Sunday, 18 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 7

மறக்க முடியாத முகங்கள் – 7:

நாளை திங்கட்கிழமை. மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கு திங்கட்கிழமை என்றால் திகில்கிழமைதான். சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வீட்டிலோ, வெளியிலோ நிம்மதியாக இருந்துவிட்டு திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்லவேண்டும் என நினைக்கும்போது, ஒரு சின்ன சோகம் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். இப்படி நினைப்பதுதான் இயல்பு என நினைக்கும் அளவுக்கு மாறிவிட்டது நிலைமை. இப்படி நினைக்காதவர்களை சங்கத்தைவிட்டே ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள்.

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலை. அலுவலகம் சென்று வர அலுவலகப் / அரசுப் பேருந்து, இல்லையென்றால் இரு / நான்கு சக்கர வாகனம், ஏ.சி அறைகள், நேரத்துக்கு சாப்பாடு, சிற்றுண்டி வசதி, நினைத்த நேரத்துக்கு காபி, டீ குடிக்க வசதி, இன்டர்னெட் வசதி.

இப்படி ஏராளமான வசதிகள் இருந்தாலும், எப்படியாவது அடுத்தவரைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும், சென்ற முறை கிடைத்த சம்பள உயர்வைவிட இந்த முறை அதிகம் வாங்கிவிட வேண்டும் போன்ற போட்டிகளால் மன அழுத்தம் அதிகமாகிறது.

கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை எப்படியாவது சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என நினைப்பது சரிதான். அது நம் கடமையும்கூட. ஆனால், அந்த வேலையை முடித்தவுடன் அடுத்து வேறு ஒரு முக்கியமான வேலையை இழுத்துப்போட்டு செய்யவேண்டும், அப்போதுதான் அப்ரைசல் நேரத்தில் இந்த எக்ஸ்ட்ரா வேலையைப்பற்றி சொல்லலாம் என நினைத்துக்கொண்டு, அந்த வேலையைப் பற்றி தெரியாமலே அதற்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டோ, வேலையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டோ இருந்தால், நம் வாழ்க்கையையும், உடல் நலத்தையும் பற்றி யார்தான் கவலைப்படுவது?

சரி, எக்ஸ்ட்ரா வேலை செய்தால் என்ன தவறு? அவருக்கு அதற்கேற்றார்போல் சம்பளமும், பதவி உயர்வும் கிடைக்குமே என நினைப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல். தன் வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பவருக்கும், எக்ஸ்ட்ரா வேலைகளை இழுத்துப்போட்டு செய்பவருக்கும், இந்தக் காலகட்டத்தில், மாதச் சம்பளத்தில் 3500 (அதிகபட்சம்) ரூபாய்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்படி உடல் நலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வேலை செய்துகொண்டிருந்தால் மருத்துவச் செலவு கூடி, கடைசியில் இருவருடைய சேமிப்பிலும் பெரிய வித்தியாசம் இருக்காது. பணம், பணம் என்று ஓடிக்கொண்டே இருந்தால், நம்மைப் பாதுகாக்க, நம் குடும்பத்தைப் பாதுகாக்க வானத்திலிருந்து யாராவது வருவார்களா? சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?

ஆனாலும், எத்தனையோ பேர் குடும்பச் சூழல் காரணமாக இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை வருத்திக் கொண்டு, மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகள் படக்கூடாது என்று உறுதிபூண்டு, உழைத்து உழைத்து ஓடாய்ப் போகிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக தங்கள் நிகழ்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து, தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பதில் ஒரு திருப்தி இவர்களுக்கு. சமீபத்தில் நான் சென்னை சென்றிருந்தபோது இப்படிப்பட்ட ஒருவரைச் சந்தித்தேன்.

தாம்பரத்திலிருந்து மயிலாப்பூர் செல்லவேண்டியிருந்தது. மணி இரவு 9:30 ஆகியிருந்ததால் பேருந்துகளை நம்ப மனமில்லை எனக்கு. சரி, ஆட்டோ பிடித்து சென்றுவிடலாம் என முடிவெடுத்து காத்துக் கொண்டிருந்தேன்.
நிறைய ஆட்டோக்காரர்கள் இவ்வளவு தூரம் வர முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். இன்னும் சிலர் இதற்குக் கட்டணமாக ஐநூறு ரூபாய் கேட்டார்கள். இப்படியே தொடர்ந்தால் என்னதான் செய்வது என நினைத்து கடவுளை வேண்டத் தொடங்கியவுடன் வந்தார் இந்த ஆட்டோக்காரர். மீட்டர் கட்டணத்துக்கு மேல் இருபது ரூபாய் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்து வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வழியில் வழக்கம்போல் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அதிகம் படித்தவரில்லை. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை, கள்ளம் கபடம் இல்லாமல் தன் உள்ளிருந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டார். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள், தலைவர்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம். பல அரசியல் தலைவர்களைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லையென்பது அவர் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அடுத்து விலைவாசி பற்றி பேச ஆரம்பித்தோம். காய்கறி விலையில் தொடங்கி, கல்விக்கான விலை வரை பேசினோம். காய்கறி விலை உயர்வால் மக்கள் தினசரி பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், மிக அதிக கல்விக் கட்டணத்தால் அவர்களின் நிகழ்காலமும், எதிர்காலமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை புட்டுப் புட்டு வைத்தார். அப்போதுதான் தன் குடும்பத்தைப் பற்றியும் தன் உழைப்பைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்.

