Saturday, 28 December 2013

சிறுகதை 009 - மெமரி கார்ட் (March 2013)

விமல் ஸ்போர்ட்ஸ் என்றால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அத்துப்படி. அங்கு எல்லா வகையான விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். இரண்டு கிரிக்கெட் பேட்டும், ஐந்து டென்னிஸ் பந்துகளும் வாங்குவதற்கு அந்த கடைக்குச் சென்றனர் திலீப்பும், கிரியும்.

“கிரிக்கெட் பேட், டென்னிஸ் பால் வேணும் என்று அந்த கடையில் வேலை பார்ப்பவரிடம் சொன்னான் திலீப். “எந்த ரேட்ல வேணும் தம்பி? என்றார் அந்த கடைக்காரர். “ஒரு முன்னூறு, நானூறு ரேஞ்சுல காமிங்க அண்ணா என்றான் திலீப்.

கடைக்காரர் இவர்களிடம் ஒரு ஏழு, எட்டு கிரிக்கெட் பேட்களைக் காட்டினார். திலீப் ஒவ்வொரு பேட்டையும் எடுத்து, எடை மற்றும் அகலத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அண்ணா, அப்படியே டென்னிஸ் பாலையும் காமிங்க. ஒரு அஞ்சு பால் வேணும் என்றான் கிரி. “உனக்குப் பின்னாடி இருக்கற டப்பாவுல டென்னிஸ் பால் இருக்குது பாரு. எல்லா கம்பெனி பாலும் இருக்கு என்றார் அந்த கடைக்காரர். கிரியும் அந்த டென்னிஸ் பந்துகளை எடுத்து சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

“கிரி, இந்த ரெண்டு பேட் எடுத்துக்கலாம். நீ அஞ்சு டென்னிஸ் பால் எடுத்துக்கோ என்றான் திலீப். “எடுத்தாச்சுடா. நீ பில் போட்டு வாங்கு. நம்ம பசங்க நம்மள நம்ப மாட்டானுங்க என்றான் கிரி. மொத்தம் தொள்ளாயிரம் ரூபாய் ஆகியிருந்தது. வாங்கிய பொருட்களை எல்லாம் ஒரு கிட் பேக்கில் வைத்து, அதற்கான காசைக் கொடுத்து, ரசீதை வாங்கிக்கொண்டு வந்தான் திலீப்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் கிரி, “திலீப், இங்க பாருடா என்று சொல்லி, பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த ஒரு டென்னிஸ் பந்தை எடுத்துக் காண்பித்தான். “டேய், என்னடா இது? எல்லா டென்னிஸ் பாலும் கிட் பேக்குல தான் இருக்கு. இது எங்கயிருந்து வந்தது? சுட்டுட்டியா? என்று கேட்டான் திலீப்.

அதற்கு கிரி, “ஆமாம் டா, டென்னிஸ் பால் எவ்ளோ அதிகமான விலையில விக்கறாங்க. அதான் ஒன்னு சுட்டுட்டேன் என்று தன் செயலை நியாயப்படுத்துபவனாகச் சொன்னான்.

“இப்படியே கடையில இருந்து சுடற எல்லாத்துக்கும் ஒரு சாக்கு சொல்லிட்டே இரு. ஒரு நாள் யார்கிட்டயாவது வசமா மாட்டப்போற. அப்போ தான் உனக்கு புத்தி வரும் என்றான் திலீப். “அதெல்லாம் வர்றப்போ பாத்துக்கலாம். நீ டென்ஷனாகாத என்றான் கிரி.

மாலை விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் கிரி. அவனுடைய அம்மா, “கிரி, உன் காலேஜ் ஃப்ரெண்ட் சிவா வந்திருந்தான். உங்க ஜூனியர்ஸ்க்கு நீங்க ஏதோ பார்ட்டி கொடுக்கறீங்களாமே. அதுக்கு உன்னோட டிஜிட்டல் கேமரா வேணும்னு கேட்டான். நாளைக்கு உன்ன காலேஜுக்கு எடுத்துட்டு வரச் சொன்னான் என்றார்.

அவசர அவசரமாக அவனுடைய கேமராவைத் தேடிக் கண்டுபிடித்து, அது சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தான் கிரி. கேமராவை ஆன் செய்ததும், அதனுள் பொருத்தப்பட்டிருந்த மெமரி கார்டில் இடம் இல்லை என்று காட்டியது. “அம்மா, மெமரி கார்ட்ல ஸ்பேஸ் இல்ல. நான் போய் வேற மெமரி கார்ட் வாங்கிட்டு வர்றேன் என்று சொல்லி வெளியே வந்தான்.

சற்று தொலைவில் ஒரு எலக்டிரானிக்ஸ் கடை இருந்தது. அங்கு போய் 8 GB மெமரி கார்ட் வேண்டுமென்று கேட்டான் கிரி. கடைக்காரரும் அவருக்குப் பின்னால் இருந்த ஷோக்கேஸில் இருந்து மெமரி கார்ட்களை எடுத்து மேஜையில் வைத்தார்.

மேஜையில் இருந்தவை எல்லாம் உயர்தர மெமரி கார்டுகள். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கிரி. அந்த குவியலுக்கு அடியில் ஒரே ஒரு மெமரி கார்ட் மட்டும் அட்டை இல்லாமல் அப்படியே இருந்ததை அவன் கவனித்தான்.

அதை அப்படியே கடைக்காரருக்குத் தெரியாமல் கைக்குள் அடக்கி வைத்துக்கொண்டு மற்ற கார்டுகளை பார்ப்பது போல் ஒவ்வொரு கார்டாக எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான். மெமரி கார்டின் குறைந்தபட்ச விலை என்ன என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு, பிறகு வந்து வாங்கிக்கொள்வதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டுக்கு வந்து அவனுடைய டிஜிட்டல் கேமராவை எடுத்து அதனுள் இந்த மெமரி கார்டைப் பொருத்தி, கேமராவை ஆன் செய்தான் கிரி. அந்த மெமரி கார்டில் 8 GB காலியாக இருப்பதாக காட்டியது கேமரா. காசு செலவு செய்யாமல் ஒரு மெமரி கார்ட் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான்.

கேமரா சரியாக வேலை செய்கிறதா என்பதை சோதிக்க, சில புகைப்படங்களை எடுக்கு முடிவு செய்தான். அதற்காக, தன் வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றான்.

தோட்டத்தில் சுற்றிமுற்றிப் பார்த்தான். எதை படம் பிடிப்பது என்பது தெரியவில்லை அவனுக்கு. அப்போது, சுவர் ஓரத்தில் இருந்த ரோஜா செடியில் ஒரு அழகிய சிவப்பு நிற ரோஜா பூத்திருப்பதைப் பார்த்தான். அதை படம் பிடித்துப் பார்ப்போம் என்று எண்ணி அந்தச் செடிக்கு அருகில் சென்றான்.

கேமராவை கண்ணுக்கு அருகே வைத்து அந்த ரோஜாப்பூவை ஃபோக்கஸ் செய்து ஒரு க்ளிக் செய்தான். உடனே அந்த படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்கு கேமராவில் உள்ள டிஸ்ப்ளே பட்டனை அழுத்தினான். இவன் எடுத்த அந்த ரோஜாப்பூவின் படம் ஸ்கிரீனில் வந்தது. நேரில் பார்ப்பது போல இருந்தது அந்தப் படத்தைப் பார்த்தால். அவ்வளவு தத்ரூபமாக வந்திருந்தது அந்த புகைப்படம்.

கேமரா இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது, மெமரி கார்டும் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டு வீட்டுக்குள் செல்ல திரும்பினான் கிரி. ஆனால் ஏதோ நடந்ததைப் போல ஒரு நொடி நின்றுவிட்டு, மீண்டும் அந்த ரோஜாச் செடியைப் பார்த்தான். தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

அவன் புகைப்படம் எடுத்த அந்த ரோஜாப்பூ இப்போது அந்த செடியில் இல்லை. கீழே எங்காவது விழுந்திருக்கிறதா என்று தேடினான். கீழே எங்கும் இல்லை. சற்றே மிரண்டு போனான். கேமராவில் அந்தப் புகைப்படம் இன்னும் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை பார்த்தான். அதில் அந்தப் புகைப்படம் அப்படியே இருந்தது.

அந்த ரோஜாப்பூவுக்கு என்னானது என்று புரியவில்லை. என்ன செய்வது என்று கிரிக்கு தெரியவில்லை. கேமராவில் உள்ள பட்டன்களை ஒவ்வொன்றாக அழுத்திப்பார்ப்பதும், அந்த செடியைப் பார்ப்பதுமாக இருந்தான்.

