பரிசோதித்துப் பார்ப்போம் என்று இப்போது அந்த செடியில் உள்ள வேறு ஒரு ரோஜாப்பூவை படம் எடுத்தான். அந்த பூவும் செடியிலிருந்து மறைந்தது. இப்போது அந்த கேமராவில் அந்த படத்தைப் பார்த்து, கேமராவில் உள்ள டெலீட் பட்டனை அழுத்தினான். அந்தப் படம் அழிந்தது. மெமரி கார்டிலிருந்து மட்டுமல்ல, அந்த செடியிலிருந்தும் கூட. திகைத்துப் போனான்.

மீண்டும் அந்த எலக்டிரானிக்ஸ் கடைக்குச் சென்று, குறைந்த விலையில் ஒரு மெமரி கார்ட் வாங்கினான். ஏற்கனவே இருந்த அந்த மெமரி கார்டை கேமராவில் இருந்து எடுத்துவிட்டு, இப்போது அவன் வாங்கி வந்திருந்த அந்த புதிய மெமரி கார்டைப் பொருத்தி, கேமராவை ஆன் செய்தான்.

மீண்டும் அதே ரோஜாப்பூவை படம் எடுத்தான். ஆனால் அந்த செடிக்கும், பூவுக்கும் ஒன்றும் ஆகவில்லை. பூ, செடியில் அப்படியே இருந்தது. அவன் முதலில் எடுத்துவந்த அந்த மெமரி கார்டுக்குத்தான் ஒரு விதமான சக்தி இருக்கிறது என்பது புரிந்தது அவனுக்கு. மிகப்பெரிய வரம் கிடைத்தது போல இருந்தது அவனுக்கு.

அன்று முதல் அவனுடைய நடத்தை மாறியது. திமிர் பிடித்தவனாக, எதையும் பெரிதும் பொருட்படுத்தாதவனாக மாறினான். ஒருவித கர்வம் தோன்றியது அவனுக்குள். அந்த மெமரி கார்டின் சக்திக்கு அடிமையானான். அதுவே அவனை இயக்கத் தொடங்கியது.

கல்லூரியில் தன்னைப் பகைத்துக்கொண்டவர்களை எல்லாம் வரிசையாக இந்த மெமரி கார்ட் பொருத்தப்பட்ட கேமராவில் படம் பிடித்து, அந்த படங்களை அழிக்க ஆரம்பித்தான்.

இதனால் அந்த கல்லூரியில் காணாமல் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உயிரோடு இருந்தால்கூட அவர்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை செத்திருந்தாலும், சடலங்கள் கிடைக்கப்படலாம். ஆனால் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து, அழிந்து போனவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்.

அன்று ஒரு நாள். கல்லூரியில் அவர்களுடைய வகுப்பறையில் உட்கார்ந்திருந்தனர் சிவா, கிரி மற்றும் திலீப். அப்போது கிரியின் மொபைல் ஃபோனுக்கு அவனுடைய கேர்ள்ஃப்ரெண்டிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மொபைல் ஃபோனை எடுத்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே சென்று பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது திலீப் சிவாவிடம், “டேய் சிவா, என்ன ஒரு ஃபோட்டோ எடுடா. ஃபேஸ்புக்ல ப்ரொஃபைல் அப்டேட் பண்ணணும் என்றான். அதற்கு சிவா, “கேமரா எங்கடா இருக்கு. மொபைல் ஃபோன்ல இருக்கற கேமரா தான் இருக்கு. அதுல எடுக்கட்டுமா? என்றான்.

“கிரி பேக்ல ஒரு கேமரா இருக்கும் பாரு. அதுல எடு என்றான் திலீப். கிரியின் பேக்கிலிருந்து அவனுடைய கேமராவை எடுத்து திலீப்பை படம்பிடிக்க கேமராவில் பட்டனை அழுத்தும்போது சரியாக அந்த நேரத்தில் கிரி உள்ளே வந்தான்.