அவருக்கு இரண்டு மகன்களாம். என்ன படிக்கிறார்கள், எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது என் நினைவில் இல்லை. ஆனால் படிப்புச் செலவு மட்டும் மாதத்திற்கு கிட்டத்தட்ட பதினான்காயிரம் ஆகிறதாம். இதை எப்படி சமாளிக்கிறாராம் தெரியுமா?

காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு, ஏழு மணி வரை ஒருவரிடம் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறாராம். மாதச் சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய். அதற்குப் பிறகு, தினம் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாய் வருமானம் (டீசல் செலவு போக) வரும் வரை ஆட்டோ ஓட்டுகிறாராம். காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு வந்துவிடுகிறாராம். அதற்குப் பிறகு அன்று முழுவதும் அவர்களுடன் பேச நேரம் கிடைப்பதேயில்லையாம்.

இப்படி அலைந்துகொண்டே இருப்பதால், வாரத்தில் நான்கைந்து நாட்களில், ஐந்து மணி நேரம்தான் தூங்க நேரம் கிடைக்கிறதாம். எத்தனை மணி நேரம்? ஐந்து மணி நேரம்!

இதைக் கேட்டதும் வாயடைத்துப் போனேன். குறைந்தது ஏழு மணி நேர தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் முழுவதும் அழுது வடிந்து போகும் எனக்கு. அப்படியிருக்கையில் வெறும் ஐந்து மணி நேரம்தான் தூக்கம் என்றால்?

இவர் படும் கஷ்டத்தை இவர் மனைவி தங்கள் பிள்ளைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்ப்பதாகவும், அவர்களும் நிலைமையைப் புரிந்து நன்றாகப் படித்து வருவதாகவும் சொன்னார். படிப்புதான் நம் பிள்ளைகளுக்கு நாம் தரும் பெரிய சொத்து என்றார். வேதவாக்கு. தொடர்ந்து பேசினோம்.

வீடு வந்து சேர்ந்தோம். வண்டியை விட்டு இறங்கும்போது “நான் அம்பது, அம்பத்தஞ்சு வயசு வரைக்கும்தான் வாழ்வேன்னு நினைக்கிறேன் சார். இவ்ளோ அலைச்சல், டென்ஷன், பிரஷர். எப்படி தாங்குவனோ தெரியல. இப்பவே உடம்புல ஏகப்பட்ட பிரச்சினை. ஆனா, அதுக்கு முன்னாடி என் பசங்களை நல்லா செட்டில் பண்ணிட்டா போதும் சார். எனக்கு வேற கவலையில்லை” என்றார். கண்கள் ஈரமாகின. அவருக்கும், எனக்கும்.


பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். அடுத்த திங்கட்கிழமையன்று அலுவலகம் செல்லவேண்டுமே என்ற அலுப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.

என்னையும் இப்படி மாற்றிய இவரது முகம் மறக்க முடியாத முகமே!

Friday, 9 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 6

றக்க முடியாத முகங்கள் – 6

இன்று மாலை அலுவலகத்திலிருந்து என் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். வழியில் இரண்டு டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. அவற்றை கடந்துதான் வர முடியும்.

முதல் சிக்னல் அலுவலகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. ஏகப்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் இருக்கும் பகுதி என்பதால் எப்போதுமே சாலையில் கார்களும், இரு சக்கர வாகனங்களும் சென்று கொண்டிருக்கும்.

காலை 7:30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7:30 மணி வரை போக்குவரத்து உச்சக்கட்டத்தில் இருக்கும். போக்குவரத்தை கட்டுப்படுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இரவு 9 மணி வரை இருப்பார்கள்.

இந்த சிக்னலில் சாலை விதிகளை மீறுபவர்களை அலேக்காகப் பிடித்து அபராதம் விதித்துவிடுவார்கள். என் நண்பர்கள் சிலரும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு, அபராதம் கட்டிவிட்டு வந்திருக்கிறார்கள் என்பதால் இது எனக்குத் தெரியும்.

இங்கிருந்து வலது பக்கம் திரும்பி நேராக வந்தால், சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இன்னொரு டிராஃபிக் சிக்னல். நான்கு சாலைகள் சந்திக்கும் ஒரு சந்திப்பு. இந்த இடத்தில் ஒரே ஒரு காவல்துறை அதிகாரிதான் இருப்பார். அவரும் பெரும்பாலான சமயங்களில் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு, வெரித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதால், இந்த சிக்னலில் பலர் சாலை விதிகளை மீறிச் செல்வார்கள்.

இன்று இந்த சிக்னலில் நான் நின்று கொண்டிருந்தபோது என் பக்கத்தில் ஒரு இரு சக்கர வாகனம் வந்து நின்றது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர்தான் ஓட்டுபவர். அவருக்குப் பின்னால் ஒரு சிறுவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். 7, 8 வயது இருக்கும் என நினைக்கிறேன்.

சில நொடிகள் அந்த சிக்னலில் நின்றுவிட்டு, பொறுமையிழந்து அங்கும் இங்கும் பார்த்தார் அந்த நபர். கண்காணிக்க யாரும் இல்லாததால் விருட்டென கிளம்பி சென்றுவிட்டார். அந்த சிறுவனோ நிமிர்ந்து சிக்னலை பார்த்துக்கொண்டும், பின் மற்ற வண்டிகளை பார்த்துக்கொண்டும் இருந்தான். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது!