கேமராவில் உள்ள பிரிண்ட் பட்டனை அழுத்தி அந்த ரோஜாச்செடியைப் பார்த்தான். என்ன ஆச்சர்யம்! அந்த ரோஜாப்பூ, முன்பிருந்த இடத்தில் இப்போது மீண்டும் தோன்றியது. எதுவும் நடக்காதது போலவே முன்பு எப்படி இருந்ததோ, அதே மாதிரி இப்போது இருந்தது அந்த ரோஜாப்பூ. நம்பமுடியவில்லை அவனால்.

இன்னும் கொஞ்சம் பரிசோதித்துப் பார்ப்போம் என்று இப்போது அந்த செடியில் உள்ள வேறு ஒரு ரோஜாப்பூவை படம் எடுத்தான். அந்த பூவும் செடியிலிருந்து மறைந்தது. இப்போது அந்த கேமராவில் அந்த படத்தைப் பார்த்து, கேமராவில் உள்ள டெலீட் பட்டனை அழுத்தினான். அந்தப் படம் அழிந்தது. மெமரி கார்டிலிருந்து மட்டுமல்ல, அந்த செடியிலிருந்தும் கூட. திகைத்துப் போனான்.

மீண்டும் அந்த எலக்டிரானிக்ஸ் கடைக்குச் சென்று, குறைந்த விலையில் ஒரு மெமரி கார்ட் வாங்கினான். ஏற்கனவே இருந்த அந்த மெமரி கார்டை கேமராவில் இருந்து எடுத்துவிட்டு, இப்போது அவன் வாங்கி வந்திருந்த அந்த புதிய மெமரி கார்டைப் பொருத்தி, கேமராவை ஆன் செய்தான்.

மீண்டும் அதே ரோஜாப்பூவை படம் எடுத்தான். ஆனால் அந்த செடிக்கும், பூவுக்கும் ஒன்றும் ஆகவில்லை. பூ, செடியில் அப்படியே இருந்தது. அவன் முதலில் எடுத்துவந்த அந்த மெமரி கார்டுக்குத்தான் ஒரு விதமான சக்தி இருக்கிறது என்பது புரிந்தது அவனுக்கு. மிகப்பெரிய வரம் கிடைத்தது போல இருந்தது அவனுக்கு.

அன்று முதல் அவனுடைய நடத்தை மாறியது. திமிர் பிடித்தவனாக, எதையும் பெரிதும் பொருட்படுத்தாதவனாக மாறினான். ஒருவித கர்வம் தோன்றியது அவனுக்குள். அந்த மெமரி கார்டின் சக்திக்கு அடிமையானான். அதுவே அவனை இயக்கத் தொடங்கியது.

கல்லூரியில் தன்னைப் பகைத்துக்கொண்டவர்களை எல்லாம் வரிசையாக இந்த மெமரி கார்ட் பொருத்தப்பட்ட கேமராவில் படம் பிடித்து, அந்த படங்களை அழிக்க ஆரம்பித்தான்.

இதனால் அந்த கல்லூரியில் காணாமல் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உயிரோடு இருந்தால்கூட அவர்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை செத்திருந்தாலும், சடலங்கள் கிடைக்கப்படலாம். ஆனால் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து, அழிந்து போனவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்.

அன்று ஒரு நாள். கல்லூரியில் அவர்களுடைய வகுப்பறையில் உட்கார்ந்திருந்தனர் சிவா, கிரி மற்றும் திலீப். அப்போது கிரியின் மொபைல் ஃபோனுக்கு அவனுடைய கேர்ள்ஃப்ரெண்டிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மொபைல் ஃபோனை எடுத்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே சென்று பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது திலீப் சிவாவிடம், “டேய் சிவா, என்ன ஒரு ஃபோட்டோ எடுடா. ஃபேஸ்புக்ல ப்ரொஃபைல் அப்டேட் பண்ணணும் என்றான். அதற்கு சிவா, “கேமரா எங்கடா இருக்கு. மொபைல் ஃபோன்ல இருக்கற கேமரா தான் இருக்கு. அதுல எடுக்கட்டுமா? என்றான்.

“கிரி பேக்ல ஒரு கேமரா இருக்கும் பாரு. அதுல எடு என்றான் திலீப். கிரியின் பேக்கிலிருந்து அவனுடைய கேமராவை எடுத்து திலீப்பை படம்பிடிக்க கேமராவில் பட்டனை அழுத்தும்போது சரியாக அந்த நேரத்தில் கிரி உள்ளே வந்தான்.

“டேய் சிவா, என்னடா பண்ற? கேமராவ எடுக்காதடா என்று கத்திக்கொண்டு  கிரி உள்ளே ஓடி வருவதற்குள் கிளிக் செய்திருந்தான் சிவா. “ஏண்டா கிரி டென்ஷன் ஆகற. ஒரே ஒரு ஃபோட்டோ தான எடுத்தேன். அதுக்குப்போய் கத்தற என்று சொல்லியபடியே தான் எடுத்த புகைப்படத்தைக் கேமராவில் பார்த்தான்.

அடுத்த நொடி, “ச்சே, க்ளியராவே வரல ஃபோட்டோ என்று சொல்லி அந்த படத்தை அழித்தான் சிவா. பூமியிலுருந்து அழிந்துபோனான் திலீப். ஓவென்று அழ ஆரம்பித்தான் கிரி. நடந்ததையெல்லாம் சிவாவிடம் சொன்னான். கிரியிடம் ஏதேதோ சத்தம் போட்டுவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியே சென்றான் சிவா.

“இவ்ளோ பெரிய கொலைகாரனா நீ என்று சிவா சொன்ன அந்த ஒரு வார்த்தை, கிரியை கிழிப்பது போல் இருந்தது. தன்னிடம் இருக்கும் அந்த மெமரி கார்ட், வரம் அல்ல, சாபம் என்பது புரிந்தது அவனுக்கு.

அந்த மெமரி கார்டை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று நினைத்து நெருப்பில் போட்டுப் பார்த்தான். ஆனால் அந்த மெமரி கார்டுக்கு ஏதும் ஆகவில்லை. அதை கீழே வைத்து, சுத்தியலால் அடி அடி என்று அடித்துப்பார்த்தான். அந்த மெமரி கார்டுக்கு எந்தவொரு சேதமும் ஆகவில்லை.

மெமரி கார்டை தூக்கி எறிந்தால், வேறு யார் கைக்காவது போய்விடும், அதுவும் கெடுதல்தான் என்று முடிவு செய்து, அதை தன்னிடமே பத்திரமாக, யார் கைக்குமே போகாதவாறு வைத்துக்கொள்வது என்று நினைத்தான். அந்த கார்டை ஒரு கவரில் போட்டு, வீட்டிலுள்ள தன் அறையில், தன்னுடைய பழைய துணிகள் வைத்துள்ள கப்போர்டின் மூலையில் வைத்தான்.

தொலைந்தது அந்த மெமரி கார்ட் என்று சற்றே நிம்மதியடைந்தாலும், இத்தனை கொலைகளை செய்திருந்ததால் அவனால் முழுமனதுடன் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியவில்லை. மன நிம்மதி தேடி கோவில் கோவிலாக போக ஆரம்பித்தான்.

அப்படி ஒரு நாள், கிரி கோவில் போயிருக்கும் நேரம். அவனுடைய வீட்டில் வேலை பார்க்கும் ராமு, தன் மகனுடன் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். “அம்மா, உங்க பையனோட பழைய துணிமணி தர்றேன்னு சொன்னீங்களே. அதான் வந்தேன் என்று கிரியின் அம்மாவிடம் சொன்னான் ராமு.

“கொஞ்சம் இரு ராமு. நான் போய் கிரியோட ரூம்ல இருந்து எடுத்துட்டு வர்றேன் என்று சொல்லி, கிரியின் அறைக்குள் சென்றார் அவனுடைய அம்மா. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கிரியின் அறையில் இருக்கும் கப்போர்டில் இருந்த பழைய துணிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்தார்.


