Tuesday, 9 September 2014

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

சமீபத்தில் என் நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக விளையாடி, இப்போது ஒரே ஊரில் பணியில் இருந்தாலும், அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு அமைவதில்லை. நாம் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பது நம் கையில் மட்டும் இல்லை என்பதை நம்புபவன் நான். அன்று நண்பனைச் சந்தித்ததும் யதேச்சையாக நடந்த ஒன்றுதான்.

வழக்கமான நலம் விசாரிப்புகளில் தொடங்கிய எங்கள் உரையாடல் அப்படியே சினிமா, விளையாட்டு என பயணித்து கோவில்கள், ஆன்மிகம் வரை வந்தது. அப்போது அவன் தந்தைக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னான் நண்பன். அதை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 60, 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் நண்பரின் வீட்டுக்கு வந்திருந்தார். பார்ப்பதற்கு மிகவும் அப்பிரானியாகவும் அப்பாவியாகவும் இருந்தார்.

அவரை வீட்டினுள் வரவழைத்து கூடத்தில் உட்கார வைத்து, அவரைப் பற்றியும், வந்திருப்பதற்கான காரணத்தைப் பற்றியும் நண்பரின் தந்தை கேட்டார்.

அதற்கு அவர், தாம் திருப்பதியிலிருந்து வருவதாகவும், திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் உண்டியல் மேற்பார்வை பொறுப்பில் இருப்பதாகவும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பெருமாள் ஏதோ ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான் இந்த நபரை அனுப்பியிருக்கிறார் என நண்பரின் தந்தை நினைத்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

வந்திருந்த நபர், தம் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அவளுக்குத் தாலி செய்ய மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும், அந்தப் பகுதியிலுள்ள ஒரு கோவிலில் பணிபுரியும் ஒரு குருக்கள் சொல்லி அவரிடம் மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும் சொன்னார்.

நல்ல விஷயம்தான், தப்பில்லை என நினைத்து நண்பரின் தந்தை அவரிடம் ஒரு தொகையைக் கொடுக்க, வந்தவர் தம் கண்ணீரின் மூலம் நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அப்போது தொடங்கிய இந்தப் பழக்கம், அந்த நபர் ஊருக்கு வரும்போதெல்லாம் நண்பரின் வீட்டுக்குச் சென்று, நண்பரின் தந்தையையும் தாயையும் சந்தித்து திருப்பதி கோவில் பிரசாதத்தைக் கொடுக்கும் அளவுக்கு, அங்கேயே சிற்றுண்டி சாப்பிடும் அளவுக்கு வளர்ந்தது.

கேட்காமலேயே பெருமாளின் பிரசாதம் கிடைப்பதை, அதுவும் தங்கள் வீட்டிலேயே “டோர் டெலிவரி” செய்யப்படுவதை நினைக்கும்போதெல்லாம் நண்பரின் பெற்றோருக்கு ஆனந்தம். என்னே உன் கருணை, கோவிந்தா என மனமுருகினர் இருவரும்.

ஒவ்வொரு முறை வரும்போதும் திருப்பதி கோவிலுக்குள் சிறப்பு டிக்கெட்டில் அழைத்துச் செல்வதாகவும், வருவதற்கு ஒரு நாள் முன்பு தம்மிடம் சொன்னால் போதும்; மற்றவற்றை தாம் பார்த்துக் கொள்வதாகவும் சொன்னார் அவர்.

தாம் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று சொல்லி, தம் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்தக் காலத்திலும் அலைபேசி பயன்படுத்தாத ஒரு நபரா?

அந்த நபர் இத்தனை முறை அழைத்தும், தம்மை நேரில் வந்து சந்திக்கச் சொல்லி பெருமாளிடமிருந்து கட்டளை வரவில்லை. அவர் உத்தரவிட்டால்தானே அவரைத் தரிசிக்க முடியும்?

சென்ற வாரம் அந்த நபர் நண்பரின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது தம் மகனுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், திருமண செலவுகளுக்காக மடிப்பிச்சை கேட்டு வந்திருப்பதாகவும் சொன்னார். உடனே நண்பரின் தந்தை ஒரு தொகையை அவரிடம் கொடுத்தார்.

“கல்யாணத்துக்குன்னு நான் கேட்கும்போதெல்லாம் நீங்க தயங்காம எனக்கு உதவி பண்றீங்களே.. உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ணப்போறேன்..”

“இதுல என்ன இருக்கு சார்.. நல்ல விஷயம்தானே.. இத்தனை நாள் பழகியிருக்கோம்.. இதுகூட பண்ண மாட்டோமா?” என்று நண்பரின் தந்தை சாதாரணமாகச் சொல்ல, அவரின் கைவிரல்களை இறுகப் பற்றிக் கொண்டு மறுபடியும் கண்ணீரின் மூலம் தம் நன்றியைத் தெரிவித்தார் அந்த நபர்..

அப்போது அவருக்குள் ஏதோ தோன்ற, தம் பையில் இருந்து பத்து டிக்கெட்டுகளைக் எடுத்துக் காண்பித்து, அவை ஏதோ ஒரு சிறப்பு சேவைக்கான டிக்கெட்டுகள் என்றும், ஒரு டிக்கெட்டின் மதிப்பு மற்றவர்களுக்கு 500 ரூபாய்க்கும் மேலாக இருந்தாலும், கோவிலில் பணிபுரிபவர்களுக்கு வெறும் 350 ரூபாய்தான் என்றும் சொன்னார்.