இதைப் பார்த்ததும் எனக்கு கவலை கலந்த கோபம் வந்தது. போக்குவரத்துத்துறை அதிகாரி யாராவது அந்த இடத்தில் நின்றிருந்தால் இந்த நபர் சிக்னலை மதிக்காமல் சென்றிருப்பாரா என்பது சந்தேகமே. அவர் அங்கு இல்லாதது ஏன் என்று தெரியாமல் ஒரு முடிவுக்கு வரமுடியாது. சரி, இதை விட்டுவிடலாம்.

கண்காணிப்பதற்கு, தவறு செய்தால் பிடிப்பதற்கு, தண்டனை கொடுப்பதற்கு யாருமே இல்லையென்றால் இந்த மாதிரி சின்னச் சின்ன தவறு செய்பவர்கள், நாளை இதே மாதிரி சந்தர்ப்பம் அமைந்தால் பெரிய தவறுகளை செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

படித்தவர்கள் மனிதர்களாக, பண்புடையவர்களாக, பொது அறிவு உள்ளவர்களாக நடந்து கொள்வதற்கு கண்காணிப்பும், தண்டனையும், அவமானமும் அவசியமென்றால், நமக்கும் சர்க்கஸில் இருக்கும் மிருகங்களுக்கும், ஆட்டு மந்தைக்கும் என்ன வித்தியாசம்?

மிருகங்கள் சர்க்கஸிலும், மந்தையிலும் தங்கள் இயற்கை குணத்தை கட்டுப்படுத்த வேண்டிய, இயற்கை குணத்துக்கு மாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் இப்படி அடங்கி ஒடுங்கி நடக்கின்றன. சில மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனக்குப் புரியவில்லை. இதையும் விட்டுவிடலாம்.

வண்டியின் பின்னிருக்கையில் இருந்த அந்த சிறுவன் சிக்னலை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருந்தான். மற்ற வண்டிகள் சிக்னலில் நின்று கொண்டிருந்ததை அவன் நிச்சயம் கவனித்திருப்பான் என நினைக்கிறேன். இது எவ்வளவு ஆபத்தான ஒரு உதாரணம்?

சிறுவர்களும், குழந்தைகளும் நாம் சொல்லிக்கொடுப்பதைவிட, நம்மைப் பார்த்துதான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். நம் மொழி, மாடுலேஷன், உடல் அசைவு, ஒழுக்கம் முதலிய எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பார்கள். அதன்படியே நடக்கவும் செய்வார்கள். இதனால்தான் நாம் எப்போதும் நல்லதையே பேச வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், கண் முன்னாலேயே இப்படி சாலை விதிகளை மதிக்காமல் சென்றால், அச்சிறுவனுள் சாலை விதிகளை சில சமயம் மீறினால் தவறேதும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு அந்த நபரும் ஒரு காரணம். இது பிற விதிமுறைகளுக்கும் பொருந்தும் என்று அச்சிறுவன் யோசிக்கத் தொடங்கினால் இன்னும் கேடு.

இந்த காலத்தில் சாலை விதிகளை மீறுவது ஒரு சிறிய விஷயமாகிவிட்டது. ஆனால், அதன் விளைவு ஏதாவது ஒரு விபத்தின்போதுதான் நமக்கு புரிகிறது. பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டால்தான் சிலர் கற்றுக் கொள்கிறார்கள்.

நம்மால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தவறுகளை, கெட்ட செயல்களை செய்யாமல் இருந்தாலே பெரிய விஷயம். நம் நாட்டுக்கும், உலகத்துக்கும், பிற உயிர்களுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு இதுவாகத்தான் இருக்க முடியும்.
இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே, கடைசியில், கோபத்துடனும், கவலையுடனும் வீடு வந்து சேர்ந்தேன்.


சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்ததையும், அப்போது மற்ற வண்டிகள் நின்றுகொண்டிருந்ததையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவனின் முகம் மறக்க முடியாத முகமே!

Thursday, 8 May 2014

ஹைக்கூ கவிதைகள் – 1 - குளிர்காற்று

குளிர்காற்றவள்
அடித்ததனால்
அழுகிறானோ
கார்மேகன்?

பேசும் மொழி
புரியவில்லை..
ஆனாலும்
மரங்களைப்போல்
தலையசைத்துக் கொண்டிருக்கிறேன்
குளிர்காற்றும் ஒரு பெண்தான்

இனிமையான
குளிர்காற்றுடன்
பறந்து
வீட்டைவிட்டு
ஓடிவிடத் துடிக்கின்றன,
கொடியில்
காய்ந்து கொண்டிருக்கும்
துணிகள்

தலைமுடி
கையில்
கிடைத்தால்
போதும்,
புகுந்து விளையாடிவிடுகிறார்கள்
குழந்தைகளும்
குளிர்காற்றும்

குளிர்காற்றரசியின்
மேகப்படையின்
மழைத்தாக்குதலில்
எல்லாவற்றையும்,
எல்லோரையும்
வென்றுவிடுகிறாள்
பூமித்தாய்

குளிர்காற்றுப்பட்டால்
புத்துணர்ச்சி
கிடைக்கும்
என்கிறார்கள்
அறிஞர்கள்..
அப்பட்டமான பொய்..
மெய்மறந்து
உணர்ச்சியற்றவனாக
இருக்கிறேன் நான்..