“இந்தா ராமு. இது எல்லாமே கிரியோட பழைய துணிதான். எல்லாத்தையும் எடுத்துக்கோ என்று சொல்லி வீட்டுக்கூடத்தில இருந்த ஒரு நாற்காலியில் வைத்தார் கிரியின் அம்மா. ராமு அந்த துணிகளை எல்லாம் எடுத்துத் தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தான். அந்த பழைய துணிகளுக்கு நடுவில் இருந்த அந்த மெமரி கார்டின் பயணம் கொஞ்சம் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

சிறுகதை 008 - முடிவு (January - February 2013)

ரவி வேலையை முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. வீட்டுக்குள் நுழையும்போது, தூங்கிக்கொண்டிருந்த தன் 8 வயது மகன் ராஜாவையும், 5 வயது மகள் மீனாவையும் பார்த்தபடி எதையோ யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

ரவி உள்ளே நுழையும் சத்தத்தைக்கேட்டு அவனுடைய மனைவி சீதா எழுந்து, சமையலறைக்குச் சென்றாள். அவனுக்கு சாப்பாடு எடுத்து தரையில் வைத்தாள். புளிக்குழம்பும், ரசமும் தான் அன்றைய சமையல்.
வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிடுவது ரவியின் வழக்கம். அன்றும் எப்போதும் போல் குளித்துவிட்டு, நீல நிற லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு சாப்பிடுவதற்கு வந்து உட்கார்ந்தான். ஏதோ ஒரு விஷயம் அவனுடைய சிந்தனையைக் கைப்பற்றியிருந்தது.

தட்டில் சாதமும், அதன் மேல் புளிக்குழம்பும் இருந்தது. சாதத்தைப் பிசையத் தொடங்கினான். “என்னங்க இன்னிக்கு எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க? என்ன ஆச்சு இன்னிக்கு உங்களுக்கு?” என்றாள் சீதா. அதற்கு ரவி, “ஒன்னும் இல்ல, எப்பவும்போல தான் இன்னிக்கும். ராஜாவும், மீனாவும் சாப்பிட்டாங்களா? நீ சாப்பிட்டியா?” என்றான்.

அதற்கு சீதா, “சாப்பிட்டோங்க. ராஜா தான் இன்னிக்கும் புளிக்குழம்பான்னு அலுத்துக்கிட்டான்” என்றாள். “நீ புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது செய்ய வேண்டியதுதானே? ஏன் அவங்களுக்கு இதையே சமைச்சு கொடுக்கற?” என்றான் ரவி.

“இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ங்க. அவங்களுக்கு புடிச்ச மாதிரியே சிக்கன், மீன் எல்லாம் தினமும் செஞ்சு போடறேன். இப்ப, மாசாமாசம் உங்களுக்கு வர்ற சம்பளத்துல, அவங்க ரெண்டு பேரோட ஸ்கூல் ஃபீஸுக்கே முக்கால்வாசி போயிடுது. கொஞ்சம் மிச்சம் பிடிச்சா பின்னாடி உதவும்னுதான் இப்ப பாத்து செலவு பண்றேன்” என்றாள் சீதா.

அதற்கு ரவி, “சரி, அசைவ சாப்பாட்ட விடு. அவங்களுக்குப் புடிச்ச உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொரியலாவது செய்யலாம்ல” என்றான். “இன்னிக்கு தேதிக்கு காய்கறி விக்கற விலைல அத வாங்கறதுக்குக்கூட யோசிக்க வேண்டியிருக்குங்க. அதான் வாரத்துக்கு ஒரு தடவ, பத்து நாளைக்கு ஒரு தடவ, அவங்களுக்கு புடிச்சமாதிரி செய்ய வேண்டியிருக்கு. மத்த நாளெல்லாம் கொஞ்சம் பொறுத்துக்கத்தான் வேணும்” என்றாள் சீதா.

சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை கழுவினான் ரவி. “என்னங்க ரசம் சாதம் சாப்பிடவே இல்ல, அதுக்குள்ள கை கழுவிட்டீங்களே” என்றாள் சீதா. அதற்கு ரவி, “வேணாம், பசி இல்ல” என்றான். பாத்திரங்களை ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட்டு சீதா அவளுடைய மகளுக்கு அருகில் தரையில் படுத்தாள்.

ரவி கூடத்தில் பாயை விரித்து கீழே போட்டு அதில் படுத்தான். தன் வலது கையை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு மறுபடியும் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்தான். “சீக்கிரம் தூங்குங்க. நாளைக்கு வேலைக்குப் போகணும். எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க” என்று சீதா சொல்ல, அதற்கு ரவி, “நான் பாத்துக்கறேன், நீ தூங்கு” என்றான்.

கண்களை மூடிக்கொண்டு தூங்க முயர்சித்தான் ரவி. ஆனால் அவனுக்கு தூக்கம் வரவில்லை. ஒருக்களித்து படுத்துப்பார்த்தான். நேரம் அதிகாலை ஒரு மணி ஆகியும் அவனுக்கு தூக்கம் வரவேயில்லை. மனம் கனத்தது. காரணம் அவன் வேலை செய்யும் டாஸ்மாக் கடையில் அன்று நடந்த ஒரு சம்பவம் தான்.

அன்று மாலை எட்டு மணி இருக்கும். வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி இழுப்பவர்கள், கூலித்தொழிலாளிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினர் கடைக்கு வந்து விஸ்கி, பிராண்டி என் திணுசு திணுசாக வாங்கிக்கொண்டு சென்றனர்.

அப்போது ஒரு 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கடைக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பேரைச் சொல்லி அந்த கம்பெனி பிராண்டி வேண்டும் என்று ரவியிடம் கேட்டார். அதற்கு ரவி, “அந்த கம்பெனி பிராண்டி இல்ல. வேற ஒன்னு இருக்கு. வாங்கிக்கறீங்களா?” என்றான்.

அதைக்கேட்டு கோவப்பட்ட அந்த பெரியவர், “என்னய்யா கடை நடத்தறீங்க? நான் தினமும் வந்து இந்த சரக்க வாங்கிட்டு போறவன். அந்த கம்பெனி சரக்கு பாட்டில் ஒன்னு எனக்காகன்னு எடுத்து வெக்கமாட்டீங்களா?” என்று சத்தம் போட்டு தகராறு செய்ய ஆரம்பித்தார். வேறு ஒரு கடையிலிருந்து அந்த முதியவர் கேட்ட சரக்கை வரவழைத்துக் கொடுத்தான் ரவி. இந்த பிரச்சனை தீருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

சிறிது நேரம் ஆனது. “அண்ணே, மூணு பாட்டில் பீர் கொடுங்க. சில்லுனு இருக்கறதா கொடுங்க” என்று ஒரு குரலைக் கேட்டு அந்தப் பக்கம் திரும்பினான் ரவி. தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.

ஏனென்றால், அந்த வார்த்தைகளைச் சொன்னது ஒரு பள்ளி மாணவன். 12, 13 வயது இருக்கும் அவனுக்கு. பள்ளிக்கு செல்லும் மாணவன் ஒருவன் கடைக்கு நேராக வந்து பீர் வாங்குவது அதுவரை அவன் பார்த்திராத ஒன்று. திகைத்துப்போனான்.

“என்னடா வயசு உனக்கு? அதுக்குள்ள பீர் வேணுமா?” என்று அந்த பையனை அதட்டிக்கேட்டான் ரவி. அதற்கு அந்த பையன், “எவ்ளோ வயசா இருந்தா உங்களுக்கு என்ன? காசு கொடுக்கறேன்ல, அதுக்கு நான் கேட்டத கொடுங்க” என்றான்.

இந்த மாதிரி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை ரவி. கோவம் வந்தது அவனுக்கு. “டேய், ரொம்ப திமிரா பேசற நீ. உன் வயசு பசங்களுக்கு எல்லாம் நான் சரக்கு தரமாட்டேன். போய் படிக்கற வேலையப் பாரு” என்றான் ரவி. அதற்கு அந்தப் பையன், “உங்ககிட்ட இருந்து எப்படி வாங்கறதுன்னு எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றான்.

மணி பத்து ஆனது. கடையை மூடி பூட்டிவிட்டு, கடையின் முதலாளியின் வீட்டுக்குச் சென்று சாவியை கொடுத்துவிட்டுத் தன் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் ரவி. வரும் வழியில் அவனை மடக்கினான் அந்தப் பையன், கையில் பீர் பாட்டிலுடன்.

“யோவ், பெரிய பருப்பு மாதிரி இன்னிக்கு பேசின. நீ கொடுக்கலன்னா எனக்கு உன் கடையில இருந்து வாங்கிக்க தெரியாதா? பாத்தியா கையில என்ன இருக்குன்னு?” என்று திமிராக சொன்னான் அந்த பையன். அதற்கு ரவி, “எப்படிடா கிடைச்சுது உனக்கு? யார் கொடுத்தாங்க?” என்று கேட்டான்.