“டேய் சிவா, என்னடா பண்ற? கேமராவ எடுக்காதடா என்று கத்திக்கொண்டு  கிரி உள்ளே ஓடி வருவதற்குள் கிளிக் செய்திருந்தான் சிவா. “ஏண்டா கிரி டென்ஷன் ஆகற. ஒரே ஒரு ஃபோட்டோ தான எடுத்தேன். அதுக்குப்போய் கத்தற என்று சொல்லியபடியே தான் எடுத்த புகைப்படத்தைக் கேமராவில் பார்த்தான்.

அடுத்த நொடி, “ச்சே, க்ளியராவே வரல ஃபோட்டோ என்று சொல்லி அந்த படத்தை அழித்தான் சிவா. பூமியிலுருந்து அழிந்துபோனான் திலீப். ஓவென்று அழ ஆரம்பித்தான் கிரி. நடந்ததையெல்லாம் சிவாவிடம் சொன்னான். கிரியிடம் ஏதேதோ சத்தம் போட்டுவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியே சென்றான் சிவா.

“இவ்ளோ பெரிய கொலைகாரனா நீ என்று சிவா சொன்ன அந்த ஒரு வார்த்தை, கிரியை கிழிப்பது போல் இருந்தது. தன்னிடம் இருக்கும் அந்த மெமரி கார்ட், வரம் அல்ல, சாபம் என்பது புரிந்தது அவனுக்கு.

அந்த மெமரி கார்டை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று நினைத்து நெருப்பில் போட்டுப் பார்த்தான். ஆனால் அந்த மெமரி கார்டுக்கு ஏதும் ஆகவில்லை. அதை கீழே வைத்து, சுத்தியலால் அடி அடி என்று அடித்துப்பார்த்தான். அந்த மெமரி கார்டுக்கு எந்தவொரு சேதமும் ஆகவில்லை.

மெமரி கார்டை தூக்கி எறிந்தால், வேறு யார் கைக்காவது போய்விடும், அதுவும் கெடுதல்தான் என்று முடிவு செய்து, அதை தன்னிடமே பத்திரமாக, யார் கைக்குமே போகாதவாறு வைத்துக்கொள்வது என்று நினைத்தான். அந்த கார்டை ஒரு கவரில் போட்டு, வீட்டிலுள்ள தன் அறையில், தன்னுடைய பழைய துணிகள் வைத்துள்ள கப்போர்டின் மூலையில் வைத்தான்.

தொலைந்தது அந்த மெமரி கார்ட் என்று சற்றே நிம்மதியடைந்தாலும், இத்தனை கொலைகளை செய்திருந்ததால் அவனால் முழுமனதுடன் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியவில்லை. மன நிம்மதி தேடி கோவில் கோவிலாக போக ஆரம்பித்தான்.

அப்படி ஒரு நாள், கிரி கோவில் போயிருக்கும் நேரம். அவனுடைய வீட்டில் வேலை பார்க்கும் ராமு, தன் மகனுடன் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். “அம்மா, உங்க பையனோட பழைய துணிமணி தர்றேன்னு சொன்னீங்களே. அதான் வந்தேன் என்று கிரியின் அம்மாவிடம் சொன்னான் ராமு.

“கொஞ்சம் இரு ராமு. நான் போய் கிரியோட ரூம்ல இருந்து எடுத்துட்டு வர்றேன் என்று சொல்லி, கிரியின் அறைக்குள் சென்றார் அவனுடைய அம்மா. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கிரியின் அறையில் இருக்கும் கப்போர்டில் இருந்த பழைய துணிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்தார்.