ஆடத்தெரியாதவர்களையும்
ஆடத்தயங்குபவர்களையும்
ஆடவைத்துவிடுகிறாள்..
குளிர்காற்றும்
கடவுளே..

சலவை
செய்து
வெளுத்து எடுத்து விடுகிறாள்
வானத்தை..
கோபக்காரியோ?


குளிர்காற்றுக்கும்
அசைந்து
கொடுக்காதவர்கள்
‘இரும்பு’ மனிதர்கள் அல்லர்..
வெறும்
‘கல்’ நெஞ்சுக்காரர்கள்

Friday, 2 May 2014

மறக்க முடியாத முகங்கள் – 5

மறக்க முடியாத முகங்கள் – 5:

இப்பகுதியை நான் “A tale of two heart attacks” என்று ஆங்கிலத்தில் எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் மொழிபெயர்ப்பு செய்ய சோம்பேறித்தனமாக இருந்ததால் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன். ஆங்கிலம் தப்பித்தது.

நான் வசிக்கும் பகுதியில் ஒரு அரசியல்வாதி இருக்கிறார். இல்லையில்லை, இருந்தார். 1980-களில் இருந்து 2013 வரை அரசியலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மாரடைப்பில் உயிரிழந்தார்.

அரசியல்வாதி என்றாலே நேர்மையற்றவராகத்தான் இருப்பார் என்ற எண்ணம் நமக்கெல்லாம் தானாகத் தோன்றிவிடும். இது நம் தவறில்லை என்றும் நம்மில் சிலர் நினைக்கக்கூடும். எவ்வளவு வேடிக்கையான விஷயம் இது?

சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் எப்போது மக்கள் பணத்தை, மக்கள் சொத்தை அடைய நினைத்தாரோ, அப்போதே அப்பகுதி மக்கள் அவரது செயலை கண்டித்து, அவரை தண்டித்திருந்தால், இப்போது இந்த கொள்ளையடிக்கும் கலாச்சாரம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா?

இது நம் தவறுதான். சொல்லப்போனால், இதுதான் மிகப்பெரிய தவறு. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்வதை தடுக்காமல் இருப்பதும் தவறுதான். இதை என்று நாம் உணரப்போகிறோமோ? எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம் (இறைவன் இருக்குமிடத்தில் மின்வெட்டு இருக்காது என நினைக்கிறேன்!).

விஷயத்துக்கு வருவோம். இந்த அரசியல்வாதிக்கு நிறைய சொத்துகள், சில பல கல்லூரிகள் இருப்பதாக பலர் சொல்கின்றனர். செல்வச்செழிப்புடன்தான் இருந்தார்.

இவ்வளவு சொத்துகள் இருந்து என்ன பயன், மன அமைதி என்பது இருந்தால்தானே எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியும்? இவரின் மகன் மனவளர்ச்சி குன்றியவராம்.

முற்பிறவியிலோ, இப்பிறவியிலோ நாம் செய்த பாவங்கள் நிச்சயம் நம்மை வந்தடையும் என்பது என் நம்பிக்கை. நம் உடலையும், மனதையும் வருத்தும். வறுத்து அரைத்துவிடும். இந்த அரசியல்வாதியின் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது என நினைக்கிறேன்.

உயிர் பிரியும் அந்த இறுதி நொடிகளில், நிச்சயம் தன் மகனின் நிலைமையைப் பற்றி நினைத்திருப்பார். ஆனால், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

இந்த அரசியல்வாதியை நான் நேரில் பார்த்ததில்லை, பழகியதில்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான். அதனால் இவரது மரணம் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இன்னொருவரது மரணம் என்னை சற்று சங்கடப்படுத்தியது.

சென்ற வாரம் முடிதிருத்தகத்திற்குச் (சலூன் கடை) சென்றிருந்தேன். வழக்கமாக செல்லும் கடைதான். சென்றபோதெல்லாம் இதன் உரிமையாளரை சந்தித்திருக்கிறேன்.

கிரிக்கெட் மைதானத்தில் காணப்படும் புல் போல ‘லெவலாக இருந்த சின்ன தாடி, கண்ணாடி, நெற்றியில் குங்குமத்தில் ஒரு சின்ன கோடு, சரியாக சீவப்பட்ட தலை. எப்போதும் கை மடிக்கப்பட்டிருந்த கட்டம் போட்ட ஒரு முழுக்கை சட்டை, கறுப்பு / சாம்பல் நிற பேண்ட். இதுதான் அவர்.

இரண்டு, மூன்று முறைதான் அவருடன் பேசியிருக்கிறேன். தாய்மொழி தெலுங்கு என்றாலும், கன்னடமும் பேசுவார். என்னதான் பேசினாலும் சத்தம் வராது. மணிரத்னம் அவர்களின் திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்களைப் போல் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவார்.

அதுவும் காதலர்கள் நடுராத்திரியில் போர்வைக்குள்ளேயிருந்து பேசுவதுபோல் அமைதியாக பேசுவார். சில சமயம் அவர் பேசியது அவருக்காவது கேட்டிருக்குமா என வியந்திருக்கிறேன்.

எந்த ஒரு வார்த்தை / வாக்கியம் பேசினாலும் அதன் முடிவில் ஒரு சின்ன புன்னகை அவரது முகத்தை அலங்கரித்துவிடும். அதைப் பார்த்ததும், பதிலுக்கு நம்மால் புன்னகைக்காமல் இருக்கமுடியாது.