“உன் கடைக்கு எத்தனை பேர் வர்றாங்க. அதுல ஒருத்தன்கிட்ட நாலு பாட்டில் வாங்கினா ஒரு பாட்டில் தர்றதா சொல்லி காசு கொடுத்தேன். அவன் வாங்கிக் கொடுத்த பாட்டில்தான் இது” என்றான். இதைக்கேட்டு திகைத்துப்போன ரவி, “இந்த வயசுலயே குடிக்க ஆரம்பிச்சா அப்பறம் அந்த பழக்கத்தை விடறது ரொம்ப கஷ்டம்டா. தப்பான பாதையில போகாதே” என்றான்.

அதற்கு அவன், “யோவ், நீ பெரிய யோக்கியன் மாதிரி பேசாதே. இவ்ளோ பேச்சு பேசறவன் எதுக்குய்யா அந்த கடையில வேலை பாக்கற? நீ எதுக்குய்யா வர்றவங்களுக்கு சரக்கு பாட்டில் எடுத்து கொடுக்கற. வேற ஏதாவது வேலை பாக்க வேண்டியதுதானே?” என்றான். சுளீரென்று உறைத்தது ரவிக்கு.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து யோசித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். இப்போது இதையே யோசித்துக்கொண்டிருந்ததால் தான் தூக்கம் வரவில்லை ரவிக்கு. சமுதாயம் கெட்டுப்போவதற்குத் தான் உடந்தையாக இருக்கக்கூடாது, அப்படியே நடந்தாலும் அதில் தன் பங்கு இருக்கக்கூடாது என்றும் நினைத்தான். அதே நேரத்தில் உடனடியாக வேறு வேலையிலும் சேர முடியாது என்று நினைத்துக் குழம்பியபடியே படுத்துக்கொண்டிருந்தான்.

காலை 7 மணிக்கு எழுந்தான். ஓரளவு தூங்கியிருந்தான். இன்று முதல் வேலைக்கு போக வேண்டாம் என்றும், வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தான் ரவி. தூங்கி எழுந்து, பாயை சுருட்டிக்கொண்டிருந்தபோது, “அப்பா, ஸ்கூல்ல ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லித்தராங்களாம். அதுக்கு ஆளுக்கு மாசாமாசம் 500 ரூபாய் தரணுமாம்” என்றாள் மீனா.

ரவி மனதில் ஏகப்பட்ட குழப்பம். அவனைப் பொருத்தவரை 500 ரூபாய் என்பது சாதாரண தொகை அல்ல. அதனால் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் இருந்தான். சமுதாயத்துக்காக வேலையை விட்டால் அடுத்து என்ன வேலை செய்வது என்று தெரியவில்லை. தேவையான அளவுக்கு சம்பளம் கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். இதனால் இப்போது இருக்கிற வேலையை விடக்கூடாது என்று கனத்த இதயத்துடன் முடிவு எடுத்தான்.


சமுதாயம் பற்றிய சிந்தனை நல்லதுதான், மிகவும் உயர்வானதும் கூட. ஆனால், குடும்பமா, சமுதாயமா என்ற கேள்வி எழுந்தால் பல பேரது முடிவு குடும்பத்துக்காகத்தான் இருக்கும். ரவி ஒரு சராசரி குடும்பத்தலைவன். அதனால் அவனுடைய முடிவு சரியானதே!

சிறுகதை 007 - ராஜேஷின் கல்யாணம் (December 2012)

மோகன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம் ஆகிறது. எட்டு வருடங்களுக்கு முன், பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு மிகப்பெரிய அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

பொறியியல் படிப்பு முடித்து விட்டு அமெரிக்கா சென்றவன், வருடத்திற்கு ஒரு முறை, மதுரையில் வசிக்கும் தன் பெற்றோரைப் பார்க்க வருவான். எப்போது வந்தாலும், இந்தியாவில் இரண்டு வாரங்கள் இருந்துவிட்டு அமெரிக்கா திரும்பிவிடுவான். இந்த முறை ஒரு மாதம் இருந்துவிட்டு போகலாம் என்று எண்ணியிருந்தான்.

மதுரையில், தன் வீட்டில், மோகன் தினமும் காலை 9 மணிக்கு எழுவான். பத்து மணிக்கு சாப்பிட்டு, பிறகு கொஞ்ச நேரம் தன் தந்தை, தாயுடன் அரசியல் விவாதம் நடத்துவான். மதியம் 2 மணிக்கு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு 5 மணி வரை தூக்கம். மகன் வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருப்பதால் அவனுக்கு பிடித்தவற்றை சமைத்துப் போடுவார் மோகனின் தாய் கீதா. தினமும் ராஜோபசாரம் தான் அவனுக்கு.

மாலை எழுந்து, இரவு சாப்பாடு, டிஃபன் செய்வதில் தன் தாய்க்கு உதவுவான். இரவு 9 மணிக்கு இரவு சாப்பாடு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தால் அவன் தூங்கப்போக இரவு 11 மணி ஆகிவிடும். இந்த அட்டவணையை தினமும் பின்பற்றி வந்தான்.

அன்று வியாழக்கிழமை, மணி மாலை 6 மணி. மோகனும், அவன் அம்மாவும் சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். “சொல்ல மறந்துட்டேன் மோகன். ரெண்டு, மூணு வாரம் முன்னாடி உன் ஃப்ரெண்ட் விஜய் வந்திருந்தான்பா. மாசம் ஒரு தடவ வந்துடுவான், நீ எப்பொ வர்றன்னு கேட்டான். அநேகமா உன்ன பாக்க வருவான்னு நெனக்கிறேன்” என்றார் மோகனின் தாய்.

அதற்கு மோகன், “அப்படியாமா? அவன் இங்க வர்ற விஷயத்த எல்லாம் எனக்கு இ-மெயில்ல அனுப்புவான். இந்த தடவ என்ன விஷயமா வந்தான்? தெரியுமா அம்மா உனக்கு?” என்று கேட்டான். “உங்க ஃப்ரெண்ட் ராஜேஷுக்கு கல்யாணமாம். அத சொல்லத்தான் வந்தான்னு நெனக்கிறேன்பா” என்றார் மோகனின் தாய்.
இவர்கள் இங்கு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்து உள்ளே வந்த விஜய்யை மோகனின் தந்தை வரவேற்று கூடத்தில் உட்கார வைத்து, “மோகன், இங்க பாருடா. விஜய் வந்திருக்கான்” என்று மோகனைக் கூப்பிட்டார்.

மோகன் கூடத்திற்கு வந்து, “வாடா விஜய், பாத்து எவ்ளோ நாளாச்சு? எப்படி இருக்க? அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா?” என்றான். அதற்கு விஜய், “எல்லாரும் நல்லாயிருக்கோம்டா. நீ எப்படி இருக்க?” என்றான். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு இருக்க வேண்டாம் என்று நினைத்து, “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று சமையலறைக்குப் போனார் மோகனின் தந்தை.

மோகன், விஜய், ராஜேஷ் மூவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு மோகனும், விஜய்யும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். ராஜேஷ் திருச்சியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.

இரு நெருங்கிய நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தால் என்னவெல்லாம், எப்படியெல்லாம் பேசுவார்களோ, அதையெல்லாம், அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர் மோகனும், விஜயும். சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
“டைம் போனதே தெரியலடா. நான் கிளம்பறேன், ராஜேஷ் கல்யாணத்துக்கு தங்க மோதிரம் வாங்கித்தரலாம்னு நம்ம ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. நான் அத வாங்கணும்” என்றான் விஜய். அதற்கு மோகன், “சரிடா, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் இங்க தான் இருப்பேன். அப்புறமா வா, எங்கயாவது வெளிய போகலாம்” என்றான்.

அதற்கு விஜய், “நாளைக்கு நீ சும்மாதானே இருக்க? நாளைக்கு ராஜேஷோட ரிசெப்ஷன் இருக்கு. நீயும் வாடா. உனக்கும் இன்விடேஷன் அனுப்பியிருக்கானாம் அவன். இன்விடேஷன் கிடைச்சதா?” என்றான். “பாத்தமாதிரி ஞாபகம், சரியா ஞாபகம் இல்லடா” என்றான் மோகன். “சரிடா, நாளைக்கு சாயங்காலம் 6 மணிக்கு ரங்காலயா கல்யாண மண்டபத்துக்கு வந்துடுடா” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் விஜய்.