மேலும், வெள்ளிக்கிழமையன்று தாம் சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய வேலை இருப்பதால், விருப்பமிருந்தால் திரும்பும் வழியில் தாமே அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அன்று திருப்பதியிலேயே தம்முடனேயே தங்க வைப்பதாகவும் நண்பரின் பெற்றோரிடம் சொல்ல, அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தங்களின் உறவினர்கள் சிலரிடம் உடனடியாக இந்த விஷயத்தைச் சொல்ல, அவர்கள் தாங்களும் வருவதாகச் சொன்னதால், நண்பரின் பெற்றோர் ஆறு டிக்கெட்டுகளை வாங்கினர்.

தனியாக ஒரு வேனை ஏற்பாடு செய்துகொண்டு, அதில் திருப்பதி சென்று பெருமாளைத் தரிசிக்கலாம் என முடிவெடுத்தனர் நண்பரின் பெற்றோரும், அவர்களது உறவினர்களும்.

இருந்தாலும், திரும்பும்வழியில் தாம் அவர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வதாகச் சொன்னார் அந்த நபர்.

வெள்ளிக்கிழமை. திட்டமிட்டபடியே நண்பரின் உறவினர்கள் வந்தாகிவிட்டது. மாலை வரை பொறுத்துப் பார்த்து, அதற்குப் பிறகு அந்த நபருடைய தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டார் நண்பரின் தந்தை. அதிர்ந்து போனார். அப்படி ஒரு தொலைபேசி எண்ணே இல்லையென்றும், தொடர்பு கொண்ட எண்ணை சரிபார்க்கவும் என்றும் தெலுங்கில் சொன்னது தொலைபேசி. மனமுடைந்து போனார் நண்பரின் தந்தை.

அந்த நபருடைய தொலைபேசியில் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்புண்டு என்று தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக் கொண்டு, எப்படியும் மறுநாள் திருப்பதி கோவிலுக்குப் போகப்போகிறோமே, அங்கேயே சென்று அவரைச் சந்திக்கலாம் என நினைத்தார்.

திட்டமிட்டபடி திருப்பதி கோவிலுக்குச் சென்று, திருவேங்கடமுடையானைத் தரிசித்தனர் ஆறு பேரும். திவ்விய தரிசனம். காணக் கண் கோடி வேண்டும். சில நொடிகளில் “ஜருக்கண்டி ஜருக்கண்டி” என்ற குரல் கேட்க, அங்கிருந்து வர மனமே இல்லாமல் பெருமாளிடம் விடைபெற்று வெளியே வந்தனர்.

நேராக உண்டியல் பகுதிக்கு வந்து அந்த நபரின் பெயரைச் சொல்லி விசாரித்தார் நண்பரின் தந்தை. அப்படி ஒரு நபர் அங்கு இல்லை என்பதை அங்கு இருந்தவர்கள் சொன்னதை அவரின் மதி ஏற்றாலும், மனம் ஏற்கவில்லை.

இத்தனை நாட்கள் நல்லவனாக நடித்து, தம்மிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சென்று இப்படி ஏமாற்றிவிட்டானே என பொருமியிருக்கிறார். பணம் போனால் பரவாயில்லை, நம்ப வைத்து ஏமாற்றிவிட்டானே என்று நொந்துபோயிருக்கிறார் அவர். பாவம்.

சரி ஆனது ஆகட்டும், இவரால்தான் திருப்பதிக்கு வந்து பெருமாளைத் தரிசித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் என உறவினர்கள் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தினர். நல்லபடியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

இந்த விஷயத்தைக் கேட்டதும் அந்த நபரின் மீது எனக்கு கோபம் வந்தது. நம்பிக்கை துரோகம் செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது? அவரை, இல்லையில்லை, அவனை மனதுக்குள் திட்டித் தீர்த்துவிட்டு நண்பனிடம் விடைபெற்று வீட்டை நோக்கி வந்தேன். வழிநெடுக இதே சிந்தனை.

அப்போது பழைய பக்தித் திரைப்படங்களில் வந்த சில காட்சிகள் என் நினைவில் தோன்றி மறைந்தன.

அந்தத் திரைப்படங்களில் கடவுள் மனித வேடத்தில் வந்து பக்தனிடம் இருந்து ஏதோ ஒரு பொருளை அபகரித்துச் செல்வார் அல்லது ஒளித்துவைத்து விடுவார் அல்லது உடைத்து விடுவார்.

வந்தவர் கடவுள்தான் என்பது தெரியாமல் அந்த பக்தர் “கடவுளே என்னை இப்படியா சோதிப்பது?” என்று நியாயம் கேட்பார். கடைசியில் கடவுள் அந்த பக்தரிடம் “என்னை நன்றாகப் பார்” என்று சொல்லி கோவிலுக்குள் சென்று மறைந்துவிடுவார். அப்போதுதான் வந்தது சாட்ஷாத் கடவுளே என்று அந்த பக்தருக்குத் தெரியும். உடனே அவர் மனமுருகி ஒரு பாட்டு பாட, திரைப்படம் இனிதே முடிவடையும்.