இந்த முறை அதே முடிதிருத்தகத்திற்குச் சென்றிருந்தபோது, இவரது புகைப்படம் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. மல்லிகைப்பூ மாலை அந்த புகைப்படத்தின் மேல் மாட்டப்பட்டிருந்தது.

என்ன நடந்தது என விசாரித்தேன். மாரடைப்பில் இறைவனடி சேர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள் கடையில் வேலை பார்ப்பவர்கள். சொல்ல முடியாத ஒரு சின்ன சோகம் என்னை சூழ்ந்து கொண்டது.

ஒரு நாவலை, தொடர்கதையை படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முக்கிய பகுதி அந்த நாவலில், தொடர்கதையில் இல்லை என்றால் நாம் எப்படி உணர்வோம்? காசு கொடுத்துவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்து புன்னகைக்க அவர் இனி இருக்கமாட்டார் என நினைக்கும்போது எனக்குள் இந்த உணர்வுதான் இருந்தது.

அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனாலும் அவரது மரணம் என்னை பாதித்தது என்றால் அதற்கு அவரது புன்னகை ஒரு முக்கிய காரணம்.


ஒவ்வொரு முறையும் ஒரு சின்ன புன்னகையின் மூலம் அந்த நொடியை இனிமையானதாக மாற்றிய அவரது முகம் மறக்க முடியாத முகமே!

Wednesday, 30 April 2014

கல்லூரி கலாட்டாக்கள் - பகுதி 1



கல்
லூரி கலாட்டாக்கள்


கல்லூரிப் பருவம் பற்றி நான் புதிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். நம் வாழ்வில் மறக்க முடியாத விஷயங்களை பட்டியலிட்டால், அப்பட்டியலில் நம் கல்லூரி வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் நிறைய இடம் பெறும் என நினைக்கிறேன்.

பொறியியல் படிப்பின் முதல் ஆண்டில் இரண்டாம் வரிசையில் உட்கார்ந்திருந்த நான், இரண்டாம் ஆண்டில் நான்காம் வரிசைக்கு முன்னேறி, பின் மற்ற இரண்டு ஆண்டுகளை கடைசி வரிசையில் உட்கார்ந்து முன்னேற்றத்தின் உச்சத்தை அடைந்தேன்.

ஏகப்பட்ட கலாட்டாக்கள், சிரிப்புகள், கிண்டல்கள், ரவுசுகள், கூச்சல்கள் நிறைந்தவை கல்லூரிப் பருவம். இப்பகுதியில், என் கல்லூரிப் பருவத்தில் கல்லூரியில், வகுப்பறையில், வெளியில் நிகழ்ந்த / நான் நிகழ்த்திய கலாட்டாக்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பகுதியை வாசிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் கல்லூரிப் பருவத்தை ஒரு முறை அசை போடுவீர்கள் என்றே நம்புகிறேன்.

பின் குறிப்பு: என்னைப் பற்றி ஏற்கனவே தெரிந்த என் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு இப்பதிவில் வரும் சம்பவங்களும், என் சேட்டைகளும், ரவுசுகளும் பரிச்சயமாக இருக்கக்கூடும்.

Disclaimer: The stunts are performed by professionals. Audiences are requested not to try to copy these stunts at home / school / college / anywhere.

கலாட்டா - 1:

2001-ம் ஆண்டு என நினைக்கிறேன். பொறியியல் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வகுப்பு நேரம் காலை 7:30 மணியிலிருந்து பகல் 1:15 வரை. கல்லூரிப் பேருந்து பகல் 2, 2:15 மணிக்கு எடுப்பார்கள். வீட்டுக்கு வருவதற்கு அரை மணி நேரமாகும்.

அப்போதெல்லாம் அனைவருக்கும் மெக்கானிக்கல் ஒர்க்ஷாப் வகுப்பு கட்டாயமாக இருக்கும். அன்று அந்த வகுப்புக்கான சீருடையில்தான் வர வேண்டும். ஆண்களுக்கு கரும்பச்சை நிற சர்ட், பேண்ட், பெண்களுக்கு ஒரு கரும்பச்சை நிற கோட்டு என நினைக்கிறேன்.

அன்று ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. கல்லூரிக் காலம் என்றாலே பல திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்பதும் ஒரு அர்த்தம். நானும் சில நண்பர்களும் அன்று எப்படியாவது இத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

ஒர்க்ஷாப்பில் இருந்த சூப்பர்வைசரிடம் சாக்கு சொல்லிவிட்டு, நானும் என் நண்பன் ஒருவனும் பகல் 1:15 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்தோம். கால் மணி நேரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தும் ஒரு பேருந்துகூட வரவில்லை. இப்படியே போனால், படத்தை பார்க்க முடியாதே என்ற பயம் மெல்ல தலைகாட்டியது.

என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் புல்லட்டில் அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தார். கை நீட்டி அவரை நிறுத்தினோம்.
அவரிடம் நான், “சார், என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி, ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. அவசரமா போகணும் சார்” என்றேன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்ததால் அவரும் நம்பிவிட்டார் போலும்.

“எந்த ஹாஸ்பிட்டல் தம்பி? எங்கே போகணும்?” இது அவர்.

“மம்மி ஹாஸ்பிட்டல் சார்”

“சரி, வேகமா ஏறு”

உடனே என் நண்பன் புல்லட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான் அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். அவர் வேகமாக வண்டியை ஓட்டினார்.