அடுத்த நாள் மாலை 6:30 மணி. ரங்காலயா கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான் மோகன். மதுரையிலேயே மிகப்பெரிய கல்யாண மண்டபம் தான் இந்த ரங்காலயா கல்யாண மண்டபம். குறைந்தபட்சம் 3000 பேர் உட்காரக்கூடிய அளவுக்கு பெரிய ஹால் இருந்தது.

உள்ளே வந்த மோகனைப் பார்த்து கையசைத்தான் ஹாலில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த விஜய். அவன் அருகில் உட்கார்ந்தான் மோகன். “ஏன்டா கடைசில இருக்கோம்? முன்னாடி போய் உக்காரலாம் இல்ல?” என்றான் மோகன். அதற்கு விஜய், “முன்னாடி எங்கயுமே இடம் இல்லடா. அதான் நம்ம காலேஜ்ல இருந்த மாதிரி கடைசி வரிசைல இடம் பிடிச்சுட்டேன்” என்றான்.

“இங்க இருந்து மேடையில நடக்கறது ஒண்ணுமே தெரியலடா. ராஜேஷப் பாத்து ரொம்ப நாளாச்சு. அவன பாக்கலாம்னு பாத்தா இப்படி இருக்கு. இங்க செவுத்துல இருக்கற டி.வியிலயும் சரியா தெரியாமாட்டேங்குது” என்றான் மோகன். அதற்கு விஜய், “விடுடா. அவனுக்கு கிஃப்ட் கொடுக்கும்போது மேடை ஏறுவோம்ல அப்பொ பாக்கலாம்” என்றான்.

7:30 மணிக்குள் மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மோகனிடம் விஜய், “நீ எப்போடா கல்யாணம் பண்ணிக்கப்போற? உன் அம்மாவும், அப்பாவும் உங்கிட்ட இதப்பத்தி பேச சொன்னாங்க. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டியாமே?” என்று கேட்டான். அதற்கு மோகன், “தெரியலடா. கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இப்போதைக்கு இல்ல” என்றான்.

அத்றகு விஜய், “சரி விடு. எது எப்போ நடக்கணும்னு இருக்கோ அது அப்போ தான் நடக்கும். வா, நாம மேடை ஏறி ராஜேஷுக்கு கிஃப்ட் கொடுத்துட்டு வரலாம்” என்றான். இருவரும் மேடையை நோக்கிச் சென்றனர்.

“என்னடா இது? மேடை படிக்கட்டுல இருந்தாவது ராஜேஷ பாக்கலாம்னு பாத்தா எல்லாரும் கிஃப்ட் கொடுக்கறேன்னு முழுசா மறைச்சிட்டாங்களே” என்றான் மோகன். அதற்கு விஜய், “இங்க வந்து பாருடா. சரியா தெரியும் உனக்கு” என்றான்.

மணமக்களைப் பார்த்தான் மோகன். அதிர்ச்சியில் மனமுடைந்து போனான். மணமகன் ராஜேஷின் வலது பக்கத்தில் இருந்தது மணமகள் திவ்யா. மோகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. மிகவும் சிரமப்பட்டு அதைக் கட்டுப்படுத்தி மேடையை விட்டு கீழே இறங்கினான் மோகன். அவன் தோளில் கை வைத்துக்கொண்டு விஜய்யும் கீழே இறங்கினான். இருவரும் மண்டபத்தின் வாசலுக்குச் சென்று, மண்டபத்துக்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் நின்றனர்.

மோகனும் திவ்யாவும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் உண்மையாகவும், தீவிரமாகவும் காதலித்து வந்தனர்.

ஆனால், கல்லூரி இறுதியாண்டில், அந்த வயதுக்கே உரிய பக்குவமின்மையால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோகனை விட்டு பிரிந்து சென்றாள் திவ்யா. இருந்தாலும், மோகனால் திவ்யாவை மறக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள் திரும்பி வருவாள் என்று சில நொடிகளுக்கு முன்பு வரை நினைத்திருந்தான். அந்த எண்ணம் இப்போது சுக்குநூறானது.

விஜய்யின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கினான் மோகன். “நீ எதுக்குடா அழற? திவ்யா அங்க சிரிச்சுட்டு இருக்கா. நீ மட்டும் எதுக்கு அழணும்” என்றான் விஜய். அதற்கு மோகன், “திவ்யாதான் கல்யாணப்பொண்ணுன்னு உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தும் ஏன்டா எங்கிட்ட சொல்லலை? நான் கல்யாணத்துக்கே வந்திருக்க மாட்டேன்” என்று அழுதபடியே சொன்னான்.

“நீ திவ்யாவ இன்னும் மறக்கலைன்னு எனக்குத் தெரியும். நீ யாரை நெனச்சு கல்யாணம் பண்ணிக்காம காத்துக்கிட்டு இருக்கியோ, அவளுக்கு இப்போ கல்யாணம். அதை நீ தெரிஞ்சுக்க வேணாமா? அதனால தான் உங்கிட்ட சொல்லலை” என்றான் விஜய்.

“நான் வீட்டுக்குப் போறேன்டா. நான் மண்டபத்துக்குள்ள வரலை. நீ போய்ட்டு வா” என்றான் மோகன். அதற்கு விஜய், “நானும் வர்றேன். வெளிய ஏதாவது ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு போகலாம் வா” என்றான்.

ஹோட்டலில் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 11 ஆகியிருந்தது. மோகனின் கண்கள் வரண்டு போயிருந்தன, முகத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது. “நான் உன்ன உங்க வீட்டுல டிராப் பண்ணிட்டு போறேன். வண்டியில உக்காரு” என்று விஜய் சொல்ல, மோகனும் வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

மோகன் வீட்டு வாசலில் அவனை இறக்கிவிட்டு, விஜய், “சொன்னதெல்லாம் யோசிச்சு பாருடா. உனக்கே புரியும். நான் நாளைக்கு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். வீட்டின் உள்ளே நுழைந்த மோகனைப் பார்த்து அவன் தாய், “என்னப்பா ரிசெப்ஷன் நல்லா நடந்ததா? ராஜேஷுக்கு வாழ்த்துக்கள் சொன்னியா?” என்றார். அதற்கு மோகன், “எல்லாம் நல்லா நடந்ததுமா” என்றான்.


“விஜய் உங்கிட்ட வேற ஏதாவது சொன்னானா மோகன்?” என்று கேட்டார் மோகனின் தந்தை. அதற்கு மோகன், “சொன்னான். நான் யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்பா” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

சிறுகதை 006 - மழை (November 2012)

மாலை 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருப்பதால், இன்றாவது ஆஃபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான் கார்த்திக். மணி 5 ஆனது. சரி, கிளம்பலாம் என்று எண்ணி அவனுடைய இருக்கையிலிருந்து எழும்போது அவனுடைய மேனேஜர் அவனைப் பார்த்து, தன் இருக்கைக்கு வருமாறு செய்கை காட்டினார். “என்னடா இது, சீக்கிரம் கிளம்பலாம்னு நெனச்சா இப்ப போய் இவர் என்ன பாக்கணுமா? எதுக்கு கூப்பிடறார்னு தெரியல. எவ்ளோ நேரம் ஆகும்னும் தெரியல” என்று நினைத்தபடி அவனுடைய மேனேஜரின் இருக்கைக்கு சென்றான்.

“கார்த்திக், என்ன கிளம்பிட்டீங்க போல?” என்று கேட்டார் கார்த்திக்கின் மேனேஜர் ரகுராம். உண்மையை சொன்னால் தப்பாக நினைத்துக்கொள்ளப் போகிறார் என்று எண்ணி, “இல்ல சார், அப்படியே போய் ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்னு எழுந்தேன். சொல்லுங்க சார்”, என்றான் கார்த்திக்.

“அப்படியா, சரி. ஒண்ணும் இல்ல. இன்னிக்கு ஈவினிங் 5:30 மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் கொஞ்சம் அவசரமா வெளிய போகணும். நம்ம டீம்ல நீங்க தான் சீனியர். அதனால எனக்கு பதிலா நீங்க அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியுமா?” என்று கேட்டார் ரகுராம். மேனேஜர் கேட்டதை முடியாது என்று நிராகரித்தால் அது சரியாக இருக்காது என்று எண்ணிய கார்த்திக், “நோ ப்ராப்ளம் சார். நான் பாத்துக்கறேன்” என்றான்.