இதுபோல், நண்பரின் வீட்டுக்கு திருப்பதியிலிருந்து வந்திருந்தவர் ஏன் கடவுளாக இருக்கக்கூடாது என நான் யோசித்தேன். மேலும், எப்போதோ, எந்த ஜென்மத்திலோ தாம் தவறான வழியில் சம்பாதித்த இந்தத் தொகையை, யாரிடமோ தாம் கடனாக வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் விட்டுவிட்ட இந்தத் தொகையை இப்போது கடவுளே வாங்கிக் கொண்டு போய்விட்டார் என ஏன் நண்பரின் தந்தை யோசிக்கக்கூடாது என நான் யோசித்தேன். இப்படி யோசித்தால் எதிர்பார்ப்பும், கவலையும் குறைந்து நிம்மதி நிலைக்குமே?

ஒரு வேளை எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால்தான், இப்படி ஒரு அனுபவம் வாய்த்தால்தான் அவரின் மனநிலையும், வேதனையும் புரியுமோ?

எது எப்படியோ, என்ன நடந்தாலும் “போற்றுவோர் போற்றலும், தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் பெருமாளுக்கே” என்று விட்டுவிடுவதுதானே நல்லது?


ஏடுகுண்டலவாடா, வெங்கடரமணா, கோவிந்தா கோவிந்தா!

Thursday, 4 September 2014

சிறுகதை 021 - என் சாட்சி எடுபடுமா? (May 2014)

                என் சாட்சி எடுபடுமா?

இன்று இரவு 8 மணி இருக்கும் என நினைக்கிறேன். அப்போதுதான் கொலை செய்யப்பட்டாள் செலீனா.

கடந்த 2 வருடங்களாக வீட்டில் தனியாக இருந்து வந்தாள். பாதுகாப்புக்கு யாரும் இல்லை. பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். என்னை அவர்கள்தான் இங்கு அனுப்பி வைத்தார்கள்.

வருடத்திற்கு ஓரிரு முறைதான் நாங்கள் எல்லோரும் சந்திப்போம். அப்படி ஒரு சந்திப்பின்போதுதான் செலீனாவின் தந்தையின் நெருங்கிய நண்பரான போலீஸ் கமிஷனர் விக்ரமை முதன்முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகு அவரைப் பார்த்ததில்லை.

இவ்வளவு பெரிய பங்களாவிற்கு வாட்ச்மேன் ஒருவன்தான். சம்பத் அவன் பெயர். இரண்டு வருடங்களாக, அதாவது செலீனாவின் தந்தை இங்கு இருந்த காலத்திலிருந்தே வேலை பார்த்து வருகிறான். நம்பிக்கைக்குரியவன்.

செலீனாவின் நண்பர்கள் அவ்வப்போது வீட்டுக்கு வருவதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஆட்டம், பாட்டம், அரட்டை இருக்குமே தவிர மது, சிகரெட் போன்றவையெல்லாம் இருக்காது. என்னதான் பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் செலீனாவும் அவளின் நண்பர்களும் விசித்திரமானவர்கள் என நினைக்கிறேன்.

இன்று பகல், சுமார் 3 மணி என நினைக்கிறேன். செலீனாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்திருந்தது அவள் தந்தை. அவசரமாகப் பேசிவிட்டு வெளியே சென்றாள். நான் இங்கேயேதான் இருந்தேன்.

தனியாக இருக்க எனக்கு மிகவும் போர் அடித்தது. ஆனாலும் செலீனா திரும்பி வரும்வரை காத்திருக்கலாம் என நினைத்து, ஜன்னல் வழியாக வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரண்டு மணி நேரத்தில் வீட்டின் வெளிப்புற கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. செலீனாதான் தன் காரில் திரும்பி வந்திருந்தாள். சம்பத் கதவைத் திறந்து, காரில் இருந்த செலீனாவைப் பார்த்து சல்யூட் அடித்தான்.

காரை வீட்டுக் கூடத்திற்கு நேர் எதிரே பார்க் செய்துவிட்டு, முன் இருக்கையில் இருந்த பெட்டியை தன் இடது கையில் எடுத்துக் கொண்டு காரின் கதவைத் திறந்தாள். காரைவிட்டு இறங்கியதும் கதவை மூடி, ரிமோட் சாவியால் காரை பூட்டும் போது பெட்டி கீழே விழுந்தது.

பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டு கட்டுகள் கத்தை கத்தையாக கீழே விழுந்தன. அவற்றுக்கு பெட்டியிலிருந்து வெளியே வர அப்படி என்னதான் அவசரமோ, தெரியவில்லை. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ச்சே..” என்று சொல்லி, பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, ரூபாய் கட்டுகளை எடுக்கத் தொடங்கினாள் செலீனா. அப்போது சம்பத் அங்கே வந்து அவளுக்கு உதவினான்.

ரூபாய் கட்டுகளை எடுத்து பொறுமையாக அடுக்கிக் கொண்டிருந்த செலீனாவிடம் கீழே விழுந்திருந்த சில கட்டுகளை எடுத்து, “இந்தாங்க மேடம். பாத்து பத்திரமா வெச்சுக்கோங்க” என்று கொடுத்தான்.

“தேங்க்ஸ்ங்க” என்று சொல்லிவிட்டு, பெட்டியை பூட்டி உள்ளே எடுத்துக் கொண்டு வந்தாள்.