சித்தூர் பஸ் ஸ்டாண்டை அடைந்தோம். அங்கிருந்து திரையரங்கு இருக்கும் இடத்திற்கு நேரடிப் பேருந்து நிறைய உண்டு என்பதால் அங்கு இறங்கிக் கொள்வதாக சொன்னோம்.

அப்போது அவர், “வேணும்னா நானே உங்களை மம்மி ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிட்டு போறேன்” என்றார். பாவம், நல்ல மனிதர்.

அதற்கு என் நண்பன், “இல்லை சார் பரவாயில்ல. போற வழியில் இன்னொரு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டு அவனையும் கூட்டிக்கிட்டு போகணும். ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றான். அவரும் அதற்கு சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு சென்றுவிட்டார்.

நானும் நண்பனும் அங்கிருந்து நேராக திரையரங்கிற்குச் சென்று ஒரு வழியாக முதல் நாளே படத்தைப் பார்த்து, ஜென்ப சாபல்யத்தை அடைந்தோம்.

கலாட்டா – 2:

பொறியியல் இரண்டாம் ஆண்டு என நினைக்கிறேன். வகுப்பில் நுழைந்தபோது நண்பர்கள் வழக்கம்போல அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

என் வரிசைக்குச் சென்று பையை வைத்துவிட்டு உட்கார்ந்தேன். அப்போது, முன் வரிசையில் இருந்த ஒரு நண்பன் ஒரு மாதிரி திரும்பிப் பார்த்தான்.

“என்ன டா அப்படி பார்க்கறே?” என்று கேட்டேன்.

அதற்கு அவன், “கழுத்து, முதுகு பிடிச்சிருக்குடா” என்றான் அப்பாவியாக.

“யாருக்குடா?” என்றேன்.

“எனக்குத்தாண்டா” என்றான் அவன்.

“சரி, உன் கழுத்து, முதுகு எல்லாம் உனக்காவது பிடிச்சிருக்கே. அது பெரிய விஷயம்டா” என்றேன் நக்கலுடன்.

அதைக் கேட்டு கடுப்பாகிப் போன அவன், “டேய், நானே கழுத்து பிடிச்சிருக்குதேன்னு வலியில கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். இதுல உனக்கு நக்கல் வேறயா. நீயெல்லாம்...” என்று தொடர்ந்தான். ஆனால் அவன் சொன்னது என் காதில் விழவில்லை (நம்புங்க :P).

கலாட்டா – 3:

பொறியியல் மூன்றாம் ஆண்டு. புனே, அஜந்தா, எல்லோரா டூர் சென்றிருந்தோம். ரயிலில் காட்பாடியிலிருந்து புனே சென்று அங்கிருந்து பேருந்தில் செல்வதாக திட்டம். 20 மணி நேர ரயில் பயணம்.
ரயிலில் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு, மனமே இல்லாமல் அப்பர் பர்த்திலிருந்து இறங்கி, கீழே இருக்கையில் உட்கார்ந்து, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு வந்த நண்பன் ஒருவன், “என்னடா வெங்கட், இங்க உக்காந்துட்டிருக்கே?” என்று கேட்டான்.

உடனே எழுந்து நின்று “ஏண்டா கேக்கறே?” என்றேன் நான்.

“இல்லடா சும்மாதான். ஏன் நிக்கறே?” என்று கடுப்பேற்றினான்.

அதற்கு நான், என் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, “அது ஒன்னுமில்லடா. மறுபடியும் உக்காரனுமே, அதுக்குத்தான் இப்போ நிக்கறேன்” என்றேன்.

இந்த பதிலை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான் என நினைக்கிறேன். அப்போது நடையை கட்டினவன்தான், அந்த ரயில் பயணத்தில் அதற்குப்பிறகு அவனைப் பார்த்ததாக நினைவில்லை.

கலாட்டா – 4:

புனேவிலிருந்து பேருந்தில் சில இடங்களுக்குச் சென்றோம். அங்கிருந்து சில பேர் ஒரு குரூப்பாக நடராஜா சர்வீஸில் ஊர் சுற்ற கிளம்பினோம். மாலை 6 மணிக்கு அந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டுமென்பதால், அதற்கு முன் பேருந்தில் இருக்கவேண்டும் என சொல்லியிருந்தனர்.

நாங்கள் வெளியே சுற்றிவிட்டு திரும்பியபோது மணி 6:30 ஆகியிருந்தது. ரயிலில் என்னிடம் கேள்வி கேட்டு வாங்கிக்கொண்ட அதே நண்பன், முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு, பேருந்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

நாங்கள் அப்போது அங்கு வந்து சேர்ந்தோம். எங்களிடம் அவன், “ஏண்டா, எத்தனை தடவை சொன்னோம் சீக்கிரம் வாங்கன்னு. காது செவுடா உங்களுக்கு? ஏன் இவ்ளோ லேட்டா வர்றீங்க?” என்றான் கோபமாக.

அதற்கு நான், “அது ஒன்னுமில்லடா, சீக்கிரம் வரமுடியல. அதான் லேட்டு” என்றேன். உடன் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க கடுப்பில் பேருந்துக்குள்ளே சென்றான் அவன்.

Sunday, 27 April 2014

மறக்க முடியாத முகங்கள் - 4

மறக்க முடியாத முகங்கள் – 4:

சென்ற மாதம், அலுவல் நிமித்தமாக ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரம்தான் அங்கு இருக்க வேண்டும். காரணம் ‘டீம் பட்ஜெட் நிலைமை.

ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கு இந்த மூன்று வார்த்தைகள் ‘டீம் பட்ஜெட் நிலைமைபரிச்சயமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இதை எப்படி விளக்குவது? ஆங், யோசனை வந்துவிட்டது.

அதாவது, ‘டீம் பட்ஜெட் நிலைமை என்பது ஒரே ஒரு தோசையை மூன்று, நான்கு பேருக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான ஒரு சாக்கு.
யாருக்கும் வயிறு நிரம்பாது. அதே நேரத்தில், நம் மேனேஜர் ‘நான் உனக்காவது கால் தோசை கொடுத்தேன். மற்றவர்களுக்கு அதுகூட இல்லை என்ற சாக்கு சொல்லிச் சொல்லியே தப்பிப்பதற்கு உதவும். இதுதான் ‘டீம் பட்ஜெட் நிலைமை.

வெளிநாட்டுப் பயணம் என்பதால் விமானம் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. அதாவது அதிகாலை 4 மணி விமானத்திற்கு 1 மணிக்கே அங்கு இருக்க வேண்டும். அதற்கு வீட்டிலிருந்து 12 மணிக்கே கிளம்ப வேண்டும். அவ்வளவு தூரம்.

என்னை பிக்-அப் செய்ய டேக்ஸி டிரைவர் 11:30 மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார். இன்னும் அரை மணி நேரத்தில் நான் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு எல்லா பொருட்களையும் சரிபார்த்து கொண்டிருந்தேன்.

12 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். டாடா இண்டிகா நின்று கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் சற்று தூரத்தில் இருந்து வந்தார் ஓட்டுனர். நெற்றியில் விபூதிப் பட்டை. அவருக்கு அது மிகப் பொருத்தமாக இருந்தது.

லக்கேஜை வண்டியினுள் வைத்துவிட்டு, உள்ளே உட்கார்ந்தேன். வண்டி படுசுத்தமாக இருந்தது. சாமி பொம்மை, ஊதுவத்தி வாசனை, சில பழங்கள் என அந்த இடமே மணந்தது.

வண்டியை கிளப்பினார். சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அழகான தமிழில் பேசினார். “என் சொந்த ஊர் மதுரை சார் என்றார். ஆச்சரியப்படவில்லை.

“அப்படீங்களா? நான் வேலூர் ஆள் சார்என்றேன். அதற்கு அவர், “நெனச்சேன் சார். உங்க பேச்சு கொஞ்சம் முரட்டுத்தனமும், நக்கலும் கலந்ததா இருக்கும்போதே நீங்க வட ஆற்காடு மாவட்டத்துல இருந்து வர்றீங்கன்னு நெனச்சேன் என்றார். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம்.

அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தன. சொந்த ஊரிலிருந்து 7 வயதிலேயே தன் தங்கையுடன் இங்கு வந்துவிட்டாராம். சொத்துப் பிரச்சனை காரணமாக அவருடைய பெற்றோரை உறவினர்களே ஆளை வைத்து கொன்றுவிட்டார்களாம். அவர்களிடமிருந்து தப்பித்து இங்கு வந்துவிட்டதாகச் சொன்னார்.

பெங்களூருக்கு வந்து சில நாட்களிலேயே இவர்களை ஒருவர் தத்தெடுத்துவிட்டார். அவருக்கு ஏற்கனவே ஒரு மகள். இப்போது இவர்களையும் சேர்த்து மொத்தம் மூன்று குழந்தைகள்.

இவருக்கு நடந்தது காதல் திருமணம். இப்போது இவருக்கு 50 வயதாகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன். மகள்கள் இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். திருமணமாகி செட்டிலாகிவிட்டனர் மகன் பொறியியல் படிப்பு படித்து வருகிறான்.

நன்றாக செட்டில் ஆகிவிட்டீர்களே, பிறகேன் டேக்ஸி ஓட்டி உடம்பை வருத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன வியப்பில் ஆழ்த்தியது.

“தினமும் காலைல 6 மணிக்கெல்லாம் எழுந்து முதல் வேலையா குளிச்சுடுவேன். அப்பறம் சாமி ரூம்ல உக்காந்து கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் பூஜை பண்ணுவேன்

“அப்பறம் சாப்பிட்டுட்டு வேலைன்னு வெளியே கிளம்பிடுவேன். வேலை செய்யாம என்னால சாப்பிட முடியாது, தூங்க முடியாது. நிம்மதி போயிடும் சார். ஞாயித்துக்கிழமை மட்டும் ரெஸ்ட். மத்த நாள்ல வேலை செஞ்சே ஆகணும்

இதையெல்லாம் கேட்டபிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் டாபிக்கை மாற்றினேன். “உங்க தங்கை எங்கே இருக்காங்க சார்? செட்டில் ஆகிட்டாங்களா? என்று கேட்டேன்.

“எனக்கு ரெண்டு தங்கைன்னு சொன்னேனே, ரெண்டு பேரும் செட்டில் ஆகிட்டாங்க. இங்க எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்காங்க

“அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. வீட்டுக்கு வந்து, ஏதாவது பிடிச்சுப்போச்சுன்னா.. புடவைன்னு வெச்சுக்கங்களேன்.. அவங்க பாட்டுக்கு பீரோவை திறந்து எடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க. என் மனைவியும் ஒரு வார்த்தை பேசாம, அவங்க கேட்டதை எடுத்து கொடுத்துடுவாங்க. அவங்க உடுத்தியிருக்கற புடவையா இருந்தாலும் அதேதான் என்றார்.

ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனைவியா? என்று வியந்தேன் நான். அவர் தொடர்ந்தார்.

“இப்படிப்பட்ட ஒரு மனைவியை நான்தானே சார் ஒழுங்கா பாத்துக்கணும். இன்னும் எத்தனை வருஷம் என் உடம்பு ஒத்துழைக்குதோ, அத்தனை வருஷம் என் மனைவிக்காக உழைப்பேன் சார் என்று அவர் சொல்லும்போது விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.

இறங்கி லக்கேஜ் எடுப்பதற்கு வெளியே வந்தபோதுதான் அவர் கண்களைப் பார்த்தேன். கலங்கியிருந்தன. அதைப் பார்த்தவுடன் என் கண்களும் கலங்க ஆரம்பித்தன.

அவரிடம் விடைபெற்று, நான் விமான நிலையத்தினுள் நுழைந்தேன். சிந்தனையெல்லாம் அவரைப் பற்றிதான்.


அவரை நான் எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வேன் என நினைக்கிறேன். அப்படியொரு மறக்க முடியாத முகம் அது.

Monday, 27 January 2014

மறக்க முடியாத முகங்கள் - 3

மறக்க முடியாத முகங்கள் - 3:

வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போகும் வழியில் இரண்டு டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. முதல் டிராஃபிக் சிக்னலைக் கடப்பது அவ்வளவு பெரிய சிரமமாக இருக்காது என்றாலும் கூட, அந்த சிக்னலில் மாட்டிக்கொண்டால் கொஞ்சம் கடுப்பாகிவிடும். ஏனென்றால், அந்த இரண்டாவது டிராஃபிக் சிக்னலில் தினமும் இரண்டு முறையாவது நிற்கவேண்டியிருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு, இந்த முதலாவது சிக்னலில் மாட்டிக்கொண்டேன். அப்போது சில திருநங்கைகள் அங்கு வந்து ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது, பல நேரங்களில் அவர்களது இந்தச் செயலை நியாயப்படுத்தியும் இருக்கிறேன். ஏனென்றால், கட்டட வேலை, வீட்டு வேலை போன்ற வேலைகளுக்குக்கூட திருநங்கைகளை வைப்பதில்லை. என்னதான் செய்வார்கள் அவர்கள்?

அவர்கள் அடுத்து என் வண்டியின் அருகே வந்து, என்னிடமும் பணம் கேட்டார்கள். நானும் என் பர்ஸைத் திறந்து, பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன். அவர் அந்த ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு, இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றார். திகைத்துப்போனேன்.

"என்ன வேணும் உங்களுக்கு?" இது நான்.
"பௌர்ணமி வருது. பூஜை பண்றோம்" இது அவர்.
"சரி, அதுக்கு நான் என்ன பண்ணணும்?" இது நான்.
"ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தா, நல்லாருக்கும்" இது அவர்.
"என்னாது ஐநூறு ரூபாயா?" அதிர்ச்சியில் நான்.
"ஆமா, சரி அட்லீஸ்ட் ஒரு நானூறு ரூபாயாவது கொடுங்க. உங்க பேரைச் சொல்லி பூஜை பண்றோம்" விடாப்பிடியாக அவர்.
"என்னங்க இது. விட்டா கேட்டுட்டே இருப்பீங்க போல" இது நான்.

இப்படி கேட்கும்போது சிக்னலில் பச்சை விழ, பின்னால் நின்று கொண்டிருந்த வண்டிகள் ஹாரன் அடிக்க, அவசரமாக அங்கிருந்து கிளம்பினேன். வழியில் இந்த உரையாடலை மனதுக்குள் ரீப்ளே செய்துகொண்டே இருந்தேன்.

எத்தனையோ முறை இந்த மாதிரி பணம் கொடுத்திருக்கிறேன். ஆனால், இந்த முறைதான் இப்படி நடந்துவிட்டது. யார் இவர்? இவர் முகத்தை மறக்கக்கூடாது என நினைத்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, கண்ணாடியில் பார்த்தேன். ஒரு அப்பாவியான முகம் தோன்றியது கண்ணாடியில். அது ஏன் இவருக்கு என்னைப்பார்த்து இப்படி கேட்கத் தோன்றியது? ஒரு படத்தில் கவுண்டமணி அவர்கள் செந்திலைப் பார்த்து, "அது ஏன் என்னைப் பார்த்து இந்த மாதிரி கேட்கறே?" என்று கேட்பார். அதே கேள்வி, என்னைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன். அன்று மட்டும் இப்படி நடந்தது. அடுத்த சில நாட்கள் எப்பவும் போலவே இருந்தன.

மீண்டும் ஒரு நாள், அன்று நான் பார்த்த அதே நபர் சிக்னலில் நின்றுகொண்டிருந்தார். சுதாரித்துக்கொண்டேன். சிக்னலில் ஃப்ரீ லெஃப்ட் என்பதால், வண்டி நெரிசலில் சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டி, இடது பக்கம் திரும்பி ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன். எதையோ சாதித்துவிட்டது போல ஒரு உணர்வு.

இப்படி என்னை தலைதெரிக்க ஓடவைத்தவரின் முகமும், முதல் முறை அவரிடம் மாட்டிக்கொண்டு, அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கண்ணாடியில் பார்த்தபோது இருந்த என் முகமும் மறக்க முடியாத முகங்களே!