“தேங்க்ஸ் கார்த்திக். நான் உங்க கிட்ட இருந்து மீட்டிங்க்ல நடந்ததப்பத்தி நாளைக்கு கேட்டு தெரிஞ்சுக்கறேன். சீ யூ டுமாரோ” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ரகுராம். தான் நினைத்தது இப்படி ஆகிவிட்டதே என்று நொந்தபடியே ஆஃபீஸில் இருக்கும் கேன்டீனுக்குச் சென்றான் கார்த்திக்.

ஒரு கப் டீ வாங்கி, அருகில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்தான் கார்த்திக். அங்கு அவனைப் பார்த்த அவன் நண்பன் விமல், “என்னடா கார்த்திக், வீட்டுக்குப் போகலையா? 6 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இருக்கு. தெரியும்ல?” என்றான். “வாடா விமல். நான் அப்பவே கிளம்பலாம்னு தான் இருந்தேன். ஆனா 5:30 மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அத முடிச்சுட்டு கிளம்பிடுவேன்” என்றான் கார்த்திக்.

“அடப்பாவி, எப்ப இருந்து உனக்கு இவ்ளோ பொறுப்பு வந்தது? கிரிக்கெட் மேட்ச், அதுவும் இந்தியா விளையாடுதுன்னா, அன்னிக்கு உடம்பு சரியில்ல, அப்படி இப்படின்னு ஏதாவது சாக்கு சொல்லி லீவு போடுவ நீ. இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா?” என்று கிண்டலாகக் கேட்டான் விமல்.

அதற்கு கார்த்திக், “ஏன்டா வயித்தெரிச்சல கிளப்பற. நான் கிளம்பின நேரத்துல கரெக்டா என் மேனேஜர் பாத்து கூப்பிட்டார். அவருக்கு ஏதோ வேலை இருக்காம், அதனால அவரால அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண முடியாதாம். அதனால என்ன அட்டெண்ட் பண்ண சொன்னார். எல்லாம் என் நேரம்” என்று அலுத்தபடியே சொன்னான் கார்த்திக்.

“சரி, நீ நல்லா என்ஜாய் பண்ணு. நான் கிளம்பறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல மேட்ச் ஆரம்பிச்சிடும்” என்று கிண்டலாக சொன்னான் விமல். “டேய், ரொம்ப பேசற நீ. பாரு, வானம் இருட்டி இருக்கு. நீ வீட்டுக்கு போறதுக்குள்ள பயங்கரமா மழை வரப்போகுது. நீ அதுல மாட்டிக்கப்போற” என்று கார்த்திக் சபித்ததை சற்றும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பினான் விமல்.

5:30 மணிக்கு ஆரம்பித்த மீட்டிங் முடியும்போது மணி 6:15 ஆகி இருந்தது. “பரவாயில்ல, கொஞ்சம் சீக்கிரமே முடிஞ்சிருச்சு. வீட்டுக்கு போய் நிம்மதியா மேட்ச் பாக்கலாம்” என்று எண்ணியபடியே தன் பைக்கில் உட்கார்ந்தான். தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மழை தூரல் போட ஆரம்பித்தது. மழை வலுப்பதற்குள் சென்றுவிட வேண்டும் என்று எண்ணி தன் பைக்கை சற்று வேகமாக ஓட்டத் தொடங்கினான்.

அவனுடைய துரதிஷ்டம், அடுத்த சில நொடிகளில் மழை வலுத்தது. வேறு வழியே இல்லாமல் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையோரத்தில் இருக்கும் மரத்தடியில் சென்று நின்றான். அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை.

மழை ஆரம்பித்து இருபது நிமிடங்கள் ஆகியும் குறைந்தபாடில்லை. “என்ன கொடுமை இது. இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னே தெரியல” என்று கார்த்திக் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த போது எதிரில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டி வந்து நின்றது. கறுப்பு நிற டீ சர்ட், நீல நிற ஜீன்ஸில் அழகான ஒரு பெண் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, தோளில் லேப்டாப் பையுடன் அந்த மரத்தடியில் வந்து நின்றாள். அந்த கறுப்பு நிற டீ சர்ட் அவளுடைய நிறத்தை இன்னும் தூக்கிக் காட்டியது.

மழை சற்றும் குறையவில்லை. மரத்தடியிலும் மழைத்துளிகள் பெரிது பெரிதாக விழத்தொடங்கின. தன் பையிலிருந்து குடையை எடுத்து, அதனை விரித்து மழைத்துளிகள் தன் மேலே விழாதவாறு நின்றாள் அந்தப் பெண். இதைப் பார்த்தும் பார்க்காதது போல், மழையில் நனைந்தபடியே நின்றிருந்தான் கார்த்திக்.
“ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ. மழை ரொம்ப அதிகமா வருது. வேணும்னா இந்த குடைக்குள்ள வந்து நில்லுங்க, இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்றாள் அந்தப் பெண். இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக், “ரொம்ப தேங்க்ஸுங்க. நான் உங்கள எப்படி கேக்கறதுன்னு இருந்தேன்” என்றான்.

மழைச்சத்தத்தைத் தவிர அங்கு வேறு சத்தமே கேட்கவில்லை. அந்த இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். “என் பேர் கார்த்திக். இங்கதான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன். நீங்க என்ன பண்றீங்க?” என்று பேச்சை ஆரம்பித்தான் கார்த்திக். அதற்கு அந்த பெண், “அப்படியா? வெரி குட்” என்றாள். இப்படி ஒரு பதிலை கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“என்னங்க, அவ்ளோ தானா? மழை வேற நிக்கற மாதிரி தெரியல. அதுவரைக்கும் ஏதாவது பொழுதுபோற மாதிரி பேசலாம்னு பாத்தா ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க. உங்களப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன், இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்றான் கார்த்திக்.

அதற்கு அந்த பெண், “மை நேம் இஸ் ஜெயா. நானும் இங்கதான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன்” என்றாள். அதற்கு கார்த்திக், “ஓ இஸ் இட்? வெரி குட். உங்க லேப்டாப் பேக்குல போட்டிருக்கறத பாத்தா நீங்க ஐ.பி.எம்-ல வேல பாக்கறீங்கன்னு நெனக்கிறேன். கரெக்டா?” என்றான்.

“ஓ, அப்போ நான் சரவண பவன் பேக் வெச்சிருந்தேன்னா அந்த ஹோட்டல்ல வேலை பாக்கறேன்னு சொல்லுவீங்களோ? என்று நக்கலாகக் கேட்டாள் ஜெயா. இதைக்கேட்டு கார்த்திக் வழிந்துக்கொண்டு, “அப்படி இல்லீங்க. ஏதோ தோணிச்சு, அதான் சொன்னேன்” என்று ஒரு வழியாக சமாளித்தான்.

“பாருங்க என் நிலைமையை. 5 மணிக்கே கிளம்பலாம், வீட்டுக்கு போய் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பாக்கலாம்னு இருந்தேன். கடைசி நேரத்துல ஒரு வேலை வந்துடுச்சு. அதனால ஆஃபீஸ்ல இருந்து கிளம்பறதுக்கு லேட் ஆகிடுச்சு. இப்பொ மழை வேற பயங்கமா கொட்டுது. எப்பொ நிக்கும்னு தெரியல” என்று தன் நிலைமையைப் பற்றி புலம்பினான் கார்த்திக். அதற்கு ஜெயா, “சரி விடுங்க. நம்மால என்ன பண்ண முடியும். நான்கூட இன்னிக்கு ‘வெற்றி நிச்சயம்’ படத்துக்குப் போகலாம்னு இருந்தேன். ஆனா இந்த மழையால அந்த ப்ளான் அவுட் ஆகிடுச்சு. எது நடக்கணும்னு இருக்கோ அதான் நடக்கும்” என்றாள்.

“நல்ல வேளை இன்னிக்கு மழை வந்து உங்கள காப்பாத்தியிருக்கு. போன வாரம் தான் அந்த படத்த பாத்தேன். அதுக்கு, மழைய விடுங்க, சுட்டெரிக்கற வெயிலே பெட்டர்” என்றான் கார்த்திக். இதைக்கேட்டு சிரித்தபடியே ஜெயா, “அப்படியா? நல்ல வேளை தப்பிச்சேன். இதே மாதிரி நீங்களும் தப்பிச்சுட்டீங்க” என்றாள்.