இப்படி ஒரு நேர்மையான வாட்ச்மேன் நமக்குக் கிடைத்திருக்கிறாரே, அவருடைய சம்பளத்தை அடுத்த மாதம் முதல் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என செலீனா நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. சம்பத்திடம் நன்றி சொல்லும்போது அவள் முகம் இதைச் சொன்னது போல் இருந்தது.

தன் அறைக்குச் சென்று பெட்டியை வைத்துவிட்டு கைப்பேசியில் தன் தந்தையை அழைத்தாள்.

“டாடி, அங்கிள் கிட்டயிருந்து நீங்க சொன்ன மாதிரி சூட்கேஸ் வாங்கிட்டேன்”

மறுமுனையில் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

“ஓ, அப்படியா? எப்போ வர்றீங்க?”

....

“ஐ யாம் வெரி ஹாப்பி டாடி. மம்மியும் வர்றாங்களா?”

....

“ச்சே, அவங்களும் வரலாமில்ல. ஒரு நாள் வந்துட்டு போறதுல என்ன ஆகிடப்போகுது?”

....

“தெரியும்தான். இருந்தாலும்...”

....

“சரி டாடி. சீ யூ நெக்ஸ்ட் வீக்”

....

அழைப்பைத் துண்டித்து, கூடத்தில் எனக்கு நேர் எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். தன் தலைக்குப் பின்னால் இருந்த ஜன்னலை மூடி, என்னை இயக்க ஆரம்பித்தாள்.

எனக்குள் வெப்பம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்திலேயே என்னுள் மூழ்கினாள். பல விஷயங்கள் கற்றுக் கொண்டோம். நேரம் கடந்ததே தெரியவில்லை.

அவளுக்கு அயர்ச்சியாய் இருந்தது போலும். என்னை அணைத்த பின், அப்படியே தூங்க ஆரம்பித்தாள். நான் அவள் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.

இரவு 8 மணி ஆகியிருந்தது. எழுந்து தன் அறைக்குச் சென்றாள். என்ன பார்த்தாளோ தெரியவில்லை, அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து கூடத்தில் இருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே சென்றாள்.

“வாட்ச்மேன் இங்கே வாங்க” என்று சத்தமாகக் கூப்பிட்டுவிட்டு உள்ளே வந்தாள். எல்லாவற்றையும் நான் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

“இதோ வர்றேன் மேடம்” சம்பத்தின் பதில்.

உள்ளே வந்த சம்பத்தை கோபமாக முறைத்தாள் செலீனா.

“என்னாச்சு மேடம்?”

“எதுக்கு திருடறீங்க வாட்ச்மேன்?”

திடுக்கிட்டது சம்பத் மட்டுமல்ல, நானும்தான். சம்பது இப்படி செய்யக்கூடியவன் இல்லை என்றே நானும் நினைத்திருந்தேன்.

“நான் எதையும் திருடலையே மேடம்”

“பொய் சொல்லாதீங்க” செலீனாவின் குரல், அவளின் கோபம் அதிகரித்திருந்ததை அப்பட்டமாக சொல்லியது.

“என்ன மேடம், என்னையே சந்தேகப்படறீங்களே! நான் உங்க அப்பா இங்க இருந்த காலத்துல இருந்து இருக்கேன்” சமாளிக்கப் பார்த்தான் சம்பத்.

“நடிக்காதீங்க. நான் இன்னிக்கு எடுத்துட்டு வரும்போது, இந்த பெட்டியில அஞ்சு கோடி ரூபாய் இருந்தது. இப்போ பத்து லட்சம் குறையுது, ஒரு முழு கட்டையே காணோம். எங்கே போயிருக்க முடியும்?”

“நீங்க எடுத்துட்டு வரும்போது சரியா எண்ணினீங்களா மேடம்?” ஒப்புக் கொள்வது போல் தெரியவில்லை.

“திருடறதையும் திருடிட்டு, இப்போ எங்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா? போலீஸுக்குப் போன் பண்ணட்டுமா?” உச்ச ஸ்தாயியில் கத்தினாள் செலீனா.

உண்மையைக் கண்டுபிடித்துவிட்டாள், இனி பொய் சொல்லி ஏதும் ஆகப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் சம்பத் என நினைக்கிறேன்.

விருட்டென்று செலீனாவை நெருங்கி, அவள் சுதாரிப்பதற்கு முன், அவளின் கழுத்தை நெறித்தான். துடித்தாள் அவள். சம்பத்தை தடுக்க நினைத்தேன், ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. ஏதும் செய்ய முடியாதவனாய் அப்படியே இருந்தேன்.

சில நிமிடங்களில் செலீனாவின் உயிர் பிரிந்தது என நினைக்கிறேன். எனக்கு எதிரே தரையில் சரிந்து விழுந்தாள். பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தான் சம்பத்.

ப்போது மணி பனிரெண்டு. இது வரை வீட்டுக்கு யாருமே வரவில்லை. தரையில் பாவமாய் உயிரற்று கிடக்கிறாள் செலீனா. அவள் கண்கள் இன்னமும் என்னை நோக்கியே இருந்தன.

பத்து, பதினைந்து முறை செலீனாவின் செல்போன் ஒலித்தது. ஆனால் அவள் பதில் பேசும் நிலையில் இல்லை என்பது அழைத்தவருக்குத் தெரியுமா?