“இந்தா ராமு. இது எல்லாமே கிரியோட பழைய துணிதான். எல்லாத்தையும் எடுத்துக்கோ என்று சொல்லி வீட்டுக்கூடத்தில இருந்த ஒரு நாற்காலியில் வைத்தார் கிரியின் அம்மா. ராமு அந்த துணிகளை எல்லாம் எடுத்துத் தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தான். அந்த பழைய துணிகளுக்கு நடுவில் இருந்த அந்த மெமரி கார்டின் பயணம் கொஞ்சம் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

சிறுகதை 008 - முடிவு (January - February 2013)

ரவி வேலையை முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. வீட்டுக்குள் நுழையும்போது, தூங்கிக்கொண்டிருந்த தன் 8 வயது மகன் ராஜாவையும், 5 வயது மகள் மீனாவையும் பார்த்தபடி எதையோ யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

ரவி உள்ளே நுழையும் சத்தத்தைக்கேட்டு அவனுடைய மனைவி சீதா எழுந்து, சமையலறைக்குச் சென்றாள். அவனுக்கு சாப்பாடு எடுத்து தரையில் வைத்தாள். புளிக்குழம்பும், ரசமும் தான் அன்றைய சமையல்.
வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிடுவது ரவியின் வழக்கம். அன்றும் எப்போதும் போல் குளித்துவிட்டு, நீல நிற லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு சாப்பிடுவதற்கு வந்து உட்கார்ந்தான். ஏதோ ஒரு விஷயம் அவனுடைய சிந்தனையைக் கைப்பற்றியிருந்தது.

தட்டில் சாதமும், அதன் மேல் புளிக்குழம்பும் இருந்தது. சாதத்தைப் பிசையத் தொடங்கினான். “என்னங்க இன்னிக்கு எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க? என்ன ஆச்சு இன்னிக்கு உங்களுக்கு?” என்றாள் சீதா. அதற்கு ரவி, “ஒன்னும் இல்ல, எப்பவும்போல தான் இன்னிக்கும். ராஜாவும், மீனாவும் சாப்பிட்டாங்களா? நீ சாப்பிட்டியா?” என்றான்.

அதற்கு சீதா, “சாப்பிட்டோங்க. ராஜா தான் இன்னிக்கும் புளிக்குழம்பான்னு அலுத்துக்கிட்டான்” என்றாள். “நீ புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது செய்ய வேண்டியதுதானே? ஏன் அவங்களுக்கு இதையே சமைச்சு கொடுக்கற?” என்றான் ரவி.

“இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ங்க. அவங்களுக்கு புடிச்ச மாதிரியே சிக்கன், மீன் எல்லாம் தினமும் செஞ்சு போடறேன். இப்ப, மாசாமாசம் உங்களுக்கு வர்ற சம்பளத்துல, அவங்க ரெண்டு பேரோட ஸ்கூல் ஃபீஸுக்கே முக்கால்வாசி போயிடுது. கொஞ்சம் மிச்சம் பிடிச்சா பின்னாடி உதவும்னுதான் இப்ப பாத்து செலவு பண்றேன்” என்றாள் சீதா.

அதற்கு ரவி, “சரி, அசைவ சாப்பாட்ட விடு. அவங்களுக்குப் புடிச்ச உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொரியலாவது செய்யலாம்ல” என்றான். “இன்னிக்கு தேதிக்கு காய்கறி விக்கற விலைல அத வாங்கறதுக்குக்கூட யோசிக்க வேண்டியிருக்குங்க. அதான் வாரத்துக்கு ஒரு தடவ, பத்து நாளைக்கு ஒரு தடவ, அவங்களுக்கு புடிச்சமாதிரி செய்ய வேண்டியிருக்கு. மத்த நாளெல்லாம் கொஞ்சம் பொறுத்துக்கத்தான் வேணும்” என்றாள் சீதா.

சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை கழுவினான் ரவி. “என்னங்க ரசம் சாதம் சாப்பிடவே இல்ல, அதுக்குள்ள கை கழுவிட்டீங்களே” என்றாள் சீதா. அதற்கு ரவி, “வேணாம், பசி இல்ல” என்றான். பாத்திரங்களை ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட்டு சீதா அவளுடைய மகளுக்கு அருகில் தரையில் படுத்தாள்.