“என்னங்க சொல்றீங்க? நான் தான் அந்த படத்துக்கு மறுபடியும் போகப்போறதில்லையே. அப்பறம் எப்படி தப்பிச்சேன்னு சொல்றீங்க?” என்றான் கார்த்திக். “நீங்க மேட்ச் பாக்கணும்னு சொன்னீங்களே, அதைத்தான் சொன்னேன். யாரு எவ்ளோ ரன் அடிக்கணும், எவ்ளோ விக்கெட் எடுக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க. எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம். அதையெல்லாம் பாத்தா தேவையில்லாம டென்ஷன்தான் மிச்சம். அதுக்குத்தான் நீங்க தப்பிச்சுட்டீங்கன்னு சொன்னேன்” என்றாள் ஜெயா.

அதற்கு கார்த்திக், “கலக்கறீங்க போங்க. சொல்றதுக்கெல்லாம் டக், டக்குனு பதில் தர்றீங்க. நீங்க வக்கீலா ஆகியிருந்தீங்கன்னா செமையா வந்திருப்பீங்க” என்றான். “ஓஹோ அப்படியா? ஸோ, இப்பொ நான் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கறதால சரியா வரமாட்டேன்னு சொல்ல வர்றீங்களா?” என்று நக்கலாகக் கேட்டாள் ஜெயா.

அதற்கு கார்த்திக், “பாத்தீங்களா? நான் சொன்ன ஒரு சின்ன விஷயத்துல இருந்து ஒரு கேள்வி கேட்டு மடக்க பாக்கறீங்க. இதத்தான் சொன்னேன்” என்று சிரித்தபடியே சொல்ல ஜெயாவும் சிரிக்க ஆரம்பித்தாள். இப்படியே சிரிப்பும் சத்தமுமாய் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஒரு சிறு நட்புணர்வு வளரத் தொடங்கியிருந்தது.

மணி 7:30 ஆனது. மழை சற்று ஓய்ந்திருந்தது. “சரிங்க. மழை நின்னுடுச்சு. நான் கிளம்பறேன்” என்றாள் ஜெயா. அதற்குள் மழை நின்றுவிட்டதே என்று தன் அதிர்ஷ்டத்தை எண்ணி பெருமூச்சு விட்டவனாக, “சரிங்க. டைம் நல்லா வேகமா போயிடுச்சு. மணி 7:30 ஆனதே தெரியல. தேங்க்ஸ் ஒன்ஸ் அகெய்ன்” என்றான் கார்த்திக். “வெல்கம் கார்த்திக். அப்பறம் பாப்போம்” என்று சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டியில் உட்கார்ந்து கிளம்பினாள் ஜெயா.

கார்த்திக்கும் அவனுடைய பைக்கில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். அவன் கிளம்பி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை, மறுபடியும் மழை பலமாக பெய்ய ஆரம்பித்தது. “அடடா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மழை வந்திருக்கக் கூடாதா” என்று நினைத்தபடியே மழைக்கு ஒதுங்க ஏதாவது இடம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே அவனுடைய வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.
அவன் கண்களுக்கு, சற்று தொலைவில் ஒரு மரம் இருப்பது தென்பட்டது. அருகே சென்று பார்த்தால் அதே சிவப்பு நிற ஸ்கூட்டியும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

“ஹாய் கார்த்திக். இன்னிக்கு மழை நம்மள விடாதுன்னு நெனக்கிறேன்” என்றாள் அந்த மரத்தடியில் நின்றுக்கொண்டிருந்த ஜெயா. மறுபடியும் அந்த குரலைக் கேட்ட கார்த்திக் முகத்தில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி. மழைக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே அந்த மரத்தருகில் சென்றான் கார்த்திக்.

மழை வலுக்கத் தொடங்கியது.

சிறுகதை 005 - மார்கோனி (September 2012)

வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும், கோபாலும். இருவரும் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகின்றனர். மாடசாமியின் மனைவி மீனாவும், கோபாலின் மனைவி ராஜாத்தியும் தினமும் தங்கள் கணவர்களுக்கு மதிய உணவை அவர்களுடைய வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம்.

“ஏங்க, இப்ப எல்லாம் மத்தியானத்துல வெயில் அதிகமா இருக்குல்ல?” என்று பேச்சை ஆரம்பித்தாள் மீனா. “ஆமா, நீ வீட்டுல சும்மா இருக்க. உனக்கே சூடு அதிகமா இருந்ததுனா, நானும் கோபாலும் வயல்ல நாள் பூரா வேலை செய்யறோம், எங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றான் மாடசாமி. “அதுக்கு இல்லீங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, நம்ம கிராமத்துக்கு கரன்ட் வந்து ஆறு, ஏழு மாசம் ஆகுது. நீங்கதான் தனியா கொஞ்சம் காசு சேத்து வெச்சிருக்கீங்கல்ல. அதுல எதாவது வாங்கலாமா?” என்றாள் மீனா. இதைக்கேட்ட கோபால், “என்னடா, தனியா காசு சேத்து வெச்சிருக்கியா? என்ன செய்யப்போற அத வெச்சு?”. அதற்கு மாடசாமி, “இப்போ சொல்லமாட்டேன். செஞ்சதுக்கு அப்பறம் சொல்றேண்டா” என்றான்.

உண்டுமுடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் மீனாவும், ராஜாத்தியும். “உனக்கு ஏதாவது வாங்கி குடுக்கறதுக்கு தான் உன் வீட்டுக்காரர் காசு சேத்துட்டு வர்றார்னு நினைக்கிறேன்டி. குடுத்துவெச்சவ நீ”, என்றாள் ராஜாத்தி. இதைக்கேட்டு ஒருவித மகிழ்ச்சியில் மீனா, “அப்படியா? நீ சொன்னது உண்மையா இருந்த சந்தோஷம் தான். ஆனா அவ்ளோ காசுல என்னத்த வாங்கப்போறார்னு தான் தெரியல” என்றாள். “எவ்ளோ காசு இருக்கும்?” என்று கேட்டாள் ராஜாத்தி. அதற்கு மீனா, “கிட்டத்தட்ட முண்ணூறு ரூபா இருக்கும். இவ்ளோ காசுல என்ன செய்யப்போறார்னு தெரியல” என்றாள்.

“என்னாது? முண்ணூறு ரூபாயா? அவ்ளோ காசுல உன்ன தங்கத்துலயே குளிப்பாட்டப்போறாரு. அஞ்சு பவுன் தங்கம் வாங்கலாம் அந்த காசுல”, என்றாள் ராஜாத்தி. அதற்கு மீனா, “ஹும், நாம மட்டும் இதப்பத்தி பேசி என்ன ஆகப்போகுது. அவரு என்ன நெனச்சிருக்காரோ அது தெரியலயே” என்று பெருமூச்சுவிட்டாள். வீட்டை அடைந்தனர் இருவரும்.

சில நாட்கள் கழிந்தன. அன்று சனிக்கிழமை, நேரம் காலை 8 மணி. அன்று சீக்கிரமே எழுந்து, எங்கேயோ வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் மாடசாமி. “மீனா, அந்த சின்ன தகரப்பெட்டில வெச்சிருக்கற காசை எடுத்துட்டுவா. நான் வெளிய கிளம்பணும்”, என்று மீனாவைப் பார்த்து கூறினான் மாடசாமி. “இதோ ஒரே நிமிஷம், இப்பொ எடுத்துட்டு வர்றேங்க” என்று வேகவேகமாக உள்ளே சென்றாள் மீனா. அவளிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, “நான் திருச்சி வரைக்கும் போய்ட்டு வர்றேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் மத்தியானம் சாப்பிடறதுக்கு வந்துடுவேன்” என்றான்.

நேரம் பத்து மணி. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை தன்னுடைய மிதிவண்டியில் வந்தடைந்தான் மாடசாமி. முருகன் ரேடியோ கடையின் வாசலில் தன் மிதிவண்டியை நிறுத்தி கடைக்கு உள்ளே சென்றான். “வா மாடசாமி. எப்படி இருக்க? வீட்டுல மீனா சௌக்கியமா? என்றார் அந்த கடையின் முதலாளி முருகன். “எல்லாரும் நல்லா இருக்கோம் பெரியப்பா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான் மாடசாமி. “நான் நல்லா இருக்கேன். அப்பறம் என்ன சமாச்சாரம்? இந்த தடவ தேவையான அளவு காசு எடுத்துட்டு வந்திருக்கியா?” என்ற முருகனிடம் “இருக்கு பெரியப்பா” என்றபடியே கடையில் அங்கும் இங்கும் நடந்தவண்ணம் இருந்தான் மாடசாமி.