தன் மகளைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் அவளுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க, கூடிய விரைவில் தன் நெருங்கிய நண்பர் விக்ரமையோ, அல்லது வேறு யாரையோ அனுப்பி வைப்பார் அவளின் தந்தை என கணிக்கிறேன்.

எல்லா உண்மையும் தெரிந்த நானும் அப்படியே இருக்கிறேன். நடந்த சம்பவத்தை மறக்காமல், ஒரு வசனம்கூட மாறாமல் என்னால் சொல்ல முடியும். ஆனால் ..........


காவல்துறை அதிகாரிகள் ஒரு வெளி நாட்டு ப்ளாஸ்மா டி.வியான என் சாட்சியை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

Tuesday, 19 August 2014

சிறுகதை 020 - திருட்டுப்பயல் (June 2014)

திருட்டுப்பயல்

மணி நடுராத்திரி 1. தன் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு, சத்துவாச்சாரியில் உள்ள தன் வீட்டுக்கு வந்து அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் ஜீவா. நேற்று பெய்த பத்து நிமிட கனமழை, சூட்டைக் கிளப்பிவிட்டதே ஒழிய, அந்த இடத்தின் வெப்பம் துளிகூட குறையவில்லை.

வேலமரங்கள் அதிகம் நிறைந்திருந்ததால்வேலூர்என்ற காரணப்பெயர் பெற்றிருந்தாலும், கடந்த சில வருடங்களாக நிலவிய வரலாற்று சிறப்புமிக்க வெப்பத்தின் காரணமாகவெயிலூர்என்று இன்னொரு காரணப்பெயர் கிடைக்கப்பெற்றதில் அந்த ஊர்க்காரர்களுக்கு எந்த ஒரு நகைச்சுவையும் இல்லை. வெப்பத்தை அனுபவிப்பர்கள் அவர்கள்தானே, பாவம்.

வேலூரில் மழை பெய்வது என்பது உலக அதிசயங்களுள் ஒன்று. அதுவும் கோடைக் காலத்தில் மழை என்பது கடைசியாக டைனோசர் காலத்தில் நிகழ்ந்தது என்று வரலாற்றுச் சுவடுகள் கூறுவதாகத் தகவல்.

வேலூரில் வெயில் காலத்தில் மழை பெய்தால், ஒரு வேளை ஊரின் வெப்பம் தாங்க முடியாமல் சூரியனுக்கே வியர்க்கிறதோ என்று யோசிக்கத் தோன்றும்.

நேற்றும் இப்படித்தான். மழை சில நிமிடங்கள் பெய்துவிட்டு, ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதால் வெப்பம் அதிகமானதுதான் மிச்சம். போதாக்குறைக்கு மின்வெட்டு வேறு.

தன் வீட்டின் படுக்கையறையில் ஜன்னல்கள் இல்லாத காரணத்தால், வீட்டுக்கூடத்துக்கு வந்து, கூடத்தில் இருந்த ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். பரவாயில்லை, ரொம்பப் புழுக்கமாக இல்லை.

பக்கத்து வீட்டு மாடியில் யாரோ நடப்பது போன்ற சத்தம் கேட்டது. தூக்கக் கலக்கத்தில் அதை பொருட்படுத்தாமல் தூங்கினான். சில நிமிடங்களில் தன் வீட்டு வாசற்கதவின் பூட்டு உடைக்கப்படும் சத்தம் அவன் காதில் கேட்டது. தூக்கிவாரிப் போட்டதால் தூக்கத்திலிருந்து விழித்தான் ஜீவா.

தன் கைப்பேசியைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் வீட்டுக்கூடத்தினுள் நுழைந்துவிட்டான் திருடன். அவன் கையில் வழக்கம்போல் ஒரு பளபளக்கும் கத்தி.

ஏய், சத்தம் போட்டே.. அவ்ளோதான்.. விஸ்க் விஸ்க்என்று கர்ஜித்தான் திருடன். ஊருக்குச் சென்றிருக்கும் தன் மனைவியின் குரலில் அவ்வப்போது வெளிப்படும் அதே கொடூரமும் கோபமும் இந்தத் திருடனின் குரலில் இருந்ததை உணர்ந்தான் ஜீவா.

சரி.. சரி.. கத்தலைபயத்தில் பம்மிக்கொண்டே சொன்னான் ஜீவா.
பணம், நகை எல்லாத்தையும் எங்கே வெச்சிருக்கே?” திருடனின் குரலில் கனிவை எதிர்பார்க்க முடியுமா? சீலிங்கே இடிந்து கீழே விழுந்துவிடும் அளவுக்கு இருந்தது அவன் கர்ஜனை.

அதெல்லாம் வீட்டுல வெச்சிக்கறதில்லை..” பயத்தில் ஜீவாவின் உடலும் குரலும் நடுங்குவதை அந்தத் திருடன் கவனிக்கத் தவறவில்லை.

வீட்டுல வெச்சிகறதில்லைன்னா, எங்கே வெச்சிருக்கே? சின்ன வீட்டுலயா?”

ஐயோ இல்லை சார்.. நான் ஒரு ஏகப்பத்தினிவிரதன்அப்பாவியாகச் சொன்னான் ஜீவா.