ரவி கூடத்தில் பாயை விரித்து கீழே போட்டு அதில் படுத்தான். தன் வலது கையை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு மறுபடியும் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்தான். “சீக்கிரம் தூங்குங்க. நாளைக்கு வேலைக்குப் போகணும். எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க” என்று சீதா சொல்ல, அதற்கு ரவி, “நான் பாத்துக்கறேன், நீ தூங்கு” என்றான்.

கண்களை மூடிக்கொண்டு தூங்க முயர்சித்தான் ரவி. ஆனால் அவனுக்கு தூக்கம் வரவில்லை. ஒருக்களித்து படுத்துப்பார்த்தான். நேரம் அதிகாலை ஒரு மணி ஆகியும் அவனுக்கு தூக்கம் வரவேயில்லை. மனம் கனத்தது. காரணம் அவன் வேலை செய்யும் டாஸ்மாக் கடையில் அன்று நடந்த ஒரு சம்பவம் தான்.

அன்று மாலை எட்டு மணி இருக்கும். வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி இழுப்பவர்கள், கூலித்தொழிலாளிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினர் கடைக்கு வந்து விஸ்கி, பிராண்டி என் திணுசு திணுசாக வாங்கிக்கொண்டு சென்றனர்.

அப்போது ஒரு 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கடைக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பேரைச் சொல்லி அந்த கம்பெனி பிராண்டி வேண்டும் என்று ரவியிடம் கேட்டார். அதற்கு ரவி, “அந்த கம்பெனி பிராண்டி இல்ல. வேற ஒன்னு இருக்கு. வாங்கிக்கறீங்களா?” என்றான்.

அதைக்கேட்டு கோவப்பட்ட அந்த பெரியவர், “என்னய்யா கடை நடத்தறீங்க? நான் தினமும் வந்து இந்த சரக்க வாங்கிட்டு போறவன். அந்த கம்பெனி சரக்கு பாட்டில் ஒன்னு எனக்காகன்னு எடுத்து வெக்கமாட்டீங்களா?” என்று சத்தம் போட்டு தகராறு செய்ய ஆரம்பித்தார். வேறு ஒரு கடையிலிருந்து அந்த முதியவர் கேட்ட சரக்கை வரவழைத்துக் கொடுத்தான் ரவி. இந்த பிரச்சனை தீருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

சிறிது நேரம் ஆனது. “அண்ணே, மூணு பாட்டில் பீர் கொடுங்க. சில்லுனு இருக்கறதா கொடுங்க” என்று ஒரு குரலைக் கேட்டு அந்தப் பக்கம் திரும்பினான் ரவி. தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.

ஏனென்றால், அந்த வார்த்தைகளைச் சொன்னது ஒரு பள்ளி மாணவன். 12, 13 வயது இருக்கும் அவனுக்கு. பள்ளிக்கு செல்லும் மாணவன் ஒருவன் கடைக்கு நேராக வந்து பீர் வாங்குவது அதுவரை அவன் பார்த்திராத ஒன்று. திகைத்துப்போனான்.

“என்னடா வயசு உனக்கு? அதுக்குள்ள பீர் வேணுமா?” என்று அந்த பையனை அதட்டிக்கேட்டான் ரவி. அதற்கு அந்த பையன், “எவ்ளோ வயசா இருந்தா உங்களுக்கு என்ன? காசு கொடுக்கறேன்ல, அதுக்கு நான் கேட்டத கொடுங்க” என்றான்.

இந்த மாதிரி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை ரவி. கோவம் வந்தது அவனுக்கு. “டேய், ரொம்ப திமிரா பேசற நீ. உன் வயசு பசங்களுக்கு எல்லாம் நான் சரக்கு தரமாட்டேன். போய் படிக்கற வேலையப் பாரு” என்றான் ரவி. அதற்கு அந்தப் பையன், “உங்ககிட்ட இருந்து எப்படி வாங்கறதுன்னு எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றான்.

மணி பத்து ஆனது. கடையை மூடி பூட்டிவிட்டு, கடையின் முதலாளியின் வீட்டுக்குச் சென்று சாவியை கொடுத்துவிட்டுத் தன் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் ரவி. வரும் வழியில் அவனை மடக்கினான் அந்தப் பையன், கையில் பீர் பாட்டிலுடன்.