சரி, இங்க வா, இதப்பாரு. இது தான் இருக்கறதுலயே சூப்பர். இத வாங்கிக்கோ” என்றார் முருகன். “இது வேணாம் பெரியப்பா. எனக்கு மார்கோனி கம்பெனி ரேடியோ தான் வேணும்”, என்றான் மாடசாமி. “மார்கோனியும் நல்ல கம்பெனி தான். அதயே எடுத்துக்கோ” என்றார் முருகன். “எவ்ளோ விலை பெரியப்பா?” என்று மாடசாமி கேட்க, “உனக்கு முண்ணூறு ரூபா, மத்தவங்களுக்கு முண்ணூத்தி அம்பது ரூபா” என்றார் முருகன். அவரிடம் தான் கொண்டுவந்த பணத்தைக் கொடுத்துவிட்டு, ரேடியோவை மிதிவண்டியின் பின்புற இருக்கையில் வைத்து இறுக கட்டிவிட்டு, தன் பெரியப்பாவிடம் விடைபெற்று, மிகவும் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினான் மாடசாமி. பெரிதாக எதையோ சாதித்துவிட்டது போல் உணர்ந்தான்.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி 12.40. தன் கணவன் வந்திருக்கும் சத்தத்தைக் கேட்டு, தனக்கு ஏதாவது வாங்கி வந்திருப்பார் என்ற எதிர்பார்ப்புடன் வீட்டு வாசலுக்கு விரைந்து வந்தாள் மீனா. “என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க? எனக்காக வாங்கறதுக்காகவா அவ்ளோ தூரம் போய்ட்டு வந்தீங்க”? என்று ஆவலுடன் கேட்டாள் மீனா. அதற்கு மாடசாமி, “இங்க பார் என்ன வாங்கிருக்கேன்னு” என்று மகிழ்ச்சியுடன் தான் கொண்டுவந்திருக்கும் ரேடியோவை மீனாவிடம் காட்டினான். இதை சற்றும் எதிர்பாராத மீனா, “என்னங்க இதப்போய் வாங்கிருக்கீங்க? தங்கம், வெள்ளினு ஏதாவது வாங்கியிருந்தாலாவது பிற்காலத்துல உதவும். இத வெச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும்?” என்று சற்றே தயக்கம் கலந்த ஏமாற்றத்துடன் கூறினாள். “எனக்கு இத வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அத ஒருவழியா வாங்கிட்டேன்னு சந்தோஷமா இருக்கேன், நீ என்ன இப்படி பேசற?” என்று சிறு கோபத்துடன் மாடசாமி கேட்க, மீனா வேறு வழியின்றி அமைதியானாள். அந்தக்காலத்தில் கணவன் பேச்சை தட்டிக்கேட்கமாட்டார்கள் மனைவிமார்கள்.

வீட்டுக்குள் சென்று, வீட்டுக்கூடத்தில் இருந்த ஒரு மேஜையை ஒரு ஓரமாக வைத்து, அதன் மேல் ஒரு துணியை விரித்து, அந்த துணியின் மேல் மிகவும் பொறுமையாக தான் வாங்கிவந்த ரேடியோவை வைத்தான் மாடசாமி. மின்கம்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து, ப்ளக் பாய்ன்ட்டில் சொருகி ஸ்விட்சைப் போட்டான். ரேடியோவில் ஏதோ ஒரு சத்தம் கேட்க ஆரம்பித்தது, ஆனால் தெளிவாக ஏதும் கேட்கவில்லை. சற்று டியூன் செய்து பார்த்தான் மாடசாமி. இலங்கை வானொலி நிலையத்தில் ஏதோ ஒரு செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ரேடியோ சரியாக வேலை செய்வதை எண்ணி மகிழ்ந்தான் மாடசாமி. அன்று முதல், தினமும் வீட்டுக்கு வந்தவுடன் ரேடியோவில் ஒலிபரப்பாவதைக் கேட்காமல் தூங்கியதில்லை மாடசாமி.

நாட்கள் ஒடின. அந்த ரேடியோவை பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்தான் மாடசாமி. அன்று ஒரு இரவு, வீட்டுக்கூடத்தில் அமர்ந்து ரேடியோவில் எதையோ கேட்டுக்கொண்டிருந்தனர் மாடசாமியும், மீனாவும். “நான் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றான் மாடசாமி. சிறிது நேரத்தில் ரேடியோவிலிருந்து வந்துக்கொண்டிருந்த சத்தம் திடீரென நின்றது. “என்னங்க, ரேடியோ வேலை செய்யலங்க. என்ன ஆச்சுன்னு தெரியல” என்றாள் மீனா. ஆனால் பதில் ஏதும் வரவில்லை. உள்ளே சென்று பார்த்த மீனாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. மாடசாமி மயங்கி கீழே விழுந்திருந்தான். “ஐய்யோ! என்னங்க, என்னாச்சுங்க? எழுந்திருங்க” என்றபடியே மாடசாமியில் முகத்தில் பதற்றத்துடன் தண்ணீர் தெளித்தாள் மீனா. மாடசாமி மெதுவாக கண் திறந்ததைக் கண்டபின் தான் நிம்மதி அடைந்தாள். “திடீர்னு மயக்கம் வந்திருச்சு, அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியல. எனக்கு ஒண்ணும் இருக்காது, நீ பயப்படாத” என்று மீனாவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி கூடத்திற்கு அழைத்துவந்தான் மாடசாமி. கூடத்திற்கு வந்து நாற்காலியில் மாடசாமி அமர்ந்த அடுத்த நொடி ரேடியோ வேலை செய்யத்தொடங்கியது. மீனாவுக்கு ஆச்சர்யம். நடந்த விஷயத்தை மாடசாமியிடம் கூற, “பாத்தியா? நான் நம்ம ரேடியோவ எவ்ளோ நல்லா பாத்துக்கறேன், அதனாலதான் நான் மயங்கி விழுந்தது உனக்கே தெரிஞ்சது. நான் ரேடியோ வாங்கினது எவ்ளோ நல்ல விஷயம் பாரு” என்றான் மாடசாமி. பதில் ஏதும் பேசாமல் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அமர்ந்தாள் மீனா. அடுத்த சில நாட்கள் வழக்கம்போல் இருந்தன.

திடீரென ஒரு நாள், ராஜாத்தி அவசர அவசரமாக மீனாவின் வீட்டுக்கு வந்து “மீனா, ஒரு கெட்ட சேதி. கொஞ்சம் பதட்டப்படாம இரு” என்று மூச்சிரைக்க மீனாவிடம் கூறினாள். “என்னடி சொல்ற. என்ன ஆச்சு?” என்றாள் மீனா. “உன் வீட்டுக்காரர் இன்னிக்கி, ...” என்று ஆரம்பித்த ராஜாத்தி, சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் திணறினாள். “என்னடி ஆச்சு அவருக்கு? சொல்லுடி” என்று கதறத்தொடங்கினாள். “இன்னிக்கி வயல்ல வேலை செஞ்சிட்டிருக்கும்போது திடீர்னு மயங்கி விழுந்துட்டார். என் வீட்டுக்காரர்தான் அவர ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருக்கார். கவலப்படாத. பயப்படாம இரு. சரி ஆகிடும்” என்று மீனாவுக்கு தைரியம் கூற முயற்சித்தாள் ராஜாத்தி.  “இவருக்கு மட்டும் இப்படியே ஆகுதே! நாங்க என்ன பாவம் பண்ணோம்! கடவுளே, நீ தான் அவர காப்பாத்தணும். எங்கள காப்பாத்து கடவுளே” என்று கதறினாள் மீனா. ராஜாத்தி எவ்வளவோ சமாதானம் சொல்லியும் மீனாவை சமாதானப்படுத்த முடியவில்லை.


என்ன தோன்றியதோ தெரியவில்லை மீனாவுக்கு, பூஜை அறையில் அமர்ந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்த அவள், திடீரென எழுந்து கூடத்திற்கு சென்றாள். ரேடியோவை ஆன் செய்து பார்த்தாள். ஆனால் அது வேலை செய்யவில்லை. இதையே மூன்று, நான்கு முறை செய்தாள். ஆனால் ரேடியோவில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மீனாவுக்கு கவலை அதிகமானது. ஓ என்று அலறியடித்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்றாள். சத்தம்போட்டு அழத்தொடங்கிய மீனாவை ராஜாத்தி சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. ராஜாத்தியின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்த மீனா, சட்டென்று கூடத்திற்கு சென்றாள். ரேடியோவில் ஏதோ பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட பிறகு தான் தன்னை சற்று சுதாரித்துக்கொண்டாள். அவளுக்குள் சின்ன ஒரு நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.