ஏய்.. என்னது ஏகப்பட்ட பத்மினியா? என்னடா சொல்றே?” தன் முன்னால் நின்றுகொண்டிருப்பவன் பலவீனமானவன் என்பது தெரிந்தவுடன் ஒருவிதத் திமிர் வெளிப்பட்டது திருடனின் குரலில். இதுதானே இந்தக் காலகட்டத்தில் மனித இயல்பு.

ஐயோ.. பத்மினியோட அண்ணனா நீங்க? சார், என்னை மன்னிச்சிடுங்க. நானும் உங்க தங்கச்சியும் காலேஜ் நாள்ல லவ் பண்ணது உண்மைதான். ஆனால், நாலு வருஷத்துக்கு முன்னாடி அவளைப் பார்த்ததுதான் கடைசி. அதுக்கப்பறம் நான் அவளைப் பார்க்கவேயில்லை. எனக்கு ஒன்னும் தெரியாது சார்பயத்தில் உண்மைகளை எல்லாம் உளற ஆரம்பித்தான் ஜீவா.

என்னது பத்மினியா? டேய் என்னடா உளறிக்கிட்டு இருக்கே? மவனே, ஒரு போடு போட்டா அவ்வளவுதான். என்னைப் பார்த்தா எப்படி இருக்குது? நெக்கலா உனக்கு?”

ஐய்யய்யோ.. அப்போ நீங்க நிக்கோல் சாராவோட அண்ணனா? மன்னிச்சிடுங்க சார். உங்க தங்கச்சியை நான் காலேஜ் நாள்ல பார்த்ததுதான். பத்மினியைப் பார்க்கறதுக்கு முன்னாடி வரைக்கும் நானும் நிக்கோலும் லவ் பண்ணிட்டு இருந்தோம். ஆனா அதுக்கப்பறம் எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு வந்துடுச்சு. அதனால நாங்க சுமூகமா, நண்பர்களாக பிரிஞ்சிட்டோம்

.. அப்படியா விஷயம்? அப்பறம் என்னாச்சு?” பொறுமையாக கவனிப்பதுபோல கேட்டான் திருடன்.

அதுக்கப்பறம் தான் நான் பத்மினியை சந்திச்சேன். அவளைப் பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்..” என்று ஜீவா விளக்கிக் கொண்டிருக்கும்போதுஅடச்சீ நிறுத்துஎன்று கத்தினான் திருடன். பொறுமையிழந்திருந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

உடனே கப் சிப் ஆனான் ஜீவா.

உன்னோட பாழாப்போன லவ் ஸ்டோரியை கேட்கவா நான் இங்கே வந்திருக்கேன்

சாரி சார். நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியலை. அதான்..”

மூடுடா வாயை. விட்டா பேசிக்கிட்டே இருப்பே போல. ஒழுங்கா மரியாதையா பணம் நகை எல்லாத்தையும் எங்கே வெச்சிருக்கே சொல்லு. இல்லைன்னா கத்தியை சொருகிடுவேன். ஜாக்கிரதைமிரட்ட ஆரம்பித்தான் திருடன்.

எல்லாம் பேங்குலதான் இருக்கு சார். இங்கே நீங்க எதிர்பார்க்குற எதுவும் இல்லை. என்னை விட்டுடுங்க சார்கை கூப்பி வேண்ட ஆரம்பித்தான் ஜீவா.

எல்லாம் தெரியும். வீட்டுல பீரோ எங்கடா இருக்கு?”

பெட்ரூமுல சார்

வாடா என் கூட. நீயே அந்த பீரோவைத் திற. பூட்டு உடைக்கிற வேலை மிச்சம் எனக்கு

சார், இது உங்களுக்கே ஓவரா தெரியலையா. என் வீட்டு பீரோவை என்னையே திறக்கச் சொல்றீங்களே?” அப்பாவியாகக் கேட்டான்.

என்ன அங்க முனுமுனுப்பு? கத்தியோட கூர்மையா பார்க்கறியா?” என்று தன் கையில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினான் திருடன்.

தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு மெதுவாக படுக்கையறைக்குச் சென்றான் ஜீவா. அவனைப் பின்தொடர்ந்து வந்தான் திருடன்.

லைட்டைப் போடுடா. இருட்டா இருக்குல்லஎன்று உத்தரவிட்டான் திருடன். அவன் சொன்னதுபோலவே ட்யூப் லைட்டின் ஸ்விட்சை அழுத்தினான் ஜீவா. ஆனால் ட்யூப் லைட் எரியவில்லை.

சார், கரண்ட் இல்லை. டார்ச் தான் இருக்கு. எடுக்கட்டுமா?” கிட்டத்தட்ட அடிமைபோல் ஆகியிருந்தான் ஜீவா.

ஹும், சரி. டார்ச் லைட்டை எடுத்துக்கோ. பீரோவைத் திற

அவன் சொன்னதுபோலவே டார்ச் லைட்டை எடுத்து அதை இயக்கி, தலையணைக்கு அடியில் வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறக்க முயற்சித்தான் ஜீவா.

என்னடா இவ்ளோ சின்ன பீரோவா இருக்கு? நாலரை அடிதான் உயரம் இருக்கும்போல?”