“யோவ், பெரிய பருப்பு மாதிரி இன்னிக்கு பேசின. நீ கொடுக்கலன்னா எனக்கு உன் கடையில இருந்து வாங்கிக்க தெரியாதா? பாத்தியா கையில என்ன இருக்குன்னு?” என்று திமிராக சொன்னான் அந்த பையன். அதற்கு ரவி, “எப்படிடா கிடைச்சுது உனக்கு? யார் கொடுத்தாங்க?” என்று கேட்டான்.

“உன் கடைக்கு எத்தனை பேர் வர்றாங்க. அதுல ஒருத்தன்கிட்ட நாலு பாட்டில் வாங்கினா ஒரு பாட்டில் தர்றதா சொல்லி காசு கொடுத்தேன். அவன் வாங்கிக் கொடுத்த பாட்டில்தான் இது” என்றான். இதைக்கேட்டு திகைத்துப்போன ரவி, “இந்த வயசுலயே குடிக்க ஆரம்பிச்சா அப்பறம் அந்த பழக்கத்தை விடறது ரொம்ப கஷ்டம்டா. தப்பான பாதையில போகாதே” என்றான்.

அதற்கு அவன், “யோவ், நீ பெரிய யோக்கியன் மாதிரி பேசாதே. இவ்ளோ பேச்சு பேசறவன் எதுக்குய்யா அந்த கடையில வேலை பாக்கற? நீ எதுக்குய்யா வர்றவங்களுக்கு சரக்கு பாட்டில் எடுத்து கொடுக்கற. வேற ஏதாவது வேலை பாக்க வேண்டியதுதானே?” என்றான். சுளீரென்று உறைத்தது ரவிக்கு.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து யோசித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். இப்போது இதையே யோசித்துக்கொண்டிருந்ததால் தான் தூக்கம் வரவில்லை ரவிக்கு. சமுதாயம் கெட்டுப்போவதற்குத் தான் உடந்தையாக இருக்கக்கூடாது, அப்படியே நடந்தாலும் அதில் தன் பங்கு இருக்கக்கூடாது என்றும் நினைத்தான். அதே நேரத்தில் உடனடியாக வேறு வேலையிலும் சேர முடியாது என்று நினைத்துக் குழம்பியபடியே படுத்துக்கொண்டிருந்தான்.

காலை 7 மணிக்கு எழுந்தான். ஓரளவு தூங்கியிருந்தான். இன்று முதல் வேலைக்கு போக வேண்டாம் என்றும், வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தான் ரவி. தூங்கி எழுந்து, பாயை சுருட்டிக்கொண்டிருந்தபோது, “அப்பா, ஸ்கூல்ல ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லித்தராங்களாம். அதுக்கு ஆளுக்கு மாசாமாசம் 500 ரூபாய் தரணுமாம்” என்றாள் மீனா.

ரவி மனதில் ஏகப்பட்ட குழப்பம். அவனைப் பொருத்தவரை 500 ரூபாய் என்பது சாதாரண தொகை அல்ல. அதனால் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் இருந்தான். சமுதாயத்துக்காக வேலையை விட்டால் அடுத்து என்ன வேலை செய்வது என்று தெரியவில்லை. தேவையான அளவுக்கு சம்பளம் கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். இதனால் இப்போது இருக்கிற வேலையை விடக்கூடாது என்று கனத்த இதயத்துடன் முடிவு எடுத்தான்.


சமுதாயம் பற்றிய சிந்தனை நல்லதுதான், மிகவும் உயர்வானதும் கூட. ஆனால், குடும்பமா, சமுதாயமா என்ற கேள்வி எழுந்தால் பல பேரது முடிவு குடும்பத்துக்காகத்தான் இருக்கும். ரவி ஒரு சராசரி குடும்பத்தலைவன். அதனால் அவனுடைய முடிவு சரியானதே!