ஆமாம் சார். உள்ளே வெக்க எதுவும் இல்லை. அதனால சின்ன பீரோவே போதும்னு பொண்டாட்டி சொன்னாங்க. அதனாலதான் இதை வாங்கினோம்கிளிப்பிள்ளையைப் போல் அழகாகப் பதில் சொல்லிவிட்டு தொடர்ந்து பீரோவைத் திறந்து கொண்டிருந்தான்.

என்னடா இவ்ளோ நேரம் எடுத்துக்கறே?” திருடனின் பொறுமை போய்க் கொண்டிருந்தது.

இதோ இப்போ திறந்திடுவேன் சார்

ஆச்சா? எவ்ளோ நேரம்? கொஞ்சம் கூட சுறுசுறுப்பில்லை உனக்கு

பீரோவைத் திறந்தான் ஜீவா. “ஆச்சு சார். வாங்க, வந்து பாருங்கஎன்று திருடனை பவ்யமாக அழைத்தான்.

ஆங், தள்ளிக்கோ. கத்தி மேல பட்டுறப்போகுதுஎன்று ஜீவாவை நகரச் சொல்லிவிட்டு, பீரோவின் முன் வந்து நின்றான் திருடன்.

பீரோவின் கதவைத் திறந்தான். அந்த அதிர்வில் பீரோவின் மேல் வைக்கப்பட்டிருந்த சில மாத்திரை அட்டைகள், ஆயின்மெண்ட்கள் கீழே விழுந்தன.

அந்த மாத்திரை அட்டைகளையும், ஆயின்மெண்ட்களையும் எங்கேயோ பார்த்திருப்பதுபோல் இருந்ததால், கீழே குனிந்து அவற்றை எடுத்தான் திருடன். மாத்திரைகளின் பெயர்களையும், ஆயின்மெண்ட்களின் பெயர்களையும் படித்ததும் அவன் முகத்தில் இருந்த அந்த கோபமும், திமிரும் மறைந்து, கனிவும், அக்கறையும் தோன்றியது.

ஜீவாவை நோக்கி திரும்பி நின்று, “இந்த ஆயின்மெண்ட், மாத்திரை எல்லாம் நீ போட்டுக்கறதா?” என்று கேட்டான்.

ஆமாம் சார்

திருடனின் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பிக்கும் முன் அதைத் துடைத்துக் கொண்டான்.

என்ன ஆயின்மெண்ட் போட்டு என்ன பிரயோஜனம்? ஒன்னும் குணமாகுற மாதிரி இல்லையேஎன்று வருத்தப்பட்டான் ஜீவா.

டேய், இதெல்லாம் சரிப்பட்டு வராது. எனக்கும் மூலம் இருந்துச்சு. போடாத மாத்திரையில்லை, ஆயின்மெண்ட் இல்லை. ரொம்ப வருஷமா சரியாகலை. அப்பறமா ஒரு டாக்டரைப் போய் பார்த்தேன். அவர்தான் ஆப்பரேஷன் பண்ணி, என்னை குணப்படுத்தினார்

உங்களுக்கு குணமாகிடுச்சு சார். அதனால நீங்க நிம்மதியா இருக்கீங்க. நாலு வீட்டுக்குப் போறீங்க, வர்றீங்க. எனக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா? உக்கார முடியலை, படுத்துக்க முடியலை. எந்த ஊருக்கும் போக முடியலைஎன்று ஜீவா சொல்லும்போது அவன் கண்களில் நீர் தேங்கியிருந்தது. அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி, கண்ணீராக வழியத் தொடங்கியது.

ஜீவா அழுவதைப் பார்க்கும்போது, தன்னையே பார்ப்பது போல் இருந்தது திருடனுக்கு. டேய், டேய்.. அழாதே. ஆம்பிளைப் புள்ளைங்க அழக்கூடாதுஎன்று ஜீவாவின் கண்ணீரைத் துடைத்தான் திருடன்.

நான் ஒரு டாக்டரோட நம்பர் கொடுக்கறேன். நீ நேரா அவரைப் போய் பாரு. அவர் எல்லாத்தையும் சரி பண்ணிடுவாறுஎன்று ஜீவாவை சமாதானப்படுத்தி, அவனுக்கு ஆறுதல் சொன்னான் திருடன்.

ஒரு பாலைவனத்தில், தாகத்தினால் வரண்டு வதங்கி போயிருந்த ஒருவனுக்கு பாட்டில் பாட்டிலாகக் குளிர்ந்த நீர் கிடைத்தால் எப்படி இருக்கும்? திருடனின் இந்த பதிலைக் கேட்டு அப்படி உணர்ந்தான் ஜீவா. முகம் பளிச்சென்று ஒளிர்ந்தது.

சுவற்றில் அந்த மருத்துவரின் கைப்பேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து வெறுங்கையுடன் கிளம்பினான் திருடன். அந்த நொடி அங்கு மின்சாரம் திரும்ப வந்தது, ட்யூப் லைட் எரிந்தது,

வெளிச்சமானது அந்த அறை மட்டுமல்ல, ஜீவாவின் வாழ்க்கையும்தான்.

தனது வாழ்வில் ஒளியேற்றிய அந்தத் திருடனுக்கு மனதார நன்றி சொன்னான் ஜீவா.

Sunday, 3 August 2014

கல்லூரி கலாட்டாக்கள் - பகுதி 2

கல்லூரி கலாட்டாக்கள்

கலாட்டா 5:

பொறியியல் மூன்றாம் ஆண்டு என நினைக்கிறேன். அலைபேசி அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்திருந்தது.

ஒரு தனியார் நிறுவன அலைபேசியை 500 ரூபாய்க்கு வாங்கலாம் என்று வந்திருந்த காலம் அது. அன்றைய நாட்களில் 500 ரூபாய்க்கு அலைபேசி கிடைக்கச் செய்த அந்த நிறுவனமும், அதை அவர்கள் விளம்பரப்படுத்தியதும் இன்றைய காலகட்டத்தில் நாம் காண்கிற அலைபேசிகளின் விற்பனைக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணங்களுள் ஒன்று என்பதை மறுக்க முடியாது,

ஆனால், அந்த குறிப்பிட்ட அலைபேசியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றால் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என நினைத்து பலர் அந்த அலைபேசியை வீட்டிலோ, விடுதியிலோ வைத்துவிட்டு வெறுங்கையோடு வகுப்பறைக்கு வந்ததுண்டு. சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் கடன் வாங்கியோ, வீட்டில் பொய் சொல்லியோ கொஞ்சம் விலையுயர்ந்த அலைபேசியை வாங்கி, அதை எடுத்துக் கொண்டு கம்பீரமாக வகுப்பறைக்கு வருவார்கள்.

பல மாணவ, மாணவிகள் அலைபேசியை இன்றியமையாத ஒரு பொருளாக எண்ணத் தொடங்கியிருந்தனர். அலைபேசியின் விலை எத்தனை அதிகமோ, அதை வைத்திருப்பவரது பொருளாதார நிலையும் அத்தனை உயர்ந்திருந்ததாக காட்சி இருந்தது.

நாளடைவில், அனைவரது கையிலும் நோட்டுப் புத்தகங்கள் இருந்ததோ இல்லையோ, அலைபேசி ஒன்றாவது இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த கலாட்டா அரங்கேறியது.

எங்கள் வகுப்பறையில், ஆசிரியரிடம் மாட்டி விடுவதற்கென்றே சில நண்பர்களின் பெயர்களை உரக்கச் சொன்ன காலம் அது. அதாவது, யாராவது ஒருவர் பாடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை செமினார் எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்னால், உடனே கடைசி வரிசையில் இருந்த நாங்களும், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த நண்பர்களும் சிலரின் பெயர்களைச் சொல்ல ஆரம்பிக்க, உடனே வகுப்பிலிருந்த மற்றவர்களும் அந்தப் பெயர்களை வழிமொழிய ஆரம்பிக்க, இறுதியில் அந்தப் பெயர்களில் ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். இதுதான் வழக்கம்.

இப்படி எங்களால் மாட்டிக் கொண்டவர்கள், இல்லையில்லை, நாங்கள் மாட்டிவிட்டவர்கள் அல்லது போட்டுக் கொடுத்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவன் செந்தில். எங்கள் நெருங்கிய நண்பர்களுள் ஒருவன்.

ஒரு நாள் காலை வகுப்பறையில் நுழைந்தபோது அவனது அலைபேசி ஒலிக்க, அந்த அழைப்பை ஏற்று பேசிக்கொண்டே உள்ளே வந்தான் செந்தில். கடைசி வரிசையில் இருந்த நாங்களும், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த அசோக் என்ற நண்பனும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அசோக்கிற்கு அந்த ஒரு அருமையான யோசனை தோன்றியது.

வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு அலைபேசியின் ரிங் டோனைக் கத்தவிட்டு, உடனே அனைவரும் “செந்தில்” என்று கத்த வேண்டும் என்று யோசனை சொன்னான் அசோக். சரி, ஒரு வழியில் எங்களுக்கும் பொழுது போகும் என்ற நினைப்பில் அந்த யோசனையைக் கடைசி வரிசையில் இருந்த நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.

ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் மிகவும் சின்சியராக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அசோக் எங்கள் பக்கம் திரும்பி இப்போது தன் அலைபேசியின் ரிங் டோனைக் கத்தவிடப் போவதாகவும், அடுத்த நொடி “செந்தில்” என்று அனைவரும் கத்த வேண்டும் என்றும் சொன்னான். நாங்கள் சரியென்றோம்.

சொன்னது போலவே அசோக் தன் அலைபேசியின் ரிங் டோனை ஒலிக்க வைத்து எங்கள் பக்கம் திரும்பி, “செந்தில்” என்று கத்த ஆரம்பித்தான். ஆனால், அதற்குள் நாங்கள் அனைவரும் “அசோக்” என்று கத்த ஆரம்பித்திருந்தோம். உடனே வகுப்பிலிருந்த மற்றவர்களும் “அசோக்” என்று கத்த ஆரம்பிக்க, அசோக் ஒருவன் மட்டுமே “செந்தில்” என்று கத்திக் கொண்டிருந்தது யார் காதிலும் விழவில்லை, பாவம். கடைசியில், தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டான்.


“செந்தில்” என்பதற்குப் பதிலாக “அசோக்” என்று கத்தவேண்டும் என்று கடைசி வரிசையில் இருந்த நாங்கள் பேசி வைத்துக் கொள்ளவில்லை. தானாகவே இப்படிக் கத்தியது எங்களுக்குள் இருந்த புரிதலைக் காட்டியது என்றே நினைக்கிறேன்.